Author: லிங்கேஷ்

  • Bullet Baba Temple

    இந்தியா ஒரு பன்முக கலாச்சாரம் மிகுந்த நாடு. பல உருவ வழிபாடுகள், விநோத சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள், வித்தியாசமான வழிபாட்டு முறைகளை மக்கள் காலம்காலமாக பின்பற்றி வருகிறார்கள். ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் போன்றவர்கள் இந்தியாவிற்கு வந்து சில கோவில்களில் வழிபாடு நடத்திய பிறகுதான் தங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். 

    இப்படி ஸ்டார் வேல்யூ உள்ள கோவில்களும் உண்டு. இப்படிப்பட்ட வித்தியாசமான கோவில்களை காண பல நாடுகளில் இருந்தும் நம் நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இப்படி சுற்றுலா பயணிகளை ஈர்த்த கோவில் தான் ராஜஸ்தானில் உள்ள புல்லட் பாபா கோவில்.

    இன்றைய இளைஞர்கள் மத்தியில் ராயல் என்பீல்ட் புல்லட் பிரபலமாக இருக்கும் நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே பாலி என்ற மாவட்டத்தில் 350cc Royal Enfield Bullet ஐ கடவுளாக வழிபடுகின்றனர் இந்த பகுதி மக்கள்.

    இந்த புல்லட் கடவுளுக்கு பின்னால் உள்ள கதை மிகவும் சுவாரஸ்யமானது. 

    1991ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி ஓம் சிங் ரத்தோர் என்பவர், பங்கடி என்ற இடத்தில் இருந்து சோடிலா என்ற இடத்திற்கு தன்னுடைய ராயல் என்பீல்ட் வண்டி மூலம் பயணம் செய்திருக்கிறார். திடீரென்று ஒரு இடத்தில் நிலைதடுமாறி ஒரமாக இருந்த மரத்தில் வண்டி மோதி விபத்து ஏற்பட்டு விடுகிறது. அந்த இடத்திலேயே ஓம் சிங் உயிரிழக்க, அவருடைய புல்லட் அருகில் உள்ள கால்வாயில் விழந்து விடுகிறது. 

    அடுத்த நாள் காலையில் வந்த காவலர்கள், கால்வாயில் விழுந்த வண்டியை எடுத்துச்சென்று காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கிறார்கள். ஓர் இரவு கடந்து விடுகிறது. அடுத்த நாள் அந்த காவல் நிலையத்தில் புல்லட்டை காணவில்லை என்று காவலர்கள் பதறியடித்துக் கொண்டு தேட, அந்த புல்லட் வண்டியோ, ஓம் சிங் விபத்தில் எங்கே உயிரிழந்தாரோ அதே இடத்தில் காணப்படுகிறது.

    ஆச்சர்யமடைந்த காவலர்கள் யாரோ தங்களிடம் விளையாடுகிறார்கள் என்று நினைத்து, மீண்டும் அந்த வண்டியை எடுத்து போய் காவல்நிலையத்தில் வைத்து, பெட்ரோல் டேங்கை காலி செய்து, டயரில் இருந்த காற்றையும் பிடுங்கிவிட்டார்கள். அந்த இரவும் கடந்து செல்கிறது. 

    மறுநாள் காலையிலும் புல்லட் வண்டி காணாமல் போக, மீண்டும் ஓம் சிங் உயிரிழந்த இடத்தில் இருந்திருக்கிறது. இது போன்று பல முறை தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ, கிராம மக்கள் ஓம் சிங் தான் புல்லட்டில் சக்தியாக இருக்கிறார் என்று நினைத்து, அந்த புல்லட் வண்டியை வைத்து கோவில் கட்டிவிட்டார்கள்.

    தற்போது வரை அந்த பகுதியை சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள மக்கள் நீண்ட பயணம் மேற்கொள்ளும்போது இந்த புல்லட் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். சிலர் காணிக்கையாக மதுபாட்டில்களையும் வைத்துவிட்டு செல்கின்றனர். நீண்ட தூரம் செல்பவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபடாவிட்டால் நிச்சயம் ஆபத்தை சந்திப்பார்கள் என்றும் நம்புகிறார்கள் இந்த கிராம மக்கள். தினமும் இந்த கோவிலில் உள்ள புல்லட் வண்டிக்கு பொட்டு வைத்து, பூக்கள் தூவி மாலையிட்டு இனிப்புகள் எல்லாம் வைத்து மிகவும் நம்பிக்கையோடு வழிபாடு நடத்துகின்றனர் பாலி மாவட்ட மக்கள். 

    அடுத்த முறை ராஜஸ்தான் செல்லும் போது புல்லட் பாபாவை மறக்காம பார்த்துட்டு வாங்க.

    – ஹேமா, பத்திரிகையாளர்

  • kodhanda ramar koil theppa urchavam

     காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க  ஸ்ரீ ஏரிகாத்த கோதண்டராமர் திருக்கோவில் மாசிமகம் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. தெப்பத்தில் கருணாகரப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி வலம் வந்தனர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மதுராந்தகத்தில், புகழ் பெற்ற ஏரிகாத்த கோதண்டராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், கோதண்டராமருக்கும், கருணாகர பெருமாளுக்கும், தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இங்கு, ஆண்டுதோறும் மாசி மாத திருவிழா கோலாகலமாக நடக்கும். 

    இந்த ஆண்டு மாசி மாதத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம், கருணாகர பெருமாள் தெப்ப உற்சவம் நடந்தது. விழாவையொட்டி, அன்று காலை,கருணாகர பெருமாளுக்கு திருமஞ்சனமும், பகல், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள், மதுராந்தகம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திரு வீதியுலா வந்தார்.

    அதனை தொடர்ந்து, கருணாகர பெருமாள், கோவில் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தை சுற்றி பக்தர்களுக்கு 
    அருள்பாலித்தார்.

    அதன்பின், பெருமாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தன. இவ்விழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
     

  • Vadapathra kali amma koil thiruvizha

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியிலுள்ள காளியம்மன் நகர் பகுதியிலுள்ள அருள்மிகு ஸ்ரீ வட்பத்திரகாளியம்மன் திருக்கோவிலில் 107 ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. 

    இதனையொட்டி காளியம்மனுக்கு நூற்றுக்கணக்கானோர் வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக அக்னிகரகம், பூங்கரகம், அளகு குத்தல் உள்ளிட்டவைகளை எடுத்து கோவிலை சுற்றி வந்து நேர்த்தி கடன் செய்தனர். 

    இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், இந்த திருவிழாவையொட்டி சாமி அலங்காரம் சிறப்பான தோற்றத்தில் காட்சியளித்தது பக்தர்களை பரவசமூட்டியது.

    இதில் வேண்டுதல்களை நிறைவேற்றும் போது மிரள் வந்து பலர் சாமியாடியது குறிப்பிடத்தக்கது.
     

  • Iyanar koil masi magam

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே குளமங்கலத்தில் மாசி மக திருவிழா ஆசியாவிலேயே மிக உயரமான 37-அடி குதிரை ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் குதிரைக்கு திருவிழாவில் 1500- க்கும் மேற்பட்ட மாலைகள் போட்டு ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா குளமங்களம் ஊராட்சியில் உள்ள பிரசித்திப் பெற்ற ஆசியாவிலேயே மிக பெரிய 37-அடி உயரமான குதிரை ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசிமக பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது.

     திருக்கோவிலின் சிறப்பம்சமாக வேண்டுதலை நிறைவேற்றியதற்க்கு பிறகு  பொதுமக்கள் தங்களது வேண்டுதலை 70-அடி உயர காகித மாலை அணிவித்து நிறைவேற்றுவார்கள். அந்தளவுக்கு மிக சக்திவாந்த கோவிலாகும்.

     பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறை வேற்றும் விதமாக புதுக்கோட்டை மற்றும் வெளி மாவட்டங்கள் சிங்கப்பூர்,மலேசிய ஆகிய வெளிநாடுகளிலிறுந்தும்  37-அடி உயர குதிரைக்கு பெரிய மாலைகள் வாகனங்களில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு காணிக்கையாக செலுத்திகின்றனர். 

    இரண்டு நாட்களாக 1500- க்கும் மேற்பட்ட மாலைகள் போடப்பட்டுள்ளன.

    இந்த கோவிலுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வதால் மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளனர்.
     

  • Thiruthani vallammai Kalyanam

    திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் மாசி மாத பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்ச்சியான வள்ளியம்மை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இருளர் சமுதாயத்தினர் மற்றும் பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் திருத்தணி முருகன் மலைக்கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த, 10ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு நேரங்களில் உற்சவர் முருகப்பெருமான் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    நேற்று யாளி வாகனத்தில், ஆறுமுக சுவாமி கோவிலுக்கு உற்சவர் சென்றடைந்தார். அதனைத் தொடர்ந்து 9வது நாள் அதிகாலை, 4:30 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள வள்ளி மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கும், வள்ளியம்மைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில், இருளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் முருகப்பெருமானுக்கு சீர்வரிசை கொண்டு வந்தனர். 

    முருகப்பெருமான் இரண்டாவதாக வள்ளியம்மையை திருமணம் செய்து கொண்டு கோயிலுக்குள் செல்லும் போது தெய்வயானை அம்மையார் கோயிலின் பிரதான வாயில் முடி உள்ளே அனுமதிக்காமல் மறுப்பது பின்னர் முருகப்பெருமான் தெய்வயானை அம்மையாரை  சமாதானம் செய்து கோயிலுக்குள் செல்லும் வைபோக வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

  • Sri Ramakrishnar ubadesam

    ஸ்ரீ ராமசந்திரர் வனவாசம் பண்ணுகையில், ஒரு நாள் தனது வில்லையும் அம்பையும் தரையில் நிறுத்திவிட்டு, தாக சாந்தி செய்து கொள்வதற்காகப் பம்பா சரஸ் என்ற தடாகத்தில் இறங்கினார். மேலே ஏறி வந்து பார்க்கையில் தமது வில் ஒரு தவளையை ஊடுருவிச் சென்றதன் காரணமாக அந்தத் தவளை இரத்ததில் தோய்ந்திருப்பதைக் கண்டார்.

    ஸ்ரீ ராமன் இதற்கு மிகவும் வருந்தி, ஏ, தவளையே நீ ஏதாவது சத்தம் போட்டிருக்கலாமே; அப்போது நீ இருப்பதை நான் தெரிந்து கொண்டிருப்பேனே. உனக்கு இந்தக் கதியும் நேர்ந்திராதே” என்றார்.

    ராமா ! எனக்கு ஆபத்து நேரும்போது, “ராமா என்னைக் காப்பாற்று” என்று சொல்வேன். ஆனால் நீயே என்னைக் கொல்லும்போது, நான் யாரிடம் என் குறையைச் சொல்லி முறையிட்டுப் பிரார்த்திப்பது? என்று தவளை பதில் சொல்லிற்று”.

    இந்தக் கதை சொல்லும் நீதி என்ன?

    எறும்பு முதல் யானை வரை எல்லா ஜீவன்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் வல்லமையும் வள்ளன்மையும் படைத்தவன் இராமன்.
     

    ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை… 
    ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்புர், சென்னை 600 004.

     

  • Rasi palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   நன்மை 
    ரிஷபம் – தெளிவு
    மிதுனம் – விருத்தி 
    கடனம் – இன்பம் 
    சிம்மம் – சிக்கல்
    கன்னி – சிந்தனை 
    துலாம் –  சினம் 
    விருச்சிகம் – பொறுமை 
    தனுசு – போட்டி 
    மகரம் – முயற்சி
    கும்பம் – விருப்பம் 
    மீனம் – மேன்மை 
    சந்திராஷ்டமம்    : அவிட்டம்
     

  • Feb 20 Ramakrishna parmamsar pirandha naal

    பிப்ரவரி 20 – ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த நாள்
    விளம்பி வருடம் – மாசி 8
    20-பிப்-2019 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    பிரதமை    இ    7.46
    நட்சத்திரம்    :    மகம்    கா    9.25
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அவிட்டம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Mahamaga punidha neeradal

    கும்பகோணம் மாசி மாத விழாவில் முக்கிய நிகழ்வாக நேற்று காலை, 12 சிவாலயங்களிலிருந்து, சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் நான்கு கரையில் எழுந்தருளினர்.

    பின், அந்தந்த கோவிலின் அஸ்திரதேவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் நீராடியதை தொடர்ந்து, நான்கு கரைகள் மற்றும் குளத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
     

  • Thiruchendur maasi therottam

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலின் மாசித்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு , கோவில் தக்கார் இரா .கண்னன் ஆதித்தன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 6.30 மணிக்கு சிறிய தேரில் விநாயகர் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தார்.

     சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி – தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளினார். காலை 7.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

    தேரோட்டத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.