Category: கோவில்கள்

கோவில்கள்

  • குலதெய்வ பூஜை அவசியம் என்ன?

    குலதெய்வ பூஜை என்பது ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் அல்லது பங்காளிகள் ஒன்று கூடி நடத்துவது ஆகும். இது குடும்ப ஒற்றுமைக்கும் மிக பெரிய வரப்பிரசாதமாக அமைகிறது. இந்த பூஜை ஒரு சில குடும்பங்களில் பகலில் நடத்துகிறார்கள் ஒரு சில குடும்பங்களில் இரவு முழுவதும் நடத்துகிறார்கள்.

    அது அந்த குலதெய்வத்தின் வழக்கபடி அமைகிறது. இந்த பூஜையின் அவசியம் என்ன என்றால் உங்களுக்கு தீராத பிரச்சினைகள் இருந்தால் அதை தீர்த்துவைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது உங்கள் குலதெய்வம்.அதனை நாம் வணங்காமல் இருக்கலாமா. நீங்கள் சோதிடர்களிடம் சென்றால் குலதெய்வத்தை வழிபடுங்கள் அனைத்தும் சரியாகும் என்று கூறுவார்கள். நீங்கள் என்ன என்னமோ பரிகாரம் ஒவ்வொரு கிரகத்திற்க்கும் செய்து கொண்டிருப்பீர்கள் ஆனால் பரிகாரம் எடுபடாது.

    எந்த ஒரு நல்ல காரியத்திற்க்கும் குலதெய்வ வழிபாடு முதலில் செய்து முடித்துவிட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும். நீங்கள் கேட்டது அனைத்தையும் நிறைவேற்றி வைப்பதில் உங்கள் குலதெய்வத்தை தவிர வேறு எந்த தெய்வமும் நிறைவேற்றாது. ஒரு சில இடங்களில் குலதெய்வத்தை ஒருமுறை மட்டும் தான் கும்பிடுவார்கள் அதற்கு பிறகு அதை கண்டுக்கொள்ள மாட்டார்கள். ஏன் என்றால் குலதெய்வத்தை ஒரு முறை தான் கும்பிட வேண்டும் என்று இவர்களாகவே ஒரு சட்டம் இயற்றிக்கொண்டு கும்பிடமாட்டார்கள் அவ்வாறு ஒன்றும் கிடையாது. தாராளமாக கும்பிடலாம். உங்கள் குலதெய்வத்திற்க்கு போய் ஒரு முறை சாமி தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

    உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நீங்கள் வெளியூரில் இருந்தால் மாதம் ஒரு முறை சென்று வாருங்கள் அவ்வாறு சென்று வரமுடியவில்லை என்றால் அந்த கோவிலுக்கு ஒரு குறிபிட்ட தொகை அனுப்பி அங்கு உள்ளவர்களை சாமி கும்பிட்டு பிரசாதத்தை உங்களுக்கு அனுப்ப சொல்லுங்கள். குலதெய்வ வழிபாடு உங்களுடைய நட்சத்திரம் வரும் நாட்களில் கும்பிடலாம் அவ்வாறு இல்லை என்றால் பௌர்ணமி அல்லது அமாவாசை அன்று செய்யலாம்.

    நாம் மற்ற தெய்வத்தை பொருத்தவரை அர்ச்சனை செய்து சாமி கும்பிடுவோம் ஆனால் குலதெய்வத்திற்க்கு பொங்கல் வைத்து சாமி கும்பிடவேண்டும். நீங்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் உங்கள் வீட்டு குலதெய்வத்தை வணங்கிவிட்டு செல்லுங்கள். உங்களுக்கு எந்த தோஷம் இருந்தாலும் குலதெய்வ வழிபாட்டை தொடருங்கள் அது அனைத்து தோஷத்தையும் போக்க கூடியது. குலதெய்வ வழிபாடு தான் முதலில் அடுத்த பரிகாரங்கள் எல்லாம் பிறகுதான் என்பதை மனதில் வையுங்கள்.

  • நலம் தரும் நரசிம்மர் கோயில்கள்!

    சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் முதல் பூஜை அழகியசிங்கர் என போற்றப்படும் யோகநரசிம்மருக்கே. அவர் எப்போதும் யோகத்திலேயே இருப்பதால் ஓசையால் அவர் யோகம் கலையக்கூடாது என்பதற்காக அவர் கருவறை கதவுகளில் உள்ள மணிகளுக்கு நாக்குகள் இல்லை.

    சென்னை, மேற்கு சைதாப்பேட்டையில் பிரசன்ன வேங்கட நரசிம்மப் பெருமாள் எனும் திருப்பெயருடன் நரசிம்மரை தரிசிக்கலாம். இவருக்கு சிம்மமுகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மதுரை, மாட்டுத்தாவணியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஒத்தக்கடையின் அருகே யானைமலை அமைந்துள்ளது. இங்கு அருளும் நரசிம்ம மூர்த்திக்கு பிரதோஷ காலத்தில் பானகம் நிவேதித்து வேண்டிட நினைத்த காரியம் நிறைவேறுகிறது.

    கோவை, அவிநாசியில் உள்ள தாளக்கரையில், நின்ற திருக்கோலத்தில் லட்சுமி நரசிம்மரை தரிசிக்கலாம். திருமகளின் சகோதரனான சந்திரனே இங்கு கருவறை விமானமாக அமைந்திருப்பதாக ஐதீகம். எனவே இது சந்திர விமானம் என வணங்கப்படுகிறது.

    விழுப்புரம், அந்திலியில், கருடனுக்கு காட்சியளித்த நரசிம்மரை தரிசிக்கலாம். ஆண்டு முழுவதும் சூரிய ஒளி இந்த நரசிம்மமூர்த்தியின் மீது படர்வது அதிசயமான நிகழ்வாகும்.

    விழுப்புரம், பரிக்கல்லில் அஷ்டகோண விமானத்தின் கீழ் நரசிம்ம மூர்த்தி அருள்கிறார். பதவி உயர்வு வேண்டுவோரும், இழந்த பதவியைத் திரும்பப் பெற வேண்டுவோரும் இவரை தரிசித்து பலனடைகின்றனர். பில்லி, சூன்ய பாதிப்புகள் இவரை நினைத்த மாத்திரத்திலேயே நீங்கும்.

    காஞ்சிபுரம், அழகிய சிங்கப்பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு எதிரில் வீற்றிருக்கும் கருடாழ்வார், நரசிம்மரின் உக்கிரம் தாங்காது சற்றே தலை சாய்த்த நிலையில் காணப்படுகிறார்.

    திருநெல்வேலி, மேலமாடவீதியில் உள்ள நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்மரின் தோளை அணைத்தபடி மகாலட்சுமி தாயார் வீற்றுள்ளார்.

    ஆந்திர மாநிலம், கர்நூலில் உள்ள அகோபிலத்தில் பிரகலாத வரதன் எனும் திருப்பெயரில் பக்தபிரகலாதனுக்கு அருளிய நரசிம்மரையும் அவர் வெளிப்பட்ட உக்ரஸ்தம்பத்தையும் தரிசிக்கலாம். இத்தலம் நவ நரசிம்மத் தலமாக போற்றப்படுகிறது.

    திண்டுக்கல், வேடசந்தூரில் உள்ளது, நரசிம்மப் பெருமாள் ஆலயம். இரண்யனை அழித்த கோபத்துடன் இருந்த நரசிம்மரை ஈசன் சரபேஸ்வர வடிவம் கொண்டு தணித்ததால் சிங்க முகம் நீங்கி, இயல்பாக தரிசனம் தருகிறார், பெருமாள்.

    திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள காட்டழகிய சிங்கர் 8 அடி உயரத்தில் திருமகளை தன் இடது மடியில் இருத்தி அருட்கோலம் பூண்டிருக்கிறார். ஒவ்வொரு சுவாதி நட்சத்திர தினத்தன்றும் இந்த நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    பண்ருட்டிக்கு அருகில் உள்ள திருவதிகையில் சரநாராயணப் பெருமாள் ஆலயத்தில், திருவக்கரையில் வக்ராசுரனை அழித்த களைப்பு தீர, சயன நிலையில் நரசிம்மரை தரிசிக்கலாம்.

    திண்டிவனத்தில் உள்ள நரசிங்கப்பெருமாளை அவர் கோபம் தீர, வேண்டிக் கொள்ளும் தாயாரை வணங்கிய கோலத்தில் தரிசிக்கலாம். ராகுதசை நடப்பவர்கள் மற்றும் திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரக்காரர்களின் பரிகாரத்தலமாகவும் இக்கோயில் திகழ்கிறது.

    தாம்பரம்-செங்கல்பட்டு பாதையில் உள்ள சிங்கப்பெருமாள் ஆலயத்தில் பிரமாண்டமான நரசிம்மமூர்த்தியை தரிசிக்கலாம். கடன்கள் தீர, வழக்குகளில் வெற்றி பெற, இவர் அருள்கிறார். ஆலயத்தில் உள்ள அழிஞ்சில் மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்வோருக்கு குழந்தை பாக்கியம் கிட்டுகிறது.

    மைசூர் ஜெயலட்சுமிபுரம், காளிதாசர் சாலை, இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் பசு நெய் விளக்கேற்றி வழிபட, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வதாக நம்பிக்கை.

     

  • கண் நோய் தீர்க்கும் கண்ணுடைய நாயகி

    ஆணவ வடிவமான சண்டாசுரனை அழிக்க, வடிவெடுத்த மஹா சக்தி, தேவர்கள் காணும் வகையில், அவர்களுக்கு ஞானக் கண் தந்து, தன் திருவுருக் காட்டியதால் கண்ணுடையாள் என்ற திருநாமம் கொண்டாள்.

    ‘ஆணவ வடிவமான சண்டாசுரனை அழிக்க, வடிவெடுத்த மஹா சக்தி, தேவர்கள் காணும் வகையில், அவர்களுக்கு ஞானக் கண் தந்து, தன் திருவுருக் காட்டியதால் கண்ணுடையாள் என்ற திருநாமம் கொண்டாள்.

    ‘பூணுமெழிற் காளி எதிர் பொருந்தவர் மெய் கண்ணில் காணவர முற்றமையால் கண்ணுடையாள்’ என்கிறது காளையார்கோயில் புராணம்.

    கண்ணுடையாள், கண்ணானந்தி, கண்ணம்மா, கண்ணுடைய நாயகி என்று தமிழிலும், ‘நேத்ராம்பிகா’ என்று வடமொழியிலும் திருநாமங்கள் அம்மனுக்கு இருந்தாலும், பக்தர்களால், ‘கண்ணாத்தாள்’ என்றே பரவலாக அம்மன் அழைக்கப்படுகின்றாள்.

    சுயம்பு மூர்த்தியான அம்பிகையின் அருட்கடாட்சம் போல், விரிந்து பரவியிருக்கிறது திருக்கோயில்..

    திருக்கோயிலின் முன்பாக திருக்குளம்..சுற்று மதிலுடன், படித்துறைகளுடன் கூடியதாக இருக்கிறது தேவியின் திருக்குளம். இது, சதுர அமைப்புடன், தூண்கள் உடையதாக விளங்குகிற சொக்கட்டான் மண்டபத்துக்கு வடபாகத்தில் அமைந்துள்ளது. இதுவே இத்திருக்கோயிலின் தீர்த்தம்..

    அன்னையின் அருட்சக்தி, இந்த திருக்குள நீரில் நிரம்பியிருப்பதாக‌ ஐதீகம்.. கண் நோய்கள் வந்தால், இந்தத் தீர்த்தத்தை கண்களில் விட்டு கழுவினால், நோய்கள் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை

  • இதய நோய்களைத் தீர்க்கும் இருதயாலீஸ்வரர்

    ஏழாம் நூற்றாண்டில் திருநின்றவூர் எனும் தலத்தில் மறையவர் குலத்தில் உதித்தார் பூசலார் எனும் சிவபக்தர். வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். ஆனாலும், தினமும் அங்குள்ள லிங்கம் ஒன்றைத் தரிசித்து வந்தார். கூரையற்று அந்த இறைவன் மழையிலும், வெயிலிலும் நனைவதைக் கண்டு மனம் வருந்தினார்.

    அந்த ஊரில் சிவ பெருமானுக்கு ஆலயம் கட்ட யாருமே முன் வராத நிலையில் எப்படியேனும் ஈசனுக்கு கோயில் கட்ட வேண்டுமென்று பேரவா கொண்டிருந்தார். செங்கற்களாலும் கல்லாலும் கட்டினால்தான் கோயிலா என்னும் கேள்வி அவர் மனதில் உதித்தது. கையில் பொருளில்லாமல் வெறும் மனக்கோயில் கட்டினால் என்ன என்று கேட்டுப் பார்த்தார். மனக்கோயில் கட்ட முடியுமா என்று மற்றவர்கள் கேலி செய்தார்கள். அந்த சொற்களையே நினைத்துக்கொண்டிருந்த அவருக்குள் ஒரு ஞானம் பிறந்தது. மனதில் ஒரு வைராக்கியத்தை உருவாக்கியது.

    அவர் மனதிற்குள் கோயில் கட்டத் தொடங்கினார். ஒரு இலுப்பை மரத்தடியில் அமர்ந்து சிவபெருமானை நோக்கி வணங்கி விட்டு தன்னிடம் ஏராளமான செல்வம் இருப்பதுபோல் கற்பனை செய்துகொண்டு, சிவனை மனதில் இருத்தி மனதுக்குள்ளேயே அனைத்து வசதிகளும் கொண்ட ஆலயத்தை உண்மையிலேயே கட்ட எத்தனை ஆண்டுகள் ஆகுமோ அத்தனை ஆண்டுகள் மனதாலேயே ஆலயத்தை வடிவமைக்கத் தொடங்கினார்.

    செங்கல் இல்லாவிடின் என்ன, கற்கள் இல்லாவிடின் என்ன, பொருள் இல்லாவிடின் என்ன, இவை இல்லாமலே ஆழ்ந்த பக்தியை மூலதனமாக்கி, கோயில் கட்ட முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக தன் மனதுக்குள்ளேயே கோயிலை வடிவமைத்து முழுதாகக் கட்டி முடித்தார்.

    அப்படிக் கட்டி முடித்த கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த ஒரு நன்நாளையும் குறித்தார். அதேநேரம் காஞ்சியிலும் ஒரு ஆலயம் உருவானது. உலகுக்கே ஒரு உன்னதக் கோயிலாக அதை நிர்மாணித்துக்கொண்டிருந்தவன் பல்லவ மன்னன் காடவர்கோன் ராஜசிம்மன். அந்த கைலாசநாதர் ஆலயம் அவன் மனதுக்கு மிகவும் திருப்தியாக கோயில் அழகுற மிளிர்ந்தது.

    தான் பெருமையுடன் உருவாக்கிய கோயிலுக்குக் குடமுழுக்கு வைபவத்துக்கு நாள் குறித்தான் மன்னன். மறுநாள் குடமுழுக்கு, வெகுநாட்கள் கழித்து அன்று மனத்திருப்தியுடன் கண்ணயர்ந்தான். அவன் கனவில் கயிலைநாதன் தோன்றி ‘நாளை திருநின்றவூரில் என் பக்தனொருவன் கட்டிய கோயிலுக்கு குடமுழுக்கு விழா நடத்துகிறான்.

    நான் அங்கே செல்ல வேண்டும். அதனால் நீ வேறொரு நாள் குறித்தால் அந்த நன் நாளில் நான் வருகிறேன்’ என்று கூறி மறைந்தார். அதைக் கேட்டு திடுக்கிட்டு விழித்த மன்னன் குடமுழுக்கு பணியை நிறுத்த ஆணையிட்டுவிட்டு திருநின்றவூருக்கு புறப்பட்டான். கோயிலைத் தேடி அலைந்து களைத்துப் போனான். எங்கும் கோயிலைக் காணவில்லை.

    ஒரு விவசாயி, ‘இங்கே பூசலார் என்றொருவர் கோயில் கட்டவேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தார், இலுப்பை மரத்தடியில் பித்துப் பிடித்தாற் போல ஒருவர் இருப்பார், அவர்தான் பூசலார், அவரைப் பார்த்தால் விவரம் தெரியும்,’ என்று கூறவே தேடி அலைந்து பூசலாரைக் கண்டான் மன்னன். ‘ஆலயம் எங்கே?’ என்று கேட்டான். ‘இதோ என் மனதுக்குள்ளே,’ என்றார் பூசலார். பொருள் இல்லாத காரணத்தால் என் மனதால், பக்தியையும் ஞானத்தையும் குழைத்து மனதுக்குள்ளேயே ஆலயம் அமைத்திருக்கிறேன் என்றார்.

    அவருடைய பக்தியை வியந்து அவருடைய இருதயத்தில் கட்டிய கோயிலுக்கு பூசலாரின் விருப்பப்படி திருநின்றவூரில், பக்தவத்சலப் பெருமாள் ஆலயத்தின் அருகில் சிவாலயம் எழுப்பி இருதயாலீஸ்வரர் ஆலயம் என்று அதற்குப் பெயரிட்டு பூசலார் குறித்த நாளிலேயே குடமுழுக்கும் செய்வித்தான். அதன் பின்னரே காஞ்சிக்கு சென்று கயிலாயநாதர் கோயிலுக்கும் குடமுழுக்கு செய்தான்.

    இந்த இருதயாலீஸ்வரர் கோயிலின் கருவறையில் ஈசனாரின் லிங்கத் திருமேனிக்கு அருகே பூசலாரும் காட்சி தருகிறார். இருதயத்தால் கட்டிய ஆலயம் என்பதால் இருதய தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் இங்கே வந்து இருதயாலீஸ்வரரையும், இறைவி மரகதாம்பாளையும், பூசலாரையும் வேண்டிக்கொண்டால் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.

    இறைவன் லிங்க ரூபமாகவும், மரகதாம்பாள் நின்ற திருக்கோலத்தில், நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறார். இருதயாலீஸ்வரரின் விமானம் கஜப்ருஷ்ட விமானமாக தூங்கானை மாடவடிவில் அமைந்துள்ளது. இருதய நோய் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகள் பூரண குணமாக இங்கு வந்து வேண்டிக் கொள்கிறார்கள்.

  • புத்திர பாக்கியம் அருளும்….பெருமாள்!

    சென்னை மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. கிரிவரதராஜ பெருமாள் திருக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திருத்தலங்கள் ‘திவ்ய தேசங்கள்’ என வைணவ மரபில் வழங்கப்பட்டு வருகின்றன. அத்தகைய சிறப்பு பெற்ற திருத்தலம் தான் கிரிவரதராஜா பெருமாள் கோவில்

    இத்திருத்தலத்தின் உற்சவர்கள் கரிவரதராஜ பெருமாள் என்றும், தாயார் கனகவல்லி என்ற திருப்பெயருடனும் சேவை சாதிக்கின்றனர். உற்சவரின் பெயரிலேயே ஆலயம் அழைக்கப்படுகிறது. இத்தல உற்சவர் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, கிணறு தோண்டும்போது கண்டெடுக்கப்பட்டவர். புராணப் பெருமை வாய்ந்த இந்த ஷேத்திரம், கல் திருப்பணி ரீதியாக 1400 ஆண்டுகள் தொன்மையானது. காஞ்சீபுரம் சென்று வரதராஜ பெருமாளை தரிசிக்க முடியாதவர்களுக்காக, இரண்டாம் நந்திவர்மப் பல்லவ அரசனால், இவ்வாலயம் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போருக்குச் சென்றபோது இத்தலத்தில் தங்கியிருந்து, பெருமாளை வழிபாடு செய்த இவ்வரசன், போரில் வெற்றி பெற்றதன் நினைவாக இந்த ஆலயம் எழுப்பியுள்ளான் என இத்தலவரலாறு கூறுகிறது.

    இங்கு பெருமாளை தரிசிப்பதற்கு முன்பு, சுதைச்சிற்ப ஆஞ்சநேயரை வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் ஆழ்வார்கள், ஆச்சார்யர்களான சேனை முதலி, நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், தேசிகர், மணவாள மாமுனிகள் ஆகியோரை வணங்கி, ஆண்டாள், கனகவல்லித் தாயாரை வழிபட்ட பின்பே கரிவரதராஜப் பெருமாளை வழிபடுவது முறையாகும்.

    மேலும் தொடர்ச்சியாக 12 வெள்ளிக்கிழமைகளில் காலை வேளையில் நீராஞ்சன தீபமேற்றி, மஞ்சள் மாலை சாற்றி வேண்டுவோருக்குத் திருமணம், குழந்தைப்பேறு வாய்க்கிறது. பேச்சுத்திறன் இல்லாத குழந்தைகளுக்குப் பேச்சுத்திறன் ஏற்படுத்தியும், காணாமல் போன குழந்தை திரும்ப கிடைக்கச்செய்தும் அதிசயம் நிகழ்த்தியுள்ளார். மனமுருகி வழிபடுவோருக்கு 21 நாளில் வேண்டுதல் நிறைவேறுவதாக இத்திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

  • தம்பதியர்களைக் காக்கும்…ஸ்ரீ உத்தர ரங்கநாதர்!

    திருமலை ஸ்ரீனிவாசப் பெருமாளை நெடுந்தூரம் பயணம் செய்து தரிசிக்க முடியாதவர்களுக்காக திருமலையாவூர் குணசீலம், அரியக்குடி, ஒப்பிலியப்பன் கோயில் போன்ற இடங்களில் அந்த ஸ்ரீனிவாசனே எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.அவ்வண்ணம் – பூலோக வைந்தமாம் ஸ்ரீ ரங்கத்திற்குச் சென்று ஸ்ரீ ரங்கநாயகி சமேத ரங்கநாதப் பெருமாளைத் தரிசிக்க முடியாத தொண்டை வள நாட்டு பக்தர்களின் குறையைத் தீர்க்கிறார். வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாவில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ உத்தர ரங்கநாதர்.

    வேலூர் – பெங்களூர் நெடுஞ்சாலையில் 23 கிமீ பயணித்து, குடியாத்தம் செல்லும் வழியில் 1 கி.மீ தூரம் சென்றால் ஸ்ரீ உத்தர ரங்கநாதரின் கம்பீரமான ராஜகோபுரம் நம்மை அன்போடு அழைக்கிறது.ஸ்ரீ உத்தர ரங்கநாதப் பெருமாளின் இப்போதைய திருக்கோயில் கட்டமைப்பு சுமார் ஆயிரம் வருடம் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முதலாம் குலோத்துங்கனின் மகனாகிய விக்கிரம சோழன் இப்பிராந்தியத்தையும் சேர்த்து ஆண்டபோது திருக்கோயில் கைங்கரியங்களுக்காக ஏராளமான நிலப்பரப்பு தானமாக வழங்கப்பட்டிருக்கிறது. சோழ அரசுக்கு உட்பட்ட சம்புவராயர்கள் என்னும் சிற்றரசர்களும் விக்கிரம சோழன் கருத்திற்கிணங்க  இத்திருக்கோயிலுக்கு நிறைய திருப்பணிகள் செய்துள்ளார்கள்.கிருஷ்ணதேவராயர் காலத்தில் திருமதில் உள்ளிட்ட பல சிறப்புகளைப் பெற்றுள்ளது இத்திருக்கோயில்.

    ஸ்ரீ ஆண்டாளைப் போன்ற சிறந்த பக்தையான செண்பகவல்லி என்ற பெண்ணை இத்தலத்து  எம்பெருமான் பங்குனி உத்திரத்தன்று  மணந்து கொண்டதால் இத்திருக்கோயிலில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினர் நீண்ட காலம் சிறப்பான இல்லறம் நடத்துவார்கள் என்பது ஐதீகம்.இத்தலத்து தாயாரின் பெயரும் ஸ்ரீ ரங்கநாயகிதான். பள்ளி கொண்டா ஸ்ரீ உத்தர ரங்கநாதரைத் தரிசிக்க பக்தர்கள் குறைகள் நீங்கி எல்லா நன்மைகளும் பெற்று வாழ்வார்கள்.

  • ஒன்பது நந்திகள்…ஓரே இடத்தில்!

     நந்தீஸ்வரருக்கு தனிக்கோயில் இருப்பதே அபூர்வம். அதிலும் ஒன்பது நந்திகளை ஒரே இடத்தல் தரிசிப்பது எத்துணை அபூர்வம். அத்தகைய சிறப்புமிக்க நவ நந்திகள் ஆந்திர மாநிலத்தில் நந்தியால் என்னும் ஊருக்கு 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளன. சிவாதனன் என்பவரின் மகனான நந்தன் தவம் புரிந்து சிவபெருமானுக்க வாகனமாக சுவீகரிக்கப்பட்ட இந்த இடம் ‘நந்தி மண்டலம்’ என அழைக்கப்படுகிறது. இங்கே நந்திகேஸ்வரன் ‘மகா நந்தி’ என்ற பெயரோடு அவதரித்தார் என்று கூறப்படுகிறது.

    மேலும் இங்குள்ள ஒன்பது நந்திகள் சிவ நந்தி, பிரம்ம நந்தி, விஷ்ணு நந்தி,விநாயக நந்தி, பத்ம நந்தி, சூரிய நந்தி, சோம நந்தி, கருட நந்தி, நாக நந்தி, என்று வணங்கப்படுகிறது.

  • பயத்தை போக்கும்…தில்லை காளி!

    தேவையற்ற மன குழப்பம், சஞ்சலத்தை நீக்கி அருள்பாலிக்கிறாள் தில்லை காளி. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரின் அமைந்துள்ளது தில்லை காளியம்மன் கோவில். 13 ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னர் கோப்பெருஞ்சிங்கனால் இத்திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது.இத்திருக்கோயில் முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் தாண்டி உள்ளே நுழைந்ததும் வலது பக்கத்தில் உள்ள தனி சன்னிதியில் ஆனந்த நர்த்தனமாடும் விநாயகரும், இடதுபுற தனிச் சன்னதியில் முருகனும் கிழக்கு திசையை நோக்கி அருள்பாலிக்கின்றனர்.

    இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் அம்மன் காளி பிரம்மசாமுண்டேஸ்வரி என்ற பெயரால் நான்கு முகம் கொண்ட சாந்தநாயகியாக மேற்கு முகம் நோக்கி அருள்பாலிக்கிறாள். தொடர்ந்து ஆலயத்தின் கிழக்கு நோக்கிய சன்னிதியில் உக்ர மாகாளியாக எட்டு கரங்களில் ஆயுதங்களைக் கொண்ட தில்லைகாளியாகவும் மேற்கு நோக்கிய சன்னிதியில் சாந்தமான நான்முக பிரம்மசாமுண்டேஸ்வரியாகவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். இங்கு காளி சொரூபத்தில் உள்ள அம்மன் பில்லி சூனிய பூத, பிசாசு, பேய்கள், சினம், பகை கொடிய வியாதிகள், ஆணவம், அகம்பாவம் போன்றவற்றை அழித்துஅருள் பாலிக்கிறாள். 

    எனவே மன சஞ்சலம், தேவையற்ற பயம், ஆகிய பிரச்சனை உள்ள பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து தில்லை காளியம்மனை பூஜித்து வணங்கினால். அனைத்து பிரச்சனைகளும் விலகி அவர்கள் வாழ்வில் மகிழ்சியும், வளமும் பெருகும். ஆகையால் தில்லை காளியை வணங்க இத்திருத்தலத்திற்கு நாள்தோறும் பக்தர்கள் வந்த வண்ணமுள்ளனர்.

  • பித்ரு தோஷம் நீக்கும் லட்சுமி நாராயணப் பெருமாள்

    தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம். வாழ்வில் நிம்மதியாக வாழ வேண்டுமானால், நமக்கு எந்தவித தோஷமும் இல்லாமல் இருக்க வேண்டும்….குறிப்பாக பித்ரு தோஷம் இல்லாமல் இருக்க வேண்டும்.

    பெற்றோருக்கு திதி கொடுக்காதவர்கள், திதி கொடுப்பதே என்ன என்று தெரியாமல் இருப்பவர்கள், வாரிசு இல்லாதவர்கள், விபத்து, தற்கொலை, அகால மரணமடைந்தவர்கள்… இவர்களின் ஆத்மாக்களுக்கு

    சாந்தி ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் தோஷம் ஏற்படும். இவை காலம் காலமாக தொடர்வதால் பித்ரு தோஷம் ஏற்பட்டு கால சர்ப தோஷமாக மாறும்.

    இது வம்சாவளியாக தொடர்வதால் வீட்டில் கஷ்டம், திருமணத்தடை, விபத்து, செய் தொழிலில் நஷ்டம், நிம்மதியின்மை என அடிக்கடி நிகழும். இதற்கு ஒரே வழி அதற்கான தோஷ நிவர்த்தி செய்வது தான்… பித்ரு தோஷ நிவர்த்திக்கு காசி, ராமேஸ்வரம் தான் செல்ல வேண்டும் என்பதில்லை. அங்கு செல்ல முடியாதவர்கள் என்ன செய்வது?

    செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் நென்மேலி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில். இத்திருத்தலத்தில் பித்ரு தோஷத்திற்கான நிவர்த்தி செய்யப்படுகிறது. பித்ரு வேளை பூஜை நேரமான பிற்பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் இந்த கிரியைகளைப் பெருமாள் ஆராதனம் ஏற்று விரதமிருந்து செய்கின்றனர்.

    திதி கொடுப்பவர்கள் பெருமாள் சந்திக்கு சென்று, மஞ்சள், எள், தர்ப்பைப்புல், விரலில் அணிய பவித்ரம், வெற்றிலை பாக்கு, பழம் ஆகியவற்றை சமர்ப்பித்து, தங்களுடைய பித்ருக்களின் பெயர்களை சொல்லி சங்கல்பம் செய்ய வேண்டும்.

    பிறகு கோவிலின் பின் பக்கத்திலுள்ள விஷ்ணு பாதம் எனும் பெருமாளின் திருவடிக்கு அருகில் சாஸ்திரிகள் வழிகாட்ட திதி கொடுப்பவர் தன் முன்னோருக்கு மறுபடியும் ஒரு சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்பிக்க வேண்டும்.

    அங்குள்ள, பெருமாளுக்கு மகா சங்கல்பமும் சகல உபசாரங்களுடன் பூஜையும் நடத்த வேண்டும். இறுதியில் நம் வீட்டில் செய்யும் வெண்பொங்கல், தயிர் சாதம், பிரண்டையுடன் கலந்து எள் துவையல் எல்லாம் செய்யப்பட்டு நைவேத்தியம் செய்யப்படுகின்றன. இதை ஏற்று, நம் முன்னோர்களின் ஆத்மாக்களைப் பெருமாள் திருப்திப்படுத்துவதாக ஐதீகம்.

    கயா, காசி, ராமேஸ்வரம் ஆகிய தலங்களில் இல்லாத சிறப்பு இந்த தலத்தில் உண்டு. பெண்கள் தங்கள் பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம்.

  • விசா வேங்கடேசப் பெருமாள்…

    செங்கல்பட்டு, பழைய சீவரத்தில், வெங்கடேசர் சங்கு சக்கரத்துடன் திருமாலாகவும் ஜடாமுடியும் நெற்றிக்கண்ணும் கொண்டு ஈசனாகவும், கையிலும் திருவடிகளிலும் தாமரை மலர் கொண்டு நான்முகனாகவும் மும்மூர்த்திகளின் சங்கமமாக விளங்குகிறார்.

    சென்னை- வேலூர் வழியில் காவேரிப்பாக்கத்தில் சந்திரனின் மனைவியரில் ஒருத்தியான திருவோணதேவி, பெருமாளை நோக்கித் தவமிருந்து தன் கணவரின் சாபத்தைப் போக்கினாள். மூன்றாம் பிறையன்று திருவோண நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபாடு செய்ய, நினைத்தது நிறைவேறுகிறது.

    ஹைதராபாத் – உஸ்மான் சாகர் ஏரிக்கரை, சிலுகூரிலுள்ள பெருமாள், வேண்டுவோருக்கு வெளிநாடு செல்ல விசா உடனே கிடைக்க அருள்வதால், இவர் விசா வேங்கடேசப் பெருமாள் எனப்படுகிறார்.

    தஞ்சாவூர், வரகூரில் உள்ள வெங்கடேசப் பெருமாளுக்கு, வேலை கிடைத்து வெளியூர் செல்லும் இவ்வூர் இளைஞர்கள் தங்கள் முதல் மாத சம்பளத்தை அனுப்பி வைக்கிறார்கள்.

    திருச்சி அருகே குணசீலத்தில் செங்கோல் ஏந்திய பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துகிறார்.

    ஈரோடு, பெருந்துறையில், வேப்பமரத்தடியில் ஐந்து கற்கள் வடிவத்தில் வன வேங்கடேசப் பெருமாளும் தாயாரும் அருள்கிறார்கள்.

    கரூரில் உள்ள கல்யாண வெங்கடரமணர், மூன்றாம் குலோத்துங்க சோழனின் அரசவைப் புலவரான டங்கணாச்சாரி எனும் பக்தருக்காக இத் தலத்தில் நிலைகொண்டார்.

    செங்கல்பட்டு, அமிர்தபுரியில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் கருடனின் கையில் உள்ள வாசுகி பாம்பிற்கு அபிஷேகம் செய்யப்படும் பால் நீலநிறமாகிறது. எனவே, இது சர்ப்பதோஷ நிவர்த்தித் தலமாகும்.

    கோயமுத்தூர், உடுமலைப்பேட்டையில், கருவறையில் பெருமாளும் அனுமனும் சேர்ந்திருக்க, இது, சீனிவாச – ஆஞ்சநேயர் கோயிலாயிற்று.

    கிருஷ்ணகிரி, ஓசூரில் மலை மீது சிலை கொண்டுள்ள பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் திருடு போன பொருள் கிடைத்து விடுகிறது.

    கோயமுத்தூர், மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் துளசி, வேம்பு, வெள்ளெருக்குபூ மொட்டு, அரளி, ஊஞ்சற்கரி, எலுமிச்சைச்சாறு ஆகியவை கலந்த மல்லிப்பொட்டு எனும் பிரசாதம் தருகிறார்கள். இது வெண்குஷ்டத்தை நீக்குகிறது.

    சேலம், செவ்வாய்ப்பேட்டை, பிரசன்ன வெங்கடேசர் கோயிலில் உள்ள கருடாழ்வாருக்கு வஸ்திரம் சாத்தி வணங்க அனைத்து தோஷங்களும் நீங்குகின்றன.

    திண்டுக்கல், மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள சீனிவாசப் பெருமாள் ஆலயத்தில், மார்கழி மாதம் முழுவதும், இத்தல ஆண்டாள் சூடிக் களைந்த மலர் மாலைகளையே பெருமாளுக்கு சாத்துகிறார்கள்.

    திருநெல்வேலி, உதயநேரிபாலாமடையில் அருளும் வெங்கடாஜலபதி அபிஷேகப் பாலை பிரசாதமாக அருந்தினால் மன, சரும நோய்கள் குணமாகின்றன.

    திருநெல்வேலி, சன்யாசி கிராமத்தில் உள்ள கல்யாண சீனிவாசர் ஆலய கருவறை விமானமும் திருப்பதியைப் போலவே ஆனந்த விமானம் என்று அழைக்கப்படுகிறது.

    திருவாரூர், குடவாசல் ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலய நரசிம்மர் கடன் தொல்லை நீக்குகிறார். ஞாயிறன்று விரதமிருந்து கருடனை வணங்க மழலை வரம் கிட்டுகிறது.

    திருநெல்வேலி, கருங்குளத்தில், மன்னன் சுபகண்டன் இரண்டு சந்தனக் கட்டைகளை பிரதிஷ்டை செய்து வெங்கடாஜலபதியாக வழிபட்டான். இதய நோய்களைத் தீர்க்கிறார் இந்தப் பெருமாள்.

    திருநெல்வேலி, மேலத்திருவேங்கடநாதபுரத்தில் திருவேங்கடமுடையான் கருவறையில் 12 ஆழ்வார்களும் 12 படிகளாக உள்ளார்கள்.

    திருவண்ணாமலை, நல்லூரில், சுந்தரவரத ராஜரின் திருவடி கீழ் உள்ள கருடாழ்வார், பக்தர்களின் பிரார்த்தனையை பெருமாளிடம் பரிந்துரைப்பதால், இவர் பரிந்துரைக்கும் கருடன் எனப்படுகிறார்.

    தூத்துக்குடி, புன்னைநகரில் பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாசப் பெருமாளின் ஏகாந்த சேவையை வியாழன்தோறும் தரிசித்தால் கிரக தோஷங்கள் நீங்குகின்றன.