Category: கோவில்கள்

கோவில்கள்

  • மீனாட்சி அம்மன் கோயில் உள்ளே செல்போன் தடை!

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உள்ளே இன்று முதல் செல்பேசி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி பெரும் தீ விபத்து ஏற்பட்டு அங்கு இருந்த கடைகள் முழுவதும் எரிந்து நாசமானது. இதனையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக இனி கோவிலின் உள்ளே மொபைல் போன் எடுத்துச்செல்ல தடைவிதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கோவிலில் பக்தர்களின் இடையூறு, அமைதியான தரிசனம், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக கோயிலுக்குள் செல்பேசி கொண்டு செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. செல்பேசி எடுத்து வரும் பக்தர்கள் அதை பாதுகாப்பாக வைப்பதற்காக வசதி வடக்கு மற்றும் மேற்கு கோபுரவாசலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு 1 செல்பேசிக்கு 10ரூ கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

  • 100 சாமிகளுக்கு கடலில் தீர்தவாரி…

    கடலூர் மாவட்டம். பெரியகுப்பம். மற்றும் கிள்ளையில் மாசிமக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த ஆண்டு நடைபெற்ற மாசிமக திருவிழாவில் பூண்டி யாங்குப்பம், நீராழி, கம்பிளிமேடு, ஆலபாக்கம், அகரம், வழதளம்பட்டு, தோப்புகொள்ளை, கீழ் பூவாணி குப்பம், பெரிய காட்டுசாகை, உள்பட 100-க்கு மேற்பட்ட சாமிகள் டிராக்டடர் மூலம் பெரியகுப்பம் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் ஏராளமான பொதுமக்கள் பெரியகுப்பம் கடலில் புனித நீராடினார்கள். அதேபோல கிள்ளையில், மாசிமக திருவிழா சிறப்பாக நடந்நது. கிள்ளை, தைக்கால், சிங்காரகுப்பம், மாணம் பாடி, பொன்னந்திட்டு, கீழச் சாவடி உள்பட இருபதுக்கும் மேற்பட்ட சாமிகள் டிராக்டடரில் ஊர்வலமாக வந்து முழக்குதுறை கடலில் தீர்தவாரி நடந்தது. மாசிமக திருவிழாவில் – ஏராளமான பக்தர்கள் முழக்குதுறை கடலில் புனித நீராடினார்கள்.

  • மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா…. ஏப்ரல் 18-ல் கொடியேற்றம்

    உலகபுகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா ஏப்ரம் 18-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏப்ரல் 27-ல் திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. சித்திரைத் திருவிழா நடைபெறும் நாட்களில் சுவாமியும், அம்மாளும் தினமும் இருவேளை மாசி வீதிகளில் உலா வரும் காட்சி நடைபெறும். சித்திரைத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • புனிதம் வாய்ந்த குடந்தை மகாமக திருக்குளம்

    வட மாநிலங்களில் அலகாபாத், ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வாரில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புண்ணிய நதிகளில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக பெருவிழா தமிழகத்தின் பெருமளவு பக்தர்கள் குவியும் விழாவாக இருக்கிறது. இப்பெருவிழா ஜீவநதிகளின் பாவங்களையும், முப்பத்துமுக்கோடி தேவர்களின் பாவங்களையும் போக்கி புண்ணியம் தருவதாகும். மகாமக தீர்த்தவாரியின்போது கங்கை,யமுனை,நர்மதா, சரஸ்வதி, காவேரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய 9 புண்ணிய நதிகள் சங்கமமாகி நீராட வருவதாகவும், இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன்,வாயு, குபேரன், ஈசானன் ஆகிய அஷ்ட திக்கு பாலகர்களும், பிரம்மதேவனால் ஏற்படுத்தப்பட்ட பிரம்ம தீர்த்தம், நாக, தீர்த்தம் ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் இங்கு புனித நீராடவருவதாகவும் ஐதீகம். எனவே குடந்தை மகாமக திருக்குளம் புனிதத்தன்மை வாய்ந்ததாக போற்றப்படுகிறது. இந்தக் குளத்திற்குள் 20 தீர்த்தக்கிணறுகளும், குளத்துடன் சேர்த்து 21 தீர்த்தங்களாகிறது. குளத்தின் 4 கரைகளை சுற்றிலும் 16 சோடச லிங்கங்களும் உள்ளன. புனித குளமான மகாமக குளம் சுமார் ஆறரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. சதுரமாகவும் இல்லாமல், செவ்வகமாகவும் இல்லாமல் அரூபமாக காணப்படும். குளத்திற்கு அரசலாற்றிலிருந்து தண்ணீர் வருவதற்கும், குளத்தின் தென் கிழக்கு மூலையில் தண்ணீரை வெளியேற்ற வடிகாலும் உள்ளது. அதனால் அங்குள்ள தெருவிற்கு வடிவாய்க்கால் தெரு என்ற பெயரும் உண்டு.

  • திருவெண்காடு கோயிலில் இந்திரப் பெருவிழா கொடியேற்றம்…

    திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் சுவாமி கோயிலில் வருடாந்திர இந்திரப் பெருவிழா உத்ஸவ கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    சீர்காழி அருகேயுள்ள திருவெண்காட்டில் உள்ளது பிர்ம்மவித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேசுவரர் சுவாமி கோயில். இக்கோயிலில் அகோரமூர்த்தி சுவாமி, நவக்கிரகங்களில் ஒன்றான ஞானகாரகன் என்றழைக்கப்படும் புதன் பகவான் தனிதனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். காசிக்கு இணையான 6 கோயில்களில் முதன்மையானது இக்கோயில் ஆகும். இக்கோயிலில் சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து விழுந்த தீப்பொறியிலிருந்து உருவான அக்னி, சந்திரன், சூரியன் ஆகிய முக்குளங்கள் உள்ளன. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் 10 நாள்கள் இந்திரப் பெருவிழா உத்ஸவம் நடைபெறுவது வழக்கம்.
    நிகழாண்டு உத்ஸவம் பூர்வாங்க பூஜைகள், விக்னேஸ்வரபூஜையுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியது. தொடர்ந்து, பஞ்சமூர்த்தி மகா மண்டபம் பிரவேசம் நடந்தது. உற்தவ கொடியேற்றம் நடைபெற்றது. 27-ஆம் தேதி கைலாச வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், 28-ஆம் தேதி பிற்பகல் சுவேதராஜா மணிக்கர்ணிகையில் ஸ்நானம் செய்து திரும்புகையில், தர்மராஜா வழிமறித்தல் பின்னர் எமசம்ஹாரம் நடைபெறுகிறது.
    மார்ச் 1-ஆம் தேதி அகோரமூர்த்தி மகாமண்டபம் பிரவேசமும், 2-ஆம் தேதி அகோரமூர்த்திசுவாமி நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளல், இரவு மருத்துவன் இம்சையால் நந்திகேஸ்வரர் வந்து தரிசிப்பதும், மருத்துவ சம்ஹாரமும், வெள்ளி ரிஷப வாகன காட்சி, சகோபுரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடைபெறவுள்ளது. 4-ஆம் தேதி பிர்ம்மவித்யாம்பிகை அம்மன், சுவேதாரண்யேசுவரர் சுவாமி திருக்கல்யாண உத்ஸவம், இரவு முத்துப்பல்லக்கில் காட்சி நடைபெறுகிறது.
    மார்ச் 5-ஆம் தேதி பிட்சாடனார் இந்திர விமானத்திலும், 63 நாயன்மார்களுடன் வீதியுலா காட்சியும், 6-ஆம் தேதி விநாயகர், முருகன், சுவாமி-அம்பாள் திருத்தேரில் எழுந்தருளும் தேர் திருவிழா நடைபெறுகிறது. 7-ஆம் தேதி கொடியிறக்கம், 9-ஆம் தேதி சந்திர தீர்த்தத்தில் தெப்போற்சவம் நடைபெறவுள்ளது.

  • மெய்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோயிலில் கிழக்கு திசையில் வடக்கு நோக்கி பிரசித்தி பெற்ற மெய்கண்ணுடையாள் அம்மன் கோயில் உள்ளது. விராலிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் மெய்கண்ணுடையாள் அம்மன் சிலைக்கு ஆரம்ப காலத்தில் மேற் கூரை அமைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தி வந்தனர். வேண்டுவோருக்கு வேண்டியதை கொடுத்து வரும் அம்மனை கிராம காவல் தெய்வமாக வணங்கி வருகின்றனர். வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பக்தர்கள் அம்மனுக்கு புதிய கோயில் கட்ட முடிவு செய்தனர். அப்போது மூல ஸ்தானத்தை விரிவுபடுத்த அம்மனின் சிலையை நகர்த்த முயன்ற போது அம்மன் சிலையை நகற்ற முடியவில்லை.

    எனவே சிலையை அப்படியே வைத்து சுற்று புறத்தினை மட்டும் புதுப்பித்துள்ளனர். விராலிமலை அருகில் உள்ள வேலூர் பிள்ளை பண்ணை குடும்பத்தினரே பூஜைகளை செய்து வந்துள்ளனர். பின்னர் விராலிமலையில் அதிகமாக வாழும் இசைவேளாளர் குடும்பத்தினர் பூஜைகளை செய்து பராமரித்து வந்தனர். நுழைவு வாயில ராஜகோபுரம் விராலிமலையை சேர்ந்த நாச்சாரம்மாள் என்பவராலும், அடிதளம் ஊர் மக்களாலும் கோயில் பிரகாரத்தில் மேற்கில் கிழக்கு நோக்கி விநாயகர் கோயிலும் கட்டப்பட்டு சுற்று சுவர் எழுப்பட்டுள்ளது. தற்போது இக்கோயிலை அறநிலைய துறை நிர்வகித்து வருகிறது. விராலிமலை முருகன் கோயிலில் பூஜையை முடித்த பின்னர் தான் அர்ச்சகர்கள் இங்கு வந்து அம்மனுக்கு தினமும் மதியம் மற்றும் மாலை நேரத்தில் பூஜை செய்து வருகின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத்தில் பூச்சொரிதல் விழாவும், சித்திரை திருவிழாவும் நடைபெறுகிறது. விழாவின் போது பக்தர்கள் மாவிளக்கு, பொங்கல் வைத்தும், அலகு குத்தி, காவடி எடுத்து தீமிதித்து வேண்டுதலை நிறைவேற்றுவர். மார்கழி மாதம் முதல் வெள்ளி அல்லது செவ்வாய் கிழமைகளில் துவங்கும் குத்து விளக்கு பூஜை தை முதல் நாள் வரை இரு வேளையும் நடைபெறும். இதில் ஆயிரக்கனக்காக பெண்கள் கலந்துகொள்வர். மார்கழி மாதம் இரவு தினமும் ஊச்சாதுறை வழிபாடு நடைபெறும். மேலும் அம்மன் கோயிலில் நடைபெறும் அனைத்து நவராத்திரி மற்றும் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும். இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையொட்டி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் தெப்பகுளத்தில் இருந்து புனித நீர் ஊர் வலமாக எடுத்து வரப்பட்டு யாக சாலை பூஜைகள் துவங்கியது. கணபதி ஹோமம். நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், தன பூஜை யாகசாலை பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து இன்று காலை 9.30க்கு மேல் புனித நீர் மங்கள இசையுடன் கோயிலை வலம் வந்து கும்பத்தில் புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்ற கும்பாபிஷேகம் பிரமாண்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மெய்கண்ணுடையாள் அம்மன் மற்றும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜை நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில்ட விராலிமலை மற்றும் சுற்று வட்டார கிராமமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

  • திருப்போரூர் முருகன் கோயிலில் பிப். 26-ல் தேரோட்டம்

    திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவிலில் மாசிமாத பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. 12 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சிகளாக வருகின்ற 24-ந்தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடும், 26-ந்தேதி தேரோட்டமும் நடக்கிறது. மார்ச் 1-ந்தேதி இரவு தெப்பல் உற்சவமும், 3-ந்தேதி மாலை வேடர்பறிஉற்சவமும், 4-ந்தேதி அதிகாலை 7.30 மணிக்குமேல் 9.00 மணிக்குள் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. தினமும் காலை, மாலை வேளைகளில் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் கிளி, பூத, வெள்ளிமயில், தங்கமயில், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வானவேடிக்கையுடன் வீதி உலா வருவார்.

  • ராகு – கேது தோஷம் நீக்கும் திருப்பாம்புரம்

    பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 59-வது தலமாக விளங்கும் திருப்பாம்புரம், ஒரு மிகச் சிறந்த ராகு – கேது தோஷத்துக்கான பரிகாரத் தலம். ஆதிசேஷன், ராகு, கேது மற்றும் அஷ்டமா நாகங்கள், சிவராத்திரி மூன்றாம் ஜாமத்தில் இத்தல இறைவனை வழிபட்டு தங்கள் சாபம் நிவர்த்தியாகப் பெற்ற தலம். ஆதிசேஷனுடைய மூலவிக்கிரகமும், உற்சவ விக்கிரகமும் கோயிலில் உள்ள தலம். திருப்பாம்பரம் ஒரு ராகு – கேது தோஷத்துக்கான நிவர்த்தி தலம். குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன், திருப்பாம்பரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்பது தலமகாத்மியம். ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக, அதாவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு – கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது. சிவராத்திரி அன்று இரவில், ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் மூன்றாவதாகும். மேலும் பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றோர் பூஜை செய்த தலம்; இந்திரன் சாபம் நீங்கிய தலம்; கங்கை பாவம் தொலைந்த தலம்; சந்திரன் பழி நீங்கிய தலம் என்று எண்ணற்ற பெருமைகளைக் கொண்டு திருபாம்புரம் ஒரு சிறந்த தலமாக இருக்கிறது. ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசை நடந்தால், 7 வருட கேது தசை நடந்தால், ஜாதகத்தில் லக்னத்துக்கு 2-ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ஜாதகத்தில் லக்னத்துக்கு 8-ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ராகு புக்தி கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க இத்தலத்துக்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி, கோவில் அர்ச்சகர் வழி பரிகாரங்கள் செய்து, தோஷ நிவர்த்தி செய்துகொள்ளலாம். ராகு – கேது தோஷங்கள் நீங்க, கல்லால் ஆன நாக வடிவங்களை இக் கோயிலில் உள்ள வன்னி மரத்தடியில் பிரதிஷ்டை செய்து வழிபடுகிறார்கள்.

  • சூரியன் சாபம் நீங்கப் பெற்ற நாகேஸ்வர சுவாமி கோயில்

    கும்பகோணத்தில் சோழர் காலத்தில கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்கது பெரியநாயகி சமேத நாகேஸ்வர சுவாமி கோயில். கோயிலில் சூரியன் தனது ஒளிமங்கி அமாவாசை சந்திரனை போல கலங்கி நின்ற போது அசரிரீயின் கூற்றுப்படி சூரிய தீர்த்ததை உண்டாக்கி அதில் நீராடி நாகேஸ்வரரை வழிபட்டதால் சாபம் நீங்கப் பெற்றார். அது முதல் ஆண்டுதோறும் சித்திரை 11,12,13 ஆகிய தேதிகளில் சூரியன் தன் கதிர்களை இறைவன் மீது படரச்செய்து பூஜிக்கும் காட்சி கண்கொள்ள காட்சியாகும். இதுவே சூரிய பூஜையாகும். ஆண்டுக்கு குறிப்பிட்ட 3 தினங்களில் மட்டும் சூரிய ஒளிகதிர்கள் மூலஸ்தானம் வரை சென்று சிவலிங்கம் மீது விழும் வகையில் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரியனுக்கு ஒளி கொடுத்ததால் கும்பகோணம் நகருக்கு பாஸ்கர சேத்திரம் என பெயரும் ஏற்பட்டது.

  • ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா…

    பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா மார்ச் 22-ந் தேதி தொடங்குகிறது. திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பிரசித்தி பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஒரே நேரத்தில் இந்த கோவிலில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு பொங்கலிட்டு வழிபாடு நடத்துவது, உலக சாதனையாகி ‘கின்னஸ்‘ புத்தகத்திலும் இடம் பிடித்து இருக்கிறது. எனவே இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் திருவிழா மிகவும் சிறப்புக்குரியதாகும். 1997-ம் ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி நடந்த பொங்கல் வழிபாட்டில் 15 லட்சம் பெண்களும், 2009-ம் ஆண்டு மார்ச் 10-ந் தேதி நடந்த பொங்கல் வழிபாட்டில் 25 லட்சம் பெண்களும் கலந்துகொண்டு பொங்கலிட்டு வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.