Blog

  • மூன்று தேவிகள் கொலுவீற்றிருக்கும் சோட்டானிக்கரை

     

    பொதுவாக இந்து மத ஆலயங்களில் நமக்கு தெரிந்த செய்திகளை விட தெரியாத அதிசயங்கள் அதிகம் உண்டு . ஒவ்வொரு பழங்கால கோவிலுக்கும் விசேஷமான சிறப்பம்சங்கள் நிச்சயம்இருக்கும் .அந்த வகையில் கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் உள்ள சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கும் ஒரு விசேஷம் உண்டு . இங்குள்ள  சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று தேவி வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையில்  சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையில் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும்  அருள் பாலிக்கிறாள் . எவர் ஒருவருக்கு  இந்த மூன்று  தரிசனங்களையும்  காண பேறு  அமைகிறதோ , அவர்கள் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை .

     

    ஜெகத்குருவுக்கு அருளிய அன்னை

                                       

    இதற்கு பின்னணியில் ஒரு புராண கதையும் சொல்லப்படுகிறது .

    அத்வைத மதத்தை அன்னை கலைவாணியின் அருளால் தழைத்தோங்க செய்த ஜெகத்குரு சங்கராச்சாரியார் மைசூர் சாமுண்டீஸ்வரியை தனது  கேரளா தேசத்திற்கு எழுந்தருள  செய்ய  கடுமையான தவம்  மேற்கொண்டார் . தவத்திற்கு மெச்சி தன் முன் தோன்றிய தாயிடம் ,தனது விண்ணப்பத்தை வைத்தார் . கலைவாணியும்  அதற்கு இசைந்து அவருடன் வர  சம்மதித்து ஒரு நிபந்தனையையும்  வைத்தாள் . அதாவது முன்னே செல்லும் சங்கரர் எக்காரணத்தைக் கொண்டும் திரும்பிப் பார்க்கக் கூடாது என்றும் , அப்படி பார்த்தால்  தான் அங்கேயே தங்கிவிடும்படி நேரிடும் என்றாள் . சங்கரரும் ஒப்புக் கொண்டார் . சங்கரர் முன்னே செல்ல தனது சிலம்பின் ஒலி ஒலிக்க தாயும் அவரை பின் தொடர்ந்தாள் . ஒரு கட்டத்தில் சிலம்பின்  ஒலி கேட்காமல் போக சங்கரர் திரும்பி பார்க்கிறார் ஜகத்குரு . அந்த இடத்திலேயே தாய் நின்று விட்டாள் . அவள் நின்ற இடம் தான் தற்போதைய கொல்லூர் . அங்கு கொலுவீற்றிருக்கும் அன்னை மூகாம்பிகை .

    தனது தவத்தின் பயன் இப்படி பாதிலேயே முடிந்து விட்டது சங்கரருக்கு வருத்தம் அளித்தது .அதனால் மீண்டும் அன்னையின் மனதை  மாற்றி தன்னுடன் அழைத்து செல்ல முயன்றார் . ஆனால் அன்னையோ சங்கரரின் வேண்டுதலை ஏற்று ஆலப்புழைக்கு  அருகில் உள்ள வேந்தநாட்டிற்கு எழுந்தருளுவதாக வாக்களித்தாள் . அதன்படி சோட்டானிக்கரையில் தினமும் காலை மூன்று மணி முதல் ஏழரை மணி வரை தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள் . சங்கரனுடன் ஜோதி ரூபத்தில் வந்த அன்னை ஆலயத்தினுள் ஜோதியாக கலந்ததால் ஜோதியானக்கரை பின்னாளில் சோட்டானிக்கரையானது என்றும் ஒரு வழக்கு உண்டு . இத்திருத்தலத்தில்  தேவியின் வலது பக்கம் மகாவிஷ்ணு இருப்பதால் அம்மே நாராயணா, தேவி நாராயணா, லட்சுமி நாராயணா, பத்ரி நாராயணா என்று பக்தர்கள் அம்மையோடு சேர்த்து அப்பனையும் போற்றி பாடுகிறார்கள்.

     பெண்களின் சபரிமலை என்ற சிறப்பும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு உண்டு.

    இத்தகைய அற்புதங்கள் நிறைந்த சோட்டானிக்கரை பகவதி அம்மனை நாமும் சென்று வழிப்பட்டு எல்லா நலன்களையும் அடைவோம் .

  • தீவினைகள் விலகி, மனநிம்மதி தரும் மந்திரம்….

    செல்வவளம் உண்டாக, பீடைகள், திருஷ்டி, தீவினைகள் விலக இந்த ஸ்ரீ தத்தாத்ரேயர் சாந்தி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
    திருஷ்டி, தீவினைகள் விலகும் ஸ்ரீ தத்தாத்ரேயர் சாந்தி மந்திரம்

    நமஸ்தே பகவான் தத்தாத்ரேய ஜகத்பதே ….
    சர்வ பாத ப்ரசமனம் குரு சாந்தி ப்ரயச்ச மே ….

    இந்த மந்திரத்தை ஜெபித்து வரக் குடும்பத்தில் அமைதி, மனநிம்மதி உண்டாகும். புதன்கிழமை புதன் ஹோரையில் இடது கையில் பஞ்சபாத்திரத்தில் நீர் வைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை சிறிது அருந்திப் பின்னர் மீதம் உள்ள தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க செல்வவளம் உண்டாவதோடு பீடைகள், திருஷ்டி, தீவினைகள் விலகும். தீர்த்தத்தை கால்களில் மிதிபடாதபடித் தெளிக்கவும்.

  • ராமானுஜர் சிலைக்கு புஷ்பாஞ்சலி சேவை

    பகவத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜயந்தியை முன்னிட்டு, திருமலை – திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதியில் உள்ள ராமானுஜர் சிலைக்கு பலவித மலர்களால் புஷ்பாஞ்சலி வழிபாடு நடத்தப்பட்டது.
    வழிபாட்டுக்கு பின்னர், திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ், தேவஸ்தான செயல் இணை அதிகாரி போலா பாஸ்கர் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்தனர்.
    முன்னதாக திருமலையில் ராமானுஜர் சாத்துமுறை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    வைணவ மகா குரு ராமானுஜரின் ஆயிரமாவது ஜயந்தியையொட்டி, கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. ராமானுஜரின் திருநட்சத்திர அவதார உற்சவத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அவருக்கு சாத்துமுறை நடைபெற்றது. இதையொட்டி ராமானுஜரின் சிலைக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்களை திருமலை ஜீயர் சுவாமிகள் நடத்தினார். விழாவையொட்டி, திருமலையில் ஞாயிற்றுக்கிழமை வசந்தோற்சவத்தை தேவஸ்தானம் ரத்து செய்தது.
    பகவத் ராமானுஜரின் ஆயிரமாவது ஜயந்தி விழாவையொட்டி கடந்த ஆண்டு மே 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள 108 திவ்ய தேசங்களுக்கு ராமானுஜர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமியின் உற்சவ மூர்த்திகளை கொண்ட சஞ்சார ரத ஊர்வலத்துக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்தது. இந்த சஞ்சார ரத ஊர்வலம் கடந்த 30-ஆம் தேதியுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

  • மகா பைரவர் கோயிலில் பிரம்மோற்சவம்….

    செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் சாலையில் உள்ள ஈச்சங்கரணை மகா பைரவர் ருத்ராலய பிரம்மோற்சவம் விழா தொடங்கியது.
    காலையில் கணபதி ஹோமம், விநாயகர் உற்சவத்தைத் தொடர்ந்து பைரவருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அங்குரார்ப்பணம், பைரவர் ஹோமத்துடன் கொடியேற்றமும், புதன்கிழமை காலை அஷ்டமி தின சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.அன்று மாலை பைரவருக்கு வெள்ளிக் கவசம் அணிவித்தலும், இரவு அன்னவாகன வீதியுலாவும் நடைபெறுகிறது. 3-ஆம் நாளான வியாழக்கிழமை மகா பைரவர் ஹோமம், அன்னதானம், நந்தி வாகன வீதி உலாவும், 6ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை பைரவருக்கு சந்தன காப்பும், ஸ்ரீ ஆனந்த மகா பைரவருக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.
    8ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை தேர்த் திருவிழாவும், 9ஆம் நாள் மாலை படிபூஜை, இரவு யானை வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது.
    மே 11-ஆம் தேதி வியாழக்கிழமை காலை தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தினமும் பட்டிமன்றம், இன்னிசை விழா, பரத நாட்டியம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

  • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்….

    சிவகங்கை மாவட்டம், பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பழமையான குடவரைக் கோயிலான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்றன. திருப்பணிகள் முடிந்து யாகசாலை மண்டபம் அமைப்பதற்காக மார்ச் 9-ம் தேதி முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

    ஏப். 24-ம் தேதி கும்பாபிஷேக விழாவுக்கான கணபதி ஹோமம் நடைபெற்றது. ஏப். 27-ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு ராஜகோபுரம், மற்ற விமானங்களுக்கும், காலை 10:30 மணிக்கு மூலஸ்தான விமானத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    மாலையில் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. பிச்சைக் குருக்கள் தலைமையில் சிவாச்சாரி யார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

  • மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் சிறப்பு யாகம்….

    மழை வேண்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
    இந்து சமய அறநிலையத் துறை சார்பில், குமரி மாவட்டத்தில் உள்ள 7 கோயில்களில் மழை பெய்ய வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் சிறப்பு யாகத்தை பத்மநாபன் போற்றி நடத்தினார்.
    இதில், குமரி மாவட்ட அதிமுக செயலர் அ. விஜயகுமார் எம்.பி., கோயில் மேல்சாந்தி சட்டநாதன்குருக்கள், பத்மநாபபுரம் தேவசம் தொகுதிக் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோயில் ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன், குமரி மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவர் கனகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    இதேபோல, நாகர்கோவில் நாகராஜா கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில், வெள்ளிமலை, குமாரகோவில் ஆகிய கோயில்களிலும் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன.

  • “அடியவர்களின் நலன்களை கவனிப்பதே என் வேலை” – சீரடி சாயி

     

    “என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்   என்பது  பாபாவின் வாக்கு . அந்த வாக்கை தனது சமாதி நிலையிலும் பாபா இன்று வரை காத்து வருகிறார் . அதை அவரின்  பக்தர்கள் இன்றளவும்  உணர்ந்து வருகிறார்கள் . எப்போதும் தன்னுடைய கையை உயர்த்தி ஆசி வழங்கும் நிலையிலேயே காணப்படும் சாயி , நான் எப்போதும் உன்னுடன் தானே இருக்கிறேன் என்று தன்னை நாடி வருபவர்களுக்கு சொல்லாமல் சொல்லி வருகிறார் .  உயர்த்திய அவருடைய கரங்கள் ஆசி வழங்குவது மட்டுமின்றி தீராத வியாதி மற்றும் கவலைகளால் பீடிக்கப்பட்டு தன்னிடம் அடைக்கலமாக வருபவர்களை அரவணைத்து தேற்றவும் செய்கிறது .

    ஏனைய  துறவிகளைப் போல ஊர்ஊராய்ச் சுற்றும் வழக்கம் இல்லாத பாபா தன் வாழ் நாளில் ஷிர்டியை விட்டு எந்த ஊருக்கும்  சென்றதில்லை என்றால்  மற்றவர்களுக்கு நம்ப கஷ்டமாகத்தான் இருக்கும் ,   ஆனால் அது தான் உண்மை . பாபா தான் இருந்த சீரடியில் இருந்துக் கொண்டே  எல்லா இடங்களிலும் உள்ள தன் பக்தர்களுக்கு  காட்சி தரவும்  செய்தார் . அவர் எங்கும் நிறை பரப்பிரம்மம் . பாபாவின் இருப்பே சீரடியின் புனிதத் தன்மையை   மென்மேலும் உயரச் செய்தது .

     

    அடியவர்களின்  வாழ்க்கையை  இனிப்பாக மாற்றும் சீரடி மகான்

     

    ஒரு முறை சீரடியில்  இருந்த  இரண்டு கிணறுகளில்  ஒன்றில் தண்ணீர் வற்றி விட்டது. அதுதான்  மக்களுக்கு அதுவரை நல்ல தண்ணீர் தந்த கிணறு. இருந்த இன்னொரு கிணற்று நீரோ கடல் நீருக்கு சவால் விடும் அளவிற்கு   உப்பு கரித்தது. இது பற்றி பாபாவிடம்  சொல்ல சில பெண்மணிகள்  சென்றார்கள் . பஞ்ச பூதங்களையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாபாவிற்கு இது எம்மாத்திரம் ?.  ஆனாலும்  தன் குழந்தைகள் தங்களுக்கு வேண்டியதை  தன்னிடம் வாய் விட்டு கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்  என்பது தான்  அந்த தாயின்  அவா .

     

     தம்மை முற்றிலும் சரணடைந்த  அந்தப் பெண்மணிகளின் மேல் பாபாவுக்கு கருணை பொங்கியது.  “பல மூட்டை உப்பை அள்ளி யாரோ கிணற்று நீரில் கலந்ததுபோல் நீர் உப்பு கரிக்கிறதே பாபா? நீங்கள் ஏதாவது செய்யதகூடாதா? ” என்று  வாஞ்சையுடன் அவர்கள்  கேட்க , அவர்களின் அன்பான வேண்டுகோளை பாபா ஏற்றார்.  மசூதிக்கு அருகே உள்ள நந்தவனத்தில்இருந்து கொஞ்சம் மலர்களைப் பறித்துவரச் சொன்னார். மலர்களை தன் கையில் வைத்து கொண்டு கண்மூடிச் சற்றுநேரம் பிரார்த்தனை செய்தார். வாருங்கள்! என்று அவர்களை அழைத்துக்கொண்டு உப்பு கிணற்றை நோக்கிப் புறப்பட்டார். கையிலுள்ள மலர்களை கிணற்று நீரில் அர்ச்சிப்பது போல் தூவினார். இந்த கிணற்று நீரை நன்னீராக மாற்று என்ற பாபாவின்  கட்டளையை  ஏற்ற வருண பகவானும் தன்னுடைய நறுமணத்தை  தண்ணீரில்  பரவ விட்டார் . பாபாவின் கட்டளைக்கு பணியாத பஞ்ச பூதம் ஏது ? பெண்களும்  கண்மூடிப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்.

     

    கண்களை திறந்து  பார்த்த பெண்கள் , எதிரே நகைத்தவாறு நிற்கும்  பாபாவை பார்த்து ஆச்சரியத்தோடு கிணற்று நீரை குடங்களில் எடுத்தார்கள். நீரை கொஞ்சமாக  வாயில் விட்டு பார்த்தார்கள். என்ன  ஆச்சரியம் …!!! உப்பு நீர் ,இப்போது பாபாவின்  கருணையால்  கல்கண்டை போல் இனித்தது .  ஜெய் சாயிநாத்! என்றவாறே பெண்மணிகள் பாபாவை வணங்கினார்கள். பாபா புன்முறுவல் பூத்தவாறே ,“என் பக்தர்களது இல்லங்களில் உணவு உடை இவற்றிற்கு எந்த வித குறைவும் வராது. உங்கள் மனத்தை என்னிடமே எப்போதும் செலுத்துங்கள். அடியவர்களின் நலன்களை கவனிப்பதே என் வேலை. கீதையில் கிருஷ்ணரும் இதைத் தானே சொல்கிறார்! ”என்று கூறி தாம் தங்கியிருந்த மசூதி நோக்கி நடந்தார் பாபா. அந்தப் பெண்மணிகள் நன்றிப் பெருக்கில் கண்கள் பணிக்க தண்ணீர் குடத்தைத் தூக்கிக் கொண்டு திரும்பித் திரும்பி பாபாவைப் பார்த்தவாறே இல்லம் நோக்கி நடந்தார்கள். இவ்விவரம் கிராமம் முழுவதும் பரவி . அக்கம் பக்கத்து கிராமங்களிலும் கூட இந்தச் செய்தி பரவலாயிற்று.

     

    பாபாவை தியானிக்கும் அவரின் அடியவர்களின்  வாழ்க்கையும் கூட அவரது அருட்கருணையால் என்றென்றும்  தித்திக்கும்  என்பதில் ஐயம் ஏதும் இருக்க முடியுமோ  ? 

     

    சாய்ராம் சரிதம் தொடரும் – படிக்கப் படிக்க நம் வாழ்வின் இருள் அகலும்…..

     

     

  • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் மே1 கும்பாபிஷேகம்….

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவிலில் மே 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. விநாயகரை மூலவராக கொண்ட ஒரே குடவறைக்கோவில் இதுவாகும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் திருப்பணிகள் முடிவடைந்து வருகிற 1-ந் தேதி காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதனையொட்டி கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் 101 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    1-ந்தேதி வரை தினசரி காலை, மாலை வேளைகளில் 8 கால யாக சாலை பூஜைகள் நடைபெறுகிறது.

  • மேல்மருவத்தூரில் சித்ரா பௌர்ணமி திருவிழா….

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி பெருவிழா மே 9, 10 ஆகிய இருநாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட வளாகம் வண்ண மின் விளக்குகள், பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
    முதல் நாளாள மே 9 அன்று அதிகாலை 3.30 மணிக்கு மங்கல இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலை வகிக்கிறார். கருவறை அம்மன் சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு சித்தர்பீடம் வரும் பங்காரு அடிகளாருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    மறுநாள் புதன்கிழமை மே 10 மாலை 4.15 மணிக்கு சிறப்பு கலச, விளக்கு, வேள்வி பூஜைகள் நடைபெறுகின்றன.
    இந்த வேள்வி பூஜைக்கு 1000-க்கும் மேற்பட்ட பல்வேறு வடிவங்களில் யாக குண்டங்கள் அமைக்கப்படுகின்றன. லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலை வகிக்கிறார். வேள்வி பூஜையை பங்காரு அடிகளார் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
    விழாவுக்கான ஏற்பாடுகளை லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்ட சக்தி பீடங்கள் மற்றும் வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

  • மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா…

    அருள்மிகு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் முக்கியத் திருவிழாவான சித்திரைத் திருவிழா ஏப்ரல் 28 ஆம் தேதி தொடங்கி, மே 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி வாஸ்து சாந்தி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. சிவாச்சாரியர்கள் காப்புக் கட்டி சிறப்பு பூஜைகள் செய்தனர்.
    விழாவின் தொடக்கமாக வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. கோயிலின் சுந்தரேசுவரர் சன்னதி முன்பு உள்ள கம்பத்தடி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சிம்மாசனத்தில் சுந்தரேசுவரர்-பிரியாவிடை, மீனாட்சியம்மன் எழுந்தருளினர். பின்னர் கொடிமரத்துக்கு புனித நீர் தெளித்து மங்கல இசையுடன் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி-பிரியாவிடை மற்றும் அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு தீப-தூப ஆராதனைகள் நடைபெற்றன.
    கொடிமரத்தை சுவாமி-பிரியாவிடை, அம்மன் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் கோயிலுக்குள் உள்ள குலாலர் மண்டகப்பட்டியில் எழுந்தருளினர்.
    முதலாம் நாள் விழாவையொட்டி மாலையில் கற்பக விருட்ச வாகனத்தில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், சிம்ம வாகனகத்தில் மீனாட்சியம்மனும் மாசி வீதிகளில் எழுந்தருளினர். விழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் மே 5-ஆம் தேதியும், மே 6-இல் திக்குவிஜயம், மே 7-இல் திருக்கல்யாணம், மே 8-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.