Blog

  • Suba horaigal 04-11

    இங்கு கொடுக்கப்பட்டுள்ள சுபஹோரை.. நல்ல நேரம் சென்னையில் வசிக்கும் அன்பர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.சரியான ராகு காலம் ,எமகண்டம் (பகல் காலத்தில், இரவு காலத்தில் )போன்ற நேரங்கள் சென்னைக்கு கணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை உள்ள சுப ஓரையில் மருந்து உண்ண , பெரியோரை பேட்டி காண ,பிரயாணம் செய்ய ஆகிய சுப செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் . திங்கட்கிழமை அன்று உள்ள சுப ஹோரையில் புது நகை வாங்கவும் புதிய ஆடை உடுத்தவும், புதிய கடை திறக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம் .

    செவ்வாய்க்கிழமை அன்று உள்ள சுப ஓரையில் ஆப்பரேஷன் சிகிச்சை செய்ய ,ஆயுதம் செய்ய ,இயந்திரம் தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

     புதன் கிழமையில் வரும் சுப ஓரையில் கலை பயில, கணித ஆரம்பம் செய்ய ,பொன் உருக்க ,,வித்தியாரம்பம் செய்ய, நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

     வியாழக்கிழமை வரும் சுப ஓரையில் பெரியோரை காண்பதற்கும், வாங்கிய கடன் தீர்ப்பதற்கும் ,புதிய வஸ்திரம் வாங்குவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

     வெள்ளிக்கிழமையில் வரும்    சுப ஓரையில் புதிய தொழில் செய்வதற்கும், சுபமான செயல்களை பேசுவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

     சனிக்கிழமை வரும்  சுப ஓரையில்ஆயுதம் பழகுவதற்கும், யாத்திரை செல்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


    தொகுத்தவர் :  ஜோதிடர் பிரேம்குமார் . M.G.online astrologer. 

    போன் 8754 76 3832

  • vettri Tharum Ambigai Vazhipadu

    வெற்றித்திருநாளான விஜயதசமியில் அம்பிகையின் முன் அமர்ந்து இந்த வழிபாட்டை படித்தால் மனதில் நினைத்தது இனிதே நிறைவேறும். முயற்சியில் வெற்றி உண்டாகும்.
    *உலகத்தைக் காத்தருளும் அம்பிகையே!
    நீலகண்டரின் கரம் பிடித்தவளே!
    ஆனை முகனின் அன்னையே!
    வேதம் போற்றும் வித்தகியே!
    ஞானச் சுடர்க்கொடியே! மரகத வல்லியே!
    நிலவொளியாய் பிரகாசிப்பவளே!
    கருணை மழையே!
    அம்மா! உன் தாமரைத் திருவடிகளில் சரணடைந்தோம்.

    *மங்களம் நிறைந்தவளே! ஈஸ்வரியே!
    கற்பகம் போல் வாரி வழங்குபவளே!
    மலையத்துவஜன் மகளே!
    அபிராமவல்லியே! ஆனந்தம் அளிப்பவளே!
    ஆதிபராசக்தியே! அங்கயற்கண் அம்மையே!
    திருமாலின் சகோதரியே! மலர் அம்பினைத் தாங்கியவளே!
    ஈசனின் இடம் பாகத்தில் உறைபவளே!
    எங்களின் முயற்சியில் வெற்றியைத் தந்தருள வேண்டும்.

    *புவனம் காக்கும் நாயகியே! நாராயணியே!
    சாம்பவியே! சங்கரியே! சியாமளையே!
    மாலினியே! திரிசூலம் ஏந்திய சூலினியே!
    மதங்க முனிவரின் மகளாக வந்தவளே!
    பிரபஞ்சத்தைப் படைத்தவளே!
    வேதத்தின் உட்பொருளே! வீரத்தின் விளைநிலமே!
    எங்களின் மீது உன் கடைக்கண்ணைக் காட்டியருள வேண்டும்.

    *கடம்பவனமான மதுரையில் மீனாட்சியாக அருள்பவளே!
    காஞ்சியம்பதியில் காமாட்சியாகத் திகழ்பவளே!
    காசியில் உறையும் விசாலாட்சியே! பர்வதராஜனின் புத்திரியே!
    அசுர சக்தியை அழித்து நீதியை நிலைநாட்டுபவளே!
    திக்கற்றவருக்கு துணையாக நிற்பவளே!
    வெற்றி தேவதையே!
    உன் அருளால் இந்த உலக உயிர்கள் எல்லாம் நலமோடு வாழட்டும்.
     

  • Simma Vaganathi Thirupathy Ezhumalayan

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று காலை யோக நரசிம்மர் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

    விலங்குகளுக்கு அரசனாக விளங்கும் சிங்கமும் நானே என்று உணர்த்தும் விதமாக மனிதர்களிடம் உள்ள விலங்களுக்குன்டான தீய எண்ணங்களை போக்கி கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுவாமி வீதஉலாவில் கேரள சண்டை மேளம், நாதஸ்வரம், மும்பை டிரம்ஸ் மேளம், மற்றும் பக்தர்களின் கோலாட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  

    முத்து எப்படி பரிசுத்தமானதோ அதை போன்று நம் மனதில் தீய எண்ணங்கள் இன்றி பரிசுத்தமாக இறைவனை அடைய வணங்கினால் முக்தி பெறலாம் என்பதை விளக்கும் வகையில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று இரவு முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி தயார்களுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.

  • Thirupathy Kudai Special Story

    – 200 ஆண்டுகால சுவாரஸ்ய வரலாறு  
    பம்மல் சம்பந்த முதலியார் நாடக உலகில் முத்திரைப் பதித்தவர். 

    அவர் எழுதிய, `தீட்சிதர் கதைகள்' என்ற குட்டிக் கதைகளின் தொகுப்பில் திருப்பதி குடை குறித்த ஒரு வரி வருகிறது.

    அதை முதலில் பார்த்துவிட்டு குடையின் கதைக்கு வருவோம்.

    கதை இதுதான்…

    `ஒருமுறை ஒரு டிராம் கண்டக்டர், நமது தீட்சிதரிடம் ஒரு செல்லாத இரண்டணாவைக் கொடுத்துவிட்டான்.

     இதைப் பாராது வாங்கிக்கொண்ட அவர், பிறகு பரிசோதித்துப் பார்த்தபோதுதான் மோசம் செய்யப்பட்டதை அறிந்தவராய்,  “ஆகட்டும்,

    / இதற்குப் பதில் செய்ய எனக்குத் தெரியும்” என்று சொல்லிக்கொண்டு, பாரிஸ் கார்னரில் மற்றொரு டிராம் வண்டியில் ஏறினார்.

    ஏறும்போது டிக்கட் விற்கிறவன் எந்தப் பக்கமிருந்து டிக்கட்டுகள் கொடுத்துக்கொண்டு வருகிறான் என்பதைக் கவனித்து, அதற்கு எதிர்புறமாக ஏறினார்.

     டிக்கட் விற்கிறவன் /மற்றவர்களுக்கெல்லாம் டிக்கட் கொடுத்துக்கொண்டு இவரிடம் வருவதற்குள் பச்சையப்பன் கலாசாலைக்கு டிராம் வந்துவிட்டது.

     பிறகு டிராம் கண்டக்டர் இவரை டிக்கட்டுக்குப் பணம் கேட்க, தன்னுடைய பையிலிருந்து சரியான ஓர் இரண்டணாவை எடுத்துக்கொடுத்து “ராயபுரம் ஒரு டிக்கட்” என்று கேட்டார்.

    / கண்டக்டர் “ஓய்! எந்த ஊரய்யா, ராயபுரமா போகிறது இந்த வண்டி? கீழே இறங்குங்கு அய்யா!” என்றான். 

    உடனே நமது தீட்சிதரும் ஒன்றும் தெரியாதவர்போல் இறங்கிவிட்டார்.

    கொஞ்சம் பொறுத்து, மயிலாப்பூருக்குப் போகும் மற்றொரு டிராம் வண்டியில் முன்பு குறிப்பிட்டபடியே கவனித்து ஏறிக்கொண்டார்.

    / இவ்வண்டி மெமோரியல் ஹாலருகில் வரும்பொழுது கண்டக்டர் டிக்கட் கேட்கவே, முன்பு போல ஒரு சரியான இரண்டணாவைக் கொடுத்து “ஒரு டிக்கட் வண்ணாரப்பேட்டை” என்று கத்தினார்.

     கொஞ்சமாவது சுளிக்காமலும் சிரிக்காமலும் கேட்டார். வண்டியிலிருந்தவர்களெல்லாரும் நகைத்தனர். “ஏய்! நாட்டுப்புறம்!/ கீழே இறங்கு, படிக்கத் தெரியாது..? போர்டில் என்ன போட்டிருக்கிறது பார்க்கவில்லையா?” என்று கண்டக்டர் அதட்டி, அவருடைய இரண்டணாவை அவர் கையில் கொடுத்துக் கீழே இறக்கிவிட்டான்.

     இதற்குள்ளாக டிராம் வண்டி சென்டிரல் ஸ்டேஷன் வந்து சேர்ந்தது.

    இம்மாதிரியாகவே வேறு வேறு வண்டிகளிலேறி/ அவ்வண்டிகள் போகாத இடங்களின் பெயர்களைக் கூறி, துட்டையும் மிகுத்திக்கொண்டு மயிலாப்பூர் போய்ச் சேர்ந்தார்.

     பிறகு மறுநாள், சென்னையில் திருப்பதிக்குடை வைபவத்தைக் காணவந்து அந்த திருப்பதி வேங்கடேஸ்வரப் பெருமாள் உண்டியில் அந்த செல்லாத இரண்டணாவைச் சமர்ப்பித்து விட்டார். “அந்த நாமம் போட்ட கண்டக்டர் எனக்கு நாமம் போடக் காரணம், இந்தப் பெருமாள்தானே.

     ஆகவே அந்தச் செல்லாத காசை அவருக்கே கொடுத்துவிட்டேன்” என்று தன் மனதைத் திருப்தி செய்துகொண்டார்.

    இந்தப் புத்தகத்தை 1933-ல் பம்மல் சம்பந்தம் எழுதியிருக்கிறார். அதற்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே வெங்கட கிருஷ்ணம்ம செட்டி என்பவர் முதன் முதலில் இப்படி திருப்பதிக்குக் குடை சாத்துவதைச் செய்தார் என்று ஒரு வரி குறிப்பு கிடைக்கிறது. 

    சௌகார் பேட்டையை ஒட்டியுள்ள, சென்ன கேசவப் பெருமாள் கோயிலில் தயாரிக்கப்பட்ட அந்தக் குடை திருப்பதிக்குச் செலுத்தப்பட்டது. இன்றும் அது தொடர்கிறது.

     ஜார்ஜ் டவுன், 11 கந்தப்பச் செட்டி தெருவில், அந்தக் காலத்து மேயர் சீனிவாசுலு நாயுடு வழங்கிய இடத்தில் குடை தயாராகும்.

    இந்தியாவில் வேறு எங்கும் நடக்காத ஒரு வைபவம் இது. 

    வட சென்னையின் பிரதானமான விழா. தமிழ்நாட்டின் நாள்காட்டிகளைக் கிழிப்பவர்கள், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் `திருப்பதி குடை ஊர்வலம்' என்று படித்திருக்கக் கூடும்.

    திருப்பதி மலையில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் போது கோயில் உற்சவரை ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். 

    அப்போது உற்சவருக்கு முன்னும், பின்னும் அலங்கரிக்கப்பட்ட குடைகள் எடுத்துச் செல்வார்கள்.

     பட்டுத் துணி, மூங்கில், ஜரிகை, மின்னும் பொருள்கள் போன்றவற்றால், நகாசு வேலைப்பாடுகளுடன் சுமார் ஏழு அடி விட்டம், ஏழு அடி உயரத்துடன் 10 குடைகள் தயாரிப்பார்கள்.

     சென்ன கேசவப் பெருமாள் கோயிலில் இந்தப் பணி நடைபெறும். 

    தேக்குக் கம்புகள், பட்டுத் துணிகள், மூங்கில்கள், வெள்ளி ஜரிகைகள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஊரிலிருந்து கேசவப் பெருமாள் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு குடை தயாரிக்கப்படுகிறது.

     குறிப்பாக, காஞ்சிபுரத்தில் இருந்து பட்டும் ஜரிகையும் வந்து சேர்கிறது. 

    இதில் இரண்டு குடைகள் திருப்பதிக்கானவை, பெரியவை. 

    மற்ற எட்டும் வழியில் பெருமாள் கோயில்களில் வழங்கப்பட்டுவிடும்.

    திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு முன் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில், சென்னை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவப் பெருமாள் கோயிலிலிருந்து குடை ஊர்வலம் தொடங்கும்.

     வழக்கமாக பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயகன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை சுமார் 4 மணியளவில் குடைகள் கவுனி தாண்டும்.

    நிற்க.

    திருப்பதி குடை, யானைக் கவுனியைத் தாண்டுவது ஒரு பரபரப்பு செய்தி.

     சென்ன கேசவப் பெருமாள் கோயிலிலிருந்து திருப்பதி குடை புறப்பட்டதுமே, `குடை, யானைக் கவுனி தாண்டிடுச்சா' என ஓட்டேரி, அயனாவரம் முதல் திருப்பதி வரைக்குமே பெரிய பரபரப்புச் செய்தியாகப் பேசுகிறார்கள்.

    செய்தித்தாள்களும், `மாலை 4.30 மணிக்குக் குடைகள் யானைக் கவுனியைக் கடந்தன' என்று குறிப்பிட்டு எழுதுகின்றன. 

    `குடை, ஓட்டேரியைத் தாண்டுவதோ, அயனாவரத்தைத் தாண்டுவதோ முக்கியம் இல்லையா… ஏன், யானைக் கவுனியைத் தாண்டுவது மட்டும் முக்கியமாக இருக்கிறது'  என்ற கேள்வி எனக்குச் சிறுவயதிலேயே இருந்தது. 

    யாரும் எனக்குப் பதில் சொன்னது இல்லை. 'எல்லோருமே, திருப்பதி குடை யானைக் கவுனி தாண்டிவிட்டதா' என்று சம்பிரதாயமாகக் கேட்டுவிட்டு திருப்தியாக இருப்பார்கள். 

    அந்தக் கேள்விக்குக் பதில்கூட தேவையிருக்காது.

    யானைக் கவுனியைத் தாண்டியதும், நடராஜா திரையரங்கம், சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஸ்ட்ராஹான்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம் வழியாக காசி விஸ்வநாதர் கோயிலைச் சென்றடையும்.

    இரவு கோ‌யி‌லி‌ல் த‌ங்‌கி‌வி‌ட்டு அ‌திகாலை‌யி‌ல் புற‌ப்படு‌ம் குடை, மறுநாள் ஐ.சி.எஃப்., வில்லிவாக்கம், பாடி, அம்பத்தூர் எஸ்டேட், ஆவடி, பட்டாபிராம், மணவாளன் நகர் வழியாகத் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலை அடையும். இப்படியாக ஆறாவது நாள் திருப்பதியைச் சென்றடைகிறது. ‌‌திரு‌ப்ப‌தி திரு‌க்குடை ஊ‌ர்வல‌த்‌தி‌‌ன்போது மே‌ற்கூ‌றிய சாலைக‌ளி‌ல் போ‌க்குவர‌த்து மா‌ற்ற‌ம் செ‌ய்ய‌ப்படு‌ம். ‌

    சில சாலைக‌ளி‌ல் போ‌க்குவர‌த்து ‌நிறு‌த்த‌ப்படு‌ம். 
    குடைகள் கடக்கும் இடமெல்லாம் சிறப்பான வழிபாடுகள் நடைபெறும்.

     நைவேத்தியம், அன்னதானம், நீர் மோர், சர்க்கரைப் பொங்கல், சுண்டல் என அமர்க்களப்படும்.

    வழியெங்கும் சாலை ஓரங்களில் திருப்பதி மலையின் தோற்றத்தை களிமண், கற்கள் கொண்டு உருவாக்கி வைத்திருப்பார்கள்.

     அதற்கான டெகரேஷன்களில் தோட்டாதரணி தோற்பார். விதம்விதமாக மலைகளை மினியேச்சர் செய்து வைத்திருப்பார்கள். காடு, அதனுள்ளே காட்டு விலங்குகள், அதை வேட்டையாடும் மனிதர்கள், திருப்பதி கோயில் எல்லாமே 'சுருக்கமாக' இருக்கும். எத்தனையோ விதமாக மலை செய்த அனுபவம் எனக்கும் இருந்தது.

    ஒரு காலத்தில் ஏழுமலையான், கவுனியில் யாரிடமோ கல்யாணத்துக்காகக் கடன் வாங்கியிருந்தாராம். அதனால் அந்தப் பகுதி வரும்போது நிற்காமல் குடையைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்துவிடுவார்களாம். இது 180 வருடங்களாக நடந்து வரும் சம்பிரதாயம் என்கிறார்கள். 

    திருப்பதி ஏழுமலையான் தன் கல்யாணத்துக்காக குபேரனிடம் கடன் வாங்கி அதை இன்னமும் அடைத்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. 

    அவர் யானைக் கவுனியில் கடன்பட்டது இந்தப் பகுதி வாழ் மக்களுக்கு மட்டுமே தெரிந்த கதை.

     யானைக் கவுனி சௌகார் பேட்டையில் இப்போது வட்டிக்குப் பணம் கொடுக்கும் ஏராளமான மார்வாடி குடும்பத்தினர் வசிப்பது `கோ இன்சிடென்ஸ்' என்றுதான் சொல்ல வேண்டும்.

    லாஜிக்கான இன்னொரு கதையும் சொல்கிறார்கள்.

     சென்னை, சென்ட்ரல் வால்டாக்ஸ் ரோடு பலருக்கும் தெரிந்திருக்கும். அப்போதெல்லாம் சென்னையைக் கடந்து செல்ல வரி செலுத்த வேண்டும். 

    அந்த வரி செலுத்திவிட்டுச் செல்வதற்காகக் கட்டப்பட்ட சுவர்தான் வால்டாக்ஸ். 

    அதில் ஆறு கேட்டுகள் உண்டு. அதில் ஒன்றுதான்`எலிபன்ட் கேட்' எனச் சொல்லப்படும் யானைக் கவுனி. 

    இந்த வாயில் வழியாகத்தான் வரி செலுத்திவிட்டு வாகனங்கள் பிரயாணிக்கும்.

     திருப்பதி குடைகள் செல்லும்போது வரி செலுத்துவது தொடர்பாகவோ, வரியைத் தளர்த்துவது தொடர்பாகவோ அந்த வாயில் அருகே ஏதோ தாமதம் இருந்திருக்கிறது.

     அதைக் கடப்பது ஏதோ ஒரு வகையில் சிரமமானதாக இருந்திருக்கும். அதனால்தான் இன்னமும்,`குடை யானைக் கவுனியைக் கடந்துவிட்டதா' என்று மக்கள் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

    யாத்திரை கொண்டு செல்லும் குடைகளில் இரண்டு மட்டுமே திருப்பதியில் சமர்ப்பிக்கப்படும்.

     மற்றவை செல்லும் வழியில் உள்ள பைராகி மடத்துக்கும், திருவள்ளூர் கோயிலுக்கும் அளிக்கப்படும். திருப்பதியில் பிரம்மோத்சவத்தின் ஐந்தாம் நாளான கருடோற்சவத்தின்போது இந்தக் குடைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள்.

    – நன்றி
    தமிழ்மகன் உடன்
    சூளைராமலிங்கம்

  • Sani Dhosha Nivarthi Homam

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதி மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு வருகிற 05.10.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சனிதோஷ நிவர்த்தி ஹோமமும், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரருக்கு பஞ்ச திரவிய அபிஷேகமும், ஸ்ரீ பாதாள தங்க சனீஸ்வரருக்கு சிறப்பு அர்ச்சனையும் நடைபெற உள்ளது.

    சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சூரிய குமரனே சனி. யமனின் தமயன் இவன். நீண்ட ஆயுளுக்கும், மரணத்திற்கும் அதிபதி சனியே. சனி ஜாதகத்தில் அசுபனாக இருந்தால் ஒருவன் எல்லாவித துன்பங்களையும் அனுபவிக்க நேரிடும். சனி நல்ல பலம் பெற்றிருந்தால் சர்வ நலன்களையும் அடைய வாய்ப்பு உண்டு. சனியைப் போல கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை, என்பது வழக்கு மொழி. சனி என்றாலே நம்மையறியாமல் நமக்கு பயம் ஏற்படுகிறது. சனி ஆயுள்காரகன் என அழைக்கப்படுகிறார். அளவற்ற துன்பங்களுக்கு இவரை காரணம் ஆகிறார். சனி பகவான் நிறைய துன்பங்கள் கொடுத்தாலும் இவர் சிறந்த நீதிமான் ஆவார். அளவற்ற துன்பத்தை அளிப்பது போலவே அளவற்ற நன்மையும் செய்வார். சனீஸ்வர பகவானை வழிபட்டால் செய்வதால், நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் பெற முடியும்.

    இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சனீஸ்ரரை வேண்டி நடைபெறும் ஹோமத்திலும், அபிஷேகத்திலும், விசேஷ பூஜைகளிலும் பங்கேற்று வழிபடுவதின் மூலம் தெய்வீக அருளால், தர்மத்தின் பாதையில் நடக்க முடியும், கடவுளோடு இணைந்த ஒரு வாழ்க்கையை வாழ முடியும், கருணையும், பணிவும் வளரும், எல்லைகளை வகுத்து, அதற்குள் ஒழுக்கமான வாழ்க்கை வாழலாம், நம் பாதையில் வரும் வாய்ப்புகளைப் சரியாக பயன்படுத்தி வெற்றியை அடையலாம், இயல்பாகவும், யதார்த்தமாகவும் இருந்து இலட்சியங்களை அடையலாம், தொழிலில் முன்னேற்றம் பெறலாம், உங்கள் அதிகாரம் மேம்படும், கடமை உணர்வு ஏற்படும், ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வு வளரும்.

    மேலும் பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்கேற்று வாழ்வில் வளம் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டை – 632 513.
    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

     

  • October 2 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பக்தி 
    ரிஷபம் – அமைதி 
    மிதுனம் – சிரமம்
    கடனம் – அசதி
    சிம்மம் – களிப்பு 
    கன்னி –  நஷ்டம் 
    துலாம் –  சோர்வு    
    விருச்சிகம் – வரவு
    தனுசு –     ஊக்கம் 
    மகரம் –   அலைச்சல்  
    கும்பம் – கோபம் 
    மீனம் – பாராட்டு
    சந்திராஷ்டமம்    – அசுவினி,பரணி
     

  • October 2 Gandhi Jayanthi

    அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி
    விகாரி வருடம் – புரட்டாசி 15
    காந்தி ஜெயந்தி, 
    02-அக்-2019 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    மா    5.06
    நட்சத்திரம்    :    விசாகம்    மா    6.40
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அசுவினி,பரணி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Thirumanam Kaikooda Navarathiri

    நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.

    நவராத்திரி 5-ம் நாள் லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.

    நம்மூரில் முளைப்பாரி வைப்பது போல மராட்டி யத்தில் நவராத்திரி முதல் நாளன்று நவதானி யங்களை மண் கலசங்கில் வளர்ப்பார்கள். விஜயத சமியன்று அவற்றை ஊர் வலமாக எடுத்து சென்று ஆறுகளில் கரைத்து விடுவார்கள்.

    உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி 9 நாட்களும் சேலை கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

    நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையா? கவலை படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.

    நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.

    தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் முப்பெரும் தேவியர் இணைந்த அர்த்த நாரீஸ்வர துர்க்கை உள்ளது. 3 தலை, 8 கைகளுடன் இந்த துர்க்கை காணப்படு கிறார்.

    கும்பகோணம் அருகில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் விஷ்ணு துர்க்கை எனப்படும் அஷ்ட புக துர்க்கா தேவி அருள்புரிகிறாள். 8 கரங்களுடன் உள்ள இந்த துர்க்கையின் ஒரு கையில் கிளி இருப்பது தனிச் சிறப்பாகும்.

    நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.

    சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.

    ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.

    ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்திலிருந்து நாகங்களை மானசாதேவி காப்பாற்றியதால் அவள் நாகேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். இவள் குருவான ஈஸ்வரரிடமிருந்து சித்தயோகத்தை கற்றதால் சித்தயோகினி என்ற நாமத்தைப் பெற்றாள். இவளது கணவர் ஜரத்காரு. நவராத்திரி காலத்தில் இவள் கதை பகுதியைச் சொல்லி அர்ச்சிப்பதால் ராகு, கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்குகிறது.

    கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.

    தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

    எல்லாவற்றிற்கும் மேலானது சண்டிஹோமம். சண்டி என்பவள் மூன்று சக்திகளும் ஒன்றிய வடிவம். முப்பெரும் தேவியரையும் ஒன்றாக இணைத்து வழிபடுவதே இந்த ஹோமத்தின் சிறப்பு. விஜயதசமி நாளில் இதைச் செய்வதால் மிக நல்ல பலன்கள் பெறலாம்.
     

  • Sakthi vinayakar koil navarathri fest

    உத்திர பிள்ளையார்பட்டி என்று அழைக்கப்படும் ஊரப்பாக்கத்தில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் பரத நாட்டிய கலை நிகழ்ச்சிகளுடன் நவராத்திரி திருவிழா தொடங்கி உள்ளது. பரத நாட்டியத்தை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்


    ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழாவில் பல்வேறு கண்கவர் நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 

     

  • Thirupathy Bramorchavam… Chinna Sesha vaganathi Veedhi Ula

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தில் இரண்டாவது நாள் சின்ன சேஷ வாகனத்தில் கிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று காலை 5 தலைகளுடன் கூடிய சிறய சேஷ வாகனத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலீத்தார். 

    பெரிய சேஷ வாகனத்தை ஆதிசேஷனாகவும் சிறிய சேஷ வாகனத்தை வாசுகியாக மலையப்ப சுவாமி வீதிஉலா வந்ததை அயிரகணக்காண பக்தர்கள் பக்தி மனம் உருக கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

    சுவாமி வீதிஉலாவில் கோயில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் தலைமையில் ஜீடர்களின் சீடர்கள் நான்காயிரம் திவ்ய பிரபந்தம் பாடியபடி வந்தனர். இதில் பல்வேறு மாநிலத்தில் இருந்து வந்த பக்தர்கள் கோலட்டம் ஆடியும் சுவாமியின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடம் அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.   

    பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று இரவு சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். அன்னம் பால், தண்ணீரை வேறு செய்வது போல் பக்தர்களின் தீய எண்ணங்களை அகற்றி நல்ல எண்ணங்களை சுவாமி தனது பக்தர்களுக்கு அருள் புரிவதாக ஐதீகம்.