Category: கோவில்கள்

கோவில்கள்

  • குருவாயூரப்பனை நேரில் சென்றாலும் இப்படி தரிசிக்க முடியாது

    இந்தியாவிலேயே அதிக மக்களால் தரிசிக்கப்படும் கோயில்களில் நான்காவது கோயில் எனும் பெருமை குருவாயூரப்பன் கோயிலுக்கு உண்டு. மஹாவிஷ்ணுவே பூமியில் வீற்றிருக்கும் ‘பூலோக வைகுண்டம்’ என்று பக்தியுடன் அழைக்கப்படும் இந்த ஆலயத்தை தரிசிப்பது மிகப்புண்ணியமான ஒன்றாக நம்பப்படுகிறது. முக்கியமான வைணவ திருத்தலம் எனும் ஒப்பற்ற கீர்த்தியையும் இந்த தொன்மையான ஆலயம் கொண்டுள்ளது. இந்த கோயிலில் குருவாயூரப்பனுக்கு காலை முதல் மாலை வரை செய்யப்படும் தரிசனங்கள் இதோ உங்கள் பார்வைக்காக….

  • திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழா

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா மார்ச் 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் பங்குனி பெருவிழா மிக சிறப்பு வாய்ந்ததாகும். இந்த திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 15 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழா மார்ச் 21 ஆம் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதி வரை 15 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக வருகிற 30-ந்தேதி பங்குனி உத்திரமும், 31-ந்தேதி சூரசம்ஹார லீலை நடக்கிறது அன்று ஏராளமான பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 1-ந்தேதி முருகப் பெருமானுக்கு தங்கிரீடம் சூட்டி, நவரத்தினங்களான செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடக்கிறது. திருவிழாவின் முத்தாய்ப்பாக 2-ந்தேதி முருகப்பெருமான்-தெய்வானையின் திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கிறது.

  • திருச்செந்தூர் கோயிலில் பங்குனி உத்திரம்

     

    பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் 30ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்று, 5.30 மணிக்கு அருள்மிகு வள்ளியம்மன் தபசுக்கு புறப்படுதல் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு சுவாமி புறப்பாடு, பந்தல் மண்டபம் முகப்பில், சுவாமி -அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து, சுவாமி – அம்மன் திருவீதி வலம் வந்து, இரவு 108 மகாதேவர் சன்னதி முன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவில் இராக்கால அபிஷேகம் நடைபெறாது.

  • சபரிமலை கோயில் நடை திறப்பு

    பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. கோயில் தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்தினார். அதன் பிறகு இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. 15 ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை, புஷ்பாபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகள் நடைபெறும். 19ம் தேதி இரவு 10 மணிக்கு பங்குனி மாத பூஜைகள் நிறைவடையும்.இதன் பின்னர் பங்குனி உத்திர திருவிழாவிற்காக 20ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்படும்.

  • பளிச் என பிரகாசிக்கும் திருப்பதி ஏழுமலையான்

    திருப்பதி ஏழுமலையானை தொலைவில் இருந்து பளிச் என்று தரிசிக்க புதிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் கருவறையில் கூடுதல் நெய் விளக்குகளை ஏற்றி, பக்தர்கள் தெளிவாக பார்த்து தரிசிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் 70 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய உற்சவ நாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு தரிசிக்கும் பக்தர்கள், ஜெயபேரி விஜயபேரி சிலை அருகில் இருந்து சுமார் 70 மீட்டர் தொலைவில் நின்றபடி ஏழுமலையானை தரிசிக்க வேண்டி உள்ளது. இவ்வாறு தரிசிக்கும்போது சுவாமியின் உருவம் தெளிவாக தெரியாமல் பக்தர்கள் மன வேதனை அடைகின்றனர். மேலும் கோயிலின் ஆகம விதிப்படி கருவறையில் மின்விளக்குகள் பொருத்தக்கூடாது என்பதால் நெய் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளது. இதனால் போதிய வெளிச்சம் இல்லாததால் சுவாமியை தரிசிக்க முடியவில்லை என பக்தர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து பக்தர்களின் புகார்கள் குறித்து அதிகாரிகளுடன் தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து கோயில் கருவறையில் கூடுதல் நெய்விளக்குகள் வைத்து வெளிச்சத்தை ஏற்படுத்தி பக்தர்கள் தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார். அதன்படி 2 ஏகாங்கிகள் நியமித்து கூடுதலாக 2 நெய்விளக்குகள் வைக்கப்பட்டு அதிகளவு நெய் ஊற்றி அந்த விளக்குகளில் உள்ள திரிகளை அதிகாலை 2.30 மணி, பகல் 11 மணி, மாலை 6.30 மணி என 3 வேளைகளில் மாற்றி பிரகாசமாக எரிய விடப்பட்டுள்ளது. கூடுதல் விளக்குகள் வெளிச்சத்தில் கருவறையில் உள்ள ஏழுமலையானை பக்தர்கள் தெளிவாக கண்டு தரிசனம் செய்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • சமயபுரம் மாரியம்மனுக்கு பூக்களால் அபிஷேகம்…

    பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
    சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயில் ஆண்டுதோறும் மாசி மாத கடைசி வார ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறுவதையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை விக்னேஷ்வர பூஜை, புண்ணியாக வாசனம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து காலை 6.45-க்கு மீன லக்னத்தில் கோயில் இணை ஆணையர் சி. குமரதுரை, கோயில் ஊழியர்கள், ஊர்ப் பிரமுகர்கள் தட்டு, கூடைகளில் பூக்களை சுமந்து கொண்டு யானையுடன், மேள தாளத்துடன் ஊர்வலமாகச் சென்று காலை 8 மணிக்கு அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து காப்புக் கட்டப்பட்டது.

  • தஞ்சை பெரியகோவில் விமான கோபுரம் சுத்தப்படுத்தப்படுகிறது

    பாரம்பரிய சின்னமாக விளங்கி வரும் தஞ்சை பெரியகோவில் மாமன்னன் ராஜராஜசோழன் கி.பி.1010-ம் ஆண்டு கட்டினான். இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டீகேஸ்வரர், முருகர், நடராஜர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த கோவிலுக்கு நுழையும் இடத்தில் கேரளாந்தகன் கோபுரம் உள்ளது. அதைத்தொடர்ந்து ராஜராஜன் கோபுரம் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 214 அடி உயர விமான கோபுரம் உள்ளது. கோவிலில் உள்ள கேரளாந்தகன், ராஜராஜன், விமான கோபுரம் அனைத்தும் கடந்த 2008-ம் ஆண்டு புதுப்பிக்கும்பணி நடைபெற்றது. அப்போது கோவில் கோபுரத்தில் இருந்த பாசிகள், அழுக்குகள், பறவைகளின் எச்சம் போன்றவை சுத்தப்படுத்தப்பட்டு பின்னர் சுதை வேலைகள் நடைபெற்றன.
    தஞ்சை பெரியகோவிலின் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து கோவிலில் பல்வேறு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கோவிலின் மேற்கு திருச்சுற்று மண்டபம் மற்றும் வடக்கு திருச்சுற்று மண்டபத்தில் சிவலிங்கங்கள் உள்ளன. இந்த சிவலிங்கத்தை யாரும் தொடாமல் இருப்பதற்காக மரக்கட்டைகளால் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்புகளின் உயரம் 3 அடியாக இருந்ததால் பக்தர்கள் அதன் உள்ளே சென்று விடுகின்றனர். அதனால் தடுப்புகளை உயர்த்தி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
    அதன்படி இந்திய தொல்லியல் துறையினர் தற்போது 6 முதல் 6½ அடி உயரம் வரை மரக்கட்டைகளால் தடுப்புகளை அமைத்து வருகின்றன. மேலும் சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்யும் வகையில் ஆங்காங்கே கதவுகளும் அமைக்கப்பட்டு வருகிறது. கோவிலின் தெற்கு திருச்சுற்று மண்டபம், வடக்கு திருச்சுற்று மண்டபம், மேற்கு திருச்சுற்று மண்டபத்தில் உள்ள கதவுகளும் சீரமைக்கப்படுகின்றன.
    இதன் அடுத்த கட்டமாக 214 அடி உயர விமான கோபுரம் சுத்தம் செய்யப்படுகிறது. முதலில் விமான கோபுரமும் அதைத்தொடர்ந்து மற்ற கோபுரங்களும் சுத்தம் செய்யப்பட உள்ளன. இந்த பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட உள்ளது.

  • நரசிங்கபுரம் பெருமாள் கோயிலில் திருமஞ்சனம்…

    திருவள்ளூர் அருகே நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் சுவாதி நட்சத்திர தினத்தையொட்டி, உற்சவருக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பழைமைவாய்ந்த லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில், பெருமாள் பிறந்த சுவாதி நட்சத்திர தினத்தன்று மாதந்தோறும் உற்சவருக்கு திருமஞ்சன நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இந்த மாதத்துக்கான திருமஞ்சன நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் இரவு முதலே திருக்கோயில் வளாகத்தில் குவிந்தனர். பின்னர் அதிகாலை 5.30 மணிக்கு கோ பூஜை, யாக பூஜையுடன் திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பக்தர்கள் நெய் விளக்கேற்றி, திருக்கோயில் வளாகத்தை சுற்றி வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதையடுத்து, உற்சவர் நரசிம்ம பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதியுலா வந்தார்.

  • மண்டைக்காடு பகவதி கோவிலில் மாசி கொடை விழா…

    பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், மாசி கொடை விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு, கேரள பெண்கள், விரதமிருந்து இருமுடி கட்டு ஏந்தி வருவர்.கடலில் குளித்து, அம்மனை வழிபடுவ தால், இது பெண்களின் சபரிமலை என, அழைக்கப்படுகிறது.இங்கு, மாசி கொடை விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மேல்சாந்தி, சட்டநாதன் குருக்கள் கொடியேற்றினார்.தொடர்ந்து, தீபாராதனை நடைபெற்றது.௯ம் தேதி இரவு, பெரிய படுக்கை பூஜையும், 12ம் தேதி இரவு, பெரிய சக்கர தீவட்டி ஊர்வலமும் நடக்கிறது. 12ம் தேதி நள்ளிரவு, ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

  • ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் 30 லட்சம் பேர் பங்கேற்ற பொங்கல் விழா

    பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் உலக பிரசித்திபெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு மாசி மாத பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தப் பொங்கல் வழிபாட்டில் தமிழகம் மற்றும் கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். கோவலன் மரணத்தை தொடர்ந்து நீதி கேட்டு மதுரையை எரித்து கோவத்துடன் கொடுங்கலூர் சென்று வானுலகம் அடையுமுன் கண்ணகி வந்த இடம் தான் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஆற்றுக்கால் என்னும் பகுதி. இங்கு கேரளா மக்கள் பகவதி அம்மன் என்ற பெயரில் கண்ணகிக்கு கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர். ‘பெண்களின் சபரிமலை’ என அழைக்கப்படும் இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் நடைபெறும் திருவிழாவையொட்டி பொங்கல் வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த பொங்கல் திருவிழாவில் கலந்துகொள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வருகின்றனர். இங்கு 10 கிலோமீட்டர் சுற்றளவில் பொங்கல் வைக்கப்படும். பல லட்சம் பெண்கள் குவிந்து வழிபாடு செய்யும் இந்த ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் வழிபாட்டில் கடந்த 1997 ஆம் ஆண்டு பதினைந்து லட்சம் பெண்கள் மற்றும் 2009-ஆம் ஆண்டு 25 லட்சம் பெண்கள் பொங்கலிட்டு வெளிப்பட்டது உலக சாதனையை ஏற்படுத்தி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. காலை 10.15 மணிக்கு கோயில் தந்திரி குழிக்காடு வாசுதேவன் பாட்டதிரிப்பாடு ஆலய ஸ்ரீகோயிலில் இருந்து தீபம் எடுத்து வந்து, முதலில் பண்டார அடுப்பில் பற்ற வைத்து, பொங்கல் வழிபாட்டை துவங்கி வைத்தார். அதன் பின் அனைத்து அடுப்புகளிலும் நெருப்பு பற்ற வைக்கப்பட்டது . திருவனத்தபுரம் நகரப்பகுதி முழுவதுமாக லட்சகணக்கான பெண்கள் பொங்கல் வழிபாடு நடத்தியதால் நகர் பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணபட்டது. மதியம் 2.15 நிவேத்திய பூஜையுடன் பொங்கல் வழிபாடு நிறைவடைந்தது.