Blog

  • 2018-04-09-11-11-41

    சுப நிகழ்ச்சிகளில் இருந்த தடை நீங்கும்
    புனர்பூசம் 4 – ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

    கற்பனை வளம் மிக்கவர்களாகிய நீங்கள் எழுத்துத்துறையில் பிரகாசமான வாய்ப்புகளைப் பெறக் கூடியவர்கள் என்பதால் உங்கள் படைப்புகளை வெளியிட்டோ, திரைப்பட வசனகர்த்தா, பாடலாசிரியர் போன்ற வாய்ப்புகளை பெற்றோ பிரபலமும்புகழும் அடைவீர்கள்.

    இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமல் சில நேரங்களில் குழபத்துக்கு ஆட்பட்டு அல்லல் படுவது உங்களிடம் அமைந்துள்ள பெரும் குறை. எதிலும் சிந்தித்து முடிவெடுத்து அதன் படி திட்டமிட்டுச் செயல்படுவதால் வெற்றி காண முடியும் என்பதை நீங்கள்புரிந்து கொண்டு அதன் படி நடந்து கொண்டால் வேதனைக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு வெற்றிப்புன்னகை புரியலாம்.

    இந்த ஆண்டு காரியங்களைத் தைரியமாகச் செய்து முடிப்பீர்கள். மேலும் உங்கள் எண்ணங்களை தைரியமாக வெளிப்படுத்துவீர்கள். அவசியமற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்புகளை உயர்த்திக் கொள்வீர்கள். தன்னம்பிக்கையுடன் காரியமாற்றுவீர்கள். சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்கிற பழமொழிக்கேற்ப அனைவரிடமும் பக்குவமாகப் பேசிப் பழகி உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும். மற்றபடி புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். உங்கள் நிர்வாக ஆற்றல் அதிகரிக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பு தானாகவே கிடைக்கும்.

    சுறுசுறுப்புடன் இயங்குவீர்கள். சிலருக்கு வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்று வசிக்கும் யோகமும் உண்டாகும். உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியம் சூழும். அதேநேரம் எல்லாம் சரியாக நடந்து விடும் என்று நினைத்துக்கொண்டு அலட்சியமாக இருந்தால் தோல்வியைச் சந்திப்பீர்கள்.

    உத்தியோகஸ்தர்களுக்கு:
    உங்கள் அலுவலகப் போக்கில் உங்களுக்கு மிகத் திருப்திகரமான பலன்கள் ஏற்பட வாய்பில்லை என்றாலும் பெரும் சங்கடங்கள் எதுவும் ஏற்பட்டுவிடவும் வாய்ப்பில்லை என்ற அளவில் ஆறுதலடையாலம். உங்கள் பணிகளில் நீங்கள் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருவது அவசியம். அரசு பணியில் இருப்பவர்களுக்கு பெரும் சிக்கல்கள் இராதென்ற நிலையில் தனியார் துறையில் பணிபுரிவர்களுக்குப் பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு பிறகு நிவர்த்தியாகும். சக பணியாளர்களுடன் சுமூகமாகநடந்து கொள்வது அவசியம். அதனால் உங்கள் பணிப்பளுவையும் குறைத்துக் கொள்ள முடியும். எதிர்பாராத இடமாற்றங்களால் சிலர் குடும்பத்தைவிட்டு பிரிந்திருக்க நேரலாம் நேரலாம். உடல்நலத்திலும் அடிக்கடி சிறுகுறைபாடுகள் ஏற்பட்டு நிவர்த்தியாகும்.

    வியாபாரிகளுக்கு:
    வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவு உங்களுக்கு இருந்து வரும் வகையில் நீங்கள் செயல்படுவது முதல் தேவையாகும். கொள்முதல் செய்யும் போது தரமான பொருள்களை மட்டுமே கொள்முதல் செய்வது மிக அவசியம். அதே போல தேவைக்கேற்ப அவ்வப்போது வாங்கிக் கொள்வதே சிறப்பாகும். ஒரே நேரத்தில் மொத்தமாக வாங்க வேண்டுமென்பதற்காக வாங்கி அதிக அளவில் பொருள்களை இருப்பு வைப்பதைத்தவிர்ப்பதன் மூலம் பெரும் விரயங்களைத் தவிர்த்து விடலாம்.

    மற்றபடி வியாபாரத்தில் பெரும் முன்னெற்றம் இருப்பதற்கில்லையென்றாலும் நஷ்டம் ஏற்படாதென்பதால் கவலை வேண்டாம். மேலும் பண்ம் புழங்கும் இடங்களில் உங்களுக்கு நம்பிக்கையுள்ளர்களையே அமர்த்துவதும் மிக முக்கியமாகும். உங்கள் நேரடி கவனமும் அடிக்கடி இருந்து வருவது நல்லது. போட்டி நிறுவனங்களின் எதிர்ப்புகள் பலமாகவே இருக்குமாயினும் உங்கள் சமயோஜித புத்தியினால் சமாளிப்பது நல்லது. கூட்டாளிகள் இருப்பவர்களாயின் அவர்களிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.
    கலைத்துறையினருக்கு:
    உங்கள் தொடர்ச்சியான முயற்சிகளால் மட்டுமே புதிய வாய்ப்புகளைப் பெற முடியும் என்ற நிலையுல்லதால் நீங்கள் சோர்வுக்கு இடம் தராமலும், மற்றவர்களை நம்பாமலும் நீங்களே நேரிடையாகப் பார்க்கவேண்டியவர்களை பார்த்து பேசுவது தான் உங்களுக்கு வெற்றி தரக்கூடும். ஓரளவு சோர்வடைந்தாலும் உங்கல் திறமைகளை வெளிப்படுத்தத் தவறினாலும் வாய்ப்புகள் கை நழுவிப் போய்விடக்கூடும். எனவே உங்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்வதிலேயே உங்கள் முழுக்கவனமும் இருந்து வர வேண்டும். சக கலைஞர்களைப் பகைத்துக் கொள்ளாமல் சுமூகமாகப் பழகி வருவதும் அவசியம். நடனம், ஸ்டண்ட் போன்ற துறைக் கலைஞர்கள் கூடுதல் வாய்ப்பைப் பெறக்கூடும். வெளியூர்ப் பயணங்களின் போது கவனம் தேவை. புதிய படங்களுக்கான வாய்ப்புகள் சிலருக்குக் கிடைக்கக்கூடும்.

    மாணவர்களுக்கு:
    விளையாட்டு போன்ற துறைகளில் உங்களுக்கு ஆர்வம் இருக்குமாயினும் படிப்பில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம். மின்னணுத்துறை கல்வியில் சிலர் வாய்ப்பு பெறக்கூடும். ஜாதகப்படு தசாபுத்தி பலன்கள் பலமாக அமையப் பெற்றவர்கள் மட்டுமே உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுவது சாத்தியமாகும். சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று ஹாஸ்டல்கள் போன்றவற்றில் தங்கிப் படிக்க நேரலாம். அத்தகையவர்கள் படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. அரசின் கல்விச் சலுகைகள் கிடைப்பதில் கூட சிரமங்கள் ஏற்படக்கூடும். சிலர் மேற்படிப்பை தொடர முடியாமல் வாய்ப்புகளைத் தேடவும் முயல்வீர்கள்.

    அரசியல்வாதிகளுக்கு:
    உங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புகளைத் திறம் பட நிறைவேற்றி தலைமையின் பாராட்டுகளைப்பெறுவது இப்போதைய நிலையில் மிகக் கடினமான இருக்ககூடும். இருப்பின் மாற்றும் முகாம்களுக்குத் தாவும் எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் உறுதியான விசுவாசத்துடன் இருந்து வருவதே எதிர்கால நன்மைகளுக்கு வழி வகுக்கும். பொறுமையாக் இருந்து உங்கள் பணிகளைப் பழுதில்லாமல் செய்து தலைமையின் நன்மதிப்பையும் தொண்டர்களின் ஆதரவையும் பெறுவதற்கு கடினமான உழைப்பு தேவை என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. சிலர் மிகப்பெரும் பொறுப்பான பதவிகளைப் பெற்று மகிழவும் வாய்ப்பு உண்டு. தலைமையின் நன்மதிப்பையும் ஆதரவையும்பெற உங்கள் கடினமான தொண்டு மட்டுமே இப்போது முக்கியமாகும்.

    பெண்களுக்கு:
    இதுவரை பல காரணங்களால் தள்ளிப்போய் வந்த சிலரது திருமணம் நிறைவேற வாய்ப்புண்டு. மறைமுக சேமிப்புகளில் ஓரளவு பணம் சேரும் என்பதாலும் அது உங்கள் கணவரின் பணத்தட்டுபாட்டை நீக்கும் வகையில் அவருக்குத் தக்க சமயத்தில் பயன்படக்கூடிய வகையில் அவருக்கு அமையும். பூர்வீகச் சொத்து மூலம் சிலருக்கு தனவரவு ஏற்படக்கூடும். வேலைகளின்காரணமாக பிரிந்திருந்த தம்பதி சேர்ந்து வாழும்வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். தேவையற்ற மனக்குழப்பங்களை விட்டுவிடுவது நல்லது. உடல்நலத்தில் கவனம் தேவை. சிறு உபாதைகளின் அறிகுறி தெரியும்போதே சிகிச்சை பெறுவதன் மூலம் வயிற்றுக்கோளாறு போன்றவற்றுக்கான மருத்துவச் செலவைக் கட்டுபடுத்த முடியும். வேலைக்குப் போகும் பெண்கள் குறிப்பிட்ட நேரத்தில் உணவு பழகத்தை கடைபிடிக்கவும்.

    நட்சத்திரப் பலன்கள்
    புனர்பூசம் 4 ஆம் பாதம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்த எல்லாப் பிரிவினருக்குமே ஏற்றமும் இறக்கமும் கூடிய நிலையே இருந்து வரும். எதிலும் எடுத்த எடுப்பிலேயே வெற்றியை எதிர்பார்க்க முடியாது எனபதால் தொழில் , வியாபாரம் போன்ற எதுவாயினும் பெரும் ஆதாயங்களை நீங்கள் எதிர்பார்ப்பதற்கில்லை. குடும்ப நிலையிலும் நிம்மதி குறைந்து காணப்படலாம். சுபநிகழ்ச்சி தொடர்பான முயற்சிகளில் தடங்கலுக்குப் பிறகு வெற்றி கைகூடும். பெரும்பாலும் கவலைகள் அதிகமாகவும் களிப்பு குறைவாகவும் காணப்படும் என்றாலும் மன்சோர்வுக்கு இடம் கொடுக்காமல் இறைவழிபாட்டின் மூலம் மன அமைதியும் நிம்மதியும்காணலாம். தெய்வபலம் துணை நிற்கும்.

    பூசம்:
    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நிதானமான மனப்போக்கு தேவை. சகோதர வழியில் சங்கடங்களைச் சந்திக்க நேரும். குடும்பத்தினரிடம் மனகசப்பு கொள்ளும் சூழ்நிலையில் மன அமைதி இழக்கும் நிலை ஏற்படுமாயினும் அது சிறிது காலத்தில் மாறிவிடும் நிலை உள்ளாதால் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் நிதானமாக இருந்துவாருங்கள். பெரும் பாதிப்பு எதுவும் நேர்ந்து விடாது. இறைவழிபாட்டில் மனத்தைச் செலுத்தி பொறுமையுடன் செயல் பட்டு வருவதே இப்போதைக்கு நன்மை அளிக்கக்கூடியதாகும். தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்காமல் இருப்பது உத்தமம்.

    ஆயில்யம்
    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் மாறிமாறி வரக்கூடிய நிலைஉள்ளதால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்து வருவது நல்லது. என்றாலும் எந்த முயற்சியில் ஈடுபடும் போதும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து திட்டமிட்டு அதன் பிறகே செயல்படத் தொடங்குவது அவசியம். தொழில் வியாபாரத்தில் வேலையாள்களால் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்ற நிலை உள்ளதால் அவர்களிடம் கனிவாகநடந்து கொள்வதன் மூலம் பிரச்சனைகள் குறையும். அரசு வழியில் சிலருக்கு சிக்கல்கள் ஏற்பட இடமுண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை. கண்ணில் சிலருக்கு கோளாறுகள் ஏற்பட்டு சிகிச்சைக்குப்பின் குணமாகும். சிலருக்கு திடீர் தனவரவு உண்டாக வாய்ப்புண்டு, வாகனப் பழுது பார்ப்புச் செலவு சிலருக்கு ஏற்படக்கூடும். நெருப்பு அருகில் பணிபுரிபவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

    பரிகாரம்:

    துர்க்கை அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். “ஓம் ஸ்ரீகர்ப்பாயை நம” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும்.
    அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 7

    + சுப நிகழ்ச்சிகளில் தடை நீங்கும் : – சகோதர சகோதரிகளிடம் தேவையற்ற வழக்கு

    ஜோதிடர்

    பெருங்குளம் ராமகிருஷ்ணன்

  • 2018-04-09-10-55-20

    வாகனங்களில் செல்லும் போது கவனம் அவசியம்

    மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

    பொதுவாக மிகவும் சாதுவான தோற்றத்தைக் கொண்டவர்களான நீங்கள் பார்வைக்குத் தான் அப்படியே தவிர, மற்றபடி அறிவுக்கூர்மையும் அன்புள்ளமும் செயலாற்றலும் மிக்கவர்கள்தான். தேவையான நேரத்தில் அவற்றையெல்லாம் முழுமையாக வெளிப்படுத்தி பிறரை வியப்படையச் செய்வீர்கள். தேவையற்ற மனக்குழப்பங்களுக்கு ஆளாகித் தவிப்பதைத் தவிர்த்தால் உங்கள் நிர்வாகத்திறமை பளிச்சிட வாய்ப்புண்டு.

    மற்றவர்களிடம் கை நீட்டி நின்று சேவகம் புரியும் அவசியம் இல்லாமல் பலரையும் அதிகாரம் செலுத்தி வேலை வாங்கும் அமைப்புடையவர்கள் நீங்கள். சுயமாகத் தொழிலோ, வியாபாரமோ செய்வதிலும், மற்றவர்கள் பலரையும் அனுசரித்துப் போவதிலும், விருப்பம் மிகக்கொண்ட உங்களுக்கு, இந்த வருட பலனைப் பார்ப்போம்.

    இந்த ஆண்டு உழைப்பு கூடினாலும் அவற்றுக்கு இரட்டிப்பான வருமானம் கிடைக்கும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளும் நண்பர்களும் உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். உங்களைச் சார்ந்திருப்பவர்களையும் உயர்த்தி விடுவீர்கள்.

    அதேநேரம் எவருக்கும் அவர்கள் கேட்காமல் அறிவுரைகள் கூற வேண்டாம். வாழ்க்கை சலிப்பு தட்டிவிட்டது என்றிருந்தவர்களுக்கு அது மாறி நம்பிக்கை துளிர்விடும். வெளிநாடுகளுக்கு உத்தியோகம், கல்வி ஆகியவற்றிற்காகப் பயணம் செய்ய நேரிடும். அதோடு சமூகத்தின் மேல்தட்டு மக்களின் நட்பு கிடைக்கும். கடினமான வேலைகளையும் சரியாக முடித்து உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆக அரசாங்க அதிகாரிகளின் உதவிகளும் கிடைக்கும் காலகட்டமாக இது அமைகிறது.

    உத்தியோகஸ்தர்களுக்கு :
    உங்கள் பணிகளில் கவனக் குறைவு கூடாது. சக பணியாளர்கள் உங்கள் மீது புகார் எழுப்பத் தயாராயிருப்பார்கள். மறைமுக வருமானங்களில் அதிக எச்சரிக்கை தேவை. நீங்கள் எதிர்பார்த்த்படி சிலருக்கு இடமாற்றங்கள் கிடைக்கக் கூடுமாயினும் உங்களுக்குத் திருப்திதர முடியாதபடி கடுமையான வேலைப் பளு நிறைந்ததாக இருக்கக் கூடும். உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறக்கூடிய வகையிலும், புகார் எழ வாய்ப்பில்லாத நிலையிலும் உங்கள் பணிகளில் மிகுந்த அக்கறையுடன் இருந்து வருவது அவசியம். சக பணியாளர்களிடம் பணிவாகவும் சுமூகமாகவும் பழகி வருவதன் மூலம் பெரும்பாலான சங்கடங்களைத் தவிர்க்கலாம். உடல் நலத்திலும் கவனம் செலுத்துவது அவசியம்.

    வியாபாரிகளுக்கு :
    உங்கள் எதிரிகள் உங்களுக்குப் போட்டியாகக் கடுமையாக இயங்கக் கூடும் என்பதால் உங்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் நீங்கள் புதுமையாக ஏதேனும் சலுகைகளை அறிவித்து அவர்களை உங்கள் பக்கமே தக்க வைத்துக் கொள்வதன் மூலம் வியாபாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படாமல் குறைந்தபட்ச லாபத்துடன் நடைபெற்று வர வழிவகுக்கலாம். வேலையாள்களின் நடாவடிக்கைகளைக் கண்காணித்து வருவதன் மூலம் விரையங்களைத் தவிர்க்கலாம். வாடிக்கையாளர்களிடம் அதிக அளவில் கடன் நிலுவை இல்லாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்.

    கலைத்துறையினருக்கு
    புதிய வாய்ப்புகள் அமைவதற்குரிய நிலை சாதகமாக இல்லை என்றாலும் கடுமையாக உங்கள் முயற்சிகளைத் தொடர்வது அவசியம். உங்கள் வசதிகளில் பெரும்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் அளவில் சில வாய்ப்புகளை பெறக்கூடும். எல்லாரிடமும் இனிமையாகப் பேசி பழகுங்கள். இசை, நடனக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள் போன்ற பிரிவினர் கூடுதல் வாய்ப்புகளைப் பெறக்கூடும். வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளும் போது மிகுந்த நிதானமாகவும், சிக்கனமாகவும் நடந்து கொள்வது அவசியம். புதிய வாய்ப்புகள் கிட்டும். அதன் மூலம் நற்பெயர் கிட்டும்.

    மாணவர்களுக்கு :
    விளையாட்டை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.சிலர் படிப்பை நிறுத்தி விட்டு உத்தியோக வாய்ப்புகளைப் பெறவும் முயலக் கூடும். விளையாடும் போதும் வாகனங்களிலும் கவனம் தேவை. முயற்சிக்கேற்றவாறு மதிப்பெண்களைப் பெறுவர். பெற்றோர்களின் ஆதரவும் நண்பர்களின் உதவியும் கிடைக்கும். ஆன்மிகத்திலும் விளையாட்டிலும் நேர்த்தியாக ஈடுபடுவீர்கள். படிப்பிற்காக போதிய பயிற்சிகளைத் தவறாமல் செய்வீர்கள்.

    அரசியல்வாதிகளுக்கு :

    எதிலும் எப்போதும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய ஆண்டாக அமைகிறது. சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைத்தாலும் எதிரிகளின் கை ஓங்கியே காணப்படும். கட்சியில் உங்கள் மீது கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்படலாம். வாயைக் கொடுத்து விவகாரத்தில் மாட்டிக்கொள்ள வேண்டாம். அதே நேரம் பயணங்களில் வெற்றியடைவீர்கள்.

    பெண்களுக்கு: 

    எதிலும் பொறுமையும், நிதானமும் தேவை. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். உடல் நலத்தில் அக்கறை தேவை. கருவுற்ற பெண்களுக்கு கவனம் தேவை. கோபத்தைக் குறைத்துக் கொள்வதும் நன்மைகளுக்கு வழிவகுக்கும். யாரிடமும் தேவையில்லாத பேச்சுகளை பேச வேண்டாம்.

    நட்சத்திரப் பலன்கள்:
    மிருகசீரிஷம் 3,4 ஆம் பாதங்கள்:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் எளிதில் முடியாமல் தாமதம் ஆகக் கூடும் என்பதற்காக நீங்கள் அவசரப் படாதீர்கள். இறைவழிபாடு, தியானம் போன்றவற்றில் மனத்தைச் செலுத்துவது நல்லது. சிலர் விருதுகள், பாராட்டுகள் போன்றவற்றை பெற வாய்ப்புண்டு.பக்குவமாகச் சமாளிப்பது அவசியம். உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள்.பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகள் இருப்பவர்கள் சாதகமான தீர்ப்பைப் பெறுவது சாத்தியமாகும்.

    திருவாதிரை:

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் தொழில் , வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் குறைந்த பட்ச ஆதாயத்தைப் பெறக்கூடும். நஷ்டம் பற்றிக் கவலைப்படாதீர்கள். அதற்கு வாய்ப்பு இல்லை. உறவினரின் ஒத்துழைப்பை எல்லாம் பெருமளவில் எதிர்பார்ப்பதற்கில்லை. பணம் கொடுக்கல், வாங்கலில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பிறமொழி பேசும் ஒருவரால் நன்மை உண்டாகும். தொழில் முயற்சிகளில் கவனம் தேவை.

    புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்:

    இந்தாண்டு பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களில் சிலருக்கு இப்போது நல்லதொரு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். பெரும்பாலானவர்களுக்கு இனம் புரியாத தேவையற்ற மனக்கலக்கம் ஏற்பட்டு நிவர்த்தியாகும். வீட்டில் சுபநிகழ்ச்சி தள்ளிப்போகலாம். கடன் கிடைக்குமாயினும் வாங்காமலேயே சமாளிப்பது பிற்காலத்திற்கு உதவியாக அமையும். ஜாமீன் கையெழுத்துபோட்டு கடன் வாங்கித் தர முயற்சிக்காதீர்கள்.

    பரிகாரம்:

    புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசியை அர்ப்பணித்து 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும். “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6

    + குடும்பத்தில் சந்தோஷம் : – வாகனங்களில் செல்லும் போது கவனம்

    ஜோதிடர்

    பெருங்குளம் ராமகிருஷ்ணன்

     

  • 2018-04-09-10-19-48

    கிருத்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதங்கள்

    முதலீடு அதிகரிக்கும்

    கவர்ச்சிகாரகன் சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே எப்போதும் உங்களைச் சுற்றி ஒரு வட்டம் இருந்து கொண்டேயிருக்கும் என்னும் அளவுக்கு உறவினர்களை விட நண்பர்கள் வட்டம் உங்களுக்குப் பெரிதாயிருக்கும். எல்லாரையும் பற்றிய விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர்களான நீங்கள், அவர்களின் குணாதிசயங்களையும் நன்றாக உணர்ந்தவர்களாகவே இருப்பீர்கள். எனவே உங்களை ஏமாற்ற நினைப்பவர்கள் தான் ஏமாறுவார்களேயன்றி, நீங்கள் எதிலும் ஏமாற மாட்டீர்கள். உங்கள் உள்ளத்தைப் போலவே உடைகளும் தூய்மையாகவே இருக்க வேண்டுமென விரும்புபவர் நீங்கள்.

    இந்த ஆண்டு சிலருக்கு புதிய வீடுகளுக்கு மாறும் சூழ்நிலை உண்டாகும். பணவரவும் திருப்திகரமான நிலையிலேயே இருக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் ஆழ்ந்த நுண்ணறிவை அனைவரும் பாராட்டுவார்கள். உங்கள் அதிகாரமும், பதவியும் உங்களைப் பலப்படுத்தும். உங்கள் மதிப்பு மரியாதையும் உயரும். செய்தொழிலில் புதிய மாற்றங்களைப் புகுத்துவீர்கள். புதிய கடன்களும் கிடைக்கும். சிந்தனையில் தெளிவும் செயலில் வீர்யமும் பெற்று உங்களது செயல்களை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். உடலாரோக்யமும் சிறப்பாகவே தொடரும். வழக்கு விவகாரங்களில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். மனதில் காரணமில்லாமல் குடிகொண்டிருந்த குழப்பங்களும் மறையும். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் உங்களை அனுசரித்து நடந்து கொள்வார்கள். இரண்டுபட்டிருந்த குடும்பம் ஒன்று சேரும். குடும்பச் சூழலில் இன்பகரமான மாற்றங்களைக் காண்பீர்கள். குழந்தை இல்லாமல் தவித்தவர்களுக்கு மழலை பாக்கியமும் கிடைக்கும்.

    உத்தியோகஸ்தர்களுக்கு:
    உங்கள் அலுவலகம் தொடர்பான விஷயங்களில் முழுமையான திருப்தியைக் காண்பீர்கள். எதிர்பார்த்த இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் போன்றவற்றை எளிதாகப் பெற்று மகிழ்வீர்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் உயர் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கப்பெற்று மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். மறைமுக வருமானங்களின் காரணமாக உங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பு பெருகும் என்பதுடன் அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கும் நாளும் உயர்ந்து வரும். சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நீண்டகாலம் திட்டமிட்டு வந்தவர்களின் திட்டம் செயல்வடிவம் பெறும். இதுவரை வேலை தேடி அலைந்தவர்கள் இப்போது ஒரு நல்ல வேலை கிடைக்கப் பெறுவீர்கள். கௌரவப் பதவிகளைப் பெறக்கூடிய நிலை சிலருக்கு உண்டு.

    வியாபாரிகளுக்கு:
    முழுமனநிறைவைப் பெறக்கூடிய வகையில் லாபம் கணிசமான அளவுக்கு உயரும். இருப்பினும் வியாபார ஸ்தலத்தில் உங்கள் நேரடிப் பார்வை இருந்து வருவது அவசியம். கூடிமானவரை வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்வதில் உங்கள் கவனம் இருக்க வேண்டும். இல்லையெனில் போட்டியாளர்களின் பக்கம் உங்கள் வாடிக்கையாளர்களின் பார்வை திரும்பிவிட இடமுண்டு. எனவே தரமான பொருள்களைக் கொள்முதல் செய்வதில் நீங்கள் முழுக் கவனத்தையும் செலுத்துவது அவசியம். வாடிக்கையாளர்களிடம் கடன் பாக்கிகள் அதிகமாகாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். இல்லையெனில் வசூல் செய்வது கடினம். சிலர் வணிக சங்கங்களில் பொறுப்பான பதவியை ஏற்க நேரும்.

    கலைத்துறையினருக்கு:
    புதிய வாய்ப்புகள் எளிதில் கிடைக்கக் கூடிய காலகட்டம் என்பதால் நீங்கள் பெரும் முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லாமலேயே வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் சக கலைஞர்களின் போட்டியும் கடுமையாகவே இருக்ககூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் முழுமையாகப் படித்துப் பார்த்து கையெழுத்திடுவது நல்லது. உங்கள் புகழும் பொருளாதார அந்தஸ்தும் உயரக்கூடிய வாய்ப்புண்டு. எல்லோரிடமும் அனுசரணையாகவும் சுமூகமாகவும் நடந்து கொள்வத்ன் மூலம் உங்களுக்குரிய வாய்ப்புகளில் சில, பிற கலைஞர்களுக்குக் கை நழுவிப் போகாமல் காத்துகொள்ள முடியும் என்பது உங்கள் கவனத்தில் இருந்து வருவது அவசியம்.

    மாணவர்களுக்கு:
    படிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டுப் போட்டிகள் போன்ற பிற துறைகளிலும் நீங்கள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறக்கூடிய நிலை உண்டு. அரசு வழங்கும் கல்விச் சலுகைகள் போன்றவற்றைப் பெற்று மகிழ்வீர்கள். நீங்கள் பிற துறைகளில் ஈடுபாடு கொண்டவர்கள் என்றாலும் இப்போதைக்கு படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவமும், முன்னுரிமையும் கொடுத்தாக வேண்டும்.

    அரசியல்வாதிகளுக்கு:
    உங்கள் தன்னலமற்ற உண்மையான தொண்டின் காரணமாக தலைமையின் பாராட்டுகளையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள். உங்கள் மன உறுதியும், விசுவாசமும் உங்களுக்குப் பொறுப்பான பதவிகளையும் பெற்றுத்தரும். இதன் காரணமாக உங்கள் பொருளாதார அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்வது சாத்தியமாகும். தலைமை மட்டுமல்லாமல் தொண்டர்களும் உங்களை மிகவும் மதிப்பார்கள் என்பதால் நாளுக்கு நாள் உங்கள் செல்வாக்கு உயரக் காண்பீர்கள். உங்கள் மன உறுதியைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்பதையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது.

    பெண்களுக்கு:
    வேலையின் நிமித்தம் வெவ்வேறு ஊர்களில் இருந்தவர்கள் இப்போது சேர்ந்து வாழும் நிலைமை உருவாகும். திருமணம் தள்ளிப்போய் வந்த சிலருக்கு இப்போது திருமண யோகம் கிட்டும். சிலருக்கு மனம் விரும்பியவரையே மாலையிட்டு மணம் முடிக்கும் வாய்ப்பு அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திருமணம் போன்ற உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து மகிழும் வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி சிறு சச்சரவுகளைச் சமாளித்து அனைவரின் நன்மதிப்பையும் அன்பையும் பெறுவீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சியடையும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறும். மறைமுகச் சேமிப்புகள் மனநிறைவு தரும்.

    நட்சத்திரபலன்கள்
    கிருத்திகை 2,3,4 ஆம் பாதங்கள்:
    இந்த ஆண்டில் புதிய, சொத்துகள் அமையும் வாய்ப்பு உருவாகும். குடும்பத்தினரின் தேவைகளை நல்ல முறையில் நிறைவேற்றி அவர்களைத் திருப்தி படுத்துவீர்கள். நல்லவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைப்பதன் மூலம் உங்களுக்கு நன்மைகள் நடக்கும். மகன் அல்லது மகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு வெளிநாட்டுப் பயணங்கள் அமையக்கூடும். கோபத்தைக் கட்டுபடுத்துவதும், வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது நிதானமாக இருந்து வருவதும் அவசியம். பொதுவாக உடல் நலத்தில் ஓரளவு அக்கறை செலுத்தி வருவது நல்லது. புதிய திட்டங்களைச் செயல் படுத்தும் போது ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நன்மை தரும்.

    ரோகிணி:
    இந்த ஆண்டில் எதிலும் நிதானமாகச் செயல்படுவதன் மூலம் தாமதமின்றி முழுமையான வெற்றியைப் பெற முடியும். குழப்பத்துக்கு இடங்கொடுக்காதீர்கள். அரசு வழியில் சிலர் நன்மைகளைப் பெற்று மகிழ வாய்ப்பு உண்டு. மனைவியின் பெயரில் அசையாச் சொத்துகளைச் சிலர் வாங்க முற்படுவீர்களாயினும் ஆவணங்களைச் சரியாகப் பரிசோதனைச் செய்து, வாஸ்து நிபுணர் ஒருவரின் ஆலோசனைகளையும் பெற்ற பின்னர் வாங்குவது நன்மை தரும். பிற்காலத்தில் தொல்லை நேராமல் தவிர்க்கலாம். பொருளாதார நிலையில் திருப்திகரமான போக்கு தென்படும்.

    மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதங்கள்:
    இந்த ஆண்டு சகோதர வழியில் செலவு உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கக்கூடிய சந்தர்ப்பம் கைகூடி வரும். இதற்கு உறவினர்களின் ஒத்துழைப்பு பெரிதும் உதவக்கூடும். நண்பர்களின் ஒத்துழைப்பும் நல்ல முறையிலேயே இருந்து வரும். கடிதத் தொடர்புகளால் களிப்பு தரும் செய்திகளைக் கேட்க வாய்ப்பு உண்டு. பிரிந்திருந்த தம்பதி இப்போது சேர்ந்து வாழக்கூடிய நிலை உருவாகும். மணமான பெண்கலில் சிலர் மகப்பேறு பாக்கியத்தைப் பெற்று மகிழக்கூடும். எதிர்பாராத தனவரவு சிலருக்கு ஏற்படக்கூடும். வழக்குகளில் வெற்றி உண்டு. வேலைக்குப் போகும் பெண்கள் எதிர்பாராத ஊதிய உயர்வு போன்ற நன்மைகளைப் பெற்று உற்சாகமடைவீர்கள்.

    பரிகாரம்:

    வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும். பணப் பிரச்சனை நீங்கும். உறவினர் மற்றூம் நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும். “ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்ம்யை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

    + முதலீடு அதிகரிக்கும் : – தன்னம்பிக்கை குறையலாம்.

    ஜோதிடர்

    பெருங்குளம் ராமகிருஷ்ணன்

     

  • 2018-04-09-07-50-13

    தன்னம்பிக்கை உயரும்

    (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்)

    கம்பீரமான தோற்றத்தையும் பரந்த மனப்பான்மையும் கொண்ட உங்கள் உள்ளம் உறுதி வாய்ந்தது. எப்போதும் உற்சாகமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பீர்கள். சோர்ந்திருப்பது உங்களுக்குப் பிடிக்காது. செய்வன திருந்தச் செய் என்பதற்கேற்ப உங்கள் செயல்பாடுகளில் யாராவது குறை கண்டுபிடிப்பது கடினம்.

    அந்த அளவுக்கு எதையுமே சிறப்பாகவும், செம்மையாகவும் செய்து முடித்து பலருடைய பாராட்டுகளைப் பெறக்கூடியவர்கள் நீங்கள். நீங்கள் யாரையேனும் தவறாகப் பேசிவிட்டால் அது அப்படியே பலித்துவிடும் என்பதால் நீங்கள் உங்களைக் கட்டுப்ப்டுத்திக் கொள்வதே சிறப்பாகும். இந்த ஆண்டு நீங்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகக் காண்பீர்கள். தெய்வ வழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். தள்ளி வைத்திருந்த காரியங்களைச் செய்யத் தொடங்குவீர்கள்.

    பெற்றோருடன் இணக்கமான உறவு உண்டாகத் தொடங்கும். உங்களுடைய தெளிவான எண்ணங்களால் குடும்பத்தில் உங்களின் மதிப்பு மரியாதை உயரும். பெரியோர்களின் தொடர்பு உண்டாகி உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். நெடுநாளாக உங்களை வாட்டி வதைத்த உடலுபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

    வெளியூர் – வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். லாபகரமான முதலீடுகளைச் செய்து உபரி வருமானம் நிரந்தரமாக வர வழி வகுத்துக் கொள்வீர்கள். மறைமுகக் கலைகளான ஆழ்மனத் தியானம் போன்றவற்றைச் சுயமாகக் கற்றுக் தேர்ந்து அடுத்தவர்களுக்கும் கற்றுத் தருவீர்கள். சகோதர சகோதரிகளின் குறைகளைப் பெரிது படுத்தமாட்டீர்கள், மேலும் முன்பு உங்களை ஏமாற்றியவர்களையும் இந்த காலகட்டத்தில் மன்னித்துவிடுவீர்கள்.

    உத்தியோகஸ்தர்களுக்கு:

    உயரதிகாரிகளின் ஆதரவை உறுதுணையாகக் கொண்டு உங்கள் பெரும்பாலான விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சக பணியாளர்களின் பொறாமைப் பார்வை உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கும். உங்கள் அன்றாடப் பணிகளில் சிறு குறையும் நேராமல் மிகுந்த அக்கறை செலுத்தி வருவதே மிக அவசியம். எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவை கிடைக்கும். பொருளாதார நிலையில் பற்றாக்குறை நேர இடமில்லை. சிக்கன நடவடிக்கைகளின் மூலம் ஓரளவு சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

    வியாபாரிகளுக்கு:

    கடன் விஷயத்தில் கவனமாக இருந்தால் மனநிறைவிற்கு குறைவிராது. வியாபாரம் லாபகரமாகவே நடைபெற்று வரும். நாளுக்குநாள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று வியாபாரத்திலும் வளர்ச்சியைக் காண்பது அவசியமாகும். அதே நேரத்தில் அவர்களைத்திருப்தியடையச் செய்யும் வகையில் தரமான பொருள்களைக் கொள்முதல் செய்து வைப்பது வியாபாரத்தை பெருக்க உதவும். தொழில் வளர்ச்சியும் வருமானமும் சீராக இருந்து வரும் என்றாலும் செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் கடன் வாங்கும் அவசியம் ஏற்படாமல் தவிர்க்கலாம். ஒழுங்காகத் திட்டமிட்டு முறைப்படி செயல்படுவதன் மூலம் தொழிலில் படிப்படியாக முன்னேற்றப் போக்கைக் காணலாம்.

    கலைத்துறையினர் :

    கலைத்துறையினருக்கு இடைத்தரகர்கள் போன்றவர்களின் ஒத்துழைப்பை எதிர்பாராமல் நீங்கள் நேரடியாகவே முயற்சி செய்து வருவதன் மூலம் புதிய வாய்ப்புகள் சிலவற்றைப் பெற்று மகிழ இடமுண்டு. பின்னணி இசைக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள், நடனக் கலைஞர்கள் போன்றோர் கூடுதலான வாய்ப்புகளைப் பெற முடியும். வெளியூர்ப் பயணங்களை அடிக்கடி மேற்கொள்ள நேரும். சக கலைஞர்களிடம் சுமுகமாக் நடந்து கொள்வதன் மூலம் உங்கள் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். வண்டி, வாகனவசதிகள் சிலருக்கு அமையக் கூடிய நிலை உண்டு. பயிற்சி பெற்று வரும் கலைஞர்கள் அரங்கேற்றத்தை நடத்தி மகிழ சில மாதங்கள் பொறுத்து இருக்க வேண்டும்.

    மாணவர்கள்:

    மாணவர்களுக்கு நீங்கள் முயற்சித்தால் கல்வியில் நாளுக்கு நாள் முன்னேற்றம் காண முடியும். தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று உயர்வகுப்புகளுக்குச் செல்லக் கூடும். இடையில் நிறுத்தி வைத்திருந்த சில பகுதிகளுக்கான தேர்வுகளையும் இப்போது எழுதி நிறைவு செய்வீர்கள். சிலர் உயர்கல்விகற்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லவும் முயன்று வெற்றி பெறுவீர்கள். ஞாபக மறதி, உடல்சோர்வு சில நேரங்களில் ஏற்படக் கூடுமாயினும், அதற்கு இடங்கொடுக்காமல் இருப்பது நல்லது. சுற்றுலாப் பயணங்கள் என எங்காவது செல்ல நேரும்போது குளங்களில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது.

    அரசியல்வாதிகள்:

    அரசியல்வாதிகளுக்கு உங்களுக்கு சில சோதனைகள் நேர இடமுண்டு என்றாலும் நீங்கள் உறுதியான மனத்துடன் இருந்து பொறுமை காத்து வருவதன்மூலம் தலைமையின் பேரன்பையும், நன்மதிப்பையும் பெறுவீர்கள். மனதை அலைபாயவிட்டு மற்றவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி நிலை தடுமாறுவது எதிர்காலத்தில் துன்பம் தரும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டு நடப்பது அவசியம். உங்களுக்குத் தரப்பட்டுள்ள பணிகளைத் திறமையாக நிறைவேற்றுவதிலேயே உங்கள் நோக்கமெல்லாம் இருந்து வருவது அவசியம்.

    பெண்களுக்கு:

    பெண்களுக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிபாராத நன்மைகளைப் பெறக் கூடும். தள்ளிப்போய் வந்த திருமணம் திடீரென்று முடிவாகி திருமண வாய்ப்பைச் சிலர் பெறக்கூடும். உடல்நலத்தில் சிறுசிறு உபாதைகள் அடிக்கடி ஏற்படக்கூடிய நிலை உள்ளதால் கவனமாக இருந்து வருவது நல்லது. கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதன் மூலம் குடும்பத்தில் சில சங்கடங்களைத் தவிர்க்கலாம். வேலை நிமித்தம் குடும்பத்தை விட்டுப் பெரிந்திருந்த தம்பதி இப்போது சேர்ந்து வாழச் சந்தர்ப்பம் உருவாகும். நட்சத்திரப்பலன்கள்

    அஸ்வினி:

    இந்தாண்டு ஆரோக்கிய கோளாறுகளிலிருந்து விடுபட முடியும். புத்திர வழியில் மகிழ்ச்சியடையக்கூடிய நிலை உண்டு. உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறும் வகையில் உங்கள் பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களால் அனுகூலமடையும் வாய்ப்பு சிலருக்கு அமையக் கூடும். பொதுவாக எதிலும் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் சங்கடங்கள் பெரும்பாலும் விலகும். மகான்களின் அருளாசிகள் கிட்டும்.

    பரணி:

    இந்தாண்டு எதிர்பார்க்கும் உதவிகள் எதுவாயினும் கிடைக்க வாய்ப்புண்டு. ஆலய தரிசனம் கண்டுவர குடும்பத்துடன் ஒரு பயணத்தை மேற்கொண்டு திரும்புவீர்கள். அரசு வழியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம். நீர்நிலைகளில் எச்சரிக்கை தேவை. அவசர பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. சகோதர வழியில் திருப்தி தரக்கூடிய ஒத்துழைப்பு கிடைத்து வரும். சிலர் அசையாச் சொத்துக்களை வாங்குவதில் முனையக்கூடும். பணப்புழக்கம் மனநிறைவு தரும் வகையிலே இருந்து வரும். கொடுக்கல் வாங்கலிலும் பிரச்சனை எதுவும் இராது என்றாலும் பெருந்தொகை கடன் கொடுக்கும்போது போதிய ஆவணங்கள் இல்லாமல் கொடுப்பது கூடாது.

    கிருத்திகை:

    இந்தாண்டு புதிய முயற்சிகள் எதிலும் அவரசப்பட்டு ஈடுபடாதீர்கள். ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து சாதக பாதகங்களை அறிந்த பின்னர் திட்டமிட்டுச் செயல் படுத்துவது நல்லது. கோபத்தைக் குறைத்து அனைவரிடமும் கனிவாகப் பேசிப் பழகுவது நல்லது. பயணங்களின் போது மிகவும் எச்சரிக்கையாய் இருந்து வருவது அவசியம். எதிர்பாராத தனவரவுகள் சிலருக்கு ஏற்படக்கூடிய நிலை உண்டு. நண்பர்களால் சிலர் அனுகூலமடையக்கூடும். உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.

    பரிகாரம்:

    செவ்வாய்கிழமை தோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும். அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

    + தன்னம்பிக்கை உயரும் : – தைரிய இழப்பு ஏற்படலாம்.

    ஜோதிடர்

    பெருங்குளம் ராமகிருஷ்ணன்

  • 2018-04-09-07-02-41

    இறைவன் அருளாலும் பரம சைதன்யமான கிருபையாலும் புத்தொளி தரும் விளம்பி வருஷம் 14 ஏப்ரல் 2018 அன்றைய தினம் பிறக்கிறது. இந்த புத்தாண்டில் நம்முடைய வாழ்வில் மாற்றம் ஏற்றமும் வருவதற்கும் – இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும் – நல்ல மழை பொழியவும் – அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நல்ல ஆரோக்கியம் ஏற்படவும் – விவசாயம் செழிக்கவும் நாம் இறைவனை வணங்குவோம்.

    இந்த தமிழ் புத்தாண்டு சனியின் நக்ஷத்ரமான உத்திரட்டாதி நக்ஷத்ரத்தில் பிறக்கிறது. நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ விளம்பி வருஷம் உத்தராயணம் வஸந்தரிது சித்திரை மாதம் 01ம் தேதி இதற்குச் சரியான ஆங்கிலம் 14 ஏப்ரல் 2018 அன்றைய தினம் தினசுத்தி அறிவது சனிக்கிழமை கிருஷ்ண திரயோதசியும் – உத்திரட்டாதி நக்ஷத்ரமும் – மாஹேந்திர நாமயோகமும் – வணிஜை கரணமும் – மீன ராசியில் – சிம்ம நவாம்ச சந்திர அம்சத்தில் – மேஷ லக்னத்தில் – சிம்ம நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 2.18க்கு – காலை 7.02க்கு தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. திசா இருப்பு சனி திசை 16 வருஷம் 6 மாதம் 8 நாட்கள்.

    புத்தாண்டின் கிரக நிலைகளைப் பார்க்கும் போது உலாவரும் நவகிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் உலகத்திலிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும் வழியில் அமைந்திருக்கிறது. தமிழ் புத்தாண்டு சர நெருப்பு லக்னமான மேஷ லக்னத்தில் பிறக்கிறது. லக்னாதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் நட்பு வீடான குரு வீட்டில் சஞ்சாரம் பெற்றிருக்கிறார்.

    மீன ராசி உத்திரட்டாதி நக்ஷத்ரத்தில் ஆண்டு பிறக்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் லக்னாதிபதி பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி லக்னத்திலேயே உச்சமாக இருப்பதும் – பாக்கியாதிபதி குரு லக்னத்தைப் பார்ப்பதும் மிக நல்ல யோக அமைப்பாகும்.

    விளம்பி வருஷ வெண்பா:

    விளம்பி வருடம் விளைவு கொஞ்ச மாரி அளந்து பொழியும் அரசர் களங்கமுடன் நோவான் மெலிவரே நோக்கரிதாகுங் கொடுமை ஆவா புகலவரி தாம்.

    விளம்பி வருஷ நவநாயகர்களும், பலன்களும்:

    ராஜா – சூரியன் பலன் – குதிரைகளுக்கதிபதி

    மந்திரி – சனி பலன் – யானைகளுக்கதிபதி

    அர்காதிபதி – சுக்கிரன் பலன் – பக்ஷிக்களுக்கதிபதி

    ஸஸ்யாதிபதி – செவ்வாய் பலன் – பிரஜைகளுக்கதிபதி

    ஸேனாதிபதி – சுக்கிரன் பலன் – பசுக்களுக்கதிபதி

    ரஸாதிபதி – குரு பலன் – ஸர்ப்பங்களுக்கதிபதி

    தான்யாதிபதி – சூரியன் பலன் – ஒட்டங்களுக்கதிபதி

    மேகாதிபதி – சுக்கிரன் பலன் – விருக்ஷங்களுக்கதிபதி

    நீரஸாதிபதி – சந்திரன் பலன் – கிரஹங்களுக்கதிபதி

    வருடம் பிறக்கும் போது கிரகங்களுடைய பாதசாரங்கள்

    லக்னம் – பரணி 1ல் – சுக்கிரன் சாரம் சூரியன் – அஸ்வினி 1ல் – கேது சாரம் சந்திரன் – உத்திரட்டாதி 1ல் – சனி சாரம் செவ்வாய் – பூராடம் 3ல் – சுக்கிர சாரம் புதன் – உத்திரட்டாதி 1ல் – சனி சாரம் குரு – விசாகம் 3ல் – சுய சாரம் சுக்கிரன் – பரணி 3ல் – சுய சாரம் சனி – மூலம் 3ல் – கேது சாரம் ராகு – பூசம் 4ல் – சனி சாரம் கேது – திருவோணம் – 2ல் – சந்திரன் சாரம்

    கிரக மாற்றங்கள்:

    விளம்பி வருஷம் புரட்டாசி மாதம் – 18ம் தேதி – 04.10.2018 – வியாழக்கிழமை – இரவு 10.05க்கு குரு பகவான் – துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். விளம்பி வருஷம் மாசி மாதம் – 01ம் தேதி – 13.02.2019 – புதன்கிழமை – பகல் 02.02க்கு ராகு பகவான் – கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கு மாறுகிறார். விளம்பி வருஷம் மாசி மாதம் – 01ம் தேதி – 13.02.2019 – புதன்கிழமை – பகல் 02.02க்கு கேது பகவான் – மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்.

    ஜோதிடர்

    பெருங்குளம் ராமகிருஷ்ணன்

  • 2018-04-08-08-49-53

    அட்சயதிரிதியை தினத்தில் மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆனால் மகாலட்சுமியே பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவன்கோயிலுக்கு சென்றால் பலன் பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. திருச்சி அருகே அமைந்துள்ள வெள்ளூரில் தான் மகாலட்சுமி பிரதிஷ்டை செய்த திருக்காமீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மன் சிவகாம சுந்தரி தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள்.
    இந்த கோயலின் தல வரலாறு : தட்சன் யாகம் நடத்திய கதை எல்லோருக்கும் தெரியும். ஈசனை விடத் தானே உயர்ந்தவன் என்கிற செருக்கு கொண்டு பிரமாண்டமான ஒரு யாகத்தை நடத்தினான் தட்சன். அவனது மாப்பிள்ளையான அதாவது தட்சனின் மகளான தாட்சாயினியின் துணைவர் சிவபெருமானுக்கு இந்த யாகத்தில் கலந்து கொள்ள அழைப்பு இல்லை. ஆனாலும், தந்தை நடத்தும் யாகத்தில் மகள் கலந்து கொள்ளாமல் இருக்க முடியுமா? பாசம் விரட்டியது. எனவே, அழைப்பு இல்லாமலே அங்கு போய் அவமானப்பட்டுத் திரும்பினாள் பராசக்தி. கூடவே, தந்தைக்கு சாபமும் கொடுத்து விட்டு வந்தாள். தன் அனுமதி இல்லாமல் சென்றதால், உமையை நெற்றிக்கண்ணால் சுட்டெரித்தார் ஈசன். தவறை உணர்ந்த தேவி, மீண்டும் ஈசனுடன் இணைந்து கயிலையில் வசிக்க விரும்பினாள்.
    பூலோகத்தில் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து என்னை வழிபடு. உரிய நேரம் வரும்போது உன் விருப்பம் நிறைவேறும் என்று அருளினார் சிவபெருமான். அதன்படி பர்வதராஜனின் மகளாக அவதரித்த அன்னை, பார்வதி என்ற திருநாமம் பூண்டு பர்வதமலையில் தவம் புரியலானாள். இறைவனும் இறைவியும் பிரிந்து இருந்தால், உலக சிருஷ்டி எவ்வாறு நிகழும்? பிரபஞ்சம் பரந்து விரிய வேண்டாமா? சக்தியும் சிவனும் சேர்ந்தால்தானே இது சாத்தியம் ! இதற்காக பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர்.
    சின்முத்திரை காட்டி யோக நிலையில் இருக்கும் ஈசனுக்கு காமத்தின் மீது எப்படி நாட்டம் வரும்? காம பாணம் ஈசன் மேல் விழுந்தால்தானே அவருக்கு சக்தியின் நினைவு வரும்? ! இதற்காக அனைவரும் மன்மதனை அணுகினர். ஆனால், மன்மதன் சம்மதிக்கவில்லை. காம பாணத்தை எனக்கு அருளியவரே எம்பெருமான்தான். இதை அவர் மேல் நான் எய்வது எனக்கு நானே அழிவைத் தேடிக் கொள்ளும் முடிவாகும் என்று மறுத்தான்.
    தேவலோகமே ஒன்று திரண்டு சாபம் விட்டது மன்மதனுக்கு. அதன் பின் வேறு வழியின்றி, பல மைல் தொலைவில் உள்ள ஒரு புன்னை மரத்தடியில் ஒளிந்து கொண்டு ஈசனைக் குறி பார்த்து காம பாணம் எய்யத் தயாரானான்.
    நடந்ததையும், நடக்கப் போவதையும் அறியாதவரா ஈசன்? வில்லில் இருந்து பாணம் வெளிப்பட்ட நேரத்திலேயே தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்துப் பொசுக்கினார். விளைவு – பாணம் திசைமாறி பார்வதியின் மேல் விழுந்தது. தவம் கலைந்தது. தன் அவதார நோக்கம் உணரப் பெற்றாள் தேவி. சிவனை அடைவதற்கான காம பாணம் தன் மேல் விழுந்ததால், சிவகாம சுந்தரி ஆகி, ஈசனுடன் கூடினாள். எனவேதான் இங்குள்ள ஈசன் திருக்காமேஸ்வரராகவும், தேவி சிவகாம சுந்தரியாகவும் நமக்குக் காட்சி தருகிறார்கள்.
    இந்த நிகழ்வை சித்திரிக்கும் படைப்புச் சிற்பம் இந்த ஆலயத்தில் காணப்படுகிறது. சிவபெருமானை நோக்கி காமக் கணை விடும் மன்மதனின் சிற்பம் நம்மைக் கவர்கிறது. மன்மதனின் இழப்பை அவன் மனைவியான ரதிதேவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இழந்த கணவனை திரும்ப வேண்டி ஈசனிடம் மண்டியிட்டாள். அதே வேளையில் மன்மதன் இல்லாததால், ஜீவ ராசிகளிடம் காதல் உணர்வு பெருகவில்லை. உயிர்ப் பெருக்கம் நிகழவில்லை. எனவே, மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்து ரதிதேவியின் கண்களுக்கு மட்டும் தெரியுமாறு கொணர்ந்தார். அதோடு, மன்மத மதன களிப்பு மருந்து எனும் மருத்துவ முறையை மன்மதனுக்குக் கற்பித்தார்.
    இங்கு மருந்து, சித்த மருத்துவ ஓலைச் சுவடிகளில் நூறு பாடல்களாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மருத்துவ முறைகளை மன்மதனுக்கு எடுத்துரைத்ததால் திருக்காமேஸ்வரருக்கு வைத்தியநாதர் என்றொரு திருநாமமும் உண்டு.
    தல சிறப்பு : இத்தல சிவனை மகாலட்சுமி பிரதிஷ்டை செய்து வழிபட்டிருப்பது சிறப்பு. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து வணங்குவதற்கு ஏற்ற திருக்கோயில் இது. தங்கம், வெள்ளி நகைகள் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அந்தத் தோஷங்களை அகற்றுவதற்கு இந்த ஆலயம் வந்து வழிபடுவது சிறப்பு. வேறெங்கும் காணாத வகையில் வில்வமர நிழலில் ஐஸ்வர்ய மகுடத்துடன் கோயிலின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் அலைமகளாம் ஐஸ்வர்ய மஹாலட்சுமி அற்புத திருக்கோலத்தில் வீற்றிருக்கின்றாள்.
    திருப்பாற்கடல் கடைந்த நிகழ்வின்போது அமுதம் பெறுவதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போட்டி வந்தது. அசுரர்களுக்கு அமுதம் போகாமல் இருப்பதற்காக திருமாலானவர் மோகினி வடிவெடுத்து, தேவர்களுக்கு மட்டுமே அமுதத்தை வழங்கினார். அந்த வேளையில் மோகினியைப் பார்த்து சிவபெருமானே மோஹித்ததால் ஐயப்பன் அவதரித்தார். இந்த நிகழ்வை அறிந்த மகாவிஷ்ணுவின் தேவியான மகாலட்சுமி கோபம் கொண்டு வைகுந்தத்தை விட்டே வெளியேறினாள். தன் கோபத்துக்குக் காரணமான சிவனிடம் நியாயம் கேட்பதற்காக அவரை அழைத்தாள். ஆனால், ஈசன் அங்கே வராததால் பூலோகத்துக்கு வந்து வில்வாரண்ய சேக்ஷத்திரம் எனப்படும் வெள்ளூருக்கு வந்து ஈசனைக் குறித்து தவம் செய்யலானாள். இப்போதும் இறைவன் அவளுக்குக் காட்சி தரவில்லை. எனவே, தன்னையே ஒரு வில்வ மரமாக மாற்றிக் கொண்டு வில்வ மழையாகப் பொழிந்து ஈசனை பூஜை செய்தாள்.
    அதன் பின் ஈசன் அவள் முன் தோன்றி, ஐயப்பன் அவதார நோக்கத்தைக் கூறி, கோபத்தை தணித்து சாந்தமாக்கினார். மகாவிஷ்ணுவுடன் லட்சுமிதேவியை இணைத்து வைத்தார். வில்வ மரமாகத் தோன்றி, தன்னை அர்ச்சித்த காரணத்தால் ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை லட்சுமிதேவிக்கு அளித்து, ஐஸ்வர்யத்துக்கே அதிபதி ஆக்கினார். வேறெங்கும் காண இயலாத வகையில் தட்சிண பாகம் என்று சொல்லக் கூடிய வடமேற்குப் பகுதியில் மகாலட்சுமி இருக்க வேண்டிய ஸ்தானத்தில் வில்வ மரமும், அதன் நிழலில் ஐஸ்வர்ய மகுடம் தரித்த மகாலட்சுமியையும் இங்கே தரிசிக்க முடிகிறது.
    அபயம், வரதம் கூடிய திருக்கரங்களோடு மேலிரு கரங்களில் தாமரை மலர் கொண்டு காட்சி தருகிறாள் இவள். ஈசனை பூஜிக்க மகாலட்சுமி பயன்படுத்திய தீர்த்தம் ஐஸ்வர்ய தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்வதற்கு முன் வில்வ மரத்துக்கே முதலில் பூஜை செய்கிறார்கள். வில்வாரண்யேஸ்வரர், ஐஸ்வர்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர், ஸ்ரீவத்ஸ அனுக்ரஹர் என்றெல்லாம் ஈசனுக்கு வேறு திருநாமங்கள் உண்டு. சுக்ரன் இத்தலத்தில் ஈசனை வழிபட்டு போகத்திற்கு அதிபதியான தலம். முசுகுந்த சக்கரவர்த்திக்கு வலன் எனும் அசுரனை வெல்லும் ஆற்றலை கொடுத்த தலம். ஆகவே, இவ்வூர் வெல்லூர் எனப்பெயர்பெற்றது.வலனை அழிக்கப் புறப்பட்ட முசுகுந்தனுக்குத் தளபதியாக வந்து அருளிய கால பைரவரையும், மன்மதனுக்கு அருளிய ஞான பைரவரையும் கிழக்கு நுழைவாயில் அருகே தரிசிக்க முடிகிறது.
    சித்த விரத பூமி: போகர் ஏழாயிரம் எனும் நூலில் திருக்காமேஸ்வரர், திருச்சன்னதியில் போகர் சிவபோக சக்கரத்தை பிரதிஷ்டை செய்து அதில் அமர்ந்து தவம் செய்வதாகவும், சித்தர்கள் அனைவரும் எங்கு சென்று தவம் செய்தாலும், சித்திக்காத காரியம் திருக்காமேஸ்வர் சன்னதியில் அமர்ந்து தவம் செய்தால் சித்தி ஆகும் என்பதால், போகர், பாம்பாட்டி சித்தர், புலிப்பாணி ஆகியோர் தலைமையில் கோயிலைச் சூழ்ந்து சித்தர்கள் குழுமமே தவம் செய்வதாகவும், வெள்ளூர் திருக்காமேஸ்வரப் பெருமானிடம் போகர் சிவபோகச் சக்கரத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்த பின்னரே பழனியில் நவபாஷான ஞான தண்டாயுதபாணி விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்ததாக போகர் ஏழாயிரத்தில் குறிப்பிட்டுள்ஞுது வியக்கத்தக்கதாகும். இன்னும் திருக்காமேஸ்வரர் ஆலயத்தின் முன் மஹா மண்டபத்தில் போகர் பிரதிஷ்டை செய்த சிவபோகச்சக்கரத்தை தரிசனம் செய்யலாம்.
    ஆலயத்தின் ஈசான பாகத்தில் அமைந்துள்ஞு சுரங்கத்தில் சிவலிங்க வடிவமாக போகர் காட்சி தருகிறார். அரூபமாக இன்னும் எண்ணற்ற பல சித்தர்கள் தவம் செய்வதாக அகஸ்த்தியர் நாடியிலும், விசிஷ்ட நாடியிலும், காகபுஜண்டர் நாடியிலும் காணப்படுவது சிறப்பானதாகும். சித்தர்களுக்கே எங்கு சென்றும் சித்திக்காத காரியம் திருக்காமேஸ்வரர் சன்னதியில் சித்தியாகும் என்பதால் மனிதர்களாகிய நாம் நினைக்கும் காரியம் சித்தியாக திருக்காமேஸ்வரர் சன்னதியில் தவம் செய்வது சிறப்பு.

    பிரார்த்தனை: தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து வணங்குவதற்கு ஏற்ற திருக்கோயில் இது. தங்கம், வெள்ளி நகைகள் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அந்தத் தோஷங்களை அகற்றுவதற்கும், போகத்திற்கு அதிபதியான சுக்ரன் ஜாதகத்தில் சரியாக இல்லையனில் எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் காரியத்தடையும், மனக்குழப்பமும், பொருளாதார வீழ்ச்சியையும், திருமணத் தடையும், குழந்தையின்மையும், வியாபார வீழ்ச்சியையும் ஏற்படுத்துவார். எனவே, சுக்கிரதோஷம் நீங்கிட சுக்கிரனுக்கு அதிபதியான மஹாலக்ஷிமியை சுக்ர ஹோரையில் இங்கு வந்து ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்து வழிபடலாம். திருமணம் நல்லபடியாக நடப்பதற்கு ஜாதகம் வைத்துப் பிரார்த்தனை செய்கிறார்கள்.குழந்தை பாக்கியத்திற்கும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. இழந்த தன் கணவனை ரதிதேவி திரும்பப் பெற்ற திருத்தலம் என்பதால் தம்பதியர் இங்கே வந்து வணங்கினால் ஒற்றுமை மேலோங்கும். மாங்கல்ய பலம், திருமணத் தடை, ஐஸ்வர்ய யோகம், பிரிந்த தம்பதியர் இணைவதற்கு என்று மிகச் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது.
    பொது தகவல் : ஆலயத்திற்கு தெற்கு வாசல், கிழக்கு வாசல் என்று இரு நுழைவாயில்கள் உள்ளன. பலிபீடம், நந்திதேவர், திருமாளிகைப்பத்தியுடன் கூடிய பிராகாரம். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்கை ஆகிய தெய்வங்கள் உள்ளன. விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் கூடிய சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகம் போன்ற சன்னதிகள் அமைந்துள்ளன. தல புராணத்தைச் சொல்லும் முசுகுந்தனின் சிவ வழிபாடு, ரதியும் மன்மதனும் இணைந்து ஈசனை வணங்கும் கோலம் போன்றவை சிற்பமாகக் காணப்படுகின்றன.

  • 2018-04-08-07-43-03

    தீப வழிபாடு என்பது நம் கலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்தது ஆகும். நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்தத் தீபத்தை நமஸ்காரம் செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்கின்றன ஞான நூல்கள்.

    வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனவரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் தீபத்தை சிறப்பிக்கும் மாதம் திருக்கார்த்திகை. இந்தக் கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் திருவிளக்கேற்றி வழிபடுவது மிகவும் விசேஷமாகும்.

    தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், விளக்குகளும்:

    கோலமிடப்பட்ட வாசலில் ஐந்து விளக்குகள் ஏற்றி வைத்தால் லட்சுமி கடாட்சம்.

     பூஜையறையில் இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும்.

     சமையல் அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.

    தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில், எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும், ஆயுள்விருத்தி உண்டாகும்.

    திண்ணைகளில் நான்கு விளக்குகள் ஏற்றுவதன் மூலன் தீயவைகள் வீட்டில் அண்டாது.

    மாடக்குழிகளில் இரண்டு விளக்குகள் ஏற்றுவது சிறந்த பலனைக் கொடுக்கும்.

    தீபத்தின் வகைகள்:

    தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் எற்றியதும், தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம். தீபங்களில் பலவகைகள் உண்டு. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

    *சித்ர தீபம்*
    வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் சித்ர தீபம் ஆகும்.

    *மாலா தீபம்*
    அடுக்கடுக்கான தீபத் தட்டுகனில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபம் ஆகும்.

    *ஆகாச தீபம்*
    வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படும் தீபம் ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதி நாளில் இந்தத் தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.

    *ஜல தீபம்*
    தீபத்தை எற்றி நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபத்திற்கு ஜல தீபம் என்று பெயர்.

    *படகு தீபம்*
    கங்கை நதியில் மாலை வேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றி வைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்கவிடுவதற்குப் பெயர் படகு தீபம் ஆகும்.

    *சர்வ தீபம்*
    வீட்டின் அனைத்துப் பாகங்களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகம்.

    *மோட்ச தீபம்*
    முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோயில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம் மோட்ச தீபம் ஆகும்.

    *சர்வாலய தீபம்*
    கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று மாலை வேளையில் சிவன் கோயில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபமாகும்.

    *அகண்ட தீபம்*
    மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம் ஆகும்.

    *லட்ச தீபம்*
    ஒரு லட்சம் விளக்குகளால் கோயிலை அலங்கரிப்பது லட்ச தீபமாகும்.

    *மாவிளக்கு தீபம்*
    அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம் ஆகும்

  • 2018-04-08-07-37-39

    எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் ,
    எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும்…!!
    மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம்,
    மைத்ர முகூர்த்த நாட்களில்,
    நீங்கள் பெருந்தொகையாக தரவேண்டிய கடன் தொகையில் ,
    கொஞ்சம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு
    திருப்பி தரவேண்டும்….!!
    அவ்வளவு தான். எவ்வளவு பெரும் தொகையானாலும் , சிறுக சிறுக அடைபட்டுவிடும்….!!
    கடன் விரைவில் தீர்க்கும் மைத்ர முகூர்த்தம் 2018
    4.4.18 புதன் இரவு 8.40 முதல் 10.40
    15.4.2018 ஞாயிறு காலை 6.06 முதல் 8.06 வரை;
    1.5.2018 செவ்வாய்க்கிழமை மாலை 6.58 முதல் இரவு 8.58 வரை
    14.5.2018 திங்கட்கிழமை அதிகாலை 3.54 முதல் 5.54 வரை
    29.5.2018 செவ்வாய்க்கிழமை மாலை 6.50 முதல் இரவு 8.50 வரை
    10.6.2018 ஞாயிறு அதிகாலை 4.10 முதல் 6.10 வரை
    25.6.2018 திங்கட்கிழமை மாலை 3.51 முதல் 5.51 வரை
    7.7.2018 சனி நள்ளிரவு 1.57 முதல் 3.57 வரை
    22.7.2018 ஞாயிறு மாலை 3.13 முதல் 4 வரை
    23.7.2018 திங்கட்கிழமை மதியம் 2 முதல் மாலை 4 வரை
    3.8.2018 வெள்ளி இரவு 10.56 முதல் 12.56 வரை
    19.8.2018 ஞாயிறு மதியம் 12.08 முதல் 2.08 வரை
    30.8.2018 வியாழன் இரவு 8.56 முதல் 10.56 வரை
    15.9.2018 சனி காலை 10.08 முதல் 12.08 வரை
    22.9.2018 சனி காலை 8.20 முதல் 10.20 வரை;
    மதியம் 2.20 முதல் மாலை 4.20 வரை;
    இரவு 8.20 முதல் 10.20 வரை;
    நள்ளிரவு 2.20 முதல் 4.20 வரை;
    27.9.2018 வியாழன் இரவு 8.40 முதல் 10.40 வரை;
    6.10.2018 சனி காலை 6.55 முதல் 8.55 வரை;
    மதியம் 12.55 முதல் 2.55 வரை;
    மாலை 6.55 முதல் 8.55 வரை;
    இரவு 12.55 முதல் நள்ளிரவு 2.55 வரை;
    13.10.2018 சனி காலை 8.20 முதல் 10.20 வரை;
    24.10.2018 புதன் மாலை 6.28 முதல் 8.28 வரை;
    9.11.2018 வெள்ளி காலை 6.36 முதல் 8.36 வரை;
    20.11.2018 செவ்வாய் மாலை 5.10 முதல் 6.19 வரை;
    21.11.2018 சனி மாலை 4.23 முதல் 6.23 வரை;
    6.12.2018 வியாழன் காலை 6.40 முதல் 8.40 வரை;
    18.12.2018 செவ்வாய் மதியம் 2.30 முதல் மால 4.30 வரை;
    இந்த மைத்ரமுகூர்த்த நேரத்தில் வாங்கிய கடனில் சிறு தொகையை கட்ட தொடங்கினாலே..போதும்…!!
    விரைவில் கடனை தீர்க்கும் வளம் பெற்று விடுவீர்கள்…!!

  • 2018-04-07-13-53-56

    முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பகவதியாக திருவருள் புரிகிறாள் அம்பிகை. 51 சக்தி பீடங்களில் இது குமரி சக்தி பீடம் ஆகும். தல தீர்த்தமாக பாபநாச தீர்த்தம் துலங்குகிறது. இத்தலத்தில் கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை ஆகியவை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும். அம்மனுக்கு விளக்கு போடுதல், புடவை சாத்துதல், அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் செய்தலும் பக்தர்கள் செலுத்தும் முக்கிய நேர்த்தி கடன்கள். பாணாசுரன் எனும் அசுரனை அழித்த தேவி இங்கே குமரியாக நிலை கொண்டாள். அம்பிகையின் தோழிகளான தியாகசுந்தரி, பாலசுந்தரி இருவரும் ஆலயத்தில் தனிச் சந்நதி கொண்டருள்கின்றனர். தேவியின் மூக்கில் ஜாஜ்வல்யமாக ஜொலிக்கும் மூக்குத்தி நாகரத்தினத்தால் ஆனது என்பார்கள். தாணுமாலயனுக்கும் தேவிக்கும் நடக்க இருந்த திருமணம் நாரதரின் கலகத்தால் நின்றது. திருமணத்திற்குத் தயாரிக்கப்பட்ட உணவுகள் யாவும் வகை வகையான மணலாக மாறின. அதன் சான்றாகவே, இன்றும், குமரி கடற்கரையில் அரிசி போன்ற வெண் சிறுமணலையும், பலவண்ண மணல்களையும் காணலாம்.

  • 2018-04-07-13-33-41

    திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் 58,419 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
    திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது.
    அதன்படி, வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஜூலை மாதத்துக்கான 58,419 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிட்டது. இதை பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்கலாம்.
    இதில் சுப்ரபாதம் உள்ளிட்ட சில முக்கிய ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டு வருகின்றன. இதனைப் பெற விரும்பும் பக்தர்கள் தங்கள் பெயர், ஆதார் எண், டிக்கெட் எண்ணிக்கை, செல்லிடப்பேசி எண் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு, இந்த டிக்கெட்டுகளுக்காக விண்ணப்பிக்க வேண்டும்.
    கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.
    தகவல் கிடைத்த பக்தர்கள் 3 நாள்களுக்குள் தங்கள் டிக்கெட்டுகளை இணையதளம் மூலம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும்.
    அவ்வாறு பெற்றுக் கொள்ளாத டிக்கெட்டுகளை, குலுக்கல் முறையில் விண்ணப்பித்த மற்ற பக்தர்களுக்கு மீண்டும் தேவஸ்தானம் வழங்குகிறது.
    நேரடி முன்பதிவில் உள்ள மற்ற ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை பக்தர்கள் நேரடியாக இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.