Author: cmsadmin

  • திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்கு 700 சிறப்பு பேருந்துகள்….

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 3-ந்தேதியில் இருந்து 11-ந்தேதிவரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    எனவே அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், சித்தூர் மாவட்டத்தில் உள்ள 14 அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் பணியாற்றி வரும் மெக்கானிக்குகள் ஆகியோரை திருப்பதி மண்டல போக்குவரத்துக்கழக அலுவலகத்துக்கு வரவழைத்து ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.
    தற்போது திருப்பதி-திருமலை, திருமலை-திருப்பதிக்கு மொத்தம் 500 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பிரம்மோற்சவ விழா நேரத்தில் திருப்பதி-திருமலை, திருமலை-திருப்பதி மற்றும் திருப்பதி, திருமலையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கூடுதலாக 200 அரசு பஸ்கள் வீதம் மொத்தம் 700 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    திருப்பதியில் சீனிவாசம், விஷ்ணு நிவாசம் ஆகிய தங்கும் விடுதிகள், பாலாஜி, ஏழுகொண்டலு பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், அலிபிரி, லீலா மகால் ஜங்‌ஷன் ஆகிய இடங்களில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருமலையில் ஆங்காங்கே நிறுத்தி பக்தர்களை ஏற்றிச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஓணம் சிறப்பு வழிபாடு….

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஓணப்பண்டிகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல் நாளில், உத்திராடம் நட்சத்திரத்தையொட்டி அம்மன் சிவப்பு நிறப்பட்டு அணிந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். தொடர்ந்து 13 ஆம் தேதி காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், தேன், இளநீர், பால், தயிர், பன்னீர், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    பகவதிஅம்மனுக்கு தங்ககவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    இதனை காண கேரள பெண் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு கோவிலில் நிர்மால்ய பூஜை, விசுவரூப தரிசனம், அபிஷேகம், தீபாராதனை போன்றவைகள் நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜை, நிவேத்ய பூஜை, உஷபூஜை, உஷ தீபாராதனை போன்றவைகளும் மதியம் உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை, அன்னதானம் போன்றவைகளும் நடந்தது.
    14 ஆம் தேதி திருவோண நட்சத்திரத்தையொட்டி கேரள பாரம்பரிய உடையான வெண்பட்டும் 15 ஆம் தேதி அவிட்டம் நட்சத்திரத்தை யட்டி பச்சை நிறப்பட்டும் பகவதி அம்மனுக்கு ஓணக்கோடியாக அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. ஓணம் பண்டிகையையொட்டி ஏராளமான கேரள மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

  • முதலமைச்சர் ஜெயலலிதா ஓணம் பண்டிகை வாழ்த்து….

    பசி, பிணி, பகை நீங்கி, மக்கள் சகோதரத்துடன் வாழ வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா ஓணம் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ஓணம் திருநாள் வாழ்த்து செய்தியில்… திருவோணத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
    மலையாள மொழி பேசும் மக்களால் பத்து நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் போது, மக்கள் தங்கள் இல்லங்களின் முன்பு வண்ணப் பூக்களால் அழகுற அத்தப்பூ கோலங்கள் இட்டு, புத்தாடை உடுத்தி, அறுசுவை கொண்ட ஓணம் விருந்துண்டு, புலிக்களி, கைகொட்டுக்களி போன்ற நடனங்களை ஆடி, கயிறு இழுத்தல், களறி, படகுப் போட்டி போன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்தி உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள் என கூறியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, திருவோணத் திருநாளான இந்நன்னாளில், ஆணவம் அகன்று, பசி, பிணி, பகை நீங்கி, மக்கள் சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று வாழ்த்தி, மலையாள மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
    இதேபோல ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாளம் பேசும் மக்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வாழ்த்துக் கூறியுள்ளனர்.

  • ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் திருபவித்ர உற்சவம்

    ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசயனர் சன்னிதியில் செப்டம்பர் 13ஆம் தேதி முதல் திருபவித்ர உற்சவம் நடக்கிறது. இன்று துவங்கும் இந்த உற்சவம் ஏழு நாட்கள் நடக்கும். இந்த விழாவை தொடர்ந்து, 19ந்தேதி கருடசேவை நடக்கிறது.
    இதையொட்டி செப்டம்பர் 13 ஆம் தேதி மாலை 4 மணிக்கு வேதபிரான் பட்டர் அனந்தராமகிருஷ்ணன் திருமாளிகையிலிருந்து மஞ்சள்நுால் மாலைகள் வடபத்ரசயனர் சன்னிதிக்கு கொண்டு வரபட்டு, ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் மற்றும் ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுக்கு அணிவிக்கபட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
    தொடர்ந்து தினமும் மாலை 4 மணிக்குமேல் பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் எழுந்தருளி, நவகலச பூஜை செய்யப்படுகிறது. 19ந்தேதி கருடசேவையும் நடக்கிறது.

  • காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை செய்ய…

    காளஹஸ்தீஸ்வரர் கோயிலில், விஐபி-க்களுக்கான சிறப்பு ராகு – கேது பரிகார பூஜையை கோயில் நிர்வாகம் தொடங்கியுள்ளது.
    ராகு-கேது பரிகார பூஜையை செய்ய பிரசித்திப் பெற்றது காளஹஸ்தீஸ்வரர் கோயில். தமிழகம், ஆந்திரா மட்டுமல்லாது உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் ரூ.300, ரூ.750, ரூ.1500, ரூ.2000 என 4 விதமான பூஜை டிக்கெட்டுகளை நிர்ணயித்துள்ளது.
    இந்நிலையில், செப்டம்பர் 11 முதல் கோயில் நிர்வாகம் புதிதாக ரூ. 5 ஆயிரம் டிக்கெட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில், விஐபி-க்கள் பங்குகொள்ளலாம்.
    இந்த டிக்கெட்டுகளைப் பெற்றவர்கள் சஹஸ்ர லிங்கேஸ்வர சுவாமி மண்டபத்தில் பரிகார பூஜைகளை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை செய்ய…

    காளஹஸ்தீஸ்வரர் கோயிலில், விஐபி-க்களுக்கான சிறப்பு ராகு – கேது பரிகார பூஜையை கோயில் நிர்வாகம் தொடங்கியுள்ளது.
    ராகு-கேது பரிகார பூஜையை செய்ய பிரசித்திப் பெற்றது காளஹஸ்தீஸ்வரர் கோயில். தமிழகம், ஆந்திரா மட்டுமல்லாது உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் ரூ.300, ரூ.750, ரூ.1500, ரூ.2000 என 4 விதமான பூஜை டிக்கெட்டுகளை நிர்ணயித்துள்ளது.
    இந்நிலையில், செப்டம்பர் 11 முதல் கோயில் நிர்வாகம் புதிதாக ரூ. 5 ஆயிரம் டிக்கெட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில், விஐபி-க்கள் பங்குகொள்ளலாம்.
    இந்த டிக்கெட்டுகளைப் பெற்றவர்கள் சஹஸ்ர லிங்கேஸ்வர சுவாமி மண்டபத்தில் பரிகார பூஜைகளை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு….

    ஓணம் மற்றும் புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை செப்டம்பர் 13 ஆம் தேதி திறக்கப்படுகிறது.
    சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

    இந்த ஆண்டு கேரளாவில் திருவோணப் பண்டிகை செப்டம்பர் 14–ந் தேதி கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையும், புரட்டாசி மாத பூஜையும் சேர்ந்து வருவதால், சபரிமலை அய்யப்பன் கோவிலில் 13ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில், மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்கிறார்.

    13–ந் தேதி முதல் 16–ந் தேதி வரை ஓணம் சிறப்பு பூஜையும், 16–ந் தேதி முதல் 21–ந் தேதி வரை புரட்டாசி மாத பூஜையும் நடைபெறுகிறது.

  • திருமலை உண்டியல் காணிக்கை ரூ.2.60 கோடி….

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 2.60 கோடி ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 15 மணி நேரத்தில் சுமார் 60 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 24 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
    இதேபோல மலைப்பாதை வழியாக நடந்து வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ரூ.300, ரூ.50க்கான டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். வெள்ளி கிழமை முதல் சனிக்கிழமை முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் ரூ.2.60 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

  • ஓணம் பண்டிகை கொண்டாட்டம்…..

    ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் 10 நாட்களிலும் 10 வகை பூக்களை வைத்தும் அத்தப்பூ கோலம் போட்டும் பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

    மேலும், தங்களது சொந்தபந்தங்கள், அக்கம்பக்கத்தினருக்கு உணவு, உடை மற்றும் பரிசு பொருட்களை அளித்து மகிழ்கின்றனர். இந்த நாட்களில் கேரளாவில் பாரம்பரிய படகு போட்டியும் அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பும் நடைபெறும்.ஓணம் பண்டிகையின் நிறைவு நாளில், அறுசுவைகளில் கசப்பை தவிர மற்ற காய்கறிகளை வைத்து 64 வித உணவு வகைகளை கேரள மக்கள் தயாரித்து பரிமாறி மகிழ்கின்றனர். அவற்றில் அடை, அவியல், அடைபிரதமன், பால் பாயசம், காலன், ஓலன், தோரன், இஞ்சி புளி, எரிசேரி, மிளகாய் வற்றல் மிகவும் பிரபலமானவை.

  • ஓணம் பண்டிகை பிறந்த வரலாறு….

    மலையாள ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறதுஓணம் பண்டிகை. சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் அத்தப்பூ கோலத்துடன் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்களுக்கு கேரளாவில் ஜாதி, மத வேறுபாடுகளை மறந்து ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

    ஓணம் பண்டிகை பிறந்த வரலாறு:
    புராண காலத்தில் மகாபலி சக்ரவர்த்தி மலையாள தேசத்தை ஆண்டு வந்தான். அவன் பிறப்பால் அசுர குலத்தை சேர்ந்தவனாக இருந்தாலும், தன் நாட்டு மக்களிடம் பேரன்பு காட்டினான். ஏராளமான தான, தர்மங்களை செய்தான். இதனால் மகாபலி சக்ரவர்த்தியை மக்கள் போற்றி புகழ்ந்தனர். மூவுலகையும் ஆளும் எண்ணம் மகாபலி சக்ரவர்த்தியின் மனதில் பேராசையாக எழுந்தது. தங்கள் குலகுருவான சுக்ராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டான். சிவபெருமானை வேண்டி மிகப்பெரிய யாகம் நடத்த வேண்டும் என்று சுக்ராச்சாரியார் கூறினார். யாகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மகாபலி மேற்கொண்டான்.
    இந்நிலையில், மகாபலியின் யாகம் குறித்து கவலையடைந்த தேவர்கள், இந்திரனிடம் முறையிட்டனர்.
    இதைக் கேட்டதும், மகாபலி இந்த யாகத்தை சிறப்பாக நடத்தி முடித்துவிட்டால், அசுர குலத்தை சேர்ந்த மகாபலிக்கு இந்திர பதவி கிடைத்து விடும். அதனால் மூவுலகும் பாதிக்கும் என்று இந்திரன் கலக்கமடைந்தான். உடனே, பிரம்மாவிடம் சென்று ஆலோசனை கேட்டான். இதற்கு மகாவிஷ்ணு மட்டுமே தீர்வு காண முடியும் என்று பிரம்மா கூறி, இந்திரனையும், தேவர்களையும் மகாவிஷ்ணுவிடம் அழைத்து சென்றார். அவர்களின் மனக்குமுறல்களை கேட்ட மகாவிஷ்ணு, ‘நான் பூலோகத்தில் வாமன அவதாரம் எடுத்து, மகாபலியின் யாகத்தை தடுத்து நிறுத்துகிறேன்’ என்றார். அதன்படியே, மகாவிஷ்ணு மூன்று அடி உயரமுள்ள வாமன அவதாரம் எடுத்து, பூலோகத்தில் மகாபலி சக்ரவர்த்தி யாகம் செய்யும் இடத்துக்கு சென்றார்.

    யாகசாலையின் வாசலில் மகாபலியிடம் ஏராளமானவர்கள் தானம் பெற்று கொண்டிருந்தனர். மூன்று அடி உயர வாமனர், ஒரு கையில் ஓலை குடையுடனும், மற்றொரு கையில் கமண்டலத்தையும் ஏந்தியபடி வரிசையில் நின்றார். அவரது முறை வருவதற்கு முன்பே தானம் நிறைவுற்றது. யாகசாலை வாசலில் குடை பிடித்தபடி அந்தணர் உருவில் நின்ற வாமனரைப் பார்த்ததும் மகாபலி எழுந்து வந்தான். ‘நீங்கள் தாமதமாக வந்துள்ளீர்கள். பரவாயில்லை, உங்களுக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டான். வாமனரும் எனது காலால் அளக்கும் வகையில் மூன்று அடி நிலம் தானமாக அளிக்க வேண்டும் என்று கூறினார். இதைக் கேட்ட மகாபலி, வாமனரின் கையில் இருந்த கமண்டல நீரை எடுத்து தானம் அளிக்க முன்வந்தான்.
    அப்போது, சுக்ராச்சாரியார் அவனை தடுத்து, ‘வந்திருப்பது மகாவிஷ்ணுவாக இருக்கும், எதையும் யோசித்து செய்’ என்று எச்சரித்தார். ஆனால், மகாபலி, ‘என் தானத்தின் அருமை அறிந்து மகாவிஷ்ணுவே தானம் பெற வந்திருக்கிறார். அவருக்கு தானம் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றான். உடனே, சுக்ராச்சாரியார் கருவண்டாக உருமாறி, கமண்டல நீரின் வழியை அடைத்தார். வாமனர், ஒரு தர்ப்பை புல்லை எடுத்து சுக்ராச்சாரியாரின் கண்ணை குத்தினார். பின்பு, வாமனரிடம் இருந்து கமண்டல நீரை எடுத்து, நிலத்தில் விட்டு மகாபலி தானமாக வழங்குவதாக கூறினான். உடனே, வாமனர் விஸ்வரூபம் எடுத்து, ஒரு அடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் விண்ணுலகையும் அளந் தார். ‘மூன்றாவது அடி வைக்க நிலம் எங்கே’ என்று மகாபலியிடம் கேட்டார். இதை பார்த்து பரவசப்பட்ட மகாபலி, மகாவிஷ்ணுவை வழிபட்டு, ‘மூன்றாவது அடியை என் தலைமீது வையுங்கள்’ என்று கூறினான். வாமனரும் அவ்வாறே வைத்து, மகாபலி சக்ரவர்த்தியை பாதாள உலகுக்கு அனுப்பினார்.
    பாதாள உலகத்துக்கு தள்ளிய மகாவிஷ்ணுவிடம், ‘கடவுளே, நான் இதுவரை என் நாட்டின் மீதும், என் மக்களின் மீதும் மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன். எனவே, வருடத்துக்கு ஒருமுறை என் நாட்டு மக்களை காணும் வாய்ப்பை எனக்கு வரமாக தந்தருள வேண்டும்’ என்று மகாபலி வேண்டுகோள் விடுத்தான். மகாவிஷ்ணுவும் அவ்வாறே வரம் தந்தருளினார். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு மக்களை மகாபலி சக்ரவர்த்தி காண வரும் நாளையே கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர்.