Category: கோவில்கள்

கோவில்கள்

  • மாங்காடு (சுக்கிரன் தலம்)!

     

    ‘‘சுக்கிர தசைய்யா அவருக்கு. அதான் சக்கைப்போடு போடறாரு’’ என்று சொல்வார்கள். ஆம், சுக்கிரனுடைய அருட்பார்வை குடிசைவாசியையும் குபேரனாக்கும். ஆய கலைகளுக்கும் அதிபதியே சுக்கிரன்தான். கலைத்துறையில் வெற்றி பெற இவர் பார்வை போதும். அழகையும், வசீகரத்தையும், செல்வ வளத்தையும் அருள்வதில் நிகரற்றவர். அந்த சுக்கிரனுக்கு அதிபதியாக இருக்கும் சுக்கிராச்சாரியார் வழிபட்ட தலமே மாங்காடு வெள்ளீஸ்வரர் கோயில். 

    திருமால் வாமன அவதாரமெடுத்து மகாபலிச் சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதும், சக்ரவர்த்தியின் குரு சுக்கிராச்சாரியார், மன்னனைத் தடுத்ததும், முடிவில் மன்னனின் மனதை மாற்ற முடியாததால் தானே வண்டாக உருவெடுத்து தானமளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் நீர் வார்க்கும் கெண்டியின் வாயை அடைத்துக் கொண்டதும், வாமனனான திருமால் ஒரு தர்ப்பைப் புல்லால் அந்த வாயைக் குத்த, உள்ளே வண்டுருவில் இருந்த சுக்கிராச்சாரியார் பார்வையிழந்ததும் புராண சம்பவங்கள்.

    மூன்றடி மண் கேட்ட திருமால் மூவுலகையும் அளந்தார். இதற்குப் பிறகு  சுக்கிராச்சாரியார் தன் பார்வை மீள, திருமாலை பிரார்த்தித்துக் கொண்டார். பெருமாளும், ‘மாங்காடு தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் தவமிருக்கும் பார்வதி தேவிக்கு தரிசனம் கொடுக்க ஈசன் அங்கு வருவார். அப்போது அவரை தரிசித்து இழந்த பார்வையை பெறலாம்,’’ என்று அருளினார். அதன்படியே சுக்கிராச்சாரியார் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அனுதினமும் பூஜிக்க, பார்வதிதேவியை மணம் புரிய அங்கே தோன்றிய ஈசன், சுக்கிராச்சாரியாருக்கும் அருளி அவர் பார்வையை மீட்டுக் கொடுத்தார். 

    அத்தகைய சுக்கிராச்சாரியார் பூஜித்த இத்தலத்தை தரிசிப்பவர்களுக்கு சுக்கிரனின் பூரண அருள் கிட்டும். சுக்கிராச்சாரியார் பூஜித்ததால் இறைவனை தமிழில் வெள்ளீஸ்வரர் என்றும், சமஸ்கிருதத்தில் பார்க்கவேஸ்வரர் என்றும் அழைத்தனர். பார்வை குறைபாடுள்ளோர், ஏன், பார்வை இழந்தவரும்கூட வெள்ளீஸ்வரரை அகக்கண்களால் தரிசித்து, மீண்டும் வந்து  புறக்கண்களால் தரிசிக்கும் பாக்கியத்தை பெறுகின்றனர்! ஐந்து வெள்ளிக்கிழமைகளில் அல்லது பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் சுக்கிரனுக்கு பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. இத்தலம் மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்கு வெகு அருகில் உள்ளது.

  • திங்கள்கிழமை இரவு மட்டும் திறக்கும் கோவில்!

     

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பரக்கலக்கோட்டை,இங்கு பொது ஆவுடையார் கோவில் இருக்கிறது.பொதுவாக அனைத்து ஆலயங்களும் காலையிலே நடை திறந்து இரவில் நடை அடைக்கப்படும். ஆனால் இத்தலத்தில் வாரம் தோறும்  திங்கள்கிழமை இரவு மட்டும் திறக்கும் அதிசிய கோவில் ஆகும்.

    ரூபமாகவும் (வடிவம்), அரூபமாகவும் (வடிவம் இல்லாமல்), அருவுருவமாகவும் (லிங்கம்) வழிபடப்பெறும் சிவபெருமான், இத்தலத்தில் வெள்ளால மரத்தின் வடிவில் அருள் செய்கிறார். எனவே, இங்கு லிங்க வடிவம் கிடையாது. கோயில் திறக்கப்படும்போது, வெள்ளால மரத்தின் முன்பக்கத்தில் ஒரு பகுதியில் மட்டும் சந்தன காப்பு சாத்தி, வஸ்திரங்கள் அணிவித்து சிவலிங்கமாக அலங்காரம் செய்கின்றனர். அப்போது சன்னதிக்குள் மரத்தை காண முடியாதபடி சுற்றிலும் வெண்ணிற துணியால் மறைத்து விடுகிறார்கள். நமக்கு லிங்க சொரூபம் மட்டுமே தெரிகிறது.

     

    மூலஸ்தானத்திற்குள் ஆல மரத்திற்கு முன்பாக சிவனின் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. சிவபெருமான், முனிவர்களுக்கும் காட்சி தந்ததன் அடையாளமாக பாதம் வைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் பகலில் நடை திறப்பது கிடையாது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று மட்டும் இரவில் நடை திறக்கப்படுகிறது. அப்போதுதான் சுவாமியை தரிசிக்க முடியும். அன்றிரவில் 10 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 11 மணிக்கு சுவாமிக்கு அலங்காரமும், பூஜைகளும் நடக்கிறது. அப்போது சுவாமியை தரிசிக்க முடியாதபடி திரையிடப்படுகிறது. அதன்பின் 11.30க்கு மீண்டும் நடை அடைக்கப்பட்டு நந்தி, விநாயகர், பெத்த பெருமாள், மகாகோபர், வான்கோபர் சன்னதிகளில் பூஜை நடத்திவிட்டு, பின்பு நள்ளிரவு 12 மணிக்கு மீண்டும் சுவாமி சன்னதி திறக்கப்படுகிறது.

     

    அப்போதுதான் சுவாமியை தரிசிக்க முடியும். பக்தர்களின் தரிசனம் முடிந்தபின்பு, சூரிய உதயத்திற்கு முன்பாகவே நடை சாத்திவிடுகின்றனர் .தைப்பொங்கலன்று ஒருநாள் மட்டும் அதிகாலையில் இருந்து, மாலை 7 மணி வரையில் நாள் முழுதும் நடை திறக்கப்படுகிறது. அன்று சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுவது சிறப்பம்சம். இதுதவிர, சிவனுக்குரிய சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம் என எந்த பண்டிகையும் இங்கு கொண்டாடப்படுவதில்லை.

       

    இக்கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், சுவாமி சன்னதி கதவிற்கே பூஜைகள் நடத்தப்படுகிறது. பக்தர்கள் அப்போது சன்னதி கதவையே சுவாமியாக பாவித்து மாலைகள் சாத்தி வழிபட்டு, பிரகாரத்தில் இருந்து ஆலமரத்தை தரிசித்துவிட்டு செல்கிறார்கள். திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இம்மரத்தில் தாலி, தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள்.

    கார்த்திகை மாத நான்கு சோமவார நிகழ்ச்சியின் போதும் நள்ளிரவு இரண்டாம் ஜாமத்தில் பொது ஆவுடையாருக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். மற்ற கோயில்களில் நடைசாற்றப்படும் நேரத்தில் இக்கோயிலில் நடை திறக்கப்பட்டு அதிகாலை நடைசாற்றப்படும். சோமாவார நாள் தவிர மற்ற நாட்களில் கதவு மூடப்பட்டு, கதவுகளுக்கு பூக்கள் சூடி பூஜைகள் நடத்தப்படும். வெண் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து மத்தியஸ்தம் செய்ததால் வெண் ஆலமரமே ஸ்தல விருச்சமாக வணங்கப்படுகிறது. மரத்தின் வேரில் சந்தனம் பூசி, அதன் மேல் நெற்றிப்பட்டம், நாசி, திருவாய், முன்புறம் திருவாய்ச்சி அமைத்து சிவலிங்க வடிவில் இருப்பதை பக்தர்கள் வழிபடுவர்.

    ஒவ்வொரு வருடமும் கடைசி சோமவார தினத்தில் நள்ளிரவு சரியாக 12 மணியளவில் விசேஷ பூஜைகள் செய்து நடை திறக்கப்பட்டு. தொடர்ந்து பொதுஆவுடையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்படும். இவ்விழாவில் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் பக்தர்கள் கலந்துக்கொண்டு, தங்கள் கொண்டு வரும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளை காணிக்கைகளாக செலுத்தி வழிபடுவர்கள்.

     

     

  • பள்ளி கொண்டு அருள் பாலிக்கும் சுருட்டப்பள்ளி சிவன் 

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தமிழக ஆந்திரா எல்லையில் உள்ளது சுருட்டபள்ளி. 1000 ஆண்டுகள் பழமையான இந்த சிவன் கோவில் பார்வதி தேவிவுடன் சிவ பெருமான் சயனகோனத்தின் பள்ளி கொண்ட ஈஸ்வரர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். சிவனை நின்ற நிலையிலோ அல்லது லிங்க வடிவிலோ தான் பார்த்திருப்போம். பெருமாளை மட்டும்தான் சயனக்கோலத்தில் பார்க்கமுடியும். ஆனால் பார்வதியின் மடியில் தலை வைத்து சயனக்கோலத்தில் காட்சி தரும் சிவனை இங்கு தரிசிக்கலாம். இவரை பள்ளிகொண்டீஸ்வரர் என அழைக்கிறார்கள். சிவன் ஒரு முறை கோபத்தில் ருத்ர தாண்டவம் ஆடியபோது அதன் உக்கிரம் தாங்காமல் அனைத்து உலங்கங்களும் நடுங்கத் தொடங்கின. பார்வதிதேவி தேவர்கள் யோகிகள் ஞானிகள் என்று யார் வேண்டியும் சிவன் கேட்பதாக இல்லை. சிவனின் வாகனமான நந்திகேஸ்வரர் போய் சிவனிடம் கோபத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு வேண்டினார். அவரிடம் சிவன் “ நான் எங்கே போய் ஆடுவது?” என்று கேட்க “ என் தலையில் ஏறி ஆடுங்கள் நான் தாங்கிக் கொள்கிறேன் “ என்று நந்தி பதிலளித்தார். சிவனும் நந்தியின் இரு கொம்புக்கு இடையே நின்று நர்த்தனம் ஆடி கோபம் தணிந்தார். பிரமாண்ட வடிவம் கொண்டு பார்வதியின் மடியில் ஆனந்த புன்னகையுடன் சிவன் சயனத்தில் உள்ளார். சுருட்டப்பள்ளி சென்று வணங்கினால் மாங்கள்ய பாக்கியம் நிலைக்கும் என்பது பெண்களின் தீராத நம்பிக்கை. கர்ப்பக்கிரக சுவரில் தேவர்கள் ரிஷிகள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். ‘ சர்வமங்களா ‘ என்ற பெயருடன் அம்பாள் பார்வதி விளங்குகிறாள். அம்பாளை வணங்கும் பெண்களுக்கு சர்வ மங்களமும் குறிப்பாக மாங்கல்ய பாக்கியம் அமையும். சிவன் பள்ளி கொண்ட நிலையில் அருள் புரியும் தலம் என்பதால் பள்ளிகொண்டேஸ்வரர் கோயில் என்றும் சுருட்டப்பள்ளி கிராமத்தில் இருப்பதால் சுருட்டப்பள்ளி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. சிவனுக்கு எதிரிலுள்ள சின்ன நந்திக்கு பிரதோஷ பூஜையும் சிவராத்திரியன்று உற்சவருக்கு நான்கு கால அபிஷேகமும் அலங்காரமும் சிறப்பாக நடக்கும். இதைத் தவிர தம்பதி சமேதராக தட்சிணாமூர்த்தி இங்கு காட்சி தருகிறார்.

  • மோட்சம் கொடுக்கும் யோக நரசிம்மர்….

    தொண்டை நாட்டு 22 திவ்யதேசங்களில் ஒப்பற்ற திவ்யதேசம் சோளிங்கர். காஞ்சிபுரத்திற்கும், திருவேங்கடமலைக்கும் இடையிலுள்ள திவ்ய தேசம் ஆகும்.

    பெருமாளின் 108 திருப்பதிகளில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற சோளிங்கர் திருத்தலம் 1000 – 2000 ஆண்டுகள் பழமையான கோவில் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

    இங்கு 500 அடி உயரமுள்ள (1500 படிகள் அமைந்து) கடிகாசலம் என்ற பெரிய மலைமீது மூலவரும், அதன் அருகிலுள்ள சிறிய மலையில் (406 படிகள் அமைந்து) சங்கு சக்கரத்துடன் ஆஞ்சநேயரும், கீழே உற்சவரும் அருள்பாலிக்கிறார்கள்.

    இத்தலத்தில் ஒரு கடிகை (24நிமிடம்) இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    சிறிய மலையிலிருந்து பார்த்தால் யோக ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது.

    ஒரு காலத்தில் விசுவாமித்திரர் இத்தலத்தில் சிறிது நேரம் நரசிம்மனை வழிபட்டு “பிரம்மரிஷி’ பட்டம் பெற்றாராம். அதே போல் தங்களுக்கும் பெருமாளின் தரிசனம் உடனடியாக வேண்டும் என்ற காரணத்தினால். வாமதேவர், வசிஷ்டர், கத்யபர், அத்திரி, ஜமத்கனி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய சப்தரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர்

    ராமாவதாரம் முடிந்ததும் ராமன் ஆஞ்சநேயரிடம், “”இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதை போக்கி வை,” என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து காலன், கேயன் என்னும் இரு அரக்கர்களுடன் சண்டை செய்ய, அது முடியாமல் போனதால் ராமனை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு, சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து ரிஷிகளை காப்பாற்றினார்.

    கடைசியில் ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். இந்த அவதாரத்தை கண்டு களித்த ஆஞ்சநேயரிடம் பெருமாள், “”நீ எனக்கு முன்பாக கையில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்து என்பக்தர்களின் குறைகளை போக்கி வா,”என்று கூறினார்.

    அதன்படி ஆஞ்சநேயர் நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையில் “யோக ஆஞ்சநேயராக’ சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

  • நிறம் மாறும் அதிசய விநாயகர்

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கிராமத்தில் நிறம் மாறும் அதிசய விநாயகர் சிலை ஒன்று உள்ளது. தக்கலையிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கேரளபுரம் கிராமம். இங்கு 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி பல்வேறு பதிவார தெய்வங்கள் உள்ளன. அவ்வாறு பதிவார தெய்வமாக விளங்கும் இரண்டரை அடி உயரமுள்ள விநாயகர் சிலை ஒன்றை, அதிசய விநாயகராக அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். மகாதேவர் ஆலயத்தில் உள்ள இந்த விநாயகருக்கு விமான மண்டபம் இல்லை. வெயில், மழை இரண்டுமே விநாயகர் சிலை மீது விழும். விநாயகர் நிறம் மாறும் காலகட்டத்தில், அங்குள்ள கிணற்று தண்ணீரும் மாற்றமடைவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த சிலை சந்திர காந்தக் கல்லினால் செதுக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்கள் கறுப்பாகவும், ஆறு மாதங்கள் வெள்ளையாகவும் விநாயகர் காட்சியளிக்கிறார். விநாயகர் கறுப்பாக இருக்கும் போது, தண்ணீர் கலங்கலாக சுவை இழந்தும், விநாயகர் வெள்ளையாக இருக்கும் போது, கிணற்றின் தரை பகுதி வரை தெரிவதுடன் தண்ணீரும் சுவையாக இருக்கும் என கூறுகின்றனர்.

  • தேரழந்தூர் பெருமாள் கோயிலில் ரதம் வெள்ளோட்டம்

    தேரழந்தூர் ஸ்ரீஆமருவி பெருமாள் கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட ரத வெள்ளோட்டம் விமர்சையாக நடைபெற்றது.
    நாகை மாவட்டம், குத்தாலம் வட்டம் தேரழந்தூர் கிராமத்தில், 108 வைணவ திருத் தலங்களில் 10-ஆவது தலமும், பஞ்ச கிருஷ்ணாரன்ய சேத்திரத்தில் முதன்மையானதுமான ஸ்ரீஆமருவி பெருமாள் கோயில் உள்ளது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த கோயிலில் புதிதாக தங்க முலாம் பூசப்பட்ட ரதத்தின் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதையொட்டி கோயிலின் திருமங்கை மன்னன் மண்டபத்தில் சிறப்பு ஹோமங்கள், பூர்ணாஹுதி, பிரதிஷ்டை, கும்ப புரோக்ஷனம் ஆகியவை செய்யப்பட்டு, ரதம் வெள்ளோட்டம் கோயிலின் உள்பிரகாரத்தில் நடைபெற்றது.

  • திருமகளாய் அருளும் திருமால்!

     

    கல்யாண வரம் அருளும் பெருமாளின் திருத்தலங்களில் ஒன்று ஔஷதகரி. சென்னை செங்கல்பட்டு மார்க்கத்தில் உள்ளது சிங்க பெருமாள் கோவில்.இங்கிருந்து ஒரகடம் செல்லும் வழியில் சுமார்  8 கி.மீ. தொலைவில் ,ஆப்பூர் எனும் கிராமத்தின் வலப்புறம் அமைந்திருக்கிறது. ஔஷதகரி எனும் குன்று.இதன் மீது கோயில் கொண்டிருக்கும் பெருமாளுக்குப் புடவை சாத்தி வழிபடுகிறார்கள்.

    பொதுவாக பெருமாளின் திருமார்பில் திருமகளும் தாயாரும் இருப்பதை நாம் பல தலங்களில் தரிசித்திருப்போம்.ஆனால் ஔஷதகரி கோயிலில் அருளும் ஸ்ரீநித்ய கல்யாண பிரசன்னவேங்கடேச பெருமாளே திருமகளாக தரிசனம் தருவதகா ஐதிகம். அதன் காரணமாகவே இங்கே பெருமாளுக்கு ஆறு கஜ புடவை வஸ்திரமாகப் பக்தர்களால் சாத்தப்படுகிறது. கல்யாண வரம் வேண்டி வருபவர்கள் பெருமாளுக்குப் புடவை சாத்துவதாக வேண்டிக்கொள்கிறார்கள்.

     

    உயர்ந்த மலையின் மீது இயற்கை எழில் நிறைந்த சூழ்நிலையில் கோயில் கொண்டிருக்கும் பெருமாளைத் தரிசிக்க 508 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.கோயில் சிறியது தான் .ஆலய முன்மண்டபத்தில் கருடாழ்வார் கூப்பிய கரங்களுடன் காட்சி தருகிறார். மண்டபத்தின் விதானத்தில் தசாவதாரக் காட்சிகளும் அஷ்டலட்சுமியர் வடிவங்களும் கதைச் சிற்பமாக வடிக்கப்பட்டிருகின்றன. கருவறையில் ஸ்ரீநித்ய கல்யாண பிரசன்னா வெங்கடேச பெருமாள் சங்கு சக்கரம் ஏந்தியும்.அபய ஹஸ்தம் காட்டியபடியும் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். சித்தர்களும்,அகத்திய மகரிஷியும் வழிப்பட பெருமாளே இங்கு எல்லாமுமாக இருப்பதாக ஐதிகம். ஆகவே ,பெருமாளையும் கருடழ்வாரைத் தவிர வேறு தெய்வங்களோ சந்நிதிகளோ இல்லை. அனுமன் இலங்கைக்குச் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் வழியில் விழுந்த சிறு குன்றே ஒளஷதகிரியாக இங்கு காட்சி  தருகிறது. அற்புத மூலிகைகள் நிறைந்த  மலை என்று இதை குறிப்பிடுவார்கள். இங்கு எப்போதும் வற்றாமல் திகழும் கிணற்று திர்த்தமே பெருமாளின் திருமஞ்சனத்துக்குப் பயன்படுகிறது. பெருமாளே திருமகளின் அம்சமாகவும் அருளும் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டால் வறுமை,கடன் தொல்லைகள் நீங்கும், செல்வகடாட்சம் ஸித்திக்கும். மேலும்,மூலிகைகள் நிறைந்த தலமாதலால் இங்கு வரும் பக்தர்களுக்கு உடற்பிணிகள் நீங்குவதோடு ,பெருமாளின் திருவருளால் மனப்பிணிகளும் நீங்கி மகத்தான வாழ்க்கை அமையும்.

     

  • நாக தோஷம்  தீர்க்க சுப்பிரமணியர்  கோவிலுக்கு செல்க!

     

    ராமபிரானால்  நிறுவிய சுப்பிரமணியர் ஆலயம்  கேரளாவில்  கண்ணூர் நகரிலிருந்து  கூத்தம்பாரா செல்லும் வழியில் 14  கிலோமீட்டர் தொலைவில் பேரளச்சேரி சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது.

    நாக தோஷம் நிவர்த்தி தர வல்ல கோவில் இதுவாகும். இக் கோவிலில் உள்ள பாம்பு  தெய்வங்களுக்கு முட்டையை படைத்து வழிபடு வார்கள். நாக தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலில்  தினமும் நடைபெறும் நாகபூஜையில் கலந்துக் கொண்டு தங்களுடைய தோஷத்தை போக்கி  வளமான வாழ்க்கையை வழங்கும் படி வேண்டிச் செல்கின்றனர்.

     

    தல  வரலாறு

    படைப்புக் கடவுளான பிரம்மனுக்குத் தன்னைத் தவிர வேறு எவராலும் படைப்புத் தொழிலைச்  சிறப்பாக செய்ய முடியாது என்கிற கர்வம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் தன்னுடைய படைப்புத் தொழிலின் பெருமைகளைச் பற்றிச் சிவபெருமானிடம் சொல்லி,அவரது பாராட்டுகளைப் பெற்று செல்லாம் என நினைத்து கயிலாய மலைக்கு வந்தார்.

    அவர் வந்த வேளையில்,இறைவன் சிவபெருமான் தியானத்தில் இருந்தார். அதனால் ,கயிலாய மலையில் இருந்த விநாயகர்,முருகன்,நந்தி,சிவகணங்கள்,முனிவர்கள் என்று அனைவரும் வெளியில் காத்திருந்தனர்.அங்கிருந்த அனைவருக்கும் மரியாதை செலுத்திய பிரம்மன். சிறுவனாக இருந்த முருகனுக்கு மட்டும் மரியாதை செலுத்தவில்லை.

     இதனால் கோபத்தில் இருந்த முருகர் பிரம்மனிடம் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா? என்று கேட்டார்.

    அந்த கேள்விக்கு பிரம்மனுக்கு  பதில் சொல்ல  முடியவில்லை. அவர் பிரணவத்தின் பொருள் தெரியாமல் விழித்தார்.உடனே, ’பிரணவத்தின் பொருள் தெரியாமல் படைப்புத் தொழில் செய்வது மட்டுமில்லாமல், அதை நினைத்துப் பெருமை கொள்கிறாயா?’ என்று சொல்லியபடி அவரைத் தலையில் குட்டிச் சிறையில் அடைத்தார் முருகன்.

    தியானத்தில் இருந்த எழுந்த சிவ பெருமான்,பிரம்மனை முருகன் சிறை வைத்திருப்பதை அறிந்த அங்கே வந்தார்  அவர் முருகனிடம் பிரம்மனை விடுவிக்கும் படி வேண்டினார்.

     தனது தந்தையே நேரில் வந்து வேண்டியதால் முருகனும் முருகன் பிரம்மனை விடுவித்தார். அதன் பின்னர் சிவ பெருமான், பிரணவத்தின் பொருள் உனக்கு தெரியுமா என முருகனிடம் கேட்டார். நன்றாக தெரியும் என்றார் முருகர். அப்பொருளை எனக்குச் சொல்லும் படி இறைவன் கேட்டார். உரிய முறையில் கேட்டால் உங்களுக்கு விளக்கமாகச் சொல்வேன் என்றார்  முருகர். இதையடுத்து சிவபெருமான்  முருகன் முன்பாகச் சீடனாக அமர்ந்து ,பிரணவம்  குறித்து விளக்கம் கேட்டார். முருகனும் சிவபெருமானுக்குப் பிரணவ மந்திரத்தின் முழுப் பொருளையும்  விளக்கினார். அன்று முதல் ,சுவாமியாகிய சிவ பெருமானுக்கு முருகன்  குருநாதனாக ஆனார்.அதனால் முருகன்,சுவாமிநாதன் என்றும்,பரமகுரு என்றும் தகப்பன்சாமி என்றும் பல பெயர்களால் போற்றப்பட்டார். இந்த கதை நாம் அனைவருக்கும் தெரிந்தது தான்.

     முருகன் படைப்புக் கடவுளைச் சிறை வைத்தால் ,பிரம்மன் படைப்புத் தொழிலைச் செய்ய முடியாமல் போனது. அதனால் முருகனுக்கு ஒருவரின் தொழிலைச் செய்ய விடாமல் தடுத்த பாவம் வந்து சேர்ந்தது. அதனால்  அந்த பாவத்திலிருந்து விடுபதுவதற்காகத் தந்தை சிவபெருமானின் அறிவுறுத்தலின் படி, நாகப்பாம்பாக உருவம்  கொண்டு பூமியில் தனிமைபடுத்தப்பட்டீருந்த கிணறு ஒன்றில் வாழ்ந்து வந்தார். அவரைச் சூரிய வெப்பம் ,மழை ஆகியவற்றிலுருந்து பாதுகாப்பதற்காக பல பாம்புகள்  அவருக்குக் குடையாக  நின்று அவரை காத்துக் கொண்டிருந்தன.

    தனது மகனின் நிலையை நினைத்து வருந்திய பார்வதி தேவி,சிவ பெருமானிடம்,முருகனை நாகப்பாம்பு உருவிலிருந்து விடுவிப்பதற்கான வழிமுறைகளைக் கேட்டார்.சிவ பெருமான் சொன்ன வழி முறைகளின் படி, பார்வதி தேவி பதினெட்டு  சஷ்டி விரதங்களை மேற்கொண்டு,கிணற்றில் பாம்பு வடிவிலிருந்த முருகனைத் தொட்டதும் முருகன் உண்மையான தோற்றத்தைப் பெற்றார்.

     

     

    சீதையை தேடி இந்த பகுதிக்கு  வந்தார் ராமபிரான். அந்த இடம் சுப்பிரமணியர் கோவில் இருக்க வேண்டிய இடம்  என்பதை உணர்ந்தார். அங்கு கோவில் அமைக்க திட்ட மிட்ட ராமர்,அனுமனை இமைய மலைக்கு சென்று  சுப்பிரமணியர் சிலையை செய்து கொண்டு வரும் படி அனுப்பினார். அனுமன் சிலையை கொண்டு வர தாமதம் ஆனாதால்,ராமர் தன் கையில்  அணிந்திருந்த வளையல் ஒன்றினை எடுத்துக் கோவில் கருவறையில் சிலையாக நிறுவிக் கும்பாபிஷேகம் நடத்தி முடித்து விட்டார். அதன் பின் அனுமன்  தான் கொண்டு வந்த சுப்பிரமணியர் சிலையை அருகில் உள்ள இடத்தில் நிறுவி கும்பாபிஷேகம் நடத்தினார்.

     இங்கு சுப்பிரமணியர் நாக வடிவில்  இருந்ததால் இக்கோவிலில் தாமிரம் மற்றும் வெண்கலத்தால்  ஆன பாம்பு சிலைகளே முதன்மைக் கடவுளாக இருக்கின்றன. கோவில்  வளாகத்தில் பல இடங்களில் பாம்புகளின் கற்சிலைகளும்  வைக்கப்பட்டிருகின்றன.

    இக் கோவிலில் உள்ள பாம்பு  தெய்வங்களுக்கு முட்டையை படைத்து வழிபடுவர்கள். நாக தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலில்  தினமும் நடைபெறும் நாகபூஜையில் கலந்துக் கொண்டு தங்களுடைய தோஷத்தை போக்கி  வளமான வாழ்க்கையை வழங்கும் படி வேண்டிச் செல்கின்றனர்.

    கோவில் வளாகத்தில்  சுப்பிரமணியர் நாகப்பாம்பு வடிவத்தில்  வாழ்ந்த  கிணறு என்று  கருதப்படும் மிகப்பெரிய படிக்கிணறு இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில்  அமைக்கப்பட்டிருக்கும் படிகிணற்றைப் போல மிகபெரியதாகவும், அந்தக் கட்டுமானத்தைப் போன்ற தோற்றமுடையதாகவும் இருக்கும். இந்த கிணறு தென்னிந்தியாவின் மிகப்பெரிய படிக்கிணறு என்பது குறிப்பிடத்தக்கது.

        

  • கந்த சஷ்டி பழமுதிர்சோலையில் லட்சார்ச்சனை…

    அழகர்கோவில், திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும். அங்கே மலைமீது பழமுதிர்சோலை மலைக்கிழவோனாக முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். திருச்செந்தூரில் மருமகனாகிய முருகனின் தயவில் மாமனாகிய திருமாலின் கோயில் அமைந்துள்ளது. அதற்கு நேர்மாறாக, இங்கே பழமுதிர்சோலையில் மாமன் தயவில் மருமகன் கோயில் கொண்டுள்ளார் என்பார்கள். சோலைமலை, திருமாலிருஞ்சோலை மலை, திருமாலிருங்குன்றம் என்றும் இந்த மலைக்குப் பெயர்கள் உண்டு. பரிபாடல் இதன் புகழைப் பாடுகிறது. அழகர் கோயில் மலைக்கு மேல் இரண்டு மைல் தூரத்தில் சிலம்பாறு இருக்கிறது. இதை ‘நூபுர கங்கை’ என்றும் சொல்வர். இதற்குப் போகும் வழியில், முன்பு வேல் பொறித்த சிலை ஒன்றை மக்கள் வழிபட்டு வந்தனர். அதுவே பழமுதிர்சோலை மலையாகிய ஆறாவது படைவீடு ஆயிற்று. இமயன் இத்தலத்தில் இடபமாகிய தரும வடிவுடன் தவமியற்றி, தன் பெயரால் இம்மலை விளங்கவேண்டுமென இறைஞ்சி இறைவனருள் பெற்றதால் இம்மலை இடபகிரி என்றும் அமைவதாயிற்று.வேல் மூலவராக உள்ள முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு, இருபுறமும் வள்ளி, தெய்வகுஞ்சரி விளங்க நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார். கல்லால் ஆகிய வேலுக்கு தனிச்சிறப்பு உள்ளது. இத்தலத்தின் தீர்த்தமாக திருச்சிலம்பாறு என்ற சுனை உள்ளது. இது திருமாலின் திருச்சிலம்பிலிருந்து உற்பத்தியாகி வருவதாகக் கூறுவர். இச்சுனை மலை உச்சியிலிருந்து வரும்போது சூரிய ஒளியால் பலவிதங்களில் ஒளிரும். நவரத்தின ஒளியும் இதில் தெரியும். முருகன் எழுந்தருளியுள்ள தலங்களில் எல்லாம் ‘சரவணப் பொய்கை’ இருக்கும். அந்த வகையில் இங்கே சரவணம் என்ற பொய்கை இருந்ததென்று தெரிய வருவதால், முருகனின் திருக்கோயிலும் இருந்திருக்க வேண்டும் என்று தெளியலாம்.
    ‘ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை
    ஆறமர லந்தலம்பு துறைசேர…
    சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற
    சோலைமலை வந்துகந்த பெருமாளே…’
    என்று நூபுரகங்கையையும் சோலை மலையையும் இணைத்து முருகனைப் பாடுகிறார் அருணகிரிநாதர்.
    தினமும் காலை 11 மணிக்கு மட்டுமே ஒருகால வழிபாடு நடைபெறுகிறது. ஆனால், காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரையில் கோயில் திறந்திருக்கும். தீபாராதனை, அர்ச்சனை முதலியவற்றை அடியார்களே செய்யலாம். கந்தசஷ்டி விழா சிறப்புடையது. அப்போது லட்சார்ச்சனை நிகழ்கிறது.

  • திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடங்கியது…

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அதிகாலை ஒரு மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 மணிக்கு ஸ்ரீ ஜெயந்திநாதர் யாகசாலை புறப்படும் நிகழ்ச்சி, தொடர்ந்து காலை 9 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. 2ஆம் நாள் முதல் 5ஆம் நாள் வரை அதிகாலை 3 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது.