Tag: பகவான்

  • 2016-10-07-06-24-59

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் டிசம்பர் 12ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடைபெறுகிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் கார்த்திகை தீப திருவிழா முக்கிய திருவிழாவாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் நிறைவாக மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். அன்று சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று மகாதீபத்தை தரிசிப்பார்கள்.

    இந்த ஆண்டிற்கான தீப திருவிழா வருகிற டிசம்பர் 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 12-ந் தேதி மகா தீப திருவிழா நடைபெறும்.
    கார்த்திகை தீபதிரு விழாவிற்கான பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.
    தொடர்ந்து தீபதிருவிழா உற்சவத்தில் வலம் வரும் வாகனங்கள் சீரமைத்தல், பஞ்சரதங்கள் பழுது நீக்கி தேரோட்டத்திற்கு தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளை கோவில் நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது.

  • 2016-10-07-05-49-22

    குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா அக்டோபர் 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    8 ஆம் தேதி காலை 5 மணியில் இருந்து 6 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. பின்னர் திருவிலஞ்சி குமாரர் வருகை நடக்கிறது. திருவிழாவின் நான்காம் நாளான 11–ந் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெறும் என்றும், 12–ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல அக்டோபர் 14–ந் தேதி காலை 9.30 மணி மற்றும் இரவு 7 மணிக்கு நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனையும், 15–ந் தேதி காலை 10 மணிக்கு சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 17–ந் தேதி காலை 10 மணிக்கு மேல் விசு தீர்த்தவாரி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மேல் திருவிலஞ்சி குமாரர் பிரியாவிடை நடக்கிறது. விழாவின் 10 நாட்களும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், தீபாராதனை, தேவி உலா நடக்கிறது.

  • 2016-10-06-15-52-09

    ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம், திருமலை திருவேங்கடமுடையானுக்கு புரட்டாசி பிரமோற்சவத்தின் 5-ம் திருநாளில் அணிவிக்கப்படுவது என்பது தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
    திருப்பதியில் நடைபெற்று வரும் புரட்டாசி பிரமோற்சவத்தில், ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு அணிவிப்பதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ஆண்டாள் சூடிக்களைந்த மாலையை அனுப்புவது வழக்கம்.
    இதற்காக ஆண்டாளுக்கு மாலை, பரிவட்டம், கிளி உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் கோவில் தக்கார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்ட மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை கோவில் ஸ்தானிகம் ரெங்கராஜன் என்ற ரமேஷ் தலையில் பட்டர்கள் ஏற்றி வைத்தனர். அதைத் தொடர்ந்து அவை, மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தனி காரில் திருப்பதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • 2016-10-06-10-34-46

    திருமலையில் வருடாந்திரப் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளில் காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப் பந்தல் வாகனத்திலும் மலையப்ப சுவாமி மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    இப்பவனியின்போது வேதபண்டிதர்கள் வேத பாராயணம் செய்தபடியும், மேளதாளம், பேண்டு வாத்தியம் முழங்க, பெண்கள் கோலாட்ட நடனமாடியும், பக்தி பாடல்களைப் பாடியும், கிருஷ்ணர், நரசிம்மர், காலிங்க நர்த்தன கிருஷ்ணர் போன்றும் வேடமணிந்து வந்தனர். பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இதில் இடம்பெற்றன.
    இரவு 9 மணி முதல் 11 மணி வரை அலங்கரிக்கப்பட்ட முத்துப்பந்தல் வாகனத்தில் தன் உப நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மாடவீதியில் மலையப்ப சுவாமி வலம் வந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

  • 2016-10-06-09-04-06

    பொதுவாக, திருமலை செல்பவர்கள் சென்றவுடன், திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக வரிசையில் நின்று கொள்வதும், அவரை தரிசித்துவிட்டு உடனடியாக வீடு திரும்புவதும் தான் வழக்கம். ஆனால் சாஸ்திர சம்மதமானதாக இது கருதப்படவில்லை. திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு என ஒரு தனிப்பட்ட மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
    முதலில் கீழ் திருப்பதியில் வீற்றிருக்கும் கோவிந்தராஜ பெருமாளை வணங்க வேண்டும்.
    அதன் பிறகு, அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து மனமும், இதயமும் ஒருங்கே இணைத்து வணங்க வேண்டும்.
    அதன் பிறகு, திருமலையின் மீது ஏறிய பிறகு ‘வராக தீர்த்த கரையில்’ கோவில் கொண்டிருக்கும் ‘வராக மூர்த்தியை’ தரிசித்து வணங்க வேண்டும்.
    அதற்கு பிறகுதான் ஏழுமலை வாசனை, கோவிந்தனை, திருவேங்கடவனை உளமாற சேவிக்க வேண்டும்..
    இந்த வழிமுறையானது ராமானுஜர் காலத்தில் அவரால் தொடங்கப்பட்டு, அதன் பிறகு வந்த அனைத்து ஆச்சார்யர்களும் கடைபிடித்து வந்த சம்பிரதாயம் ஆகும்.

  • 2016-10-05-05-44-03

    பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் உண்டியலில் ரூ.1.75 கோடி ரொக்கம் உள்ளிட்ட காணிக்கைகள் இருந்தன.

    பழனி மலைக்கோயில் உண்டியல்கள் கடந்த 24 நாள்களுக்குப்பின் நிரம்பின.
    இதையடுத்து திங்கள்கிழமை கார்த்திகை மண்டபத்தில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.

    இதில், ஒரு கோடியே 75 லட்சத்து 78 ஆயிரத்து 213 ரூபாய் ரொக்கம் இருந்தது. மேலும் தங்கம், வெள்ளிக் காசுகள், தாலிச்சங்கிலி, வேல், உருவங்கள் என 715 கிராம் தங்கம் இருந்தது. அதேபோல 10,700 கிராம் வெள்ளிப் பொருள்கள் இருந்தன.

    மேலும், பல்வேறு நாடுகளின் 1,481 கரன்சிகளும், பித்தளைப் பாத்திரங்கள், பட்டுப் புடவைகள், பரிவட்டங்கள், நவதானியங்கள், கைக்கடிகாரங்கள், முந்திரி, ஏலக்காய் மாலைகள் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.

  • 2016-10-05-05-13-23

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தின் இரண்டாம் நாளில் மலையப்பசுவாமி சின்னசேஷ வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம் மாலை, மகாவிஷ்ணுவின் வாகனமான கருடர் உருவம் வரைந்த பிரமோற்சவ கொடி மேளதாளங்கள் முழங்க நான்கு மாட வீதிகளில் எடுத்து வரப்பட்டது.
    மாலை 6.15 மணிக்கு மீன லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்க, ஆகம முறைப்படி பிரமோற்சவ கொடியை கோயில் வளாகத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் அர்ச்சகர்கள் ஏற்றினர். அப்போது பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா என பக்தி முழக்கமிட்டனர். பின்னர் முதல் உற்சவமாக இரவு பெரியசேஷ வாகனத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 2ம் நாளில் மலையப்பசுவாமி சின்னசேஷ வாகனத்தில் பத்ரி நாராயணன் அலங்காரத்தில் எழுந்தருளி, மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு அன்ன வாகனத்தில் கையில் வீணையுடன் சரஸ்வதி தேவி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  • 2016-10-03-12-33-30

    திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கியது. இதையொட்டி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு யாகம் நடந்தது. பின்னர் புற்று மண் சேகரிக்கப்பட்டு அதில் நவதானியங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விஷ்வ சேனாதிபதி உற்சவர், 4 மாட வீதிகளில் பவனி வந்தார். முதல் நாளான அக்டோபர் 3 ஆம் தேதி மாலை, மகாவிஷ்ணுவின் வாகனமான கருடர் உருவம் வரைந்த பிரம்மோற்சவ கொடி மேளதாளங்கள் முழங்க மாட வீதிகளில் எடுத்து வரப்பட்டு மாலை 6.15 மணிக்கு மீன லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்க, ஆகம முறைப்படி பிரம்மோற்சவ கொடியை கோயில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் அர்ச்சகர்கள் ஏற்றினர்.

    இதைத்தொடர்ந்து 11ம்தேதி வரை தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் ஏழுமலையான் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கொடியேற்றத்தை தொடர்ந்து முதல் உற்சவமாக இன்றிரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி பவனி வருகிறார். 2ம் நாளான அக்டோபர் 4 ஆம் தேதி காலை சிறிய சேஷ வாகன உற்சவம். இரவு அன்னவாகன உற்சவம். 3ம்நாள் காலை சிம்ம வாகன உற்சவம். இரவு முத்துபந்தல் வாகன உற்சவம். 4ம்நாள் 6ம்தேதி காலை கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி தாயார்களுடன் எழுந்தருள்கிறார்.

    அன்றிரவு ஏழுமலையான் கோயில் கோபுர வடிவிலான சர்வ பூபால வாகன உற்சவம் நடக்கிறது. 5ம்நாள் காலை (7ம்தேதி) மோகினி அலங்கார உற்சவம். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவம் அன்றிரவு நடக்கிறது. அன்று ஏழுமலையானுக்கு மூலவருக்கும் அணிவிக்கப்படும் மகர கண்டி, லட்சுமி ஆரம், சகஸ்கர நாம மாலை ஆரம் அணிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் திருவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்படும் துளசி மாலை மற்றும் புதிய குடை கருட வாகனத்தில் அலங்கரிக்கப்படும் ஆண்டாள் சூடி கொடுத்த கிளியுடன் கூடிய மாலை சுவாமிக்கு அணிவிக்கப்படவுள்ளது.

    6ம்நாள் காலை (8ம்தேதி) அனுமந்த வாகன உற்சவம். இரவு தங்க யானை வாகன உற்சவம். 7ம்நாள் காலை (9ம்தேதி) தங்க சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திரபிரபை வாகனத்திலும் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். 8ம்நாள் காலை (10ம்தேதி) ரத உற்சவம் நடக்கிறது. இரவு மலையப்ப சுவாமி கல்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 9ம் நாள் காலை (11ம்தேதி) சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது. அன்றிரவு வேத மந்திரங்கள் முழங்க கொடி இறக்கப்பட்டு பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

  • 2016-10-02-15-15-38

    சென்னையில் இருந்து திருப்பதி குடை ஊர்வலம் புறப்பட்டது. திருமலை- திருப்பதிக்கு 150 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் இருந்து ஊர்வலமாக திருக்குடைகள் எடுத்துச் செல்லப்பட்டு பிரமோற்சவ கருட சேவையின் போது சமர்ப்பிக்கப்படும்.

    திருப்பதி கருட சேவையை முன்னிட்டு தமிழக பக்தர்கள் சார்பில் இந்த ஆண்டும் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் திருமலை வெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று சமர்ப்பணம் செய்யப்பட உள்ளது.
    இதை முன்னிட்டு பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது.
    ஸ்ரீராமகிருஷ்ண மடம் மேலாளர் சுவாமி விமுர்த்தானந்தா ஆசியுரை வழங்கி குடை ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எஸ். வேதாந்தம்ஜி மற்றும் அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
    இந்த ஊர்வலம் என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக சென்று, ‘கோவிந்தா’, ‘கோவிந்தா’ என பக்தி கோ‌ஷம் முழங்க, மாலை 4 மணிக்கு திருக்குடைகள் யானைகவுனியை தாண்டியது.
    தொடர்ந்து நடராஜா தியேட்டர, செயின்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பாரக்ஸ் சாலை, ஸ்டேரன்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை வழியாக அயனாவரம் தாக்கர்சத்திரம், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று தங்குகிறது.
    ஐ.சி.எப்., ஜி.கே.எம். காலனி, திரு.வி.க. நகர், பெரம்பூர், வில்லிவாக்கம் சென்றடைந்து இரவு தங்குகிறது. அக்டோபர் 3-ந்தேதி பாடி, அம்பத்தூர் எஸ்டேட், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல் சென்றடைந்து இரவு தங்குகிறது.

    4-ந்தேதி ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வீரராகவப்பெருமாள் கோவில், திருவள்ளூர் சென்றடைந்து இரவு தங்குகிறது.

    5-ந்தேதி மணவாளநகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்றடைந்து 6-ந்தேதி திருமலை செல்கிறது. அங்கு மாட வீதிகளில் வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் முறைப்படி சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

  • 2016-10-01-15-23-33

    நவராத்திரி பண்டிகை அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்குகிறது. கோவில்களில் 9 நாட்களும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    மங்கையர் போற்றும் நவராத்திரி விரதம் 9 நாட்கள் அனுஷ்டிக்கப்படுகிறது. முப்பெரும் தேவியர்களான துர்கா, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகியோரை போற்றி, வணங்குவதே இந்த நாளின் சிறப்பாகும். வீடுகளில் 9 நாட்களும் கொலு வைத்தும் பக்தர்கள் சிறப்பிப்பார்கள். நவராத்திரி நாளான 9 இரவுகள் தனி சக்தியாக விளங்கும் ஜகன்மாதா, பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி ‘சிவசக்தி’யான அர்த்தநாரீசுவரராக மாறுகிறாள் என்பதே இந்த விழாவின் புராண வரலாறு.

    இந்த 9 நாட்களிலும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரை 9 அவதாரங்களாக அலங்கரித்து, போற்றி பூஜித்து வழிபடுதல் வேண்டும். புரட்டாசி அமாவாசை அன்றிருந்தே விரதம் பூண்டு தேவி மீது பக்தி சிரத்தையுடன் நவராத்திரி வழிபாட்டை தொடங்க வேண்டும்.

    அத்தனை ஜீவராசிகளிலும் அம்பிகை கொலுவிருக்கிறாள் என்பதை உணர்த்துவதற்காகவே கொலு வைக்கப்படுகிறது. கொலுவை முறையாக ஒன்பது, ஏழு, ஐந்து என ஒற்றைப்படை வரிசையில் 9 படிகளில் பொம்மைகளை வைக்க வேண்டும். கொலுவுக்கு வரும் பக்தர்களுக்கு மங்களப் பொருட்களான மஞ்சள் குங்குமம் கொடுத்து உபசரிக்க வேண்டும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழா அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கி, 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரியையொட்டி கோவில்களிலும் 9 நாட்களும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. சில கோவில்களில் 11 நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது.