Category: சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்

  • காளஹஸ்தி கோயிலில் வெள்ளிக் கட்டிகளை விற்பனைக்கு!

    காளஹஸ்தி சிவன் கோயில் பாதுகாப்பு அறையில் இருப்பில் வைக்கப்பட்டுள்ள வெள்ளிக் கட்டிகளை விற்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
    காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு உள்நாடு மட்டுமன்றி, வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் ராகு-கேது பரிகார பூஜை செய்ய வருகின்றனர்.
    பரிகார பூஜையின் போது அளிக்கும் வெள்ளி நாகர் உருவங்களை பூஜைக்குப் பின், பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்தி வருகின்றனர். இதற்கு முன் கோயில் நிர்வாகம் பூஜைக்கான நாகர் உருவங்களை ஒப்பந்தப்புள்ளி மூலம் மொத்தமாக கொள்முதல் செய்து வந்தது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் கோயில் நிர்வாகம் உண்டியலில் கிடைக்கும் வெள்ளி நாகர் உருவங்களை உருக்கி வெள்ளிக் கட்டிகளாக மாற்றி, நாகர் உருவங்களை தயாரித்து வருகிறது.
    இந்நிலையில், பல்லாண்டுகளாக கோயிலின் பாதுகாப்பு அறையில் நிலுவையில் உள்ள சுமார் 17 ஆயிரம் கிலோ பழைய வெள்ளி நாகர் உருவங்களை உருக்கி, அதிகாரிகள் வெள்ளிக் கட்டிகளாக மாற்றி உள்ளனர்.
    இதனை தற்போது கோயில் நிர்வாகம் ஒப்பந்தப்புள்ளி மூலம் விற்க முடிவு செய்துள்ளது.
    இதன் மூலம் ரூ. 75 கோடி ரூபாய் கோயிலுக்கு வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர்.

  • பாவங்கள் போக்கும் ஸ்ரீ ராம நாமம்

    காக்கும் கடவுளான திருமால் எடுத்த தசாவதாரத்தில் , ஒரு மனிதன் , தான் எடுத்த மானிடப் பிறவியில் எத்தகைய ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று வாழ்ந்துக் காட்டிய அவதாரமே ஸ்ரீ ராம அவதாரம்.

    எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ , அங்கெல்லாம் நான் அவதாரம் எடுப்பேன் என்ற தெய்வ வாக்கின் படி, இந்த மண்ணுலகையும், மக்களையும் இலங்கை வேந்தனான ராவணனின் ஆணவப் பிடியில் இருந்து காக்க மகாவிஷ்ணு எடுத்த ஏழாவது அவதாரமே ராம அவதாரம் .

    பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில் தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாக நம் புராணங்கள் தெரிவிக்கின்றன.அந்த பொன் நாளையே நாம் ஸ்ரீ ராம நவமியாகக் கொண்டாடுகிறோம் . இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான புராண கதை ஒன்று உண்டு . பொதுவாக மக்கள் அனைவரும் அஷ்டமி, நவமி தினங்களில் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அந்த இரு திதிகளையும் புறக்கணித்து விடுவார்கள். இதனால் கவலையுற்ற அஷ்டமி, நவமி ஆகிய இரு திதிகளும், மகா விஷ்ணுவிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறையை கூறி மன்றாடினர்.

    அப்போது விஷ்ணு பகவான், ‘உங்களையும் மக்கள் அனைவரும் போற்றி துதிக்கும் நாள் வரும்’ என்று உறுதியளித்தார். அதன்படியே வாசுதேவர்- தேவகி ஆகியோருக்கு மகனாக, அஷ்டமி திதியில் கிருஷ்ணர் தோன்றினார். அன்றைய தினம் கிருஷ்ணஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. நவமி திதியில் தசரதர்- கவுசலை தம்பதியருக்கு மகனாக பிறந்தார் ராமபிரான். அன்றைய தினம் ராம நவமி திருநாளாக கொண்டாடப்படுகிறது

    உலகை ரட்சிக்கும் இறைவனே ஆனாலும் மனிதனாக பிறப்பெடுத்து விட்டால் , மனிதர்கள் படும் அனைத்து இன்னல்களையும் அனுபவித்தாக வேண்டும் என்று உணர்த்திய புண்ணிய புருஷர் ஸ்ரீ ராமர் . ரகு குலத்தில் தசரத மகா சக்கரவர்த்திக்கு மகனாக உதித்த ராமன், மிதிலை ஜானகி தேவியை மணந்து ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஏகபத்தினி விரதத்தை மேற்கொண்டார் . தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு உதாரண புருஷனாய் திகழ்ந்தார் .

    ராம நவமி கொண்டாடும் விதம்

    ராமர் பிறப்பதற்கு முன்பான ஒன்பது நாட்கள்’கர்ப்போஸ்தவம்’ என்ற ஒரு விரத முறையாகவும், ராமர் , பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் ‘ஜன்மோதீஸவம்’ என்ற ஒரு விரத முறையாகவும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது . இவ் விரதம் இருப்பவர்கள் தொடக்க நாளன்று ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு, ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் வரும் ஒவ்வொரு நாளும் சர்க்கரை பொங்கல், பாயசம் உள்ளிட்ட நைவேத்தியங்களை படைத்து வழிபட்டு , ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்த வேண்டும். இப்படி ஒன்பது நாளும் விரதத்தை அனுஷ்டிக்க முடியாதவர்கள், ராம நவமி தினத்திலாவது செய்ய வேண்டும்.

    ராம நவமி தினத்தன்று வைஷ்ணவ ஆலயங்களில் ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேக விழா சிறப்பாக நடைபெறும். வீடுகளில் ஸ்ரீராமர் பட்டாபிஷேக படத்தை வைத்துப் பூஜை செய்து, வடை, பருப்பு, நீர் மோர், பானகம், பாயசம் நிவேதனம் செய்து வழிபடுவார்கள். சிலர் ஸ்ரீராமர் படத்துடன் ராமாயணப் புத்தகத்தையும் வைத்துப் பூஜிப்பார்கள்.

    ராமருடைய ஜாதகத்தின்படி சூரியன்- மேஷ ராசியிலும், செவ்வாய்- மகர ராசியிலும், குரு- கடக ராசியிலும், சுக்ரன்- மீன ராசியிலும், சனி- துலாம் ராசியிலும் உச்சஸ்தானத்தில் இருக்கின்ற ஜாதகம் என்பதால் அவரின் ஜாதகம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது . ஆதலால் இந்த ஜாதகத்தை படமாக காகிதத்தில் வரைந்து வைத்தோ, அல்லது செப்பு தகட்டில் வரைந்து வைத்தோ வழிபடுவதால் நினைத்த காரியம் கைகூடும். செல்வம், புகழ் என எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

    ராம நாமத்தின் மகிமை :

    ஸ்ரீ ராமபிரான் இலங்கை செல்வதற்காக வானரங்கள் பாலம் அமைத்துக் கொண்டிருந்தனர் எல்லா வானரங்களும் கற்களைத் தூக்கி கடலுக்குள் போட்டன . ஒவ்வொரு கல்லும் மற்றொரு கல்லின் மீது சரியாக அமர்ந்தது ஆஞ்சநேயர் அந்தப் பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார் மனதிற்குள் ராமநாமம் ஜபித்த படி ராமபிரானும் இதை கவனித்துக் கொண்டிருந்தார் அவர் மனதிலும் ஆசை ஏற்பட்டது நாமும் இந்த வானரங்களுடன் இணைந்து கல்லைத் தூக்கிப் போட்டால் என்ன எனக் கருதியபடியே ஒரு கல்லை எடுத்து கடலுக்குள் போட்டார் அந்தக்கல் சரியாக மற்ற கற்களின் மீது அமரவில்லை அவை தண்ணீரில் அடித்துச் சென்று விட்டது ராமபிரானுக்கு வருத்தம் இந்த வானரங்கள் போடும் கற்கள் மட்டும் மற்றொரு கல்லின் மீது அமர்ந்து விட்டதே இதற்கு என்ன காரணமாக இருக்கும் என வருத்தப்பட்டார்

    ஆஞ்சநேயர் ராமர் அருகில் வந்தார் அவர் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார் . ஆஞ்சநேயா நான் செய்ததை நீ பார்த்து விட்டாயா எனக்கு ஒரு கல்லைபோடக்கூடத் தெரியவில்லை என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருக்கிறது என்றார். . அதற்கு ஆஞ்சநேயர, “ ப்ரபோ எல்லா வானரங்களும் உங்கள் தாரக மந்திரமான ராம் ராம் என்ற உங்கள் நாமத்தைச் சொல்லிக் கொண்டே கற்களைத் தூக்கிப் போட்டன அவை சரியாக அமர்ந்தது நீர் ராமனாகவே இருந்தாலும் ராம நாமம் சொல்லி போட்டிருந்தால் அது சரியாக கற்களில் போய் அமர்ந்திருக்கும்” என்றாராம்

    அவ்வளவு சக்தி வாய்ந்தது ராமநாமம்.!!

    ராம நாமத்தை சொல்லி ராம நவமி கொண்டாடுவோம்.
    பாவங்களில் இருந்து கரை சேருவோம் .

  • கபாலீஸ்வரர் கோயில் துவங்கிய பங்குனி திருவிழா

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

    பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அதிகாரநந்தி சேவை வருகிற ஏப்ரல் 4ஆம் தேதி, வெள்ளி ரிஷப வாகன காட்சி ஏப்ரல் 6, 63 நாயன்மார்களுக்கு காட்சி தேர் திருவிழா வருகிற ஏப்ரல் 8, 63 நாயன்மார்களோடு காட்சியளிக்கும் விழா ஏப்ரல் 9ஆம் தேதியும் நடைபெறவிருக்கிறது.

    இதைத் தொடர்ந்து அன்றைய இரவு சந்திரசேகரர் பார்வேட்டை விழாவும், ஐந்திருமேனிகள் விழாவும் நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 10ஆம் தேதி துவங்கி அடுத்தடுத்த நாட்களில் திருக்கல்யாணம் அம்சமாக பிச்சாண்டார் மற்றும் ஐந்திருமேனிகள் விழாவும், புன்னை மரத்தடியில் உமாதேவியார் மயிலுருவுடன் மாதேவரை வழிபடல், திருக்கல்யாண உற்சவம் மற்றும் உமா மகேஷ்வர் தரிசனம், பந்தம் பறி விழாவுடன் ஏப்ரல் 13ஆம் தேதியுடன் விழா நிறைவடைகிறது.

  • முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா

    மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் நடந்த பங்குனி பொங்கல்விழாவில் நூற்றுக்கணக்கானோர் பால்குடம் எடுத்தும் தீச்சட்டி எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மானாமதுரை சிவகங்கை மெயின்ரோட்டில் தயாபுரம் பஸ்ஸ்டாப்பு அருகில் உள்ளது முத்துமாரியம்மன் உள்ளது. ஆண்டுதோறும் இக் கோயிலில் பங்குனித் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனித் திருவிழா கடந்த 15 ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து தினமும் பல்வேறு மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு கோயில் பூசாரி சுப்ரமணியன் தலைமையில் வைகை ஆற்றில் இருந்து அக்னிச்சட்டி, ஆயிரம்கண் பானை, பால்குடங்கள் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தடைந்தனர். அங்கு கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீயில் இறங்கி நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடந்தன.

  • சனி பிரதோஷத்தின் மகிமைகள்…..

    சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.
    ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.


    இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
    ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால்…


    சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம். பள்ளிகொண்ட சிவனை, சுருட்டப்பள்ளி தலத்தில் பிரதோஷத்தன்று வழிபடல் நல்லது.
    பிரதோஷ நாளான திரயோதசியன்று சூரிய அஸ்தமன நேரத்தில், அதாவது மாலை நாலரை முதல் ஆறரை மணிக்குள் வழிபாடு செய்வதே முறை. இதற்கு மாறாக இரவு 8 மணி வரை இந்தவழிபாட்டைச் செய்வது தவறு.


    பிரதோஷ நேரத்துக்குள் அபிஷேக ஆராதனைகள், ஸ்வாமி புறப்பாடு ஆகியவற்றைச் செய்தால்தான் பிரதோஷ பூஜையின் முழுமையான பலன்களைப் பெற முடியும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிந்து விடுகிறது. அதன் பின்னர் செய்வது ‘அந்திபூஜை’யாக இருக்கும். அது பிரதோஷ பூஜையாகாது.
    பிரதோஷ நேரத்தில் மூலவரின் சக்தி, உற்சவ மூர்த்திக்கு வந்து விடுவதால், அப்போது மூலமூர்த்திக்கு எந்த வித வழிபாடும் செய்யக் கூடாது என்ற கருத்து, சரியல்ல. பிரதோஷ காலத்தில் மூலமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து செய்யலாம்.
    சில இடங்களில் பிரதோஷ நேரத்தில் மூலவருக்கு முன்னாலுள்ள நந்தீஸ்வரருக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். பிரதோஷத்தின்போது பிரபஞ்சத்திலுள்ள அனைத்து நந்திகளின் திருக் கொம்புகளிடையேயும் சிவபெருமான் நடனமாடுவதால், ஆலயத்தின் அனைத்து நந்தி மூர்த்திகளுக்குமே வழிபாடு செய்வதுதான் முறை.

  • கார்த்திகை தீபத்தின் சிறப்புகள்….

    “திருஅண்ணாமலையை நினைக்க முக்தி” அவ்வளவு சிறப்பு வாய்ந்த தலம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில். சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக அறியப்படும் தலம் இது. இப்படி சிறப்புகள் அதிகம் வாய்ந்த திருவண்ணாமலையில், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் ஏற்றக்கூடிய கார்த்திகை தீபம். இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் அண்ணாமலையார், எல்லாம் வல்ல ஆவுடையார் சிவனே ஒளிப்பிழம்பாக வெளிப்படுவதாக ஐதீகம். திருவண்ணாமலையை சுற்றினாலேயே அத்தனை இன்பம்… இறைவன் அங்கு வந்து ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறார். உருவ வழிபாட்டையெல்லாம் கடந்து ஞானிகள் இறுதி நிலையை அடைவது அருட்பெரும் ஜோதி வழிபாடு. அதனால், ஜோதி வழிபாடான இந்த கார்த்திகை தீபம் என்பது எல்லா வகையிலும் சிறப்பானது. இதில், பரணி தீபம் இருக்கிறது, கார்த்திகை தீபம் இருக்கிறது. பரணி தீபம் என்பது பொருள், செல்வம், சொத்து, சுகம், பதவி, பட்டம், புகழ் எல்லாவற்றையும் கொடுக்கக் கூடியது. கார்த்திகை தீபம் என்பது மோட்ச தீபம். இறைவனடி போதும், பொருள் வேண்டாம், அருள் வேண்டும் என்பது. டிசம்பர் 12 ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. எந்த தீபத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ கார்த்திகை தீபத்தைப் பார்த்தாலே எல்லா வகையிலும் சிறப்பு உ‌ண்டாகு‌ம். தவிர, ஒரு தெளிவு நிலை, தீர்க்க நிலை உண்டாகும். அதனால் கார்த்திகை தீபத்தை மட்டும் அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும். அது எல்லா வகையிலும் சிறப்புதரும்.

  • சபரிமலையில் ஐயப்பன் கோயில் நடை திறப்பு

    மண்டல பூஜை காலத்துக்காக, சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை (நவம்பர் 15)நடை திறக்கப்படுகிறது.
    சபரிமலையில் ஐயப்பனுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை 1-ஆம் தேதி முதல் 41 நாள்கள் மண்டல பூஜை நடைபெறும்.
    இந்த ஆண்டு, வரும் 16-ஆம் தேதி மண்டல காலம் தொடங்குகிறது. இதற்காக நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு, மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி நடையை திறந்து, ஐயப்பனின் தவக்கோலத்தை களைந்து மூலஸ்தானத்தில் தீபம் ஏற்றுவார்.
    இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கு மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி, மாளிகைப்புரம் மேல்சாந்தி மனுகுமார் நம்பூதிரி ஆகியோர் இருமுடி கட்டி 18-ஆம் படி ஏறி கோயில் முன்புறத்துக்கு வருவர். மாலை, 6.30-க்கு புதிய மேல்சாந்திகளுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிஷேகம் நடத்தி, அய்யப்பன் மூலமந்திரம் சொல்லிக் கொடுத்து, கோயிலுக்கு அழைத்து செல்வார். இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும்.
    நவம்பர் 16-ஆம் தேதி அதிகாலை, 4 மணிக்கு, புதிய மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி ஐயப்பன் சன்னதி நடைதிறந்ததும், இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும்.
    தொடர்ச்சியாக, 41 நாள்களும் அதிகாலை, 3 மணிக்கு நடை திறந்து, பூஜைகள் நடைபெறும். இரவு 11 மணிக்கு நடை அடைப்பு நடைபெறும். டிசம்பர் 26-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறும்.

  • சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்?

    தானத்தில் சிறந்தது அன்னதானம்….
    ஒருவனுக்கு எதைக் கொடுத்தாலும் போதும் என்று சொல்லும் மனம் வராது. ஆனால், சோறு எனப்படும் அன்னம் மட்டுமே போதும் என்று சொல்ல வைக்கும்…. நாம் உண்ணும் உணவிற்கும் நம் எண்ணத்திற்கும் கூட தொடர்பு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?

    சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது ஏன்?
    எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக வேதத்திலே கூறப்பட்டுள்ளது.
    அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. அந்த இறைவனின் அருவுருவமான லிங்க மூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள். அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம்.
    ஐப்பசி மாத முழுநிலவு நாளில் அஸ்வினி நட்சத்திரம் கூடி வரும் வேளையில் உலகெங்கும் உள்ள சிவ ஆலயங்களில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது மரபு.
    ஒவ்வொரு மாத பவுர்ணமியிலும் ஒவ்வொரு அபிஷேகம் சிறப்பாகும். ஐப்பசி மாத பவுர்ணமியில் உலகம் முழுவதையும் காத்து படி அளக்கும் சொக்கநாத பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது மிகச்சிறப்பாகும்.
    பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான் அன்று அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.
    அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.
    இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.
    அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம்.சிவன் அபிஷேகப்பிரியர். மொத்தம் 70 பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம் அவற்றுள் ஒன்றுதான் சுத்த அன்னம். சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையதாகும்.
    அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.
    ஐப்பசி மாதம் இவ்வாறே அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது.

    அன்னாபிஷேகம் எவ்வாறு நடைபெறுகிறது?
    ஐப்பசி பௌர்ணமியன்று காலையிலே சிவ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. பின் எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னம் வடித்து லிங்கம் முழுவதும் மறையும் அளவிற்கு சாற்றுகின்றனர். இது அன்னாபிஷேகம் எனப்படுகின்றது.
    இவ்வளவு மகிமை வாய்ந்த அன்னாபிஷேகம் நவம்பர் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.
    இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாது அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று இறைவனின் அன்னாபிஷேக கோலத்தை தரிசித்து மகிழுங்கள்! இறையருள் பெறுங்கள்!

  • திருப்பதியில் பக்தர்களின் வசதிக்காக….

    திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் ரூ.500, ரூ.1000 பெறப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் இருந்து டிக்கெட் மற்றும் பிரசாத கட்டணமாக ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் பெறப்படும். மேலும், ஆந்திர அரசு பஸ்களில் வந்து செல்லும் பக்தர்களிடம் இருந்து ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    மத்திய அரசு விதித்துள்ள காலக்கெடு முடியும் வரையில் இவ்வாறு பெறப்படும் என கூறப்பட்டுள்ளது.
    திருமலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களிடம் ஓட்டல்கள், கடைகளில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாங்க மறுப்பதால், பக்தர்கள் பாதிக்காத வகையில், அவர்களுக்கு தேவையான பால், டீ, மோர், அன்னப்பிரசாதம் போன்றவை தரிகொண்டா வெங்கமாம்பாவில் மட்டுமல்லாமல் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவஸ்தானம் சார்பில் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • நவம்பர் மாதத்தில் இரண்டு சனி மஹா பிரதோஷம்

    சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானது ஆகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரக்கூடிய சனி பிரதோஷங்கள் சனி மஹாப்பிரதோஷங்கள் என்று வழங்கப்படுகின்றன.

    ஆலகால விஷத்தினை ஏற்றுக்கொண்டு தேவர்களை சிவன் காத்தருளியது கார்த்திகை மாத சனிக்கிழமை திரயோதசி என்று சொல்லப்படுகிறது. எனவே எல்லா மாதங்களை விட கார்த்திகையில் வரும் சனி பிரதோஷம் மிகவும் விசேஷம் ஆனது ஆகும்.

    கார்த்திகை மாதம் தமிழர்களிடத்தே மிகவும் சிறப்புவாய்ந்த ஒன்றாகும். கார்த்திகையில் திங்கள்கிழமை சோமவார விரதமாக சிவாலயங்களில் கொண்டாடப்படும். இந்தமாத பவுர்ணமியில் அண்ணாமலையார் தீபம் கார்த்திகை தீபமாக கொண்டாடப்படுகிறது. அது மட்டுமின்றி செவ்வாய்க்கிழமைகள் துர்க்கை வழிபாடு செய்ய உகந்ததாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட கார்த்திகை மாதத்தில் வரும் சனிப்பிரதோஷத்தை சனி மஹா பிரதோஷம் என்று வழங்குவது மிகவும் சிறப்பாகும்.

    ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால்,ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும்.
    அடுத்து வரும் நவம்பர் மாதத்தில் இரண்டு பிரதான சனி மஹா பிரதோஷம் வர உள்ளது.

    அதாவது நவம்பர் 12 ஆம் தேதி (ஐப்பசி 27) துலாமாதத்தில் சுக்லபட்சத்தில் ரேவதி நட்சத்திமத்துடன் கூடிய சனி மஹா பிரதோஷம்.
    அதேபோல நவம்பர் 26 ஆம் தேதி (கார்த்திகை 11) விருகஷிக மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் சித்திரை / ஸ்வாதி நட்சத்திரத்துடன் கூடிய சனி மஹா பிரதோஷம் ஆகும்.

    பிரதோஷ காலத்தில் எல்லா தேவர்களும் சிவாலயத்தில் கூடுவதால் பிற சன்னதிகளில் தரிசனம் கிடையாது. சிவாலய தரிசனம் எல்லா தெய்வங்களை வணங்கிய பலன் கொடுக்கும். அதுவும் சனி மஹாப்பிரதோஷங்களில் சிவாலயம் சென்று வழிபடுவது 140 பிரதோஷத்திற்கு சென்று வழிபட்டதற்கு சமம்.

    தென்நாடுடைய சிவனே போற்றி,

    எந்நாடவர்க்கும் இறைவா போற்றி. …. போற்றி

    ஓம் நமசிவாய!