Category: கோவில்கள்

கோவில்கள்

  • திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் வெளிப்பிரகாரத்தில் கற்கள் பதிக்கும் பணி .

    காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் புகழ் பெற்ற சனீஸ்வரன் கோயில் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ள இக்கோயிலுக்கு, சனி தோஷம் நீங்க வேண்டி, ஒவ்வொரு சனிக்கிழமையிலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரகணக்கானோர்  வந்து செல்கின்றனர்.

    இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக புதுச்சேரி அரசால், திருநள்ளாறு கோயில் நகர திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல பக்தர்கள் அளிக்கும் நன்கொடையை கொண்டும் கோயில் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு வருகின்றன.

    திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர் அளித்த நன்கொடையை கொண்டு , சுமார் 60 லட்ச ரூபாய் செலவில் சனீஸ்வரன் கோயிலின் வெளிப்பிரகார தளத்தில் கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா தொடங்கி வைத்தார். முன்னதாக வெளிப்பிரகாரத்தில் பதிக்கப்படும் கற்களுக்கு விஷேஷ பூஜைகள் நடத்தப்பட்டு, தீபாராதனையும் காட்டப்பட்டது. விஷேஷ காலங்களில்  சிறப்புக் கட்டண வரிசையில் செல்வோர்களுக்கான பாதையிது என்பது குறிப்பிடதக்கது.
     

  • திருச்செந்தூர் ஆறுமுகனை அறிவோம்….. 

    செந்தூரில் ஸ்ரீ செந்திலாண்டவனை தரிசிக்கச் செல்லும் ஆண் பக்தர்கள் அனைவரும் மேலாடை இல்லாமல் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பது மரபு. இங்குள்ள அர்ச்சகர்கள் ‘திரிசுதந்திரர்கள்’ எனப்படுவர். இவர்கள் கேரள தேச ஆசாரப்படி பூஜிக்கிறார்கள்.

    முருகப்பெருமான் முதலில் தங்கிய இடம் சிங்க கொழுந்தீசர் என்ற சிவன் கோயில். இந்தக் கோயிலில் உற்சவங்கள் கிடையாது. முருகன் தந்தையைப் பார்ப்பதற்காக இங்கு எழுந்தருள்கிறார்.

    முருகனின் ஆறுமுகங்களும் ஆறு விதமான செயல்களைச் செய்வதாக ஐதீகம். உலகுக்கு ஒளி தருவது ஒரு முகம், வேள்விகளைக் காப்பது இன்னொரு முகம், அடியார் குறை தீர்ப்பது மற்றொரு முகம், வேதாகமப் பொருளை விளக்குவது பிறிதொரு முகம், பகைவனையும், தீயோனையும் அழிப்பது வேறொரு முகம். தேவியருக்கு மகிழ்ச்சி தருவது ஆறாவது முகம். 

    இவரது ஆறுமுகங்களும் முறையே சஷ்டி கோலம் கொண்ட முருகன், பிரம்மன், விஷ்ணு, சிவன், கலைமகள், மகாலட்சுமி ஆகியோரைக் குறிக்கும் என்பர்.

    முருகப்பெருமான் தன் 12 கரங்களால் விசுவாமித்திரரின் காசநோய் நீங்க திருநீறு அளித்ததன் தாத்பர்யம் இது. சூரபத்மன் வதம் முடிந்த பின் முருகப்பெருமான் தன் பரிவாரங்களுக்கு, 12 கைகளினால் விபூதிப் பிரசாதம் வழங்கினார் என்றும் கூறுவர்.

    மீன் பிடிக்கும் பரதவர் குலத்தில் பிறந்த தெய்வானையை முருகப் பெருமான் மணந்ததாக பரதகுல பாண்டிய வம்ச நூலில் உள்ளதால், பரதவர்கள் முருகனை, ‘மச்சான் சாமி’ என்கின்றனர்.

    காயத்ரி மந்திரத்தின் எழுத்துகளே இங்கு 24 தீர்த்தங்களாக விளங்குகின்றன என்பது ஐதீகம். முருகன் கோயிலுக்கு அருகே, கடற்கரையையொட்டி இருக்கும் வள்ளிக் குகை தரிசிக்க வேண்டிய ஒன்று.

    முருகப்பெருமான், படை வீரர்களின் தாகம் தணிக்க வேலாயுதத்தால் நீர் ஊற்று ஒன்றை ஏற்படுத்தியதாக ‘கந்த புராணம்’ கூறுகிறது. அதை ‘ஸ்கந்த புஷ்கரணி’ என்பர். ஒரு சதுர அடி பரப்பளவில் திகழ்கிறது. ஒரு படியைக் கொண்டு எடுக்கும் அளவே நீர் இருப்பதால், ஒருபோதும் வற்றாத இதற்கு நாழிக் கிணறு எனப் பெயர். இதில் நீராடிய பிறகே கந்தபெருமானை தரிசிக்க வேண்டும்.

  • புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது

    புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசு தேவன் நம்பூதிரி திறந்து வைத்தார்.

    ஓணம் பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 9- ந் தேதி திறக்கப்பட்டது. 11- ந்தேதி திருவோண தினத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கோவில் நடை 13- ந்தேதி இரவு அடைக்கப்பட்டது.

    இதையடுத்து புரட்டாசி மாத பூஜைக்காக கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசு தேவன் நம்பூதிரி நேற்று மாலை 5 மணிக்கு நடையை திறந்து வைத்தார். இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

     தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், உஷ பூஜை, மாலை 6 மணிக்கு தீபாராதனை, புஷ்பாபிஷேகம் போன்றவை நடைபெறும். 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் 21- ந் தேதி இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

  • திருப்பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்….. 

    232 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருப்பட்டனம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.  28 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். 

    காரைக்கால் – நாகை வழித்தடத்தில் திருப்பட்டினம் என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது புகழ் பெற்ற ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயம். திருப்பதி சென்று வெங்கடாஜலபதி – யை வழிபட முடியாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் திருப்பதி சென்று வழிபட்ட புண்யம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

    232 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயத்திற்கு 28 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த இரு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு கோயில் திருப்பணி வேலைகள் முடிவடைந்து, கோபுர கலசங்கள் புதுப்பிக்கப்பட்டன. கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டும் பணிகளும் முடிவடைந்தது. 
       
    இதை தொடர்ந்து கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கின. யாகசாலை அமைக்கப்பட்டு பிரசன்ன வெங்கடேச பெருமாள்  விக்ரகம் யாகசாலையில் வைக்கப்பட்டு கால சாந்தி, பகவத் ப்ராத்தனை , புண்யாக வாசனம் , திருவாதாரனம் மற்றும் திருமஞ்சனம் உள்ளிட்ட விஷேஷ பூஜைகள் நடைபெற்று வந்தன.

    முக்கிய நிகழ்ச்சி நாளான இன்று 4ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து மஹாபூர்ணாகதி நடைபெற்றது. இதன் பின்னர் மேள , தாள வாத்தியங்கள் முழங்க கடம்புறப் பாடு நடைபெற்றது. அதோடு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஆலயத்திற்குள்  பிரவேசிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. 

    இதன் பின்னர் இராஜகோபுரம் மற்றும் ஆலய விமானங்கள் அனைத்திலும் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு சம்ப்ரோஷணம் எனப்படும் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.  அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என சரண கோஷம் எழுப்பி பக்தியுடன் வழிபட்டனர்.  
     

  • துன்பம் போக்கும் பட்டீஸ்வரம்  துர்க்கை அம்மன்

     ஆதிபராசக்தியாய் அனைத்தும் கைவரச் செய்பவள் தான் துர்கை அம்மன்.  பட்டீஸ்வரத்தில் உள்ள  துர்க்கை அம்மனை வழிபட்டால் துன்பங்கள் அனைத்து நீங்கும் என்பது ஐதீகம். 

    முன்னொரு காலத்தில் பார்வதி தேவி, ஞானம் பெறுவதற்காக சிவனை நோக்கித் தவம் இயற்றத் தொடங்கினாள். காமதேனுவின் நான்கு மகள்களில் முதல் மகளான பட்டி, உதவிகள் புரிவதற்காக இங்கு வந்து உதித்தாள்.

    களிமண்ணில் அழகான சிவலிங்கத்தை உருவாக்கினாள் பட்டி. பின்னர் தனது கொம்புகளினால் மண்ணைத் தோண்டி குளம் அமைத்தாள். ஈசனுக்கு பார்வதி அபிஷேகம் செய்ய ஏதுவாக புனித நதிகளான கங்கையையும், காவிரியையும் தனது ஆத்ம பலத்தால் இக்குளத்துக்கு வரவழைத்தாள்.

    தானே பால் சுரந்து பாலாபிஷேகத்துக்கும் வழி வகுத்தாள் பட்டி. இதனால் மனம் மகிழ்ந்த ஈசன், பட்டீஸ்வரன் என்ற பெயர் ஏற்று இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கத் தொடங்கினான். அதுமுதல் பட்டீஸ்வரம் என்றே இவ்வூருக்குப் பெயர். இவ்வூரில்தான் துர்க்கை அருள்பாலித்து வருகிறாள்.

    ஆறடி உயரத்தில், அழகாக புடவை கட்டி, எலுமிச்சை மற்றும் ரோஜா மாலை அணிந்து காட்சி அளிக்கிறாள் . மூன்று கண்களைக் கொண்டவள். எட்டுக் கரங்களுடன், எருமை முகமுடைய மகிஷாசுரனைக் காலில் மிதித்து, நிமிர்ந்து நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறாள். எட்டு கரங்களில் ஒன்றை அபயஹஸ்தமாகவும், மற்றொன்றை இடை மீது வைத்து கம்பீரமாகவும் காட்சி அளிக்கிறாள்.

    பிற ஆறு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டு சாந்தமாக போர் முடித்த கோலத்தில் காணக் கிடைக்கிறாள். இடப்பக்கம் நோக்கியுள்ள வாகன சிம்மத்தின் ரூபிணியாக விளங்குகிறாள். துர்க்கை இங்கு சாந்த சொரூபிணியாக இருப்பதை அவளது புன்னகை தவழும் முகமும், வலப்புறம் திரும்பியுள்ள சிம்ம வாகன முகமும் நிரூபிக்கிறது. பக்தர்களை வரவேற்கும் கோலத்தில் வெற்றி வாகை சூடிய நிலையில் இருக்கிறாள்.
     

  • கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் திரிசூலநாதர்

    சென்னை மீனம்பாக்கத்தில் சர்..சர்.. என விமானங்கள் வந்து இறங்குகின்றன, மேலேறி பறக்கின்றன, பரபரப்பாக இயங்கும் நெடுஞ்சாலையை கடப்பவர்கள் இங்கு இப்படி ஒரு ஆன்மீக தலம் இருப்பதை அறிவார்களா என்று தெரியவில்லை. இறைவனின் பெயராலேயே இந்த ஊர் இன்றளவும் அறியப்படுகிறது. 

    பிரம்மன் வழிபட்ட தலமாக இங்கு திரிசூலநாதர் எழுந்தருளியிருக்கிறார். நான்கு மலைகள் சூழ நடுவில் அமைந்துள்ளது திரிசூல நாதர் திருக்கோயில். தனது படைப்புத்தொழில் இடையூறின்றி நடக்க வேண்டி பிரம்மதேவர் ஒரு குளத்தை வெட்டி அங்கு சிவலிங்கம் அமைத்து வழிபடுகிறார். பிரம்மன் உருவாக்கிய பாணதீர்த்தம் கொண்ட இந்த சிவலிங்கமே திரிசூலநாதர் திருக்கோயில். 

    நான்கு வேதங்களே நான்கு மலைகளாக, வேதங்களின் உட்பொருளான இறைவன் அவற்றின் நடுவில் வீற்றிருக்கும் இடமே திரிசூல நாதர் திருக்கோயில்.  பிரம்மதேவர் அமைத்ததாக கூறப்படும் தீர்த்தம் கோயிலின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. கோயிலின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரே இறைவனின் பூஜை, வழிபாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது. 


    விமான நிலையத்திற்கு எதிரில், ரயில்வே கேட்டை கடந்து வந்தால், ஒருகிலோமீட்டர் தொலைவில் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்குள் நந்தியெம்பெருமானை வழிபட்டு, நல்ல தரிசனத்திற்கு அனுமதிகேட்டு உள்ளே நுழைவோம். நுழைந்ததும் திரிசூலநாதரை தரிசிக்கலாம். திரிபுரசுந்தரி உடனுறை திரிசூலநாதராக இருந்தாலும், அவருக்கு அருகே சௌந்தராம்பிகை இருக்கிறார். நேர்பார்வையில் சௌந்தராம்பிகையை தரிசிக்க முடியாது, காரணம் திரிசூலநாதரின் அருகே இடப்புறத்தில் அவரை பார்த்தபடி நின்றபடி இருக்கிறார் சௌந்தராம்பிகை. இப்படி இருப்பதற்கு பின்னே ஒரு வரலாறு இருக்கிறது. 

    அந்நியர் படையெடுப்பின்போது கோயிலில் இருந்த சௌந்தராம்பிகை தாயாரின் கையில் கட்டைவிரல் சேதமடைந்துவிடுகிறது. அதனால் பின்னப்பட்ட சிலையை வழிபடக்கூடாது என்று கூறி, தனியே வைத்துவிடுகிறார்கள்.அப்போது அர்ச்சகரின் கனவில் வந்து தனது பின்னத்தை சரிசெய்து, மீண்டும் திரிசூலநாதரின் அருகே வைக்குமாறு தாய் அருள் கூற, அதன்படி சிலையின் பின்னப்பட்ட விரலுக்கு பதிலாக தங்கத்தில் விரல் செய்து பின்னர் திரிசூலநாதரின் அருகிலேயே அன்னையை இருக்கச்செய்திருக்கிறார்கள். அன்னையும், தந்தையுமாக உயிர்ப்புடன் அருள் தரும் தலம் இது.


    அன்னையை தரிசிக்க வேண்டும் என்றால், ஆண்கள் மேல்சட்டையின்றி கருவறைக்கு முன் உள்ள அறைக்குள் அனுமதி பெற்று நுழைந்தால், அன்னையின் தரிசனத்தை பெறலாம். காலம் காலமாக அருள் சுரக்கும் அன்பு முகத்துடன் காட்சிதரும் அன்னை, உண்மையிலேயே சௌந்தரம் ததும்பும் பேரழகி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  இந்தக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 -1120) காலத்தில் கட்டப்பட்டது. முதலில் வானவன் சதுர்வேதிமங்களம் என இந்த ஊர் அழைக்கப்பட்டது. முதலாம் குலோத்துங்கசோழன் காலத்தில் திருநீற்றுசோழநல்லூர் என்றும் பின்னர் இறைவனின் பெயரால் திரிசூலம் என்றும் அழைக்கப்படுகிறது. 
    பல்லவபரமன வானவன் மாதேவிச் சதுர்வேதிமங்களம், திருநீற்றுசோழநல்லூர், திருச்சுரம், சுரத்தூர், பிரம்மபுரி, திரிசூலம் என்ற பெயர்களில் இந்த ஊர் வழங்கப்படுகிறது.

    இக்கோயிலில் ஆதிசங்கரர், ஐயப்பன், ஆஞ்சநேயருக்கு தனித்தனி சன்னதிகள் இருக்கின்றன. கோயிலின் பழைமையை இங்கு நுழைந்ததுமே உணர முடியும். யக்ஷர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்பட்டாலும், அதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை.  பிரம்மனுக்கே அருள்பாலித்த இடம் என்பதால் திரிபுரசுந்தரி உடனுறை திரிசூலநாதரை வழிபட்டால் நமக்கு வரும் கெட்ட நேரங்களும் நல்லநேரங்களாக மாறும்..

    நமச்சிவாயம் வாழ்க, நாதன் தாள் வாழ்க.. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க. 
    –    எழுத்தாளர் பாமா
     

  • இந்தியாவின் பணக்கார கோயில்கள்

    பத்மநாப சுவாமி கோயில் 
    பத்மநாப சுவாமி கோயில் விஷ்ணுவை கடவுளாக கொண்ட கோயில் பத்மநாப சுவாமி கோயில் ( திருவனந்தபுரம் ) , கேரளா . இந்திய கோயில்களில் முதல் செல்வந்த கோயில் பத்மநாப சுவாமி கோயில். இந்த கோயிலில் 6 ரகசிய அரை உள்ளது. ரகசியம் நிறைந்த இந்த அறைகளில் எண்ணிலடங்கா புதையல்கள் கொட்டி கிடகின்றன, இந்த 6 ரகசிய அறைகளில் 4 இல் ஆவணங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது , ஆனால் மீதமுள்ள 2 அறைகளில் பக்தர்களால் வழங்கப்பட்ட நன்கொடைகள் தங்கம் வைடூரியம் போன்ற எண்ணற்ற செல்வங்கள் உள்ளன.

    திருப்பதி பாலாஜி கோயில் 


    திருப்பதி வெங்கடேஸ்வரர் ஆலயம் வெங்கடேஷ்வரரின் பழமையான புனிதமான கோயில் ஆகும். இது இந்து கடவுளான விஷ்ணுவின் ஒரு வடிவமாகும். திருப்பதி மலைகளின் ஏழாவது சிகரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இது "ஏழுமலையான் கோயில்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு நாளும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 80,000 உள்ளது. பாலிவுட், விளையாட்டு மற்றும் வணிகத் தொழிற்துறையில் இருந்து பல புகழ்பெற்ற பிரபலங்கள் இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர். ஒவ்வொரு தடவையும் அவர்கள் வருகை தரும் போதும் பல கோடிகளை நன்கெடையாக கோவிலுக்கு செலுத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 1000 கோடியை நன்கொடையாக வருகிறது.

    சாய் பாபா கோவில் 


    சாய் பாபா கோவில் இந்தியாவில் உள்ள மற்றொரு பிரபலமான யாத்ரீக ஸ்தலமாகும். சாய் பாபாவிற்கு தனி மதம் என்று எதுவும் இல்லாத காரணத்தால் அணைத்து மதத்தினரும் இந்த கோவிலுக்கு வந்து செல்வதை காணலாம். அவரது வாழ்க்கை முழுவதிலும் போதித்த ஒரே சொல் 'கடவுள் ஒன்று' என்று ,அதனை 'சப்பா மாலிக் ஏக் ஹாய்'.அக்கோவிலில் ரூ. 32 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி ஆபரணங்களும், 6 லட்சத்திற்கும் அதிகமான வெள்ளி நாணயங்களும் உள்ளன. ஒவ்வொரு வருடமும் 350 கோடி ரூபாய் நன்கொடையாக அங்கு வரும் பக்தர்களால் அளிக்கப்படுகிறது.

    வைஷ்ணவ தேவி கோவில் 


    வைஷ்ணவ தேவி கோவில் காத்ரா, ஜம்மு காஷ்மீர் நகருக்கு அருகே உள்ளது. இக்கோவிலுக்கு இந்திய மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள அம்மனின் ஆசிர்வாதத்தை பெற ஒன்றிணைகின்றனர். வட இந்தியாவில் உள்ள முக்கிய புனித தளங்களில் ஒன்றாக இக்கோவில் திகழ்கிறது. இது இந்தியாவின் பழமையான இந்து கோவில்களில் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த சன்னதிக்கு வருகை தருகின்றனர், பணம் செலுத்துகின்றனர். இக்கோவிலுக்கு ஒரு வருடத்திற்கு சராசரியாக வருகின்ற வருமானத்தின் மதிப்பு ரூ. 500 கோடி ரூபாயாகும்.

    சித்தி விநாயகர் கோவில் 


    சித்தி விநாயகர் கோவில் விநாயக பெருமானுக்கான ஒரு வழிபாட்டு தளமாகும். இக்கோவிலில் விநாயகர் ஒரு சிறு அறையில்தான் காட்சி தருகின்றார். பிரபலமான கோயில்களில் ஒன்றாக மும்பை சித்திவிநாயக் கோயில் ஆகும். கோயிலின் பொதுவான பார்வையாளர்களின் பட்டியலில் பல்வேறு பாலிவுட் பிரபலங்களாகும் அடங்குவர்.உள்ளூர் பார்வையாளர்களிடமிருந்து மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் இந்த கோயிலுக்கு செல்கின்றனர். கணேஷ் மீது அணியப்படும் கிரிடமானது சுமார் 3.7 கிலோ தங்கத்தால் ஆனது இதனை கொல்கத்தாவில் உள்ள வணிக வியாபாரி ஒருவர் நன்கொடை அளித்துள்ளார். கோயிலின் ஆண்டு வருமானம் சராசரியாக ரூ. 48 கோடி ரூபாயும் நிலையான வைப்பு நிதி ரூ. 125 கோடியாகும்.

    பொற்கோவில் 


    பொற்கோவில் உலகின் மிக முக்கியமான சீக்கிய யாத்ரீக ஸ்தலம் ஆகும். இது இந்தியாவின் பஞ்சாப், அம்ரித்சர் நகரில் அமைந்துள்ள பொற் கோவில் குருத்வாரா என அழைக்கப்படுகிறது. இதன் பிரதான கோவில் கட்டிட சுவர்களில் மரத்தாலான பேனல்கள் மற்றும் விரிவான தங்கம் மற்றும் வெள்ளி வேலைப்பாட்டால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.'ஆதி கிரந்த்' (குரு கிரந்த் சாஹிப்) தாங்கி நிற்கும் அடித்தளம் விலையுயர்ந்த கற்கள் மற்றும் வைரங்களால் நிரம்பியுள்ளது. குரு கிரந்த் சாஹிப்பின் சுற்றளவானது தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றினால் போன்றவற்றால் செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு நாளும் இங்கு சுமார் 35,000 பக்தர்கள் கோவிலுக்கு வருகைபுரிகின்றனர். இக்கோவிலானது வடகிழக்கு திசையிலமைந்த மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கோயில்களுல் ஒன்று.

    சோம்நாத் கோவில் 


    சோம்நாத் கோயிலின் சொத்துக்கள் ஒரு புதிராகவே இருந்தாலும், மிகவும் புகழ் பெட்ர பணக்கார கோவிலில் ஒன்றாகவே திகழ்கின்றது, நீண்ட கால வரலாற்றைக் கொண்டது. 'சோம்நாத்' என்ற பெயர், 'சந்திர கடவுளின் காப்பாளர்' என்று பொருள்படும், சிவபெருமானைக் குறிக்கும் இதன் கற்ப கிரகமானது முழுக்க முழுக்க தங்கத்தால் கட்டப்பட்டுள்ளது.1,00,000 முதல் 5,00,000 பக்தர்கள் ஒவ்வொரு நாளும் இந்த இடத்திற்கு வந்து செல்கின்றனர். சோம்நாத் அறக்கட்டளையின் நிலசொத்துக்கள் ரூ .1,639.14 கோடியாக மதிப்பிடப்படுகிறது. இதுவும் இந்தியாவில் உள்ள பணக்கார கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது.2012 ஆம் ஆண்டில், சூரத் மற்றும் மும்பையிலிருந்து வந்த இரண்டு வணிகர்கள், கோயிலுக்கு சுமார் 36 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.

    மீனாட்சி அம்மன் கோவில் 


    மீனாட்சி அம்மன் கோவில் மிகவும் பழமையான கோயிலாகும்,இக்கோவில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது.இதில் பார்வதி தேவி காட்சி புரிந்து மக்களுக்கு அருள் புரிகிறார்.இந்த கோவில் ஒரு நாளைக்கு 15,000 பக்தர்கள் வருகை புரிகின்றனர். வெள்ளிக்கிழமை 25,000 பேர் இங்கு கூடுகின்றனர். கோயிலில் சுமார் 33,000 சிற்பங்கள் உள்ளன. கோயிலுடன் தொடர்புடைய மிக முக்கியமான திருவிழா "மீனாட்சி திருக்கல்யாணம் "(மீனாட்சி தெய்வீக திருமணம்) ஆகும்.இது இந்தியாவின் தென் பகுதியில் உள்ள மூன்றாவது பணக்கார கோவில்களில் ஒன்றாகும். வருடந்த மற்றும் மே மாதத்தில் 10 ஆவது நாள் மீனாட்சி திருக்கல்யாணம் திருவிழா கொண்டாடபடுகிறது. இத்திருவிழாவிற்கு சுமார் 1மில்லியன் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆறு கோடி 60 மில்லியன் ரூபாய் நன்கொடையாக வருகின்றது.இந்த கோவில் இரு தங்க விமனங்களும், 33,000 சிலைகளும் இருப்பது இக்கோவிலுக்கு சிறப்பை அளிக்கிறது.

    காசி விஸ்வநாத கோவில் 


    காசி விஸ்வநாத கோவில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது இது வாரனாசியில் அமைந்துள்ளது.இக்கோவிலின் மேற்கு கரையோரம் புனித நதியான கங்கை பாய்கிறது, இங்கமைந்துள்ள பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் விஸ்வநாதர் மிகவும் சத்தி வாய்ந்த கடவுளாக காட்சி தருகின்றார். கோயிலின் குறிப்பிடத்தக்க தூண்கள் மற்றும் கோபுரங்கள் தூய தங்கத்தால் செய்யப்பட்டவை.

    அமர்நாத் கோயில் 


    ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் பக்தர்கள் தென் காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலுக்கு சிவனின் புனித பனி லிங்கத்தை வழிபட மலையேற்றத்தில் ஈடுபடுகின்றனர். எந்த ஆடம்பரமான தூண்கள் மற்றும் கோபுரங்களும் இல்லாமலே மக்களின் மனதை தன்வசப்படுத்திய ஒரு தனிசிறப்பு வாய்ந்த யாத்ரீக தளமாகும் .ஒவ்வொரு வருடமும் ஐீலை மற்றும் ஆகஷ்ட் மாதங்களில் மக்கள் இந்த புனித பயணத்தை தொடங்குகின்றனர்.
     

  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் சிறப்புகள்!!

    பார்த்தசாரதி கோயில் பார்த்தசாரதி கோயில் 8ஆம் நூற்றாண்டின் இந்து வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும். வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான, கோயில் கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகளும் நிறைந்தது இக்கோவில்.  
     
    இத்தலத்து எம்பெருமான் மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்கு (அர்ஜுனன்) தேரோட்டி (சாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார். இத்தலத்து மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் பெயரிலே புகழப்பெற்றுள்ளது.
     
    அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்த அச்சமயத்தில் அவர் இந்துக்களின் புனித நூலான ஸ்ரீமத் பகவத் கீதையை தந்தார்.  இக்கடவுளுக்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த இடத்தில் மட்டும் தான் கிருஷ்ண பகவான் மீசையுடனும், தன் பிரதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார்.
     
    இக்கோயில் முதலில் 8ம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான ராஜா முதலாம் நரசிம்மவர்மன் மூலம் கட்டப்பட்டது. இக்கோவிலில் திருமாலின் அவதாரங்களில் ஐந்து அவதாரங்கள் உள்ளன. அவையாவன நரசிம்மர், ராமர், வரதராஜர், ரங்கநாதர் மற்றும் கிருஷ்ணர். இக் கோவில் சென்னை பழமையான கட்டமைப்புகளில் ஒன்றாகும். இக்கோவிலில் வேதவள்ளி தாயார், ரங்கநாதர், ராமர், கஜேந்திர வரதராஜ சுவாமி, நரசிம்ம, ஆண்டாள், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன.
     
    இக்கோயில் வைகானச ஆகமத்தினையும், தென்கலையையும் பின்பற்றுகிறது. உடன் நரசிம்மர் மற்றும் கிருஷ்ணருக்கு தனிச் சன்னதிகள் காணப்படுகின்றன. இக்கோவிலின் கோபுரங்களிலும், மண்டபத் தூண்களிலும் தென் இந்திய கட்டிடக் கலையை வலியுறுத்தும் நிறைய சிற்ப வேலைபாடுகள் காணப்படுகின்றன.
     
    இக்கோயிலில் ஆழ்வார்களுக்கும் ஆச்சாரியர்களுக்கும் பிரம்மாண்ட அளவில் உற்சவங்கள் நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி மற்றும் சித்திரை திங்களின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் குவிகின்றனர். இச்சமயத்தில் இங்கு உள்ள மண்டபங்களில் நிறைய கதா காலக்ஷேபங்கள் மற்றும் புராண கதை சொல்லுதல் நடைபெறுகின்றன.
     

  • 28 அடி உயர விஸ்வரூப பெருமாள்

    ரோஹிணி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில் எது தெரியுமா?
    காஞ்சிபுரத்தின் மிக பழமையான கோயில்களில் ஒன்று எது தெரியுமா?
    அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்தால் அனைத்து பலன்களையும் தரும் கோயில் எது தெரியுமா?
    திருப்பாடகம் – பாண்டவதூதர் பெருமாள் கோயில்


    கிருஷ்ணா நீ வேகமாய் வாராய் என்று அழைத்தால் ஓடிவருவான்.
    யசோத நந்தகோபாலனே! என்று பாடினால் புல்லாங்குழலோடு வருவான்.
    நீராடும் பெண்களின் ஆடை திருடி விளையாடுவான்.
    இப்படி குறும்புக்காரனாக, இனியவனாக, காதலனாக இருக்கும் கிருஷ்ணனை விஸ்வரூபத்தில் பார்த்திருக்கிறீர்களா?

    இவன் வெண்ணெய் திருடி தின்றவனில்லை, நம் மனதை திருடி தின்றவன்.
    இதுவரை எங்கும் பார்க்காத திருக்கோலத்தில் 28 அடி உயரத்தில் பாண்டவ தூத பெருமாளாக காட்சியளிக்கிறார் கிருஷ்ணர்.
    கோயில்களின் நகரமான காஞ்சிபுரத்தில்தான் இப்படி எழுந்தருளியிருக்கிறார், இந்த பாண்டவதூத பெருமாள். 
    காஞ்சியில் உள்ள விஷ்ணு கோயில்களில் மூன்று மிகவும் பழமையானவை. உலகளந்த பெருமாள், சொன்னவண்ணம் செய்த பெருமாள் மற்றொன்று நம் பாண்டவதூத  பெருமாள். 
    முந்தைய காலத்தில் இந்த இடம் திருப்பாடகம் என்று அழைக்கப்பட்டது. தற்போது அதுவும் காஞ்சியாகவே அறியப்படுகிறது. 

    கோயில் எளிமையாக 3 நிலை கோபுரங்களுடன் காட்சியளிக்கிறது.
    பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது. கருவறைக்குள் செல்லும் வரை இந்த கோயில் எளிமையாகவே தெரிகிறது. ஆனால், கருவறைக்குள் நுழைந்தால், இந்த பூமியையே நாம் மறந்துவிட வேண்டியதுதான். அப்படி ஒரு தரிசனம்.
    கண்ணங்கரியனாய், காட்சிக்கழகனாய், அபயகரம் காட்டி அமர்ந்த திருக்கோலமது. 
    அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு 28 அடி உயரத்தில் திவ்ய தரிசனம். அழகான வேலைப்பாடமைந்த ஆடை அணிந்து, அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் பாண்டவ தூதரை கண்டதும் அத்தனை துயரங்களும் மறந்து அவன் காலடியில் சரணடைய மாட்டோமா என்ற ஏக்கத்தை விதைத்துவிடும் விந்தையை நம் மனதில் ஏற்படுத்திவிடுகிறார் இந்த பெருமாள்.

    தோஷங்கள், துயரங்கள், வேதனைகளுடன் வருவோர், ஒருமுறை பாண்டவதூத பெருமாள் முன் நின்றுவிட்டால் அத்தனையும் சூரியனை கண்ட பனி போல விலகிவிடும் என்கிறார்கள் பக்தர்கள்.
    கோயிலின் வரலாறு
    பஞ்ச பாண்டவர்களுக்கு ஐந்து வீடாவது கொடுக்கச் சொல்லி கேட்பதற்காக கவுரவர்களிடம் தூது போகிறார் கிருஷ்ணர். கிருஷ்ணர் வருவதை அறிந்து அவரை கொல்ல சதி செய்கிறார்கள் கவுரவர்கள்.
    மூங்கிலால் ஆன பொய்யாசனம் அமைத்து, அதன் கீழ் ஆயுதங்களுடன் மல்லர்களை நிறுத்தி வைக்கிறான் துரியோதனன். கிருஷ்ணருக்கு இது தெரிந்துவிடுகிறது. அடுத்து அவர் செய்ததுதான் இந்த கோயில் எழுந்த வரலாறு. 


    கொல்ல சதி செய்து அமைக்கப்பட்ட பொய்யாசனத்தில் பாண்டவர்களுக்கு தூது போன பெருமாள் அமர்கிறார் சாதாரணமாக அல்ல. விஸ்வரூபம் எடுத்து அமர்கிறார். பொய்யாசனத்தின் கீழ் இருந்த மல்லர்கள் அழிக்கப்படுகிறார்கள். திருதுராஷ்ட்ரருக்கு பார்வை அளித்த அந்த நேரம் அவருக்கு விஸ்வரூப தரிசனம் தருகிறார் கிருஷ்ணர். 
    ஜெனமே ஜெயனும், ஹரித முனிவரும் இந்த விஸ்வரூபத்தை தரிசனம் செய்யும் பேறு பெற்றனர். 
    பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் ஆகியோர் தங்கள் பாடல்களில் இந்த ஊரை பாடகமாக குறிப்பிட்டு மங்களாசாசனம் செய்துள்ளனர். தாயார் ருக்மணியாக எழுந்தருளியிருக்கிறார். 

    கோயில் புராணம்
    இந்த கோயிலில் ரோஹிணி தேவி, கிருஷ்ணரை வழிபட்டு, ஞானயோக நிலை அடைந்து, சந்திர பகவானை அடைந்ததாக புராணம் கூறுகிறது. 27 நட்சத்திரங்களில் ஞானசக்தியை உடைய ரோகிணியை திருமணம் செய்து கொண்ட சந்திரன், பின்னர் அக்னி சக்தியாகிய கார்த்திகை தேவியையும், மற்ற நட்சத்திர தேவிகளையும் திருமணம் செய்து கொண்டாராம். ரோகிணி தேவிக்குள் அனைத்து நட்சத்திரங்களும் உள்ளடக்கி இருப்பதால் இங்கு அனைத்து நட்சத்திரக்காரர்களும் வழிபட்டு பலன் பெறலாம். 


    ரோகிணி தேவி, பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனத்தை பெற்றதுடன் இன்றும் மாய ரூபமாக இறைவனை வணங்கி வரம் பெற்ற தலமாக கருதப்படுகிறது. ரோகிணி நட்சத்திரக்காரர்கள் ரோகிணி சக்கரத்தை கிருஷ்ணர் பாதத்தில் வைத்து வணங்கினால், அனைத்து நற்பலன்களையும் பெறலாம், 
    இங்கு ஸ்ரீகிருஷ்ணர், தனது பாதத்தை அழுத்தி அமர்ந்து விஸ்வபாதயோக சக்திகளை அருள்வதால், இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்தால் அவர்களின் 72 ஆயிரம் அங்க நாடிகளிலும் விஸ்வபூம்ய ஆகர்ஷண சக்தி பெருகி, சோகங்களுக்கும், துன்பங்களுக்கும் நிவர்த்தி தரும் என்பது ஐதீகம். 


    பஞ்ச பாண்டவர்களை போல அடுக்கடுக்கான துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்தவர்கள் யாரும் இல்லை. அவர்களுக்கு துணை நின்றதுபோல, மனித பிறப்பின் துயரங்களை கடக்க இந்த விஸ்வரூப கிருஷ்ணர் துணை நிற்பார். 
    கோயிலுக்கு செல்லும் வழி
    சென்னையில் இருந்து 80 முதல் 90 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள தெருவில் பாண்டவதூதர் பெருமாளை தரிசிக்கலாம்.
    –    எழுத்தாளர் பாமா

  • திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் 

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

    பள்ளிகள் விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சாமி தரிசனம் செய்ய 20 மணி நேரமாகிறது. 

    வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு, குடிநீர், உணவு ஆகியவை வழங்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் 72 ஆயிரத்து 882 பேர் சாமி தரிசனம் செய்தனர். ஒரே நாளில் உண்டியல் காணிக்கை  மூலமாக 4 கோடியே 20 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 

    பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருவதால் தேவஸ்தானம் சிபாரிசு கடிதங்கள் வரும் 5ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.