திருமலை, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக கடப்பா மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. இதன் அறங்காவலர் குழு தலைவர் பதவி சுமார் ஓராண்டாக காலியாக உள்ளது. இந்நிலையில் புதிய அறங்காவலர் குழு தலைவராக புட்டா சுதாகர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சுதாகர் யாதவ், ஏற்கெனவே திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார். புதிய அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள புட்டா சுதாகர் யாதவ் நேற்று முன்தினம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து ஆசி பெற்றார்.
Category: கோவில்கள்
கோவில்கள்
-
திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய அறங்காவலர் நியமனம்
-
அஷ்டமி திதியில் அம்பிகைக்கு கல்யாணம்
தன் நாயகன் ஐயாறப்பனுடன் தர்மசம்வர்த்தினியாக தேவி திருவருள்புரியும் தலம் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள திருவையாறு. சூரிய புஷ்கரணியை தல தீர்த்தமாகக் கொண்ட தலம் இது. இந்தக் குளம் மிகவும் விசேஷமானது. இங்கே அம்பாள் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறாள். எனவே திருவையாறு எல்லைக்குட்பட்ட இடங்களில் பெருமாளுக்கு கோயில்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது தர்ம சக்தி பீடம் ஆகும். இங்கே அம்பாள் அறம் வளர்த்த நாயகி எனப்படுகிறாள். ஆண்கள் தர்மம் செய்வதைவிட குடும்பத்தில் உள்ள பெண்கள் தர்மம் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அந்த அடிப்படையில் உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நாயகியாக, பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தர்மசம்வர்த்தினி என்ற பெயரில் அம்பாள் இங்கே எழுந்தருளி உள்ளாள். எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில் அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துவதுபோல, இத்தலத்தில் தெற்கு கோபுர வாயிலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாத்துகிறார்கள்.
சிலசமயங்களில் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள்கூட சாற்றப்படுவதுண்டு. இங்கே மூலவர் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார். அவரது ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். சிவபெருமானின் ஜடாமுடியை மிதிக்கக்கூடாது என்பதால் சந்நதியை வலம்வர தடை விதிக்கப்பட்டுள்ளது. நவகிரகங்களில் இது சூரியத்தலமாகும். சூரியபகவான் இத்தலத்தில் பூஜித்துள்ளார். இக்கோயில் ஐந்து பிராகாரங்களைக் கொண்டது. இங்குள்ள முக்தி மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தால் மனம் நிம்மதி அடைகிறது. சூரியன் இந்தக் கோயிலில் மேற்கு திசை நோக்கி உள்ளார்.
-
அட்சயதிரிதியை அன்று எந்த கோயிலுக்கு போக வேண்டும்….
அட்சயதிரிதியை தினத்தில் மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆனால் மகாலட்சுமியே பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவன்கோயிலுக்கு சென்றால் பலன் பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. திருச்சி அருகே அமைந்துள்ள வெள்ளூரில் தான் மகாலட்சுமி பிரதிஷ்டை செய்த திருக்காமீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மன் சிவகாம சுந்தரி தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள்.
இந்த கோயலின் தல வரலாறு : தட்சன் யாகம் நடத்திய கதை எல்லோருக்கும் தெரியும். ஈசனை விடத் தானே உயர்ந்தவன் என்கிற செருக்கு கொண்டு பிரமாண்டமான ஒரு யாகத்தை நடத்தினான் தட்சன். அவனது மாப்பிள்ளையான அதாவது தட்சனின் மகளான தாட்சாயினியின் துணைவர் சிவபெருமானுக்கு இந்த யாகத்தில் கலந்து கொள்ள அழைப்பு இல்லை. ஆனாலும், தந்தை நடத்தும் யாகத்தில் மகள் கலந்து கொள்ளாமல் இருக்க முடியுமா? பாசம் விரட்டியது. எனவே, அழைப்பு இல்லாமலே அங்கு போய் அவமானப்பட்டுத் திரும்பினாள் பராசக்தி. கூடவே, தந்தைக்கு சாபமும் கொடுத்து விட்டு வந்தாள். தன் அனுமதி இல்லாமல் சென்றதால், உமையை நெற்றிக்கண்ணால் சுட்டெரித்தார் ஈசன். தவறை உணர்ந்த தேவி, மீண்டும் ஈசனுடன் இணைந்து கயிலையில் வசிக்க விரும்பினாள்.
பூலோகத்தில் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து என்னை வழிபடு. உரிய நேரம் வரும்போது உன் விருப்பம் நிறைவேறும் என்று அருளினார் சிவபெருமான். அதன்படி பர்வதராஜனின் மகளாக அவதரித்த அன்னை, பார்வதி என்ற திருநாமம் பூண்டு பர்வதமலையில் தவம் புரியலானாள். இறைவனும் இறைவியும் பிரிந்து இருந்தால், உலக சிருஷ்டி எவ்வாறு நிகழும்? பிரபஞ்சம் பரந்து விரிய வேண்டாமா? சக்தியும் சிவனும் சேர்ந்தால்தானே இது சாத்தியம் ! இதற்காக பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர்.
சின்முத்திரை காட்டி யோக நிலையில் இருக்கும் ஈசனுக்கு காமத்தின் மீது எப்படி நாட்டம் வரும்? காம பாணம் ஈசன் மேல் விழுந்தால்தானே அவருக்கு சக்தியின் நினைவு வரும்? ! இதற்காக அனைவரும் மன்மதனை அணுகினர். ஆனால், மன்மதன் சம்மதிக்கவில்லை. காம பாணத்தை எனக்கு அருளியவரே எம்பெருமான்தான். இதை அவர் மேல் நான் எய்வது எனக்கு நானே அழிவைத் தேடிக் கொள்ளும் முடிவாகும் என்று மறுத்தான்.
தேவலோகமே ஒன்று திரண்டு சாபம் விட்டது மன்மதனுக்கு. அதன் பின் வேறு வழியின்றி, பல மைல் தொலைவில் உள்ள ஒரு புன்னை மரத்தடியில் ஒளிந்து கொண்டு ஈசனைக் குறி பார்த்து காம பாணம் எய்யத் தயாரானான்.
நடந்ததையும், நடக்கப் போவதையும் அறியாதவரா ஈசன்? வில்லில் இருந்து பாணம் வெளிப்பட்ட நேரத்திலேயே தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்துப் பொசுக்கினார். விளைவு – பாணம் திசைமாறி பார்வதியின் மேல் விழுந்தது. தவம் கலைந்தது. தன் அவதார நோக்கம் உணரப் பெற்றாள் தேவி. சிவனை அடைவதற்கான காம பாணம் தன் மேல் விழுந்ததால், சிவகாம சுந்தரி ஆகி, ஈசனுடன் கூடினாள். எனவேதான் இங்குள்ள ஈசன் திருக்காமேஸ்வரராகவும், தேவி சிவகாம சுந்தரியாகவும் நமக்குக் காட்சி தருகிறார்கள்.
இந்த நிகழ்வை சித்திரிக்கும் படைப்புச் சிற்பம் இந்த ஆலயத்தில் காணப்படுகிறது. சிவபெருமானை நோக்கி காமக் கணை விடும் மன்மதனின் சிற்பம் நம்மைக் கவர்கிறது. மன்மதனின் இழப்பை அவன் மனைவியான ரதிதேவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இழந்த கணவனை திரும்ப வேண்டி ஈசனிடம் மண்டியிட்டாள். அதே வேளையில் மன்மதன் இல்லாததால், ஜீவ ராசிகளிடம் காதல் உணர்வு பெருகவில்லை. உயிர்ப் பெருக்கம் நிகழவில்லை. எனவே, மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்து ரதிதேவியின் கண்களுக்கு மட்டும் தெரியுமாறு கொணர்ந்தார். அதோடு, மன்மத மதன களிப்பு மருந்து எனும் மருத்துவ முறையை மன்மதனுக்குக் கற்பித்தார்.
இங்கு மருந்து, சித்த மருத்துவ ஓலைச் சுவடிகளில் நூறு பாடல்களாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மருத்துவ முறைகளை மன்மதனுக்கு எடுத்துரைத்ததால் திருக்காமேஸ்வரருக்கு வைத்தியநாதர் என்றொரு திருநாமமும் உண்டு.
தல சிறப்பு : இத்தல சிவனை மகாலட்சுமி பிரதிஷ்டை செய்து வழிபட்டிருப்பது சிறப்பு. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து வணங்குவதற்கு ஏற்ற திருக்கோயில் இது. தங்கம், வெள்ளி நகைகள் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அந்தத் தோஷங்களை அகற்றுவதற்கு இந்த ஆலயம் வந்து வழிபடுவது சிறப்பு. வேறெங்கும் காணாத வகையில் வில்வமர நிழலில் ஐஸ்வர்ய மகுடத்துடன் கோயிலின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் அலைமகளாம் ஐஸ்வர்ய மஹாலட்சுமி அற்புத திருக்கோலத்தில் வீற்றிருக்கின்றாள்.
திருப்பாற்கடல் கடைந்த நிகழ்வின்போது அமுதம் பெறுவதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போட்டி வந்தது. அசுரர்களுக்கு அமுதம் போகாமல் இருப்பதற்காக திருமாலானவர் மோகினி வடிவெடுத்து, தேவர்களுக்கு மட்டுமே அமுதத்தை வழங்கினார். அந்த வேளையில் மோகினியைப் பார்த்து சிவபெருமானே மோஹித்ததால் ஐயப்பன் அவதரித்தார். இந்த நிகழ்வை அறிந்த மகாவிஷ்ணுவின் தேவியான மகாலட்சுமி கோபம் கொண்டு வைகுந்தத்தை விட்டே வெளியேறினாள். தன் கோபத்துக்குக் காரணமான சிவனிடம் நியாயம் கேட்பதற்காக அவரை அழைத்தாள். ஆனால், ஈசன் அங்கே வராததால் பூலோகத்துக்கு வந்து வில்வாரண்ய சேக்ஷத்திரம் எனப்படும் வெள்ளூருக்கு வந்து ஈசனைக் குறித்து தவம் செய்யலானாள். இப்போதும் இறைவன் அவளுக்குக் காட்சி தரவில்லை. எனவே, தன்னையே ஒரு வில்வ மரமாக மாற்றிக் கொண்டு வில்வ மழையாகப் பொழிந்து ஈசனை பூஜை செய்தாள்.
அதன் பின் ஈசன் அவள் முன் தோன்றி, ஐயப்பன் அவதார நோக்கத்தைக் கூறி, கோபத்தை தணித்து சாந்தமாக்கினார். மகாவிஷ்ணுவுடன் லட்சுமிதேவியை இணைத்து வைத்தார். வில்வ மரமாகத் தோன்றி, தன்னை அர்ச்சித்த காரணத்தால் ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை லட்சுமிதேவிக்கு அளித்து, ஐஸ்வர்யத்துக்கே அதிபதி ஆக்கினார். வேறெங்கும் காண இயலாத வகையில் தட்சிண பாகம் என்று சொல்லக் கூடிய வடமேற்குப் பகுதியில் மகாலட்சுமி இருக்க வேண்டிய ஸ்தானத்தில் வில்வ மரமும், அதன் நிழலில் ஐஸ்வர்ய மகுடம் தரித்த மகாலட்சுமியையும் இங்கே தரிசிக்க முடிகிறது.
அபயம், வரதம் கூடிய திருக்கரங்களோடு மேலிரு கரங்களில் தாமரை மலர் கொண்டு காட்சி தருகிறாள் இவள். ஈசனை பூஜிக்க மகாலட்சுமி பயன்படுத்திய தீர்த்தம் ஐஸ்வர்ய தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்வதற்கு முன் வில்வ மரத்துக்கே முதலில் பூஜை செய்கிறார்கள். வில்வாரண்யேஸ்வரர், ஐஸ்வர்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர், ஸ்ரீவத்ஸ அனுக்ரஹர் என்றெல்லாம் ஈசனுக்கு வேறு திருநாமங்கள் உண்டு. சுக்ரன் இத்தலத்தில் ஈசனை வழிபட்டு போகத்திற்கு அதிபதியான தலம். முசுகுந்த சக்கரவர்த்திக்கு வலன் எனும் அசுரனை வெல்லும் ஆற்றலை கொடுத்த தலம். ஆகவே, இவ்வூர் வெல்லூர் எனப்பெயர்பெற்றது.வலனை அழிக்கப் புறப்பட்ட முசுகுந்தனுக்குத் தளபதியாக வந்து அருளிய கால பைரவரையும், மன்மதனுக்கு அருளிய ஞான பைரவரையும் கிழக்கு நுழைவாயில் அருகே தரிசிக்க முடிகிறது.
சித்த விரத பூமி: போகர் ஏழாயிரம் எனும் நூலில் திருக்காமேஸ்வரர், திருச்சன்னதியில் போகர் சிவபோக சக்கரத்தை பிரதிஷ்டை செய்து அதில் அமர்ந்து தவம் செய்வதாகவும், சித்தர்கள் அனைவரும் எங்கு சென்று தவம் செய்தாலும், சித்திக்காத காரியம் திருக்காமேஸ்வர் சன்னதியில் அமர்ந்து தவம் செய்தால் சித்தி ஆகும் என்பதால், போகர், பாம்பாட்டி சித்தர், புலிப்பாணி ஆகியோர் தலைமையில் கோயிலைச் சூழ்ந்து சித்தர்கள் குழுமமே தவம் செய்வதாகவும், வெள்ளூர் திருக்காமேஸ்வரப் பெருமானிடம் போகர் சிவபோகச் சக்கரத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்த பின்னரே பழனியில் நவபாஷான ஞான தண்டாயுதபாணி விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்ததாக போகர் ஏழாயிரத்தில் குறிப்பிட்டுள்ஞுது வியக்கத்தக்கதாகும். இன்னும் திருக்காமேஸ்வரர் ஆலயத்தின் முன் மஹா மண்டபத்தில் போகர் பிரதிஷ்டை செய்த சிவபோகச்சக்கரத்தை தரிசனம் செய்யலாம்.
ஆலயத்தின் ஈசான பாகத்தில் அமைந்துள்ஞு சுரங்கத்தில் சிவலிங்க வடிவமாக போகர் காட்சி தருகிறார். அரூபமாக இன்னும் எண்ணற்ற பல சித்தர்கள் தவம் செய்வதாக அகஸ்த்தியர் நாடியிலும், விசிஷ்ட நாடியிலும், காகபுஜண்டர் நாடியிலும் காணப்படுவது சிறப்பானதாகும். சித்தர்களுக்கே எங்கு சென்றும் சித்திக்காத காரியம் திருக்காமேஸ்வரர் சன்னதியில் சித்தியாகும் என்பதால் மனிதர்களாகிய நாம் நினைக்கும் காரியம் சித்தியாக திருக்காமேஸ்வரர் சன்னதியில் தவம் செய்வது சிறப்பு.பிரார்த்தனை: தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து வணங்குவதற்கு ஏற்ற திருக்கோயில் இது. தங்கம், வெள்ளி நகைகள் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அந்தத் தோஷங்களை அகற்றுவதற்கும், போகத்திற்கு அதிபதியான சுக்ரன் ஜாதகத்தில் சரியாக இல்லையனில் எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் காரியத்தடையும், மனக்குழப்பமும், பொருளாதார வீழ்ச்சியையும், திருமணத் தடையும், குழந்தையின்மையும், வியாபார வீழ்ச்சியையும் ஏற்படுத்துவார். எனவே, சுக்கிரதோஷம் நீங்கிட சுக்கிரனுக்கு அதிபதியான மஹாலக்ஷிமியை சுக்ர ஹோரையில் இங்கு வந்து ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்து வழிபடலாம். திருமணம் நல்லபடியாக நடப்பதற்கு ஜாதகம் வைத்துப் பிரார்த்தனை செய்கிறார்கள்.குழந்தை பாக்கியத்திற்கும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. இழந்த தன் கணவனை ரதிதேவி திரும்பப் பெற்ற திருத்தலம் என்பதால் தம்பதியர் இங்கே வந்து வணங்கினால் ஒற்றுமை மேலோங்கும். மாங்கல்ய பலம், திருமணத் தடை, ஐஸ்வர்ய யோகம், பிரிந்த தம்பதியர் இணைவதற்கு என்று மிகச் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது.
பொது தகவல் : ஆலயத்திற்கு தெற்கு வாசல், கிழக்கு வாசல் என்று இரு நுழைவாயில்கள் உள்ளன. பலிபீடம், நந்திதேவர், திருமாளிகைப்பத்தியுடன் கூடிய பிராகாரம். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்கை ஆகிய தெய்வங்கள் உள்ளன. விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் கூடிய சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகம் போன்ற சன்னதிகள் அமைந்துள்ளன. தல புராணத்தைச் சொல்லும் முசுகுந்தனின் சிவ வழிபாடு, ரதியும் மன்மதனும் இணைந்து ஈசனை வணங்கும் கோலம் போன்றவை சிற்பமாகக் காணப்படுகின்றன. -
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை எப்ரல் 10ஆம் தேதி திறப்பு
விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 10-ந் தேதி திறக்கப்படுகிறது. 18-ந் தேதி வரை 9 நாட்கள் பூஜைகள் நடைபெறுகிறது. 10 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.
11-ந் தேதி முதல் வழக்கமான பூஜை மற்றும் வழிபாடுகளுடன் நெய் அபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும்.
15-ந் தேதி விஷூ பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து கனி காணுதல் வைபவம் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு நாணயங்களை கை நீட்டமாக தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் வழங்குகிறார்கள்.
சித்திரை மாத பூஜைகளுக்கு பின் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 18-ந் தேதி இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு அடைக்கப்படும்.
விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 9 நாட்கள் பூஜைகள் நடைபெறும். எனவே ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் முக்கிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் பம்பைக்கு இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. -
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை பெருந்திருவிழா
திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சித்திரை பெருந்திருவிழா ஏப்ரல் 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா, சித்திரை பெருந்தேரோட்டம் ஆகியவை ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். மேலும் இக்கோவிலில் அம்மனே, பக்தர்களுக்காக ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வார்.
பச்சை பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள்பாலித்தல் ஆகிய 5 தொழில்களையும் சித்திரை பெருந்திருவிழா நாட்களில் அம்மன் புரிவதாக மரபு.
இத்தகைய சிறப்புகள் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலின் சித்திரை பெருந்திருவிழா வருகிற 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு அம்மன் கேடயத்தில் புறப்பாடாகி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இதைத்தொடர்ந்து 9-ந் தேதி காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைகிறார். மாலை 5 மணிக்கு அபிஷேகம் கண்டருளி இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் புறப்பாடாகி வழிநடை உபயங்கள் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார்.
இதையடுத்து 10, 11, 12, 13 மற்றும் 14-ந் தேதிகளில் காலையில் பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு முறையே பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம் ஆகியவற்றில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 15-ந் தேதி காலை பல்லக்கில் புறப்பாடாகிறார். இரவில் மரக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வழிநடை உபயங்கள் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார். 16-ந் தேதி காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி வழிநடை உபயம் கண்டருளுகிறார். இரவில் வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடாகி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து மூலஸ்தானம் சென்றடைகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 17-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து தேரோட்டம் நடக்கிறது. பின்னர் இரவு 9 மணிக்கு அம்மன் தேரில் இருந்து புறப்பாடாகி மூலஸ்தானம் சென்றடைகிறார்.
18-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்திலும் அம்மன் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 19-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு முத்து பல்லக்கிலும் அம்மன் புறப்பாடாகிறார். 20-ந் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. அன்று மதியம் 12 மணிக்கு அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைகிறார். அங்கு மாலை 5 மணிக்கு அபிஷேகம் கண்டருளி, இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் வழிநடை உபயம் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார். -
தீராத நோய் தீர்க்கும் ஸ்ரீ தன்வந்திரி பகவான்
மக்களைக் காக்கும் பொருட்டு திருமால் எடுத்த 24 அவதாரங்களில் மிக முக்கியமான பத்து அவதாரங்களை தசாவதாரங்கள் என்று போற்றுகிறோம். மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண மற்றும் கல்கி அவதாரங்கள் தசாவதாரங்களாகும்.
இவற்றைத் தவிர, தத்தாத்ரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற வேறு பல அவதாரங்களையும் திருமால் எடுத்துள்ளார். ஸ்ரீதன்வந்திரி பகவான் அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீ விஷ்ணுபுராணம் மற்றும் பிரம்மாண்ட புராணத் தில் குறிப்புகள் உள்ளன.
திருப்பாற்கடலில் தேவர்களும், அசுரர்களும் அமுதம் கடைந்தபோது கடலில் இருந்து பல்வேறு பொருட்களும், பல தெய்வங்களும் வெளிவந்தன. அப்போது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது.அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் தன்வந்திரி. கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு,சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார்.
அவர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். நோய் தீர வழிபடலாம் நோயின்றி வாழ வேண்டும் என்பதே பலரது விருப்பம். பணம், சொத்து இருந்தாலும் அதை அனுபவிக்க ஆரோக்கியமான உடல் வேண்டும். நிம்மதியான மனம் வேண்டும்.
இப்பூவுலகில் விஷ்ணு எடுத்த அவதாரங்களில் ஒன்றாக கருதப்படும் தன்வந்திரி பகவான்நோய் தீர்க்கும் தெய்வமாக போற்றப்படுகிறார். இவரை வழிபடுவதால் நோய்கள் தீரும். மருத்துவ கடவுள் தன்வந்திரி ஆயுர்வேத மருந்துகளின் அதிபதி. மருத்துவக்கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்துதான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ரங்கநாதருக்கு வைத்தியம் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆலயத்தில் உள்ள தாயார் சன்னிதிக்கு செல்லும் வழியில் தன்வந்திரி பகவான் சன்னிதி உள்ளது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் அரங்கனுக்கே வைத்தியம் செய்யும் விதமாக, ஸ்ரீமன் நாராயணனே இங்கு தன்வந்திரியாக திகழ்வதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கோவில் கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சேர்த்தலா அருகிலுள்ள மருத்தோர் வட்டம் தன்வந்திரி கோவில் அமைந்திருக்கிறது. உடுப்பி ஆலயத்தில் உள்ள தன்வந்திரியை கடந்த 750 ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தன்வந்திரி பகவானுக்கு தனி ஆலயம் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் அமைந்துள்ளது. ஸ்ரீ தன்வந்திரி பகவான் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்துள்ள அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில்ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு தனிக்கோயில் உள்ளது. கலி காலத்தில் அழியாமல் இருக்க ஐம்பத்திநான்கு கோடி தன்வந்திரி மஹா மந்திர ஒலிகளுடன் தோன்றிய மகத்தான தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு.
இந்த பீடம் ஒளஷத பீடமாக அமைந்து ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி என்பதாகும். ஆரோக்கிய பீடம் இங்குள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் வலம் தரும் வாஸ்து பகவான் முதல் சஞ்சலம் போக்கும் சஞ்சீவிராயர் வரை ஒரே இடத்தில் தனித்தனி சன்னதியில் 75க்கும் மேற்பட்ட பரிவார தெய்வங்களும் இருப்பதும் ஒரு தனி நபராக பீடத்தை நிறுவி இருப்பது தமிழகத்தை ஏன் ஒட்டுமொத்த உலகமே வாலஜாவை திரும்பி பார்ப்பது ஆச்சர்யமே. இங்கு யோகா மற்றும் இயற்கை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையம் உள்ளது. தினசரியும் யாகம் தன்வந்திரியே மூலவராக அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். தன்வந்திரி பகவான் சிலை எட்டு அடி உயரம். ஒரே கல்லால் செய்யப்பட்டது. சுமார் இரண்டு டன் எடையுள்ளது. பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில் அருள் புரிகின்றார். நான்கு திருக்கரங்கள். பகவானின் திருமார்பில் வலது பக்கம் தங்கத்தால் ஆன ஸ்ரீலட்சுமியின் உருவம் இருக்கிறது.
சற்றுக் கீழே கஜலட்சுமி தேவி காட்சி தருகிறாள். வலது மேற்கரத்தில் சக்கரம். வலது கீழ்க்கரத்தில் அமிர்த கலசம். இடது மேற்கரத்தில் சங்கு. இடது கீழ்க்கரத்தில் சீந்தல் கொடி. வலது தொடையில் வெள்ளியால் செய்யப்பட்ட அட்டைப் பூச்சி. வெள்ளியால் ஆன ஸ்டெதஸ்கோப்பும், கைக்கடிகாரமும் வைத்து, கத்தியும் இடுப்பில் பெல்ட் அணிந்து தலைமை அலோபதி மருத்துவாகத் தரிசனம் தருகிறார். கோவிலுக்கு செல்லும் வழி 46 லட்சம் பக்தர்கள் கைபட எழுதிய 54 கோடி தன்வந்திரி மந்திரங்களுடன் நின்ற கோலத்தில் உள்ளார் தன்வந்திரி பகவான். ஷண்மதங்களுக்கு உரிய தலமாகவும் இது விளங்குகிறது. -
திருப்பதியில் இனி தரிசனம் ஈசி…..
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் சாதாரண பக்தர்களுக்கு திருமலை, திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கப்பட உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சுலபமாக தரிசனம் செய்ய தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கப்பட உள்ளது. மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இருந்து இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதற்கான கவுண்ட்டர்கள் அமைக்கும் பணி ரூ.3 கோடி செலவில் நடந்து வருகிறது. அந்தப் பணி இன்னும் முடியாத நிலையில் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்பின் வருகிற 10-ந் தேதிக்குள் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கும் பணி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளில் கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை, கட்டிடத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அதிகாரிகளும், ஊழியர்களும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
2013-ம் ஆண்டு 300 ரூபாய் டிக்கெட் ‘டைம் ஸ்லாட்’ முறையில் வழங்கப்பட்டது. அதேபோல் 2017-ம் ஆண்டு அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய நடைபாதைகளில் வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு ‘டைம் ஸ்லாட்’ முறையில் தரிசன அனுமதி சீட்டு வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை பரிசோதனை அடிப்படையில் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு ‘டைம் ஸ்லாட்’ முறையில் தரிசன அனுமதி அட்டை வழங்கப்பட்டது.
இந்தத் திட்டம் வெற்றி பெற்றதால், ‘டைம் ஸ்லாட்’ முறையில் ஏழுமலையானை தரிசிக்க அனுமதி அட்டை வழங்கும் பணியை வருகிற 10-ந் தேதிக்குள் அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
அதற்காக திருமலையிலும், திருப்பதியிலும் கவுண்ட்டர்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கவுண்ட்டர்களில் பக்தர்கள் அமர்ந்து செல்ல வசதியாக இருக்கைகள், மின் விசிறிகள், கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன.
இலவச தரிசனத்தில் முதியோர் பலர் செல்கிறார்கள். முதியோருக்காக மாதத்தில் இரு முறை சிறப்பு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. சிறப்பு தரிசனத்தில் செல்ல முடியாதவர்கள் இலவச தரிசனத்தில் சென்று ‘டைம் ஸ்லாட்’ தரிசன அனுமதி அட்டையை பெற வசதியாக அவர்களுக்கென தனிக் கவுண்ட்டர்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. ‘டைம் ஸ்லாட்’ முறையிலான தரிசன அனுமதி அட்டை பெற வரும் அனைத்துத் தரப்பு பக்தர்கள் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.
ஒரு முறை ‘டைம் ஸ்லாட்’ அனுமதி அட்டையை பெற்ற ஒரு பக்தர் 15 நாட்களுக்குள் மீண்டும் ‘டைம் ஸ்லாட்’ அட்டையை பெற முடியாது. அத்துடன் சாமி தரிசனமும் செய்ய முடியாது. அதற்காக கம்ப்யூட்டரில் புதிய மென் பொருள் பொருத்தப்பட்டு உள்ளது. அவர்கள் 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் வந்து சாமி தரிசனம் செய்யலாம்.
மேலும் திவ்ய தரிசனம், 300 ரூபாய் டிக்கெட் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, இலவச தரிசனத்தில் சென்று வழிபட முடியாது. அவர்களுக்கும் ‘டைம் ஸ்லாட்’ முறையிலான தரிசன அனுமதி அட்டை வழங்க முடியாத அளவுக்கு கம்ப்யூட்டரில் புதிய மென் பொருள் பொருத்தப்பட்டு உள்ளது.
இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் ஆதார் அட்டையோ அல்லது வாக்காளர் அடையாள அட்டையோ இல்லை என்றால் கவலைப்பட தேவையில்லை. வழக்கம்போல் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தங்கி ஓய்வெடுத்து இலவச தரிசனத்தில் சென்று ஏழுமலையானை வழிபடலாம் என திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #tamilnews -
திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் நேற்று முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடந்தது.
இதனையொட்டி கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் தங்கக் குடத்தில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.
இதனையடுத்து ஆறு கால் மண்டபத்தில் தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப்பெருமானுக்கு தங்க கிரீடம் சூட்டப்பட்டது. மேலும் நாதசுவரம் ஒலிக்க மேள, தாளங்கள் முழங்க நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் வழங்கி முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அப்போது பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பி சாமி கும்பிட்டனர்.
மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவில் மீனாட்சியம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்கு தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு செல்வார். இதேபோல் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணத்திற்கு ஆண்டிற்கு ஒரு முறை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் மீனாட்சி அம்மனும் திருப்பரங்குன்றத்திற்கு வருவார்கள்.
இதன்படி இன்று திருப்பரங்குன்றம் கோவிலில் நடக்கும் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணத்திற்காக மதுரையில் இருந்து மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளுகின்றனர். -
திருத்தணி முருகன் கோயிலுக்கு நகரத்தார் காவடிகளுன் பாதயாத்திரை
திருத்தணி பாதயாத்திரைக் குழுவின் சார்பில், ஆண்டுதோறும், சென்னையில் இருந்து, காவடிகளுடன் புறப்பட்டு, திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்து உற்சவருக்கு பால் அபிஷேகம், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபடுவர்.அந்த வகையில், நடப்பாண்டில், சென்னை, பவளக்காரத் தெருவில் உள்ள பழைய தண்டாயுதபாணி கோவிலில் இருந்து, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் காலையில் புறப்பட்டு, மதியம் அம்பத்துார் வந்தடைகின்றனர். தொடர்ந்து மாலையில் அம்பத்துாரில் இருந்து புறப்பட்டு, ஆவடி பாபு திருமண மண்டபத்தில் தங்கியிருந்து ஓய்வு எடுக்கின்றனர்.பின், 27ம் தேதி, ஆவடியில் இருந்து புறப்பட்டு, வேப்பம்பட்டு வழியாக திருவள்ளூர் வந்தடைகின்றனர். தொடர்ந்து, 28ம் தேதி, திருவாலங்காட்டிலும், 29ம் தேதி, திருத்தணி அருகே சரஸ்வதி நகர் தங்கியிருந்து, 30ம் தேதி, காலை, 9:00 மணிக்கு காவடிகள் மற்றும் பால்குடங்களுடன் பக்தர்கள், திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு சென்றடைகின்றனர்.பின், காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பால் அபிஷேகம் நடத்தியும், இரவு தங்க ரதத்தில் உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மாட வீதியில் வீதியுலா வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன
-
நெல்லையப்பர் கோவிலில் ஏப்ரல் 27ல் கும்பாபிஷேகம்
பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலைக்கான பந்தக்கால் நடும் விழா மார்ச் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில், நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலும் ஒன்று. திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய தலமும் ஆகும். பாண்டியர் கால சிவாலயங்களில் பழமையானது. கருவூரார் சித்தர், அகஸ்தியர் உள்ளிட்ட பல சித்தர்கள் வழிபட்ட ஸ்தலம் ஆகும். இந்த கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2004-ம் ஆண்டு நடந்தது. இதைத்தொடர்ந்து வருகிற ஏப்ரல் மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ந்தேதி கோவில் கோபுரம், விமானம், கொடிமரம், சுற்றுச்சன்னதிகள் பாலாலயம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவில் தளம் அமைத்தல், கோபுரம், விமானங்கள் புதுப்பித்தல், வண்ணம் தீட்டுதல், வெள்ளையடித்தல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலைகள் அமைப்பதற்கான கொட்டகை அமைக்கும் பணிக்கான கால்நடும் விழா மற்றும் பந்தக்கால் நடும் விழா ஆகியவை நாளை மறுநாள் காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் நடக்கிறது.