Tag: viradham

  • Vaigasi viradham

    வைகாசி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று திருமாலின் நான்காவது அவதாரமான ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி தினம் வருகிறது. வைகாசி மாதத்தில் வரக்கூடிய விசாக நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி தினம் முருகப்பெருமானுக்குரிய ஒரு சிறப்பு வாய்ந்த தினமாக முருக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. 

    வைகாசி பௌர்ணமி தினம் வருடம் முழுவதும் வரும் மற்ற பௌர்ணமி தினங்களை காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்த தினமாக இருக்கிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த வைகாசி பௌர்ணமி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, உங்களின் விருப்பத்திற்குரிய தெய்வங்களை வழிபடுவதால் அந்த தெய்வத்தின் பரிபூரண ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும். 

    மாலை வேளையில் வேனில் தோன்றும் சந்திர பகவானை தரிசித்து வழிபடுவது மிகவும் சிறந்தது. மற்ற எல்லா தானங்களிலும் விட சிறந்த தானம் அன்னதானம் என்பது நமது நமது முன்னோர்களின் கருத்தாக உள்ளது. எனவே புண்ணியம் மிகுந்த இந்த வைகாசி பவுர்ணமி தினத்தன்று தயிர்சாதம், எலுமிச்சை சாதம், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றை பக்தர்களுக்கு தானமாக வழங்குவது உங்களின் பாவ வினைகளை போக்கி புண்ணியத்தை உண்டாக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் மற்றும் மனம் சார்ந்த நோய்கள், குறைபாடுகள் நீங்கும். பொருளாதார கஷ்ட நிலைகள் நீங்கி செல்வ சேர்க்கை உண்டாகும்.

  • Saibaba viradham

    எண்ணிய காரியம் நிறைவேற ஒன்பது வியாழக்கிழமை விரதம் இருந்தால் சாய் பாபா நாம் வேண்டியதை நிறைவேற்றுவார். இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். 

    எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணி பிராதித்துக் கொள்ள வேண்டும் காலை அல்லது மாலை சாய்பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். இந்த விரதத்தை பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள் உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை உணவு அருந்தலாம். நாள் முழுவதும் பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது

    பலகையில் மஞ்சல் துணியை விரித்து சாய் பாபா படத்தை வைத்து தூய நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிறமலர்கள் மாலை சாய்பாபா படத்திற்கு அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி, பிரசாதம். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நெய்வேத்தியம் வைத்து, விநியோகம் செய்து சாய்பாபாவை வணங்கவும். 

    முடிந்தால் சாய்பாபாவின் கோவிலுக்குச் செல்லவும். வீட்டிலேயே சாய் பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்யவும் சாய் விரத கதை, சாய் பாமாலை, சாய் பவானி இவற்றை பக்தியுடன் படிக்கவும். வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம்.

    விரதத்தின் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும் ஒன்பதாவது வியாழக்கிழமை ஐந்து ஏழைகளுக்கு உணவு அளிக்கவும். உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப் பொருளோ கொடுத்து ஏற்பாடு செய்யவும். 

    சாய்பாபாவின் மகிமை மற்றும் விரதத்தை பரப்புவதற்காக 9-வது வியாழக்கிழமை இந்த சாய் விரத புத்தகங்களை நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர், சொந்த பந்தம் தெரிந்தவர் என்று இலவசமாக விநியோகிக்கவும்.விநியோகிக்கும் அன்று பூஜையில் வைத்த பிறகு விநியோகிக்கவும். இதனால் புத்தகத்தை பெறும் பக்தர்களின் விருப்பங்களும் நிறைவேறும் மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதமும், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும்.
     

  • Kiruthigai viradham

    பெண்கள் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே! நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான்.

    அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார். அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் யாவரும் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள். தண்ணீர் மட்டும் அருந்தி முருக மந்திரங்கள் முருகன் துதிகளை பாராயணம் செய்து ஜெபம் தியானம் கோவில் வழிபாடு இவைகளை செய்தல் வேண்டும்.

    இரவில் நித்திரை செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை ஜெபித்து மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் கூடி உணவுண்ண வேண்டும். ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம். மாதாமாதம் வரும் கார்த்திகை மாதக்கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும். கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை மற்றும் கார்த்திகை தீபவிழா எனப்படும்.

    மற்ற நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களுடைய கூட்டமாகும். கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள் என்பது கருத்து. இவ்வளவு பெருமை வாய்ந்தது கிருத்திகா நட்சத்திரம்.
     

  • Friday viradham

    ஆன்மிக வழிபாட்டிற்கு சிறப்புக்குரிய நாள் வெள்ளிக்கிழமை. இந்த நாளில் அம்பாளை வழிபடுவது விசேஷம். மகத்துவம் மிகுந்த வெள்ளிக்கிழமையை கொண்டு விரதம் ஒன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 

    இந்த விரதம் முருகப்பெருமான், லட்சுமிதேவி, நவக்கிரகங்களில் ஒருவரான சுக்ரன் ஆகியோரின் அருளைப் பெறுவதற்காக கடைபிடிக்கப்படும் விரதம் என்று கூறப்படுகிறது. ஆக வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து வந்தால், லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூன்று பேரின் அருளைப் பெறலாம்.

    இந்த விரதத்தை ஏதாவது ஒரு மாதத்தில் வருகின்ற 3-வது வெள்ளிக்கிழமை அல்லது கடைசி வெள்ளிக்கிழமையில் தொடங்கி, 11 வாரம் மட்டும் அனுஷ்டிக்க வேண்டும். வயதைப் பொறுத்து ஆயுள் முழுவதும் கூட இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம்.

    வெள்ளிக் கிழமை விரதம் இருக்க நினைப்பவர்கள், முதலில் ஏதாவது ஒரு மாதத்தில் வரும் மூன்றாவது அல்லது கடைசி வெள்ளிக்கிழமையை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அதிகாலை எழுந்து வீட்டை சுத்தப்படுத்தி, கோலம் போட்டு சுத்தமாக வைக்க வேண்டும். 

    வீட்டை எப்போதும் சுத்தமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வது நம் வீட்டில் லட்சுமி கடாட்சத்தை கொண்டு வரும் என்று ஆன்மிக ரீதியாக கூறப்படுகிறது.வீட்டை சுத்தம் செய்ததும், விரதம் இருப்பவர்களும் குளித்து விட்டு வந்து வீடு முழுவதும் சாம்பிராணி புகை போட்டு தெய்வீக மணம் கமழச் செய்ய வேண்டும். பிறகு லட்சுமிதேவியின் படத்திற்கோ அல்லது விக்கிரகத்திற்கோ மலர்களால் அர்ச்சனை செய்வதுடன், தீபாராதனைக் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். 

    அன்றைய தினம் முழுவதும் லட்சுமி தேவியைப் பற்றிய பக்திப் பாடல்களையோ, முருகப்பெருமான், சுக்ரனைப் பற்றிய பக்திப் பாடல்களையோ பாராயணம் செய்தபடி இருப்பது சிறப்பான நன்மையை வழங்கும். தொடர்ந்து 11 வாரங்கள் வெள்ளிக் கிழமையில் விரதம் இருந்து வந்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
     

  • Saturday Viradham

    நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுள்காலம் அமையும். ஆனால், அந்த கிரகத்தைக் கட்டுப்படுத்துவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது ஆயிற்று. இந்த விரதத்தை அனுஷ்டிக்க பெரிய அளவுக்கு காசு, பணம் தேவையில்லை. உண்மையான பக்தியே இந்த விரதத்திற்குரிய தேவையான பொருள்.

    தசாவதாரங்கள் எடுத்த பின்பும், குறிப்பாக, கண்ணனாக அவதரித்து, கீதையை உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை. இப்போதும் திருப்பதியில், பணக்காரப் பெருமாளுக்கு, மண்சட்டியில் நிவேதனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி சனியன்றாவது விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம்.
     

  • Egadasi Viradham

    ஏகாதசி பற்றி புராணங்கள் கூறும் கதைகள் பல உண்டு. அவற்றில் ஒன்று முரன் என்னும் அசுரனை அழித்த கதை. புராணத்தில் முரன் என்னும் அசுரன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான். 

    இதனால், அவர்கள் அனைவரும் அசுரை அழித்து தங்களை காக்குமாறு சிவபெருமானை வேண்டினர். சிவபெருமான் அவர்களிடம் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிடுமாறு கூறுகிறார். அதன்படி தேவர்களும் முனிவர்களும் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர்.

    தேவர்களையும் முனிவர்களையும் காப்பதாகக் கூறிய மகாவிஷ்ணு அசுரன் முரனோடு போர் புரியத் தொடங்கினார்.

    இருவருக்கும் இடையே நடைபெற்ற கடுமையான போர் 1000 ஆண்டுகள் நீடித்தது. இதனால், மிகவும் களைப்படைந்த மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

    அந்த நேரத்தை தனக்கு சாதகமாகப் பயண்படுத்திக்கொள்ள நினைத்த அசுரன் முரன் மகாவிஷ்ணுவை கொல்லத் துணிந்தான். அப்போது, அவரிடமிருந்த சக்தியானது ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. அந்த பெண்ணை அசுரன் முரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

    நித்திரையில் இருந்து விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட மகாவிஷ்ணு, அந்த சக்திக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார்.

    ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து மகாவிஷ்ணுவின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப் பெற்று நலமாக வாழ்வோம் என்பது ஐதீகம்.
     

  • Friday Viradham

    வெள்ளிக்கிழமையன்று விடியற்காலையிலேயே எழுந்து, மஞ்சள் பூசி குளித்துவிட்டு நெற்றியிலே குங்குமப் பொட்டு வைத்துக்கொள்ளுங்கள். பசுஞ்சாணம் கரைத்த நீரால் வாசல் தெளியுங்கள். ஃப்ளாட்டில் வசிப்பவர்கள் சுத்தமான நீரை கொஞ்சமாகத் தெளித்து, வழுக்கிவிடாதபடி துடைத்துவிட்டு, அதன்மேல் அழகாக ஒரு கோலம் போட்டு, அதுக்கு செம்மண் பார்டர் போடலாம்.

    வீடு முழுவதும் பெருக்கி, துடைத்து சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். பூஜையறையையும் சுத்தமாக்கி தூய்மைப்படுத்திக்கொள்ளுங்கள். அங்கே தீபம் ஏற்றி, ஊதுவத்தி கொளுத்தி வைக்கலாம். சாம்பிராணிப் புகை போடலாம். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி அழகுபடுத்தலாம்.

    ஒட்டுமொத்தமாக வீடு முழுவதும் அன்றைக்குப் பளிச்சென்று இருப்பது நல்லது. அன்று முழுவதும் மஹாலக்ஷ்மி ஸ்லோகங்களைச் சொல்லிக்கொண்டே இருப்பது நலம்.

    லக்ஷ்மி ஸ்லோகங்கள் மட்டுமில்லாமல், தெரிந்த அம்பாள் பாடல்களையும் சொல்லலாம். அன்று முழுவதும் எளிமையாக பால், பழம் என்று மட்டும் சாப்பிட்டு விரதமிருக்கலாம். முடியாதவர்கள் அல்லது அவரவர் உடல்நலத்தைப் பொறுத்து பகலில் ஒருவேளை மட்டும் உணவு எடுத்துக்கொள்ளலாம். இப்படி விரதம் மேற்கொண்டபிறகு தொடர்ந்து பதினோரு வெள்ளிக்கிழமைகளில் கடைபிடிக்கலாம். நடுவே ஏதேனும் காரணத்துக்காக ஏதாவதொரு வெள்ளிக்கிழமை முடியாமப் போனால், அதற்கடுத்த வெள்ளிக்கிழமையிலேர்ந்து தொடரலாம்.

    ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை நேரத்தில் பக்கத்துப் பெருமாள் கோயிலில் தாயாரை தரிசிப்பது முக்கியம். இதை முதல் வெள்ளிக்கிழமை விரதத்தன்றாவது செய்யவேண்டும்.

    கோயிலுக்குப் போய் வந்தபிறகு, முடிந்த பிரசாதங்களை தயாரித்து, வீட்டு பூஜையறையில் மஹாலக்ஷ்மிக்கு நிவேதனம் செய்யுங்கள். அவரவர் வசதிகேற்ப சுமங்கலிகளை அழைத்து, அவங்களுக்கு குங்குமம், மஞ்சள், பூ, பழம், வெற்றிலை பாக்கு, ரவிக்கைத் துணி என்று அளிக்கலாம்.

    இதே மாதிரி பதினொரு வெள்ளிக்கிழமைக்கும் செய்தால் நல்லது. சில குடும்பங்களில் பரம்பரை வழக்கப்படி எல்லா வெள்ளிக்கிழமைகளிலேயும் இந்த விரதத்தை அனுசரிப்பதுண்டு.
     

  • Narasimmar Viradham

    நரசிம்ம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகாவிஷ்ணு எடுத்த இந்த அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

    நரசிம்ம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார்.

    நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும். ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள். நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார். நரசிம்மரை வணங்கும் பக்தர்களுக்கு அவரும் அருள்புரிவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

    ராமருக்கும், கிருஷ்ணருக்கும் நம் நாட்டில் தனி ஆலயங்கள் ஏராளம் உள்ளன. அந்த அளவுக்கு நரசிம்மருக்கு அமைந்த ஆலயங்கள் குறைவே. தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் அவருக்கு தனிக்கோவிலும், சிறப்பு வழிபாடுகளும் அதிகம்.

    வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும். சுவாதி நட்சத்திரத்தன்று அவரை வழிபடுவது நல்ல பலனை தரும்.
     

  • ugadhi viradham

    பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் தெலுங்கு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.  அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் யுகாதி கொண்டாட வேண்டும். மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.

    காலையில் எழுந்து புனித நீராடி, கௌரி தேவியை நினைத்து, தீபம் ஏற்றி வழிபட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். புதிய பஞ்சாங்கத்தைப் பூஜையறையில் வைத்து, அதைச் சந்தனம், குங்குமம், மலர்களால் அலங்கரிக்க வேண்டும். தொடர்ந்து ஏழு ருசியுள்ள பச்சடியைச் செய்ய வேண்டும். இதற்கு சத்ருஜி (சத் – ஏழு) பச்சடி என்று பெயர். இதில் உப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு ஆகிய ருசிகள் இருக்க வேண்டும்.

    விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை முன்வைத்து ஒப்பட்லு என்கிற விசேஷ போளி, புளியோதரை, பால் பாயசம் செய்து ஏழு ராகங்கள் பாடி தெய்வங்களுக்குப் படையல் செய்து, ஆரத்தி செய்வது வழக்கம். அனைவரும் அஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு பிரசாதம் எடுத்துக்கொண்டு, மங்கள ஆரத்தி செய்வது வழக்கம்.

    யுகாதி பண்டிகை ஒரு ஆண்டாகிய யுகத்தின் தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலன்களையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான பஞ்சாங்கப் படனமாக மலர்கிறது.
     

  • Sai Baba Viradham

    ஆன்மீகத்தோடு ஒன்று கலந்தது பிராத்தனைகளும்,விரதங்களும். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமான பிரத்தனைகளை, பக்தர்கள் அவர்தம் வசதிக்கேற்ப செலுத்துவதுண்டு. ஆனால் அதனை முறைப்படி பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொண்டு,அர்ப்பணிப்போடு செய்யும் போது அதன் பலன்கள் அனேகம்.

    நமது சீரடி மகானிடமும், பக்தர்கள் தங்களின் பல கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள பல விதமான விரதங்களை கடைப்பிடிப்பதுண்டு . சீரடி பாபா விரத முறைகளில் எல்லோருக்கும் நன்றாக தெரிந்தது வியாழக்கிழமை விரதம் தான். ஆனால் அது போல் இன்னும் பல வகையான விரதங்களும் உள்ளன. அவற்றில்  சிலவற்றை இப்பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.  

     சாய் சத்யவிரத பூஜையில்,வழக்கமான சத்யநாராயணர் கதைக்குப் பதில் சாய் சரித்திரம் படிப்பது வழக்கம். பாபாவிற்குப் பிடித்த செண்பகப்பூ சாத்தி உள்ளன்புடன் அவரை வணங்க வேண்டும் .

     பாபாவின் வழிபாட்டு முறையில் ,சர்க்கரையில் அக்கறை இல்லா லீலையும் ஒன்று. ஒரு வியாழக்கிழமை சின்ன டப்பாவில் சர்க்கரையை எடுத்து வைக்க வேண்டும். 21 நாட்களுக்கு எந்த இனிப்பையும் எந்த வகையிலும் சாப்பிடக் கூடாது. எந்நேரமும் பாபாவை மனதார துதித்தபடி இருந்தால் ,மிகச் சரியாக 21ம் நாள் நாம் எதிர்பார்க்கிற இனிப்பான செய்தி நம்மைத் தேடி வரும்.

     பாபா சத்சரித்திரத்தில், ‘டெண்டுல்கர் அத்தியாயம்’ என்று ஒரு பகுதி உள்ளது. அந்த அத்தியாயத்தை படித்து விட்டு கல்கண்டு நைவேத்யம் செய்து பரீட்சை எழுதும் மாணவ மாணவியருக்கு அதை பிரசாதமாக அளித்தால், அவர்கள் தேர்வுகளில் மிகவும் சிறந்து விளங்குவார்கள் என்பது சாய் அடியார்களின்  நம்பிக்கை.

     திருமணத் தடை உள்ளவர்கள் தாமரை மாலையை அவர்கள் பிறந்த நட்சத்திர தினத்தன்று பாபாவிற்கு சாத்தி 108 நெல் பொரி உருண்டைகளை 108 எளியவர்களுக்கு தானமாக அளித்தால் பாபாவின் திருவருளால் அவர்களுக்கு உடனே திருமணம் நிச்சயமாகிறது என்பது பலனடைந்தவர்களின் வாக்குமூலம்.

     கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 11 மட்டைத் தேங்காய்களை எடுத்துக் கொண்டு பாபா ஆலயத்திற்குச் சென்று,  அவற்றில் 10 தேங்காய்களை ‘துனி’ என்னும் அணையா நெருப்பு முன் வைத்துப் பிரார்த்திக்க வேண்டும். மீதி ஒரு தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் சென்று, அதிலிருந்து தமக்குத் தெரிந்த ஏதேனும் இனிப்பைச் செய்து பாபாவிற்கு படைக்க வேண்டும். பிறகு அதிலிருந்து சிறிதளவு பிரசாதமாக உண்டு, மீதியை தானம் செய்தால் அந்த நோயின் கடுமை நிச்சயம் குறைந்து விடும்.

     நரம்பு, எலும்பு சம்பந்தமான நோய் உடையவர்கள் ஒரு வியாழக்கிழமையன்று துனி விரத பூஜையை ஆரம்பிக்கலாம். பாபா உருவாக்கிய அணையா துனி நெருப்பை 21,  48,  54 அல்லது 108 முறை என அவரவர் சௌகரியம் போல் செய்யலாம். பூஜையறையை துடைத்து கோலம் போட்டு மஞ்சள் துணியை பலகையில் விரித்து பாபா படத்தை அதன்மீது வைத்து ஊதுவத்தி ஏற்றி, ஒரு மட்டைத் தேங்காயை வைத்து கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தையும் அவர் முன் வைக்க வேண்டும். ‘புக்கே’ எனும் தேங்காய் துருவல், அவல், சர்க்கரை கலந்த இனிப்பை நைவேத்தியமாக  படைக்க வேண்டும். 9 வாரம் இந்த பூஜையை தொடர்ந்து செய்யவேண்டும். முதல் வாரம் மட்டைத் தேங்காயை துனியில் போடவேண்டும். அந்த ஒன்பது வியாழக்கிழமைகளும் அரிசி உணவை தவிர்த்தல் நலம். 9ம் வாரம் மஞ்சள் நிற இனிப்பைத் தயாரித்து எளியோர்க்கு விநியோகம் செய்யவேண்டும்.

     இந்த வழிபாட்டு முறைகளில் யாருக்கு எந்த வேண்டுதல் உண்டோ, அதற்கேற்ப அவரவர் விருப்பப்படி முடிந்த பூஜையினை, இன்ன தேதிக்குள் முடிய வேண்டும்  என்ற எதிர்பார்ப்பு இல்லாமல், அவர் மீது முழு நம்பிக்கை வைத்து செய்தால் அவர் நமக்கு எல்லா செல்வங்களையும் அருள்வார்.

     சாய் பிராத்தனை   இருளகற்றி நம் வாழ்வில் ஒளியேற்றும் . ஜெய் சாய்ராம்