Category: கோவில்கள்

கோவில்கள்

  • 6 மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரியும் அதிசய சிவன் கோயில்

    6 மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரியும் அதிசய சிவன் கோயில் குஜராத் மாநிலம் கோலியாத் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. நிஸ்களங்கேஸ்வரர் என்று அழைக்கப்படும் இந்த சிவன் கோயில் கடலுக்குள்ள கட்டப்பட்டுள்ளது. இது பாதி நேரம் கடலினுள் முங்கியே காணப்படுகிறது. இந்த கோயில் கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு கீழே அமைந்துள்ளது. இத்தனை அதிசயம் நிறைந்த கோயிலை கட்டியவர்கள் பாண்டவர்கள் என்று நம்பப்படுகிறது. மகாபாரதப் போரில், பாண்டவர்கள் தங்கள் சகோதரர்களான கௌரவர்களையே கொன்றதான் ஏற்பட்ட பாவத்தைப் போக்க இப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்தியுள்ளனர். இந்த கடலுக்குள் ஐந்து சிவலிங்களை அமைத்து, அதைச் சுற்றி கோயிலையும் கட்டியுள்ளனர் பாண்டவர்கள். கடலுக்குள்ளே இருந்தால் பக்தர்கள் எப்படி செல்வார்கள் என்பதுதானே உங்கள் சந்தேகம்? இரவு பத்துமணியிலிருந்து மதியம் 1 மணி வரைக்கும் இந்த கோயில் கடலுக்கு உள்ளே மறைந்திருக்கும். மதியம் 1 மணிக்கு பிறகு கடல் மெல்ல மெல்ல உள்வாங்கி, கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு பாதை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்த வழியாக நடந்து செல்லும் மக்கள், கடலுக்கு நடுவே இருக்கும் கோயிலில் தரிசனம் செய்கின்றனர். அரிய நிகழ்வு என்றவுடன் ஏதோ வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதுபோன்று நடக்கும் என்று எண்ணிவிடாதீர்கள். அன்றாடம் இந்த நிகழ்வு நடந்துகொண்டுதான் இருக்கிறது.

  • குற்றாலநாதர் கோவிலில் தேரோட்டம்….

    குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்டத்தில் ஆயிக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி விசு திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், வீதி உலா நடந்து வருகிறது. விழாவின் 5-ம் நாளான தேரோட்டம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் காலை 8.30 மணிக்கு விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதன்பிறகு முருகன் தேரும், தொடர்ந்து குற்றாலநாத சுவாமி தேர், குழல்வாய்மொழியம்மை தேர் ஆகியனவும் வடம் பிடித்து இழுக்கப்பட்டன. காலை 11 மணிக்கு தேரோட்டம் நிறைவு பெற்றது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அக்டோபர் 15 ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 16-ம் தேதி சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 18-ம் தேதி காலை 9 மணிக்கு விசு தீர்த்தவாரி நடக்கிறது.

  • கந்தகோட்டத்தில் 25-ந்தேதி சூரசம்ஹாரம்

    சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக்டோபர் 25 ஆம் தேதி நடக்கிறது.
    கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோவிலில் 90-வது ஆண்டு கந்த சஷ்டி கோடி அர்ச்சனை பெருவிழா அக்டோபர் 20-ந்தேதி தொடங்குகிறது. இந்த நாட்களில் மூலவர், உற்சவர், தண்டாயுதபாணி, ஆறுமுகர் ஆகிய 4 சன்னதிகளில் தொடர்ந்து அர்ச்சனைகள் நடைபெற உள்ளது. விழா நடைபெறும் நாட்களில் முத்துக்குமரன் கலையரங்கில் ஆன்மிக சொற்பொழிவு, பக்தி பாடல்கள் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. 25-ந்தேதி சஷ்டி நாளில் சிறப்பு பூஜைகளும், கோடி அர்ச்சனையும் காலை முதல் மதியம் வரை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சிறப்பு பிரத்யேக புஷ்ப அலங்காரத்துடன் முத்துக்குமாரன் பவனி வந்து சூரனை சம்ஹாரம் செய்யும் விழா நடக்கிறது. 26-ந்தேதி காலை 10.15 மணி அளவில் மூலவருக்கு 108 சங்காபிஷேகமும், உற்சாக மூர்த்தி முத்துக்குமாரசாமிக்கு 108 பன்னீர் அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு முத்துக்குமாரசாமிக்கும், தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடக்க உள்ளது. இரவு 8 மணிக்கு மயில் வாகனத்தில் முத்துக்குமாரசாமி திருவீதி உலா நடக்கிறது.

  • தெலங்கானாவில் ஒரு திருப்பதி.. ரூ.1,800 கோடியில் கோயில்

    ஆந்திர மாநிலத்தில் திருமலையில் குடிகொண்டு அருள் பாலித்து வருபவர் ஏழுமலையான். இதேபோன்று தெலங்கானா மாநிலம், யாதாத்ரி பகுதியில் யாதாத்ரி குட்டா எனும் இடத்தில் பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. மலைமீது அமைந்துள்ள இக்கோயிலை திருப்பதி ஏழுமலையான் கோயில் போன்று புதுப்பிக்க வேண்டுமென தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் விரும்பினார். இதன் காரணமாக இக்கோயில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மூடப்பட்டு திருப்பணிகள் தொடங்கியது. இக்கோயிலை சுற்றிலும் உள்ள 7 கிராமங்களை அரசு கையகப்படுத்தியது. மொத்தம் 14,000 ஏக்கரில் இங்கு சுற்றுலா மையம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஆன்மீக சொற்பொழிவு மையங்கள், பக்தர்கள் தங்கும் விடுதிகள், பஸ் நிலையம், அரங்குகள், உட்பட அனைத்து வசதிகளும் உருவாகி வருகிறது. கோயில் மட்டும் 11 ஏக்கரில் உருவாகி வருகிறது. இதில் முகப்பு ராஜ கோபுரம் மட்டும் 9 நிலைகளுடன் 100 அடி உயரத்தில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோயில் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசிப்பார்கள் என்றும், ஆண்டு வருமானம் ரூ. 200 கோடியை தாண்டும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இக்கோயிலில் 2.7 கி.மீ தொலைவிற்கு கிரிவலம் செல்ல வசதியாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சாலையும் புதுப்பிக்கப்பட்டு, குடிநீர் குழாய்கள், கழிப்பறை வசதிகள், மின் வசதி போன்றவை செய்யப்பட்டு வருகிறது.

  • திருப்பதி போறீங்களா? முதலில் இத படிங்க?

    திருப்பதி திருமலை ஏழுமலையான், பக்தர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றி வைப்பவர். ஏழுமலையான் குறித்த புராணங்கள், சாத்திரங்கள், தல புராணங்கள், மற்றும் அவதார மகிமையை எடுத்துரைக்கும் பக்திப் பாடல்கள் ஆகியவை இதற்குச் சாட்சியாக விளங்கு கின்றன. திருப்பதி வேங்கடா சலபதியின் கோவிலின் செல்வச் செழிப்பையும் அதன் பிரபலத்தை எடுத்துக்காட்டுகின்றன. சரி, எந்த ஊராக இருந்தாலும், தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் பணம் செலவாகுமே? ஆனால் திருப்பதியில் அப்படி இல்லை. திருப்பதி ஏழுமலையானுக்கு குவியும் காணிக்கைகள் கொண்டு பல்வேறு திட்டங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது… அதன்படி திருமலை-திருப்பதியில் என்னவெல்லாம் இலவசம் என்று பாருங்கள்…
    • திருப்பதி பஸ்-ஸ்டாண்டின் எதிர்புறம் இருக்கும் சீனிவாசன் காம்ப்ளக்ஸில் இலவசக் குளியலறைகள், கழிவறைகள் உள்ளன. இவை தவிர நமது லக்கேஜ் பையை வைக்க, இலவச லாக்கர்களும் உள்ளன. அதில் நாம் கொண்டு போன லக்கேஜ்களை வைத்துவிட்டு, அங்கிருக்கும் ஹாலில் ஓய்வெடுக்கலாம். இரவு நேரம் என்றால் அங்கேயே படுத்து உறங்கலாம். சுத்தமாகவும் சிறப்பாகவும் அவை பராமரிக்கப்படுகின்றன. கீழ்த் திருப்பதியிலிருக்கும் கோவிந்தராஜ சுவாமி கோயில், அலமேலு மங்காபுரம் ஆகிவற்றுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வரலாம்.
    • ரயிலில் வருபவர்களுக்கு வசதியாக ரயில் நிலையம் எதிரிலிருக்கும் விஷ்ணு நிவாஸத்திலும் இதே போல் வசதிகள் உள்ளன.
    • கீழ்த் திருப்பதியிலிருந்து மேல் திருப்பதிக்கு நடந்துசெல்ல விரும்புபவர்களுக்கு வசதியாக அலிபிரிக்கும், ஶ்ரீவாரிமெட்டுக்கும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை இலவச பஸ் வசதி உண்டு.
    • திவ்ய தரிசனம் செய்ய, நடந்தே மலையேறி வருபவர்களுக்கு வசதியாக அவர்கள் கொண்டுவரும் லக்கேஜ்களை இலவசமாகக் கொண்டு செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு லட்டு ஒன்று இலவசமாக வழங்கப்படுகிறது.
    • திருமலையில் பக்தர்களின் வசதிக்காக பல இடங்களிலும் இலவச லாக்கர் வசதி உண்டு. இதில் நம் லக்கேஜ்களை வைத்துச் செல்லலாம். ஆனால், மிகவும் காஸ்ட்லியான நகைகள், அளவுக்கு அதிகமான பணம் இவற்றைத் தொடக்கத்திலேயே தவிர்த்துவிடுங்கள்.
    • திரும்பிய பக்கமெல்லாம் இருக்கும் இலவசக் கழிப்பறைகள், பக்தர்கள் காலைக் கடன்களை முடிக்க எளிதாக உதவக்கூடியவை.
    • உங்களின் செல்போன், காலணிகளைப் பாதுக்காப்பாக வைப்பதற்கு பல இடங்கள் இருக்கின்றன. அங்கு வைத்து டோக்கன்களைப் பெற்றுக்கொள்ளலாம். முற்றிலும் இலவசம்.
    • ‘கல்யாணக்கட்டா’ என்று சொல்லப்படும் முடிக்காணிக்கை செய்யும் இடத்தில் முடிக்காணிக்கைக்கு எந்தவிதக் கட்டணமும் கிடையாது. இங்கு சந்தனம் மற்றும் புதிய பிளேடு ஒன்று இலவசமாக வழங்கப்படும்.
    • சர்வதரிசன க்யூவில் சென்று சுவாமி தரிசனம் செய்தால், தரிசனம் செய்ய எந்தக் கட்டணமும் கிடையாது. செவ்வாய், புதன்கிழமைகளில் கூட்டம் மிகவும் குறைவாக இருக்கும். தரிசனத்துக்காகக் காத்திருக்கும் வேளையில் பொங்கல், சாம்பார் சாதம், உப்புமா இவற்றில் ஏதேனும் ஒன்று இலவசமாக வழங்கப்படும். சிலவேளைகளில் பசும்பால் வழங்கப்படும்.
    •தரிசனம் முடித்து வரும் அனைவருக்கும் சிறிய லட்டு பிரசாதம் வழங்கப்படும். இல்லாவிட்டால், பொங்கல், புளியோதரை, மிளகு சாதம் போன்றவை பிரசாதமாக வழங்கப்படும்.
    • கோயிலின் பிரதான வாசலைத் தாண்டி வெளியே வந்தால், தரிகொண்டா வெங்கமாம்பா இலவச அன்னதானக்கூடம் இருக்கிறது. இங்கு வேண்டுமளவு சாதம் சாம்பார், ரசம், மோர், பொரியல் துவையலுடன் இலவசச் சாப்பாடு வழங்கப்படுகிறது.
    • இதையெல்லாம் தாண்டி மலை முழுவதும் சுற்றி வர, இலவச பஸ் ஆரஞ்சு நிறத்தில் ரதம்போல பவனி வருகின்றது. ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ஒரு பஸ் என காலை 6 மணிமுதல் இரவு 11 மணி வரை மலையைச் சுற்றி வருகிறது. இதில் ஏறி நாம், திருமலையில் எந்த இடத்தில் இறங்க வேண்டுமோ அங்கு இறங்கிக் கொள்ளலாம்.
    • இது தவிர இலவச மருத்துவமனை ஒன்றும் 24 மணிநேரமும் இயங்கி வருகிறது.

  • சனிப்பெயர்ச்சி விழா தயாராகும் திருநள்ளாறு….

    திருநள்ளாறு கோயில் முக்கிய சுவாமி சன்னிதிகளில் 15 லட்ச ரூபாய் செலவில் பித்தளைத் தகடு பதிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. சனிப்பெயர்ச்சி விழாவுக்குள் பணிகள் நிறைவடைந்துவிடும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இக்கோயிலில் உள்ள விநாயகர், சுப்ரமணியர், பைரவர் உள்ளிட்ட சன்னிதிகளில் பித்தளைத் தகடு பதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி நன்கொடையாளர்கள் மூலம் நிதி திரட்டி கடந்த மே மாதம் முதல் சன்னிதிகளில் தகடு பதிக்கும் பணிகள் நடந்துவருகின்றன. ஸ்ரீ ஆதி கணபதி, ஸ்ரீ சொர்ண கணபதி ஆகியவை ஒரே சன்னிதியில் இக்கோயிலில் உள்ளன. இது ஸ்ரீ சொர்ணகணபதி சன்னிதி என்ற பெயர்கொண்டு அழைக்கப்படுகிறது. உத்ஸவம் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளின்போது சொர்ணகணபதிக்கு தங்கக் கவசமும், ஆதி கணபதிக்கு வெள்ளிக் கவசமும் அணிவிக்கப்படும். சன்னிதிகளுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் வகையில் ஆன்மிக வேலைப்பாடுகளுடன் பித்தளைத் தகடுகள் முதல்கட்டமாக விநாயகர் சன்னிதியில் பதிக்கப்பட்டது. அடுத்ததாக ஸ்ரீ சுப்ரமணியர் சன்னிதிக்கு பதிக்கும் பணி செய்து முடிக்கப்பட்டது. தற்போது தர்பாரண்யேசுவரர் சன்னிதிக்கு செல்லும் முகப்புப் பகுதியில் உள்ள 5 கருங்கல் தூண்கள், முகப்புப் பகுதி மற்றும் படிகளுக்கு தகடு பதிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஸ்ரீ பைரவர் சன்னிதிக்கு தகடு தயாரிப்புப் பணி நடந்துவருகிறது. ஒட்டுமொத்தப் பணிகளும் ரூ.15 லட்சத்தில் நன்கொடை மூலம் செய்யப்படுகிறது. இந்தப் பணிகள் வரும் டிசம்பர் மாதம் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவதற்குள் முடிக்கப்பட்டுவிடும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

  • கல்விக்காக அமைந்த முதல் கோவில் எது தெரியுமா?

    முதல் கோவில் கல்வி தெய்வத்திற்கு கடலூருக்கு அருகில் உள்ள திருவஹீந்திரபுரத்தில் உள்ளது.

    இது ஹயக்ரீவரின் முதல் கோவில் ஆகும். இந்த கோவிலின் சிறப்பு அம்சமே பிரார்த்தனைக் கிணறு இருக்கிறது.

    அசுரர்களின் கொடுமை தாங்காத தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர்.விஷ்ணு தன்னை வழிபட்டு வரும்படியும்,தக்க சமயத்தில் உதவுவதாகவும் வாக்களித்தார்.அதன் படி ,சக்கராயுதத்தை ஏவினார்.அது அசுரர்களை அழித்தது.

    தேவர்களுக்கு மும்மூர்த்தி வடிவில் இத்தலத்தில் விஷ்ணு காட்சியளித்தார்.தேவர்களின் தலைவன் என்ற பொருளில் தேவநாத சுவாமி என பெயர் ஏற்பட்டது.

    ஒரு முறை விஷ்ணுக்கு தாகம் ஏற்பட்ட பொது,கருடனிடம் தண்ணீர் கொண்டுவரப் பணித்தார்.அவர் எடுத்த வர தாமதம் ஆனதால் ஆதி

    சேஷனிடம் கேட்டார். அவர் தன் வாலால் தரையில் அடிக்க தீர்த்தம் பீறிட்டது. தெற்கு பிரகாரத்தில் கிணறாக உள்ளது.

    இத்தீர்த்தம் சேஷ தீர்த்தம் எனப்படுகிறது. பிரார்த்தனைக் கிணறாக இருக்கும் இதில் உப்பு,மிளகு வெல்லமிட்டு பிரார்த்தனை செய்கின்றனர்.

    இங்கு வழிபட சர்ப்ப தோஷம் விலகும்.திருப்பதிக்கு செல்ல முடியாத பக்தர்கள் இங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    இத்தலத்திற்கு அருகில் பிரம்மாச்சலம் மலை உள்ளது. இது 73படிகளை கொண்டது. இங்கு லட்சுமி ஹயக்ரீவருக்கு தனி  சன்னதி உள்ளது.

    வேதாந்த தேசிகன் மலை மீது தவம் புரிந்து ஹயக்ரீவர், கருடாழ்வார் அவர்களின் தரிசனத்தை பெற்றார். வியாழக்கிழமை தோறும் மாணவர்கள் ஹயக்ரீவருக்கு துளசி,கல்கண்டு,தேன் படைத்து வழிபடுகின்றனர்.

     

  • ராகு தோஷம் நிவர்த்தி தரும் கோவில் இது…..

    ராகு  பகவானுக்கு உரியதலம்  தமிழகத்தில் உள்ள திருநாகேஸ்வரம் கோவில் தான் அனைவருக்கும் நினைவுக்கு  வருவது. அதே போன்று ராகு  தோஷம் நிவர்த்தி தரும் கோவில் நெல்லையில் உள்ள பாளையங்கோட்டையில் உள்ள பகவதி அம்மன் கோவில் ஆகும். திருநாகேஸ்வரத்தில் இருந்து கொண்டுவரப்பட சக்தி வாய்ந்த ராகு யந்திரமும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

     இந்த கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு கால வேளையில் ராகு தோஷம் நிவர்த்தியாகிட சிறப்பு அபிஷேகங்கள்,வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.  ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்த பொருளை நோயில் இருந்து நிவாரணம் பெற வேண்டியும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பக்தர்கள் அருந்துகின்றனர்.

     இக்கோவிலில் பக்தர்களே நாம் கொண்டு போகும் அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்யப்படுகிறார்கள். அதனுடன் பிரசாதத்தை ராகு பகவானுக்கு படைத்து பின்னர் தங்களுடைய கைகளாலேயே பக்தர்களுக்கு விநியோகம் செய்கின்றனர்.

     ராகு பகவானுக்கு உரிய அதிதேவதையான ,துர்க்கையின் அம்சமான கருமாரி அம்மன் இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதால் விரைவாக  தோஷங்கள் எல்லாம் நிவர்த்தியாகும். அதனால்  இத்தலத்திற்கு வந்து ராகு பகவானை வழிபட்டால்  திருநாகேஸ்வரம் சென்று ராகு பகவானை வழிபட்ட பலனை  அடையலாம். ராகுவால் உண்டாகும் தோஷங்கள் நீங்கி நன்மை பெற  ஏராளமான பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து வழிப்பட்டு செல்கிறார்கள்.

     

  • துன்பங்களையும் நிவர்த்தி செய்யும் மொரட்டாண்டி சனி பகவான் !

    உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரர் திருவுருவம் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கோரிமேட்டிற்கு அருகிலுள்ள மொரட்டாண்டி என்னும் கிராமத்தில் அமையபெற்றுள்ளது. இயற்கைச் சூழலில் வெட்டவெளியில் நின்று கொண்டிருக்கும் இந்த சனீஸ்வரரைத் தரிசித்தால் துன்பங்கள் போகும். உலகிலேயே மிக உயரமான சனீஸ்வர பகவான் இருபத்தேழு அடி உயரத்தில்- நின்ற கோலத்தில் மிக கம்பீரமாகக் காணப்படுகிறார். “பக்தானுக்ரஹ ஸ்ரீவிஸ்வரூப மகாசனீஸ்வரர்’ எனப்படும் இவர் பஞ்சலோகத்தில் உருவாக்கப்பட்டவர். பீடத்துடன் இவர் உயரம் முப்பத்து மூன்று அடியாகும். தங்க நிறத்தில் ஒளிரும் இந்த மகாசனீஸ்வரர் தன் வாகனமான காக்கையுடன் இல்லாமல் கழுகு வாகனத்துடன் திகழ்கிறார். ஆக மங்களில் இவரது வாகனம் கழுகு என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. நான்கு கரங்களுடன் காட்சி தரும் இவர், மேல் வலதுகரத்தில் அம்பும், இடது கரத்தில் வில்லும் வைத்துள்ளார். கீழ் வலது, இடது கரங்கள் அபயம், வரதம் கொண்டு திகழ்கிறார். இவர் எழுந்தருளியுள்ள பீடத்தில் பன்னிரண்டு ராசிகளின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சனியால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பங்களையும் நிவர்த்தி செய்வார் என்பது நம்பிக்கை.

  • குழந்தைப்பேறு தரும் கல்யாண ரங்கநாத பெருமாள்…

    நாகை மாவட்டம், சீர்காழி அருகே திருநகரி கிராமம் உள்ள கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் திருமங்கையாழ்வார் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 108 திவ்யதேசங்களில் ஒன்றான கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. மந்திர உபதேசம் பெற்ற திருமங்கை, அஞ்ஞானம் அழிந்து தத்துவ ஞானம் கைவரப்பெற்றார். இறைவன் மீது நான்கு வகை கவிகளையும் பாடினார். தொடர்ந்து இறைவனின் பல தலங்களுக்குச் சென்று பெருமாளை வணங்கி, மங்களாசாசனம் பாடியுள்ளார். இதன் பிறகு திருமங்கை மன்னன் திருமங்கையாழ்வார் என அழைக்கப்படுகிறார். திருநகரி கல்யாணரங்கநாதர் கோவிலில், குமுதவல்லி நாச்சியாருடன் திருமங்கையாழ்வார் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்து வருகிறார். மாதந்தோறும் கார்த்திகை நாளில் திருமங்கையாழ்வாருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அந்நாளில் திருமங்கையாழ்வாரை வழிபட்டால் கல்வி செல்வம், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்பட சகல செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம். வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்படும். இவரது சன்னிதியில் திருமங்கையாழ்வார் பூஜை செய்த ‘சிந்தனைக்கினியான் பெருமாள்’ தேவியர்களுடன் அருள்பாலிப்பது சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் கார்த்திகை மாதம் 10 நாட்கள் திருமங்கை ஆழ்வார் கார்த்திகை உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடைதிறந்து இருக்கும். இந்த கோவில் நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் புதுத்துறை மண்டபம் என்ற இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், திருவெண்காட்டில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்திலும் திருநகரி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.