Category: கோவில்கள்

கோவில்கள்

  • மண் பானை நிறைய விபூதி தோன்று அதிசயம்….

    ஈரோடு மாவட்டம், காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது. அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில், காங்கேயத்தில் உள்ளது. இரண்டு சுயம்பு மூர்த்திகள் உள்ள மிகப்பெரிய சிவஸ்தலம் இதுவாகும். 12 ஆண்டுக்கொரு முறை இங்குள்ள சுனையில், விபூதி நிரம்பிய மண் கலயம் மிதந்து வரும் அற்புத நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த பகுதியிலேயே மிகப்பெரிய தீபஸ்தம்பம் உள்ள திருத்தலம் இது. பச்சை ஓட்டுடன் சிவன் எழுந்தருளியதால் இத்தல இறைவன் “பச்சோட்டு ஆவுடையார்’ என அழைக்கப்படுகிறார். ஆனால், கல்வெட்டுக்களில் “பச்சோட்டு ஆளுடையார்’ என காணப்படுகிறது. தலத்தின் நாயகி “பச்சை நாயகி’, “பெரியநாயகி’ என்ற திருப்பெயர் தாங்கியுள்ளாள். கோயிலின் பின்புறம் சிவன் தனது நகத்தால் கீரிய அற்புத சுனை உள்ளது. “நிகபுஷ்கரணி’ என்ற பெயர் பெற்ற இத்தலம் கங்கையை போன்று பெருமை பெற்றது. 12 ஆண்டுக்கொரு முறை இங்குள்ள சுனையில், விபூதி நிரம்பிய மண் கலயம் மிதந்து வரும் அற்புத நிகழ்ச்சி நடந்து வருகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் “குடம்’ அளவுக்கு இருந்த மண் கலயம் நாளடைவில் சுருங்கி தற்போது “சிறிய செம்பு’ அளவில் மிதந்து வருகிறது. இந்த மண் கலய விபூதி கிடைப்பதற்கரிய மாபெரும் மருந்தாகும். இதை உடலில் பூசினாலும், சிறிதளவு சாப்பிட்டாலும் தீராத நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம். பார்வதி இங்கு தவமிருந்ததால், இப்பகுதி பார்வதிபுரம் என வழங்கப்படுகிறது.

  • 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தரிசனம் தரும் அத்தி வரதர்

    காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் ஆனந்ததீர்த்தத்தின் உள்ளே இருக்கும் ஆதி அத்தி வரதரை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் தரிசிக்கலாம். ஏனெனில் அவர் இருப்பது, நம் கண்ணனுக்கு புலபடாத தண்ணிருக்கு அடியில். கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள இரண்டு குளங்களில் தென்திசையில் உள்ள நீராழி மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் உள்ள ஒரு மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு இருக்கிறார் அத்தி வரத பெருமாள். இந்த குளத்தின் நீர் என்றும் வற்றுவ தில்லை ஆதலால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்பட மாட்டார். பெருமாளின் திருமேனி, மிகப்பெரிய அத்தி மரத்தால் வடித்து , பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரம்மனின் யாகத் தீயினின்று தோன்றியதால் சிறிது பின்னப்பட்டுவிட்டார். எனவே அசரீரி மூலம் தன்னை ஆனந்தத் தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்திலிருந்து சிலையை காஞ்சியில் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார். பெருமாள் பெரும் உஷ்ணத்தைத் தணிக்கவே தெப்பக் குளத்தில் வாசம் செய்கிறாராம். ஆனந்த தீர்த்தம் என்றும் வற்றாது. எனவே நீரை இறைத்து விட்டு ஆதி அத்தி வரதரை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே கொண்டு வருவார்கள். வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் சயன கோலமாக, அமிர்தசரஸ் என்னும் அந்த குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள், 40 வருடங்களுக்கு ஒரு முறை, மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலமாக எழுந்தருளி இருப்பார். வசந்த மண்டபத்தில் 10 நாட்கள் தரிசனத்துக்கு வைப்பார்கள். நின்ற கோலத்திலும், சயனக் கோலத்திலும் தரிசனம் தந்தபின் மீண்டும் அனந்தத் தீர்த்தத்தில் சயனித்து விடுவார். பக்தர்கள் மிகவும் தொன்மையான இந்த அத்தி வரதரை, உற்சவ விழா வழிபாட்டோடு, 10 நாட்கள் கண் குளிர தரிசிக்கலாம். பிறகு மீண்டும் வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் வைத்து குளத்தில் மூழ்கடிக்கப் பட்டுவிடுவார். 1939 மற்றும் 1979 ம் ஆண்டுகளில் நடந்த இந்த வைபவம் அடுத்து 2019 ம் ஆண்டு நடக்கும்.

  • நெய் உறைந்து மறைந்த அதிசய சிவ லிங்கம்….

    எத்தனையோ தலை முறையாக, வருடங்களாக ஒரு சிவலிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்து வர, அந்த நெய்யே உறைந்து சிவலிங்கத்தை மூடிவிட்டது. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ளது வடக்கும்நாதர் சிவன் கோவில். இந்த ஆலயத்தில் பல நூற்றாண்டுகளாக ஒரு சிவலிங்கத்திற்கு நெய் அபிஷேகம் செய்துவர, அந்த நெய்யே உறைந்து, சிவலிங்கத்தை மூடிவிட்டது. உறைந்த நெய்யின் உயரமே ஒரு நான்கு அடி உயரம் இருக்கும். இந்த நெய் லிங்கத்தைச் சுற்றி எத்தனையோ விளக்குகள் ஏற்றிவைத்த சூட்டிலும், வெயில் காலத்தில் உண்டாகும் வெப்பத்திலும் கூட நெய் உருகுவதில்லை. உறைந்த நெய்யின் சிறு அம்சத்தை பிரசாதமாக வாங்கி உண்ண அது எந்தவித வியாதியையும் மாற்றுகிற அரு மருந்தாக திகழ்கிறது. இன்றும் தொடர்ந்து நெய் அபிஷேகம் நடந்து கொண்டே இருக்கிறது. உறைந்த நெய்யின் சிறு துளியை பிரசாதமாக வாங்கி உண்டால், எந்த வித நோயும் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

  • தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா

    பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா டிசம்பர் 24-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் விமர்சையாக நடைபெற உள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா டிசம்பர் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் அதாவது ஜனவரி 2 ஆம் தேதி வரை மார்கழி திருவிழா நடைபெறுகிறது. விழாவின் முதல் நாளான 24-ந் தேதி காலை 6 மணிக்கு மாணிக்க வாசகர் பூஜை நடைபெறும். காலை 7.30 மணிக்கு மேல் தாணுமாலய சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் தெற்குமண்மடம் ஸ்தானிகர் கொடியேற்றி வைக்கிறார். வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகளை செய்கிறார். தொடர்ந்து பக்தி இன்னிசையும், திருமுறை பெட்டக ஊர்வலமும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு தேவார இன்னிசையும் அதனைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சியும் நடக்கிறது. 25-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வருதல், காலை 8 மணிக்கு பூங்கோவில் வாகனத்தில் சந்திரசேகரர் திருவீதி உலா வருதல், மாலை 4 மணிக்கு சமய சொற்பொழி, இரவு 9.30 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதல் ஆகியவை நடைபெறும். 26-ந் தேதி காலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதல், இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு, 10.30 மணிக்கு சாமி திருவீதி உலா வரும் போது கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசாமி, வேளிமலை குமாரசாமி தனது தாய் தந்தையர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை காணவரும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. 27-ந் தேதி காலை 8 மணிக்கு பூத வாகனத்தில் சாமி வீதி உலா வருதலும், மாலை 6.30 மணிக்கு சுகி சிவத்தின் பட்டிமன்றமும், இரவு 10 மணிக்கு பறங்கி நாற்காலி வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதலும் நடைபெறும். 28-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனமும், காலை 6 மணிக்கு வீர மார்த்தாண்ட விநாயகர் திருக்கோவில் முன் சாமி அம்பாள் பெருமாள் மும்மூர்த்திகளை கருடன் வலம் வரும் அற்புத காட்சியும், மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து சாமிக்கு அஷ்டாபிஷேகமும், இரவு 7.30 மணிக்கு சுகிசிவத்தின் ஆன்மிக சொற்பொழிவும், இரவு 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதலும் நடக்கிறது. 29-ந் தேதி காலை 8 மணிக்கு வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதல், மாலை 5 மணிக்கு யானை ஸ்ரீபலி, இரவு 10 மணிக்கு இந்திர வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதல் ஆகியவை நடைபெறுகிறது. 30-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பல்லக்கில் சாமி திருவீதி உலா வருதல், இரவு 8 மணிக்கு மகாராஜன் குழுவினரின் இன்னிசையும், 10.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதலும் நடக்கிறது. 31-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா வருதலும், பேரம்பலம் திருக்கோவில் முன் நடராஜ பெருமான் ஆனந்த திருநடன காட்சியும், இரவு 8 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா வருதலும், 8.30 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. ஜனவரி 1-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன. இரவு 7 மணிக்கு போக்குவரத்து ஊழியர்களின் சிறப்பு நிகழ்ச்சியான மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதலும், நள்ளிரவு 12 மணிக்கு சப்த வர்ண காட்சியும், திருவிழாவின் இறுதி நாளான 2-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆரூத்ரா தரிசனமும், 5 மணிக்கு நடராஜ மூர்த்தி திருவீதி உலா வருதலும், இரவு 9 மணிக்கு ஆறாட்டு விழாவும் நடக்கிறது.

  • அப்பர், சுந்தரர், சம்பந்தரால் பாடல்பெற்ற திருப்பாசூர் சிவன் கோயில்…

    அசுரர்களான மது கைடபர்களை அழித்த மகாவிஷ்ணு, அவர்களை அழித்ததால் தனக்கு ஏற்பட்ட தோஷங்களை நீக்க மூங்கில்கள் அடங்கிய வனத்தில் சிவபெருமானைப் பூஜிக்கிறார். அவருக்கு அருள் பாலிக்க மூங்கில்களுக்கிடையே சிவபெருமான் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளுகிறார். பாசூர் என்றால் மூங்கில். மூங்கில்களுக்கு இடையே தோன்றியதால் பாசூர் நாதர் என்று போற்றப்படுகிறார். இந்தத் தலமும் திருப்பாசூர் என்று வழங்கப்படுகிறது. இறைவனுக்கு வாசீஸ்வரர் என்கிற பெயரும் உண்டு. இவ்வழியே செல்லும்போது, மூங்கில்களுக்கிடையே இருக்கும் சிவலிங்கத்தைக் கண்ட கரிகாலச் சோழன் இக்கோவிலை எழுப்பினான் என்று சொல்லப்படுகிறது. சோழன் கரிகால் பெருவளத்தானின் சிற்றரசராக இருந்த குறும்பன் என்பவர் கப்பம் கட்ட மறுக்க, இறைவன் நந்தீஸ்வரரை அனுப்பி குறும்பனுக்கு உதவியாக இருந்த காளிக்குப் பொன் விலங்கிட்டு அழைத்து வந்து கப்பம் கட்டச் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்த தலம் என்று தலபுராணம் கூருகிறது. சோழர் கால கல்வெட்டுகளும் இக்கோவிலில் காணக்கிடைக்கின்றன. சுவாமி சன்னிதியின் வலப்புறம் அம்மன் சன்னிதி இருப்பது இத்தலத்தின் சிறப்பாகும். இவ்வாறு இருப்பது ஆக்கும் சக்தியை அளிக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்படுகிறது. இறைவி தங்காதளி அம்மன். இரு சன்னிதிகளும் தனித்தனி விமானங்களுடன் அமைந்துள்ளன. சொர்ணகாளிக்கும் தனி சன்னிதி அமைந்துள்ளது. அம்பாளே இங்கு இறைவனைப் பூஜை செய்துள்ளதால், முதல் பூஜை அம்பாளுக்கு நடைபெறுகிறது. கருவறை வாயிலில் இடப்புறம் 11 விநாயகர் மூர்த்தங்களுடன் ஏகாதச விநாயகர் சபை நம்கண்களைக் கவர்ந்திழுக்கிறது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடப்பெற்றத் திருத்தலமாகும் இது. திருவள்ளூரிலிருந்து திருத்தணி செல்லும் சாலையில், சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில், கடம்பத்தூருக்குப் பிரிந்து செல்லும் சாலையில் உள்ளது இத்தலம்.

  • நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை

    ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை சார்த்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரேஉள்ளது இந்த கோயில். இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெட்டவெளியில் மழையிலும், வெயிலிலும் பக்தர்க ளுக்கு அருள்பாலித்து வருகிறார் நாமக்கல் ஆஞ்சநேயர். ஆனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சிலைக்கு 1 லட்சத்து 8 வடைகளால் ஆன மாலை சார்த்தப்படுகிறது. மேலும் காலை முதல் பல்வேறு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. அபிஷேகங்கள் முடிந்தது ஆஞ்சநேயருக்கு சார்த்தப்பட்ட வடை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

  • மூல நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் செல்ல வேண்டிய மப்பேடு ….

    திருவாலங்காட்டில் சிவபெருமான் ஆனந்த நர்த்தனம் புரிந்தபோது சிங்கி என்கிற நந்தி பகவான் மிருதங்கம் வாசிப்பதிலேயே தன் கவனம் முழுவதையும் செலுத்தியதால், அவரால் சிவனின் நடனத்தைக் காணமுடியாமல் போனது. ஆயினும் சிவபெருமானின் ஆனந்த நர்த்தனத்தைக் காண விரும்பி தவம் மேற்கொண்டு, மெய்ப்பேடு என்கிற இவ்விடத்தில் சிவனைப் பூஜை செய்து வந்தார். சிங்கி என்கிற அந்த நந்தியின் பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் அவ்விடத்தில் தோன்றி ஆனந்த நர்த்தனத்தை மீண்டும் ஆடிக்காட்டியதால் இத்தலத்தின் இறைவனுக்கு சிங்கீஸ்வரர் என்று பெயர். அம்பாள் மணம் மிகுந்த மலர்களை விரும்புபவள் ஆதலால் புஷ்ப குஜாம்பாள் என்று அழைக்கப்படுகிறாள். Singeeswarar Temple Mappedu. Veenai Aanjaneyarjpg மூல நக்ஷத்திரத்தில் பிறந்தவரான ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு அதே மூல நக்ஷத்திர தினத்தன்று சரஸ்வதி அவருடைய நாவில் சிங்கநாத பீஜாக்ஷர மந்திரங்களைப் பொறித்தார். மேலும், ஆஞ்சனேயரும் அதே மூல நக்ஷத்திர தினத்தன்று இத்தலத்தில் சிங்கநாதம் இசைத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றார். இத்தலத்தில் ஆஞ்சநேயர் வீணையுடன் இசைக்கலைஞராகக் காட்சி தந்து அருள் பாலிக்கிறார். அவர் இத்தலத்தில் அமிர்தவர்ஷணி ராகத்தை இசைத்ததாகவும் தலபுராணம் சொல்கிறது. எனவே மூல நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய தலமாகவும் இது விளங்குகிறது. மூல நக்ஷத்திரத் தினத்தன்று இங்கே வந்து ஆஞ்சனேயரை வழிபடுவது நலமளிக்கும்.

  • சனி தோஷம் நீக்கும் திருவாலங்காடு சிவன் கோயில்

    திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில், நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் இரத்தின சபையாகத் திகழ்கிறது. காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார்.
    திருவள்ளூரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவாலங்காடு மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலம். சென்னை திருப்பதி சாலையில் திருவள்ளூர் தாண்டியவுடன், திருத்தணிக்கு முன்பாகவே இடதுபுறம் அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ளது. சிவ பெருமானுக்கான ஐந்து சபைகளில் இது ரத்தினசபை ஆகும். காரைக்காலம்மையாருக்கு நடராஜப் பெருமான் காட்சி தந்து ஆட்கொண்ட தலமாகும் இது. இத்தலத்தில் இறைவனின் காலடியில் காரைக்கால் அம்மையார் இன்றும் வாழ்வதாக ஐதீகம். காளிக்கும் சிவபெருமானுக்கும் இடையே நர்த்தனப் போட்டி ஏற்பட்டபோது, ஊர்த்வ தாண்டவத்தை ஆடி சிவபெருமான் காளியை அடக்கியது இத்தலத்தில்தான். இறைவன் வடாரண்யேஸ்வரர் என்றும் ஊர்த்வ தாண்டவர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி வண்டார்குழலியம்மை. இறைவன் சுயம்பு லிங்கமாகவும், இறைவி நின்ற திருக்கோலத்திலும் காட்சிதந்து அருள்பாலிக்கின்றனர். வெளியே ஐந்து நிலை ராஜகோபுரமும் உள்ளே மூன்று நிலையுள்ள இரண்டாவது கோபுரமும் கொண்ட ஆலயம் இது. கோவிலுக்குள் நுழைந்தவுடன் இருக்கும் மண்டபத்தில் நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. கோபுரங்களிலும் கோவில் உட்புறங்கள்லும் அழகான சுதைச்சிற்பங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. காரைக்கால் அம்மையார் வரலாறு, மீனாக்ஷி திருக்கல்யாணம், இறைவனின் ஐந்து சபைகள் ஆகியவை சிற்பங்களாகக் காட்சி தருகின்றன. உற்சவ மூர்த்திகளாக சிவபெருமானின் ஊர்த்வ தாண்டவ கோலமும், சிவகாமி அம்மையாரும், காரைக்கால் அம்மையாரும் நம்மைக் கவர்கின்றனர். இத்தலத்தில் பைரவர் வாகனமின்றி காட்சி தருகிறார். ஸ்படிக லிங்கமும், மரகத லிங்கமும் இங்கே விமரிசையாகப் பூஜிக்கப்படுகின்றன. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற திருத்தலம் இது. இத்திருத்தலத்தில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் (திருவாலங்காடு செப்பேடுகள்) சம்ஸ்க்ருதம் மற்றும் தமிழ் மொழிகளில் பொறிக்கப்பட்ட சாசனங்களில் சோழ வரலாற்றைக் கூறுகின்றன. இத்தலத்தின் வெளிப் பிராகாரத்தில் உள்ள மாந்தீஸ்வரர் சந்நிதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சனி பகவானின் இரண்டு மைந்தர்களில் ஒருவர் மாந்தி. ஒருமுறை, மாந்தி தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க திருவாலங்காடு திருத்தலம் வந்து ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, ஒரு மண்டலம் இறைவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப்பெற்றார். மாந்தி வழிபட்ட சிவலிங்கம் மாந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. ஆலயத்தில் மாந்தீஸ்வரருக்கு சிறப்புப் பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன. மாந்தீஸ்வரருக்கு பரிகார பூஜைகள் செய்வதன் மூலம், அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, ஜன்ம சனி ஆகியவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். மேலும், திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணமும் நடைபெறும். கடன் தொல்லை நீங்கி நிம்மதி ஏற்படும்.

  • சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசம்…

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசனம் டிசம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனமும் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வரும் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 28-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், 29-ஆம் தேதி வெள்ளி யானை வாகனத்தில் வீதிஉலாவும், 30-ஆம் தேதி தங்க கைலாச வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது. 31-ஆம் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரையில் வீதிஉலா வருகிறார்.
    ஜனவரி 1-ஆம் தேதி தேர்த் திருவிழாவும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. 2-ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 3-ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.

  • செல்வம் அருளும் விபூதி விநாயகர்…

    மீனாட்சி அம்மன் கோயிலில் ஏராளமான விநாயகர் சிலைகள் இருந்தாலும் முக்குறுணி விநாயகரே உருவத்தால் பெரியவர். ஒரு குறுணி என்பது 4 படி. இந்த விநாயகருக்கு 18 கிலோ பச்சரிசி மாவால் ஆன கொழுக் கட்டை விநாயகர் சதுர்த்தி நாளில் படைக்கப்படுகிறது. அந்த பெயரே இவருக்கு நிலைத்துவிட்டது. திருமலை நாயக்கர் வண்டியூரில் தெப்பக்குளம் வெட்டியபோது பூமிக்குள் இந்த விநாயகர் சிலையை கண்டெடுத்தனர். அதை மீனாட்சியம்மன் கோயிலில் அவர் பிரதிஷ்டை செய்தார். இந்த விநாயகர் முன்பு உள்ள நிலை விளக்குகளில் திருமலை நாயக்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உருவங்களை பார்க்கலாம்.
    இரட்டை விநாயகர்: மீனாட்சியம்மன் சன்னதிக்கு இடதுபுறத்திலும் பிரகாரத்திலும் இரட்டை விநாயகர் சன்னதி இருக்கிறது. இதன் தாத்பர்யம் மிகவும் அற்புதமானது. உலகில் ஆதிமூலமாக விநாயகரை கருதுகிறோம். விநாயகரை வணங்கிய பிறகே பிற தெய்வங் களை வணங்குவது மரபாக இருக்கிறது. இந்த மரபை விநாயகரும் பின்பற்ற வேண்டும் என்பதின் அடிப்படையில் விநாயகர் கூட எந்த பூஜையை தொடங்குவதாக இருந்தாலும் தன்னைத்தானே வணங்கி தொடங்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
    விபூதி விநாயகர்: தெற்கு கோபுரத்தை கடந்து உள் நுழையும் இடத்தில் பக்தர்கள் விபூதியால் அர்ச்சிக்கும் விபூதி விநாயகர் அருள்பாலிக்கிறார். மன்னர்கள் காலத்தில் யாரோ ஒரு சிற்பி, இக்கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் தாங்களே அபிஷேகம் செய்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து தரவேண்டும் என மன்னரிடம் கேட்டிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் இந்த விபூதி விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
    பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் விபூதியை அபிஷேகம் செய்கிறார்கள். இவருக்கு அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. “விபூதி’ என்றால் “மேலான செல்வம்’ என்பது பொருள். இவரை வணங்கினால், வாழும் காலத்தில் பெரும் பொருளும் வாழ்க்கைக்கு பிறகு மோட்சம் என்னும் பிறவா நிலை செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.