Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • நடராஜர் கோவிலில் தேரோட்டம் ….

    ஆருத்திரா தரிசன விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு டம் பிடித்து இழுத்தனர். நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனமும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் டிசம்பர் 24–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்தி சுவாமிகள் 4 மாட வீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நடைபெற்றது. காலை 7.30 மணியளவில் சிதம்பரம் கீழ வீதியில் உள்ள தேர்முட்டியில் நடராஜர், சிவகாமசுந்தரி , விநாயகர், முருகன் சண்டிகேசுவரர் ஆகிய 5 சாமிகளையும் அலங்கரித்து தனித்தனி தேர்களில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். பின்னர் அங்கு கூடியிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிவ சிவ கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். விநாயகர் தேர் முன்னோக்கி செல்ல அதன்பின்னர் சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளின் தேர்கள் சென்றன. தேர் கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக மீண்டும் கீழவீதிக்கு தேர்கள் வந்து சேர்ந்தன.

  • மகரவிளக்கு பூஜைக்காக நடை திறப்பு…

    மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலப் பூஜை நவம்பர் 16 -ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி சுவாமி ஐயப்பன் சந்நிதானத்தின் நடை அப்போது திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து 41 நாள்கள் ஐயப்பன் கோயிலுக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்சாந்தியான ஏ.வி உன்னிகிருஷ்ணன் தலைமையில் பூஜைகள் நடைபெற்றன. தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 முதல் 11.30 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெற்றது. ஒரு மணிக்கு சாத்தப்படும் நடை மீண்டும் மாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்திருந்தது. அதன்படி சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலப் பூஜை முடிந்த பின்பு செவ்வாய்க்கிழமை சந்நிதானத்தின் நடை இரவு 10 மணிக்கு சாத்தப்பட்டது. இதையடுத்து, மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் சுவாமி ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டது. ஜனவரி 20ம் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும் என சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • திருமலையில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

    வைகுண்ட துவாதசியை முன்னிட்டு திருமலையில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. ஏழுமலையான் கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வழிபாடு செய்தனர். அதிகாலை 5 மணியளவில் ஏழுமலையான் கோயிலில் இருந்து ஜீயர்கள் முன்னிலையில் வராக சுவாமி கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்திற்கு சக்கரத்தாழ்வார் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதையடுத்து தெப்பக்குளத்தில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது. இதைதொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தெப்பக்குளத்தில் புனித நீராடினர்.

  • திருப்பதியில் ஆங்கிலப் புத்தாண்டுக்கு சிறப்பு அலங்காரம் கிடையாது….

    திருமலையில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் சிறப்பு அலங்காரங்கள் எதுவும் நடைபெறாது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வழக்கமான பூஜைகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலையில் எப்போதும், வைகானச ஆகம விதிப்படி நடக்கும் உற்சவங்கள், யுகாதி மட்டுமே விமரிசையாகக் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி, யுகாதி, வருடாந்தர பிரம்மோற்சவம், வருடாந்திர தெப்போற்சவம் உள்ளிட்ட உற்சவங்களின்போது, ஏழுமலையான் கோவில், மாடவீதிகள், திருமலையில் உள்ள முக்கிய பகுதிகளில் மலர் அலங்காரம், மின்விளக்கு அலங்காரம் செய்யப்படும். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். அதனால், கோவிலில் சில அலங்காரங்கள் செய்வது வழக்கம். ஆனால், இம்முறை ஆந்திர மாநில அறநிலையத்துறை ஆங்கிலப் புத்தாண்டின்போது, கோவில்களில் எவ்வித சிறப்பு அலங்காரங்களும் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. வழக்கமான பூஜைகள் நடைபெறும், வைகுண்ட ஏகாதசியின் போது செய்த அலங்காரங்கள், பக்தர்களின் பார்வைக்காக ஒரு வாரத்திற்கு அப்படியே இருக்கும் என்வும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  • மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

    மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை டிசம்பர் 30 ஆம் தேதி (சனிக்கிழமை) திறக்கப்படுகிறது. ஜனவரி 14 ம் தேதி பிரசித்திப் பெற்ற மகர ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டது. 41 நாள் மண்டலக் காலம் முடிந்து கடந்த 26ம் தேதி நடந்த மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது. அன்று இரவு கோயில் நடை சாத்தப்பட்டது. 3 நாள் இடைவெளிக்கு பின்னர் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை டிசம்பர் 30 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 31ம் தேதி முதல் மகர விளக்கு பூஜைகள் தொடங்கும். ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகர ஜோதி தரிசனமும் நடைபெறும்.

  • வைணவக் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு…

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவக் கோயில்களில் சொர்கவாசல் திறக்கப்பட்டது. தேவர்கள் முதலான அனைவரையும் துன்புறுத்தி வந்தான் அசுரன் முரன். அசுரனிடமிருந்து தங்களை காக்குமாறு ஈசனை சரணடைந்தனர் தேவர்கள். ஈசனோ, தேவர்களை மகாவிஷ்ணுவிடம் முறையிட சொன்னார்.
    விஷ்ணுவை சரணடைந்த தேவர்களுக்காக சுமார் 1000 வருடங்கள் கடுமையாக அசுரனுடன் போர் புரிந்தார் மகாவிஷ்ணு.அதன் பிறகு மிகவும் களைப்படைந்த மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டஅசுரன், பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டு, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.
    மகாவிஷ்ணு விழித்தெழுந்து நடந்ததை அறிந்து, அந்த சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து, தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.
    மார்கழி மாத சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி. இந்நாளில் வைணவக் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்படும். பெருமாள், பரமபத வாசல் சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவார்.
    பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து, இராபத்து உற்சவமாக வெகு சிறப்பாக நடைபெறும். இராப்பத்தின் முதல் நாள் பரமபத வாசல் சந்நதி திறப்பு விழா நடைபெறும். கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்கு சென்றோர் யாரும் இல்லாததால் வைகுண்டத்தின் வாசல் மூடப்பட்டு இருந்தது. நம்மாழ்வார் முக்தி அடைந்த அன்று, அது திறக்கப்பட்டது. இதனை அறிந்த நம்மாழ்வார், பெருமாளிடம் ‘எனக்கு மட்டும் வைகுண்ட வாசலைத் திறந்தால் போதாது. என்னைத் தொடர்ந்து தங்கள் மீது பக்தி செலுத்தும் அனைத்து பக்தர்களுக்காகவும் வைகுண்டவாசல் திறக்கப்பட வேண்டும்’ என்று வேண்டவே, பெருமாள், நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்க வழி செய்தார். அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியாக அனுசரிக்கப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி பற்றி ஒரு வரலாறு உண்டு. திருமங்கையாழ்வாரின் பக்தியிலும் திருப்பணியிலும், மகிழ்ச்சியடைந்த ரங்கநாதர் அவர் முன்தோன்றி, “என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டாராம். அதற்கு திருமங்கையாழ்வார் நம்மாழ்வார் பரமபதம் அடைந்த நாளான மார்கழி வளர்பிறை ஏகாதசியைப் பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும். நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்காகத் திருவிழா நடைபெற அருள வேண்டும் என்று வரம் கேட்டார். அதை ரங்கநாதரும் அருளினார். அதன்படி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது. இதேபோல நாடு முழுவதும் உள்ள வைணவ கோயில்களில் சொர்க வாசல் திறக்கப்பட்டது.
    வீரராகவ பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சொர்க்க வாசலை கடந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பி வீரராகவப் பெருமாளை வழிபட்டனர்.

  • தாணுமாலய சுவாமி கோயிலில் மார்கழித் திருவிழா

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மார்கழித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் மார்கழிப் பெருந்திருவிழா இக்கோயிலில் 10 நாள்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா டிசம்பர் 24 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7 மணிக்கு கோயில் கொடிப்பட்டம் சுசீந்திரத்தின் நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் கோயில் கொடிமரத்தில் தெற்கு மண்மடம் ரகு நம்பூதிரி கொடியேற்றினார். வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சர்மா சிறப்பு பூஜைகளை நடத்தினார்.
    இதைத் தொடர்ந்து, தக்கலை பரைக்கோடு பிரத்யுக்சா நாயரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், ஆஸ்ரமம் காசித்திருமடம் டி. தம்பையா ஓதுவார் நிகழ்த்திய திருவெம்பாவை பாராயணம், திருமுறை பெட்டக ஊர்வலம், தேவார இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மூன்றாம் திருநாளில் இரவு மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கோட்டாறு அருள்மிகு வலம்புரிவிநாயகர், மருங்கூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி பார்வதி, பரமேசுவரருடன் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    9 ஆம் திருநாளான ஜன. 1ஆம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டமும், அன்று இரவு 11 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு சப்தாவர்ணக் காட்சியும், 10 ஆம் திருநாளான ஜன. 2 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், மாலை 5 மணிக்கு அருள்மிகு நடராஜமூர்த்தி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு திருஆறாட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

  • சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. மேளதாளம் முழங்கிட, வேத மந்திரங்கள், தேவாரம், திருவாசகம் பாடிட உற்சவ ஆச்சாரியார் கனகசபாபதி தீட்சிதர் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றினார். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாள் பகல் மற்றும் இரவில் உத்ஸவ நாயகர்களாகிய ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறும். 28-ம் தேதி இரவு தெருவடைச்சான் நடக்கிறது. 31-ம் தேதி இரவு தங்க ரதத்தில் பிக்ஷாடனர் வெட்டுக்குதிரையில் வீதியுலா நடக்கிறது. தேர் திருவிழா 1-ம் தேதியும், 2-ம் தேதி மதியம் ஆருத்ரா தரிசன விழாவும் நடக்கிறது. 3-ம் தேதி இரவு முத்து பல்லக்கு வீதியுலா நடக்கிறது.

  • திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் தீவிரம்…

    திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீவிரப்படுத்தி உள்ளது. வைகுண்ட ஏகாதசி வருகிற 29ம் தேதியும், துவாதசி 30ம் தேதியும் வருகிறது. இந்த 2 நாட்களும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு தரிசனம் என்று தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் திருமலையில் அதிகரிக்கும். எனவே, 28ம் தேதி காலை 10 மணியில் இருந்து வைகுண்டம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அவை நிரம்பிய பின் ஆழ்வார் தோட்டம், நாராயணகிரி தோட்டம், கர்நாடக சத்திரம், மேதரமிட்டா, மேற்கு மாட வீதியில் உள்ள நான்கு மாடவீதி ஆகிய இடங்களில் வரிசைகள் அமைக்கப்பட்டு, பக்தர்கள் காத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு காத்திருக்கும் பக்தர்களுக்கு தடையின்றி அன்னப்பிரசாதம், டீ, காபி வழங்கவும், 4 லட்சம் வாட்டர் பாக்கெட்டுகள் வழங்கவும், தற்காலிக கழிவறை அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் மார்கழி மலர்க்காவடி…

    கோவில்பட்டி அருகேயுள்ள குடவரை கோவிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் மலர்காவடி மற்றும் பூச்சொரிதல் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். புகழ்பெற்ற குடவரை கோவிலான கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் மார்கழி மாத ஆயிரத்து 8 மலர்க்காவடி மற்றும் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி கழுகாசலமூர்த்தி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் முன்பு தொடங்கிய மலர்க்காவடி ஊர்வலத்தில், மலர்களால் நிரம்பிய மலர்காவடிகளை பக்தர்கள் தோளில் சுமந்து அரோஹாரா கோஷங்களுடன் கிரிவல பாதையில் வலம் வந்தனர். பின்னர் கழுகாசலமூர்த்திக்கு, பக்தர்கள் கொண்டு வந்த மலர்காவடியில் இருந்த மலர்களைக் கொண்டு பூச்சொரிதலும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது.