Category: சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்

  • கோதண்டராமேஸ்வரர் திருக்கோவில் மஹாகும்பாபிஷேக விழா…

    கோவில்பட்டி அருகேயுள்ள புகழ்பெற்ற அகிலாண்டேஷ்வரி அம்பாள் உடனுறை கோதண்டராமேஸ்வரர் திருக்கோவில் மஹாகும்பாபிஷேக விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறில் புகழ்பெற்ற அகிலாண்டேஷ்வரி அம்பாள் உடனுறை கோதண்டராமேஸ்வரர் திருக்கோவில் மஹாகும்பாபிஷேக விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. சுவாமி, அம்பாள் மற்றும் பரிவாரமூர்த்திகள் விமானகோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, தீபாரதனையுடன் மஹாகும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறில் புகழ்பெற்ற அகிலாண்டேஷ்வரி அம்பாள் உடனுறை கோதண்டராமேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.இக்கோவில் மஹாகும்பாபிஷேக திருவிழா கடந்த 20ந்தேதி கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. 4 கால யாகசாலை பூஜைகள் முடிவடிந்த நிலையில் இன்று மஹாகும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில் தொடர்ந்து யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்த புனித நீர் திருக்குடங்கள் மேள தளம், வேதமந்திரங்கள் முழங்க ஊர்வலமாக கோவில் வளாகத்தினை சுற்றி எடுத்து வரப்பட்டது.

     

    இதையெடுத்து அகிலாண்டேஷ்வரி அம்பாள் உடனுறை கோதண்டராமேஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பாரிவார மூர்த்திகள் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் மஹாகும்பாபிஷேகத்தினை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது

  • ஸ்ரீகோதண்டராமர் ஆலயத்தில் ஹனுமன் ஜெயந்தி விழா

    காரைக்காலில் ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோவில்பத்து ஸ்ரீகோதண்டராமர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள த்ரிநேத்ர தசபுஜ பஞ்சமுக ஆஞ்சனேயர் ஏகாந்த அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

    காரைக்கால் அடுத்த கோவில்பத்து பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் ஆலயத்தில் ஹனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மூலவர் ஸ்ரீதேவி,பூதேவி சமேத வரதராஜ பெருமாள், உற்சவர் ஸ்ரீகோதண்டராமர் மற்றும் ஸ்ரீத்ரிநேத்ர தசபுஜ பஞ்சமுக வீர ஆஞ்சநேயருக்குசிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெற்றது.

    இதில் பால்,தயிர், மஞ்சள், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், திரவியப்பொடி மற்றும் பலவகை பழங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து ஏகாந்த அலங்காரத்தில் பக்தர்கள் அருள்பாலித்தார் பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

  • புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு அபிஷேகம்

    புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு அபிஷேகம்

     

  • ஆபத்தில் இருந்து காக்கும் அஸ்வினி தேவ மந்திரம்

    அஸ்வினி நட்சத்திரத்தின் தேவதைகளான அஸ்வினி குமாரர்களுக்குரிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் 27 வரை துதிப்பது நல்லது.

    விபத்து, ஆபத்தில் இருந்து காக்கும் அஸ்வினி தேவ மந்திரம்
    அஸ்வினி தேவதே ஸ்வேத வர்நொவ்
    தாவஸ்விநௌ து மஹ
    சுதா சம்பூர்ண கலச கராலஜெள
    அஸ்வ வாசு கநௌ

    அஸ்வினி நட்சத்திரத்தின் தேவதைகளான அஸ்வினி குமாரர்களுக்குரிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் 27 வரை துதிப்பது நல்லது. மாதத்தில் வருகின்ற அஸ்வினி நட்சத்திர தினத்தன்று அஸ்வினி தேவர்களை மானசீகமாக வழிபட்டு, இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிப்பதால் உங்கள் உடலில் இருக்கின்ற எப்படிப்பட்ட நோய்களும் நீங்கும். விபத்துக்கள், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படாமல் காக்கும். தீய எண்ணம், நடத்தை கொண்ட மனிதர்கள் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடாமல் தடுக்கும்.
     

  • ஷீரடி சாய்பாபாவுக்கு குடமுழுக்கு….

    திருத்தணி அருகே உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலின் நுழைவு வாயில் கோபுரத்தின் மகா குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
    திருத்தணி அடுத்த, தலையாறிதாங்கல் கிராமத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் தான் குடமுழக்கு விழா நடைபெற்றது. இக்கோயில் முன், புதிதாக நுழைவு வாயில் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
    இதன் குடமுழுக்கு விழா, பாலசுப்பிரமணியர், நவக்கிரகங்கள் ஆகிய மூர்த்திகள் ஸ்தபன நவ கலசாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    இதையொட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை காலை, 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நவக்கிரஹ பூஜை, லட்சுமி பூஜை, கோ பூஜை, தன பூஜை பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றன. புதன்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை, மாலையில் 3-ஆம் கால யாக பூஜை, இரவு பாபா திருவீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  • கடன் தீர என்ன அபிஷேகம் செய்யலாம் ….

    பலவிதமான வழிபாடுகளுள் விரைவாக பலன் தரும் ஒன்று, அபிஷேகம், ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. அதன்படி இறைவனுக்கு அந்தந்த திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நம் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நிச்சயம்.

    முக்தி கிடைக்க:
    இறைவனை நெய்யால் அபிஷேகம் செய்ய மனம் அமைதி பெற்று முக்தி கிடைக்க வழி வகுக்கும்.

    தீர்க்காயுசுடன் வாழ:
    சுத்தமான பசும்பாலினால் அபிஷேகம் செய்ய ஆயுள் அதிகரிக்கும்.

    குடும்ப ஒற்றுமை நீடிக்க:
    குடும்ப ஒற்றுமைக்கும், குதூகலத்திற்கும் இறைவனை இளநீரினால் அபிஷேகம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

    நல்வாழ்க்கை அமைய:
    நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்ய பிரச்னை தலையெடுக்காது

    கடன் தீர:
    மாப்பொடியினால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை தீரும்.

    நினைக்கும் காரியம் நிறைவேற:
    சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்ய காரிய சித்தி உண்டாகும்.

    பிணிகள் தீர:
    கரும்புச்சாறு அபிஷேகம் பிணிகளை அகற்றி ஆரோக்கியம் நல்கும்.
    குழந்தை பாக்யம் பெற:
    நல்ல பசுந்தயிரினால் அபிஷேகம் செய்ய குழந்தை பாக்யம் உண்டாகும்.
    பயம் போக்க:
    மனதில் தோன்றும் இனம் புரியா பயத்தை நீக்க எலும்பிச்சை சாற்றால் அபிஷேகம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
    இனிய குரல் வளம் கிடைக்க:
    இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்தால் வாழ்வும் இனிமையாகும். குரலும் தேன் குரலாகும்.
    செல்வம் சேர:
    பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்ய உடல் நலம் மட்டுமல்லாமல் செல்வமும் பெருகும். அதேபோல சந்தனத்தால் அபிஷேகம் செய்ய எட்டுவித செல்வங்களையும் அடையலாம்.
    பாவங்கள் கரைய:
    பஞ்சகவ்யத்தால் அதாவது பசுவின் ஐந்து உப உற்பத்தியான பால், நெய், தயிர், சாணம், கோமியம் சேர்த்து அபிஷேகம் செய்ய பாவங்கள் கரைய உதவும்.

  • நாத்திகருக்கும் நல்லாசி வழங்கிய காஞ்சி மாமுனி

     

     

    உலகம் தோன்றிய காலம் தொட்டே ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையே முரண்கள் நிலவி வருகிறது . கடவுள் உண்டு என்று சொல்வோரும் , இல்லை என்று சொல்வோருக்கும் இடையே பெரிய வேற்றுமை எதுவும் இல்லை .. இன்னும் சொல்ல போனால் ஆத்திகரை விட நாத்திகம் பேசும் மக்கள் தான் கடவுளைப் பற்றி அதிகம் சிந்திக்கிறார்கள்  . வளர்ந்து வரும் விஞ்ஞானம் மெய் ஞானத்தை மறைக்கப் பார்க்கலாம் . ஆனால் முடிவில் அஞ்ஞானம் என்னும் மேகத்தை விலக்கிக்கொண்டு மெய்ஞான சூரியன்  வெளிப்பட்டே ஆகும் . அதற்கு ஒரு உதாரணம் தான்  கீழ் வரும் சம்பவம் .  தன்னை எட்டி உதைக்கும் சிசுவுக்கும் அமுதூட்டுபவள் தானே அன்னை . மஹா பெரியவா அவர்களும் தன்னை தூஷித்த நாத்திகரை ஆன்மீகப் பாதைக்கு வழி நடத்திய சம்பவத்தைப் பார்க்கலாம் .

     ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக சாண்டோ சின்னப்ப தேவரும், கண்ணதாசனும்  காரில் போய்க்கொண்டிருந்தார்கள் . அப்போது  ஏற்பட்ட மிகமோசமான விபத்தில்  சின்னப்பதேவர் சிறு காயங்களுடன்  தப்பித்துக் கொண்டார் .  ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.

    காஞ்சிப்பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்டவர்  தேவர் . சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘ விபத்து நேர்ந்துவிட்டது’ என்று தான் சொன்னார் . அவர் சொல்லாமலேயே , அடுத்த நிமிடம்  ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும்பெரியவர்  கேட்க, வாயடைத்துப் போனார் தேவர்.  கண் கலங்க “அவர் படுகாயத்துடன் நினை வில்லாமல் மருத்துவ மனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார்.

    தேவரின் கவலையை உணர்ந்தபெரியவர், ‘சரி, கவலைப்படாதே… இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவுபோடு, மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’ என்று தன் திருக்கரங்களால் விபூதி எடுத்துமடித்துத் தர, தேவர் விதிர் விதிர்த்து, பெரியவரின்  பேச்சை மறுக்க துணிவின்றி தயங்க, மீண்டும் பெரியவரின் கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப் பெறுகிறார்.

    தேவர் பெரியவர் சொல்லியும் அவ்வளவு  தயங்கியதற்கு காரணம், கண்ணதாசன், நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட கட்சிகளின் சார்பில் பிராமணர்களையும் சனாதன தர்மத்தையும் மேடைகளில்  மிகவும்  தரைக்குறைவாகப் பேசிவந்த காலகட்டம் அது. விபத்து நடந்த ஒருவாரத்திற்கு முன்புதான் காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையிலேயே மடாதிபதிகளை இழிவு படுத்திப் பேசியிருந்தார்.

    எனவே அவரிடம் போய் இந்த விபூதியை எப்படிக்கொடுப்பது என்பது தான் தேவரின் பெரிய தயக்கமாயிருந்தது. ஆனால்  த்ரிகாலமும் உணர்ந்த ஞானியாகிய பெரியவர், தேவர் சொல்லாமலேயே அவரின்  மனத்தயக்கத்தை உணர்ந்து ‘தயங்காமல் கொண்டு போய் பூசு. சூரியனை சில சமயம் மேகம் மறைப்பதுபோல் நாத்திக மேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது.

    இனி அவன் சூரியனாகத் திகழ்வான். அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா? கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல் திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்.

    வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா. ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தகப்பனார். இப்ப புரியறதா?’ என திருவாய் மலர்ந்தருளினார்.

    தேவர் மனந்தெளிந்தவராய் பெரியவரை வணங்கி விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச்சென்று  நினைவிழந்துபடுத்திருந்த கண்ணதாசனின் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு சிறிது விபூதியை வாயிலும் இட்டு, மீதியை தலையணையின்கீழ் வைத்துவிட்டு வீடு திரும்பினார். அவர் சிந்தனையெல்லாம் கண்ணதாசன், நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ  என்பதைப் பற்றியே இருந்தது .

    மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று கண்ணதாசனின் படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கியபோது கண்ணதாசனுக்கு நினைவு திரும்பி கண்விழித்திருந்தார். தேவரை பார்த்தவுடன், ‘வாங்க, எத்தனை நாளா இப்படி படுக்கையில் இருக்கேன். கொஞ்சம் கண்ணாடியை எடுத்துக் கொடுங்களேன். என் முகத்தைப் பார்க்கணும்’ என்றார்.

    நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில்  அப்படியே இருக்க, தேவர் தயங்கியபடியே தந்த கண்ணாடியில் தன் முகம் கண்ட கண்ணதாசன் ‘இதென்னவிபூதி?’ என்று தேவரை ஏறிட்டுப்பார்க்க, வேறு வழியின்றி கடவுள் மேல் பாரத்தைப் போட்டு ,வந்தது வரட்டுமென தேவர், தான் பெரியவரைப் பார்த்ததையும், பெரியவர் ஆசீர்வாதம் செய்து விபூதி கொடுத்ததையும் சொல்ல, கண்ணதாசனின் விழிகளை கண்ணீர் நிறைத்தது .

     ‘எனக்கா? என்னிடமா இவ்வளவு கருணை? போனவாரம் தான் அவரை, ஐயோ’ என வாய்விட்டுப் புலம்பி அழுததோடு, தேவரிடம், ஒருவேண்டுகோளையும் சமர்ப்பித்தார். ‘எனக்கு உடல்நலமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறும் சமயம் நான் வீட் டிற்குச் செல்லமாட்டேன். இப்பாவியிடம் கருணை வைத்த அந்த மகானிடம் முதலில் என்னை  தயவுசெய்து அழைத்துச் செல்லுங்கள்’ என மன முருகி வேண்டினார்.

    அர்த்தமுள்ள இந்துமதம் உதயமான தருணம்                                                                           

    சொன்னது போல் கண்ணதாசன்  காஞ்சி மாமுனிவரை சந்தித்து  அவரிடம் தனது பாவத்திற்கான மன்னிப்பையும் வேண்டிகொண்டார் . அச்சமயம் மனதில் உத்தித்த கவிதையை சமர்ப்பித் தார் . அக் கவிதை இதோ :

    பார்த்த மாத்திரத்தில்                                       

    பாவத்தை அலம்புகின்ற

    தீர்த்தப் பெருக்கு,

    திருவாசகத்தின் உட்கருத்து

    கூர்த்த மதியால் மெய்ஞானக்

    கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்

    கலிமொய்க்கும் இவ்வுலகைக்

    காக்கவந்த கண்கண்ட தெய்வம்

    எம்மதத்தோரும் சம்மதத்துடன்

    தம்மதத் தலைவனென தொழுதேத்தும்

    தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!

     

    கவிதை வரிகளைக்கண்ட பெரியவர், கண்ணதாசனை கனிவோடு நோக்கி, ‘அனந்த கோடி அற்புத லீலா சாகித்ய மாயமானுஷாய நமோ நமஹ, அர்த்தநாரி திருவண்ணாமலை சேஷாத்ரி மகானுக்கல்லவா இது பொருந்தும்’ என்று அருளாசிக் கூறியதோடு ‘அங்கிங்கெனாத படி எங்கும் நிறைந்திருக்கும் நிர்மலப் பொருள் ஞான சூரியனாம், மதத்தின் பெருமையை எழுது’ என்று  ஆசீர்வதித்தார் . அக்கணமே கண்ணதாசனின் மனதில் தோன்றியது தான் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ . கண்ணதாசனின் ஆன்மீக சிந்தனையில் முளைத்த செந்தாமரை  .

  • ஏறின எடை குறையும் அதிசய கருடாழ்வார்….

    இந்து மதம் , பல ஆழ்ந்த வாழ்க்கை தத்துவங்களையும் , ஆச்சர்யமான பல நுட்பமான அதிசயங்களையும் தன்னுள் கொண்டுள்ளது . கோயில் , கோயில் கோபுரம் , பிரகாரம் , கொடி மரம் , பலி பீடம் , சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ள விதம் என ஒவ்வொரு படைப்பிலும் நம் முன்னோர்கள் காட்டிய நுட்பங்கள் , இன்றைய நவீன தொழில் நுட்பம் வளர்ச்சிக்கு சவால் விடுபவையே. இன்றைக்கும் எந்த நவீன தொழில் நுட்பமும் இன்னொரு தஞ்சை பெரிய கோயிலை கட்ட முடியாது என்பதே உண்மை.
    நம் நாட்டில் ஒவ்வொரு கோயிலும் ஒரு பேரதிசயமே. உள்ளத்தை கொள்ளை கொள்ளும் கட்டடக்கலை , இதைத் தாண்டி சூட்சுமமான பல அரிய பொக்கிஷங்கள் நம் கோயில்களில் மறைந்து கிடக்கின்றது. இங்கு சில ஆன்மிக அதிசயங்களை உணர்வோம்.

    ஸ்கேன் கருவிக்கு முன்பே கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை சிற்பமாக்கிய அதிசயம்

    திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, அந்தந்த மாதக்கணக்கில் எந்த வடிவத்தில் , என்ன நிலையில் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிற்பங்களாக கல்லில் வடித்து வைத்துள்ள நம் முன்னோர்களின் திறன் வியக்க வைக்கிறது . தொடர்ந்து வந்த பல அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட இந்த அதிசய சிற்பங்கள் சிதையாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்க முடிகிறது . காலங்களை முன் கூட்டி உணர்வதில் அறிவியலுக்கு அப்பாற்பட்ட அறிவை கொண்டவர்கள் நம் மூதாதையர் என்பதற்கு நிலைத்திருக்கும் சாட்சியாக நிற்கிறது இந்த சிற்ப காட்சிகள்.

    சிங்கத்தின் வாயில் வழியே குளித்தவர்கள்

    வாசல் வழிக்கு தமிழில் வாயில் என்றொரு சொல் உண்டு. சிங்கத்தின் வாயில் வழியே குளித்திருக்கிறார்கள் நம் முன்னோர். ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில் கிணறு தான் இந்த வரலாற்று அதிசயத்தின் சாட்சி. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் தென்படும் ஒரு கதவின் மூலம் கீழே இறங்கினால் அந்த கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்ப்பவர்க்கு நாம் குளிப்பது தெரியாது. இது அன்றைய ராணிகள் பாதுகாப்பாக நீராட கட்டப்பட்ட கிணறு. அக்கோவிலில் உள்ள கருவறையில் சுவர்கள் மரகதகற்கள் பதிக்கப்பட்டவை . இதன் சிறப்பம்சமே வெளியே வெயில் அடித்தால் உள்ளே குளிரும். அதே போல வெளியே மழை பெய்தால் உள்ளே கதகதப்பாக இருக்கும். இது மட்டுமில்லாமல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள் பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம் உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும் படைவீரர்களும் பதுங்கும் வகையில் கட்டியுள்ளார் சோழக் குலத் திலகம் ராஜேந்திர சோழர். கங்கை கொண்ட சோழ பெருமக்கள் புகழ் போற்றுவோம்.

    ஏறின எடை குறையும் அதிசயம்

    கும்பகோணம் அருகே , உள்ள நாச்சியார் கோவில் கருட சேவை மிகவும் பிரசித்தி வாய்ந்தது . இங்குள்ள கல் கருடாழ்வாரின் எடை அதிகமாகிக்கொண்டே போவது இன்று வரை அனைவருக்கும் வியப்பை அளிக்கக் கூடியது . காரணம் பெருமாள் புறப்பாட்டின் போது , சன்னதியிலிருந்து வெளியே வரும் வேளையில் கருடன் நான்கு பேர் தூக்கி வரும் அளவிற்கு தான் கனம் இருக்கும் . ஆனால் அதுவே பிரகாரத்தை சுற்றி வரும்போது எட்டு பேர் வேண்டும், அடுத்து பதினாறு பேர், பின்னர் வெளியே வரும் போது முப்பத்திரெண்டு பேர் , வெளியே வந்தவுடன் அறுபத்து நான்கு பேர் என எடை கூடி , தூக்கி வரும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாகிகொண்டே போகும் . இதுவே , வெளியே இருந்து பிரகாரங்கள் சுற்றி சன்னதிக்கு உள்ளே திரும்பி வரும் போது ஏறின விகிதத்திலேயே எடை குறைந்து வரும் . காலங்களை கடந்து தொடர்ந்து வரும் இந்த அதிசயத்தின் காரணம் மிகவும் சுவாரசியமானது .

    பெருமாள் மேதாவி முனிவருக்கு கொடுத்த வரத்தின் படி , தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளுகின்றாள் . பெருமாளோ கருடனில் எழுந்தருளுகின்றார். அன்னத்தை ஒப்பிடும் போது கருடன் பலம் மிகுந்தவர் , வேகமாக செல்லக்கூடிய பறவை. எனவே தான் கல் கருடனின் எடை கூடிக்கொண்டே செல்வதாக புராணம் கூறுகிறது . அதனால் இத் திருகோவிலில் இப்போதும் தாயாருக்கு தான் முதலிடம் .
    பெருமாளை தாங்கி உலா வருவதால் கல் கருடன் முகத்தில் வியர்வை வரும் காட்சி பார்க்கும் பக்தர்களுக்கு எல்லாம் மெய் சிலிர்க்க செய்யும் .
    ஆன்மீக அதிசயங்கள் வளரும் .

  • சோதனையை வென்ற தர்மர்

    மகாபாரதப் போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. காந்தாரி கொடுத்த சாபத்தின் விளைவாக யாதவர்களுக்குள் சண்டை நடந்து யாதவ குலம் முற்றிலும் அழிந்துபோனது. கிருஷ்ணரால் அதைத் தடுக்க முடியவில்லை. தனது அவதாரம் முடிவுக்கு வர வேண்டிய காலம் வந்துவிட்டதை அவர் உணர்ந்தார். அடர்ந்த புதர்கள் நிறைந்த ஒரு மரத்தடியில் கால்களை நீட்டி ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.
    அப்போது ஒரு வேடன் எய்த அம்பு அவர் பாதத்தில் நுழைந்து உயிரைக் குடித்தது.
    யாதவர்களும் கிருஷ்ணனும் இறந்த செய்தி ஹஸ்தினாபுரத்தை எட்டியது. தங்களுக்கும் முடிவு காலம் வந்துவிட்டதை தருமன் உணர்ந்தான். உலக வாழ்வைத் துறந்து செல்லலாம் என்று நினைத்தான். அவரது தம்பிகளும் திரௌபதியும் இதை ஒப்புக்கொண்டார்கள். எல்லா உறவினர்களையும் இழந்த அவர்களுக்கு இனியும் உயிர் வாழப் பிடிக்கவில்லை. அதுவும் தங்களுக்கு ஆருயிர் நண்பனாக இருந்த கிருஷ்ணனின் மறைவு அவர்களை மிகவும் பாதித்துவிட்டது.
    அர்ச்சுனனின் மகன் அபிமன்யுவின் மகன் பரீட்சித்துக்குப் பட்டம் சூட்டிவிட்டுப் பாண்டவர்கள் பாஞ்சாலியுடன் நாட்டை விட்டுக் கிளம்பினார்கள். வடக்கில் இமயமலைக்கு அப்பால் இருக்கும் மேரு மலையை நோக்கிச் சென்றார்கள். உலக இன்பங்களையும் ஆசைகளையும் பந்த பாசங்களையும் அறவே துறந்து மேருமலையைக் கடப்பவர்கள் மனித உடலுடன் சொர்க்கத்துக்குச் செல்ல முடியும் எனச் சான்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அத்தகைய பயணத்துக்குத் தேவையான மனநிலையுடன் பாண்டவர்கள் துறவறம் பூண்டார்கள். மரவுரி தரித்துக்கொண்டு புறப்பட்டார்கள். அரச பதவியையும் அரண்மனைச் சுகங்களையும் துறந்து வாழ்க்கையின் மீதான ஆசையை விடுத்து, மோட்சம் நாடிச் சென்றார்கள்.
    லட்சக்கணக்கான வீரர்களின் இறுதி யாத்திரையைத் தீர்மானித்த அந்த வீரர்கள் தங்களது இறுதி யாத்திரையைத் தாங்களே முடிவுசெய்தபடி கிளம்பினார்கள். அவர்களுடன் தருமபுத்திரன் வளர்த்துவந்த நாயும் உடன் சென்றது.
    பின்தொடர்ந்த நாய் …


    மேரு மலைக்கு யாத்திரை செல்பவர்கள் திரும்பிப் பார்க்கக் கூடாது என்பது நியதி. தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி ஆகியோர் ஒருவர் பின் ஒருவராகச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து நாயும் சென்றது.
    பாண்டவர்கள் பல நாட்கள் பயணம்செய்து இமயமலையை அடைந்தார்கள். அதைக் கடந்து சென்று மேரு மலையைத் தரிசித்தனர். மேரு மலையில் பயணம் சென்றபோது திரௌபதி சோர்ந்து விழுந்து இறந்து விட்டாள்.
    அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பீமன், “திரௌபதி ஏன் வீழ்ந்துவிட்டாள்?” எனத் தன் அண்ணனிடம் கேட்டான். தருமன் திரும்பிப் பார்க்காமல் பதில் சொன்னான்: “ஐவரிடமும் சமமான அன்பு வைக்க வேண்டியவள், அர்ச்சுனனிடம் கூடுதல் அன்பைக் காட்டினாள். அதனால்தான் அவளால் இந்தப் பயணத்தில் தாக்குப்பிடிக்க முடியவில்லை.”
    சிறிது நேரத்தில் சகாதேவன் மயங்கி வீழ்ந்தான் “சகாதேவன் ஏன் விழுந்தான்? என்று கேட்டான் பீமன். “தன்னிடம் உள்ள சாஸ்திர அறிவு வேறு யாரிடமும் இல்லை என்ற கர்வம்தான் காரணம்” என்றபடியே தருமன் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டிருந்தான்.
    அர்ச்சுனன் வீழ்ந்தான்…
    சிறிது நேரத்தில் நகுலன் சாய்ந்தான். பீமன் மீண்டும் காரணம் கேட்டான். தன்னை மிஞ்சிய அழகன் யாருமில்லை என்ற கர்வம்தான் காரணம் என்றான் தருமன். இப்போதும் திரும்பிப் பார்க்கவில்லை.
    அடுத்து அர்ச்சுனன் விழுந்தான். “தனது வில்லாண்மை குறித்த கர்வம்தான் அவனை இந்தப் பயணத்தில் வீழ்த்தியது” என்றவாறு தருமன் போய்க்கொண்டிருந்தான்.
    தனக்கும் தலை சுற்றுவதை பீமன் உணர்ந்தான். தள்ளாடி விழும் சமயத்தில் “என்னால் ஏன் தொடர்ந்து வர முடியவில்லை?” என்று கேட்டான். “உன்னைவிட பலமுள்ளவர்கள் யாருமில்லை என்னும் கர்வம்” என்று தருமன் சொல்லி முடிப்பதற்குள் பீமன் தன் கடைசி மூச்சை விட்டான்.
    ஆசாபாசங்களையும் உலகியல் உணர்ச்சிகளையும் அறவே துறந்த தருமன் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தான். நாய் மட்டும் அவனைத் தொடர்ந்தது.
    மேரு மலையின் உச்சியை அடைந்தான். அப்போது அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லத் தேவேந்திரனே விமானத்துடன் வந்தான். தருமன் விமானத்தில் ஏற முற்பட்டபோது அவனுடன் வந்த நாயும் ஏற முயன்றது. “நாய்க்குச் சொர்க்கத்தில் இடமில்லை” என்று கூறித் தடுத்தான் இந்திரன்.
    விமானத்தினுள் வைத்த காலைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டான் தருமன். “என்னை நம்பி இத்தனை தூரம் வந்த நாயை விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி வர முடியும்? நான் இங்கேயே இருந்துவிடுகிறேன்” என்றான்.
    அப்போது நாய் மறைந்தது. அங்கே தரும தேவன் நின்றார். “சொர்க்கமே கிடைக்கிறது என்றாலும் உன்னை நம்பி வந்த நாயைக்கூடக் கைவிடாத உன் குணத்தைப் பாராட்டுகிறேன். எத்தகைய சூழ்நிலையிலும் தரும நெறியிலிருந்து நீ பிறழவில்லை. இது நான் உனக்கு வைத்த சோதனை. முன்பு யட்சன் வடிவில் வந்து உன்னைச் சோதித்தேன். இப்போது நாய் வடிவில் வந்து சோதித்தேன். இந்தச் சோதனைகளில் நீ தேறிவிட்டாய். மகிழ்ச்சியோடு சொர்க்கத்துக்குச் செல்” என்று கூறி தரும தேவன் மறைந்தார்.

  • சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு திருநாள்

    சித்திரை புத்தாண்டு வந்தது எப்படி?
    வட இந்தியாவில் குப்தர் வம்சத்தை சேர்ந்த 2-வது சந்திர குப்தன் தமது பெயரை விக்கிரமாதித்தன் என மாற்றிக் கொண்டு தமது பெயரால் விக்கிரம சகம் என்ற ஆண்டு முறையை உருவாக்குகிறான். அதனடிப்படையில்தான் விக்கிரமசகம் எனும் 60 ஆண்டு முறை உருவாகிறது. இது பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் முடியும். இந்த 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர்கள்தான்.
    உலகிலேயே ஆதிகாலம் தொட்டு வானவியலில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்களே! சூரியனை மையமாக வைத்தே தமிழர்கள் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்தனர். இதையே உலகின் பல்வேறு நாடுகளும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தின. சூரியனை மையமாக வைத்து பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப் பாதையில் தமிழர்கள் 12 பாகங்களாகப் பிரித்தார்கள்.
    இந்த வான வீதியை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் 12 பாகங்களாக பிரித்தார்கள். இவையே ராசிகள் என அழைக்கப்படுகின்றன. சூரியன் மேஷத்திற்குள் நுழையும் நிகழ்வு சித்திரையில் நிகழ்கிறது. ஆகவே இந்த ஆரம்பத்தையே புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டு புது வருடத்தை அறிவியல் ரீதியாக தமிழர்கள் ஆரம்பித்தார்கள்.
    சித்திரையின் சீர்மிகு விழாக்கள்
    திருக்கோயில்களின் விழாக்கள், மிகவும் கோலாகலமாக நடைபெறும் மாதமும் சித்திரையாகும். மதுரை மாநகரில் அருள்மிகு மீனாட்சியம்மன் ஆலயத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவும், அதன் உள்நிகழ்வுகளான அம்பாள் பட்டாபிஷேகம், மீனாட்சி-சுந்தரேச்வரர் திருக்கல்யாணம் போன்றவையும் உலகப் பிரசித்தம். அழகர் மலை கள்ளழகருக்குச் சித்திரையில் பிரம்மோற்சவம். அழகர் உலா புறப்பட்டு, ஆற்றில் இறங்கி, அகிலத்தோர் எல்லோருக்கும் அருள்பாலிப்பார்.

    ஆழித்தேருக்குப் பெயர்போன திருவாரூர் தேர்த் திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறுவது வழக்கம். சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் தேரோட்டமும் இம்மாதத்தில்தான். பற்பல திருத்தலங்களில் தேரோட்டம் சித்திரையில் நடைபெறும். வைணவத் திருக்கோயில்கள் பலவற்றிலும், சித்திரை மாதம், விமரிசையான கொண்டாட்ட காலம். திருவில்லிப்புதூரில், பத்து நாள் விழா கண்டு, சித்திரா பவுர்ணமி நாளில் ரங்கமன்னாரோடு ஆண்டாள் நாச்சியார் தேரில் பவனி வருவாள்.

    சித்திரா பவுர்ணமி நாளில், சிவபெருமானை வழிபடுவதும் வெகு சிறப்பு. மருக்கொழுந்து அபிஷேகம் செய்து, வெள்ளை வஸ்திரம் சாற்றி, சுத்தான்னம் படைத்து வழிபட்டால், சகல ஐச்வரியங்களும் கிட்டும். திருநெல்வேலிப் பகுதிக்கே உரித்தான சித்திரா நதியில் நீராடி விரதமிருந்து திருக்குற்றால நாதரை வழிபடுவதும் விசேஷமானது.

    இயற்கையின் திருவிளையாடல்

    மாசி-பங்குனி மாதங்களில், மரங்களிலிருந்து இலைகள் அதிகமாக உதிரும். ஆயின், சுக்ல பக்ஷ பிரதமை நாள் நெருங்கும்போதே, புதிய துளிர்கள் துளிர்த்து, மொட்டுகள் அரும்பி, வசந்தத்தின் வண்ண விளையாட்டு, தலைகாட்டத் தொடங்கிவிடும்.

    சாந்த்ரமான யுகாதியைக் கணக்கெடுத்தால், அன்று தொடங்கி ஒன்பது நாட்களுக்குக் கொண்டாடப் பெறும் முதல் விழா வசந்த நவராத்திரியாகும். துர்க்கையை வழிபடும் விழா. இளவேனில் காலத்து விளைச்சல் நன்கமையவேண்டுமென அம்பிகையை பிரார்த்திக்க வேண்டும்.
    இதே வகையில், ஆண்டின் முதல் நாளில் தொடங்கி, ஏழு நாட்களுக்கு, நாளொன்றுக்கு ஒருவராக, ஸப்த ரிஷிகளையும் வழிபடவேண்டும்.