Blog

  • 10

    விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 10-ந் தேதி திறக்கப்படுகிறது. 18-ந் தேதி வரை 9 நாட்கள் பூஜைகள் நடைபெறுகிறது. 10 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.
    11-ந் தேதி முதல் வழக்கமான பூஜை மற்றும் வழிபாடுகளுடன் நெய் அபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும்.
    15-ந் தேதி விஷூ பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து கனி காணுதல் வைபவம் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு நாணயங்களை கை நீட்டமாக தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் வழங்குகிறார்கள்.
    சித்திரை மாத பூஜைகளுக்கு பின் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 18-ந் தேதி இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு அடைக்கப்படும்.
    விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 9 நாட்கள் பூஜைகள் நடைபெறும். எனவே ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் முக்கிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் பம்பைக்கு இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • 2018-04-06-02-32-44

    ஜலந்திராசுரன் மரணம் அடைந்த பிறகு அவனுடைய பிள்ளைகள் தேவர்களுக்குத் தொல்லைகள் தர ஆரம்பித்தனர். எனவே தங்களைப் பாதுகாக்கச் சொல்லி தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட்டனர்.
    தேவர்களே சிறிது காலம் பொறுத்திருங்கள், நான் சிவபெருமானைக் குறித்து தவம் செய்து ஜலந்திரனைக் கொன்ற சக்கராயுதத்தைப் பெறவேண்டும் என்றார் திருமால். இவ்வாறே திருமால் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து அதனை தினமும் ஆயிரத்தெட்டு தாமரை மலர்களைக் கொண்டு பூஜித்து வந்தார். இவ்வாறு செய்து வரும் நாளில் ஒரு நாள் ஒரு மலரை மட்டும் ஈசன் மறைத்து விட்டார். உடனே ஹரி தன் கண்மலரை எடுத்து ஈசனின் திருநாமத்தைக் கூறி அர்ச்சனையை செய்து முடித்தார். அவருடைய பக்திக்கு மெச்சி எதிரே தோன்றி தரிசனம் அளித்த ஈசன் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.
    தேவர்களை மறுபடியும் அசுரர்கள் துன்புறுத்தி வருகிறார்கள். ஆகவே ஜலந்திரனை அழித்த சக்கராயுதத்தை எனக்கு தரவேண்டும். அதன் மூலமாக அசுரர்களை அழிக்கும் வலிமையை எனக்குத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஈசனும் அவ்விதமே திருமாலுக்கு சக்கராயுதத்தை அளித்ததோடு, தனக்காக ஹரி அர்ப்பணித்த கண்மலரையும் திரும்ப அளித்தார்.
    இந்த நிகழ்ச்சியின் மூலமாக பூஜைக்கு மலர்கள் எத்தனை அவசியம் என்பதையும், அவற்றைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலமாக நாம் நம் அன்பையும், பக்தியையும் சரியான முறையில் வெளிப்படுத்த முடியும் என்பதையும் அறிந்து கொள்ளலாம். மலர்களுக்கு பதிலாக தன்னுடைய கண் மலரை சமர்ப்பித்ததன் மூலமாக திருமாலுக்கு ஈசனின் தரிசனம் கிடைத்ததோடு, சக்கராயுதமும் கிடைத்தது. எனவே மலர்களைக் கொண்டு நாம் நினைத்த காரியங்களை சாதிக்க முடியும் என்பதை இதன் மூலமாக அறிய முடிகிறது.

  • 2018-04-06-02-23-22

    அம்மனின் 51 சக்தி பீடங்களில் காமகோடி சக்தி பீடமாகத் திகழ்வது காஞ்சி காமாட்சியம்மன் ஆலயமாகும். தங்கக் கோபுரத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில்தான் ஆதிசங்கரர், ஆனந்தலஹரி பாடினார். தல விருட்சமாக செண்பக மரமும், தல தீர்த்தமாக பஞ்ச கங்கையும் உள்ளன. அம்மனை வழிபடுவோர்க்கு ஐஸ்வர்யம் கொழிக்கும் வாழ்வும், மனநிம்மதியும் ஏற்படுகின்றன. இங்கு வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமண வரம், குழந்தை வரம் ஆகியவையும் இங்கு வரும் பக்தர்களின் முக்கிய பிரார்த்தனைகள். அம்மனின் திருவடிகளில் நவகிரகங்கள் தஞ்சமடைந்திருப்பதால் காமாட்சி அம்மனை வணங்குபவர்களுக்கு நவகிரக தோஷங்கள் விலகிவிடுகின்றன. குழந்தை வரம் வேண்டுவோர் இங்குள்ள சந்தான ஸ்தம்பத்தை வணங்கினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

  • 2018-04-06-02-18-40

    திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சித்திரை பெருந்திருவிழா ஏப்ரல் 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா, சித்திரை பெருந்தேரோட்டம் ஆகியவை ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். மேலும் இக்கோவிலில் அம்மனே, பக்தர்களுக்காக ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வார்.
    பச்சை பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள்பாலித்தல் ஆகிய 5 தொழில்களையும் சித்திரை பெருந்திருவிழா நாட்களில் அம்மன் புரிவதாக மரபு.
    இத்தகைய சிறப்புகள் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலின் சித்திரை பெருந்திருவிழா வருகிற 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு அம்மன் கேடயத்தில் புறப்பாடாகி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
    இதைத்தொடர்ந்து 9-ந் தேதி காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைகிறார். மாலை 5 மணிக்கு அபிஷேகம் கண்டருளி இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் புறப்பாடாகி வழிநடை உபயங்கள் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார்.
    இதையடுத்து 10, 11, 12, 13 மற்றும் 14-ந் தேதிகளில் காலையில் பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு முறையே பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம் ஆகியவற்றில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 15-ந் தேதி காலை பல்லக்கில் புறப்பாடாகிறார். இரவில் மரக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வழிநடை உபயங்கள் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார். 16-ந் தேதி காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி வழிநடை உபயம் கண்டருளுகிறார். இரவில் வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடாகி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து மூலஸ்தானம் சென்றடைகிறார்.
    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 17-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து தேரோட்டம் நடக்கிறது. பின்னர் இரவு 9 மணிக்கு அம்மன் தேரில் இருந்து புறப்பாடாகி மூலஸ்தானம் சென்றடைகிறார்.
    18-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்திலும் அம்மன் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 19-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு முத்து பல்லக்கிலும் அம்மன் புறப்பாடாகிறார். 20-ந் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. அன்று மதியம் 12 மணிக்கு அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைகிறார். அங்கு மாலை 5 மணிக்கு அபிஷேகம் கண்டருளி, இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் வழிநடை உபயம் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார்.

  • 2018-04-06-02-13-43

    பசுமாடு எங்கெல்லாம் நன்றாக பராமரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் லஷ்மி கடாக்ஷம் இருக்கும். அதனால்தான் தெய்வசக்தி நிறைந்த கோயில்களில் கூட பசுமாடுகளை வளர்த்து அதற்கு முறையாக ’கோ பூஜை’ செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். எப்பேர்பட்ட தோஷத்தையும் போக்கும் ஆற்றல் பசுவுக்கு இருக்கிறது. மகாபாரதத்தில் பிஞ்சு குழந்தையான கண்ணனை கொல்ல கம்ஸன், பல முயற்சிகளை மேற்கொண்டான். அதில் ஒரு முயற்சியாக அரக்கி ஒருத்தியை அனுப்பினான். அந்த அரக்கி, அழகான பெண் வடிவம் எடுத்துக் கொண்டு யசோதையின் வீட்டிற்கு வந்தாள். அங்கே குழந்தை கிருஷ்ணன் தூங்கிகொண்டு இருந்தான். கண்ணனின் மேல் பாசம் கொண்டவள் போல நடித்து, குழந்தைக்கு தாய்பால் கொடுத்தாள். அவளின் நோக்கம் பாசம் அல்ல. அது கொடுமையான திட்டம். அது என்னவென்றால், அரக்கியின் தாய்பாலை குழந்தை குடித்தால், அவள் உள்ளத்தில் இருக்கும் விஷம், அவள் உடல் முழுவதும் இருந்த காரணத்தால், தாய்பாலின் மூலமாக அவ்விஷங்கள் குழந்தையான கண்ணனின் ரத்தத்தில் பரவி, கண்ணனி்ன் இரத்தத்தை அட்டைபூச்சியை போல உறிஞ்சி எடுத்துவிடும் என்று நினைத்தாள் அந்த அரக்கி. நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்கள். ஆனால் அந்த அரக்கியோ ஒரு தெய்வத்தையே மடியில் வைத்துக்கொண்டு கொடுமை செய்ய நினைத்தாள். தெய்வ குழந்தையான கண்ணனும் அவள் உயிரை எடுக்க வேண்டும் என்றுதான் நினைத்தான். அவளாக வந்து மாட்டினாள். பாலுடன் அரக்கியின் உயிரையும் உறிஞ்சினான் கண்ணன். செத்து தொலைந்தாள். அவள் உயிர் பிரிந்த போது பெரும் அலறலுடன் பூமியில் விழுந்தாள். மிக பயங்கரமான அந்த குரலை கேட்ட ஊர் மக்களும், தாய் யசோதையும் ஒடிவந்து பார்த்தபோது, அரக்கி ஒருத்தி மாமிச மலை போல் இறந்து கிடப்பதை பார்த்தார்கள். என்ன நடந்தது என்பதையும் புரிந்துக் கொண்டார்கள். ஒரு கொடூரமான அரக்கியை தன் குழந்தை கண்ணன் வீழ்த்தினான் என்ற மகிழ்ச்சி இருந்தாலும், ஒரு உயிரை கொன்ற பாவம் பிரம்மஹத்தி தோஷமாக கண்ணனை பிடித்துக்கொள்ளக் கூடாதே என்று அஞ்சினாள் தாய் யசோதை. உடனே அதற்கான தோஷ நிவர்த்திக்காக பசுவின் வாலில் கண்ணனை சுற்றி, அவன் தலையில் கோமியத்தை தெளித்து தோஷத்தை போக்கினாள் யசோதை. இது, ஸ்ரீவி்ஷ்ணு புராணத்தில் இருக்கிற தகவல். ஆகவே, இறைவனாக இருந்தாலும் இறைவனுக்கே தோஷம் பிடிக்காமல் இருக்க சிறந்த பரிகாரம் பசுதான் என்கிறது சாஸ்திரங்களும் – புராணங்களும். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்கள் நிறைந்திருக்கிறார்கள் பூமாதேவியே கோமாதாவாக அவதாரம் எடுத்தாள் என்கிறது புராணம். தேவர்களும் – அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து தோன்றியது பசு. கோமாதா என்று போற்றப்படும் அந்த பசுவின் உடலில் தேவர்களும், முனிவர்களும், இறைவனும், இறைவியும் இடம் பெற வேண்டும் என்று விரும்பினார்கள். அதனால் முனிவர்கள், தேவர்கள், இறைவனும் பசுவின் உடலில் குடி வந்தார்கள். அப்படியே முப்பத்து முக்கோடி தேவர்கள்களும் பசுவின் உடலில் குடிவந்து விட்டார்கள். கடைசியாக வந்த கங்கையும் – லஷ்மியும், தங்களுக்கு இடம் இல்லாததால் வருந்தினார்கள். இதை கண்ட கோமாதா, “அகில உலகத்தையே பூமாதேவியாக இருந்து சுமக்கும் நான், உங்களை சுமக்க மாட்டேனா?” என்று கூறி தன் பின் பகுதியில் இடம் தந்தாள். இதனால் பின்பாகத்தில் கங்கையும், ஸ்ரீலஷ்மி தேவியும் அமர்ந்ததால், பசுவின் சாணத்தில் ஸ்ரீலஷ்மியும், கோமியத்தில் கங்கையும் இருப்பதாக ஜதீகம். தோஷத்தை போக்கும் கோமாதா கோயிலுக்கு நல்லவர்கள் – கெட்டவர்கள் என்று பல பேர் வருவதால் அவர்களுடைய தோஷம் அந்த கோயிலுக்குள் நிலைத்துவிடாமல் இருக்க அந்த காலத்திலிருந்து இந்த காலம்வரையிலும் சில கோயில்களில், காலையில் பசுவுக்கு கோபூஜை செய்வதுடன், அந்த கோயிலை சுற்றி அந்த பசுவை வலம் வர வைப்பார்கள். கங்கை எப்படி புனிதம் வாய்ந்ததோ அதுபோல், எண்ணற்ற மடங்கு புனிதம் வாய்ந்தது பசுவின் சாணம். பசு சாணத்தை கரைத்து வீட்டின் வாசலில் தெளித்தால் கிருமி நாசினியாகும். பசுவின் சாணத்தால் தயாரிக்கப்படும் திருநீறின் மகிமை அற்புதமானது. திருநீறை தினமும் நெற்றியில் வைத்து வந்தால் கண் திருஷ்டி பாதிப்பு, விரோதிகளால் எற்படும் தொல்லை, நோய்கள் போன்றவை நீங்கும். துஷ்டசக்திகளும் அண்டாது. கோமியத்தை வீட்டிற்குள் தேளித்தால், வீட்டில் இருக்கும் தோஷங்கள் விலகியோடும். கங்கையின் அருளாசி கிடைக்கும். ஸ்ரீமகாலஷ்மி வாசம் செய்வாள். கோ பூஜை வருடத்திற்கு ஒருமுறையாவது நம் வீட்டிற்கு பசுவை அழைத்து வந்து, அதற்கு மஞ்சள் – குங்குமம் வைத்து, மலர்களால் அலங்காரம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து, அந்த பசுமாடு வயிறு நிறைய சாப்பிட பழங்கள், அகத்திகீரை போன்றவற்றை கொடுத்து, நெய் விளக்கு ஏற்றி, தீபஆராதனை செய்ய வேண்டும். பிறகு நெய் விளக்கை கையில் எடுத்து அந்த பசுவை சுற்றி மூன்று முறை வலம் வர வேண்டும். இப்படி வருடத்திற்கு ஒருமுறையாவது கோபூஜை செய்து வந்தால், நம் இஷ்ட தெய்வ – குல தெய்வ அருளாசியும் கிடைத்து, தலைமுறை தலைமுறைக்கு சுபிக்ஷம் பெருகும். யாகம் – ஹோமம் வீட்டில் யாகம் – ஹோமம் போன்ற தெய்வ வழிபாடுகளை செய்யும் போது, யாகத்தில் (அ) ஹோமத்தில் பசு வரட்டியை போட்டால் இன்னும் அந்த யாகத்திற்கும் ஹோமத்திற்கும் சக்தி கூடும். அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும். யாகம் – ஹோமம் போன்றவை நிறைவு பெற்றதும் அந்த சாம்பலை ஒரு வெள்ளை துணியில் கட்டி வீட்டின் தலைவாசலில் மாட்டினால் அந்த வீட்டுக்குள் எந்த தோஷமும் நுழையாது. ஸ்ரீலஷ்மி கடாக்ஷம் கிடைக்கும். இப்படி எண்ணற்ற சக்தி வாய்ந்த பசுவை வணங்கி, முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசியை பரிபூரணமாக பெற்று, தலைமுறை தலைமுறைக்கும் வளமோடும் – நலமோடும் வாழ்வாங்கு வாழ்வோம். ’கோமாதா நம் குலத்தை காக்கும் குலமாதா’. ஆகவே கோமாதாவான பசுக்களை நன்றாக பராமரித்து – பாதுகாத்து வணங்கினால் நிச்சயம் அனைவருக்கும் சுபிக்ஷத்தை அள்ளி அள்ளி தருவாள் கோமாதா.!

  • 2018-04-05-12-43-02

    பிரதி வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு எம்பெருமானுக்கு நடைபெறும் தோமாலை சேவையை ‘பூவங்கி சேவை’ என்பர். ஆனால், இந்தச் சேவை மட்டும் முழுமையாக ஏகாந்தமாக நடைபெறும்.

    ஜீயர் ஸ்வாமிகள் எடுத்துக்கொடுக்க பூமாலையை அர்ச்சக ஸ்வாமிகள் எம்பெருமான் திருமேனியில் அணிவிப்பர். எம்பெருமான் பூவை ஆடையாக அணிந்திருப்பது போன்று அது காட்சியளிக்கும். இந்த சேவை ஆன பிறகு பிரதி வியாழக்கிழமை இரவு பக்தர்கள் இந்த அலங்காரத்தில் எம்பெருமானை தரிசிக்கலாம்.

  • 2018-04-05-12-34-43

    மரகதாம்பிகை, லலிதா எனும் திருப்பெயர்களோடு ஈங்கோய்நாதர் எனும் மரகதாசலேஸ்வரரோடு அம்பிகை அருளாட்சி புரியும் தலம், திருச்சி மாவட்டத்தில் உள்ள திருஈங்கோய்மலை. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சாயா சக்தி பீடம் ஆகும். யோகினிகளால் பூஜைகள் நடத்தப்பெறும் திருத்தலம் இது. இங்கு அவர்களே நான்கு வேதங்களை தினமும் ஓதி சண்டி யாகம் போன்றவற்றையும் செய்து வருகிறார்கள். ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் தங்களுள் யார் பெரியவர் என போட்டி வந்தது. வாயுபகவான் தன் பலத்தை நிரூபிக்க பலமாக காற்றை வீசினார். ஆதிசேஷன் மந்தார மலையை இறுகப் பற்றிக்கொண்டார். அப்போது அம்மலையின் சிறு, சிறு பாகங்கள் பூமியில் தெறித்து விழுந்தன. அவ்வாறு விழுந்த ஒரு பகுதிதான் இம்மலை என்கிறார்கள். சிவபெருமான், அவர்களைச் சமாதானம் செய்து, மலையிலேயே மரகதலிங்கமாக எழுந்தருளினார். மரகத அசலத்தில் (மலையில்) எழுந்தருளியவர் என்பதால், ‘மரகதாசலேஸ்வரர்’ என்று பெயர் பெற்றார். இவருக்கு “திரணத்ஜோதீஸ்வரர்’’ என்ற பெயரும் உண்டு.

  • 2018-04-05-11-48-55

    தமிழ் மாதத்தில், சித்திரை மாதம் அமாவாசைக்கு பின்னால் வரும் வளர்பிறை திருதியை திதி ‘‘அட்சய திருதியை’’ என போற்றப்படுகிறது. ‘‘அட்சயம்’’ என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் நவகிரகங்களில் தந்தைக்கு உரிய கிரகமான சூரியனும், தாய்க்கு உரிய கிரகமான சந்திரனும் ஒரே நேரத்தில் உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் காலமே அட்சய திருதியை நாள்.
    சூரியனும் சந்திரனும் பலம் பெற்றுள்ள அட்சய திருதியை நாளில், நாம் செய்யும் நற்காரியங்கள் பல்கிப்பெருகும். அதனால் நமக்குக் கிடைக்கும் பலன்களும் பன்மடங்காகும். அன்று நாம் வாங்கும் பொருட்களும் அழியாது நிலைத்திருக்கும். அட்சய திருதியையில், எதைச் செய்தாலும் வளர்ந்து கொண்டே இருக்கும். அன்று கொடுக்கும் தானம், அளவற்ற புண்ணியத்தைக் கொடுக்கும்.
    பௌர்ணமி திதி, அமாவாசை திதி, சதுர்த்தி திதி, ஏகாதசி திதி, அஷ்டமி திதி போன்ற திதிகளைப் போன்றே அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதியும் சிறப்பு திதியாகத் திகழ்கிறது. எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடுகின்றனர். யுகங்களுள் இரண்டாவது யுகமான திரேதாயுகம், ஓர் அட்சய திருதியை திருநாளில்தான் ஆரம்பாமாயிற்றாம். தன் குருகுல நண்பனான ஏழைக் குசேலன் தன்னைப் பார்க்க வந்தபோது அவன் கொடுத்த மூன்று பிடி அவலைத் தின்று, பதிலாக கோடி கோடி செல்வங்களைக் கொட்டிக் கொடுத்து குசேலனை கிருஷ்ண பரமாத்மா குபேரனாக்கிய திருநாளும் இந்த அட்சய திருதியை நன்னாளில்தான்! தசாவதாரங்களில் பரசுராமர் அவதரித்த நாள், சிவனுக்கு காசி அன்னபூரணி அன்னபிட்சை அளித்த நாள், ஐஸ்வர்ய லட்சுமி அவதரித்த நாள், சங்க நிதி பத்மநிதியை குபேரன் பெற்ற நாள், மகாவிஷ்ணுவின் வலமார்பில் மகாலட்சுமி இடம் பிடித்த நாள் என பல சிறப்புக்களை உடையது அட்சய திருதியை நாள்.
    இந்த அட்சய திருதியை நாளில்தான் பிட்சாடனரான சிவபெருமான் தன் கபால பிட்சை பாத்திரத்தில் நிரம்பும் அளவு உணவை காசியில் அன்னபூரணியிடமிருந்து பெற்றுக் கொண்டார். கௌரவர்கள் சபையில் துச்சாதனன் பாஞ்சாலியின் உடையை உருவி மானபங்கப்படுத்தினான். அப்போது கண்ணபிரான் அட்சய என்று கூறி கைகாட்டி அருள, துச்சாதனன் உருவ உருவ புடவை வளர்ந்து கொண்டே இருந்த நாள் இந்த அட்சய திருதியை நாளில்தான். இதனால்தான் பாஞ்சாலி மானம் காப்பாற்றப்பட்டது. இந்நாளில் சுயநலத்துடன் செய்கிற காரியங்களைவிட, பொதுநலத்துடன் கூடிய காரியங்கள் செய்வது மிகவும் சிறப்பாகும். ஏழை நோயாளிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்யலாம். சாலையோரம் வசிப்பவர்களுக்கு வேட்டி, சேலை, போர்வை தானம் தரலாம். ஏழை மாணவர் கல்விக்கு உதவலாம். ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு சென்று உணவு, இனிப்புகள் வழங்கலாம்.
    அட்சய திருதியை நாளில் பசு, நாய், பட்சிகளுக்கு உணவளிப்பதால் மன அமைதி, செல்வ வளம் ஏற்படும். அட்சய திருதியை தினத்தில் தங்கம், வைர, ரத்தின ஆபரணங்கள், வெள்ளி பொருட்கள், ஆடம்பர பொருட்கள் வாங்க வேண்டும் என்ற வழக்கம் உருவானது சமீபகாலமாகத்தான். அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் பல மடங்காக பெருகும் என்பது ஒரு நம்பிக்கை. அட்சய திருதியை நாளில் தான தர்மங்கள், நற்செயல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மேலும் நல்ல காரியங்கள் தொடங்கவும் சுபவிஷயங்களை பேசவும் ஏற்ற நாளாகும். ‘மகிழ்வித்து மகிழ்’ என்று சொல்வார்கள். எனவே, மற்றவர்கள் மகிழும் வகையில் தான தர்மங்கள் செய்து, பல புண்ணியங்கள் பெற்று ஆயுள், ஆரோக்கியம் நிறைந்த வளமான வாழ்வு பெற்றுக் கொள்ளலாம்.

  • 2018-04-04-15-15-42

    பிரதி வியாழக்கிழமைதோறும் வெங்கடேசப் பெருமாளுக்கு இரண்டாவது அர்ச்சனைக்குப் பிறகு நடைபெறும் நிவேதனம் ‘திருப்பாவாடை சேவை’ ஆகும். இதை ‘அன்ன கூடோத்ஸவம்’ என்றும் கூறுவார்கள்.
    வியாழக்கிழமை காலை 6 மணிக்கு எம்பெருமான் மூலமூர்த்திக்கு அணிந்துள்ள ஆபரணங்கள் அனைத்தையும் களைந்து விடுவார்கள். பின்னர் பெருமாளுக்கு இடப்படும் திருநாமத்தின் அளவை நன்றாகக் குறைத்து கண்கள் நன்றாக தெரியும்படிச் செய்வார்கள்.
    வெங்கடேசப் பெருமாளுக்கு எதிராக மலைபோன்று புளியோதரையை குவித்து வைப்பர். புளியோதரையுடன் ஜிலேபியையும், முறுக்கையும் வைத்து பூவினால் அலங்கரிப்பர். இந்த புளியோதரையை நேராக கருவறையில் உள்ள எம்பெருமானுக்கு நிவேதிப்பர்.
    இச்சேவையில் ஆர்ஜிதம் செலுத்தும் பக்தர்களும் பங்கு கொள்ளலாம். இச்சேவையின் போது வேத பண்டிதர்கள் வேத பாராயணம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். பின்னர் பக்தர்களுக்கு இச்சேவையுடன் ஸ்வாமி நேத்ர தரிசனமும் உண்டு.

  • 2018-04-04-15-13-38

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத திருவிழா நிறைவடைந்த நிலையில் விடையாற்றி உற்சவ நிகழ்ச்சிகள் துவங்கி உள்ளன.
    பங்குனி மாத விழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி அறுபத்து மூவர் விழாவுடன் மார்ச் 31-ம் தேதி கபாலீஸ்வரர் திருக்கல்யாண உற்சவத்துடன் கொடி இறக்கப்பட்டது.
    கடந்த பத்து நாட்களாக வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் இறைவன். அவருக்கு ஓய்வு அளிக்கும் வகையில் விடையாற்றி விழா துவங்கியுள்ளது. இவ்விழாவில், உற்சவமூர்த்தி தினமும் எளிமையான அலங்காரத்துடன் மண்டபத்தில் எழுந்தருள்வார். அதைத் தொடர்ந்து விடையாற்றி கலைநிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவு தினமும் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும்.

    ஏப்ரல் 4-ம் தேதியான இன்று திரு.சஞ்சய் சுப்ரமணியம் குழுவினர் பாட்டு மாலை 6.30 மணிக்கும், பேராசிரியர் தி.இராஜகோபால் பக்தி என்னதான் செய்யாது என்ற தலைப்பில் சொற்பொழிவும் நடைபெற உள்ளது.