Category: கோவில்கள்

கோவில்கள்

  • இழந்த பதவி தரும் ஊட்டத்தூர் சிவன்

    வரலாறு :

    பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்ட இவ்வூர் தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது. ராஜராஜ சோழ மன்னர் ஊட்டத்தூரின் மேற்கு பகுதியில் சோலேச்சுவரர் என்ற மேட்டுக்கோவில் ஒன்றை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த அப்பகுதிக்கு ராஜராஜ சோழ மன்னரின் வருகை அவ்வப்போது நிகழ்வது உண்டு.

    காயத்துடன் சிவலிங்கம் :

    ஒருமுறை அவரது வருகையையட்டி மன்னர் செல்லும் வழியில் இடையூறுகளை நீக்க வேண்டி புல் செதுக்கும் பணி நடைபெற்றது. அந்த தருணத்தில் ஓரிடத்தில் எதிர்பாராது ரத்தம் பீறிட்டெழுந்தது. உடனே பணியாட்கள் மன்னரிடம் செய்தியை தெரிவித்தனர். மன்னர் வந்து பார்த்தபோது ரத்தம் பீறிடுவது நின்று தடைபட்ட தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம் காட்சியளித்தது.

    அந்த சிவலிங்கம் காணப்பட்ட இடத்திலேயே கோவில் கட்ட நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜராஜ சோழனால் குறிப்பிட்ட இடத்தில் எழுப்பப்பட்டதே ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ஆகும். இன்றும் லிங்கத்தின் தலைப்பகுதியில் பார்த்தால் மண்வெட்டி பட்ட காயம் தெரியும். கோவில் மூலஸ்தானத்தில் தீபாராதனை நடை பெறும்போது கற்பூர ஜோதி லிங்கத்தில் பிரதிபலிக்கும். இக்காட்சி மூலவர் ஜோதி வடிவானவர் என்றும், சுத்தரத்தினேஸ்வரர் தூயமாமணி என்றும், மாசிலாமணி என்றும் அழைக்கப்படுகிறார்.

    அப்பர் பெருமான் தனது ஆன்மிக சுற்றுப்பயணத்தின் போது ஊட்டத்தூருக்கு செல்ல நினைத்து 5 கிலோ மீட்டர் எல்லையிலேயே திகைத்து மகிழ்ந்து நின்று விட்டார். காரணம், அந்த எல்லையில் இருந்து பார்த்தபோது வழியெல்லாம் சிவலிங்கங்கள் இருப்பதாக உணர்ந்தார். சிவலிங்கத்தின் மீது அவரது பாதங்கள் படுவது சிவ குற்றம் என எண்ணி, எல்லையில் நின்றபடியே ஊட்டத்தூர் பெருமானை நினைத்து பதிகம் பாடியருளினார். இவ்வாறு எல்லையில் இவர் பாடியதால் அந்த இடம் பாடாலூர் என அழைக்கப்பட்டது.

    இந்திரன் மீண்டும் பதவி பெற்ற திருத்தலம் :

    ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவில் இது. சிறுநீரகம் சம்மந்தமான கோளாறுகளை நீக்கக்கூடியவர். இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது.

    அந்தக நரிமணம் என்கிற வேர் பல கோடி கற்களில் ஒன்றை பிளக்கும். அப்படி பிளக்கக்கூடிய கற்கள்தான் பஞ்சநதன பாறை. ஆதலால் இவர் பஞ்சநதன நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு என்ன சக்தி என்றால், சூரியன் காலையில் புறப்படும்போது வெளிப்படுத்தும் கதிர்களை ஈர்க்கக்கூடிய சக்தி இங்கு உள்ள நடராஜருக்கு உண்டு.

    ஆதலால் நாம் இவரை என்ன நினைத்து வணங்குகின்றோமோ அது அப்படியே நடக்கிறது. பிரம்மாவுக்கு இந்த ஊரில்தான் சாப விமோசனம் கிடைத்தது. ஆதலால் சிவன் எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. வேறு எந்த கோவிலிலும் சிவன் எதிரில் தீர்த்தம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    கோவில் அமைப்பு :

    ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களிலும் சூரிய ஒளி கர்ப்பகிரகத்தில் உள்ள லிங்கத்தின் மேல் படுகிறது. இதேபோல் வைகாசி மாதம் விசாக திருவிழாவின்போதும் சூரியனின் கதிர்கள் சுத்தரத்தினேஸ்வரர் மீது 3 நிமிடங்கள் பட்டு வழிபடுகிறது.

    மேற்கூரையில் நவக்கிரகங்கள்:

    ஊட்டத்தூர் சுத்தரெத்தினேஸ்வரர் கோவிலில் உள்ள இன்னொரு சிறப்பு அம்சமும் உள்ளது. அது கோவில் கொடி மரம் அருகே மேற்கூரையில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் செதுக்கப்பட்டு அவை பூமியை நோக்கி பார்க்கும்படி உள்ளது. அதன் அருகிலேயே 9 கிரகங்களும் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

    பொதுவாக கோவில்களில் நவக்கிரகங்கள் மற்றும் ராசிகளின் அதிபதிகள் தனித்தனி சன்னதியாக தான் இருக்கும். ஆனால் ஊட்டத்தூர் கோவிலில் இவை அனைத்தும் பூமியை நோக்கி இருப்பதால் அதன் அடியில் வைத்து செய்யப்படும் யாக பூஜைகள் அனைத்திற்கும் உடனடி பலன் கிடைக்கும். எந்த ராசியை சேர்ந்தவர்களும் இதன் மூலம் முழு பயன் அடைய முடியும்.

    இக்கோவிலில் சுத்தரத்தினேஸ்வரர், அகிலாண்டேசுவரி, பரிவாரங்கள், விநாயகர், சூரியன், தட்சிணாமூர்த்தி, ஐந்து நந்திகேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியர், 63 நாயன்மார்கள், கோடி விநாயகர், இரட்டை லிங்கம், அதிகார நந்தி, கஜலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, கோரப்பல்லுடன் கூடிய துர்க்கை, விஷ்ணு, சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, வீரபத்திரர், பைரவர், நவக்கிரகங்கள் மற்றும் மிக அழகான தோற்றம் உள்ள பல தெய்வங்களின் சிலைகளும் மிக சிறப்பாக அமைந்துள்ளது.

    கிழக்கு நோக்கி நந்தி :

    மற்ற சிவ தலங்களில் இல்லாத விசேஷமாக இங்கு நந்திதேவர் கிழக்கு முகமாக படுத்து உள்ளார். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி, சிந்து, துங்கப்பத்திரா ஆகிய நதிகளில் யார் பெரியவர்? என்ற தகராறு ஏற்பட்டு இங்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டனர்.அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும்படி சிவ பெருமான் நந்திதேவருக்கு கட்டளையிட்டார்.

    அதன்படி நந்திதேவர் 7 நதிகளையும் விழுங்கி விட்டு கிழக்கு நோக்கி படுத்து இருந்ததாகவும் அப்போது கங்கை மட்டும் வெளியே வந்ததாகவும், கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. இதனால் கோவில் அருகே ஓடும் சிறிய ஆறு நந்தியாறு என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் வடக்கு பகுதியில் இந்த நந்தியாறு கடலுடன் கலக்கிறது.

    இங்கு உள்ள தட்சிணாமூர்த்தி சக்திமிக்க தெய்வங்களில் ஒன்று.

    அபூர்வ நடராஜர் :

    இந்த கோவிலில் உள்ள துர்க்கை கோரைப்பற்கள் வெளியில் தெரியுமாறு காட்சி அளிக்கிறார். இந்த துர்க்கைக்கும், விஷ்ணு துர்க்கைக்கும் 11 வாரங்கள் எலுமிச்சம்பழ மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி, வடைமாலை சார்த்தி, சர்க்கரைப்பொங்கல் அல்லது பாயாசம் வைத்து வழிபட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இந்த சிவாலயத்தில் ஒரு தடவை பிரதோஷ வழிபாடு செய்பவர்களுக்கு ஒரு கோடி புண்ணியம் கிடைப்பதாக அகஸ்தியர் பெருமான் தெரிவித்துள்ளார்.

    அகிலாண்டேஸ்வரி காலபைரவர் சுரங்கப்பாதை:

    ஊட்டத்தூர் சிவன் கோவில் அருகிலேயே பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. இந்த கோவிலுக்கு பிரம்ம தீர்த்தத்தில் இருந்து தண்ணீர் எடுத்து சென்று பூஜைகள் செய்யப்பட்டதாகவும் கோவில் வரலாறுகள் கூறுகின்றன. இதற்காக சிவன் கோவிலில் இருந்து பெருமாள் கோவில் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு இருந்ததாகவும், தற்போது அந்த சுரங்கப்பாதை மூடப்பட்ட நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    நோய் தீர்க்கும் தீர்த்தம் :

    உலகின் உள்ள அனைத்து தீர்த்தங்களையும் பிரம்மா ஊட்டத்தூருக்கு கொண்டு வந்து பிரம்ம தீர்த்தத்தில் சேர்த்து உள்ளார். இதனால் இந்த பிரம்ம தீர்த்த நீரை எடுத்துச்சென்று நோயுற்றவர்களின் உடலில் தெளித்தால் அவர்கள் குணமடைவதாக கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன.

    இதற்கு சான்றாக ராஜராஜசோழன் உடல்நலம் இல்லாமல் இருந்தபோது ஊட்டத்தூர் வந்து பிரம்ம தீர்த்தத்தை உடலில் தெளித்து இறைவனை வழிபட்டு அடைந்து தனது ஆயுட்காலம் வரை நோய் நொடியின்றி வாழ்ந்ததை சான்றாக தெரிவிக்கின்றனர்.

    தற்போதும் கோவில் மூலஸ்தானத்தில் இறைவனை வழிபட நிற்கும்போது தீபாராதனைக்கு முன்பாக, பக்தர்களின் கையில் பிரம்ம தீர்த்த நீரை ஊற்றி கையை கழுவிய பின்னரே கோவில் குருக்கள் வழிபாடு நடத்தும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

    சக்தி வாய்ந்த காலபைரவர் :

    இந்த கோவிலில் உள்ள காலபைரவர் சக்திவாய்ந்த தெய்வங்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். கால பைரவருக்கு 11 வாரங்கள் தொடர்ந்து சகஸ்ரநாம வழிபாடு செய்தால் சிறு குழந்தைகளின் மன பயம் நீங்குவதாகவும், மாடுகளுக்கு வியாதிகள் தீர்வதாகவும் ஐதீகமாக நம்பப்படுகிறது.

    சந்தன காப்பு அலங்காரம் :

    மேலும் அஷ்டமி திதியன்று கால பைரவருக்கு யாகம் நடத்தி, அபிஷேகங்கள், சந்தன காப்பு அலங்காரம் செய்து காலாஷ்ட மந்திரம் ஓதி வழிபாடு செய்தால் மரண பயம் நீங்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தீராத நோயினால் அவதிப்படுபவர்கள் இந்த சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறார்கள்.

    ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவிலான இந்த கோவில் திருச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் உள்ளது.

  • திருமால் வணங்கிய…அன்னை ஸ்ரீ பாகம் பிரியாள்!

    இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனைக்கும் தொண்டிக்கும் இடையில் அமைந்துள்ள சிற்றூர் திருவொற்றியூர்.ஊரின் நடுவினில் பாகம் பிரியாள் கோயில் சுமார் ஜந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அந்த ஊருக்கும் அதைச் சுற்றியுள்ள ஊர்களுக்கும் கண்கண்ட தெய்வமாக்க காப்பவள் பாகம் பிரியாள். அக்கோயிலில் தெற்கு முகமாய் அமர்ந்திருக்கும் அவளுக்கு நான்கு கரங்கள் அபய ஹஸ்தம், வரத ஹஸ்தம், நீலோத்பல மலர், ஜபமாலை தாங்கி இருக்கின்றன.

    திருமால் வாமன அவதாரம் எடுத்து மூன்றடி அளந்து மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொண்டான், சிவபக்தனமான மகாபலியின் சிரசில் பாதம் வைத்ததனால், திருமாலின் காலில் புற்று உருவானது. அதற்கு விமோசனம் தேடி இந்த ஊருக்கு வந்து வாசுகி தீர்த்தக் குளத்தில் நீராடிவிட்டு அன்னை பாகம் பிரியாளை வணங்கி பாபவிமோசனம் பெற்று திருமால் குணமடைந்தார் என்பது இத்திருத்தல வரலாறு. இத்திருக்கோவிலில் அன்னை சந்நிதி அருகில் இறைவன் வான்மீகி நாதர்லிங்க ரூபமாக கிழக்கு நோக்கி உள்ளார். சுவாமி சந்நிதி அருகில் வாசுகி தீர்த்தக் குளம் அமைந்துள்ளது. அம்மன் சந்நிதி முகப்பில் இருபுறமும் வியாதியுடையவர்கள் தங்குவதற்கு கூடங்கள் அமைந்திருக்கின்றன.

    கோயிலின் பிரதான பிரகாரத்தில் ஒரு பெரிய வில்வமரம் உள்ளது. அதன் அடிப்பாகத்தில் உள்ள துவாரத்தில் வாசுகி என்ற நாகம் குடியிருக்கிறது. செவ்வாய். வெள்ளி போன்ற அம்மனுக்கு உகந்த கிழமைகளில் கோழி முட்டைகள் நூற்றுக்கணக்கில் அந்த துவாரத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. திருமாலே குணமடைந்த இந்தப் புண்ணிய ஸ்தலத்தில் மனிதனின் வியாதிகள் சர்வ நிச்சயமாய் குணமாகும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை. அவள் கருணை மழையில் வியாதிகள் கரைந்து போவதால் இத்திருத்தலத்தில் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்த வண்ணமுள்ளனர்.

  • இராமர் சன்னிதி அமைந்துள்ள.. அபூர்வ அம்மன் ஆலயம்!

    பொதுவாக அம்மன் திருக்கோயில்களில் இராமர் சன்னிதியைப் பார்ப்பது மிகவும் அபூர்வம். இப்படிப்பட்ட ஓர் அபூர்வ ஆலயம்தான் சென்னை வடபழனி நூறடி சாலை அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ மந்தவள்ளி அம்மன் ஆலயம். இந்தக் கோயிலின் நுழைவாசல் அருகே ஒரு பக்கத்தில் ஸ்ரீ ராமர் திருக்கோயில் என்கிற பெயர்ப்பலகையும், இன்னொரு பக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ மந்தவள்ளி அம்மன் ஆலயம் என்கிற பெயர்ப் பலகையும் காணப்படுகிறது. நூறடி சாலையை ஒட்டிக் கோயில் இருப்பதனால் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசலைத் சமாளித்தே கோயிலுக்குள் செல்ல வேண்டியிருக்கிறது என்றாலும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டத்திற்குப் பஞ்சம் இல்லை.

    நடைபாதையை ஒட்டிய நுழைவாசலின் மேல் சிறிய கோபுரம். நடுநாயகமாக ஸ்ரீ மந்தவள்ளி அம்மன் வீற்றிருக்கிறார். சுதை சிற்பம், கோபுரத்தில் வேறு சில சிற்பங்களும் காணப்படுகின்றன. கோயிலுக்குள் நுழைந்ததும் சிறிய மண்டபம் காணப்படுகிறது. அதனை ஒட்டிய கருவறை. கருவறையில் அன்னை ஸ்ரீ மந்தவள்ளி அம்மன் தரிசனம் தருகிறார். பத்மசானத்தில் அமர்ந்த கோலம். சுமார் இரண்டரை அடி உயரம் உள்ள கல் விக்ரகம். வலது கைகளில் திரிசூலம். அல்லி மொட்டு. இடது கைகளில் குங்குமச் சிமிழ், பாசாங்குசம்

    சிகப்புப் பட்டாடை, மல்லிகைப் பூவால் கிரீடம், அதன் மேல் அலங்காரக் கிரீடம், ஆபரணங்கள், அன்னையில் அருள் மழை பொழியும் பார்வை. கீழே கழுத்தளவு உள்ள ஒரு சிறிய கல் விக்ரமும் காணப்படுகிறது. இத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் அம்பாளுக்குப் பௌர்ணமி பூஜை நடத்தப்படுகிறது, அமாவாசை பூஜையும் விசேஷமாக நடத்தப்படுகிறது. அடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதணையும் நடைபெறுகிறது. இத்திருத்தலம் நூறாண்டு பழமையுள்ள கோவிலாகப் போற்றப்படுகிறது. மேலும் இத்திருத்தலத்தில் இராமர் சன்னதியுள்ளது. அதில் பட்டாபிஷேகக் கோலத்தில் உள்ள இராமர், இலட்சுமணர், சீதை அனுமார் ஆகியவர்களின் விக்ரகங்கள் காணப்படுகின்றன. பக்தர்கள் வேண்டியதை நிறைவேற்றித் தரும் கோயிலாக இத்திருத்தலம் போற்றப்படுகிறது.

  • அயல் நாட்டில் பணிப்புரிய அருள் புரியும்..சரஸ்வதி!

    சென்னை தியாகராய நகரில் தபால் நிலையத்துக்கு அருகில் இருக்கிறது. அனுக்கிரக விநாயகர் ஆலயம். உயர்கல்விப் படிப்புக்காக மனு கொண்டு வரும் மாணவர்கள், புதிய அல்லது உயர்வான பணிக்காக விண்ணப்பம் எடுத்து வரும் இளைஞர்கள், பாஸ்போர்ட்டுக்காக மனு செய்பவர்கள் எல்லோரும் இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள்.

    பக்கத்து தபால்நிலையத்துக்கு போக வேண்டியவர்கள் இந்தக் கோயிலுக்கு வருவானேன்? தம் மனுக்களையும் விண்ணப்பப் படிவங்களையும் தபால் மூலம் அனுப்புவார்கள். இந்த சரஸ்வதி தேவியை வழிபட்டு அதன்பிறகு இவ்வாறு செய்தால் தம் விருப்பங்கள் நிறைவேறும் என்று நம்புகிறார்கள்!

    பளிங்கால் ஆன சரஸ்வதி தேவி விக்ரகம் கொள்ளை அழகு. பட்டுப் பீதாம்பரம் சார்த்தி தங்கமயமான கிரீடம் சூட்டி, பெரிய தாமரையையும், தோளில் சூட்டி அழகுக்கு அழகு செய்கிறார்கள். அங்கே விக்ரகம் வட இந்திய பாணியில் இருந்தாலும் பூஜை, வழிபாடெல்லாம் தமிழ் வழக்கப்படியே நடக்கின்றன.

  • வேண்டும் வரம் அருளும்…மீனாட்சி சுந்தரேஸ்வரர்!

    திருச்சியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள நன்னிமங்கலம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தலம். சுமார் 1200 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் மூலவராக சுந்தரேஸ்வரர் தாய் மீனாட்சி சமேதராக அருள்பாலிக்கிறார். இத்தலவரலாறானது விருத்திராசூரனை கொன்றமையால் இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது. மதுரை மாநகரத்திற்கு அடையாளமாகவும் அழகு சேர்ப்பதாகவும் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்கள்.

    முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் மதுரை நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள் சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில் அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் இத்திருத்தலம் விளங்குகிறது.

    இந்த ஆலயத்தைச் சுற்றி, உயரமான மதில் சுவர்கள் உள்ளன. மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தின் முன் உள்ள முகப்பைக் கடந்ததும் நீண்ட நடைபாதையும், அடுத்து இன்னொரு முகப்பும் உள்ளது. அதையடுத்து அகன்ற பிரகாரமும், மகாமண்டபமும் உள்ளன. நந்தியும் பீடமும் மகாமண்டபத்தின் நடுவே அமைந்திருக்கிறது. அடுத்துள்ள அர்த்த மண்டபம் காணப்படுகிறது. கருவறையில் இறைவன் சுந்தரேஸ் வரர் லிங்கத்திருமேனியில் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். ஐந்தடி உயரத்தில், கரும்பச்சை நிறத்தில் மரகத மேனியராய் இறைவன் வீற்றிருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். மகா மண்டபத்தின் இடதுபுறம் இறைவி மீனாட்சி அம்மனின் சன்னிதி உள்ளது. முன் கை அபய முத்திரை காட்ட, மறு கையில் மலர் கொண்டு, கால்கட்டை விரல்களில் மெட்டி அணிந்து நின்ற திருக்கோலத்தில் புன்னகை தவழ தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள் அன்னை மீனாட்சி. வேண்டும் வரம் தந்தருளும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசிக்க எண்ணற்ற பக்தர்கள் நாள்தோறும் வந்த வண்ணமுள்ளனர்.

  • சிவலிங்கத்தின் சூரியன் ஒளிக்கதிர் படும் அதிசய கோயில் !!

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ளது வேதபுரீஸ்வரர் கோவில். இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தின் மீது ரத சப்தமி அன்று சூரியன் ஒளிக்கதிர் படும் அதிசய நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த ஆலயம் உள்ள திருத்தலத்தின் புராணப் பெயர் திருவோத்தூர் என்பதாகும். இத் தலத்தில் தேவர்களுக்கு ஈசன் வேதங்களை உபதேசம் செய்ததாக தல வரலாறு தெரிவிக்கிறது. திருவோத்தூர் என்பது தற்போது திருவத்திபுரம் என்று அழைக்கப்படுகிறது.

    பார்வதியின் தந்தையான தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். ஆனால் அந்த யாகத்திற்கு உலகை காத்தருளும் சிவபெருமானை அழைக்கவில்லை. இதுபற்றி அறிந்ததும் பார்வதிதேவி வருத்தம் கொண்டாள். தன் கணவனை அழைக்காததற்கு காரணம் என்ன என்பது பற்றி அறிய அவர் தட்சனிடம் சென்றான். ஆனால் பார்வதி தேவி அங்கு செல்வதற்கு சிவபெருமான் சம்மதிக்கவில்லை.

    இருந்தாலும் அவரது சொல்லை மீறி பார்வதிதேவி யாகத்திற்குச் சென்றாள். அங்கு அன்னைக்கு அவமரியாதை ஏற்பட்டது. கணவனின் சொல்லை மீறிச் சென்று அவமானத்தை சந்தித்ததற்காக பாவம் நீங்க, பார்வதிதேவி இத்தலத்தில் வந்து தங்கி இறைவனை நினைத்து தவம் செய்து இறைவனுடன் இணைந்தாள்.

    தேவர்களுக்கு வேதத்தை இறைவன் ஓதிவித்தான். சிவபெருமான் தேவர்களுக்கு இத்தலத்தில் வைத்து வேதத்திற்கு பொருள் சொன்னார் என்பதால் இந்தத் தலம் திருவோத்தூர் என்று அழைக்கப்பட்டது என்கிறது தல வரலாறு.

    இந்த இறைவன் வேதபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சிவலிங்க வடிவில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் உள்ள இறைவனின் மீது தினமும் சூரிய ஒளிக்கதிர் விழுகிறது. இருப்பினும், ரத சப்தமி அன்று இறைவன் மீது சூரியக் கதிர் படுவது சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.

    இறைவியின் திருநாமம் இளமுலையம்பிகை என்பதாகும். அன்னைக்கு பாலகுஜாம்பிகை என்ற பெயரும் உள்ளது. ஆலயத்தில் மகா மண்டபத்தில் நின்றபடி சுவாமி, அம்பாள், முருகப்பெருமான், விநாயகர், நவக்கிரகங்கள், தலமரம் என்று எல்லாவற்றையும் தரிசிக்க முடியும். ஒரே இடத்தில் நின்றபடி இவை அனைத்தையும் தரிசினம் செய்வது இந்த ஆலயத்தில் முக்கிய சிறப்பாக உள்ளது.

    சிவபெருமானைப் போற்றி பாடப்பட்ட தேவாரப் பாடல்கள் பெற்ற 274 சிவாலயங்களில் இது 240–வது தலமாக விளங்குகிறது. இத்தல இறைவனை திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிப் புகழ்ந்துள்ளனர். இங்குள்ள முருகப்பெருமானை அருண கிரிநாதர் பாடியுள்ளார்.

    இத்தல இறைவனான வேதபுரீஸ்வரரை, விநாயகர், முருகப்பெருமான், பைரவர், திருமால், பிரம்மன், சூரியன், தொண்டைமான் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இங்குள்ள சேயாறு முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்டு, இத்தலத்தில் தீர்த்தமாக விளங்குகிறது. இதன் காரணமாக இந்த ஊர் ‘செய்யாறு’ என்று பெயர் பெற்றுள்ளது. இத்தல விநாயகர் ‘நர்த்தன விநாயகர்’ என்றும், முருகப்பெருமான் ‘சண்முகர்’ என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.

    இந்த ஆலயத்தில் 9 வாசல்களைக் கடந்து சென்றால்தான் மூலவரை தரிசிக்க முடியும். பஞ்ச பூதத் தலங்கள் அனைத்துக்கும் தனித்தனி சன்னிதிகள் இங்கு இருக்கின்றன. எனவே இங்கு பஞ்சபூத லிங்கங்களையும் தரிசிக்கலாம். ஒரே இடத்தில் நின்றபடி ஆலயத்தின் 8 கோபுரங்களை தரிசிக்க முடியும்.

    இந்த ஆலயத்தில் தை மாதம் 10 நாள் பிரமோற்சவ விழா நடைபெறுகிறது. தை அமாவாசைக்கு அடுத்த நாள் கொடியேற்றம் செய்யப்படும் இந்த விழா வெகு விமரிசையாக நடைபெறும். இது தவிர ஆடி மாதத்தில் லட்ச தீபம், பங்குனி உத்திரம், மாசி மகம், சிவராத்திரி, சங்கடஹர சதுர்த்தி, ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும், தலமரமான பனை மரத்துக்கும், நாகலிங்கத்துக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 8.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    பொதுவாக அனைத்து சிவாலயங் களிலும் நந்தியானது, இறைவனை நோக்கியபடி அமைக்கப்பட்டிருக்கும். இந்த ஆலயத்தில் உள்ள நந்தி வாசலை நோக்கியபடி அமைந்திருக்கிறது. இதற்கு ஒரு கதையும் கூறப்படுகிறது. அதாவது இத்தல ஈசன், தேவர்களுக்கு வேதம் ஓதிக் கொண்டிருந்தார். அப்போது பாடம் சொல்லிக் கொடுக்கும்போது இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக, யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று நந்தியை இறைவன் பணித்தார். அதன்காரணமாகவே நந்தி, ஆலய வாசலை நோக்கியபடி இருப்பதாக கூறப்படுகிறது.

    இது தவிர இந்தப் பகுதியை ஆண்ட தொண்டைமான் எதிரிகளுடன் போர் புரிய தயக்கம் காட்டி, இத்தல இறைவனை வேண்டினான். இதையடுத்து ஈசன் நந்தியை வாசலை நோக்கி காவல் காக்கும்படி சொன்னதால், நந்தி வாசலை நோக்கியபடி இருப்பதாகவும் இருவேறு காரணங்கள் கூறப்படுகிறது.

    வேதபுரீஸ்வரர் ஆலயம் சேயாற்றின் கரையில் உள்ளது. ஆற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட, அதனால் கோவில் சுவர்கள் பாழாகி வந்தன. இதனால் வருத்தம் கொண்ட சிவனடியார் ஒருவர், ஆற்றின் கரையை உயர்த்தி மண் கரைந்து போகாமல் தடுக்க பனங்கொட்டைகளை நட்டு பனை மரங்களை வளர்த்து வந்தார். வளர்ந்து வந்த பனை மரங்கள் அனைத்துமே ஆண் பனையாக இருந்தன. இதைப் பார்த்து சிலர், காய்க்காத ஆண் பனையை வைத்துக் கொண்டு என்ன செய்ய? என்று ஏளனம் செய்தனர்.

    ஒரு முறை இந்தப் பகுதிக்கு வந்த திருஞானசம்பந்தரிடம், தன்னுடைய வருத்தத்தை சிவனடியார் கூறினார். இதையடுத்து சம்பந்தர் இத்தல இறைவனின் மீதும், ஆண் பனை பெண் பனையாக மாற வேண்டியும் 11 பாசுரங்களை பாடினார். இதில் ஆண் பனை மரங்கள் அனைத்தும் பெண் பனைமரங்களாக மாறி காய்த்துக் குலுங்கின.

    இத்தலத்தில் நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒரு முறை திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வந்தார். அப்போது பிற மதத்தைச் சேர்ந்த சிலர், வேள்வி ஒன்றை நடத்தி சம்பந்தர் மீது கொடிய பாம்புகளை ஏவிவிட்டனர். சம்பந்தர் இத்தல ஈசனை நினைத்து வேண்டினார். உடனே சிவபெருமான், பாம்பாட்டியாக வந்து அந்த பாம்புகளை பிடித்துக் கொண்டு மறைந்துவிட்டார். 11 சர்ப்ப தலைகளுடன் இந்த நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த நாகநாத லிங்கத்தை சனிக் கிழமை தோறும் ராகுகாலத்தில் வழிபாடு செய்தால் சர்ப்ப தோ‌ஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இந்த நாகலிங்கத்தை அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்.

  • கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா

    இந்த ஆண்டு குவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
    இதனையொட்டி, குவாகம் கிராமத்தைச் சுற்றியுள்ள நத்தம், மடப்பட்டு, பெரியசெவலை, அரசூர், திருவெண்ணைநல்லூர், கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கூழ் எடுத்து கொண்டு ஊர்வலமாக சென்று கூத்தாண்டவருக்கும், மாரியம்மனுக்கும் கூழ் வைத்து படையலிட்டு வழிபாடு நடத்தினர்.
    வரும் மே மாதம் 4-ஆம் தேதி வரை 18 நாட்கள் நடைப்பெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 1-ஆம் தேதியும், அதனைத்தொடர்ந்து 2-ஆம் தேதி அரவான் களபலி கொடுக்கும் நிகழ்ச்சியும், கூத்தாண்டவர் திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.
    இதனைத் தொடர்ந்து திருநங்கைகள் தாலி அறுத்து விதவை கோலம் ஏற்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
    இத்திருவிழாவில் கலந்து கொள்ள தில்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் வருகை புரிந்துள்ளனர்.
    திருவிழாவின் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்குபெறும் ‘மிஸ் கூவாகம்’ அழகி போட்டி, பேஷன் ஷோ, நடனப் போட்டி, பாட்டு போட்டி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

  • திருப்பதியில் 29-இல் கருட சேவை

    சித்திரை மாத பெளர்ணமியை முன்னிட்டு, திருமலையில் வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி கருட சேவை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    திருப்பதி ஏழுமலையானுக்கு நடைபெறும் கருட சேவையைக் காண அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவர். அதனால் திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களும் கருட சேவையைக் காண வேண்டும் என தேவஸ்தானம் கடந்த சில ஆண்டுகளாக பௌர்ணமி அன்று மாலை வேளையில் கருடசேவையை நடத்தி வருகிறது.
    இந்நிலையில், 2018-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து ஜனவரி 2-ஆம் தேதி அத்யயனோற்சவம், ஜனவரி 31 சந்திரகிரகணம், மார்ச் 2-ஆம் தேதி தெப்போற்சவம், மார்ச் 31 வசந்தோற்சவம் உள்ளிட்ட உற்சவங்களை முன்னிட்டு அன்று மாலை நடைபெற இருந்த கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்திருந்தது.
    அதனால் வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி மாலை 7 மணிக்கு பௌர்ணமி அன்று 2018-ஆம் ஆண்டின் முதல் பௌர்ணமி கருடசேவை நடைபெற உள்ளது.
    அதேபோல் ஜூலை 27-ஆம் தேதி சந்திரகிரகணம், நவம்பர் 22-ஆம் தேதி கார்த்திகை பௌர்ணமி, டிசம்பர் 22-ஆம் தேதி அத்யயனோற்சவம் உள்ளிட்ட காரணங்களுக்காக கருடசேவை ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    மேலும், மே 29, ஜூன் 28, ஆகஸ்ட் 26, செப்டம்பர் 25, அக்டோபர் 24 உள்ளிட்ட தேதிகளில் பௌர்ணமி கருட சேவை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  • சபரிமலை ஐயப்பன் கோயிலில் விஷூ ‘கைநீட்டம்’

    சபரிமலையில் விஷூ பண்டிகையை ஒட்டி பக்தர்களுக்கு தந்திரியும், மேல்சாந்தியும் விஷூ ‘கைநீட்டம்’ வழங்கினர். சபரிமலையில் சித்திரை விஷூ பூஜைகள் நடந்தது.

    கடந்த 11ம் தேதி முதல் வழக்கமான பூஜைகளுடன் இரவு 7:00 மணிக்கு படி பூஜையும் நடந்தது. சித்திரை ஒன்றாம் தேதி கடந்த 14ம் தேதி பிறந்தது. ஆனால் கேரள பஞ்சாங்க கணக்கு படி நேற்றுதான் கேரள கோயில்களில் விஷூ கொண்டாடப்பட்டது.

    அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்ததும் பக்தர்கள் கோயிலுக்குள் அமைக்கப்பட்டிருந்த காய்கனி அலங்காரத்தை தரிசனம் செய்தனர், தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி, ஆகியோர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் மற்றும் பக்தர்களுக்கு நாணயங்களை ‘கைநீட்ட’மாக வழங்கினார். ஏப்.,18 இரவு 10:00 மணி வரை நடை திறந்திருக்கும்.

  • தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா

    தஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது, ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
    தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவில் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும், 1005 ஆண்டுகளை கடந்தும் சிறந்து விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், அதன்படி இவ்விழா துவஜாரோகணம் எனும் கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.
    முன்னதாக அதிகாலை பெரியகோவிலில் உள்ள பிரமாண்ட கொடிமரத்திற்கு மஞ்சள், பால், சந்தனம், தயிர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேகம் நடைபெற்று பின்னர் நந்தி மண்டபத்திற்கு முன்பு உள்ள கொடிமரத்தில் நந்தி உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டு சிறப்பு மஹாதீபாரதனை காட்டப்பட்டது.
    18 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருவிழாவில் தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் பரதநாட்டிய கலைநிகழ்ச்சியும் நடைபெறுகிறது, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 26ந்தேதி நடைபெற உள்ள, இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.