Category: கோவில்கள்

கோவில்கள்

  • நீண்ட ஆயுளை தரும் திருக்கடையூர்…

    மயிலாடு துறையிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது திருக்கடையூர் சிவன் கோயில். ஈசன் தனது பக்தன் மார்க்கண்டேயனுக்கு அபயமளிக்க காலனை சம்ஹாரம் செய்து, கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளியுள்ள ஸ்தலம். இங்கே வந்து இறைவனைத் தொழுதால் நீண்ட ஆயுள் கிடைக்கும். வயது முதிர்ந்தவர், உடல் நலம் குன்றியவர், அகால மரணம் ஏற்படும் நிலை, ஆயுள் பாதிப்பு உள்ளவர் நீண்ட ஆயுள பெற இங்கு ம்ருத்யுஞ்சய ஹோம்ம், ஆயுள் ஹோம்ம் செய்து கொள்ளலாம். தம்பதிகள் 59 வயது முடிந்து 60 வயது ஆரம்பிக்கும் போது ‘உக்ரரத’ சாந்தி பூஜையும், 60 வயது முடிந்து 61 வயது தொடங்கும் பொழுது சஷ்டி அப்த பூர்த்தியும், 69 வயது முடிந்து 70 வயது ஆரம்பிக்கும் போது ‘பீமரத சாந்தி’ பூஜையும், 79 வயது முடிந்து 80 வயது ஆரம்பிக்கும் போது ‘சதாபிஷேகமும்’ செய்து கொண்டால் பூரண ஆயுள் கிடைக்கும்.

     

  • முன்ஜென்ம பாவங்கள் தீர்க்கும் அருள்மிகு நவபாஷாணம் தலம்

    முன்ஜென்ம பாவங்களை தீர்க்கும் தலமாக ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் உள்ள நவபாஷாணத் தலம் உள்ளது. இராவணனால் சீதை சிறை வைக்கப்பட்டதை அறிந்து அவரை மீட்க ஸ்ரீ ராம பிரான் தென் திசை நோக்கி வருகிறார். வேத சாஸ்திரங்களில் எந்த ஒரு காரியம் செய்வதற்கும் முன்பு பிள்ளையார் பூஜை,நவகிரக பூஜை செய்வது வழக்கம்.அதனால் ஸ்ரீ ராமரும் உப்பூர் விநாயகரை பூஜித்த பின்பு இத்தலத்தில் நவகிரகங்களை 9 பிடி மணல் கலவையால் பிரதிஷ்டை செய்கிறார்.அவ்வமயம் கடல் கொந்தளிப்பு ஏற்பட தமது திருக்கரத்தை உயர்த்த கடல் அமைதி அடைந்ததாக ஐதீகம்.ஸ்ரீராமர் பிரதிஷ்டை செய்த நவகிரகங்கள் நவ பாஷாணமாக அமைந்து இன்று அருள் தருகின்றனர். முன்ஜென்ம பாவங்கள் தீர,பிதுர்கடன் கழிக்க தர்ப்பணம் ஸ்ரார்த்தம் முதலியவை செய்யலாம்.,நவகிரக தோசங்கள் விலக இங்கு வழிபடலாம். இவை தவிர குழந்தை பாக்கியம், ஆயுள்,கல்வி, செல்வம் பெருகவும் இங்கு பிரார்த்தனை செய்யலாம். நாம் முற்பிறவியில் செய்த கர்மாவின் பயனாக மனிதர்களாகப் பிறந்து நாம் செய்த பாவ புண்ணியகளின் அடிப்படையில் நம்மை வழிநடத்தி செல்வது நவகிரகங்களேயாகும்.இத் தலத்தில் உள்ள நவகிரகங்களை 9 நவ தானியங்கள் வைத்து இங்குள்ள நவகிரகங்களை வழிபட்டால் வணங்கினால் சகல பலன்களும் கிடைக்கும். நவதானியங்கள் படைத்தல், நவகிரக வலம், தானம் செய்தல், தோச பரிகாரம் செய்தல் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாகும்.

  • நினைத்தது நிறைவேற பர்வதமலைக்கு செல்லுங்கள்!

     

    நினைத்தாலே முக்தி தருவது திருவண்ணாமலை நினைக்காமலே முக்தி தருவது பர்வதமலை. பர்வதமலை’ என்றால் மலைகளுக்கெல்லாம் மலை. இம்மலையில் இருக்கும் மல்லிகார்ஜுன சுவாமிக்கும் பிரமராம்பிகை அம்மனுக்கும் தினமும் இரவில் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவதாகக் கூறப்படுகிறது.

    கயிலாயத்தில் இருந்து சிவபெருமான் திருவண்ணாமலைக்கு வந்தபோது பர்வத மலையில் ஒரு காலை வைத்து மற்றொரு காலை திருவண்ணாமலையில் வைத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

    இந்த மலை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது. இந்தமலை `கடலாடி’ என்னும் கிராமத்தையும், தென்மாதி மங்கலம் என்னும் கிராமத்தையும்தன் அடிவாரத்தில் கொண்டிருக்கிறது. கம்பீரமான தோற்றம் கொண்ட இம்மலையின் பரப்பளவு 5500 ஏக்கர். மலையின் உயரம் சுமார் 4500 அடிகள். இம்மலையைச் சுற்றிலும் 365 குளங்கள் இருந்தன என்று கூறப்படுகிறது.

    எனவே இரு வழிகளிலும் மலையேறலாம். இந்த மலையானது, சில கோணங்களில் இருந்து பார்க்கும்போது திரிசூலவடிவில் தெரிவதால், இதனைத் `திரிசூலகிரி’ என்றும் கூறுகின்றனர். இங்கு சித்தர்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்று கருதப்படுகிறது. இதுதவிர கந்தமலை, அகத்தியமலை, மங்களமலை, நந்தி மலை என்றும் இந்த மலை அழைக்கப்படுகிறது.

    பர்வதமலை மிக உயரமான சிகரத்தை உடையதால், `பர்வதகிரி’ என்றும், இம்மலையில் மிகச்சிறந்த பல அரிய மூலிகைகள் நிறைந்திருப்பதால், `சஞ்சிவிகிரி’ என்றும், ஒரு காலத்தில் அகத்தியரால் இம்மலையில் திரிசூலம், நாட்டப்பட்டதால் `திரிசூலகிரி’ என்றும், பர்வதராஜன் மகளாகிய பார்வதி தேவி இங்கு வந்து தங்கியதால், `பர்வதம்’ எனவும் பெயர் பெற்றிருக்கிறது.

    சிலர் இம்மலையை `ஸ்ரீசைலம்’ என்றும் அழைப்பதுண்டு. மகாலட்சுமி திருமாலைத் திருமணம் புரிவதற்காகப் பல இடங்களில் தவம் செய்து அது முடியாமற் போகவே அதன்பின் இப்பர்வதமலையைத் தேர்ந்தெடுத்து, இங்கு வந்து தவம் செய்தார். இதனைக் கண்ட சிவபெருமான், பர்வதமலையில் தவம் செய்யும் மகாலட்சுமியை உடனே திருமணம் செய்து கொள்வாயாக என்று திருமாலுக்கு எடுத்துரைக்க, அதன் பின்னர் திருமகள் திருமணம் மிகவும் சிறப்புடன் நடந்தேறியது.

    இதனால் இம்மலைக்குச் சென்று வருபவர்கள் தங்களின் எண்ணம் ஒவ்வொரு முறையும் நிறைவேறுவதை உணர்கின்றனர். இதற்குக் காரணம் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியே இங்குத்தவம் செய்ததால் தான். தவம் செய்து அதன் பலனால் மகாலட்சுமியின் எண்ணம் ஈடேறியதால், இம்மலை `மங்களமலை’ என்று அழைக்கப்படுகிறது.

     இம்மலையில் உள்ள தெய்வத்துக்கு ஒரு முறை தீபமேற்றி வணங்கினால், வருடத்தில் 365 நாட்களுக்கும் தீபமேற்றி வைத்து வழிபட்ட பலன் கிடைக்கும். பர்வத மலையில்  பவுர்ணமியின் பொது சென்று வழிப்பட்டால் அனைத்து விதமான நன்மைகளும் பெறலாம்.

     

  • சாபவிமோச்சனம் போக்கும் பாடி திருவலிதாயம் …

    தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு திருத்தலங்கல் முப்பத்திரண்டாகும். அவற்றில் இருபத்திரண்டாவது தலமாக விளங்குவதும், திரு ஞானசம்பந்தரால் பாடப் பெற்ற திருத்தலமாக விளங்குவதே சென்னையில் ‘‘பாடி‘‘ என அழைக்கப்படும் திருவலிதாயம் ஆகும். திருவலிதாய நாதரையும் தாயம்மையை வழிபடுவோருக்கு தீவிணைகள், துயரம் நீங்கி ஈசனின் திருவடியை வணங்கினால் முக்தி அடைவது நிச்சயம். பரத்வாஜர், மேனகையின் சாபத்தால் கருங்குருவியாக உருமாறினார். அந்த சாபத்தை போக்க சாபவிமோச்சனம் பெறுவதற்காக இங்கு வந்து சிவனை வழிபட்டு சுய உருவம் பெற்றார், குருபகவான் சாபம் நிவர்த்தி செய்ய சிவனை நினைத்து பூஜை செய்து சாப விமோச்சனம் பெற்றார். ஆலங்குடி, திருச்செந்தூர், தென்குடிதிட்டை போன்ற சிவஸ்தலங்களுக்கு இணையான தலம் இது.

    சூரியன், ராமர், அனுமன், இந்திரன், வாயு, ஆகியோர் இங்கு வந்து பூஜை செய்து, சிவனை வழிபட்டு சென்றனர். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகளார், பாம்பன் ஸ்வாமிகள் ஆகியோர் போற்றிப்பாடப்பட்ட திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது. கோயிலின் உள்ளே சிவன், அம்மாள், வலம்புரி விநாயகர், சூரியன், நால்வர், அருணகிரிநாதர், பாலமுருகன், கோஷ்ட விநாயகர், தட்சணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், வரசித்தி விநாயகர், முருகன் வள்ளி. தெய்வானை, மகாவிஷ்னு, அனுமன் பூஜித்த லிங்கம், மீனாட்சி சுந்தரேஸ்வரர், துர்கை, நடராஜர், பைரவர், நந்தி, பலிபீடம், கொடிமரம், என தனித்தனியே பிரகாரங்கள் உள்ளது. பாடி ஈசன் கோயில் இருபத்திரண்டாவது குருஸ்தலம். சிவன் கற்பறஷ்டக விமானத்தில் அருள்பாலிக்கிறார். சன்னதிக்கு எதிரில் நாககோணம், அஷ்டதிக் பாலர்கள், அஷ்டலஷ்மி, உள்ளது, இதை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு. சித்திரை பௌர்ணமியில் 10 நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா நடக்கும், ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், சிவாரத்திரி, பிரதோஷம் போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும்.

  • கடனில்லா பெரு வாழ்வு தரும் ஐந்து நரசிம்மர்கள்

     

    ‘கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்’  என்ற கம்பனின் வரிகள் கடன் சுமைப்பற்றி அழுத்தமாக உணர்த்துகிறது. கடன் , மனிதனை நிம்மதியில்லாமல் அல்லலுறச் செய்கிறது. மனிதர்கள் கடன் சுமை நீங்கி மன நிம்மதி பெற  சீர்காழிக்கு அருகில் அமைந்துள்ள ஐந்து நரசிம்ம ஆலயங்களை தரிசனம் செய்தால் போதும்.

    இந்த ஐந்து நரசிம்ம ஆலயங்களின் கதை சுவாரசியமானது

    ஐந்து நரசிம்ம பெருமாள் கோயில்களுக்கு எவர் ஒருவர்  ஒரே நாளில் சென்று வழிபடுகிறார்களோ அவர்கள்  கடன் தொல்லை தீரும். எதிரிகள் தூர விலகி ஓடுவார்கள்.

    பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாருக்கும் இந்த கோயில்களுக்கும் உள்ள உறவு முக்கியமானது  சீர்காழி நகரின் அருகில் உள்ள மங்கை மடம் எனும் ஊரில் இருந்து ஐந்து கிலோ தொலைவில் உள்ள திருக்கறையலூர் என்ற ஊரில் பிறந்தவர் திருமங்கை ஆழ்வார். சோழ மன்னர்கள் அரசாண்டு கொண்டு இருந்த காலத்தில் திருக்கறையலூர் பகுதியில் வைஷ்ணவப் பிரிவை சார்ந்த பல மக்கள் வசித்து வந்தார்கள். அப்போது நகரை நிர்வகிக்க அலைநாதர் எனும் வைஷ்ணவர் நியமிக்கப்பட்டார். அவருடைய மனைவியின் பெயர் அல்லித்திரட்டு என்பதாகும். அவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறக்க அதற்கு நீலர் என்று பெயர் சூட்டினார்கள். அந்த குழந்தை வளர்ந்து வீரதீர சாகசங்களில் சிறந்து விளங்கியது.

    இது  குறித்து கேள்விப்பட்ட சோழ மன்னன் நீலரை  அழைத்து தன்னுடைய படைத் தளபதியாக நியமித்தார். தனது  திறமையினால் நீலர் திருமங்கை நாட்டின் மன்னனாக மாறி விட்டதினால் அவரை திருமங்கை மன்னன் என அழைத்தார்கள். திருமங்கை மன்னன் பூர்வ ஜென்மத்தில் பகவான் விஷ்ணுவின் வில்லாக இருந்தவர்.

    ஒரு சந்தர்பத்தில் திருமால் திருமங்கை மன்னன் காதில் வேறொரு மந்திரத்துக்குப் பதிலாக திருமந்திர உபதேசத்தை செய்தார். அதைக் கேட்ட திருமங்கை மன்னன் அடுத்த கணம் ஆன்மீக மேன்மைமிக்க புதிய மனிதராக மாறினார்.  அவர் பகவான் விஷ்ணு மீது பல பாடல்களை  பாடத் துவங்கினார். அதன் பின் அவரை அனைவரும் திருமங்கை ஆழ்வார் என அழைக்கலானார்கள்.

    திருமங்கை ஆழ்வார் பகவான் விஷ்ணுவின் நரஸிம்ம அவதாரத்தைக் காண விரும்பினார். அவருடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட விஷ்ணு பகவானும் சீர்காழியில் உள்ள திருநாங்கூர் எனும் இடத்தில் ஐந்து தோற்றங்களில் நரசிம்ம பெருமானாக காட்சி தந்தார். அப்படி  அவர் தோற்றம் தந்த ஐந்து ஆலயங்கள் திருநகரி-திருவாலி எனும் கிராமங்களை சுற்றி அமைந்து உள்ளன. அவற்றை ஐந்து நரஸிம்ம ஷேத்திரங்கள் என்கின்றார்கள்.

    குறையலூர் ஆலயத்தில் உக்கிர நரஸிம்ம பெருமாள், மங்கை மடத்தில் வீர நரஸிம்ம பெருமாள்,திருநகரியில் ஹிரண்ய நரஸிம்ம பெருமாள், திருநகரியின் அதே ஆலயத்தில் யோக நரஸிம்ம பெருமாள்,திருவாலியில் லட்சுமி நரஸிம்ம பெருமாள்.

    இந்த ஐந்து நரசிம்ம  திருக்கோயில்களை தரிசனம் செய்து வாழ்க்கையில் கடன், பகை இல்லாத நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்வை வாழலாம் ……

                                                                       

  • ராகு தோஷம், திருமண தடை நீக்கும் தலம்!

     

    ஆற்றூர் என்ற ஊரில் திருமண தடைகளை நீக்கி ,திருமண வரம் அருளும் சொர்ணபுரீஸ்வரர் சிவாலயம் உள்ளது. இந்த ஊரில் இறைவனையே தன் கணவனாக நினைத்து வளர்ந்த ஒரு மங்கை, தான் நினைத்த படியே கடவுளை மணந்து கொண்டாள். இந்த பெருமையை கொண்ட திருத்தலத்தில் சென்று வழிப்பட்டால் உங்கள் திருமண தடை நீங்கும்  என ஐதிகம் உள்ளது.

     

    இக்கோவிலின் தல வரலாறு பார்ப்போமா!

                       ஆற்றூரில் வசித்து  வந்த சிவ பக்தரின் மகள் தான் கயற்கண்ணி. அவள் திருமண வயதை எட்டியவுடன் அவளுக்குத் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

    ஆனால் அப்பெண்  மந்தாரவனத்தில் எழுந்தருளியுள்ள சிவ பெருமானை தான் மனதார நேசிக்கிறேன். அவரை தான் மனந்து கொள்வேன் என உறுதியாக கூறிவிட்டாள். பெற்றவர்களுக்கு அவளின் நிலைமை கண்டு அழுவாத? சிரிப்பதா? என்று தெரியவில்லை.

    அவளின் முடிவை  மாற்றிக்கொள்ளும்படி வற்புறுத்தினர். ஆனால் கயற்கண்ணியோ தன் முடிவிலுருந்து  பின் வாங்குவதாக இல்லை. சிவபெருமானையே முழு மனதோடு நினைத்து பூஜித்து வந்தாள்.அவரின் நினைவிலே தன் நாட்களை கடத்தினாள்.

    அப்பெண்ணின் மன உறுதியை கண்ட  சிவபெருமான் மனம் கசிந்தார்.அவரின் பார்வை கயற்கண்ணியை  நோக்கி திரும்பியது. அப்பெண்ணை மணந்து கொள்ள முடிவு செய்தார்.

     சிவ பெருமான்  ஒரு பிரமசாரியின் வேடம் புண்டு ,தேவர்கள் சூழ தை மாதத்தில் ஒரு வெள்ளியன்று  ஆற்றூரில் எழுந்தருளி  கயற்கண்ணியை  மணந்தார்.

    சிவ பெருமான் கயற்கண்ணியுடன் திருக்கோவிலுக்கு எழுந்தருளினார்.

    ஆலய அமைப்பு!

    இத்தலத்தின் பழைய பெயர் மந்தாரவனம், தற்போது  ஆற்றூர் என அழைக்கபடுகிறது.  சொர்ணபுரிஸ்வர் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.ஆலயத்தின் ஏதிரில் திருக்குளம் உள்ளது.இக்குளம் கயிலாய திர்த்தம் எனவும் ,மண்டூக தீர்த்தம் எனவும் அழைக்கப்படுகிறது.

    இந்த திர்த்தத்தில் நீராடி இறைவன்,இறைவியை வணங்கினால் மண்டூக தோஷம்,கால சர்ப்ப தோஷம்,ராகு தோஷம், அனைத்தும் விலகும் என பக்தர்களின் நம்பிக்கை.

    கோவிலின் உள்ளே நுழைந்ததும் நந்தியும், பலிபீடமும் காணப்படுகிறது.

     அடுத்தது மகா மண்டபம் உள்ளது. மண்டபத்தின் வலப்புறம் அன்னை கயற்கண்ணி தென் முகம் நோக்கி அருள் பாலிக்கிறாள்.ஆடுத்துள்ள கருவறையில் சொர்ணபுரிஸ்வர் சிவலிங்கத் திருமேனில் கிழக்கு திசை நோக்கி  அருள்புரிகிறார்.  இத்திருச்சுற்றில்  தெற்கில் அன்னை அபயாம்பிகை தனி கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள், நர்த்தன விநாயகர் , தட்சணா மூர்த்தியும்,மகா விஷ்ணுவும் ,அஷ்ட புஜ துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்

     

    சிறப்பு  பவுர்ணமி பூஜை!

           இங்கு நடைபெறும் பவுர்ணமி பூஜை மிகவும் சிறப்பானது. பல பெற்றோர்கள் தங்கள் மகன் அல்லது  மகள் ஜாதகத்தை இறைவன் பாதத்த்தில்  வைத்து பூஜை செய்து,திரும்ப வாங்கிச் செல்கின்றார். இதை செய்தால் திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் நடந்தேறும் என பக்தர்களின் நம்பிக்கை. இக்கோவிலில் பவுர்ணமி நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகம் காணப்படும்.

    மகாவிஷ்ணு அசுரர்களை அழிக்க, இத்தல இறைவனை வேண்டி, அதீத பலம் பெற்றார். இத்தலத்தின் அருகில் சுகவாசி நாராணய பெருமாள்  என்ற பெயரில் கோவில் கொண்டுள்ளார்.

    எனவே இந்த ஆலயத்தில் சிவ விஷ்ணு பேதம் இல்லை.

    இந்த ஆலயத்தில் , சோமவாரங்கள்,சித்ரா பவுர்ணமி, சிவராத்திரி,பிரதோஷம்,சோமவாரம் கார்த்திகை, சிவராத்திரி போன்ற நாட்களில் இறைவனுக்கும்,இறைவிகளுக்கும் சிறப்பான பூஜைகளும் ஆராதானைகளும் நடைப்பெற்று வருகின்றன.

     

  • திருமணத் தடை நீக்கும் உத்திரகோசமங்கை

    சிவபெருமான் வீற்றிருக்கும் புண்ணியத் தலங்களில் ஒன்று உத்திரகோசமங்கை திருத்தலம். ‘மண் தோன்றிய போதே மங்கை தோன்றியது’ என்பார்கள். உலகிலேயே முதலில் தோன்றிய சிவன் கோவில் இது என்று கூறப்படுகிறது. ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது என்பதில் இருந்தே, இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம். சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும். உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது. இத்தல மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர். அந்த இலந்தை மரமே இவ்வாலயத்தின் தலவிருட்சமாக விளங்குகிறது. மங்களநாதரின் உடனுறை அம்பிகையின் திருநாமம் மங்களேஸ்வரி என்பதாகும். மங்களேஸ்வரி அம்பாளுக்கு நான்கு திருக்கரங்கள். இந்த அம்மனை ஐந்து செவ்வாய்க்கிழமைகள் ராகுகால வேளையில், எலுமிச்சை பழ தீபமேற்றி, ஒன்பது எலுமிச்சைப் பழங்களை உதிரியாக அன்னையின் காலடியில் சமர்ப்பித்து வந்தால், செவ்வாய்தோஷம் நிவர்த்தி ஆகும். திருமணத் தடை அகலும்.
    மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் சாலையில் பரமக்குடி, சத்திரக்குடி ஊர்களைத் தாண்டினால் வலதுபுறத்தில் தூத்துக்குடி– திருச்செந்தூர் சாலை வரும். இந்த சாலையில்தான் உத்திரகோசமங்கை திருத்தலம் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும், ராமநாதபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இவ்வாலயம் இருக்கிறது.

  • தூய்மையான மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

    இந்தியாவிலேயே சிறந்த தூய்மையான கோயில் என்று மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு மத்திய அரசு சிறப்பு விருது அளித்துள்ளது. ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை. இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது வெள்ளி சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் செய்யப்பட்டவர். பல இடங்களில் இடது கால் தூக்கி ஆடிய சிவபெருமான், மதுரையில் பாண்டிய மன்னனுக்காக வலது கால் தூக்கி ஆடினார். இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் பொற்றாமரை குளமும், வைகை நதியும். இக்கோவிலில் சிறப்பு வாய்ந்த முக்குருணி விநாயகர் சந்நிதியும் உள்ளது.

    மலயத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திர யாகம் செய்த போது, அக்னியில் இருந்து பார்வதி தேவி குழந்தையாகத் தோன்றினாள். முன்ஜென்மத்தில் காஞ்சனமாலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக பார்வதி தேவி அக்னியில் இருந்து வெளிப்பட்டதாக சிலர் கூறுவர். அக்னியில் இருந்து தோன்றிய பார்வதிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன, இதனைக் கண்டு அதிர்ச்சியுற்றான் பாண்டிய மன்னன். அப்போது ஒரு குரல் ஒலித்தது. அவள் எப்போது தன் கணவனை காண்கிறாளோ அப்போது அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும் என்று அந்த குரல் கூறியது. பாண்டியன் மன்னன் மனமகிழ்ச்சியுடன் அந்த குழந்தைக்கு தடாகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அக்குழந்தை போர்க்கலை, சிற்பக்கலை, குதிரையேற்றம் முதலான ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்று வளர்ந்தாள்.

    தடாகைக்கு முடிசூட்ட நினைத்தான் பாண்டிய மன்னன். அக்கால வழக்கப்படி அவள் மூவுலகிலும் எட்டுத்திசையிலும் போரிட்டால்தான் மூடிசூட்டிக் கொள்ள முடியும். எனவே போருக்கு சென்று தடாகை, பிரம்மன் வீற்றிருக்கும் சத்தியலோகத்தையும், திருமால் வீற்றிருக்கும் வைகுந்த்தத்தையும் வென்றாள். கைலாசத்துக்கு சென்ற போது அங்கிருந்த சிவபெருமானைக் கண்டு வெட்கப்பட்டாள், அவளுடைய மூன்றாவது மார்பு மறைந்துவிட்டது. இதன் காரணத்தை அறிந்த தடாகை, தான் பார்வதியின் மறுவடிவம் என்பதை உணர்ந்து கொண்டாள். சிவபெருமானுடன் மதுரை வந்து மூடிசூட்டிக்கொண்ட பின்னர் சிவபெருமானையே மதுரையில் திருமால் தலைமையில் திருமணம் செய்து கொண்டாள்.

    மதுரை மாநகரத்தின் மத்தியில் அமைந்துள்ள இந்தக்கோவிலுக்கு மொத்தம் நான்கு நுழைவாயில்கள் உள்ளன. கோவிலின் மொத்த பரப்பளவு, 45 ஏக்கர். இந்தக்கோவிலில் மொத்தம் 12 கோபுரங்கள் உள்ளன. அதில் நான்கு கோபுரங்கள் நான்கு திசைகளை நோக்கி உள்ள நுழைவாயில்கள். இந்த பன்னிரெண்டு கோபுரங்களுள் தெற்கு கோபுரம் மிக உயரமானது. ஒன்பது அடுக்குகளை உடைய தெற்கு கோபுரத்தின் உயரம் 52 மீ. இங்குள்ள கோபுரங்கள் பல்வேறு மன்னர்களால் பல்வேறு காலங்களில் கட்டப்பட்டவை. கடைசியில் தேவகோட்டை நகரத்தாரால் பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியார் என்பவரால் கி.பி. 1570ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் புதுப்பிக்கப்பட்டது..

    சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் பழுதுபார்க்கப்பட்டது. மேலும் மூலவருக்காக இரண்டு கோபுரங்கள் உள்ளன, அவை இரண்டும் தங்கத்தால் வேயப்பட்டவை. மேலும் இங்கு பொற்றாமரைக் குளமும் உள்ளது. இந்தக் குளத்தில் தங்கத் தாமரை உள்ளது. முன்னர் சிவபெருமான் ஒரு நாரைக்கு இங்கு கடல்வாழ் உயிரினங்கள் வாழாது என்று வாக்கு அளித்ததால் இந்தக் குளத்தில் மீன்கள் கூட வாழ்வது இல்லை. மேலும் இந்தக் குளம் நல்ல நூல்களை தேர்ந்தெடுக்கும் சக்தி படைத்தது என்றும் நம்புகிறார்கள். நூல்கள், ஓலைச்சுவடிகளை இந்தக் குளத்தில் போடவேண்டும், அவை நல்ல நூல்கள் என்றால் மிதக்கும் இல்லையேல் மூழ்கிவிடும். இங்கு உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் 985 தூண்களும் நடுவில் நடராஜர் சிலையும் உள்ளது. இதை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரானின் அமைச்சர் அரியநாத முதலியார் கட்டினார்.

     

    ஆயிரங்கால் மண்டபத்தில் பல ஒலிகளைத் தரும் சிலைகள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. வடக்கு கோபுரத்திற்கு அருகில் ஐந்து இசைத் தூண்கள் உள்ளன. அஷ்ட சக்தி மண்டபத்தில் கலைநயமிக்க எட்டு அம்மன் சிலைகள் உள்ள்ன. இதுமட்டுமல்லாமல் கோவில் கோபுரங்கள், தூண்கள் பலவற்றிலும் பாண்டிய சிற்பிகளின் சிற்பக்கலையை காணமுடியும். கிழக்கு கோபுரத்திற்கு அருகில் உள்ள புதுமண்டபத்தில் தலவரலாற்றை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்ட்டுள்ளன. சுவாமி சந்நிதியை சுற்றியுள்ள பிரகாரத்தில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் சிற்பங்களாக காட்சியளிக்கின்றன. இங்கு நடைபெறும் சித்திரைத் திருவிழா மிகப் பிரசித்தி பெற்றது. ஆனி மாதம் ஊஞ்சல் உற்சவம், நவராத்திரி விழா, கார்த்திகை தீபத்திருவிழா, மார்கழி உற்சவம், தை தெப்பம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஆவணி மாத திருவிழா, சிவபெருமானின் 64 திருவிளையாடல்களை கொண்டாடும் விழாவாகும்.

  • அதிசயம்! தலைகீழாக விழும் கோபுர நிழல்…

    இந்தியாவின் மிக பழமையான இடங்களில் ஒன்று கர்நாடக மாநிலத்திலுள்ள ஹம்பி. இது யுனெஸ்கோவால் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நமக்கு புதிரளிக்கும் வகையில் இங்குள்ள கோயில் ஒன்றில் கோபுரத்தின் நிழல் தரையில் விழும்போது தலைகீழாக தெரிகிறது. அந்த கோயில்தான் விருபாட்சா கோயில். 1300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோயில், கட்டடக்கலைக்கும், பல மர்மங்களுக்கும் சான்றாக அமைந்துள்ளது.

    பெங்களூரு- குண்டக்கல் சாலையில் அமைந்துள்ள ஹம்பி, விஜய நகரப் பேரரசின் தலைநகராக விளங்கியது. இங்குள்ள பம்பபதி மற்றும் விருபாட்சர் சிவன் கோவில்கள், கலை பொக்கிஷமாக திகழ்கின்றன. அன்னை பார்வதி, பம்பா தேவி என்ற பெயரில் பூமியில் பிறந்தாள். இத்தலத்தில் தவமிருந்து, சிவனைக் கணவராக அடைந்தாள். அரக்கர்களை வெல்வதற்காக வீரம் மிக்க ஆண் குழந்தையை பெற்றாள். பம்பாதேவியை மணந்த சிவன் இங்கு லிங்க வடிவில் கோவில் கொண்டார். சிவனுக்கு “பம்பபதி’ என்றும், ஊருக்கு “பம்ப ஷேத்திரம்’ என்றும் பெயர் ஏற்பட்டது. இதுவே நாளடைவில் “ஹம்பி’ என மாறியது. கோவிலின் வெளி பிரகாரம் மிகப் பெரியது. இதிலுள்ள ஒரு மண்டபத்தில் 114 தூண்கள் உள்ளன. மற்றொரு மண்டபம் சிறிய அளவில் உள்ளது. இதன் நடுவே செல்லும் வடிகால் கால்வாய் வழியாக துங்கபத்திரா ஆற்று நீர் மடப்பள்ளியை அடைந்து, வெளிப்பிரகாரம் வழியாக வெளியேறுகிறது. இங்குள்ள ராயர் கோபுரம் மூன்று தளங்கள் கொண்டது. இதைச் சுற்றிலும் சிறிய சிறிய கோயில்கள், தூண் மண்டபங்கள், கொடிக்கம்பங்கள், விளக்கு கம்பங்கள் என ஒரு நகரத்தைப் போல கட்டமைத்துள்ளனர். கலை ஆர்வலர்கள் இந்தக் கோவில்களுக்கு சென்று வரலாம். இந்த கோயில் பெங்களூரிலிருந்து 350கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

  • பண்ருட்டி பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவம் நிறைவு

    பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயிலில் திருபவித்ரோத்ஸவம் நிறைவு விழாவும், 1,008 தாமரை பூ ஸகஸ்ரநாம அர்ச்சனையும் விமர்சையாக நடைபெற்றன. பண்ருட்டியில் பெருந்தேவி நாயிகா சமேத வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில், மூன்று நாள்கள் திருபவித்ரோத்ஸவம் விழா சிறப்பாக நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் உற்சவர் உள்புறப்பாடு நடைபெற்றது. 6 மணி அளவில் 1,008 தாமரை மலர்கள் ஸஹஸ்ரநாம் அர்ச்சனை நடைபெற்றது. திருக்கோயில் பட்டாச்சாரியார் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் பட்டாச்சாரியார்கள் பூஜைகளைச் சிறப்பாக நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.