Blog

  • விநாயகரின் பெருமைகள்!

    ஹோமங்கள் நடைபெறும் பொழுது, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையைத் தொடங்குவர்.

    வீடுகளில் மண்ணில் பிள்ளையார் செய்து, அதில் வண்ணம் தீட்டியும் வழிபாட்டுக்கு வைத்துக்கொள்வர். வெண்கலப் பிள்ளையார், வெள்ளிப் பிள்ளையார், வெள்ளைப் பிள்ளையார், வேப்பமரப் பிள்ளையார், வெள்ளருக்குப் பிள்ளையார் என்று பலவகை பிள்ளையார்களை மக்கள் வழிபடுவது வழக்கம். எந்த வகைப் பிள்ளையாருக்கு என்ன பலன் என்பதைப் பற்றியும், முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    மஞ்சள் பிள்ளையாரை வழிபட்டால் திருமணத் தடை அகலும். வீட்டில் மங்கல ஓசை கேட்கும். மண்ணால் ஆன பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபட்டால் அரச பதவி கிடைக்கும். அரசாங்க வேலை அமையும். புற்றுக்கு அருகில் இருக்கும் பிள்ளையாரை வழிபட்டால் வியாபார விருத்தி ஏற்படும். வேப்பமரத்தடியில் இருக்கும் பிள்ளையாரை வழிபட்டால் வெற்றி உண்டாகும். அரசமரத்தடியின் கீழ் இருக்கும் பிள்ளையாரை வழிபட்டால் வாரிசு உருவாகும். கண்திருஷ்டி கணபதியை இல்லத்து முகப்பில் வைத்தால் திருஷ்டி தோஷம் போக்கும்.

    விநாயகருக்கு உகந்த ஆறு விரதங்கள்
    விநாயகர் சதுர்த்தி விரதம், குமாரசஷ்டி விரதம், சித்திவிநாயகர் விரதம், செவ்வாய்க்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம், சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆகியவை விநாயகரை வழிபடக்கூடிய விரதங்கள் ஆகும்.
    ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தியில் தொடங்கி புரட்டாசி மாதம் சுக்லபட்ச சதுர்த்தி வரை விநாயகரை மனதில் நினைத்து அனுஷ்டிக்கப்படும் விரதத்திற்கு விநாயகர் சதுர்த்திவிரதம் எனப்படு கிறது. இந்த விரதத்தை மேற்கொள்வதால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

    வலை போக்கும் கணபதி ஜாதகம்
    தெய்வங்கள் எல்லாவற்றிற்கும் ஜாதகங்கள் இருக்கின்றன. அதில் கணபதி ஜாதகத்தைக் கையில் வைத்துக்கொண்டாலோ, பூஜையறையில் வைத்து வழிபட்டாலோ எண்ணிய காரியங்கள் எளிதில் கைகூடும். கணபதிக்கு அருகில் ஜாதகத்தை வைத்து கணபதி காயத்ரியைச் சொல்லி வழிபடுவது நல்லது.

  • எட்டு வகையான கிருஷ்ணர்கள்

     ஸ்ரீகிருஷ்ணர் எட்டு வகையாக உருவகப்படுத்தி வணங்கப்படுகிறார். அந்த 8 வகையான கிருஷ்ணரை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

    1. சந்தான கோபால கிருஷ்ணன்: யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம். 

    2. பாலகிருஷ்ணன்: தவழும் கோலம். ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னதிகளிலும் பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம். 

    3. காளிய கிருஷ்ணன்: காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன்.

    4. கோவர்த்தனதாரி: கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.

    5 .ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்): வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன். 

    6. முரளீதரன்: கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது. 

    7. மதனகோபாலன்: அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணன். 

    8. பார்த்தசாரதி: அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

  • ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

    பகவான் விஷ்ணுவின் தசாவதாரம் நமக்கு பல செய்திகளை தாங்கியுள்ளது. பரசுராமர் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று வாழ்ந்து கட்டியவர்.நரசிம்மர் தன்னை நோக்கி கூப்பிடுபவர் யாராக இருந்தாலும்,எந்த நேரத்திலும்,எங்கிருந்தும் தோன்றக் கூடியவர் என்ற நம்பிக்கையை பக்தர்களின் மனதில் விதைத்தவர். ராம அவதாரமோ ஒருவனுக்கு ஒருத்தி என்ற மிகப்பெரிய  வாழ்க்கை தத்துவத்தை உலகிற்கு உணர்த்தியது. இவை எல்லாவற்றையும் விட ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தை மனதில் நினைக்கும் போதே குதூகலமும் ,உற்சாகமும் நம்முள் கரைபுரளும். அந்த அளவிற்கு தனது சுட்டித்தனமான லீலைகளாலும், குறும்பான விளையாட்டுக்களாலும்  நம் மனதை கொள்ளைக்கொண்டவன் அந்த கோகுல கண்ணன்.

    அவதார நோக்கம் என்னவோ, கம்சன் என்ற அசுரனிடமிருந்து மக்களை காக்க  தான் எனினும் அந்த காலகட்டத்தில் எதைப் பற்றியும் கவலையில்லாமல் ஆடிப்பாடி தானும் மகிழ்ந்து இருந்து, தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் சந்தோஷமாக வைத்துக்கொண்டவன் அந்த கண்ணன்.  அந்த தீராத விளையாட்டுப் பிள்ளை அவதரித்த தினமே ஸ்ரீ  கிருஷ்ண ஜெயந்தி.

    ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் ,அஷ்டமி ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணரின் படமோ அல்லது  சிலையோ  நன்றாக அலங்கரிக்கப்பட்டு . கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களான  வெண்ணெய், அவல் , பால் , திரட்டுப்பால் , பழங்கள், தயிர் , வெல்ல சீடை ,கார சீடை , கார வகைகள் நைவேத்தியம் செய்யப்படுகிறது. குசேலர் அளித்த ஒரு பிடி அவலுக்கு பதிலாக,பகவான் கிருஷ்ணர் செல்வத்தை அள்ளி தந்ததால் இந்தக் கொண்டாட்டத்தில் அவல் முக்கிய இடம் பிடிக்கிறது.கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, பாலக் கண்ணனின் கால் பாதங்களை வரைவார்கள்.

    சந்தான கோபால கிருஷ்ணனாக ,யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம் பார்ப்பவர் மனதை கொள்ளைக்கொள்ளும். ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று அந்த சந்தான கோபால கிருஷ்ணனை  வணங்குபவர்களுக்கு, அவனைப் போலவே அழகான  புத்திர பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. ஆலயங்களில்  மட்டுமின்றி பலரது வீட்டில் பூஜை அறையிலும்  காணப்படும் ,கிருஷ்ணனின் தவழும் கோலமான பாலகிருஷ்ணன் அவரின் அடுத்த கண்கொள்ளா காட்சியாகும்.  வளரும் பருவத்திலேயே காளிங்கன் என்ற நாகத்தின் கர்வத்தை அடக்கி,அதன் மீது நர்த்தனம் புரிந்தவன்  காளிய கிருஷ்ணன். வாலிப பருவத்தில் , கேளிக்கை விளையாட்டுக்கள் இருந்தாலும் ,தன் மக்களை இந்திரன் தண்டிக்க அனுப்பிய, அடாது மழையில் இருந்து அவர்களை காக்க கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கி ரட்சித்தான்.ராதா-கிருஷ்ணனாக தன் முன் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவன்.  ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் கிருஷ்ணன் நின்றிருக்கும் முரளீதர திருக்கோலம் தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது. அஷ்ட புஜங்களை காட்டி  குழலூதும் மதனகோபாலன் கன்னியரின் தூக்கத்தைக் களைத்தவன்.பார்த்தனுக்கு சாரதியான அந்த  பார்த்தசாரதி,அர்ஜுனனுக்கு கீதை உபதேசித்து பார்த்தனுக்கு தத்துவ ஞானியாய் காட்சியளித்தவன்.

    மக்களின் நாயகனாக விளங்கும் அந்த கோபால கிருஷ்ணனின்  ஜென்மாஷ்டமியை கொண்டாடி மகிழ்வோம்.

  • குழந்தை ரூபத்தில் அருள்பாலிக்கும் கிருஷ்ணர் கோவில்

    குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் குழந்தை ரூபத்தில் அருள்பாலிக்கும் கிருஷ்ணர் சிறப்பு வாய்ந்தவராக திகழ்கிறார்.

    கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலை போன்று குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் குழந்தை ரூபத்தில் அருள்பாலிக்கும் கிருஷ்ணர் சிறப்பு வாய்ந்தவராக திகழ்கிறார்.

    இக்கோவிலின் மூலஸ் தானத்தில் கிருஷ்ணர் குழந்தை வடிவில், இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கிருஷ்ண ஜெயந்தியன்று நள்ளிரவில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். அப்போது சுவாமி விசேஷ அலங்காரத்தில் தத்ரூபமாக குழந்தை போலவே காட்சியளிப்பார். மறுநாள் உறியடி உற்சவம் நடக்கும். உற்சவர் ராஜகோபாலர் ருக்மிணி மற்றும் சத்யபாமாவுடன் காட்சி தருகிறார். மகா விஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த போது, அவரது குழந்தை பருவத்தில் கிருஷ்ணர் என்றும், பசுக்களை மேய்க்கும் இளைஞனாக இருந்த போது ராஜகோபாலர் என்றும் அழைக்கப்பெற்றார். 

    இதன் அடிப்படையில் இங்கு மூலவராக கிருஷ்ணரையும், உற்சவராக ராஜ கோபாலரையும் வடித்துள்ளனர். மூலஸ்தானம் எதிரி லுள்ள கொடிமரத்தைச் சுற்றி லும், அஷ்டதிக் பாலகர் களின் உருவம் பொறிக்கப்பட் டிருக்கிறது. முன் மண்டபத்தில் கருடாழ்வார் இருக்கிறார். நம்மாழ்வார், பெரியாழ்வார், விஸ்வக்சேனர் ஒரே சன்னதியில் காட்சி தருகின்றனர். 

    பிரகாரத்திலுள்ள காவல் தெய்வமான பூதத்தான், மரத்தாலான ஒரு தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார். பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் இருக்கும் பகுதி ஆதித்தவர்ம மகாராஜா ஆட்சி காலத்தில் அவரது எல்கைக்கு உட்பட்டு இருந்தது. 

    குருவாயூரப்பனின் பக்தரான இவர், தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் குருவாயூரப்பனுக்கு கோவில் எழுப்ப ஆசைப்பட்டார். அவ்வேளையில் கிருஷ்ணர், கையில் வெண்ணெயுடன் குழந்தைக் கண்ணனாக அவனது கனவில் காட்சி தந்தார். குறிப்பிட்ட இடத்தில், தனக்கு கோவில் எழுப்பும்படி கூறினார். 

    அதன்படி கோவில் கட்டிய மன்னன், தான் கனவில் கண்ட வடிவத்திலான கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தான். சுவாமிக்கு நவநீத கிருஷ்ணர் (நவநீதம் என்றால் வெண்ணெய்) என திருநாமம் சூட்டினான். 

    இக்கோவிலில் தினமும் காலை 5.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 

    தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, குழந்தை கிருஷ்ணரை வெள்ளி தொட்டிலில் கிடத்தி, தாலாட்டு பாடி பூஜிக்கின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு கிருஷ்ணருக்கு வெண்ணெய் காப்பு செய்வித்து, பால்பாயாசம், உன்னியப்பம், பால், பழம், அரிசிப்பொரி, வெண்ணெய், அவல், சர்க்கரை படைக்கின்றனர். 

    சித்திரை பிரம்மோற்ஸவத்தின் நான்காம் நாளில் கிருஷ்ணர் கையில் வெண்ணெய் பானையுடன், வெண்ணெய்த்தாழி உற்சவம் காண்கிறார். இவ்விழாவின் ஏழாம் நாளில் இவர் இந்திர வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் விசேஷமாக நடக்கும். சித்ரா பவுர்ணமியன்று கிருஷ்ணர், இங்குள்ள பழையாற்றுக்கு சென்று ஆராட்டு வைபவம் காண்பார். 

    ஆடி கடைசி சனிக்கிழமையன்று( நாளை) இவருக்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது. அன்று மூலஸ்தானம் முழுவதும் மலர்களால் நிரப்பி, சுவாமியின் முகம் மட்டுமே தெரியும்படியாக அலங்கரிப்பர். இவ்வேளை யில் சுவாமியை தரிசித்தால் மன நிம்மதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

  • குளத்தில் கண்டெடுக்கப்பட்ட ஸ்ரீ சிவவீர ஆஞ்சநேயர்

    குளத்தில் கண்டெடுக்கப்பட்ட வரப் பிரசாதி போரூர் ஸ்ரீ சிவவீர ஆஞ்சநேயர்,மூல நட்சத்திரத்தின் மூலவரான அனுமனுக்கு மார்கழி மாதத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடுவது வழக்கம். 

    ஸ்ரீ சிவ ஆஞ்சநேயர் திருக்கோவில் சென்னை, கிண்டி பூந்தமல்லி சாலையில் போரூர் காரம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இங்கு கடந்த மாதம் 21 ஆம் தேதியிலிருந்து 27 நட்சத்திரங்களுக்கும் சகசர நாமம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சென்ற 17 ஆம் தேதியிலிருந்து அனுமனுக்கான லட்சார்ச்சனை ஆராதனையும் அபிஷேகமும் நடைபெற்றது. நேற்று அனுமன் பஞ்சமுக தொற்றத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சைவ, வைணவ சங்கமமாய் விளங்கும் இத்தலத்தின் வரலாறு கேட்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

    கோயிலின் வரலாற்றுக்கு செல்வோம்….
    மந்திராலய மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் முந்தைய அவதாரமான ஸ்ரீ வியாசராஜ தீர்த்தரால் சென்னையில் போரூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆஞ்சநேயர் இருக்கிறார் என்பது நம்மில் எத்துனை பேருக்குத் தெரியும்?

    ராகவேந்திரர் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். வியாசராஜர் 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை சேர்ந்தவர். தலைக்கோட்டை யுத்தத்தில் விஜய நகர சாம்ராஜ்ஜியம் தோற்கடிக்கப்பட்ட பிறகு ஹம்பி ஷேத்ரத்திலிருந்து ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் கால்நடையாகவே பாரதமெங்கும் புனிதப்பயணம் மேற்கொண்டார். அப்படி அவர் பயணம் செய்த பொது 600 க்கும் மேற்பட்ட ஆஞ்சநேயர் சிலைகளை நாடு முழுவதும் பிரதிஷ்டை செய்தார் என்பது வரலாறு. அடுத்தடுத்து நிகழ்ந்த படை எடுப்புக்களினால் அவர் பிரதிஷ்டை செய்த பல விக்ரகங்கள் காணாமல் போய்விட்டன. நூற்றுக்கும் குறைவான விக்ரகங்களே தப்பித்துள்ளன.

    வியாசராஜ தீர்த்தர் அப்படி ஒவ்வொரு ஊராக வந்தபோது, போரூர் என்ற இடத்திற்கு வந்தார்.
    தனது ஞான திருஷ்டியால் அவ்வூரில் ராமர் சிவனை வழிபட்டதை உணர்ந்த வியாசராஜ தீர்த்தர் தான் நினைத்திருந்த ஆஞ்சநேய சுவாமியை பிரதிஷ்டை செய்ய போரூரை இட பொருத்தமான இடம் இருக்க முடியாது என்று கருதி, இங்கு ஒரு குளக்கரையில் அனுமனை பிரதிஷ்டை செய்தார். அப்படி ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அழகான அளவற்ற சக்தி வாய்ந்த மூர்த்தம்தான் இந்த ஸ்ரீ சிவவீர ஆஞ்சநேயர்.

    வலது கரம் பக்தர்களுக்கு “அஞ்சவேண்டாம்…. நான் இருக்கிறேன் காப்பதற்கு” எனும்படி அபய ஹஸ்தம்.
    இடது கரத்தில் சௌகந்திகா மலர், வாலில் மணி. பகைவர்கள் தீண்ட முடியாத படி அதர்வண வேத மதிரப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இவை மூன்றும் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சனேயரிடம் மட்டுமே பார்க்கமுடியும். 

    அந்நியர்களின் படையெடுப்பினாலனுமர் விக்ரகம் காணாமல் போயிற்று. விக்ரகத்தை காணாது திகைத்த ஊர்மக்கள், படையெடுப்பினால் சேதப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டிருக்கும் என்று முடிவுக்கு வந்துவிட்டனர். ஆனால் அனுமன் இருந்ததோ குளத்தினுள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குளத்தை தூர் வார முற்பட்டபோது, இந்த விக்ரகம் வெளியே வர ஊர் மக்களுக்கு எல்லையில்லா ஆனந்தம். இதை மண்டக்குளம் என்று அழைக்கிறார்கள். இதிலிருந்து நீர் எடுத்து தான் ராமர் சிவா பூஜை செய்தார் என்று கூறப்படுகிறது. கண்டெடுத்த அனுமன் சிலையை அருகிலிருந்த ஆல மரத்தடியில் வைத்து வழிபட்டார்கள். 

    அண்டியோர் துயரை அந்தக் கணமே தீர்த்துவைத்ததால் அனுமனின் புகழ் பரவ தொடங்கியது. எவரைக் கொண்டு எதனைப் பூர்த்தி செய்வது என்று அவனுக்கு தெரியாதா?
    இந்த சிவவீர ஆஞ்சநேய சுவாமிக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. ஆஞ்சநேயரைத் தவிர மேலும் பல விக்ரகங்கள் இங்கு உண்டு. செல்வ விநாயகரை வணங்கி ஆலயத்தை வலம்  வரும் நமக்கு உற்சவ மூர்த்திகளான சீதா, லக்ஷ்மண சமேத இராமரும், அருகில் அனுமனும், காட்சி தந்து பரவசப்படுத்துகிறார்கள். பக்தர்கள் தங்கள் கரங்களாலேயே வெண்ணெய் சாற்றி வழிபடுவதற்கு ஸ்ரீ திவ்ய நாம சங்கீர்த்தன அனுமாரை நிர்மாணித்துள்ளனர். 

    கோயில் அமைந்துள்ள இடம் சிறியது தான் என்றாலும், சுற்றுப்புற பிரகாரத்தில் லக்ஷ்மி ஹயக்க்ரீவர், தன்வந்திரி பகவான், பள்ளி கொண்ட சிவன், பைரவர் ஆகியோர் தனித் தனியாக அருள் புரிகிறார்கள். மேலும் நிருத்ய விநாயகர், தம்பதி சமேத தக்ஷிணாமூர்த்தி, பள்ளி கொண்ட ரங்கநாதர், காயத்ரி தேவி, அஷ்ட பூஜை துர்க்கை, முருகன் ஆகியோரும் இங்கே உண்டு.
    இத்தலத்தில்  மட்டைத் தேங்காய் பிரார்த்தனை மிகவும் பிரசித்தம். நமது கோரிக்கையை வேண்டுகோளாக்கி மட்டைத் தேங்காயை வாங்கி வந்து கோயிலில் கொடுத்தால் சுவாமியிடம் வைத்து அதற்கு எண்கள் அமைத்து தருவார்கள்  அதை கோயிலிலேயே வைத்துவிடவேண்டும். வேண்டுதல் நிறைவேறியவுடன் மட்டையை உரித்து தேங்காயை உடைத்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்கிறார்கள். நியாயமான வேண்டுதல்கள் ஒரு மண்டலத்திற்குள் நிறைவேரிவிடுவதாக ஆலயத்தில் சொல்கிறார்கள்.
    பரிகார சக்தி
    திருமணத் தடை, புத்திர பாக்கியமின்மை, கடன் தொல்லை, செய்வினை தோஷங்கள், குடும்பத்தில் ஒற்றுமையின்மை, உத்தியோகப் பிரச்னை ஆகியவற்றை தன்னின் தரிசிப்பவர்களுக்கு இந்த  சிவவீர ஆஞ்சநேயர் தீர்த்துவைக்கிறார்.

  • மன அழுக்கை நீக்கிய கங்கா மாதா

    கங்கைக் கரையில் செருப்பு தைக்கும் ஒரு முதியவர்  தினமும் கங்கா மாதாவை தூர இருந்து கண்ணால் பார்த்து வணங்கி தன் வேலையை ஆரம்பிப்பார். தாழ்ந்த குலத்தை சேர்ந்தவர்  என்பதால் , அவர் தண்ணீரை   தீண்டினால் புனிதம்  கெட்டு விடும் என்று இந்த வழக்கம்.  

    அதே ஊரில் இருந்த பண்டிதர் ஒருவர் ,  தினமும் மந்திரங்கள் ஜபித்துக் கொண்டே கங்கையில் இறங்கி நீராடி ,அனுஷ்டானங்கள் முடிந்து வெளியே வருவார்.

    ஒருநாள்  அவரது செருப்பு அறுந்து விட்டது. அதை அந்த முதியவரிடம்  கொடுத்து சரி செய்யச் சொல்ல, அவரும்   நன்றாகவே அதை  சரி செய்து கொடுத்தார்.

    அவரை  தொட்டால் தீட்டு என்று , பண்டிதர் ஒரு அணா  காசு விட்டெறிந்தார். அவர் பண்டிதரை  வணங்கி  ”சுவாமி நான் உங்களிடம் காசு வாங்க மாட்டேன்.  நீங்கள் கங்கா மாதாவை அனுதினமும்  வணங்கி மந்திரங்கள் ஜெபிப்பவர். உங்களுக்கு ஏதோ என்னாலான ஒரு சிறிய உதவி செய்தது என் பாக்யம்” என்றார்.

    அவரோ,உன் காசு எனக்கு வேண்டாம். இதை என்ன செய்வது?  நீ எனக்கு இலவசமாக சேவை செய்தால் அதை நான் ஏற்க முடியாது என்கிறார்.

    ஐயா  இந்த ஏழைக்கு  ஒரு உதவி நீங்கள் செய்வீர்களா?   இதோ இந்த கங்காமாதாவை அனுதினமும்  வணங்குகிறேன் என்னால்  ஒன்றும் செய்ய இயலவில்லை.  நான் அளித்த காணிக்கையாக  நீங்களே  அதை அவளுக்கு சமர்ப்பிக்க முடியுமா.?என்று கிழவன் கேட்க ,என்ன சொல்கிறாய். இந்த ஓரணாவை  கங்கையில் நீ அளித்ததாக நான் எறிய வேண்டும் அவ்வளவு தானே? சரி என்று சொல்லி, பண்டிதர் கங்கையில் இறங்கினார். கங்கா மாதாவை வணங்கி,“ அம்மா கங்கா தேவி, இதோ இந்த ஓரணா கரையில் இருக்கும் செருப்பு தைக்கும் கிழவர் உன்னிடம் சமர்ப்பிக்க சொன்னது. ஏற்றுக்கொள்  என்று சொல்லி வீசி எறிந்தார்.

    பிரவாகமாக ஓடிக்கொண்டிருந்த கங்கையிலிருந்து ஒரு அழகிய  கை  வெளியே தோன்றி அவர் வீசிய ஓரணா காசை ஆர்வமாக  அன்பாக  பெற்றுக் கொண்டது.  கங்கையின் முகம் தோன்றி, “பண்டிதரே, எனக்கு மிக்க மகிழ்ச்சி, இதோ இந்த பரிசை நான் கொடுத்ததாக அந்த முதியவரிடம்  கொடுங்கள் என்று கங்கா தேவி ஒரு அழகிய கண்ணைப் பறிக்கும் வைர, நவரத்னக் கற்கள்  பதித்து  ஒளி வீசிய    தங்க வளையலை கொடுத்தாள். பண்டிதர் ஆச்சர்யத்தில்  நடுங்கினார்.

    அதை தனது மேல் துண்டில் பத்திரமாக  முடிந்து வைத்து கொண்டு ,அந்த முதியவரிடம்  ஒன்றுமே அது பற்றி சொல்லவில்லை. வீட்டிற்கு போய் தன் மனைவியிடம் கங்காதேவி தந்த வளையலை தந்தார்  பண்டிதர்.

    பேராசை பிடித்த அவன் மனைவி ,ராஜாவிடம்  அந்த வளையலைக் கொடுத்துவிட்டு ஏதாவது காசு கொடுத்தால் வாங்கி வர ஆலோசனை சொன்னாள்.

    பண்டிதரும்  ராஜாவிடம் சென்று கொடுக்க ,  ராஜா  அதை வாங்கி பார்த்து மகிழ்ந்தார். ஒரு பை  நிறைய பொற்காசுகள் கொடுத்தார்.ராணியிடம் ஆசையோடு அந்த வளையலை கொடுத்தார்.  மிகவும் மகிழ்ந்த  அந்த ராணி , ராஜாவிடம் அதன் ஜோடி எங்கே  என்று கேட்டாள் . ராஜா ஆட்களை அனுப்பி பண்டிதரை அழைத்து வர செய்தார். 

     இன்னொரு வளையல் எங்கே? அதை ஏன் தரவில்லை? என்று கேட்க,  பண்டிதர் நடந்ததை சொல்ல தயங்கினார். ராஜா அணையிட உயிருக்கு பயந்த பண்டிதர் கங்கைக்கரைக்கு ஓடினார்.

     அந்த முதியவர்  வழக்கம்போல் அதிகாலையில்  கங்கைக் கரைக்கு  தூர நின்று இரு கரம் கூப்பி  கண்களை மூடி கங்கையை வணங்கினார். அருகிலே தேங்கி நின்ற நீரில் கொஞ்சம் எடுத்து தலையில் ப்ரோக்ஷணம் பண்ணிக்கொண்டார். அது தான் அவருக்கு கங்காஜலம். செருப்பு தைக்க தேவையான ஜலத்தை ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொண்டு அமர்ந்தார்.

     திடீரென்று தன்  முன்னே  பண்டிதர் ஓடிவந்து நின்றதும் வணங்குவதும் அவருக்கு  ஏதோ ஒரு அதிர்ச்சியை தந்தது.  “சாமி  நீங்க என்ன செய்றீங்க?என்ன ஆச்சு உங்களுக்கு?  நான் தானே  உங்களை எப்போவும் வணங்கறது?”என்று கேட்டார்.

    நடந்த விஷயத்தை சொன்னதும் , அந்த முதியவர் கண்ணை மூடி  தனக்கு எதிரே இருந்த அழுக்கு பாத்திரத்தில் நிரம்பிய நீரை வேண்டினார்,  “அம்மா கங்கா  நீ எனக்கு பரிசாக ஒரு வளையல் கொடுத்ததற்கு  நான் எத்தனையோ ஜென்மம் கடமைப் பட்டிருக்கிறேன் தாயே.  பாவம் இந்த பண்டிதரின் உயிரைக் காப்பாத்து தாயே. இன்னொரு வளையலும் தா. அவர் பிழைக்கட்டும்” என்று  தனது கையை அந்த ஜலத்தில் விட்டதும் ,  மீண்டும்  பிரகாசமான தங்க வைர கற்கள் பதித்த இன்னொரு வளையல் அந்த அழுக்கு பாத்திரத்திலிருந்து தோன்றியது.

     பண்டிதர் அந்த முனிவரின்  கால்களை  கெட்டியாக பிடித்துக்கொண்டு  கண்ணீரால் அவற்றை நனைத்து அபிஷேகம் செய்தார். சீடனாக அருகில் அமர்ந்தான். மனதில் இருந்த அழுக்கு நீங்கியது.

  • கிருஷ்ண ஜெயந்தி விழா

    கிருஷ்ண ஜெயந்தி விழா

    கிருஷ்ணர் ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி தினத்தில் நள்ளிரவு 12 மணிக்கு அவதரித்தார். அவர் அவதரித்த அந்த தினமே ‘கிருஷ்ணஜெயந்தி’ என்றும், ‘கோகுலாஷ்டமி’ என்றும் கொண்டாடப்படுகிறது.

     14-8-2017 (கிருஷ்ண ஜெயந்தி)

     ம்சன் என்னும் அரக்கன், தன்னுடைய தங்கைக்கு பிறக்கும் எட்டாவது ஆண் குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்தான். இதனால் தங்கை தேவகியையும், அவரது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்தான். மேலும் அவர்களுக்குப் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் கொடூரமாக கொன்றான்.

     7-வது குழந்தையாக பலராமர், தேவகியின் வயிற்றில் ஜனித்திருந்தார். மகாவிஷ்ணு, மாயாதேவியை அழைத்து பலராமரின் கருவை, கோகுலத்தில் வசிக்கும் நந்த கோபரின் மனைவியரில் ஒருவரான ரோகிணியின் கருவுக்குள் மாற்றம் செய்யச் சொன்னார். மேலும் மாயாதேவியையும், நந்தகோபரின் இன்னொரு மனைவியான யசோதையின் வயிற்றில் கருவாக வளரும்படி கூறினார். அதன்படியே ரோகிணியின் வயிற்றில் பலராமரின் கருவை மாற்றிய மாயாதேவி, யசோதையின் கருவில் வளர்ந்து வந்தாள்.

     எட்டாவதாக கிருஷ்ண பகவான் தேவகியின் கருவில் வளர்ந்து வந்தார். ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் கிருஷ்ணர் பிறந்தார். தங்களுக்கு பிறந்த குழந்தையை தேவகியும், வாசுதேவரும் ரசித்துக் கொண்டிருந்தனர்.

     அப்போது குழந்தை, மகாவிஷ்ணுவாக விஸ்வரூபம் எடுத்து நின்றார். ‘நீங்கள் இருவரும் சுதபா- பிருச்னி தம்பதியராக இருந்தபோது 12 தேவ ஆண்டுகள் என்னை நோக்கி தவம் இருந்தீர்கள். அதன் பயனாக நான் உங்கள் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டேன். நீங்களோ, பரமாத்மாவாகிய நான் உங்கள் குழந்தையாக பிறக்க வேண்டும் என்று கூறினீர்கள். அதன்படி நான் உங்களுக்கு பிருச்னிகர்பா என்ற பெயரில் மகனாக பிறந்தேன். மறு பிறவியில் நீங்கள் காஷ்யபர்- அதிதி தம்பதியராக இருந்தபோது உபேந்திரன் என்ற பெயரில் மகனானேன். இப்போது கிருஷ்ணன் என்ற பெயரில் பிறந்துள்ளேன்.

     இனி உங்களுக்கு பிறப்பு கிடையாது. நீங்கள் வைகுண்டம் வந்து விட வேண்டியதுதான். கம்சனிடம் இருந்து உங்களை விடுவிக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது. என்னை கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மனைவி யசோதையிடம் சேர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்துவிடுங்கள். மற்றவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறிவிட்டு மீண்டும் குழந்தையாக மாறி விட்டார்.

     கிருஷ்ணர் அவதரித்த நன்னாளை உலகம் முழுவதும் மக்கள் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். அந்த புண்ணிய நாளில் கிருஷ்ணரின் படத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். மேலும் அவருக்கு பிடித்தமான நைவேத்தியங்களை வைத்து வழிபடுவது சிறப்பு தரும். அதனை கண்ணன் நள்ளிரவில் வந்து ஏற்றுக்கொள்வார் என்பது ஐதீகம். இதற்காகவே கிருஷ்ணஜெயந்தி அன்று வீட்டு வாசலில் இருந்து வீட்டுக்குள் பூஜை அறை வரை, கண்ணனின் கால் தடங்களை பதித்து வைப்பார்கள். பகலில் விரதம் இருந்து, இரவில் வழிபாட்டை முடித்தபின் உணவு உண்பது உத்தமம். பின்னர் இரவு முழுவதும் கண்விழித்து பஜனை செய்து விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வாழ்வின் தேவைகள் பூர்த்தியாகும். எண்ணியவை ஈடேறும். 

  • அண்ணாமலையின் குண்டுக்கண்ணன்!

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அருகில் பூதநாராயணப்பெருமாள் என்னும் பெயரில் ‘குண்டு கிருஷ்ணர்’ அருள்பாலிக்கிறார்.

    தல வரலாறு: குழந்தை கிருஷ்ணனால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், அவனைக் கொல்ல பூதனை என்ற அரக்கியை அனுப்பி வைத்தான். அவள் ஒரு அழகியாக உருவெடுத்து, கிருஷ்ணரை வாரி அணைத்து பாலூட்டினாள். கிருஷ்ணனும் பால் குடிப்பது போல நடித்து அவளது உயிரையே குடித்து விட்டார். ஆனாலும் தனக்கு அவள் பாலூட்டியதால், அந்த தாய்மை உணர்வுக்கு மதிப்பு அளித்து அவளது பெயரை தன்னுடன் இணைத்து ‘பூத நாராயணர்’ என்று பெயர் பெற்றார். பெயருக்கேற்ப இவர் குண்டாக இருப்பார். மன்னர் ஒருவர், இந்த கிருஷ்ணருக்கு கோயில் கட்டினார். அது மண்ணில் புதைந்தது. பிற்காலத்தில் பக்தர் ஒருவரது கனவில் தோன்றிய கிருஷ்ணர், பூமியில் புதைந்த இடத்தை உணர்த்தினார். சிலை கண்டெடுக்கப்பட்டு மீண்டும் கோயில் கட்டப்பட்டது. பெரிய கிருஷ்ணர் குழந்தை கிருஷ்ணர் இடது காலை மடித்து வலது காலை தரையில் குத்திட்டு அமர்ந்து இருக்கிறார். வலது கையில் சங்கு உள்ளது. இடதுகை அருள் புரியும் விதத்தில் அபய முத்திரை காட்டுகிறது. குழந்தை வரம் கிடைக்க இவருக்கு வெண்ணெய், கல்கண்டு படைத்து துளசி மாலை அணிவிக்கின்றனர். நல்லறிவு தருபவர் கோபம், பொறாமை, காமம் போன்ற தீய குணங்களையே அரக்கர், அரக்கிகளாக புராணங்களில் உருவகம் செய்துள்ளனர். இறை வழிபாட்டின் மூலம் இந்த தீய எண்ணங்களை போக்க முடியும். கிருஷ்ணர் அரக்கியை வதம் செய்தவராக இங்கு இருப்பதால், தீய குணங்கள் மறைந்து பக்தர்களுக்கு நல்லறிவு உண்டாகும்.

     கிரிவலம்: கிரிவலம் செல்வோர், இவரது சன்னதியில் தொடங்கி பின் இவரது சன்னதியிலேயே நிறைவு செய்வது சகல நன்மையையும் தரும். இங்கு தரப்படும் தீர்த்தத்தை வாங்கி, கோயில் வாசலில் கொட்டுவர். கிரிவலம் சென்ற பலனை கிருஷ்ணருக்கு சமர்ப்பிப்பதாக ஐதீகம்.

    சிறப்பம்சம்: கருடாழ்வார், தும்பிக்கைஆழ்வார், ஆஞ்சநேயர், சுதை ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. பயம் நீங்க, வெற்றி கிடைக்க சக்கரத்தாழ்வாருக்கு புதன்கிழமையில் துளசி மாலை அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் படைக்கின்றனர். கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, திருவோணம், பவுர்ணமி நாட்களில் அபிஷேகம் நடக்கும்.திருவண்ணாமலையிலுள்ள பழமையான பெருமாள் கோயில் இது. வைகுண்ட ஏகாதசியன்று சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார். புரட்டாசி கடைசி சனியன்று அன்னதானம் உண்டு. எப்படி செல்வது: அண்ணாமலையார் கோயில் வடக்கு மாட வீதியில் உள்ளது.

  • அஷ்டலிங்க வழிபாடு!

    நினைத்தாலே முக்தி கிடைக்கும் திருவண்ணாமலையில் உள்ள அஷ்ட லிங்கங்களை வழிபட்டால், அனைத்து பலன்களும் கிடைக்கும். கிரிவலம் செல்வோர் இந்த லிங்கங்களை வழிபடுவது மிகவும் அவசியம். மகான்களும், சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் வாழ்ந்த இந்தப் புண்ணியத் தலத்தில் சில நிமிடங்களாவது இருக்க வேண்டுமே என்று நினைப்போரும் உண்டு. இதனால் தான் நாள்தோறும் ஏராளமானோர் இங்கு வருகை தந்து, அண்ணாமலையாரை வழிபட்டு செல்கின்றனர்.
    திருவண்ணாமலையில் பௌர்ணமி நாளில் அண்ணாமலையாரை வழிபட்டு, 14 கி.மீ. தொலைவு கிரிவலம் வந்து கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களை வழிபட்டால் நன்மைகள் சேரும்; தீமைகள் விலகும். கிரிவலப் பாதையில் எண்ணற்ற கோயில்கள், மடங்கள், ஆசிரமங்கள் நிரம்பியுள்ளன. இங்கேயே அஷ்ட லிங்கங்களும் உள்ளன.
    இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம் என்று 8 லிங்கங்கள் ஒவ்வொன்றும் ஓவ்வொரு திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் பாவங்கள், புண்ணியங்கள் உள்ளிட்டவற்றை எமனிடம் அளிப்பது இந்த அஷ்ட திக் பாலகர்கள் தான். இவர்களே அண்ணாமலையில் அஷ்ட லிங்கங்களாக அமைந்திருந்து பூமியைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த லிங்கங்கள் மனிதனுடைய ஒவ்வொரு காலகட்டத்தைக் குறிக்கின்றன. இவற்றை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு நன்மைகள் பயக்கும்.

    1. இந்திர லிங்கம்:
      கிரிவலம் வரும் வழியில், கோயிலின் கிழக்கு கோபுரத்துக்கு அருகே கிழக்கு திசையில் இந்திர லிங்கம் உள்ளது. தேவர்களின் தலைவரான இந்திரன் தனது பதவியை நிலை நிறுத்திக் கொள்ள திருவண்ணாமலையில் அங்கப் பிரதட்சிணம் செய்துள்ளார். அப்போது கிழக்குத் திசையில் ஒரு இடத்தில் வந்தபோது மின்னத் தொடங்கியுள்ளது. அப்போது அண்ணாமலையாரின் திருஅருள் என்பதை அறிந்த இந்திரன் தனது பதவி நிலைக்க சிவனிடம் வேண்டினார். அப்போது இந்திரனுக்கு சுயம்பு லிங்கமாக சிவன் காட்சியளித்தார். இதுவே இந்திர லிங்கமாகும். இந்திர லிங்கத்தை வழிபட்டால் திருமகளின் அருள் கிடைக்கும். செல்வம் பெருகும். பதவி உயர்வு, பணிமாற்றம், பணிப் பாதுகாப்பு உள்ளிட்டவையும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    2. அக்னி லிங்கம்:
      கிரிவலப் பாதையில் இரண்டாவதாகவும், வலது புறத்தில் உள்ளது அக்னி லிங்கம். தென்கிழக்குத் திசை பஞ்ச பூதங்களில் அக்னி தலமே திருவண்ணாமலை என்பதால், இந்த லிங்கத்துக்கு தனி இடம். வாழ்க்கையில் வரும் இடைஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது. அக்னி லிங்கத்தின் கீழ் திசையில் அக்னி தீர்த்தம் உள்ளது. எதிரில் இருப்பது அக்னி மண்டபம். அக்னி லிங்கத்தின் அருகேயே ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகளின் ஆஸ்ரமம் உள்ளது. கிரிவலப் பாதையில் 3 ருத்ர மூர்த்திகள் அங்கப் பிரதட்சிணம் செய்தனர். அவர்களின் திருமேனிகள் ஜோதியாக மாறியது. ஒரு செவ்வாய்க்கிழமை அவர்கள் கிரிவலம் வந்தபோது, குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும்போது பனிமலை போன்ற குளிர்ச்சியை உணர்ந்தனர். அந்த இடமே சுயம்பு லிங்கமான அக்னி லிங்கம் என்கிறது ஆலய வரலாறு. அக்னி லிங்கத்தை வழிபட நோய்கள், பயம் நீங்கும். எதிரிகள் தொல்லை எரிந்து சாம்பலாகும்.
    3. எம லிங்கம்: கிரிவலப் பாதையில் மூன்றாவதாக உள்ளது எம லிங்கம் ஆகும். தெற்கு திசைக்குரியது. தென் திசையில் எம தீர்த்தம் உள்ளது. எமன் திருவண்ணாமலையில் அங்கப் பிரதட்சிணம் செய்தபோது, அவரது பாதம் பட்ட அடிச்சுவடுகள் எல்லாம் தாமரைப் பூக்களாக மாறின. அந்த இடத்தில் செம்பொன் பிரகாசமாக ஒரு லிங்கம் தோன்றியது. அதுவே எம லிங்கம். பூமியில் உள்ள மனிதர்களின் ஆயுள் முடியும்போது அவர்களின் உயிரை எடுக்கச் செல்லும் எம தூதர்கள் வானுலகில் இருந்து பூமிக்கு வந்து, இங்கு வழிபட்ட பின்னரே உரிய பகுதிக்குப் பயணிப்பதாக பக்தர்களின் நம்பிக்கை. எமலிங்கத்தை வழிபட்டால் எம பயம் நீங்கும். நீதி நெறி நிலைக்கும். பொருள் வளம் பெருகும்.
    4.  நிருதி லிங்கம்: கிரிவலப் பாதையில் நான்காவதாக நிருதி லிங்கம் உள்ளது. இதன் திசை தென்கிழக்கு. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. மண் என்ற வார்த்தையின் தூய தமிழ்ப் பெயர் நிருதி ஆகும். அஷ்ட திக் பாலகர்களில் ஒருவரான நிருதீஸ்வரர் கிரிவலம் வந்தபோது. குறிப்பிட்ட இடத்தில் குழந்தையின் ஒலியும், பெண்ணின் சலங்கை ஒலியும் கேட்டது. அப்போது நிருதீஸ்வரர் அங்கு நின்று, அண்ணாமலையாரை வணங்கினார். அண்ணாமலையார் தோன்றிய இடமே நிருதி லிங்கம். இந்த இடம், சிவன் பார்வதிக்கு காட்சியளித்த இடம். இங்கிருந்து பார்த்தால் அண்ணாமலையின் வடிவம் சுயம்புவான ரிஷபமாகத் தெரியும்! நிருதி லிங்கத்தை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும். மகப்பேறு கிடைக்கும். ஜன்ப சாபம் நீங்கும். புகழ் வந்து நிலைக்கும்.

    5.வருண லிங்கம்: கிரிவலப் பாதையில் ஐந்தாவதாக உள்ளது வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. இதன் அருகே வருண தீர்த்தம் உள்ளது. இந்த லிங்கத்தை சனி பகவான் ஆட்சி செய்கிறார். அஷ்ட திக் பாலகர்களில் ஒருவர், மழைக்கு அதிதேவதையாகிய வருண பகவான். இவர் முட்டிக் கால் போட்டும், ஒற்றைக் காலால் நொண்டியும் கிரிவலம் வந்தார். அப்போது ஓரிடத்தில் வானத்தைத் தொடும் அளவுக்கு நீருற்று எழுந்தது. அந்நீரைத் தெளித்து அண்ணாமலையாரை வணங்கிட, அங்கு வருண லிங்கம் தோன்றியது!. வருண லிங்கத்தை வழிபட்டால் சிறுநீரக நோய்கள், சர்க்கரை நோய், நீர் சார்ந்த சகல நோய்கள், கொடிய நோய்கள் நீங்கும். உடல் நலம் செழிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

    6.வாயு லிங்கம்: கிரிவலப் பாதையில் ஆறாவதாக வாயு லிங்கமும் இதன் அருகே வாயு தீர்த்தமும் உள்ளது. வடமேற்கு திசைக்குரியது. வாயு பகவான் சுழிமுனையில் சுவாசத்தை நிலைகொள்ளச் செய்தவாறு கிரிவலம் வந்தார். அப்போது அடி அண்ணாமலையைத் தாண்டியதும், ஓரிடத்தில் நறுமணம் வீசியது. அங்கே பஞ்சகிருத்திகா செடியின் பூக்கள் மலர்ந்த நேரத்தில் சுயம்புவாக வாயு லிங்கம் உருவானதாக வரலாறு. வாயு லிங்கத்தை வழிபட்டால் சுவாசம் சார்ந்த நோய்கள், இதய நோய்கள் குணமாகும். பெண்களுக்கு நலமும், மன நிம்மதியும் உண்டாகும். கண்திருஷ்டி நீங்கும்.

    7. குபேர லிங்கம்: கிரிவலப் பாதையில் உள்ள ஏழாவது லிங்கமாக இருப்பது குபேர லிங்கம். வடதிசைக்குரிய இந்த லிங்கத்தின் அருகே குபேர தீர்த்தம் உள்ளது. குபேரன் கண் மூடி தியானித்து, தலை மீது கரம் குவித்தவாறு குதிகாலால் கிரிவலம் வந்தார். அப்படி பல யுகங்கள் கழிந்த பிறகு ஒரு நாள் திருமாலும், மகாலட்சுமியும் அண்ணாமலையை சக்கரபாணி கோலத்தில் தரிசனம் செய்வதைக் கண்டார். அந்த இடத்தில் உண்டான லிங்கமே குபேரலிங்கம் என்கின்றனர். முறையற்ற வழியில் பணம் சேர்த்தவருக்கு பிராயசித்த ஸ்தலம் குபேர லிங்கம். குபேர சம்பத்து தரும் இடம் இது. இங்கு வழிபட்டால் செல்வம் சேரும்.

    8.ஈசானிய லிங்கம்: கிரிவலத்தில் எட்டாவது லிங்கமாக இருப்பது ஈசானிய லிங்கம். இது வட கிழக்கு திசைக்குரியது. அதிகார நந்தி எனப்படும் நந்தி பகவான் கிரிவலம் வந்தபோது, அண்ணாமலையின் தரிசனம் இந்த இடத்தில் கிட்டியதாக தெரியவருகிறது. இங்கு வழிபட்டால் சனித் தொல்லையிலிருந்து விடுபடலாம். இங்கு தியானித்தால் நன்மைகள் சேரும். தவம் பலிக்கும். சிவனின் அருள் கிடைக்கும். அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறலாம்.

  • அஷ்டலிங்க வழிபாடு!

    அஷ்டலிங்க வழிபாடு