Tag: Murugan

  • Murugan Sukra Vara Viradham

    முருகப்பெருமானுக்கு நாள், நட்சத்திரம், திதி ஆகிய மூன்று முறைகளில் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாள் விரதம் என்பது வெள்ளிக்கிழமை தோறும் கடைப்பிடிப்பதைக் குறிக்கும். இவ்விரதம் முருகன் சுக்ரவார விரதம் என்றழைக்கப்படுகிறது.

    நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை விரதத்தையும், திதி விரதம் சஷ்டி விரதத்தையும் குறிக்கும். முருகன் சுக்ரவார விரதம் என்பது ஐப்பசி மாத முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

    நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகியவற்றை விடுத்து வரபில்லா ஆற்றல், தன்வயமுடைமை, இயற்கை உணர்வு, பேரருள் ஆகிய நற்குணங்களைப் பெறும் நோக்கில் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இவ்விரத முறையானது பகலில் ஒரு வேளை உணவு உண்டும், இரவில் பழம் உண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையால் துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.
     

  • thiruchendur murugan

    வசிஷ்டர்:  இந்த பூமியில் போக மோட்சங்களைத் தரும் பல தலங்கள் இருந்தாலும் அவை யாவும் சந்தேகமின்றி திருச்செந்தூர் தலத்திற்கு அடுத்தவையே.

    வாமதேவர்: பிரம்மஹத்தி செய்தவனும், வேதங்களை பழித்தவனும்கூட திருச்செந்தூரில் ஒருநாள் வசித்தால் பரிசுத்தவானாகிறான்.

    ஜாபாலி: இத்தல தீர்த்த மகிமைக்கு ஈடானது எதுவுமில்லை.

    விசுவாமித்திரர்: நூறு அஸ்வமேத யாகங்களின் பலனை திருச்செந்தூர் வாசத்தால் கோடி பங்கு அதிகமாகப் பெறலாம்.

    காச்யபர்: ஒருவன் பிரயாகையில் வாழ்நாள் முழுவதும் நீராடும் பலனை கார்த்திகை நட்சத்திரத்தன்று ஒருமுறை இந்த தலத்தில் நீராடினால் அடைந்துவிடுகிறான்.

    மார்க்கண்டேயர்: ரிஷிகள் காசியில் ஒரு வருடம் தவம்செய்து பெறும் புண்ணியத்தை திருச்செந்தூரில் ஒரே நாளில் அடைந்து விடலாம்.

    மௌத்கல்யர்: பல நாட்கள் செய்துவரும் தவத்தை திருச்செந்தூர் தரிசனம் ஒன்றினாலேயே அடைந்துவிடலாம்.

    குரு மகாதசை அல்லது குரு புக்தி குரூரமாக இருந்தால் அவர்கள் திருச்செந்தூர் வந்து ஆறுமுகனை தரிசித்து, ஸ்ரீஆதிசங்கரரின் சுப்ரமண்ய புஜங்கத்தையோ, குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பாவையோ ஒருமுறை பாராயணம் செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கிவிடும். பூத, பிரேத, பைசாச உபாதைகளும் நீங்கி நலம்பெறலாம். 

    இவ்வாறு முனிவர்களாலும், ஆச்சார்யர்களாலும் போற்றப்பட்ட திருச்செந்தூர் தலத்தை வாழ்வில் ஒருமுறையாவது தரிசித்தால் முருகன் அருளையும், குரு பகவானின் அருளையும் பெற்று சகல துக்கங்களிலிருந்தும் விடுபடலாம்.

  • Kurundai malai murugan

    கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் பாதையில் 28 கி.மீ. தொலைவிலுள்ள காரமடையிலிந்து அத்திக்கடவு செல்லும் சாலையில் அமைந்துள்ளது. குருந்தை மலை முருகன் கோவில். இத்திருக்கோவிலில் முருகப்பெருமான் குழந்தை வேலாயுதசாமியாக காட்சியளிக்கிறார்.

    650 வருடங்கள் பழமையான இக்கோவிலில் உள்ள முருகன் பழனி கடவுள் போல மேற்கு திசையை நோக்கி காட்சியளிக்கிறார். இம்மலைக்கு தெற்கே சஞ்சீவ மலையும், வடக்கே பகாசுரன் மலையும் உள்ளன. கீழே ஆரவல்லி, சூரவல்லி வசித்த கோட்டைகள் உள்ளன. இம்மலையின் அடிவாரத்தில் கம்பீர தோற்றத்துடன் விநாயகர் அருள்பாலிக்கிறார். அடுத்து இடும்பன் சன்னதியும், நாக தீர்த்தம், மயில் தீர்த்தம் உள்ளன. ஸ்தல விருட்சமாக குருந்த மரம் இருப்பதால் இம் மலையில் வாழும் முருகனுக்கு குருந்த மலை முருகன் என்று பெயர் வந்தது. இத்திருத்தலத்தில் அகஸ்தியர், அனந்தன் என்ற சர்ப்பம் சூரியன் வணங்கி, முருகனின் அருள் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.

    இக்கோவிலின் எதிரே கஜபுஷ்கரணி உள்ளது மற்றும் அனுமன் சுனை, அனுமன் கோயில் உள்ளது.அனுமன் மலையை தாவும் பொழுது, இங்கு ஒரு காலும், மற்றொரு மலையான சஞ்சீவி மலையிலும் ஒரு கால் வைத்ததாக ஐதீகம். குழந்தை இல்லாதவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து முருகப்பெருமானை வணங்கினால் புத்திர பிராப்தி கிடைக்கும் என்பது இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.
     

  • Arupadai Murugan

    முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வந்தால் மனதில் அமைதியும், உள்ளத்தில் உவகையும், உடல் ஆரோக்கியமும் கிடைப்பது நிச்சயம். நம் எல்லோருக்கும் அறுபடை வீடுகளுக்கும் ஒரே நேரத்தில் சென்று தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.

    ஆனால், நேரமின்மை உள்ளிட்ட காரணங்களால் தள்ளி போட்டுக்கொண்டே இருப்போம். சரியாக திட்டமிட்டால் சீக்கிரமாகவும், சிக்கனமாகவும் அறுபடை வீடு முருக பெருமான் கோயில்களில் தரிசித்து வந்துவிடலாம். மூன்றே நாட்களில் அறுபடை வீடுகளுக்கு பெரும்பாலும் பேருந்துகளிலே செல்ல முடியும்.
    உங்களுக்கு சிறப்பாகவும், சீக்கிரமாகவும் அறுபடை முருகனை தரிசிக்க வேண்டுமெனில், கார்த்திகை, சஷ்டி போன்ற விசேஷ நாட்களையும், வெள்ளிக்கிழமைகளையும் தவிருங்கள். சாதாரண நாட்களி்ல் ஒவ்வொரு கோயிலிலும் பின்பற்றப்படும் தரிசன நேரம் இங்கே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
    ஆறு கோவில்களிலும் சிறப்பு தரிசன நுழைவுக் கட்டணச்சீட்டு வாங்கினால் முருகப் பெருமான் சன்னிதியிலேயே அமர்ந்து ஆராதனையின் போது வழிபடலாம். சிறப்பு தரிசனத்திற்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கட்டணங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்
    தூத்துக்குடி வந்து அங்கிருந்து பஸ் அல்லது காரில் திருச்செந்தூருக்கு வரலாம். முதலிலேயே இணையதளம் மூலமாக அல்லது தொலைபேசி வாயிலாக தங்கும் அறை பதிவு செய்து விடுவது நேரத்தை மிச்சமாக்கும். திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு, அங்கு உள்ள நாழி கிணறு மற்றும் வள்ளிகுகையையும் நேரம் இருந்தால் பார்த்துவிடுங்கள். முதல்முறை வருபவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாக குறிப்பிடலாம். திருச்செந்தூரில் தரிசனம் முடிநது 12 மணிக்கெல்லாம் கிளம்பி விட வேண்டும். அப்பொழுதுதான் முதல்நாள் மேலும் இரண்டு கோயில்களுக்கு போக முடியும்.

    திருப்பரங்குன்றம் மற்றும் பழமுதிர்சோலை

    இந்த இரண்டு கோவில்களும் மதுரைக்கு அருகில் இருக்கிறது. திருசெந்தூரிலிரிந்து மதுரைக்குச் செல்ல மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகும். மதுரைக்குப் போகும் நேரத்தை பொறுத்து இரண்டில் எந்த கோவிலுக்கு முதலில் போகலாம் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். ஏன் என்றால் பழமுதிர்சோலை மதுரையிலிருந்து 21 கீ. மீ. தொலைவில் உள்ளது. மற்றும் மலை மீது உள்ளதால் கோவிலை ஆறு மணிக்கே நடை சாத்தி விடுவார்கள். அதனால் நான்கு மணிக்கு முன்னரே மதுரைக்கு வந்துவிட்டால் மட்டுமே அங்கு முதலில் செல்லவும்.
    காரிலோ அல்லது பெரியார் மற்றும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து போகலாம். மதுரை செல்ல மாலை 4 மணிக்கு மேல் ஆகிவிட்டால் முதலில் திருப்பரங்குன்றம் கோயிலை பார்த்து விடலாம். பஸ்ஸில் 30 நிமிடத்துக்கும் குறைவாகவே ஆகிறது. நேரமிருந்தால் உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில், நாயக்கர்மஹால், மற்றும் கடைகளுக்கும் சென்று வரலாம். முதல் நாள் பழமுதிர்சோலை செல்ல முடியவில்லை என்றால், இரண்டாம் நாள் காலை முதல் கோயிலாக பழமுதிர்சோலை செல்லவும். மூன்று கோயில்கள் செல்ல வேண்டும் என்பதால் 6 மணிக்கே கோயிலை அடைய முயற்சி செய்யுங்கள்.

    பழனி கோயில்
    மதுரையில் இருந்து பழனிக்கு காரில் போகலாம். பஸ்ஸில் செல்வதாக இருந்தால் திண்டுக்கல் போய் அங்கிருந்து போவது எளிது. அங்கு போய்ச்சேர இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஆகிறது. மலை அடிவாரத்திலிருந்து மேலே கோவிலுக்குச் செல்ல படி, வின்ச் மற்றும் ரோப் கார் இருக்கிறது. ரோப்காரில் 5 நிமிடத்தில் சென்று விடலாம். தரிசனம் முடிந்ததும் சீக்கிரம் கீழே வந்து முடிந்தவரை 1 மணிக்கு முன்பாக பழனியிலிருந்து கிளம்பினால் அன்றே சுவாமிமலை பார்த்து விடலாம்.

    சுவாமிமலை
    பழனியிலிருந்து திண்டுக்கல், திருச்சி வழியாக தஞ்சாவூர் சென்று அங்கிருந்து கும்பகோணம் செல்லும் பஸ்சில் ஏறினால் சுவாமிமலையை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் சுவாமிமலை இருக்கிறது. ஒரு வேளை தாமதமானால் தஞ்சாவூரிலிருந்து காரில் போவது நல்லது. உங்களுக்கு நேரம் இருந்தால் இன்னும் நிறைய கோயில்களும் கும்பகோணத்தில் பார்ப்பதற்கு இருக்கிறது. கும்பகோணம் பித்தளை பாத்திரங்கள் மற்றும் சுவாமி சிலைகளுக்கு பெயர் பெற்றது.

    திருத்தணி
    கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு பஸ்ஸில் போய் அங்கிருந்து திருத்தணிக்கு போகலாம். (சென்னைக்கு 6 மணி நேரம் ஆகிறது). சென்னையிலிருந்து திருத்தணிக்கு மின்சார இரயில் குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கிறது. காரில் சென்றால் நேராக கோயிலுக்கே சென்று விடலாம். எப்படியும் மதியம் 1 மணிக்குள் தரிசனம் ஆகிவிடும். அன்றே நீங்கள் ஊர் திரும்பிவிடலாம். நேரமிருந்தால் அங்கிருந்து வேலூர் பக்கத்தில் உள்ள தங்க கோயிலுக்கும் சென்று வரலாம்.

    அறுபடை வீடு முருகன் கோயில்களுக்கு வசதியை பொறுத்து கார் அல்லது பஸ்சில் செல்லலாம். உங்கள் வசதிக்கேற்ப இதே வழித்தடத்தில் அல்லது திருத்தணியில் ஆரம்பித்து திருச்செந்தூரில் முடியும் வகையில் பயணத் திட்டத்தை அமைத்துக் கொள்ளலாம். ஒரே பயணத்தில் சிக்கனமாவும், சீக்கிரமாகவும் அறுபடை வீடு முருகன் கோயில்களில் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக எனது பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளேன். இது உங்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.
     

  • Palani murugan dharisanam

    பழனி முருகன் கோவிலில் கிராமப்புற பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

     04545- 242683 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பெயர், முகவரி, ஆதார் எண்ணை தெரிவித்து முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி முதலில் அழைக்கும் 200 அழைப்புகளை ஏற்றுக் கொள்ளவும், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பக்தர்களை அனுமதிக்கவும் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

    பக்தர்கள் ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக கொண்டு வரவும் கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த முறையில் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் கோயிலுக்கு வருவதற்கு முந்தைய நாள் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும். இந்த முன்பதிவு முறை முற்றிலும் கிராமப் பகுதியில் இருந்து வரக்கூடிய பக்தர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    மேலும் பழனி முருகன் கோவிலில் வழங்கப்பட்டு வந்த அபிஷேக பஞ்சாமிர்தம் மற்றும் முறுக்கு, அதிரசம், லட்டு, சர்க்கரைப் பொங்கல் மற்றும் புளியோதரை உள்ளிட்ட பிரசாதங்கள் பாதுகாப்பான முறையில் தயார் செய்யப்பட்டு மலைமீது பக்தர்களுக்கு விற்பனை செய்யவும் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

  • Thiruthani Murugan Soorasamharam

    கந்த சஷ்டி விழாவின் போது முருகன் ஆலயங்களில் சூரசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம். அதே நேரத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5 ஆம் படை வீடான திருத்தணியில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை மாறாக உற்சவர் சண்முக பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடத்துகின்றனர். 

    திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த சுப்ரமணியர் திருத்தணி மலையில் தான் சினம் தணிந்தார் என்கின்றன புராணங்கள். அதனால் தான் திருத்தணியில் முருகனின் சினம் தணிக்க புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது. 

    மலைகளில் சிறந்தது திருத்தணிகை என்று போற்றுகிறது கந்த புராணம். திருத்தணிகை மலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தாலோ… தணிகை மலை இருக்கும் திசை நோக்கித் தொழுதாலோ… தணிகையை நோக்கி பத்தடி தூரம் சென்றாலோ… நோய்நொடிகள் நீங்கும் என்கிறது தணிகை புராணம். 

    தேவர்களது துயர் தீர்க்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை கரம் பிடிக்க வேடர்களுடன் செய்த சிறு போரும் முடிந்து முருகப்பெருமான் சீற்றம் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால், இது தணிகை எனும் பெயர் பெற்றது. 

    தேவர்களது அச்சம் தணிந்த தலம்; அடியவர்களது துன்பம், கவலை, பிணி மற்றும் வறுமை ஆகியவற்றை தணிக்கும் தலம் ஆதலால் தணிகை எனும் பெயர் பெற்றதாகவும் கூறுவர்!

  • Marudha malai murugan

    முருதமலை 837 படிகளுடன் அமைந்த மலைக்கோயில்.

    இங்கு வரதராஜப் பெருமாளுக்கு சன்னதி இருக்கிறது. 

    பாம்பாட்டிச்சித்தர் சன்னதி செல்லும் வழியில் சப்தகன்னியர் சன்னதி உள்ளது. ஆடிப் பெருக்கின்போது இங்கு விசேஷ வழிபாடு நடக்கிறது.

    பாம்பாட்டிச்சித்தர் சன்னதியிலுள்ள பாறையில் நாக வடிவம் இருக்கிறது. இந்த நாகத்தின் வடிவிலேயே பாம்பாட்டிச் சித்தருக்கு முருகன் காட்சி தந்தார்.

    மருதமலையில் முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை வடித்தார். இந்த சிலையே மூலஸ்தானத்தில் இருக்கிறது.

    விநாயகர், முருகனை வேண்டி மரத்தில் மாங்கல்யக்கயிறு மற்றும் தொட்டில் கட்டி வேண்டிக் கொண்டால்  திருமண, புத்திர தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை 

    வைகாசி விசாகத்தன்று மருதமலை முருகனுக்கு 108 பால் குட அபிஷேகம் நடைபெறும். 

    மருதமலையில் தைப்பூசத்தை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது.

    தைப்பூசத்தன்று காலையில் திருக்கல்யாணம், மாலையில் தேர்த்திருவிழா நடக்கும். அன்று சுவாமி, யானை வாகனத்தில் எழுந்தருள்வார்.

    மருதமலையில் தினமும் மாலையில் தங்க ரதத்தில் முருகப்பெருமான் வலம் வருகிறார்.

    மருதமலையில் விநாயகர், முருகன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்கள்.

  • Murugan Pugazh

    இந்து மதத்தின் பிரிவுகளில் உள்ள ஆறு பெரும் பிரிவு மதங்களில், மிகப் பழைமையானது கௌமாரம். கார்த்திகேயனை வணங்குபவர்கள் கௌமாரம் மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களே முருக பக்தர்கள்! ஒவ்வொரு மாதத்தின் ஆறாம் திதி சஷ்டி. இந்த சஷ்டியும் இந்தக் குமரனுக்கு உரிய நாள். எனவே கௌமாரர்கள் அனைவரும் சஷ்டி விரதம் இருப்பார்கள்.

    ஜோதிடத்தில் அழகைக் குறிக்கும் கிரஹம் சுக்கிரன். குழந்தைப் பிறப்பிற்கு தேவையான காமத்திற்கும் சுக்கிலத்திற்கும் அதிபதி சுக்கிரன். சுக்கிரனைக் குறிக்கும் என் ஆறு. தெய்வங்களில் அழகன் எனப்போற்றப்படுபவர் முருகன். முருகனுக்கு ஆறு முகங்கள். முருகனை வளர்த்தவர்கள் ஆறு கார்த்திகை பெண்டீர். முருகனுக்குகந்த திதி ஆறாவது திதியான சஷ்டி. ஆண்மையைக் குறிக்கும் கடவுள் முருகப்பெருமான் ஆகும். "சுக்கிற்கு மிஞ்சின மருந்தும் இல்லை! சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" எனும் சொலவடை உண்டு. மேலும் எண்ணியல் ஜோதிடத்தில் ஆறாம் எண்ணிற்கு அதிபதியாக சுக்கிரனை கூறுவர்.

    ஜாதகத்தில் செவ்வாய் என்பது ஆண்மையையும் வீரியத்தையும் குறிக்கும். சூரியன் ஆன்மா உற்பத்தியாவதை அதாவது கருவளர்ச்சிக்கு தேவையான சீதோஷ்ணத்தை தருவது சூரியன். சஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கு மேஷமும் சிம்மமும் மற்றும் அதன் அதிபதிகளான செவ்வாயும் சூரியனும் பலமிழந்துவிடுவார்கள் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.

    மேஷம் கால புருஷனுக்கு லக்ன பாவம். செவ்வாயின் மூல த்ரிகோண வீடு. சூரியன் உச்சமாகுமிடம். ஆண்மையைக் குதிரையோடு ஒப்பிடுவது வழக்கம். குதிரையைக் குறிக்கும் அஸ்வினி நக்ஷத்திரம் முதல் நக்ஷத்திரமாக அமைந்திருப்பதும் மேஷத்தில்தான். ஆக ஆண்மைக்கும் செவ்வாய்க்கும் உள்ள தொடர்பு இப்போது புரிந்திருக்கும். அடுத்தது சிம்ம ராசி. சிம்ம ராசி கால புருஷனுக்கு ஐந்தாமிடம் எனப்படும் புத்திரஸ்தானம் ஆகும். அதற்குரிய கிரகம் சூரியன் ஆகும். இந்த இரண்டு ராசிகளும் கிரஹங்களும் நன்றாக இருந்தால் தான் ஒருவர் தகப்பன் ஆகும் பாக்கியம் ஏற்படும்.

    ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாமிடம் ருண ரோஹ சத்ரு ஸ்தானம் எனப்படும். இந்த ஆறாமிடம் மூலம் குறிப்பிட்ட ஜாதகரின் எதிரி எப்படிப்பட்டவர், எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார், ஜாதகர் என்ன காரணங்களுக்காக கடன் வாங்குவார் என்பதை அறியலாம். நோய் தீர்ப்பதில் செவ்வாயும் அதன் அதிபதியான முருக பெருமானும் முக்கியமானவர்கள் ஆகும். முருகனுக்கு செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பது, சஷ்டியில் விரதமிருப்பது மற்றும் கிருத்திகை நக்ஷ‌த்திர நாளில் விரதமிருப்பது ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

    கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பாம்பன் குமர குருதாஸ ஸ்வாமிகள் அருளிய “ஓம் ஷண்முக பதயே நமோ நம” எனத் தொடங்கும் குமாரஸ்தவ பாடலைப் படித்தால் நாள் பட்ட தீராத வியாதியும் தீரும். நோய் என்பது தீர்க்கக்கூடியது. ஆனால் பிணி என்பது.தீர்க்க முடியாதது. நோயை மருத்துவர்கள் குணப்படுத்திவிடுவார்கள். பிணியைக் குணப்படுத்துவது சிரமம். பிணி இறையருளால் தான் குணப்படும். 

    வினையும் அப்படித்தான் இறையருளால்தான் தீரும் இங்கே வினை என்பது இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்குக் காரணமாக நம்பப்படும் முற்பிறவியில் நாம் செய்த செயல் ஆறாமிடத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் மூலமும், ஆறாமிடத்தைப் பார்வை செய்யும் கிரகங்கள் மூலமும், அந்த ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதையும் அறிய இயலும். இந்த நோய்களின் தாக்குதல் எப்போது பலமாக தன் இயல்பைக் காட்டும், எந்த கால கட்டங்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதையும் அறியலாம்.

    ஜெனன ஜாதகத்திற்கு ஆறாம்வீட்டிற்கு பன்னிரண்டாம் பாவத்தையும் அதன் கிரஹங்களையும் கொண்டு நோய் தீர்க்கும் அமைப்பை அறியலாம். அதேபோல காலபுருஷனுக்கு ஆறாம் வீடான கன்னி ராசிக்கு பன்னிரண்டாம் பாவமான சிம்மம் மற்றும் அதன் திரிகோண ராசிகளான மேஷம், தனுசு ஆகிய ராசிகளும் அதன் அதிபதிளும் நோய் தீர்க்கும் அமைப்பைக் கூறுவார்கள்.
     

  • Murugan Viradham

    இழந்த பதவி மீண்டும் கிடைக்க ஆறுமுக கடவுளான முருகப் பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களும், கிருத்திகை, சஷ்டி திதி ஆகிய நாட்களில் விரதம் இருப்பத உகந்ததது. அதுமட்டுமன்று கந்தசஷ்டி, தைப்பூசம் நாட்களிலும் முருகனுக்குச் சிறப்பு பூஜைகள் செய்யலாம். 

    வெள்ளிக்கிழமை விரதம் முருகனுக்கு உகந்தது. வெள்ளிக்கிழமைகளில் முருகனை வழிபட்டால் இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம். வேண்டுதல் நிறைவேற வெள்ளிக்கிழமை அன்று காலையில் நீராடி முருகன் படத்திற்கு மாலை அணிவித்து விரதத்தைத் தொடங்க வேண்டும். அன்றை தினம் எந்த கெட்ட வார்த்தைகளையும் உச்சரிக்க கூடாது. 

    கந்தசஷ்டி கவசம், கந்த புராணம் படிக்க வேண்டும். ஒருவேளை மட்டும் உணவருந்தி விரதம் இருக்க வேண்டும். அப்படி இருக்க முடியாதவர்கள் பாலும் பழமும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமானுக்கும், முருகனுக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். 

    இந்த விரதத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் இழந்த பதவியை மீண்டும் பெறலாம். விரைவில் நல்ல பலன் தருவதைக் காணலாம்.
     

  • Murugan vaigasi visagam

    சித்ரா பௌர்ணமிக்கு அடுத்து வரும் பௌர்ணமி விசாக நட்சத்திரத்தில் வருவதால்தான் அந்த மாதத்திற்கு வைகாசி என்ற பெயர் வந்தது. விசாகம், ஞான நட்சத்திரம் என்பர். முருகப் பெருமானுக்குரிய விழாக்களாக தைப்பூசம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொன்னாலும் இவையாவும் சிவனோடும் சம்பந்தப்பட்டவை. 

    முருகனது தனிப்பட்ட விழாக்களில் விசாகமும் ஐப்பசி சஷ்டியுமே மிக முக்கியமானவை. சூரபத்மன் போன்ற அசுரர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். உடனே அவர்களை காத்தருள சிவன் தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். இந்தத் தீப்பொறிகள் வாயு, அக்னி முதலிய தேவர்கள் மூலம் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கையோ அவற்றை சரவணப் பொய்கையில் சேர்த்தது. அங்கு வந்து சேர்ந்ததும் அவை வைகாசி விசாகத்தன்று ஆறு குழந்தைகளாக மாறின. விஷ்ணு பகவான் கார்த்திகைப் பெண்கள் மூலமாக அக்குழந்தைகளுக்கு பாலூட்டி விட்டார். இவ்வாறு ஆறுமுகம் கொண்ட முருகன் தோன்றி தேவர்களைக் காத்தருளினார்.

    எனவே, இந்நாளில் முருகனை வழிபடுவதால் நம் பகைகள் யாவும் தொலைந்து விடும் என்பர். இந்நாளில் முருகப்பெருமானுடைய அறுபடை வீடுகளிலும் மற்ற முருகன் தலங்களிலும் விசேஷமான பூஜைகளும் கோலாகலமான விழாவும் நடைபெறுகின்றன. இந்நாளில் தானமும், தர்மமும் செய்தால் நல்லது. தயிர்சோறு, மோர், பானகம் போன்ற குளிர்பான தானம், குலம் காக்கும் என்று சொல்வார்கள்.