Blog

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 18

    நாலே நாலு ஆண்டுகள் நீடித்த கம்யூனிஸ்ட் ஆட்சி கொன்று குவித்த கம்போடியர்களின் எண்ணிக்கை சுமார் 17 இலட்சம் !… இது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட எண்ணிக்கை. உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் என்கின்றன மனித உரிமைக் குழுக்கள். பல்வேறு நம்பகமான இணையப் பக்கங்களில் படித்த தகவல்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது கம்யூனிஸ்ட் அரசால் மடிந்தவர்கள் எண்ணிக்கை 20 இலட்சத்திலிருந்து 35 இலட்சம் வரை வேறுபடுகிறது. மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட கால்பங்கினர் கொன்றொழிக்கப்பட்டனர். வதை முகாமில் உறுப்பினர் ஒருவரையாவது பலி கொடுக்காத கம்போடியக் குடும்பம் ஒன்றுகூட இல்லை என்று சொல்லிவிடலாம்.

    பசி, பட்டினி, மிதமிஞ்சிய உடலுழைப்பு, சித்திரவதை, தொற்று நோய்கள், கொலை ஆகிய காரணங்களால் மடிந்தது மக்கள் கூட்டம். இலங்கை போல் இது இனப் பகைமையால் விளைந்த அழிவல்ல. சிங்களர், தமிழர் என்ற பிரிவினைபோல் கம்போடியாவில் இனப் பிரிவினை ஏதுமில்லை. கொன்றதும் கம்போடியர்களே… மாண்டதும் கம்போடியர்களே. சொந்த நாட்டு மக்களைக் கொன்று குவிக்க அப்படி என்ன காரணம் இருந்திருக்க முடியும் ?

    கொலைக்குக் காரணமான கெமரூஷ் ஆட்சி நாயகன் போல் போட். அவருக்குத் துணையாக இன்னும் இருவர். கியூ சம்ஃபான், நுவோன் சியா. மூவருமே ஃபிரான்சில் கல்வி கற்ற கம்யூனிஸ்ட்டுகள். 1960-களில் தொடங்கியது கம்யூனிஸ்ட்டுகளின் ஆயுதக் கிளர்ச்சி.

    நாட்டின் வட-கிழக்கில் அடர்ந்த காட்டுப் பகுதியைத் தளமாகக் கொண்டு செயல்பட்ட அது தொடக்கத்தில் அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால், 1970-இல் வலதுசாரி இராணுவம் அமெரிக்க ஆதரவாளர்களோடு மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பில், நாட்டுத் தலைவர் இளவரசர் நொரோடம் சிஹானூக் வீழ்த்தப்பட்டார். அப்போது சிஹானூக்கிற்கு ஆதரவாக அரசியல் அரங்கில் நுழைந்தது கெமரூஷ். மெல்ல மெல்ல அதன் ஆதரவுத்தளம் விரிவடைந்தது.

    சுமார் ஐந்து ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரின் விளைவாக, கிராமப் புறங்களில் கெமரூஷ் செல்வாக்குப் பெற்றது. முதலில் தலைநகர் புனோம் பென்னைக் கைப்பற்றிய கெமரூஷ் படை, 1975-இல் நாடு முழுவதையும் கைப்பற்றியது. தலைவர் போல்போட் மலைப்பகுதியில் வசித்தபோது அங்குள்ள பழங்குடியினம் பணம் என்றால் என்னவென்றே அறியாமல் தன்னிறைவோடு வாழ்ந்து வந்தது அவருக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த மலைவாழ் மக்களிடம் பௌத்த சமயமோ வேறெந்த சமயமுமோ பரவியிருக்கவில்லை.

    கம்யூனிச சித்தாந்தங்களோடு மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையையும் சேர்த்துக் கலக்கி, தமக்குள் ஒரு கொள்கையை உருவாக்கிக் கொண்டார் போல்போட். சகாக்களுக்கும் அதை போதித்து ஏற்றுக்கொள்ளச் செய்தார். கம்போடியாவில் விளைந்த எல்லா அனர்த்தங்களுக்கும், இந்தத் தவறான புரிதல்தான் மூலகாரணம்.

    எல்லாருக்கும் எல்லாமும் சொந்தம். பணம் கூடாது. சமயம் கூடாது. தனிமனிதச் சொத்துரிமை கூடவே கூடாது. கல்வி வேண்டாம். அறிவு வேண்டவே வேண்டாம். அறிவாளிகளைக் கொன்று புதைத்துவிட்டுத்தான் மறுவேலை. வெளிநாட்டு உறவுக்குத் தடை. அந்நிய மொழிகளைக் கற்கக் கூடாது, பேசக் கூடாது. அந்நியரோடு உறவாடக் கூடாது. விவசாயம் செய்யத் தெரியாதவன், விவசாய வேலை செய்யாதவன் உயிர் வாழவே அருகதையற்றவன், முதல் குற்றவாளி.. இவைதான், கெமரூஷ் அரசின் ஆதாரக் கொள்கைகள். இதற்கு உடன்படாத எல்லாரும் எதிரிகளே..

    1975-இல் ஆட்சியைப் பிடித்ததும் போல்போட்டும் சகாக்களும் நடைமுறைப்படுத்திய கொள்கைகளால் கம்போடியா சின்னாபின்னமானது. கல்வியாளர்கள், நிபுணர்கள், அறிவுஜீவிகள் அடையாளங் காணப்பட்டு முதலில் கொல்லப்பட்டனர். இதனால், தனது தேசிய முன்னேற்றத்தில் இன்னமும் ஒரு தலைமுறை பின்தங்கிப் போனது கம்போடியா. கம்போடியாவை உலக அரங்கிலிருந்து தனிமைப்படுத்திய போல்போட், புனோம் பென் போன்ற பெரிய நகரங்களில் இருந்து குடிமக்களைக் காலிசெய்து கிராமங்களை நோக்கி ஓட வைத்தார். தனது கொள்கைகளை, நடவடிக்கைகளை விமர்சித்தால் சித்திரவதை, கொலை என்று பேயாட்டம் ஆடினார் போல்போட்.

    போல்போட்டின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியவர்களில் பெரும்பாலோர், கிராமப்புறங்களைச் சேர்ந்த பதின்ம வயதினர். வதை முகாம்களில் சக கம்போடியர்களை இவர்கள் வதைத்த கதை பக்கம் பக்கமாக நீள்கிறது. S-21 சிறைச்சாலை அப்படிப்பட்ட ஒரு சித்திரவதை முகாம். அதைப் பார்க்க எங்களுக்கு நேரமில்லாமற் போனது பெரிய சோகம். உண்மையில் அது ஓர் உயர்நிலைப் பள்ளி. அங்கு நேர்ந்த கொடுமைகளை முழுமையாக விவரித்தால் உங்களில் பலரால் இதைப் படித்தபின் தூங்க முடியாது.

    எடுத்துக்காட்டுக்கு ஒன்று. ஆண்கள், பெண்கள், குழந்தைகளைக் கொல்ல, துப்பாக்கி ரவையை வீணடிக்க விரும்பாமல் கையில் கிடைத்த கனமான பொருட்களைக் கொண்டு தாக்கியே கொல்வார்களாம். பிள்ளைகளின் கால்களைப் பிடித்துக்கொண்டு தலையை அறைந்து மோதிக் கொல்வதற்கென்றே அங்கு ஒரு மரம் உண்டு. இப்போதும் அந்த மரம் அங்கே இருக்கிறது. 

    அந்தப் பள்ளிக்கூடம், நடந்த கொடுமைகளின் சாட்சியாக இன்னமும் பாதுகாக்கப்படுகிறது. அங்கும் மற்ற பல வதை முகாம்களிலும் கொல்லப்பட்டு கூட்டம் கூட்டமாகப் புதைக்கப்பட்டனர் கம்போடியர்கள். ஆழமாகக் குழிவெட்டிக் கூடப் புதைக்க நேரமில்லை கொடுங்கோலர்களுக்கு. கொல்லப்பட வேண்டிய கூட்டம் காத்திருக்கிறதே… குறைந்த ஆழத்தில் புதைத்ததால் இலேசான மழை பெய்தால் கூட இப்போதும் ஆங்காங்கே எலும்புகளும் மண்டையோடுகளும் வெளிக் கிளம்பும்.

    நான்கு ஆண்டுகள் நீடித்தது இந்தக் கெமரூஷ் ஆட்சி. 1979-இல் கம்போடியாவை ஊடுருவிய வியட்நாமியப் படைகளால் ஒருவழியாக கெமரூஷ் ஆட்சி முடிவுக்கு வந்தது. கெமரூஷ் தலைவர்கள், காட்டுப் பகுதிக்குள் ஓடிப் பதுங்கிக் கொண்டனர். நாளடைவில் அவர்களின் செல்வாக்கு மறைந்து, கம்போடியா வெளி உலகத் தொடர்புக்கு வந்தபோதுதான், 1975-முதல் 1979-வரை அங்கு நடந்த கொடுமைகள் வெளிச்சத்துக்கு வந்தன. சித்திரவதை முகாமில் இருந்தவர்களைப் படம் எடுத்துப் பதிவு செய்தவர் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார். அந்தப் படங்கள் பல கதைகளைச் சொல்லாமல் சொல்லின.

    வதை முகாமில் தப்பிப் பிழைத்தவர்கள் சொன்ன கதைகளைக் கேட்டு விக்கித்துப் போனது அனைத்துலக சமூகம். கில்லிங் ஃபீல்ட்ஸ் என்றொரு ஹாலிவுட் திரைப்படம், நடந்த கொடுமைகளை ஆவணமாகப் பதிவு செய்தது. பின்னர் வந்த அரசாங்கம், போல்போட்டை அவரது வீட்டிலேயே சிறை வைத்தது. 1998-இல் அவர் எந்தத் தண்டனையும் அனுபவிக்காமல் மாண்டுபோனார்.

    கெமரூஷ் ஆட்சியில் அதிபராகப் பதவி வகித்த கியூ சம்ஃபானுக்கும், மற்றொரு முக்கியப் புள்ளியான நுவோன் சியாவுக்கும் ஐக்கிய நாட்டு நிறுவன ஆதரவோடு இயங்கும் கம்போடிய நீதிமன்றம் 2014-இல் ஆயுள்தண்டனை விதித்தது. இன அழிப்பு, மனித குலத்துக்கு எதிரான குற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் அந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இப்போதும் அந்த இருவர் மீதும் விசாரணை நடந்து வருகிறது.

    “எல்லாமே வியட்நாமியச் சதி” என்று சாதித்துவரும் இருவரும், இன அழிப்பு என்று சொல்வதே தவறு என்கின்றனர். “பசிப் பிணியைப் போக்க, உடனடியாக மக்கள் தொழிலாளர் முகாம்களில் உழைக்குமாறு பணிக்கப்பட்டனர். இது ஒரு குற்றமா ஐயா?” என்று கேட்கிறார் கியூ சம்ஃபான்.

    கம்போடியாவின் இப்போதைய பிரதமர் ஹுன் சென்னே கெமரூஷின் அந்நாளைய உறுப்பினர்தான். வியட்நாமுக்குத் தப்பிச் சென்ற அவர், பின்னர் வியட்நாமிய ஆதரவோடு அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார். ஆகவே இது வியட்நாமியச் சதி என்கின்றனர் கெமரூஷ் முன்னாள் தலைவர்கள். கெமரூஷ் ஆட்சிக் காலத்தில்தான் கம்போடியக் கலைப்பொருட்கள் பெரிதும் சிதைக்கப்பட்டன, களவுபோயின. கழுத்தில்லா புத்தர் சிலை எல்லாம் கெமரூஷின் கைங்கர்யம்தான். இத்தனை களேபரத்தையும் தாண்டி இவ்வளவு மிஞ்சியிருப்பதே கூட நமது நல்லூழ் என்றுதான் சொல்ல வேண்டும்.

    கெமரூஷ் படையினருக்கும் வியட்நாமியப் படையினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையின் சாட்சியாக அங்கோர் வாட் ஆலயத்தில் இன்றும் சில துப்பாக்கிச் சூட்டுத் தடயங்களைப் பார்க்கலாம். கெமரூஷ் ஆட்சிக் காலத்தில் களவுபோன பல அரும்பொருட்கள் சோத்பி, கிறிஸ்டிஸ் போன்ற உலகின் முன்னணி ஏல நிறுவனங்களால் ஏலம் விடப்பட்ட சம்பவங்கள் உண்டு. கம்போடிய அரசாங்கம் இப்போது அதைத் தடுத்து நிறுத்தி அவ்வாறு அடையாளம் காணப்படும் சிலைகளைத் திரும்பிப்பெறப் போராடி வருகிறது.

    2014-இல் அமெரிக்கா இரண்டு திருட்டுச் சிலைகளைத் திருப்பித் தந்தது. உலகெங்கும் உள்ள அரும்பொருளகங்களும் கலைப்பொருள் சேகரிப்பாளர்களும் கம்போடிய அரும்பொருட்களைத் திருட்டுச் சந்தையில் வாங்கியிருந்தால், அன்புகூர்ந்து அதைத் திருப்பித் தந்துவிடுங்கள் என்று வலியுறுத்தி வருகிறது கம்போடியா. இந்தியப் பாரம்பரியச் செல்வங்களைக் கொள்ளையடித்து விற்பதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்த சுபாஷ் சந்திர கபூர் போன்ற பணக்காரத் திருடர்கள் விற்பனை செய்த அரும்பொருட்கள் உலகெங்கும் உள்ள தனியார் அரும்பொருளகங்களை அலங்கரித்து வருகின்றன.

    அண்மைக் காலமாக அதுபற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், சிலைகளின் ரிஷிமூலம், நதிமூலம் கேட்காமல் எந்தக் கலை நிறுவனமும் எதையும் வாங்குவதில்லை. கம்போடியாவுக்கு நேரில் சென்ற பிறகுதான் அங்கே இவ்வளவு கலைச் செல்வங்கள் இருக்கின்றன என்பதே எங்களுக்குத் தெரியவந்தது. அதுவரை அங்கோர் வாட் பற்றி மட்டும்தான் படித்திருந்தோம். ஆனால், புனோம் பென்னிலுள்ள அரும்பொருளகத்துக்குள் நுழைந்ததும்தான் தெரிந்தது, கல்லில் மட்டுமல்ல, உலோகத் திருமேனி வார்ப்பிலும் கம்போடியர்கள் வெளுத்துக் கட்டியிருக்கிறார்கள் என்று.

    அரும்பொருளக நுழைவுக் கட்டணம் 5 டாலர்தான். உலகின் உண்மையான பொக்கிஷங்களைப் பாதுகாத்துப் பராமரிக்கும் அரும்பொருளகங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். என்னைப் பொறுத்தவரை புத்தகங்களுக்கும் அரும்பொருளகங்களுக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கத் தயார்.

    புனோம் பென்னிலுள்ள அரும்பொருளகம், பாரம்பரியக் கெமர் கலை பாணியில் கட்டப்பட்ட மிக அழகான கட்டடம். அந்தக் கட்டடத்தின் அழகே நம்மை அசத்திவிடுகிறது. பசுமையான, இதமான, கம்பீரமான முகப்பு. எந்தவொரு நாட்டின் அரும்பொருளகமும் அந்தந்த நாட்டுப் பாரம்பரியக் கட்டட வடிவமைப்போடு இருக்க வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு. சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம் மிக அழகான பிரிட்டிஷ் கட்டடத்தில் அமைந்திருக்கும். அது உள்நாட்டுப் பாரம்பரியக் கட்டடம் இல்லையென்றாலும்கூட சிங்கப்பூரின் தட்ப-வெப்பச் சூழலுக்கேற்ற அதன் பழமையும் வடிவமைப்பும் அற்புதமாக இருக்கும். மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது அது.

    சென்னை அரும்பொருளகமும் பிரிட்டிஷார் அமைத்ததுதான். சொல்லப் போனால், இந்தியாவின் இரண்டாவது ஆகப் பழமையான அரும்பொருளகம் நமது சென்னை அரும்பொருளகம்தான். இந்தியாவில், கொல்கத்தாவுக்கு அடுத்தபடியாக பிரிட்டிஷார் அரும்பொருளகம் கட்டியது சென்னையில்தான். இந்தியாவைச் சுற்றி அப்போது பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்டிருந்த நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட கலைச் செல்வங்கள், கொல்கத்தாவிலும் சென்னையிலும்தான் காட்சிக்கு வைக்கப்பட்டன.

    இது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் ? எந்த வரலாற்று ஆசிரியராவது நமக்கு இதைக் கற்பித்து அதன் அருமையை உணர்த்தியிருக்கிறாரா? சென்னை அரும்பொருளகத்தின் அருமை, பிற்காலத்தில் அங்கு செப்புத் திருமேனிகளுக்கான தனிக் கட்டடம் உருவாக்கப்படும்போது அதைத் திட்டமிட்டு வடிவமைத்த அதிகாரிகளுக்கும் பொறியாளர்களுக்கும் தெரிந்திருந்ததா? போய்ப் பாருங்கள். எவ்வித ரசனையுமின்றி ஒரு மாபெரும் சரக்குக் கிடங்குபோல் கட்டிப் போட்டிருக்கிறார்கள்.

    உள்ளே இருக்கும் திருமேனிகள் எல்லாம் நம் மூதாதையரின் ரசனையும் திறமையும் மேதமையும் வெளிப்படும் பொக்கிஷங்கள். அதைக் காட்சிப்படுத்தும் இடமோ மிகச் சாதாரணமானது. சிங்கத்தின் பாலைத் தங்கக் கிண்ணத்தில் அல்லவோ வைக்க வேண்டும்? சும்மாவா வைரத்தை நீல வெட்வெட் துணியில் பொதிந்து காட்சிக்கு வைக்கிறார்கள் ?

    இந்தியாவும் பொருளாதாரத்தில் உயரும்போது தனக்கான அழகிய அரும்பொருளகங்களை வடிவமைத்துக் கட்டிக்கொள்ளும் என்று நம்புவோம். கம்போடிய அரும்பொருளகம் வெளியிலிருந்து பார்க்கும்போதே எங்கள் எதிர்பார்ப்பைத் தூண்டியது. உள்ளே இருந்த கலைப் பொருட்களோ எங்கள் எதிர்பார்ப்பையும் மிஞ்சிவிட்டன. விவரம் தெரிந்த நாள்முதல் எத்தனையோ சிலைகள், புடைப்புச் சிற்பங்கள், செப்புத் திருமேனிகள், ஆலய வழிபாட்டிலுள்ள விக்கிரகங்களைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகு. செப்புத் திருமேனிகளில் சோழர்காலச் சிலைகளை எவராலும் மிஞ்சமுடியாது என்றே இறுமாந்து போயிருந்தேன் நான்.

    அதற்கு எடுத்துக்காட்டாக, தஞ்சை அரண்மனை வளாகக் கலைக் கூடத்திலுள்ள அம்மையுடன் ரிஷப வாகன தேவர், வள்ளி-தெய்வானையோடு கூடிய முருகன், பிக்‌ஷாடனர், கல்யாண சுந்தரர், சந்திரசேகரர் சிலைகளைச் சொல்லலாம். திருவெண்காட்டில் கிடைத்த திருமேனிகள் அவை. மாயூரம் திரிபுராந்தகர், தஞ்சையில் கிடைத்த வீணாதர தக்‌ஷிணாமூர்த்தி, திருவாலங்காடு நடராஜரும் காளியும்.. என்று சொல்லிக் கொண்டே போகலாம். உலோகத்தில் அவைதான் உச்சம் என்பேன் நான். அதேபோலத்தான் பல நடராஜர் சிலைகளும். இவற்றை விட வேறு எந்தக் கொம்பனால் சிறப்பாகத் திருமேனிகளை வடித்துவிட முடியும் என்ற கர்வமேகூட எனக்குண்டு.

    ஆனால் அந்த நம்பிக்கையை அசைத்துப் பார்த்துவிட்டது, புனோம் பென் அரும்பொருளகத்திலுள்ள ஒரு விஷ்ணு சிலை. இத்தனைக்கும் அதில் வேலைப்பாடு அதிகம் என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும் அதில் சொல்ல முடியாத என்னமோ இருக்கிறது. அது என்னைச் சுற்றிச் சுற்றி வர வைத்தது. இராவணன் திரைப்படத்தில், காட்டாற்றை மறித்தவாறு கிடக்கும் விஷ்ணு சிலையின் மூலம், இந்தச் சிலையாகத்தான் இருக்க முடியும். படத்தின் கலை இயக்குநர் புனோம் பென் வந்து இந்தச் சிலையைப் பார்த்தாரா அல்லது படத்தில் இதைப் பார்த்து மயங்கினாரா தெரியவில்லை.

    புனோம் பென் விஷ்ணு சிலை 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மார்பளவுச் சிலைதான் கிடைத்திருக்கிறது. அதன் கீழே உள்ள பகுதி கிடைக்கவில்லை. முதலில் வடிக்கப்பட்டதே மார்பளவுக்குத்தானா அல்லது முழுமையாகவே பள்ளி கொண்ட பெருமாளாக வடிக்கப்பட்டதா என்பதை ஊகிக்க முடியவில்லை. மார்பளவிலேயே முழுமையான சிலையாக இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை முழுமையான சிலையாக இருந்து முழுமையாகவே அது கிடைத்தும் இருந்தால், உலகின் ஒப்பற்ற சிலைகளில் ஒன்றாக அது இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

    1936-ஆம் ஆண்டு சியெம் ரீப்பில், மேற்குப்புற மெபோன் ஆலயத்தில் புதையுண்டு கிடந்த இந்தச் சிலை எதேச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 1950-இல் அரும்பொருளகத்துக்குக் கொண்டு வரப்பட்டதாகக் குறிப்பிடுகிறது அரும்பொருளகக் கையேடு. சிதிலமடைந்த சிலைதான்.

    நான்கு கைகளில், வலப்பக்கக் கைகள் இரண்டுதான் உள்ளன. அவையும் முழுமையாக இல்லை. தலையின் பின்பகுதி அரித்துப் போயிருக்கிறது. ஆனால் முகம் முழுமையாகக் கிடைத்திருக்கிறது. சதுர வடிவிலான அப்பட்டமான கெமர் முகம். பார்த்தசாரதி கோயில் பெருமாளைப் போல மீசையுள்ள விஷ்ணு. தடித்த உதடுகள். பெரிய காதுகள். மீசை, புருவம், கண்களில் இலேசான பள்ளம் உள்ளது. அந்த இடத்தில் அருமணிகள் பதிக்கப்பட்டிருக்க வேண்டும். இங்குள்ள சில சிவன் சிலைகளிலும் இதுபோன்ற பள்ளம் உள்ளது.

    மார்பில் அழகான இரத்னாஹாரம் துலங்குகிறது. நடுவிலுள்ளது பெரிய இரத்தினக் கல். அதைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் நான்கு சிறிய கற்கள். உள்ளீடற்ற உலோக வார்ப்புச் சிலை. உட்கூடு தெளிவாகத் தெரிகிறது. இரண்டு கைகளிலும் கடகவளையும் கங்கணமும் உள்ளன. இரத்னாஹாரத்தின் பின்பகுதியில் 11 முத்துத் தொங்கல்கள் உள்ளன. தலை அலங்காரம் எப்படி இருந்திருக்கும் என்று தெரியவில்லை. அநேகமாகத் தலைக்குத் தனியான மகுடம் செய்து பொருத்தியிருக்க வேண்டும்.

    தலைக்கும் அணை கொடுக்கும் கைக்கும் இடையே சிறிய இடைவெளி உள்ளது. அருமணிகள் பதித்த பெரிய கெமர் மகுடம் தனியாகப் பொருத்தப்பட்டிருக்கலாம். மிக ஒயிலாகப் படுத்திருக்கிறது சிலை. அரும்பொருளகத்தின் உள்ளே நுழைந்தவுடன் இடப்பக்கத்தில் கடைசியில் கிடத்தப்பட்டிருக்கிறார் விஷ்ணு.

    ஆனால் உள்ளே போனது முதல் வெளியேறும் வரை என்னால் அந்தச் சிலையை விட்டுக் கண்ணையே எடுக்க முடியவில்லை. அப்படி ஒரு அபார ஈர்ப்பு அதனிடம். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த வெண்கலச் சிலையை வடிக்கும் உலோகவியல் தொழில்நுட்பம் கெமர் கலைஞர்களிடம் இருந்திருக்கிறது. உலோகத் திருமேனிகளுக்குள் அருமணிகளைப் பதிக்கும் தொழில்நுட்பமும் இவர்களுக்குக் கைவந்திருக்கிறது.

    புனோம் பென் அரும்பொருளகத்துக்குள் கேமராவுக்கு அனுமதியில்லை. அதனால் நல்ல படங்களை எடுக்க முடியவில்லை. ஆனாலும் கைத் தொலைபேசியில் படம் எடுப்பதை அங்கிருந்த ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை. மற்றவர்களும் எடுத்ததால் நாங்களும் ஐஃபோனில் படம் எடுத்துக் கொண்டோம். உலோகம், கல், மரம், எனத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு அரும்பொருட்கள் அழகாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. எல்லாமே, இந்து, பௌத்த சமயத் திருவுருவங்கள்தான். ஆனால், அந்தச் சிலைகளின் படைக்கலங்களை வைத்துத்தான் அவற்றை சிவன், விஷ்ணு, பிரம்மா, இலக்குமி என்று நம்மால் அடையாளங்காண முடிகிறது. கெமர் முகமுள்ள சிவனை நம் உள்மனம் ஏற்க மறுக்கிறது. ஆனால், சற்று நேரம் அரும்பொருளகத்தைச் சுற்றிவந்ததும் அந்த வேறுபாடு மறையத் தொடங்குகிறது.

    இந்த அரும்பொருளகத்துக்கு வந்ததற்கு, இந்த விஷ்ணு சிலை ஒன்றுபோதும். மற்ற எல்லாமே போனஸ்தான் என்று நாங்கள் பேசிக்கொண்டோம். எங்களைத் தவிர ஓரிரு சீனர்கள் வந்திருந்தார்கள். உள்ளூர் ஆட்கள் கிட்டத்தட்ட இல்லை எனலாம். இங்கே ஓரிரு மணி நேரம் செலவிட எங்களுக்கு நேரமிருந்தது. உலோகச் சிலைகள் பகுதியில்தான் நான் அதிக நேரத்தைச் செலவிட்டேன். இது ஒரு பயனுள்ள, முழுமையான நாள் எங்களுக்கு. இன்று நாங்கள் வாழ்ந்தோம்.

    – பொன். மகாலிங்கம்

     

     

    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

  • அமாவாசையில் பவுர்ணமியைக் கொண்டு வந்த அபிராமி பட்டர்

     

    காவிரி தாயின் கருணையால்  வளம் கொழிக்கும் தஞ்சைமாநகரில்  திருக்கடையூர் என்னும் திருத்தலத்தில் சுமார் 300ஆண்டுகளுக்கு முன் அவதரித்தார் அபிராமி பட்டர். காலனைச் சிவபெருமான் சம்ஹாரம் செய்த இடமும் இது தான். அம்பிகையை வழிபடும் சாக்த நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டஅபிராமி பட்டர் இசைத்துறையிலும் பாடல் புனைவதிலும் வல்லவராக இருந்தார்.தனது மனதுள்  ஒளிப் பிரவாகமாக அன்னையை ,தாய் அம்பிகையைத் தரிசித்து பேரின்பம் கண்டார். ஆனால், இவரின்  தெய்வீக நிலையை மற்றவர்களால் உணர முடியாமல் ,அவரைப்  பித்தன் என்றும் பைத்தியம் என்றும் வசைபாடினர். அவர்களின் ஏச்சையும் பேச்சையும் அபிராமி பட்டர் ஒரு பொருட்டாகஎண்ணவில்லை.

    அக்காலத்தில் தஞ்சையை தலைநகராகக் கொண்டு மராட்டிய  வம்சத்தைச் சேர்ந்த சரபோஜி மன்னர் ஆட்சி செய்து வந்தார். இறையுணர்வு, மத சம்பிரதாயங்களில் அதிக ஈடுபாடு கொண்ட அவர் , ஒரு தை அமாவாசை நாளில் திருக்கடையூர் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தார். கோயிலில் அபிராமி பட்டர் அம்பிகையின் முன்னர் ஆழ்ந்த  தியானத்திலிருந்தார்.

     மன்னரின் வருகையைக் கூட கவனிக்காமல் பட்டர் இருப்பதைக் கண்ட மன்னருக்கு  வியப்பு.  ஆனால், சுற்றியிருந்தவர்களோ மன்னரிடம், மன்னா!தங்களுக்கு தர வேண்டிய மரியாதையை வழங்காமல் கண்மூடி இருக்கிறார் பட்டர்.எந்நேரமும் இப்படித்தான் இருப்பார். இவர் ஒரு பித்தன், என்று பட்டரைப் பற்றி புகார் கூறினார்கள். 

    ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை.இருந்தாலும், பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பினார் மன்னர்.அவரின் அருகில் சென்ற மன்னர்,“பட்டரே! இன்றுஎன்ன திதி?” என்று கேட்டார். அப்போது கண் திறந்த பட்டர், அபிராமி அம்பிகையை ஏறிட்டுப் பார்த்தார். அவளது முகம் நிலவைப் போல்  பிரகாசித்தது. அந்த அருள் பொங்கிய  முகத்தில் லயித்தவராக, இன்று பவுர்ணமி என்றார். ஏதோ நினைவில் அப்படி சொல்கிறார் என நினைத்த மன்னர், கேள்வியை மீண்டும் கேட்டார். அப்போதும் அதே பதில் வந்தது. பின்னர், சுதாரித்து பார்த்த போது மன்னர் கேள்வி கேட்டதும், அதற்கு சரியான பதில் சொல்லாததும் தெரிய வந்தது.

    தன் வாக்கு பொய்த்துவிட்டதே என்று கதறி  அழுத அவர், அரசர் வரும்வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருள வேண்டும் என்று அரிகண்டம் பாடினார். அபிராமி சந்நிதி முன் ஒருஆழமான ஒரு குழியை வெட்டி, விறகை அடுக்கி தீ மூட்டினார். அதற்கு மேல் ஒருவிட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டினார். அதில் ஏறி அமர்ந்து கொண்ட பட்டர்  உதிக்கின்ற செங்கதிர் என்று பாடத் தொடங்கினார்.

     ஒவ்வொரு பாடல் முடிந்ததும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார். பட்டர் பல பாடல்கள் பாடியும் அம்பிகையின் அருள் கிட்டவில்லை.  “அம்மா! உன் விழிக்கே அருள் பார்வையுண்டு. பழிபாவம் கொண்டு உழலும்  மாந்தருடன் இனி எனக்கு என்ன தொடர்புண்டு?”என்ற பொருள்படும் வகையில்,விழிக்கே அருளுண்டு அபிராமிவல்லிக்கே என்ற பாடலைப் பாடி முடித்ததும், அன்னை அபிராமி அவருக்கு அருட்காட்சி கொடுத்தாள்.

     

                                                                                 

    தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வான வீதியில் தவழ விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்று கூடினாற் போல் ஒளியைப் பொழிந்தது.  அவள் பட்டரிடம், “நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய  சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு” என்றாள்.  பரவசமுற்ற அபிராமிப்பட்டர் அதோடு, தம் அனுபூதி நிலையைவெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு  செய்தார். அபிராமிப்பட்டரின் உறுதியான பக்தி கண்டு சரபோஜி மன்னரும் மனம் மகிழ்ந்தார். மன்னரிடம் பட்டரைப் பற்றி புகார் கூறியவர்கள் எல்லாம் பட்டரிடம் மன்னிப்பு கேட்டனர்.

    அற்புதமான தெய்வீக துதி நூலான  அபிராமி அந்தாதியை பவுர்ணமி, வெள்ளிக் கிழமைகளில் பாராயணம் செய்து வருபவர்களின் எண்ணங்கள் யாவும் நிறைவேறும்.

  • சோமவாரம் அமாவாசையின் சிறப்பு!

    சிவபெருமானுக்கு உகந்த நாள், சோமவாரம். திங்கட் கிழமையைத் தான் சோமவாரம் என்று அழைப்பார்கள். ‘சோம’ என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும்.

      அமாவாசை  சோமவாரம்

    சிவபெருமானுக்கு உகந்த நாள், சோமவாரம். திங்கட் கிழமையைத் தான் சோமவாரம் என்று அழைப்பார்கள். ‘சோம’ என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும். கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சந்திரன், தன் நோய் குணமாக வேண்டி ஈசனை நினைத்து தவம் இருந்தான். சந்திரனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், அவனது நோயை நீக்கியதுடன், நவக்கிரகங் களில் ஒருவராக திகழும் வாய்ப்பையும் வழங்கினார். அந்த நாள் சோமவாரம் ஆகும். அப்போது சந்திரன், ‘தனது வாரத்தில், மக்கள் விரதம் இருந்து வழிபட்டால் தாங்கள் நல்ல பலனை வழங்க வேண்டும்’ என்று பரமேஸ்வரனை வேண்டிக்கொண்டான். அதன்படி தோன்றியதே சோமவார விரதமாகும். அமாவாசையில் வரும் திங்கட்கிழமை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது அமாவாசை சோமவாரம் என்று அழைக்கப்படுகிறது. அந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் என்பது ஐதீகம்.

    கணவனை மீட்டெடுத்த சீமந்தினி

    சித்ரவர்மன் என்ற மன்னனின் மகள் சீமந்தினி. அவள் மீது மன்னன் அளவு கடந்த பாசம் வைத்திருந்தான். தனது மகளுக்கு சிறந்த ஜோதிடர்களை வரவழைத்து ஜாதகம் எழுதும்படி உத்தரவிட்டான். 

    அந்த ஜோதிடர்களில் ஒருவர், ‘மன்னா! உன்மகள் அழகில் லட்சுமி, கலைகளில் கலைமகள், வீரத்தில் உமையவள். உலகமே போற்றிப்புகழும் கணவன் அவளுக்குக் கிடைப்பான்’ என்றார்.

    ஆனால் இன்னொரு ஜோதிடர் முகம் வாட்டத்துடன் இருந்தார். அவரைக் கவனித்த மன்னர் அவருடைய கருத்தையும் கேட்டான். அதற்கு அந்த ஜோதிடர் சொன்ன பதில் மன்னரை அதிர்ச்சி அடைய செய்தது. ‘மன்னா! உங்கள் மகள் திருமணம் ஆன சில நாட்களில் மாங்கல்ய பாக்கியத்தை இழப்பாள்’ என்றார். 

    இதைக்கேட்ட மன்னன் வேதனை அடைந்தான். காலம் உருண்டோடியதில், சீமந்தினி மணம் முடிக்கும் பருவத்தை எட்டியிருந்தாள். அப்போது அவளது தோழிகள், அவளுக்கு ஜாதகத்தில் இருக்கும் ஆபத்தைக் கூறினார்கள்.

    தன் நிலையை உணர்ந்தவள், யாக்ஞவல்கிய முனிவரின் மனைவி மைத்ரேயியை சந்தித்து, தன்னுடைய மனக் கவலையைக் கூறினாள். 

    சிறந்த பதிவிரதையான மைத்ரேயி, ‘கவலைப்படாதே! சோமவார விரதத்தை கடைப்பிடி. உன்னுடைய துன்பங்கள் விலகும்’ என்றாள்.  

    சீமந்தினியும் முறையாக சோமவார விரதத்தை கடைப்பிடித்தாள். 

    சில காலத்தில் சீமந்தினிக்கும், நளனின் பேரனும், இந்திர சேனன் மகனுமான சந்திராங்கதனுக்கும் திருமணம் நடந்தது. தம்பதிகள் சந்தோ‌ஷமாக வாழ்ந்து வந்தனர். 

    ஒருநாள் நண்பர்களுடன் நதியில் நீராடச்சென்ற சந்திராங்கதன் தண்ணீரில் மூழ்கினான். எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. ஆனால் மனநிலை சற்றும் குலையாத சீமந்தினி, பரமேஸ்வரனையும், பார்வதியையும் மனதார பிரார்த்தனை செய்து சோமவார விரதத்தை கடைப்பிடித்தாள். அவள் விரதத்திற்கான பலன் விரைவிலேயே கிடைத்தது. 

    திடீரென்று ஒருநாள் சந்திராங்கதன் திரும்பி வந்தான். தண்ணீரில் மூழ்கிய அவனை நாகர்கள் அழைத்துப்போய் சிலநாட்கள் அங்கு தங்க வைத்து உபசரணை செய்ததாகவும், சீமந்தினியின் சோமவார விரதம் பற்றி கேள்விப்பட்டு, தன்னை இங்கு கொண்டு வந்து விட்டதாகவும் கூறினான்.

    இந்த சோமவார விரதத்தை திங்கட்கிழமையன்று பயபக்தியுடன் கடைப்பிடித்து, சிவபெருமானை வழிபாடு செய்து வந்தால் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும். வெகு தூரத்தில் உள்ளவர்கள், தங்கள் இருப்பிடத்தை வந்தடைவர். கணவன்–மனைவிக்கு இடையே பிரிவு இருக்காது. அப்படியே பிரிந்திருந்தாலும், அவர்கள் விரைவில் ஒன்று சேருவார்கள். மேலும் சகல செல்வங்களையும் பெற்றுத்தரும் சிறப்புமிகுந்த விரதம் இதுவாகும். களத்திரதோ‌ஷம், மாங்கல்ய தோ‌ஷம் இருப்பவர்கள், இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.


    விரதம் இருக்கும் முறை

    சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமை அன்று சோமவார விரதத்தை கடைப்பிடிக்கத் தொடங்கலாம். ஆண், பெண் இருவரும் கடைப்பிடிக்கக்கூடிய விரதங்களில் இதுவும் ஒன்று. சிவபூஜை செய்வதற்கு முன்பாக மஞ்சள்பொடி, குங்குமம், சந்தனம், பூமாலை, உதிரிப்பூக்கள், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி, பஞ்சு, நல்லெண்ணெய், கற்பூரம், வெல்லம், மாவிலை, வாழைப்பழம், அரிசி, தேங்காய், தயிர், தேன், தீப்பெட்டி, பூணூல், வஸ்தரம், அட்சதை (பச்சரிசியுடன் மஞ்சள்பொடி கலந்து), பஞ்சாமிர்தம், திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால் ஆகியவற்றை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். 

    ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். அதிகாலையில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, தேங்காய் உடைத்து, விநாயகரை வழிபட்டு சங்கல்பம் செய்ய வேண்டும். பிறகு கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி கலந்து கலசத்துக்கு மேலே மாவிலைக் கொத்தை செருகி, மையத்தில் மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து சந்தனம், குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகே பூஜையை தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை இறைவனுக்கு நைவேத்தியமாக படைக்க வேண்டும். தொடர்ந்து சிவ நாமங்களை பாராயணம் செய்து, தீபாராதனை காட்ட வேண்டும். 

    பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை, பார்வதி– பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம்  செய்ய வேண்டும். புதுவேட்டி, ரவிக்கை துணி, வெற்றிலைப்பாக்கு மற்றும் பழம், தட்சணை ஆகியவை அடங்கிய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னமிட்டு அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து அவர்களிடம் இருந்து ஆசிபெற்றால் நாளும் சிறப்பு வந்து சேரும்.

    நோய் தீர்க்கும் தீர்த்தக்குளம்

    நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்குரிய கோவில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறுக்கு அருகில் உள்ள திங்களூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு பெரியநாயகி சமேத கயிலாசநாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் வரும் திங்கட்கிழமைகளில் இத்தல இறைவனை வழிபடுவதோடு, சந்திர பகவானையும் வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்கள் திங்கட்கிழமைகளில் வரும் நாட்களிலும் வழிபாடு செய்வது மிகவும் நல்லது. கடக ராசிக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய ஆலயம் இது. இந்த ஆலயத்தில் உள்ள புஷ்கரணி தீர்த்தக் குளத்தில் நீராடினால் தொழுநோய், சித்தபிரமை போன்றவை நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    சந்திரனுக்கு அடைக்கலம் தந்த சிவன்

    தட்சனின் மகள்களான 27 பெண்களை சந்திரன் திருமணம் செய்தான். திருமணத்தின் போது, அனைத்து பெண்களிடமும் சமமாக அன்பு செலுத்துவேன் என்று உறுதியளித்த சந்திரன், ரோகிணியிடம் மட்டுமே அதிக அன்பும், பாசமும் கொண்டிருந்தான். இதனால் மற்ற பெண்கள் அனைவரும் கலங்கி நின்றனர். இதுபற்றி அறிந்த தட்சன், கோபத்தில் சந்திரனின் அழகு தேய்ந்து போகட்டும் என்று சாபம் கொடுத்தான். சாபத்தின் பிடியில் சிக்கிய சந்திரன், சிவ பெருமானை தஞ்சம் அடைந்தான். இதையடுத்து சந்திரனுக்கு, தனது தலையில் அடைக்கலம் கொடுத்தார் சிவபெருமான். அவர் தன் தலையில் சந்திரனை சூட்டியதும், சந்திரன் வளரத் தொடங்கினான். இப்படி தான் தேய்பிறை– வளர்பிறை உருவானது. 

    சந்திரனை, சிவபெருமான் தனது திருமுடியில் அமர்த்தியது ஒரு சோமவார தினத்தில் தான். ‘14 ஆண்டுகள் தொடர்ச்சியாக சோமவாரம் பூஜை செய்யும் கணவன்– மனைவிக்கு முக்தி கிடைக்க வழி செய்ய வேண்டும்’ என்று சந்திரன், ஈசனை வேண்டிக்கொண்டான். அவனது விருப்பத்தை சிவபெருமான் நிறைவேற்றினார். ஆம்.. நாம் தொடர்ச்சியாக 14 ஆண்டுகள் சோமவார விரதத்தைக் கடைப்பிடித்தால், இறைவனின் திருப்பாதத்தை அடையலாம்.

     

  • மன்னனின் மனதை மாற்றிய நீறு

     

    விபூதி , பஸ்மம், ரக்ஷை, திருநீறு இப்படி எந்த பெயர் வைத்து நாம் வணங்கினாலும் ,திருநீறு என்பது சைவ சமயத்தின் ஒரு ஒப்பற்ற குறியீடாகும். முடியாண்ட மன்னனும் முடிவில் பிடி சாம்பல் ஆவான் என்ற தத்துவத்தை உணர்த்துவதே திருநீற்றின் மகிமையாகும்.  திருநீற்றின் பெருமைதனை தெரிந்துக்கொள்வோம்.

    அரிகேசரி , அரிமர்த்தன பாண்டியனுக்குப் பிறகு மதுரையைச் சிறப்பாக ஆட்சி செய்தவன்.  ‘கூன் பாண்டியன்’ என்றால் இன்னும் பிரசித்தம்.சோழர்குலப் பெண்ணான மங்கையர்க்கரசியை திருமணம் செய்துக் கொண்டான்.

     வைதீக சமயத்தைப் பின்பற்றி வந்த அரிகேசரி, காலப்போக்கில் சமண சமயத்தின் மீது பற்று வரவே சமணத்தைத் தழுவினான். மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்று மக்களும், மன்னனை பின்பற்றி  பெருமளவில் சமண மதத்தைத் தழுவினர். இதைக் கண்டு அரசிக்கு மிகுந்த வருத்தம். அமைச்சர் குலச்சிறையாருக்கோ அரசனுக்கு எதிரில் விபூதி கூட அணிந்து வர முடியாத நிலை.

    இதனால் அரசியும்அமைச்சரும் மன்னன் மீண்டும் சைவமதத்துக்கே திரும்ப வேண்டி தினந்தோறும் சோமசுந்தரக் கடவுளை மனமுருகி வேண்டி வந்தனர். இந்த நிலையில் அந்தணர் ஒருவர் மூலமாக திருஞானசம்பந்தரின் மேன்மையைப் பற்றி  அறிந்துகொண்டனர். ஏவலர் ஒருவரை அனுப்பி, வேதாரண்யத்தில் இருந்து மதுரைக்கு அவரை அழைத்துவர பணித்தனர்.

     அவரும் திருஞானசம்பந்தரிடம் சென்று மதுரையில் சமணத்தின் எழுச்சியையும், சைவத்தின் வீழ்ச்சியையும் எடுத்துரைக்க ,உடனே திருஞானசம்பந்தர் மதுரைக்குப் புறப்படத் தயாரானார். ஆனால் அப்பர் அவரைத் தடுத்தார்.

     உடனே திருஞானசம்பந்தரோ “வேயுறு தோளி பங்கன், விடமுண்ட கண்டன்” எனத் தொடங்கும் நவக்கிரகப் பதிகத்தைப் பாடி அப்பரிடம் சம்மதம் பெற்று மதுரைக்குக் கிளம்பினார். மதுரையில் அவருக்கு அரசியும் அமைச்சரும் பலத்த வரவேற்பு அளித்தனர். வந்ததும் நேராக சோமசுந்தரக் கடவுளைச் சந்தித்து வல்லமை வேண்டி திருப்பதிகம் பாடினார். அடியார்களுடன் மடம் ஒன்றில் இரவில் தங்கினார்.

     இதற்கிடையே சம்பந்தர் மதுரை வந்ததை விரும்பாத சிலர் அவர் தங்கியிருக்கும் மடம் தீப்பிடிக்க அபிசார மந்திரம் ஜபித்தனர். மடம் அப்படியே இருக்கவே மடத்துக்குத் தீ வைத்தனர்.

     மடம் தீப்பற்றி எரிவதைக் கண்ட சம்பந்தர் சிறிதும் அச்சமில்லாது பதிகம் ஒன்று பாடினார். மடத்தில் தீ அணைந்தது. ஆனால், மன்னன் பாண்டியனை வெப்பு நோய் தாக்கியது. மன்னன் மிகுந்த வேதனை அடைந்தான். வெப்பு தாங்காமல் பதறித் துடித்தான்.

     சமண முனிவர்கள் தங்கள் தவ வலிமையின் மூலமாக மயிற்பீலிகைகளால் மன்னன் உடலை வருடினர். அதுவும் தீயில் வெந்து கருகியது. அப்போது அரசி திருஞானசம்பந்தருக்கு நடந்தது பற்றி மன்னனுக்கு எடுத்துரைத்தார். அவர் வந்தால்தான் இதை தீர்க்க முடியும் என்றும் கூறினார்.

    உடனே மன்னன் “அவர் என் சூலை நோயைப் போக்கினால், நான் சமணத்தை விடுவேன். அவரை அழைத்து வருவீர்” எனக் கட்டளையிட்டான். அடுத்த கணமே அரசி மடத்துக்குச் சென்று, சம்பந்தரை வணங்கி நடந்ததைக் கூற, அவரும் அரண்மனை வந்தார். வந்து `மந்திரமாவது நீறு’ என்ற திருப்பதிகத்தைப் பாடினார். மன்னன் உடலில் திருநீறு பூசினார். மன்னனின் வெப்பு நோய் நீங்கியது. மன்னன் பலமுறை சம்பந்தருக்குத் தன் நன்றியைத் தெரிவித்தான்.

     

                                                                                

     பின்பு  சம்பந்தருக்கும் சமணர்களுக்கும் இடையே  நடந்த வாத போட்டியிலும்  சம்பந்தர் வென்றார். பின்னர் பாண்டிய மன்னன் சைவ சமயத்தை ஏற்று சிறப்பாக ஆட்சிசெய்தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ….?

     

    ஓம் நமசிவாய ……

     

  • தெய்வீக கதை: கிருஷ்ணர் நாரதர் உரையாடல்

     

    வாழ்க்கை என்ற ஒன்று இருக்கும் வரை இதுபோன்ற மாயை இருந்து கொண்டே இருக்கும். இதில் இருந்து விடுபட ஒரே வழி இறைவனைச் சரணடைவது தான்.

     நாரதர் ஒரு சமயம் கிருஷ்ணரைத் தரிசிக்கச் சென்றார். அவரை கிருஷ்ணர் ஆசீர்வதித்தார். இருவரும் உரையாடியபடியே உலாவச் சென்றார்கள்.

    அப்போது நாரதர், “”கிருஷ்ணா! உங்களுடைய மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்று சொல்கிறார்கள். அது உண்மைதானா? “தேவரிஷி’ என்று எல்லோரும் என்னை அழைக்கிறார்கள். பிரம்மத்தை (தெய்வத்தை) உணர்ந்த பிரம்ம ஞானியாகிய என்னை
    உங்களுடைய மாயை என்ன செய்யும்? மாயையால் நானும் பாதிக்கப்படுவேனா?” என்று கேட்டார்.

    அதைக் கேட்ட கிருஷ்ணர், நாரதரின் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், சற்று தூரத்திலிருந்த ஒரு குளத்தைச் சுட்டிக்காட்டி, “”நாரதரே! அதோ அந்தக் குளத்தில் மூழ்கி எழுந்து வாருங்கள்…” என்று கூறினார். கிருஷ்ணர் கூறியபடியே, நாரதர் தன் கையில் இருந்த “மகதி’ என்ற வீணையைக் குளக்கரையில் வைத்துவிட்டு, குளத்தில் சென்று மூழ்கி எழுந்தார்.

    மூழ்கி எழுந்தாரோ இல்லையோ, அவர் அழகிய இளம் பெண்ணாக மாறியிருந்தார்! “தான் நாரதர்’ என்ற பழைய நினைவுகள் அனைத்தும் அவருக்கு அறவே இல்லாமல் போயிற்று; குளக்கரையில் அவர் வைத்த வீணையும் இல்லை. கிருஷ்ணரும் அங்கு இல்லை.

    இப்போது நாரதப் பெண், குளத்தின் படிகளில் ஏறி மேலே வந்து கொண்டிருந்தாள். அந்த வழியாக அந்த நாட்டு அரசன், குதிரையில் வேகமாக வந்தான். அவன் இளைஞன், அழகானவன். நாரதப் பெண்ணை அவன் பார்த்தான். அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான்.

    “நான் இந்த நாட்டின் அரசன். உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன், உனக்குச் சம்மதமா?” என்று கேட்டான்.
    நாரதப் பெண் மவுனமாகத் தலையசைத்து, தன் சம்மதத்தைத் தெரிவித்தாள். 
    அரசன் அவளைத் தன்னுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.

     

    இருவருக்கும் முறைப்படி திருமணம் விமரிசையாக நடந்தது. இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு
    அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஒரு சமயம் பக்கத்து நாட்டு அரசன், இந்த நாட்டு அரசன் மீது போர் தொடுத்தான்.
    இருதரப்புக்கும் கடுமையாகப் போர் நடந்தது.

    போர்க்களத்தில் நாரதப் பெண்ணின் கணவன் கொல்லப்பட்டான். அதைத் தொடர்ந்து, நாரதப் பெண் இருந்த நாட்டின் தலைநகரைக் கைப்பற்றுவதற்கு பகைவர்கள் விரைந்து வந்தார்கள்.

    அப்போது வீரர்கள் சிலர், போர்க்களத்தில் இருந்து தப்பி அரண்மனைக்கு வந்து நாரதப் பெண்ணிடம், “”அரசியாரே! போரில் நமது
    அரசர் கொல்லப்பட்டார்! பகைவர்கள் அரண்மனையைக் கைப்பற்ற நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்கள்! உங்களையும், நமது அரச குமாரர்களையும் பகைவர்கள் சிறை பிடிப்பதற்குள் இங்கிருந்து நீங்கள் தப்பிச் சென்றுவிடுங்கள்,” என்று கூறினர்.

    நாரதப் பெண்ணும், குழந்தைகளுடன் அரண்மனையிலிருந்து தப்பி ஓடினாள். ஆனாலும், பகைவர்கள் இதை அறிந்து விட்டனர். அவளைத் தேடிச் சென்றனர். அவர்கள் தன்னைத் துரத்தி வரும் சப்தம் அவளுக்குக் கேட்டது. அவள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க வேக வேகமாக அருகிலிருந்த காட்டிற்குள் ஓடினாள்.

    விரைந்து ஓடியபோது, அவள் தன் மூத்த மகனின் கையைத் தவற விட்டாள். இப்போது அவள் தன் ஒரு குழந்தையை மார்போடு அணைத்தபடியே ஓடிக்கொண்டிருந்தாள். இதற்குள் பகைவர்கள் அவளை மிகவும் நெருங்கி விட்ட ஆரவாரம் கேட்டது. இதனால் பயந்து வேகத்தை அதிகரித்த போது, அவள் கையில் இருந்த குழந்தையும் தவறி கீழே விழுந்தது.

    குழந்தையை எடுக்க முடியவில்லை. பகைவர்களிடம் சிக்காமல் தப்ப கல்லிலும் முள்ளிலும் விழுந்தாள். அதனால் உடலில் பலமான காயங்கள் ஏற்பட்டன. நீண்ட தூரம் ஓடிய பிறகு, பகைவர்கள் துரத்தி வந்த சப்தம் கேட்கவில்லை. பகைவர்களிடமிருந்து தப்பியதை அவள் உணர்ந்தாள்.

    காட்டிலிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து தன் நிலையை நினைத்து அவள், “ஐயோ! என் நிலை இப்படி ஆகிவிட்டதே! நான் என் கணவரை இழந்துவிட்டேன்! குழந்தைகளையும் பறிகொடுத்து விட்டேன்…. நாட்டையும் பகைவர்கள் பிடித்து விட்டார்கள். ஆதரவற்ற அநாதையாக நான் இப்போது இருக்கிறேன். இனிமேல் நான் யாருக்காக உயிர் வாழ வேண்டும்? கல்லிலும் முள்ளிலும் அடிபட்டு உடல் முழுவதும் ஏற்பட்ட இந்தக் காயங்களின் வலியை என்னால் பொறுக்க முடியவில்லை. பசியும் தாகமும் என்னை வருத்துகின்றன!” என்று பலவாறு கூறி கதறி அழுதாள்.

    அப்போது கிருஷ்ணர் ஒரு முதியவர் வடிவத்தில் அங்கு வந்து, “அம்மா! நீ யார்? ஏன் இப்படி இந்தக் காட்டில் தனிமையில் அழுது கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். 
    நாரதப் பெண், தன்னுடைய அவல நிலையை அவரிடம் கூறி அழுதாள்.
    முதியவர் அவளிடம், “அம்மா! அதோ தெரியும் அந்தக் குளத்தில் நீராடி விட்டு வா! அதனால் உனக்கு நன்மை ஏற்படும்,” என்று தெரிவித்தார்.

    முதியவர் கூறியபடியே நாரதப் பெண் குளத்தில் மூழ்கி எழுந்தாள். உடனே நாரதப் பெண் உருவம் மாறி, பழைய நாரதர் வடிவம் கொண்டார். அவருக்கு நடந்தவை அனைத்தும் நினைவுக்கு வந்தன. 

    குளத்தின் படிகளில் ஏறி வந்த நாரதர், குளக்கரையில் தான் வைத்துச் சென்ற வீணையை எடுத்துக் கொண்டார். சற்று தூரத்தில் கிருஷ்ணர் நின்று கொண்டிருப்பதையும் பார்த்தார்.
    நடந்ததையெல்லாம் நாரதர் நினைத்துப் பார்த்த படியே கிருஷ்ணரிடம் சென்று, “”பகவானே! நான் கர்வம் கொண்டதற்கு என்னை மன்னியுங்கள். உங்கள் மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்பது உண்மை தான். மாயைக்கு நான் ஒருபோதும் வசப்படாமல் இருக்க
    வேண்டும் என்று என்னை ஆசீர்வதியுங்கள்,” என்று வணங்கிக் கேட்டுக்கொண்டார்.

    கிருஷ்ணரும் நாரதரின் பிரார்த்தனையை ஏற்று ஆசீர்வதித்தார்.

    வாழ்க்கை என்ற ஒன்று இருக்கும் வரை இதுபோன்ற மாயை இருந்து கொண்டே இருக்கும். இதில் இருந்து விடுபட ஒரே வழி இறைவனைச் சரணடைவது தான்.

    தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா!
    மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே!!.

    “முக்குணங்களால் ஆகிய என்னுடைய இந்த மாயை தெய்வீகமானது, யாராலும் கடக்க முடியாதது. ஆனால் யார் என்னையே சரணடைகிறார்களோ, அவர்கள் இந்த மாயையைக் கடக்கிறார்கள். ”

  • மந்திராலய மகானை தரிசிப்போம்

     

    “பூஜ்யாய  ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச 

     பஜதாம் கல்பவ்ருட்சாய நமதாம் காமதேனவே”

     

    “சத்தியமும், தர்மமும்,பக்தியும் உண்மையானால் ,ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளிடம் கேட்பது கிடைக்கும்”            

         

    உலக ஷேமத்தின் பொருட்டு யுகங்கள்தோறும் மகான்கள் அவதரிக்கிறார்கள்.இறைவனே தன்னுடைய அடியவர்களுக்காக மகான்களாக அவதரிக்கிறார்.

    அப்படியாக, கலியுக கல்பக விருட்சமாகவும்,கேட்டவர்களுக்கு கேட்ட வரம் அருளும் காமதேனுவாக ராகவேந்திர சுவாமிகள் அவதரித்தார். தன்னை நோக்கி வரும் அபயக் குரலுக்கு  ஓடோடி வந்து அருள் புரியும் அந்த மந்திராலய மகானைப் பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டாமா?.           

      தான் பெற்ற எண்ணிலடங்கா வரத்தினால் மக்களை வாட்டி வதைத்த , இரண்ய கசிபுவை சம்ஹாரம் செய்ய பகவான் எடுத்த அவதாரம் தான் நரசிம்மாவதாரம்.  இந்த அவதாரத்திற்கு முக்கிய காரணகர்த்தாவான பிரஹ்லாத ராஜனின்  மறுபிறவியே ஸ்ரீ வ்யாசராஜர்  எனப்படுகிறார். அவரின் மறுபிறவியே ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள். துங்கபத்ர நதிக்கரையில் அமைந்துள்ள புண்ய க்ஷேத்ரமான மந்திராலயத்தில் இந்த மகானின் ஜீவசமாதி அமைந்துள்ளது.

     விஜயநகர சாம்ராஜ்யத்தில் சிறந்த வீணா வித்வானாகவும், சிறந்த கவிஞராகவும் விளங்கியவர் கிருஷ்ண பட்டர். கர்நாடக மாநிலத்து மாத்வ பிராமணரான  இவரது மகன் கனகாசலபட்டரும் ,சங்கீதத்திலும் சாஸ்திர ஞானங்களிலும் சிறந்து விளங்கியவர்.

      தன்னுடைய மூதாதையரைப் போலவே ,கனகாசல பட்டர் தம்பதிகளுக்குப் பிறந்த திம்மண்ண  பட்டரும்  கல்வி கேள்விகளிலும்  வீணை வாசிப்பதிலும் சிறந்து விளங்கினார்.

    ஆனால் தன் மூதாதையரைப் போல் இல்லாமல் ,திம்மண்ண பட்டரால்  அரசவையில்  சிலகாலமே இருக்க முடிந்தது. 1565-ல் நிகழ்ந்த தலைக்கோட்டைப் போரினால் ஏற்பட்ட அழிவினால் விஜயநகரத்தை விட்டு  திம்மண்ண பட்டர் குடும்பத்துடன் நகரத்தை விட்டு வெளியேறி கும்பகோணம் ஸ்ரீமடத்தில் சேர்ந்தார்.  தனது மகளின் திருமணம் மற்றும் மகன் குருராஜனின் உபநயனம் முடித்து  தம்பதிகள் இருவரும் ஸ்ரீனிவாசனை தரிசிக்க திருமலை சென்றனர். தங்களின் இந்த தனிமைத்துயர்  நீக்க ஒரு மகன் வேண்டும் என்று மனமுருகி பிரார்த்தித்தனர்.

    இவர்களின் கனவில் தோன்றிய மலையப்ப தெய்வம்,உலகமே போற்றும் உத்தமனே அவர்களுக்கு மகனாகப் பிறப்பான் என்று வரமருளினார் .

     திம்மண்ணரின் மனைவி கோபிகாம்பாள் கர்ப்பவதியானாள். கி.பி.1595ஆம் ஆண்டு குருவாரத்தில் ,மிருகசீரிஷ  நட்சத்திரத்தில் காண்பவர் வணங்கத்தக்க தேஜஸ்வியான ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார்.

     

    மகானின் சரித்திரம் தொடரும்…..

     

     

  • இந்தியாவின் மிகப்பெரிய திருவாரூர் தியாகராஜர் கோயில்

    365 லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய திருவாரூர் தியாகராஜர் கோயில்

    கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று.

    திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார்.

    *இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்*

    *தியாகராஜர்* என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள்.

    *தியாகராஜர்* கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது.

    *9 ராஜ கோபுரங்கள்*

    *80 விமானங்கள்*

    *12 பெரிய மதில்கள்*

    *13 மிகப்பெரிய மண்டபங்கள்*

    *15 தீர்த்தக்கிணறுகள்*

    *3 நந்தவனங்கள்*

    *3 பெரிய பிரகாரங்கள்*

    *365 லிங்கங்கள்* 
    (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்),

    *100க்கும் மேற்பட்ட சன்னதிகள்*

    *86 விநாயகர் சிலைகள்*

    *24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள்* என பிரமாண்டமாக விளங்குகிறது.

    இக்கோயிலை பெரியகோயில் என்றும் சொல்வர்.

    *திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள்*

    *3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு.*

    கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், 
    முன்காலத்தில்,

    திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

    *தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது.*

    *இந்திரன் பூஜித்த, சிறிய மரகதலிங்கத்திற்கு*
    *(வீதி விடங்க லிங்கம்) தான் காலை 8.30, 11மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும்.*

    *அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த “லிங்கம்” வைக்கப்படும்*.

    *அதன் மேல் வெள்ளி குவளை சாற்றி, அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும்*.

    *மற்ற நேரங்களில்*, 
    *பூட்டிய இந்த பெட்டி *தியாகராஜரின்* *வலதுபுறத்தில் இருக்கும்.*

    *திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும்.*

     

  • செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்

     

    செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் அளிக்கும் மிகச் சக்தி வாய்ந்த யந்திரத்தில் மந்திரப் பிரயோகம் செய்து வைத்தீஸ்வரன் கோவிலில் பிரதிஷ்டை செய்து வைத்தனர்.

    இந்தியாவில் கிரக, விஞ்ஞான பூர்வமான ஆகர்ஷண சக்திகள் வாய்ந்த பல ரகசியங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் விந்திய மலை. இம்மலைத் தொடருக்கு தெற்கில் உள்ள பூமி, அங்கார பூமி என்றும், இங்கு செவ்வாயின் தோஷம் அதிக அளவில் ஏற்படாது என்றும் புராதன நூல்களில் கூறப்பட்டுள்ளன.

    இதற்கு காரணம், செவ்வாயின் சாரப்பாதையில் இருந்து விந்திய மலைக்கு தெற்கே உள்ள பூமிப்பகுதி, விலகி இருப்பதே. இந்த உண்மையை அறிந்த நமது பெரியோர்கள், செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் அளிக்கும் மிகச் சக்தி வாய்ந்த யந்திரத்தில் மந்திரப் பிரயோகம் செய்து வைத்தீஸ்வரன் கோவிலில் பிரதிஷ்டை செய்து வைத்தனர்.

    சீதையைத் தேடிக்கொண்டு, தம்பி லட்சுமணனுடன் வனவாசம் வந்த ஸ்ரீ ராமபிரான், சீதா தேவியை ராவணனிடம் இருந்து காப்பாற்றுவதற்காக போரிட்டு, உயிர் துறந்த ஜடாயுவுக்கு, திருப்புட்குழி என்ற புண்ணிய தலத்தில் அந்திம தகனக் கிரியைகளைத் தன் தொடை மேலேயே செய்துவிட்டு, அதற்குப்பின் செய்ய வேண்டிய தினச்சடங்குகளை வைத்தீஸ்வரன் கோவிலில் செய்ததால், மேலும் இத்திருத்தலம் புனிதம் பெற்று, புள்ளிருக்கும் வேளூர் எனச் சிறப்புப் பெயருடன் திகழலாயிற்று.

     

    மேலும், அங்காரகன் என்று புகழ்பெற்ற செவ்வாயும் இத்திருத்தலத்தில் ஒரு சமயம் தவம் செய்ததால், செவ்வாய் தோஷ பரிகார பலம் இந்த சேத்திரத்திற்கு மேலும் அதிகமாயிற்று.
    செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் திருக்கோவிலுக்கு வந்து, இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, இறைவனையும், வணங்கி, தனிச்சன்னதியில் எழுந்தருளி இருக்கும் செவ்வாய்க்கு தீபம் ஏற்றி, தரிசனம் செய்ய எத்தகைய கடுமையான செவ்வாய் தோஷமும் நீங்கும்.
    ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அவரின் உடலில் ரத்தத்தின் ஆற்றல் மிக குறைவாக இருக்கும். அல்லதுஅவரின் எலும்பு பகுதி ஏதாவது பாதிப்புகள் இருக்கும். 
    செவ்வாய்க்கு பரிகாரம் செய்யும் தலமாக விளங்குவது வைத்தீஸ்வரர் கோயில். இக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் அமைந்துள்ளது.
    வைத்தீஸ்வரர் கோவில் செவ்வாய்க்கு தோஷத்திருக்கு மட்டும் அல்லாது மருத்துவம் சார்ந்த நோய்களை போக்கும் கோவிலாகவும் உள்ளது. இங்கு மிகும் பிரத்சிதி பெற்றது நாடி ஜோதிடம். ஆதலால் இங்கு வரும் பக்தர்கள் நாடி ஜோதிடத்தை அதிகமாக நம்புகின்றனர். திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர் தேவாரத்தை பாடி இறைவனை வழிபட்டனர்.

    ஈசன் மற்றும் அம்பிகை :
    ஈசனின் பெயர் வைத்தீஸ்வரர் பெருமாள், அம்பிகையின் பெயர் தையல்நாயகி. மேலும் இத்திருகோவிலில் உள்ள ஈச பெருமான் சுயம்புவாக எழுந்தருளி மூலிகை தைலத்துடன் உள்ளார். வைத்தீஸ்வரர் என்ற பெயருக்கு மருத்துவர் என்ற பெயரும் உண்டு.
    கோவில் வரலாறு :
    செவ்வாய் கிரகத்திருக்கு மிகவும் கொடுமையான “தொழுநோய்’’ வந்ததாகவும் அதனை போக்க சிவ பெருமானே தானாக தோன்றி அவருக்கு மருத்துவம் பார்த்து குணமடைந்ததால் செவ்வாய் ஈச பெருமானின் அருகில் உள்ளத்தால், இத்திருக்கோவில் செவ்வாய் கிரகத்திற்கு மிகவும் சிறப்பாக உள்ளது.

    ஒருமுறை ராவணன் சீதையை கானகத்தில் இருந்து தூக்கி கொண்டு போகும் பொது , ராவணனை தடுத்த சடாயுவை ராவணன் கொன்றான். அப்போது சடாயுவின் உடல் கீழ் விழுந்தது. அதனை கண்ட ராமன் மற்றும் அவர் தமையன் இலக்குமணன் உடலை கண்டு அந்த உடலுக்கு சிதை மூட்டி எரித்தனர். இந்த சிதை இக்குளத்திற்கு அருகாமையில் உள்ளது. ஆதலால் இக்குளம் “சடாயு குளம்’’ என்று அழைக்கப்படுகிறது.
    அது மட்டும் அல்லாது இந்த கோவிலின் மட்டற்ற பெருமை சித்தர்கள் பாற்கடலில் கலந்த அமிர்தத்தால் அபிஷேகம் சேயும் போது அந்த அம்ரிதம் சிதறி குளத்தில் விழுந்தது. ஆதலால் இத்திருக்குளம் “சிதர்கள் அம்ரிதா தீர்த்தம்’’ என்ற பெயர் பெற்றது.

     

    கோவிலின் சிறப்பம்சம் :
    இத்திருக்கோவிலில் உள்ள கோபுரங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்து உள்ளது. அது மட்டும் அல்லது கோவிலில் நவகிரஹம் ஈசனின் பின் உள்ளது. 
    இந்த திருகோயில் ஆனது பதினாறு தீர தளங்களில் ஒன்று. இந்த கோவிலில் அணைத்து நோய்களும் தீர்வாக உள்ளது. இங்கு வைத்தீஸ்வரர் கோவில் என்பதால் தன்வந்திரி உள்ளார்.
    மேலும் இத்திருகோவிலில் உடம்பில் கட்டிகள், முகபரூ மற்றும் நோய் ஆகியாவை இத்திருகோவிலில் தரும் எண்ணயை வாங்கி குணம் பெறுகின்றனர். வைத்தீஸ்வரர் கோவிலில் தான் தன்வந்திரி ஜீவ சமாதி ஆனார்.
    சுமார் ஐந்து ஆயிரம் நோய்களை குணபடுத்தும் வல்லமை பெற்றது இத்திருத்தலம். மேலும் இத்தலத்தில் கொடுக்கப்படும் திருசாந்து உருண்டை மிகும் பிரசித்தி பெற்றது. இந்த உருண்டை வேம்பு, சந்தனம் மற்றும் திருநீறு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டது. இவை அனைத்தும் எம்பெருமானுக்கு ஆகும்.

    இத்தலத்தின் மற்றொரு சிறப்பு இந்த கோபுர வாசலில் ஆதி சிவன் உள்ளார். இந்த சிவனை வழிபட்டால் ஆயிரம் சிவனை வழிபட்டதற்கு சமம் என்பது ஆன்றோர் வாக்கு.

  • சண்டிகேஸ்வரரும் நந்தியும் – தெரிந்த விஷயம் , தெரியாத உண்மை

     

    நம்மில் பலரும், சிவன் கோவிலுக்கு சென்றால் ,ஈசனை  தரிசனம் செய்து விட்டு பிரகாரம் சுற்றி வரும்போது, துர்க்கை சன்னதிக்கு அருகில் இருக்கும்  சண்டிகேஸ்வரரை  தவறாமல்  வணங்கி வருவோம். மற்ற சன்னதியில் உள்ள தெய்வங்களை கை கூப்பி வணங்கும் நாம்  சண்டிகேஸ்வரரை மட்டும் ,சொடக்கு போட்டோ அல்லது பலமாக கைதட்டியோ தான் வணங்குவது வழக்கம்.  

    ஆனால் உண்மையில் அவரை அப்படி வணங்க கூடாது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். சண்டிகேஸ்வரர் எப்போதும்  சிவ தியானத்தில் இருப்பவர். சிவனிடமே ஈஸ்வர பட்டம் பெற்ற இவர், கோயிலுக்கு வரும் பக்தர்கள், என்னென்ன கோரிக்கை வைத்தார்கள் என சிவனிடம் கூறுவதாக ஐதீகம். எனவே சிவனை வணங்கிவிட்டு இவரை வணங்கும் போது, மிக மெதுவாக மூன்று முறை நமது கையைத் தட்டி, வந்தேன்…வந்தேன்…வந்தேன்… சிவனின் தரிசனம் கண்டேன்… கண்டேன்.. கண்டேன்…என கூற வேண்டும். அப்படி வணங்கும் போது  சண்டிகேஸ்வரர் நாம் வந்திருப்பதை அறிந்து, நமக்காக சிவனிடம் சிபாரிசு செய்து  உடனே நமது கோரிக்கையை  நிறைவேற்றிக் கொடுப்பார் என்பது நம்பிக்கை.

     

    அதே போல் சிவாலயங்களில் நந்தி காதுகளில் ரகசியம் சொல்வதும் நம்மிடம் உள்ள பழக்கம்.

    சித்தர்கள் மலைகளில், பூமியில் உள்ள வித்தியாசமான பாறைகளை தேர்வு செய்து அவைகளை லிங்கமாக ,நந்தியாக உண்டாக்கி வழிபாடு செய்தனர் என்பது நாம் அறிந்தது .

    அரசர் ஒருவர்  சித்தர் நெறிகளை உடைய ஒருவரை  தம் கோவிலுக்கு அழைத்து வந்தார்.  32 லக்ஷனமும் அருமையாக ஒன்று சேர்ந்த ஒரு நந்தி சிலைக்கு ,கருவூரார் சித்தரை நினைத்து நந்தியின் காதுகளில் அவர் மந்திரம் சொல்ல நந்தி அசைந்து எழுந்தது . மன்னனும் மக்களும்  , வியந்து  அதிசயப் பட்டனர். உயிர் பெற்ற அந்த நந்தி கோவிலை விட்டு வெளியை சென்றது . வேடிக்கை பார்த்த மக்களும்  பரவசம் அடைந்து பின்னே சென்றனர் . பசி எடுத்த நந்திஅருகே இருந்த  வயல் மற்றும்  தோப்புகளில் நுழைந்து பயிர்களை உண்ணத் தொடங்கியது. மக்கள் அச்சம் அடைந்து அரசனிடம் முறையிட்டார்கள். பிரச்னை உணர்த்த அரசன் சித்தரிடம் கல் நந்தியை மீண்டும் கல்லாக்கி விட வேண்டும் என்று வேண்டினார். சித்தர் கல் நந்தியை பிடித்து வர சொல்லி அதன் காதுகளில் மந்திரம் சொல்ல அது மீண்டும் கல்லானது . பிறகு அதன் கால்களின் குழம்பில் ஒரு நகத்தை பேர்த்து எடுத்தார் . 32 லக்ஷணத்தில் 1 குறைந்தபடியால் அது கல்லாகி போனது . நந்தி மீண்டும் உயிர் பெறாது என்று உறுதி கொடுத்து வனம் சென்றார்.

    அவர் நந்தியின் காதுகளில் ஏதோ சொன்னார் , நாமும் அப்படி சொல்ல வேண்டும் என்று மக்கள் நினைத்த விளைவு தான் இன்றும் நந்தியின் காதுகளில் அவர்கள் குறைகள் ,தேவைகளை சொல்கிறார்கள் .

    ஓம் நம சிவாய …..

  • லலிதையே போற்றிய விஷ்ணு சஹஸ்ரநாமம்

     

    சொல்லுக்கு கலைமகள், வில்லுக்கோர் விஜயனைப் போல . ‘சஹஸ்ரநாமம்’ என்று சொன்னாலே அது விஷ்ணு சகஸ்ரநாமத்தைத் தான் குறிக்கும் . அந்த அளவிற்கு விஷ்ணு சகஸ்ரநாமம் பெருமை பெற்றது,மகத்துவம் வாய்ந்தது.

    ஒரு முறை ஆதிசங்கரர் ,தம் சிஷ்யரை அழைத்து, புஸ்தக பாண்டாகாரத்திலிருந்து லலிதா சஹஸ்ரநாமத்தை எடுத்து வரும்படி ஆணையிட்டார். அதற்கு பாஷ்யம் செய்ய வேண்டும் என்று அவர் விருப்பப்பட்டார்.

    சிஷ்யரும் ஆச்சாரியாரின் ஆணையை ஏற்று  அங்கிருந்து போனார். சற்று  நேரம் கழித்து அவர்  விஷ்ணு சஹஸ்ரநாமத்தை கொண்டு வந்து கொடுத்தார்.

    ஆச்சாரியாரும் “நான் இதைக் கேட்கலையே…நான் கேட்டது லலிதா சஹஸ்ரநாமம் அல்லவா..?நீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கொண்டு வந்திருக்கியே…?” என்று சிஷ்யரைத் திரும்பவும் அனுப்பினார். திரும்பவும் சிஷ்யர் எடுத்து வந்தது விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்தது!

    அப்போது சங்கரர் சிஷ்யரிடம், “நான் சொல்வது என்ன, நீ செய்வது என்ன…?”என்று கேட்டார்.

    ‘சுவாமி!  நான் என்ன செய்வேன்? அங்கே போய் லலிதா ஸஹஸ்ரநாமத்தை எடுக்கணும்னு கையை வைச்சா, ஒரு சின்ன கன்யா பெண் வந்து நின்னுண்டு, அதை வைச்சிடு,இதை எடுத்துண்டு போ’ன்னு சொல்கிறாள். நான் என்ன செய்வேன்…?” என்றார் சிஷ்யர்.

    அப்போது ஆதிசங்கரர் தம் திருவுள்ளத்திலே இதைப் பற்றி தியானிக்க,அந்த அம்பிகையே இங்கு குழந்தையாய் வந்து, அந்த எம்பெருமான் நாராயணனுடைய திருநாமத்துக்கு பாஷ்யம் பண்ணும்படியாய் நம்மை நியமிக்கிறாள்..என்று தெரிந்துக் கொண்டார்.

    அதன் பிறகு அன்னையின் கட்டளைப்படி விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணினார். இப்படி லலிதையே போற்றும்படியானது விஷ்ணு சஹஸ்ரநாமம்.

    இவ்வளவு ஏற்றம் பெற்ற இந்த சஹஸ்ரநாமம் முதலில் சொல்லப்பட்டது யாராலே…?

    அம்புப் படுக்கையில் இருந்தார் பீஷ்மர். தர்மபுத்திரரை அவரிடம் அழைத்துச் சென்றார் பகவான் கிருஷ்ணர்.

    “அணையப் போகும் நெருப்பைப் போலே இருக்கிறார் பீஷ்மர். அவர் போனால், தர்மத்தைச் சொல்ல இங்கு யாரும் இல்லை, போ!  அவரிடம் தர்மத்தைப் பற்றி கேள்” என்று தர்மபுத்திரரை அனுப்பினார்.

    பகவானே பீஷ்மர் அம்புப் படுக்கையிலே இருந்தபடி சொன்ன அந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கேட்டார். கீதை சொன்ன பகவானே  சஹஸ்ரநாமம் கேட்டார்.

     ‘பகவத் குண தர்ப்பணம்’என்ற விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்தை பராசர பட்டர் செய்திருக்கிறார்.

     ‘பகவானுடைய திருக்கல்யாண குணங்களைக் காட்டக் கூடிய கண்ணாடி’ என்று அதற்கு பொருள்.

    விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது இறைவனின் கல்யாண குணங்களை தெரிவிக்கும்படியான திரு நாமாக்கள். அனுதினம் இறைவன் சந்நிதியில் விளக்கேற்றி சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வந்தால் குடும்பத்திலே சண்டை, கலகம் இருக்காது. சர்வ சம்பத்தும் வந்து சேரும். துர்தேவதைகள் நம் இல்லத்தில் பிரவேசிக்காது என்கிறார்கள். கீதைக்குச் சமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தை  நாமும் அனுதினமும் பாராயணம் செய்து இறைவனின் திருவடி தொழுவோம்.

    ஓம் நமோ நாராயணாய …..