Tag: viradham

  • Thiruvona Viradham

    பெருமாளின் திருநட்சத்திரமான திருவோண நட்சத்திரமான இன்று (21.02.20) திருவோண விரதம் மேற்கொள்ள வேண்டும். பெருமாளை மாலையில் கோயில் சென்று தரிசிக்க வாழ்வில் எல்லா சந்தோஷங்களையும் தந்தருள்வார் பெருமாள். 

    திருமணம் தாமதமாகிக் கொண்டிருக்கிறதே எனும் நிலை முற்றிலுமாக மாறும். கல்யாண மாலை தோள் சேரும். அதேபோல், நீண்ட காலம் குழந்தை இல்லையே என ஏங்கித் தவித்தவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    திருவோண விரதம் மேற்கொள்பவர்களின் வாழ்வில், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். வீட்டின் தரித்திரம் விலகும். ஐஸ்வர்யம் பெருகும். மனக்குறைகளும் கிலேசங்களும் காணாமல் போகும். மிக முக்கியமாக, இந்த நாளில் பெண்கள் திருமாலை தரிசித்து வேண்டிக் கொண்டால், அவர்களின் கண்ணீரையும் கஷ்டத்தையும் துடைத்தருள்வார். 

    திருவோண விரதம் இருக்கும் பக்தர்கள், மகா விஷ்ணுவை வணங்கி அவரின் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே இருங்கள். விஷ்ணு புராணங்களைப் பாராயணம் செய்யலாம். சுவாமிக்கு நிவேதித்தப் பொருட்களை எல்லோருக்கும் விநியோகித்து மகிழலாம்.

    இன்றைய நாளில், மாலை வேளையில், வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபடுங்கள். சகல தோஷங்களும் விலகும். சந்தோஷம் மட்டும் வீட்டில் நிறைந்திருக்கும் என்பது உறுதி!

    திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சந்திர திசை நடப்பவர்கள் பெருமாளை குலதெய்வமாகக் கொண்டவர்கள், சுக்கிர யோகம் தடைப்பட்டிருப்பவர்கள், பெருமாளை தரிசித்து துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். கஷ்டங்களும் நஷ்டங்களும் காணாமல் போகும்!
     

  • Thiruvadirai Viradham

    மார்கழி திருவாதிரை நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நீராடி, சிவநாமம் ஜெபித்து திருநீறு பூச வேண்டும். சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்க வேண்டும். காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையைக் காண வேண்டும். 

    சுவாமிக்கு களி படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் சாப்பிடக்கூடாது. சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்.

    இந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடரவும் செய்யலாம். ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால், வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம் என்பது நம்பிக்கை. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்களின் சேர்க்கையாக இந்த உலகம் இருக்கிறது . 

    இந்த ஐந்துக்கும் உரிய இடங்களாக ஐந்து திருத்தலங்களானது ஆகாயம் – சிதம்பரம், நெருப்பு – திருவண்ணாமலை, நீர் – திருவானைக்காவல், காற்று – காளஹஸ்தி, நிவம் – காஞ்சிபுரம் ஆகியவை. இதில் முதன்மையான ஆலயத்தில் சிதம்பரத்தில் நடராஜன் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவர் .
     

  • Sagal selvangal tharum Vaikunda egadhasi viradham

    ஏகாதசி விரதம் இருப்பவர்கள், அதற்கு முன்தினமான தசமி நாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு, மறுநாள் ஏகாதசியன்று முழுமையாக உண்ணாவிரதம் இருக்க வேண்டும். இரவில் கண்விழித்து பெருமாளின் பெருமையைப் பேசுவதும், விஷ்ணு சகஸ்ர நாமம், ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக இருக்க வேண்டும். ‘கண் விழிக்கிறோம்’ என்ற பெயரில் சினிமா, டிவி பார்க்கக்கூடாது. மறுநாள் துவாதசி அன்று காலை 21 வகை காய்கறிகளை சமைத்து உண்ண வேண்டும். இதில் அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் அவசியம் இடம்பெற வேண்டும்.

    துவாதசியன்று காலையில் சாப்பிட்ட பிறகு பகலில் உறங்கக்கூடாது. விரதத்தின் போது எக்காரணம் கொண்டும் துளசி பறிக்கக்கூடாது. பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்து விடவேண்டும். ஏகாதசி விரதம் 10-வது திதியாகிய தசமி, 11-வதாகிய ஏகாதசி, 12-ம் திதியாகிய துவாதசி என்று 3 திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகல சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல்நலமும் ஆரோக்கியத்துடன் திகழும். ‘வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருப்பவர்கள், இறந்த பிறகு நேரே வைகுண்டம் செல்வார்கள். அவர்களுக்கு மறுபிறப்பே இல்லை’ என்று பக்தர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

    அனுஷ்டிப்பது எப்படி?

    மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஏகாதசியை ‘வைகுண்ட ஏகாதசி’ உற்சவமாகக் கொண்டாட திருமங்கையாழ்வார் ஏற்பாடு செய்தார். ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தி தியானம் செய்வதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.
     

  • Iyappan Viradham Karuppu Udai

    மானிடர்களை சனி பகவானின் ஏழரை வருடம் தண்டிக்கிறீர்கள். அவர்களுக்கு நல்லருள் அருளக் கூடாதா என சனீஸ்வரரிடம் ஐயப்பன் கேட்க, அதற்கு அது என் தர்மம், பிரம்மன் படைத்தலும், மகா விஷ்ணு காத்தல், ஈசன் அழித்தன் என வேலையை செய்கின்றனர்.

    படைத்தல், காத்தல், அழித்தல் தர்மம் என்றால், அது தடைப்பட்டால் எப்படி சிருஷ்டி இயங்காதோ, அதே போல், நான் கர்ம வினைகளுக்கு ஏற்ப மானிடரைத் தண்டிக்காவிட்டால் என் தர்மம் என்ன ஆகும் என சனீஸ்வர் கேட்டார்.

    அதோடு மானிடர்களை அவரவர் கர்ம வினைக்கேற்ப தண்டனை அளிக்காவிட்டால் எப்படி சிருஷ்டி இயங்கும் என சனீஸ்வரர் கேட்டார்.

    சிருஷ்டி என்பது மனிதர்களின் சந்தோசத்திற்கும், ஆனந்த அமைதிக்கும் தான் சிருஷ்டி செயல்படுகிறது. மானிடர்களின் கர்ம வினை பலன்களை தரத்தானே நீ உள்ளாய். சரி என கூறி, ஐயப்பன் பல்வேறு தண்டனைகள் அடங்கிய விதிகள் அதாவது விரதத்தை கடைப்பிடிப்பது குறித்து வாக்கு கொடுத்தார்.

    சனீஸ்வரர் தன் ஏழரை ஆண்டுகால பிடியில் ஒருவனுக்கு எப்பேர்ப்பட்ட தண்டனை வழங்குகிறார் என்பதையும், அதற்கேற்றார் போல் விரதத்தை அமைத்து, சனீஸ்வரரின் தீய பார்வையிலிருந்து தன் பக்தர்களை காக்க ஐயப்பன் விரத முறையை அமைத்தார். ஒரு மண்டல காலம் விரதம் இருக்கும் ஒருவருக்கு சனீஸ்வரரின் கொடும் பார்வையிலிருந்து காத்து அருள கேட்டுக் கொண்டார்.

    ​ஒரு மண்டலத்தில் ஏழரை ஆண்டு கால தண்டனை

    ஒரு மண்டலம் விரதம் இருக்கும் ஒருவருக்கு, ஏழரை ஆண்டு கால தண்டனையை எப்படி கொடுப்பது என சனி பகவான் கேட்டார்.

    சனீஸ்வரரின் ஏழரை ஆண்டு தண்டனை எப்படி ஒரு மண்டலத்தில் பொருந்தும் என்பதை ஐயப்பன் விளக்கினார்.

    சனீஸ்வரர்….
    விதவிதமான உணவு உண்டு, பழ ரசங்களை அருந்தி மகிழும் பலரை, சோற்றுக்கே வழியின்றி அலைய வைப்பேன். அதனால் அவர்கள் பட்டினியிலிருந்து தப்பிக்கவே முடியாது என்றார்.

    ஐயப்பன்….
    தன் பக்தர்கள் எளிமையான உணவை ஒரு பொழுது உண்பார்கள்.

    சனீஸ்வரர்….
    மலர் தூவிய மஞ்சத்தில் உறங்கிய மன்னவனைக் கூட கல்லிலும், மண்ணிலும் உறங்க வைப்பேன் என்றார்.

    ஐயப்பன்…. 
    என் பக்தர்கள் கட்டிலில் உறங்காமல், வெறும் தரையில் படுத்து உறங்குவார்கள் என்றார்.

    சனீஸ்வரர்….
    முக்கிய விஷயம் என்ன வென்றால், என் பார்வை பட்டால் இணைந்திருக்கும் தம்பதியர் கூட பிரிந்து விடுவார்கள்.

    ஐயப்பன்….
    கடுமையான பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து, சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷத்தை உச்சரித்து, காடு, மேடுகளை கடந்து என் தரிசனத்திற்கு வருவார்கள். அப்படி வரும் பக்தர்களை நீ ஒரு கணம் கூட பிடிக்கக் கூடாது, அவர்களுக்கு சுக சௌக்கியங்களைத் தான் அளிக்க வேண்டும் இது என் அன்பு வேண்டுகோளும், கட்டளையும் ஆகும் என்றார்.

    கருப்பு உடை

    சனீஸ்வரர்….
    கட்டிக் கொள்ள உடை இல்லாமல், தலைக்கு எண்ணெய் இல்லாமல், காலுக்கு காலணி இல்லாமல், தன்னை தானே கண்டுகொள்ள முடியாத படி உருவம் சிதைந்து, செயலிழந்து, சக்தியின்றி வாடிப் போக வைத்துவிடுவேன்.

    ஐயப்பன்…. 
    உனக்கு பிடித்த வண்ணம் கருப்பு தானே. விரத காலத்தில் கருப்பு உடை அணிந்து, காலணி கூட அணியாமல், முடி கூட திருத்திக் கொள்ளாமல், மணி மாலை அணிந்து, சுக சௌக்கியங்களில் ஒதுங்கி நிற்பார்கள். அனைவராலும் சுவாமி என அழைக்கப்படுவார்கள். நீங்கள் சொன்ன கஷ்டங்களை எல்லாம் பக்தி சிரத்தையோடு ஏற்று அதை விரதமாக கடைப்பிடிப்பார்கள்.

    விரதம் முக்கியம்
    சனீஸ்வரர்…. 
    மனம் மிகு பன்னீரில் குளித்தவர்களைக் கூட, நான் வெறும் தண்ணீருக்கே அல்லாட வைப்பேன்.

    ஐயப்பன்…. 
    உதயத்திலும், மாலையிலும் பச்சை தண்ணீரில் என் பக்தர்கள் குளிப்பதை பக்தி சிரத்தையுடன் ஏற்பார்கள்.

    தர்ம சாஸ்தாவின் இந்த கட்டளையை சிரமேற்கொண்டு சனிபகவான் இன்றும் ஐயப்ப பக்தர்கள் கொடும் பார்வை செலுத்தாமல் நன்மையை செய்து வருகின்றார்.

    இப்படி சனிபகவானை ஐயப்பன் சம்மதிக்க வைத்து, தன் பக்தர்களுக்கு இத்தனை கட்டுப்பாடுகளை விரதமாக வைத்துள்ளார். இதன் காரணமாக தான் கருப்பு உடை உடுத்தி ஐயப்ப பக்தர்கள் கடும் விரதம் இருந்து மலைக்கு செல்கின்றனர்.

    சாமியே சரணம் ஐயப்பா…

  • Pradhosham Viradham Thodanga Ugandha naal

    சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.

    பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசுவரனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம்.

    பிரதோஷ நேரத்தில் ஈசுவரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம்.

    பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    சிவபெருமான் விஷம் குடித்தது சனிக்கிழமை. எனவே சனி பிரதோஷம் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.

    நித்திய பிரதோஷம், பட்ச பிரதோஷம், மாதப்பிர தோஷம், மகாப்பிரதோஷம், பிரயைப்பிரதோஷம் என பிரதோஷம் 5 வகைப்படும்.

    தினமும் அதிகாலை சூரியன் மறைவதற்கு மூன்று நாழிகைக்கு முன்பு, நட்சத்திரங்கள் தோன்றும் வரை உள்ள காலம் நித்திய பிரதோஷம் ஆகும்.

    சுக்லபட்ச சதுர்த்தியின் மாலை நேரம் பட்ச பிரதோஷமாகும்.

    கிருஷ்ணபட்ச திரயோதசி தினத்தை மாத பிரதோஷம் என்கிறார்கள்.

    பிரளய காலத்தில் எல்லாம் சிவனிடம் ஒடுங்குவதால் அது பிரளய பிரதோஷம் என்றழைக்கப்படுகிறது.

    பிரதோஷ நேரத்தில் சிவாலயத்தில் இருக்க இயலா விட்டாலும், ஈசுவரனை மனதில் நினைத்து கொண்டால் நினைத்தது நடக்கும்.

    இரவும்,பகலும் சந்திக்கும் நேரத்துக்கு உஷத்காலம் என்று பெயர். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவி உஷாதேவி. அதே போல பகலும், இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யஷத் காலம். இதன் அதிதேவதை சூரியனின் மற்றொரு தேவியாகிய பிரத்யுஷா. அவள் பெயரால் அந்த நேரம் பிரத்யுஷத் காலம் என அழைக்கப்பட்டது. நாளடைவில் அது பேச்சு வழக்கில் "பிரதோஷ காலம்'' ஆகிவிட்டது.

    பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் பலன்கள் கிடைக்கும். சனிப்பிரதோஷம் தினத்தன்று விரதம் தொடங்கி, பிரதோஷம் தோறும் விரதம் இருந்து வந்தால், ஈசுவரனிடம் நீங்கள் வைக்கும் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும்.

    பிரதோஷ நாட்களில் தவறாது விரதம் இருந்து வழிபட்டால் கடன், வறுமை, நோய், பயம், மரண வேதனை நீங்கும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்து.

    பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது.

    பிரதோஷ கால விரதம் தொடங்குவோர் ஆவணி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தொடங்குவது மகா உத்தமம்.

    பிரதோஷ நேரத்தில் பெருமாள் கயிலாய மலையில் இருப்பதால், பிரதோஷ நேரத்தில் பெருமாள் கோவில்களில் திரை போட்டு மூடி இருப்பார்கள்.
     

  • Sangadahara chadurthi viradham

    விநாயகப் பெருமானை வழிபட பல விரதங்கள் இருந்தாலும் மாதம் ஒரு முறை வரும் சங்கடஹர சதுர்த்தி விரதம் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடியதாகும்.  இந்த விரதம் இருந்தால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி அனைத்து காரியங்களும் வெற்றி பெறும்.

    சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. விநாயக சதுர்த்திக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தியே மஹா சங்கடஹர சதுர்த்தியாகும். வருடம் முழுவதும் வரும் சங்கடஹர சதுர்த்தியை விட, மஹா சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷமானது.

    விரதம் இருக்கும் முறை

    சங்கடஹர சதுர்த்தியன்று நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை விநாயகப் பெருமானின் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். மாலை ஆலயத்திற்குச் சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அறுகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு. உடல் ஆரோக்கியம் இருப்பவர்கள் மட்டும் உபவாசம் இருக்கலாம். 

    ஆலயத்தை 11 முறை வலம் வருதல் வேண்டும். அனைத்துப் பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து சந்திரனைத் தரிசித்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். பிறகு இரவு உணவு எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு முழு விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் காலை சிற்றுண்டி அருந்தி மதியம் விரதம் இருந்து உணவு உண்ணாமல் மாலையில் விநாயகப் பெருமானின் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து இரவு சிற்றுண்டி அருந்தி விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். விநாயகர் துதி பாடல்கள், விநாயகர் அகவலைச் சொல்லி வழிபடலாம்.

  • Saibaba Viradham

    ஒன்பது வியாழக்கிழமை விரதம் இருந்தால் சாய் பாபா நாம் வேண்டியதை நிறைவேற்றுவார். இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,  தூய மனதில் சாயி பாபாவை எண்ணி பிராதித்துக் கொள்ள வேண்டும். 

    காலை அல்லது மாலை சாய்பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். இந்த விரதத்தை பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள் உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை உணவு அருந்தலாம். நாள் முழுவதும் பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது. 

    பலகையில் மஞ்சல் துணியை விரித்து சாய் பாபா படத்தை வைத்து தூய நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிறமலர்கள் மாலை சாய்பாபா படத்திற்கு அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி, பிரசாதம். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நெய்வேத்தியம் வைத்து, விநியோகம் செய்து சாய்பாபாவை வணங்கவும். முடிந்தால் சாய்பாபாவின் கோவிலுக்குச் செல்லவும். வீட்டிலேயே சாய் பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்யவும் சாய் விரத கதை, சாய் பாமாலை, சாய் பவானி இவற்றை பக்தியுடன் படிக்கவும். வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம்.

    விரதத்தின் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும் ஒன்பதாவது வியாழக்கிழமை ஐந்து ஏழைகளுக்கு உணவு அளிக்கவும். 

    உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப் பொருளோ கொடுத்து ஏற்பாடு செய்யவும். சாய்பாபாவின் மகிமை மற்றும் விரதத்தை பரப்புவதற்காக 9-வது வியாழக்கிழமை இந்த சாய் விரத புத்தகங்களை நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர், சொந்த பந்தம் தெரிந்தவர் என்று இலவசமாக விநியோகிக்கவும்.

    விநியோகிக்கும் அன்று பூஜையில் வைத்த பிறகு விநியோகிக்கவும். இதனால் புத்தகத்தை பெறும் பக்தர்களின் விருப்பங்களும் நிறைவேறும் மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதமும், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும்.

  • Indra Egasasi Viradham

    மாதந்தோறும் வரும் ஏகாதசி நாள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. ஆனால், ஐப்பசி மாதத்தில் வரும் ஏகாதசிகள் சிறப்பு வாய்ந்தவை. ஐப்பசி தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘இந்திர ஏகாதசி’ என்று அழைக்கிறார்கள். 

    ஐப்பசி  மாத ஏகாதசி தோன்றிய கதை…
    இந்த ஏகாதசியை நாரதர் வெளிப்படுத்தினார். மாஹிஷ்மதி என்ற நகரை இந்திரசேனன் என்ற மன்னன் நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான். ஒரு நாள் அவனுடைய அரசவைக்கு நாரத முனிவர் வந்தார். மாமுனியைப் பார்த்ததும், இந்திரசேனன் மிகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்று உயர்ந்த ஒரு ஆசனத்தில் அமரச் செய்தான்.

     பின்னர் நாரதர் வருகையின் நோக்கத்தை மன்னன் கேட்டான். அப்போது நாரதர், ‘மன்னா! நான் இப்போது எமலோகத்தில் இருந்து வருகிறேன். அங்கு உன் தந்தை நரகத்தில் கடுந்துயரை அனுபவித்து வருகிறார். அவர், ‘என் மகனிடம் சொல்லி, இந்திர ஏகாதசி விரதத்தைச் செய்யச் சொல்லுங்கள். அவன் பூலோகத்தில் இந்த விரதத்தைக் கடைபிடித்தால், நான் இங்கு நரகத்தில் இருந்து விடுதலை பெறுவேன். என்னை கரையேற்றும்படி என் பிள்ளையிடம் சொல்லுங்கள்’ என்று என்னிடம் சொல்லி அனுப்பினார். அதைச் சொல்வதற்காகவே தற்போது நான் வந்தேன்’ என்று கூறினார்.

    தன் தந்தை நரகத்தில் படும் துயரைக் கேட்டு இந்திரசேனன் மனம் வருந்தினான். இருப்பினும் தந்தை விடுதலைப் பெறுவதற்கு ஒரு வழி இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தான். இந்திர ஏகாதசியை கடைபிடிக்கும் வழிமுறையையும் நாரதரிடம் கேட்டறிந்தான். அவர் கூறியபடியே விரதத்தை செய்து முடித்தான். அதன் பலனாக இந்திரசேனனின் தந்தை நரகத்தில் இருந்து விடுதலை ஆகி, சொர்க்கத்தை சென்றடைந்தார்.

    பல குடும்பங்களில் வசதி இருந்தும் நிம்மதி இருக்காது. இதற்கு பித்ருக்களின் சாபமே காரணம். அப்படிப்பட்டவர்கள் இந்திர ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால், நரகத்தில் இடர்படும் நமது முன்னோர்களும் விடுதலையாகி நலம் பெறுவார்கள்; நாமும் நலம் அடையலாம்.
     

  • Thiru Onam Viradham

    திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். திருமணம் தாமதமாகி வந்தவர்களுக்கு விரைவில் வரன் அமையும். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைகள் நீங்கி குழந்தைப்பேறு உண்டாகும். தமிழ் மாதமான ஆவணி, கேரளாவில் 'சிங்க மாதம்' என்று அழைக்கப்படுகிறது. சிங்க மாதத்தின் திருவோண நட்சத்திரத்தில் வளர்பிறையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மகாவிஷ்ணுவிற்கு உகந்த நட்சத்திரம் திருவோணம் ஆகும். மகாவிஷ்ணு மூன்றடி மண் கேட்பதற்காக வாமன அவதாரம் எடுத்தது திருவோணம் நட்சத்திரத்தில்தான் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

    27 நட்சத்திரங்களில் திருவாதிரை, திருவோணம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் சிறப்பு வாய்ந்தவையாக கொண்டாடப்படுகின்றன. திருவாதிரை சிவனுக்கு உரியது. திருவோண நட்சத்திரம் பெருமாளுக்குரியது. வாமன அவதாரம் எடுத்தபோது திருமால் திருவோண நட்சத்திரத்தில்தான் அவதரித்தார். மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக அவதரித்த பூமாதேவியை ஒப்பிலியப்பர் பெண் கேட்டு வந்தது பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்றுதான்.

    ஒப்பிலியப்பன் திருமணம் செய்து கொண்டது ஐப்பசி மாத திருவோண நட்சத்திர நாளில்தான்.திருவோணம் விரதம் விரதம் பெருமாளுக்கு உகந்தது. திருவோணத்தன்று பெருமாள் பக்தர்கள் விரதம் இருப்பார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் திருவோணத்துக்கு முதல் நாள் இரவு உணவை தவிர்க்க வேண்டும். திருவோண நட்சத்திரமன்று திருவோண விரதம் இருந்தால் சந்திரதோஷம் விலகுவதுடன், சந்தோஷமான வாழ்வு அமையும். திருவோணம் விரதம் இருப்பவர்கள் மாலையில் சந்திர தரிசனம் காண வேண்டும்.

    திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். திருமணம் தாமதமாகி வந்தவர்களுக்கு விரைவில் வரன் அமையும். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைநீங்கி குழந்தைப்பேறு உண்டாகும். நீங்காத செல்வம் நிலைத்து நிற்கும் என்பது நம்பிக்கை.
     

  • Varalakshmi Viradham Vazhipadum Murai

    சுமங்கலிகளுக்கான மிக முக்கியமான பண்டிகையாக வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஆவணி மாதம் கொண்டாடப்படும் இப்பண்டிகை இந்த ஆண்டு ஆடி மாதம் வருவதே ஒரு அபூர்வம் தான். இந்த விரதம் மாமியார் தொடங்கிக் கொடுக்க மருமகள் தொடர்ந்து செய்வது வழக்கம். பின்னர் அந்த மருமகள் எடுத்துக் கொடுக்க அடுத்து வரும் மருமகள் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும். அவரவர்களும் தனித்தனியே தாயார் திருமுகம் வைத்துக்கொள்ள வேண்டும்.

    கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தைகள் பிறந்து குலம் தழைக்கவும், அஷ்ட ஐஸ்வரியம் கிடைக்கவும் வேண்டி சுமங்கலிப் பெண்கள் இப்பண்டிகையைக் கொண்டாடுவார்கள். அன்றைய தினம் பூஜையில் வைத்த மஞ்சள் சரடைப் பூஜைக்காக இல்லம் வரும் அனைத்துப் பெண்களும் கட்டிக் கொள்வார்கள்.

    வரலட்சுமி விரதத்தன்று வரலட்சுமி தாயாரை மனதால் வேண்டினால், ஆதி லட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, வித்யா லட்சுமி, வீர லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி ஆகிய அஷ்டலட்சுமிகளையும் வேண்டிய பலன் ஒரு சேரக் கிடைக்கும் என்பது ஐதீகம். இவர்கள் அனைவரும் வரலட்சுமி விரதத்தன்று ஒரே தாயாரான வரலட்சுமியில் ஐக்கியம் ஆவதாக நம்பிக்கை.

    சரி இப்போது வரலட்சுமி விரதம் வழிபடும் முறையை பற்றி பார்ப்போம்…..

    அழகிய தாம்பாளத்தின் மீது தலை வாழை இலை இட்டு அதன் மீது அரிசி பரப்ப வேண்டும். பின்னர் இதன் மீது கலசம் வைக்க வேண்டும். இக்கலசத்தினுள் கால் பங்கு அரிசியை நிரப்பி, காதோலைக் கருக மணி, கரும் புள்ளி இல்லாத மஞ்சள் நிற எலுமிச்சம் பழம், தங்கக் காசு, வெள்ளிக் காசு, சிறிய கண்ணாடி, மரச் சீப்பு, இரண்டு வெற்றிலைப் பாக்கு ஆகியவற்றை இட்டு நிரப்ப வேண்டும். கலசத்தின் அகன்ற வாய் பகுதியின் மீது தேங்காயின் குடுமிப் பகுதி மேல்புறம் இருக்குமாறு வைக்க வேண்டும்.

    அத்தேங்காய்க்கு மஞ்சள் குங்குமம் இட வேண்டும். பின்னர் ஆண்டுதோறும் தாயார் முகமாக வைக்கப்படும் திருமுகத்தை, தேங்காயின் குடுமிப் பகுதி மறையுமாறு செருக வேண்டும். தாயாருக்குப் பொட்டு இட்டு, அதில் ஜொலிக்கும் கற்களைப் பதிக்கலாம். பின் பகுதியில் பூச்சரமும், பூ ஜடையும் வைத்தால் அழகாக இருக்கும். தாயாருக்கும், கலசத்திற்குமாக அழகிய ஆடை அணிய வேண்டும். அழகிய முத்து மாலை உள்ளிட்ட நகைகளைத் தாயாருக்கு அணிவிக்க வேண்டும்.

    முதல் நாளான வியாழன் இரவே தாயார் தயாராகிவிடுவார். ஒரு வருடமாக பூஜை அறையில் பெட்டிக்குள் இந்தத் தாயார், கண் திறக்கும் நேரத்தில் உணவு படைக்க வேண்டும். முன்னதாக வெண்பொங்கல் தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். வெற்றிலை பாக்கு, பழம் ஆகியவற்றைத் தட்டில் வைத்து, தீபாராதனை, ஆரத்தி போன்றவற்றைத் தயார் நிலையில் வைத்துவிட வேண்டும். புதிய கண் மை எடுத்துத் தாயார் திருமுக மண்டலத்தில், கண்களுக்கு இட வேண்டும். இதனையே தாயார் கண் திறத்தல் என்று சொல்வார்கள். பின்னர் தாயாருக்குப் படைத்த பிரசாதத்தையே நோன்பு நோற்கும் பெண் சாப்பிட வேண்டும்.

    மறுநாள் விடியற்காலை இந்தத் தாயாரை இல்லத்திற்குள் வருமாறு அழைக்க வேண்டும். பக்கத்திற்கு ஒருவராக இரு சுமங்கலிப் பெண்கள் அலங்கரித்து வைத்துள்ள தாயாரைத் தாம்பாளத்துடன் தூக்கி வந்து முன்னதாகத் தயாரிக்கப்பட்ட சிறிய மண்டபத்தினுள் வைக்க வேண்டும். அந்த மண்டபத்தின் இரு புறமும் வாழைக்கன்றுகளைக் கட்டி, மாவிலை, தென்னை இலை தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். மண்டபத்துக்கும் மஞ்சள், குங்குமம் இட வேண்டும்.

    முதலில் விநாயகர் பூஜையைச் செய்துவிட்டு பிறகு மகாலட்சுமி அஷ்டோத்திரம் பாடி வழிபட வேண்டும். நோன்புச் சரடுக்குத் தனியாகப் பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்தபின்பு தாயாருக்குப் பருப்பு பாயாசம், தேங்காய், உளுந்துக் கொழுக்கட்டை, பால், தயிர், வெற்றிலைப் பாக்கு, பழம் இவை அனைத்தையும் நைவேத்தியம் செய்ய வேண்டும். பிறகு பெரியோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின்னர் நோன்புச் சரடை வலது கையில் கட்டிக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்தும் பூஜை, ஸ்ரீவரலட்சுமி பூஜை. தாயாரை வழிபட்டு தனம் பெற்று வாழ்வோம்.