Category: old…

old…

  • சக்தி பீடங்கள் தோன்றிய வரலாறு ….

    சிவ பெருமான் சக்தியின் உடலை தூக்கி நடனம் ஆடி உடலை 51 பாகங்களாக துண்டுகளாக அகண்ட பாரதத்தில் வீழ்ந்த இடங்களே சக்தி பீடங்கள்!
    பிரம்ம புத்திரனான தட்சன் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து, சிவபெருமானிடம் ‘பிரஜாபதி பட்டத்துடன், ஈரேழு உலகங்களை ஆளும் வல்லமையையும்’ வரமாகப் பெற்றான்’. மேலும் ஜகன் மாதாவான அம்பிகையைப் புதல்வியாக அடையும் வரத்தையும் வேண்டிப் பெற்றான்.

    இப்படி எண்ணற்ற ஆண்டுகள் அனைத்து உலகங்களையும் ஆட்சி செலுத்திய மமதையால் அகங்காரம் மேலிட, தானே ஈஸ்வரன் என்று எண்ணத் துவங்கினான். தர்ம நெறிகளில் இருந்து முற்றிலும் விலகி செயல்படவும் துவங்கினான். வரமளித்த இறைவனிடமே குரோதம் கொண்டு, சிவபெருமானை அவமதிக்கும் பொருட்டு ஒரு யாகமும் தொடங்கினான்.

    ஹரித்வாரில் அமைந்துள்ள ‘கனகல்’ என்னும் தலத்தில் யாகம் தொடங்கப் பட்டது. அன்னை சதி தேவி தட்சனுக்கு அறிவு புகட்ட எண்ணி…. யாக சாலையில் தோன்றி அருள, தட்சனோ தேவியை அவமதித்ததோடு நில்லாமல் ஈசனையும் நிந்தித்துப் பேசினான். சிவ நிந்தனை பொறுக்காத அன்னை, ஹோம குண்டத்தில், யோகத் தீயினால் உடலை மாய்த்துக் கொண்டார்.
    இந்நிகழ்வுக்குப் பின், சிவபெருமானின் கோபத்தால் தட்சனும், அவன் யாக சாலையும், சர்வ நாசத்துக்கு உள்ளானதை சிவபுராணம் விரிவாகப் கூறுகிறது.

    சிவபெருமான், சதி தேவியின் திருவுடலைச் சுமந்த படி உக்கிர தாண்டவம் ஆடத் துவங்க, மகா பிரளயம் உருவாகும் அபாயம் தோன்றியது. ஸ்ரீமகா விஷ்ணு, சர்வேஸ்வரரை அமைதியுறச் செய்யும் பொருட்டு, தன் சுதர்சன சக்கிரத்தால் தேவியின் திருவுடலை பல்வேறு துண்டுகளாக அகண்ட இப்புவியில் சிதறும் வண்ணம் செய்தருள, அவை 51 சக்தி பீடங்களாக உருப்பெற்றன.
    இதோ 51 சக்தி பீடங்கள்.
    1 மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா
    2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு
    3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு
    4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.
    5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.
    6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு
    7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு
    8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு
    9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு
    10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு
    11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.
    12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு
    13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்
    14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்
    15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா
    16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்.
    17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா
    18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்
    19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்
    20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு
    21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா
    22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்
    23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உபதேசபீடம்)ஹரியானா
    24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு
    25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்
    26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா
    27. மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா
    28. அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்
    29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு
    30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா
    31. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு
    32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்
    33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்
    34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு
    35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு
    36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு
    37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு
    38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு
    39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு
    40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்
    41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்
    42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்
    43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா
    44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்
    45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்
    46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா
    47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்
    48. மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்
    49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா
    50. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்uபூர்- (விரஜாபீடம்) உ.பி.
    51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத்.

  • வறுத்த பயிறு முளைக்கும் அதிசயம் ….

    பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் அருகே 15 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளது திருப்புட்குழி என்ற புண்ணிய பூமி..
    ராவணன் சீதையை கடத்திசெல்லும்போது ஜடாயு என்ற அரச பறவை வழிமறித்து அவனுடன் போரிட்டது. ஆனால் வெல்லமுடியவில்லை. வெட்டப்பட்டு மரணத்தறுவாயிலிருந்த ஜடாயுவை அங்கே வந்த ராமபிரான் சந்திக்க, நடந்த சம்பவங்களை விவரித்தபடியே உயிரைவிடுகிறது. ஜடாயு விருப்பப்படி, அதற்கு ஈமக்கிரிகைகளை செய்து தீமூட்டி ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாய் ராமன் காட்சிஅளிக்கிறார். அப்போது வெப்பம் தாளாமல் ராமனின் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி நாச்சியார் இடப்பக்கமும் இடப்பக்கம் இருந்த பூதேவி நாச்சியார் வலப்பக்கம் மாறி அருள்பாவிக்க நேரிட்டது.

    அதனால்தான் திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் மட்டும் தாயார் சன்னதி பெருமாளுக்கு இடது புறமும் ஆண்டாள் சன்னதி வலப்புறமும் இருக்கும்.
    முன்னோர்களுக்கு அமாவசையன்று தர்ப்பணம் செய்தால், செய்பவர்களுக்கு இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதே போல இன்னொரு விசேஷம் என்னவென்றால், பெண்களுக்கான குழந்தை பேறு விஷயம்.

    திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், இங்கு வந்து மரகவதவல்லி தாயாரை மனமுருக வேண்டுதல் செய்யவேண்டும். மடப்பள்ளியில் பயிறை வறுத்து கொடுப்பார்கள். அதனை பெற்றுக்கொண்டு கோவிலின் ஜடாயு தீர்த்தத்தில் புனித நீராடிவிட்டு வறுக்கப்பட்ட பயிறை ஈரத்துணியில் சுற்றி மடியில் வைத்துக்கொள்ளவேண்டும்.அன்றிரவு முழுவதும் கோவில் அருகே உள்ள மடத்தில் படுத்துறங்கவேண்டும்.

    காலையில் விழித்துப்பார்த்தால், வறுக்கப்பட்ட பயிறுகள் முளை விட்டிருக்கும். இப்படி ஆச்சர்யகரமான நிகழ்வு நடந்தால் அந்த பெண்ணுக்கு உடனே குழந்தை பேறு பாக்கியம் உண்டாகும் என்பது திருப்புட்குழி கோவிலின் சிறப்பு அம்சமாகும்.
    அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பற்கு அழியுமால் என்னுள்ளம் யென்னும்
    புலங்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர் மலைக்கு யென்னும்
    குலங்கெழு கொல்லி கோமளவல்லி கொடி இடை நெடு மழைக் கண்ணி
    இலங்கெழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே என திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் பாடப்பட்ட திருத்தலம் இது..

    – ஏழுமலை வெங்கடேசன்

    தமிழின் மூத்த ஊடகவியலாளர். சன், ஜீ டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். வளர்ந்து வரும் தொலைக்காட்சி நிறுவனங்கள் சிலவற்றிற்கு ஆலோசகராக இருப்பவர். சமூக நிகழ்வுகள் குறித்த தனது ஆழமான பார்வையை சமூக ஊடகங்களில் ஆணித்தரமாக பதிவு செய்யத் தவறாதவர். இதன் மூலம் ஃபேஸ்புக்கில் மிகப்பெரிய வாசகர் வட்டத்தைக் கொண்டிருப்பவர்.

     

  • மார்க்கின் மனம்கவர்ந்த இந்திய கோவில்

    பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, ஃபேஸ்புக் நிறுவனர் Mark zuckerberg-ஐ சந்தித்தது நமக்கு எல்லாம் தெரியும். ஆனால் அப்போது தனது மனம்கவர்ந்த இந்திய கோவில் பற்றி மார்க் நம்ம பிரதமரிடம் என்ன சொன்னார் என்று உங்களுக்குத் தெரியுமா..

    ஃபேஸ்புக் தொடங்கிய காலகட்டத்தில் மார்க் அடுத்தடுத்து நிறைய சிக்கல்களை சந்தித்தாராம். அப்போது ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் அறிவுறுத்தியபடி இந்தியாவில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு சென்று வந்தவுடன் ஃபேஸ்புக் நிறுவனம் பல முன்னேற்றங்களை சந்தித்ததாக மார்க் மோடியிடம் கூறியிருக்கிறார். 

    மார்க்கின் மனதிற்கு இதமளித்த அந்த ஆசிரமம் உத்தர்கண்ட் மாநிலத்தில் இருக்கிறது. அதன் பெயர் ‘கைஞ்சி தாம்’. இங்கு ஒரு அனுமன் கோவிலும் உள்ளது. 2 நாட்கள் இந்த ஆசிரமத்தில் தங்கியும் இருந்திருக்கிறார் மார்க் சூக்கர்பெர்க்.

    1970ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், இந்த ஆசிரமத்தோடு இணைந்திருக்கும் கோவிலுக்கு சென்று அனுமனை தரிசித்த பிறகு தன் வாழ்வில் பல முன்னேற்றங்களை சந்தித்தாராம்.

    உத்தர்கண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற மலைவாசஸ்தலமான நைனிடாலில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவில் குமோன் மலையில் அமைந்திருக்கிறது கைஞ்சி தாம்.

    இந்த ஆசிரமத்தை நிறுவியவர் Neem Karoli Baba. இவர் இப்போது உயிருடன் இல்லை. 1973ஆம் ஆண்டு சமாதி அடைந்துவிட்டார். 

    1973ஆம் ஆண்டு  Neem Karoli Baba மறைந்த பிறகு அவருக்கு ஆசிரமத்தின் உள்ளேயே கோவில் அமைக்கப்பட்டு அவருடைய சிலை 1976ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

    யார் கைஞ்சிதாம் செல்வதாக இருந்தாலும் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். மூத்த சாது ஒருவரிடம் சான்று பெற்றுச் சென்றால் 3 நாட்கள் அந்த ஆசிரமத்தில் தங்கவும் முடியும்.

    ஆன்மீக தலைவர்கள் Ma Jaya, Ram Dass, இசையமைப்பாளர்கள் Jai Uttal and Krishna Das, மனிதநேய ஆர்வலர் Larry Brilliant, எழுத்தாளர் Yvette Rosser and Daniel Goleman  ஆகியோர் இவருடைய தீவிர பக்தர்கள். வருடத்தின் பல மாதங்கள் குளிர் காரணமாக மூடப்பட்டிருக்கும் இந்த ஆசிரமம் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே திறந்திருக்கும். ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்சும் இந்த ஆசிரமத்தின் ஸ்டார் பக்தர்களில் ஒருவர்.

    மார்க்கிற்கு தொழில் வளர்ச்சி கொடுத்த இந்த ஆசிரமத்திற்கு நீங்களும் முடிந்தால் ஒரு தடவை போய் வாருங்கள்…

    – ஹேமா ராக்கேஷ்

     

     

    தந்தி தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர். ஆவணப் பட இயக்குனரும் கூட.. தர்மபுரி தொட்டில் குழந்தைகள் திட்டத்தை மையமாக வைத்து இவர் இயக்கிய பூந்தளிர்கள் என்ற ஆவணப்படம் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது. முகநூலில் சாதனை பெண்களை அடையாளப்படுத்த ஆராதனா என்ற பக்கத்தில் பல சாதனை பெண்கள் குறித்து கட்டுரைகளை எழுதி வருகிறார்.

  • விபூதி…. ஆன்மீகத்தில் ஓர் அற்புதம்….

    அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.

    இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

    எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இந்த அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் காணப்படுகின்றது.
    மனித உடலில் நெற்றி ஒரு முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது.

    நம் நெற்றியில் தான் வெப்பம் அதிகமாக வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை உட்கிரகித்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனால் தான் திருநீறை நெற்றியில் இடுவார்கள்.
    பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணமிடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.

    இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

    சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் அணிவது வழக்கம்.
    நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து.

    விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்

    1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

    2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

    3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

    ஆன்மீகத்தில் ஓர் அற்புதம்…
    நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம். நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு செய்யும் தலையாய கடமை.

    தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி தரிப்பதன் நோக்கம். நெற்றிப்பகுதி அதிக சூடாவதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள்; அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம். குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். அதை மறந்து பெண்கள் இன்று மஞ்சள், குங்குமத்தை ஒதுக்கி வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் ஸ்டிக்கர் பொட்டையே நம்பியிருக்கிறார்கள். இப்படி ஆன்மீக செயல்கள் ஒவ்வொன்றுக்குள்ளும் ஒவ்வொரு அற்புதம் புதைந்துள்ளது.

  • ஆடிப் பூரமும் அம்பாளும்

    ஆடிப் பூரம் ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் தோன்றினாள். தன் பக்தர்களை குழந்தைகளாக பார்த்தாலும் அம்மனுக்கு ஒரு கவலை இருந்தது. அதாவது திருமணமான எல்லா பெண்களையும் போல தானும் தாய்மை அடையவில்லையே என்று மனம் ஏங்கினாள். முருகனும், விநாயகனும் மற்றும் உன்னுடைய பக்தர்களும் உனக்கு குழந்தைகள்தான் என்று ஈசன், அம்மனை சமாதானம் செய்தாலும் அம்பாள் ஆறுதல் அடையவில்லை. அதனால் புட்லூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் நிறைமாத கர்ப்பிணியான வடிவத்தில் காட்சி தந்தாள். இதனால் தேவலோக பெண்கள் அம்பாளுக்கு வளையல்களை அணிவித்து அலங்காரம் செய்தார்கள். இதனால் அம்மனின் மனம் குளிர்ந்தது.

    ஸ்ரீமகாவிஷ்ணு, விநாயகர் முன் தோப்புகரணம் போட்டதால் இன்றுவரை விநாயகர் முன் நாம் தோப்புகரணம் போடுவதுபோல, அம்மனுக்கு தேவலோகத்தினர் வளைகாப்பு நடத்தி, வளையல் அணிவித்து அம்மனை மகிழ்வித்ததால் இன்றுவரை அம்பாளின் பக்தர்களாகிய நாமும் அம்பாளுக்கு வளையல்களை அணிவித்து அம்மனின் மனதை சந்தோஷப்படுத்துகிறோம். அதுபோலவே இன்னும் ஒரு சம்பவமும் இருக்கிறது.

    வளையல் அணியவே புற்றில் இருந்த வெளியே வந்த அம்மன் பொதுவாகவே பெண்களுக்கு கைநிறைய கலர் கலராக வளையல் அணிந்து அழகு பார்க்க ஆசைப்படுவார்கள். அம்மனுக்கும் அந்த ஆசை இருக்காதா?. அவளும் பெண்தானே. சக்திதேவி தன் ஆசையை எப்படி நிறைவேற்றிக்கொண்டாள் தெரியுமா? ஒரு வளையல் வியாபாரி ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வளையல்களை விற்க வருவது வழக்கம். ஒருநாள் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த வளையல்களில் பாதி விற்றுவிட்டார் மீதி இருந்த வளையலை மறுநாள் விற்கலாம் என்று நினைத்தார். பெரியபாளையம் வரும்போது அவருக்கு மிகுந்த களைப்பு ஏற்பட்டது. நடக்க முடியாத அளவில் சோர்வடைந்தார். இதனால், அங்கு இருந்த ஒரு வேப்பமரத்தடியில் வளையல்களை வைத்துவிட்டு அந்த வளையல் வியாபாரி அங்கேயே தூங்கிவிட்டார். நல்ல தூக்கம். சில மணி நேரத்திற்கு பின் கண் விழித்து பார்த்தபோது, தன் அருகில் வைத்திருந்த வளையல்கள் காணாமல் போயிருப்பதை கண்டு பதறினார். சுற்றுமுற்றும் தேடினார். கிடைக்கவில்லை.
    கவலையுடன் தன் சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றுவிட்டார். அன்றிரவு, அந்த வளையல் வியபாரியின் கனவில் அம்மன் தோன்றினாள். “நான் ரேணுகை பவானி. நீ கொண்டு வந்த வளையல்கள் என் கைகளை அலங்கரித்து இருக்கிறது பார். என் மனதை மகிழ்வித்த உனக்கு வரங்கள் அளிக்கிறேன். பல யுகங்களாக பெரியபாளையம் வேப்பமரத்தின் அடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும்.” என்றாள் அம்பாள். தான் கண்ட கனவை தன் நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் சொன்னார் வியாபாரி. அத்துடன் சென்னைக்கு அவர்களை அழைத்து வந்து, பெரியபாளையம் மக்களிடத்திலும் தான் கண்ட கனவை பற்றி சொன்னார்.

    இதன் பிறகுதான் பெரியபாளையத்தில் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு ஆலயம் கட்டி வழிபாடு செய்தார்கள். அம்மனுக்கும் கைநிறைய வளையல் அணியவேண்டும் என்று ஆசை ஏற்பட்டதால்தான் அந்த வளையல் வியாபாரி வைத்திருந்த வளையல்களை எடுத்துக்கொண்டார் அம்பாள். வளையல் அணிய வேண்டும் என்ற ஆசையால்தான் புற்றில் இருந்தும் வெளிப்பட்டாள். அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுபிக்ஷங்கள் ஏற்படும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அகிலத்தின் நாயகி சந்தோஷப்பட்டால் அகில உலகமே மகிழ்சியடையும். அதேபோல ஆண்டாள் தோன்றிய தினம் ஆடிபூரம். இந்த நன்னாளில் ஆண்டாளை தரிசித்து பூமாலை, வளையல்களை கொடுத்து வணங்கி ஆண்டாளின் ஆசியை பெற்ற வளையல்களில் இரண்டு வளையல்களை அணியலாம். அதேபோல ஆண்கள் ஆண்டாளுக்கு அணிவித்த மலர்களை சிறிது வாங்கி தங்கள் சட்டை பாக்கெட்டில் வைத்து கொண்டாலும் நல்ல முயற்சிகள் வெற்றி பெறும். மங்களங்கள் யாவும் கைக்கூடும்.

  • இது சிவ அவதாரம்..

     

    விஷ்ணுவின் தசாவதாரம் நாம் அறிவோம். அது என்ன சிவ அவதாரம்? …

     

    சிவனின் ஒரே அவதாரம் சரபா அவதாரம். சிவனின் திருவிளையாடல் 64 என்பதை நன்கு அறிவோம். அழிக்கும் கடவுளான சிவன், காக்கும் கடவுளான விஷ்ணுவை காத்த நிகழ்வே
    சரபா அவதாரம் ஆகும்.
     
    மகாவிஷ்ணுவின் பல அவதாரங்களில் மிக உக்ரமான‌ அவதாரம் நரசிம்மாவதாரம். ஏனெனில் இந்த அவதாரம் தான் திடீரென‌ எடுக்கப்பட்ட அவதாரம். ஒரு பக்தனின், பக்தியின் வலிமையை பற்றி உலகறிய செய்த அவதாரம். நரசிம்மரின் வலது கண் சூரியன், இடது கண் சந்திரன். புருவங்களில் லக்ஷ்மி இருப்பதாக ஐதீகம். 
     
    விஷ்ணுவின் நரசிம்மவாதர‌த்தின்போது, இரண்யகசிபுவை வதைத்த பிறகும் பகவான் மிகவும் மூர்கமாகவே இருந்தார். அதற்கு காரணம் இரண்யகசிபுவின் இரத்தம் மகாவிஷ்ணுவின் உடம்பில் இருந்ததேயாகும். நரசிம்மவாதாரத்தின் ஆவேசத்தை கண்ட மூவுலகமே பயத்தில் நடுங்கின. இந்த நிலையில்தான் மகாவிஷ்ணு தனது ஆத்மாவை விடுவிக்க சிவனிடம் உதவி கோரினார். 
     
    அப்போது சிவன் 4 கைகள், 8 கால்கள், 2 முகமும்  இருபுறங்களில் இறக்கைகளும், சிங்கத்தினைப் போல் நீண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், யானையைப் போன்ற கண்களும், கோரப் பற்களும், யாளியைப் போன்ற உருவமும் உடையவராக தோன்றினார். அந்த அவதாரமே சரபா அவதாரம். நரசிம்மருடன் பெரும் யுத்தம் நடந்தது. நரசிம்மரின் உடலில் கலந்து இருந்த‌ இரண்ய கசிபுவின் அசுத்த ரத்தத்தை பிரித்து  மகாவிஷ்னுவை சாந்தப்படுத்தினார் சரபா அவதாரத்தில் இருந்த சிவன். இந்த அவதாரத்தில் சக்தியின் பெயர் அரிப்ரணாசினி.
     
    – ரம்யா சுரேஷ்

    ரம்யா சுரேஷ் – சிங்கப்பூர் வாழ் பட்டிமன்ற பேச்சாளர், குழந்தைகளுக்கான நிகழ்ச்சி தயாரிப்பாளர். சிறுவர் நூலாசிரியர் மற்றும் பகுதி நேர ஆசிரியர். (கலாச்சாரம்). இவரைத் தொடர்பு கொள்ள – sangemahathi@gmail.com 

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 8

    உலகமே இருந்தது அந்த உணவகத்துக்குள். வெள்ளைக்கார முகங்கள் அதிகம் தென்பட்டன. இந்திய முகங்களைக் கிட்டத்தட்டக் காண முடியவில்லை எங்களைத் தவிர. வட இந்தியர் போன்ற தோற்றமுள்ள ஒரு சிலரைப் பார்த்தோம். ஆனால் அவர்கள் வட இந்தியர்கள்தானா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. பார்த்த அனைவருமே ஏறத்தாழத் துணையுடன்தான் இருந்தனர். யாரும் தனியாக இல்லை. உணவும் அப்சரஸ் நடனமும் சேர்த்து 20 டாலர் கட்டணம்.

    பெரிய அரங்கம். அரங்கத்தின் வலக்கைப் பக்கம் விதவிதமான சைவ, அசைவ உணவு வகைகள். வேண்டியதை எடுத்துச் சாப்பிடலாம். எது என்ன என்று ஆங்கிலத்தில் தெளிவாக எழுதி வைத்திருந்ததால், அச்சமின்றி எடுத்துத் தட்டில் வைக்க முடிந்தது. உட்கார்ந்து உணவுண்ண நீளமான பெஞ்சுகளும் சற்றே அகலமான மேசைகளும் போடப்பட்டிருந்தன. குளிரூட்டப்பட்ட அரங்கு என்பதாலோ என்னவோ உள்ளே புகைபிடிக்க அனுமதியில்லை. அப்பாடா நிம்மதி..

    உணவைச் சாப்பிட்டுக் கொண்டே நடனத்தை ரசிக்கலாம். எப்போதுமே எனக்கு இதில் உடன்பாடில்லை. கல்யாண வீட்டு நாயனக்காரர் கானடாவும் ஆபேரியுமாகப் பொழிகையில், அதுபற்றிய எந்த ஸ்மரணையுமின்றி நம்மாட்கள் அரட்டையடித்துக் கொண்டு இருப்பார்கள். என் நண்பர் திலகராஜ் திருமணத்தில் நாகசுரம் வாசித்தவர் பிரமாதமான வாத்தியக்காரர். 1990 என்று நினைவு. மாயவரத்தில், காவேரிக்கரை ஓரமாக இருந்த பழைய திருமண மண்டபம். அந்தக் காலத்து எட்டுக்கட்டு வீடு. திண்ணையுள்ள பெரிய வீட்டைக் கல்யாண மண்டபமாக்கி விட்டார்கள்.

    முற்றமுள்ள நடுக்கூடத்தில் திருமணம். வாசலுக்கு இடப்பக்கம் இரட்டை நாயனமும் மேளமும். ஆச்சா மரக் குழலில் இருந்து எழுந்து கல்யாண வீட்டை நிறைத்துக் கொண்டிருந்தது இசை. சம்மணம் கொட்டி அமர்ந்து அமுதத்தை இசையாக்கி வழியவிட்டபடி இருந்தனர் வித்வான்கள். மிகப் பிரபலமான வித்வான்களெல்லாம் இல்லை. மாயவரத்துக்குப் பக்கத்திலுள்ள ஏதோ ஒரு ஊர் வித்வான்கள். தொடர்ந்து இசை கேட்டுப் பாடல்களை இனங்காணத் தொடங்கிவிட்ட வயது எனக்கு.

    ஒவ்வொரு பாடலாக அவர்கள் வாசிக்க வாசிக்க எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. கூடவே கள்ளத்தொண்டையில் பாடலைப் பாடிக் கொண்டு பின்தொடர்ந்தேன். தாளமெல்லாம் போடத் தெரியாது. ராகத்தையும் அடையாளங்காணத் தெரியாது. ஆனால் பாட்டு மட்டும் தெரியும். போதாதா என்ன? நான் இசையை ரசிக்கிறேன் என்பதை எப்படியோ உணர்ந்துவிட்ட நாயனக்காரர் அவ்வப்போது என்னைப் பார்த்துக் கொண்டே வாசித்தார். என்னைத் தவிர அன்று அந்த இசையை வேறு எவரும் ஒருபொருட்டாகவே எண்ணவில்லை.

    அன்று அவர்கள் வாசித்த அலைபாயுதே கண்ணா, ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே, வெஸ்டர்ன் நோட், கதனகுதூகலத் தில்லானா எல்லாமே உலகத்தரம். அன்று அவர்கள் ஒவ்வொருவருக்கும் 500 ரூபாய் சம்பாவனை கொடுக்கப்பட்டிருந்தால் எதேஷ்டம். எனக்குச் சாப்பிடப் போகக்கூட அன்று மனமில்லை. கடைசியில் வித்வான்களிடம் போய் பாடல்களைச் சொல்லி நான் மிகவும் அனுபவித்துக் கேட்டதாகச் சொன்னபோது உண்மையான பாராட்டைக் கேட்ட பூரிப்பு அவர்கள் நால்வரின் முகத்திலும் படர்ந்தது. இன்றளவும் அந்த அனுபவம் எனக்கு நினைக்கும்போதெல்லாம் இனிமை தரும்.

    நாகசுர இசைக்கு ருசி சேர அது வாசிக்கப்படும் இடம் பிரதானமானது என்பது என் அனுபவம். கோயில் பிரகாரங்களில் யார் வாசித்தாலும் அது காருகுறிச்சி போல இனிமையாகத்தான் இருக்கும். கோயில்களில் உள்ள கட்டட அமைப்பு அப்படி. நீண்ட பிரகாரங்களில் எதிரொலித்து வரும் ஓசை நம்மை மயக்கிவிடும். மிகச் சிறிய மூடிய அறைக்குள் நாகசுரம் கேட்டால் காது கிழிந்துவிடும். வெளிப்புற ஓசையற்ற திறந்தவெளி அரங்குகள் கச்சேரிக்குப் பொருத்தம்தான். நல்ல ஒலிபெருக்கி அமைந்தால்!

    இசையால் என்னை நெகிழ வைத்த இடங்களில் சிதம்பரம் சபாநாயகர் ஆலய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி மேடை முக்கியமானது. 1992 அல்லது 93. திருவிழா ஜெய்சங்கரும் ஹரித்வாரமங்கலம் பழனிவேலும் இணைந்து நாதமும் நாட்டியமும் என்ற பெயரில் ஒரு பெண்ணின் நடனத்திற்கு வாசித்தனர். அன்று அது ஒரு பெரிய பேச்சாக இருந்தது. அன்றுதான் நாட்டியாஞ்சலி தொடங்கிய முதல்நாள் என்று நினைக்கிறேன். சிவராத்திரியன்று தொடங்கி ஐந்து நாட்களுக்கு நடக்கும் நாட்டியாஞ்சலி.

    தொடக்கத்தில் மூன்று நாட்களாக இருந்தது பின்னர் எல்லாருக்கும் வாய்ப்புத் தர வேண்டுமென்ற நோக்கில் ஐந்து நாட்களாக விரிவுபடுத்தப்பட்டது. நிகழ்ச்சி முடிந்து சீவாளியைத் துடைத்து பாரி நாயனத்தைப் பைக்குள் போடப் போய்விட்டார் ஜெய்சங்கர். பின்னிரவு 2 மணியிருக்கும். நடனத்திலும் இசையிலும் உண்மையான அக்கறையுள்ள கூட்டம் மட்டும் எஞ்சியிருந்தது. பிப்ரவரி என்ற போதும் இலேசான பனி இருந்தது. தலைக்குக் கைக்குட்டையைக் கட்டிக் கொண்டு நடனம் பார்த்துக் கொண்டிருந்தோம்.

    மேடைக்குச் சற்றுத் தொலைவில் இருந்து ஒரு பெரியவர் எழுந்தார். ஜெய்சங்கர் ! நடராஜாவுக்கு ஒரு மல்லாரி வாசிங்கோ ! என்றார் இரண்டு கையைத் தூக்கி.. வெற்றிலை போடும் பழக்கமுள்ளவராக இருக்க வேண்டும். வெற்றிலையை வாயில் அதக்கிக் கொண்டு வேண்டுகோள் விடுத்தது போல் தோன்றியது எனக்கு. பின்னிரவு நேரமென்பதால் அவர் சொன்னது மேடைக்குத் தெளிவாகக் கேட்டிருக்க வேண்டும். சிரித்துக் கொண்டே ஹரித்வாரமங்கலம் பழனிவேலைப் பார்த்தார் ஜெய்சங்கர். அவர் உற்சாகமாகத் தலையை ஆட்டித் தவிலில் கழியால் ரெண்டு போடு போட்டார். அவ்வளவுதான்..

    மீண்டும் சீவாளியைப் பொருத்தி பீ பீ என்று ஊதிப் பார்த்துவிட்டு ஆரம்பித்து விட்டார் ஜெய்சங்கர். அடுத்த சுமார் ஒரு மணி நேரத்திற்கு நான் கேட்ட மல்லாரி என் வாழ்நாளில் மறக்காது. அந்த ஆலயச் சூழல், கலைஞர்களின் அற்புத ஈடுபாடு, பக்தி, மெய்மறந்த ரசிகர்கள். பின்னிரவுக்கே உரிய குளுமை, அமைதி இன்னும் என்னென்னவோ சேர்ந்து அந்த இரவை மறக்க முடியாத இரவாக்கி விட்டன. மல்லாரியைக் கேட்டு ஜிங்கு ஜிங்கென்று நடராஜர் சித்சபையை விட்டு அம்மையுடன் எழுந்தோடி வந்துவிடப் போகிறார் என்றுதான் நினைத்தேன் அன்று. மோட்சம்தான் அன்று அதைக் கேட்டவர்களுக்கு.

    அப்போதிலிருந்து எங்கே மல்லாரி கேட்டாலும் இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்துவிடும். தஞ்சாவூர் மாவட்டத் திருவிழாக்களில் சுவாமி வீதியுலா வரும்போது தவில்காரர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாசிப்பார்கள் என்று என்னுடைய நண்பர் குணசீலனின் அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். திருவாளப்புத்தூர், இஞ்சிக்குடி, வலங்கைமான் இந்த ஊர் நாயனக் குழுக்கள் மிகப் பிரபலமாக இருந்த காலமாம்.

    மிகச் சிறப்பாக வாசிக்கும் தவில் வித்வானிடம் எதிராளி தவில் வாசிக்கும் கழியைக் கொடுத்துத் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு விடுவாராம். “கழியைக் கொடுத்துட்டான் அவன்” என்று அதை நினைவுகூரும்போதே அந்த இடத்துக்கும் நாளுக்கும் சென்று விடுவார் குணா அப்பா. இது நான் பார்த்ததில்லை. குணா அப்பா பலமுறை சொல்லக் கேட்ட தகவல். அந்தத் தலைமுறை எங்களை விடக் கொடுத்து வைத்தது. எந்தவிதக் கலப்படமும் இல்லாமல் நேரடியான இசையைக் கேட்டு வளர்ந்த பாக்கியவான்கள்.

    இன்றளவும் நாகசுரமும் வீணையும் என் மனங்கவர்ந்த வாத்தியங்கள். தஞ்சாவூர் சிவகங்கைப் பூங்காவுக்கு வெளியில்தான் வாழ்க்கையில் முதன்முதலாகப் பலாமரத்தில் வீணைக்குடம் செய்வதைப் பார்த்தேன். அப்புறம் என் பலதுறைத் தொழிற்கல்லூரியில் படித்த இளைய மாணவனின் அப்பா வீணை செய்பவர் எனக் கேள்விப்பட்டுத் தஞ்சாவூரில் அவர்கள் வீட்டுக்குப் போய் குடம், பிருகடை என ஒவ்வொன்றாக வீணை உருவாகும் அழகைப் பக்கத்தில் இருந்து ரசித்திருக்கிறேன். பழங்காலத்தில், நிஜமான யானைத் தந்தத்தை வீணையின் மேல்புறத்தில் பதித்து அழகுபடுத்துவார்களாம். இப்போது தந்தம் பதிப்பதில்லையாம்.

    அதேபோல், உலகிலேயே நாகசுரம் உற்பத்தி செய்யப்படுவது மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள நரசிங்கன்பேட்டையில் மட்டும்தான் என்பது எனக்கு ஆச்சர்யமான தகவல். இலங்கையிலும் நாகசுரம் செய்வதுண்டு என்று ஒருவர் கூறியிருந்தார். பத்து ஆண்டுகளுக்கு முன்னால், வானொலி நேர்காணலுக்காக அந்த ஊருக்குப் போய் நாகசுரம் தயாரிப்பவர்களைச் சந்தித்திருக்கிறேன். “அட ஏன் சார் ? நாகசுரம் ஆச்சா மரத்துலதான் செய்ய முடியும். இப்ப எங்க கிடைக்குது ஆச்சா மரம் ? எல்லா மரத்தையும் வெட்டிட்டாங்க. எங்கயாவது பழைய வீடு பிரிக்கிறதாத் தகவல் கிடைச்சா அங்க போயித் தேடுவோம். பழைய வீட்டு உத்தரம் பெரும்பாலும் ஆச்சா மரத்தில செஞ்சு போட்ருப்பாங்க. அதை விலை கொடுத்து வாங்கிட்டு வந்து அதுல இருந்துதான் இப்ப நாகசுரம் தயாரிச்சிட்டு இருக்கோம். வருங்காலத்துல அதுவும் கிடைக்குமோ என்னமோ தெரியலை. என்ன செய்யப் போறோம்னு புரியலை !” என்றபோது நான் அதிர்ந்து போனேன்.

    அப்படியென்றால் நாகசுரத்தின் எதிர்காலம் ? நாகசுரத்தில் மூன்று வகை என்று ஷேக் சின்ன மௌலானா ஒருமுறை விளக்கியிருந்தார். பாரி, திமிறி, முகவீணை. நாம் பொதுவாகப் பார்ப்பது பாரி நாயனம். அதாவது பெரிய நாயனம். திமிறி அதில் பாதி. முகவீணை சின்னது. முற்றமுழுக்க யானைத் தந்தத்தில் செய்யப்பட்ட முகவீணை கூடப் புழக்கத்தில் இருந்ததாகப் படித்திருக்கிறேன்.

    சரி. எங்கோ ஆரம்பித்தது எங்கோ இழுத்துக் கொண்டு போய்விட்டது. மொச்சு மொச்சென்று கண்டதைச் சாப்பிட்டுக் கொண்டு நடனமோ இசையோ என்னால் ரசிக்க முடியாது சாமி. நாட்டியம் தொடங்குவதற்குள் சாப்பிட்டு முடித்து விடுவோம் என்று கிடைத்ததை அள்ளித் தட்டில் வைத்துக் கொண்டு ஐவரும் சேர்ந்து அமர்ந்தோம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். கட்டுப்பாடு ஏதுமில்லை.

    ஆனாலும் பெரிதாகச் சாப்பிடுமளவுக்கு அங்கிருந்த பண்டங்கள் எங்களைக் கவரவில்லை. காய்கறி சூப்பும், நறுக்கிய பழங்களும் வேண்டிய அளவு சாப்பிட்டோம். கடைசிச் சுற்றில் இருந்தபோது கிய்யா முய்யா என்று இலேசாக முனகும் சத்தம் கேட்டது மேடையிலிருந்து. மூக்காலேயே ஒரு பெண்குரல் ஆலாபனை செய்யத் தொடங்கியது.

    எல்லாரது கவனமும் மேடையில் குவிந்தது. மெதுவாக நடந்து ஒரு நடனமணி முன்னால் வந்தார். ஒயிலாக என்று ஒரு வார்த்தை சொல்வோமே. அந்த வார்த்தைக்கு அர்த்தம்போல மேடையில் வழுக்கியவாறு வந்தார். நம்ம ஊர் ஜலதரங்கம் போன்ற ஓசை வரும் வாத்தியமொன்று மேடையில் இருந்தது. குமிழோடு கூடிய பத்துப் பதினைந்து வெண்கலச் செம்புகளைக் கவிழ்த்துப் போட்டு அதன்மேல் மரச் சுத்தியலால் அடிப்பது போன்ற தோற்றம். பக்கத்தில் துந்தனா மாதிரி ஒரு நரம்பு வாத்தியக் கருவி. கம்போடியப் பாரம்பரிய உடையில் பாடகி.

    மெதுவாக ஆரம்பித்துப் பாடத் தொடங்கினார். சத்தியமாக ஒரு வார்த்தை புரியவில்லை. கெமர் பாரம்பரிய செவ்வியல் நடனத்திற்கு அப்சரஸ் நடனம் என்று பெயர். அதாவது தேவலோக மங்கையர் நடனம். சும்மா சொல்லக் கூடாது அந்தப் பெண்களும் அப்படித்தான் இருந்தார்கள். அங்கோர் ஆலயங்களில் செதுக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்களில் உள்ளது மாதிரியே ஆடை அணிகலன்கள். தலை அலங்காரம் எல்லாம் அச்சு அசல் சிலையைப் போலவே. காதுகளின் ஓரங்களில் எருக்கம்பூவைக் குப்பறப் போட்டுக் கோத்துத் தொங்கவிட்டிருந்தார்கள்.

    எல்லாம் பிளாஸ்டிக் மாலைகள்தான். எதுவும் மணமுள்ள உண்மையான மலர்கள் இல்லை. தலையை விரித்துப் போட்டு ஆங்காங்கே சந்தனமுல்லை மலர்கள் போன்ற கவ்விகளால் கட்டியிருந்தனர். கிரீடம் மாதிரி தலையில் அணிந்திருந்த அலங்காரம் அழகின் உச்சமெனலாம். இந்திய மண்ணில் இதுவரை கண்டிராத புதுவகை அலங்காரம். பார்த்ததும் பிரமிப்புதான் வந்தது. எப்போதுமே முன்னோக்கி வளைந்தது போல உடலை வைத்துக் கொண்டு கை விரல்களையும் பின்னால் வளைத்தே வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள்.

    ஹ்ம்ம்ம.. ஆடுகிறார்கள் என்றால் அது சரியாக இருக்காது. அசைகிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். பரதம், ஒடிசி அளவுக்கு ஆண்டாண்டு காலப் பயிற்சி தேவைப்படுவது போலத் தெரியவில்லை. சில மாதப் பயிற்சியால் உடம்பில் நளினமுள்ள யாரும் ஆடிவிடக் கூடியதாகவே என் கண்ணுக்கு அப்ரசஸ் நடனம் தென்பட்டது.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தி, கெமர் சாம்ராஜ்யத்தில் உருவாகிச் செம்மைப்பட்ட நடனம் காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் அழிந்து மறைந்து போய்விட்டதாம். இப்போது ஆடப்படும் இந்த செவ்வியல் நடனம், 1940-களில் அப்போதைய கம்போடிய ராணியும் அவரது மகளும் உருவாக்கி வகுத்த நடனமாம். நம்மைப் போலவே ஆலயங்களிலும் அரண்மனைகளிலும் மட்டும் ஆடப்பட்ட அப்சரஸ் நடனத்தை அவர்தான் பொது அரங்குக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

    முகபாவங்கள் அதிகமில்லை. எல்லாமே பெரும்பாலும் நாட்டிய நாடகங்கள்தான் என்கின்றனர். இராமாயணக் கதைகளை நடிப்பார்கள் என்றும் சொன்னார்கள். நம் பரதத்தைப் போல் சிக்கலான அடவுகள், முத்திரைகள் எதுவும் இல்லை. எளிமையான உடற்பயிற்சியொன்றை எல்லாரும் சேர்ந்து ஒயிலாக ஒத்திசைந்து செய்வதுபோல் பட்டது எனக்கு. முதலில் ஒரு நடனமணி வந்த சற்று நேரத்தில் மேடையின் இரண்டு பக்கங்களில் இருந்தும் கிட்டத்தட்ட பத்துப் பேர் வந்து இணைந்து கொண்டனர்.

    மணிக்கட்டுக்கு மேல் கையை வளைத்து வளைத்து ஒரே மாதிரி சாய்ந்து, அமர்ந்து, ஒசிந்து, திரும்பி, அசைந்து ஆடினர். கூட்டம் கிறுகிறுத்துப் போய்க் கிடந்தது. படக் கருவிகளின் மின்னொளி மின்னிக் கொண்டே இருந்தது.

    நாங்கள் உணவு மேசையை விட்டு எழுந்து வந்து மேடைக்கு அருகே நின்று கொண்டோம். மிக அருகில் பார்க்கும்போது முற்றிலும் வேறு அனுபவமாக இருந்தது நடனம். பரதம், கதகளி, மோகினியாட்டம், ஒடிசி, கூச்சுப்படி போன்ற இந்திய நடன வகைகளை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால் ஆழ்ந்து ரசிக்க வேண்டுமானால் அதுபற்றிய குறைந்தபட்ச ஞானம் இருப்பது நல்லது.

    ஆனால் அப்சரஸ் நடனம் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எந்த அறிமுகமும் இன்றி ரசிக்கத்தக்கதாக வடிவமைக்கப்பட்டுள்ளது இக்காலத்தில். அதை வெள்ளைக்காரர்களிடம் என்னால் கண்கூடாகக் காண முடிந்தது. பரதநாட்டியத்தைப் பார்த்து எந்த வெள்ளைக்காரனும் இவ்வளவு ஆஹாஹாரம் எழுப்பி நான் பார்த்ததில்லை. நடனமணிகள் கையில் பூங்கொத்து போன்ற ஒன்றை வைத்திருந்தனர். பின்னர் புஷ்பாஞ்சலி மாதிரியொன்றைச் செய்து காட்டினார்கள்.

    இதுக்கே இப்படின்னா நம்ம ஊர் அலர்மேல் வள்ளி, ரேவதி ராமச்சந்திரன், பத்மா, சுதாராணி ரகுபதி, சித்ரா விஸ்வேஸ்வரன், ருக்மணி விஜயகுமார் போன்ற நிஜமான கலைஞர்கள் ஆடிப் பார்த்தால் இவர்களெல்லாம் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் ? “இப்ப என்ன ஆடிட்டாங்கன்னு வெள்ளைக்காரனுவோ இப்படிக் கத்துறானுவோ?” என்று எனக்குள் அசரீரி கேட்டது.

    ஆனால், என்னமோ செய்தது அப்சரஸ் நடனம். என்னால் நடனத்தில் ஒன்ற முடியவில்லை. ஏனென்று இன்றுவரை தெரியவில்லை. படம் எடுப்பதில்தான் என் கவனம் இருந்தது. நிழற்பட நிபுணர்களுக்குச் சரியான தீனி.

    மேடையின் பின்புலம் கம்போடிய ஆலயமொன்றைப் பிளந்து மரமொன்றின் வேர்கள் இறங்கும் பின்னணியில் அமைக்கப்பட்டிருந்தது. பாயோன் கோயிலின் அடையாள முகம் நடுநாயகமாக அமைந்திருந்தது. அதன் தடித்த உதடுகள் உணர்வின்றி உறைந்திருந்தன. அந்த நடனத்திற்கு இந்த மேடை அமைப்பு மிக முக்கியமான ஆதாரம். சிறந்த ஒலி, ஒளி அமைப்பும் அந்த அனுபவத்தை இனிமையாக்கியது.

    மொத்தமே அரை மணி நேரத்திற்குள் ஆட்டம் முடிந்து விட்டது. வந்திருந்த பெரும்பாலோர் மேடயேறி நடனமணிகளோடு படம் எடுத்துக் கொண்டனர். நாங்களும் எடுத்துக் கொண்டோம். அந்தப் பெண்கள் அதிகம் கூச்சப்படவில்லை. இந்தக் கூட்டமும் படமும் அவர்களுக்குத் தினமும் பழகி விட்டிருந்தது.

    ஆட்டம் முடிந்து வெளியே வரும்போது நவீனுக்கு அறிமுகமான ஒருவரை நாங்கள் சந்தித்தோம். அவர் ஓர் அமெரிக்கர். வயது 60களில் இருக்கும். அவர் கூடவே ஓர் இளம்பெண். கம்போடியப் பெண். அவருக்கு வயது 30 இருந்தால் அதிகம். அமெரிக்கரின் கம்போடிய மனைவி. இவ்வளவு வயது வித்தியாசமா என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். பிறகுதான் ஒரு கதை தெரியவந்தது. அது என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு வாரம் காத்திருக்கலாமா ?

    – பொன். மகாலிங்கம்

     

    சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

     

  • தகதகவென மின்னும் கர்நாடகத்தின் தங்கக் கோவில்

    கர்நாடகாவின் சிறந்த சுற்றுலா தளமான கூர்க் பகுதிக்கு செல்பவர்கள் அவசியம் அங்குள்ள திபெத்திய கோவிலுக்கு சென்று பார்க்க வேண்டும். அது நிச்சயம் உங்கள் வாழ்நாளில் ஒரு மாபெரும் அனுபவமாக இருக்கும். மைசூரில் இருந்து குடகின் தலைக்காவிரி உற்பத்தியாகும் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள ஊர்தான் குஷால்நகர்.  இந்த குஷால்நகருக்கு அருகில் உள்ள பைலகுப்பா பகுதியில் இருக்கிறது ஒரு குட்டி திபெத். இங்கு பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள Namdroling Monastry என்ற திபெத்திய கோவிலுக்குள் சென்றால் கிழக்காசிய தேசம் ஒன்றில் இருப்பதைப் போல் இருக்கிறது.

    திபெத்துக்கு அடுத்தபடியாக புத்த துறவிகள் அதிகம் இருப்பது இந்த பகுதியில் தான் என்றும் சுமார் 7000 புத்த துறவிகள் இங்கு இருப்பதாகவும் சொல்கிறார்கள். இங்கிருக்கும் புத்த மடாலயங்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் கல்வி கற்பிக்கப்படுகிறது.

    திபெத்தியர்கள் இந்தியாவில் குடியேறும்போது பைலகுப்பே பகுதிக்கும் பலர் குடிபெயர்ந்தனர். புத்த சமயத்தை பரப்புவதற்காக  Penor Rinpoche என்பவரால் 1963ஆம் ஆண்டு கூர்க்கில் ஒரு மடம் உருவாக்கப்பட்டு சன்னியாசிகள் மற்றும் துறவிகளுக்கு கல்வி போதிக்கப்பட்டது. இந்த மடத்தின் முழுப் பெயர் “Thekchog Namdrol Shedrub Dargye Ling” சுருக்கமாக “Namdroling”.

    இங்கு உள்ள 60 அடி உயர தங்க புத்தர் சிலை, பத்மசாம்பவா சிலை, அமித்யாயுஸ் சிலை ஆகியவை தங்க முலாம் பூசப்பட்டு விளக்கு வெளிச்சத்தில் தகதகவென மின்னுகின்றன. நடுவில் இருக்கும் புத்தர் நமக்கு ஏற்கனவே பரிச்சயமானவர். வலப்பக்கம் இருக்கும்  பத்மசாம்பசிவா “இரண்டாவது புத்தர் ” என்று திபெத்தியர்களால் அழைக்கப்படுகிறார். இவர்தான் புத்த சமயத்தை திபெத் மக்களிடம் பரப்பியவர். இடப்பக்கம் இருக்கும் புத்த அமித்யாயுஸ், அரசராக இருந்து பௌத்த மதத்தை தழுவியவர். இவருடைய சிலையை நிறுவியவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதேபோல இந்த கோவிலின் கோபுரங்களுக்கும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த கோவிலே கெகஜ்ஜோதியாக காட்சியளிக்கிறது.

    கோவிலுக்குள் உள்ள சுவர்களில் புத்த மத இதிகாச சம்பவங்களை நினைவு கூறும் பல்வேறு வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டு இருப்பது நம்முடைய கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இப்படி ஆர்வமாக கோவிலை சுற்றிப் பார்த்துக் கொண்டே இருக்கும் போது, வழிபாடு செய்யும் நேரம் வந்தது. வழிபாட்டை தொடங்குவதற்கு முன் பச்சை துணி போர்த்தியிருக்கும் மிகப்பெரிய மணியை அடிக்கிறார்கள். சத்தம் கேட்டதும் ஆங்காங்கே குழுமியிருக்கும் துறவிகள் ஒன்று சேர தொடங்குகிறார்கள். வழிபாட்டுக்கு செல்லும் போதே அத்தனை பேரும் வரிசையாக அணிவகுத்து தான் செல்கிறார்கள். ஒவ்வொரு விஷயத்திலும் நேர்த்தியை கடைபிடிப்பது இங்கிருப்பவர்களின் சிறப்பு.

    மணி அடித்ததும் 100க்கணக்கான புத்த துறவிகள் கோவிலுக்குள் வந்து கீழே அமைக்கப்பட்டு இருக்கும் அவரவர் இடத்தில் அமர்ந்து வழிபாட்டை தொடங்குகிறார்கள். அனைவரும் ஒரு சேர தங்கள் முன் வைத்திருக்கும் புனித நூலில் இருக்கும் வரிகளுக்கு ஏற்ப இசையுடன் வழிபாடு நடத்தியது பார்ப்பதற்கே பரவச அனுபவமாக இருந்தது. இந்த வழிபாட்டை நாம் அருகில் இருந்தே பார்க்கலாம். ஆனால் எந்தவித இடையூறும் செய்யக்கூடாது. வழிபாட்டின் நடுவே அனைவருக்கும் அருந்துவதற்காக பால் வழங்கப்படுகிறது.

    கோவிலை சுற்றிலும் பச்சை பசேலென்று பூங்காவை அமைத்து வெகு அழகாக பராமரித்து வருகிறார்கள். அனைத்தும் அத்தனை நேர்த்தியாக இருக்கிறது.. 

    கோவிலுக்கு உள்ளே திபெத்தில் உள்ள PALYUL MONASTRY இன் மினியேச்சரை அமைத்திருக்கிறார்கள். மலை முகட்டில் குட்டி குட்டியாய் வீடுகள் அந்த அழகிற்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகு சேர்க்கின்றன. அமைதியை விரும்புவர்கள் இந்த கோவிலுக்கு நிச்சயம் சென்று வாருங்கள். ஆழ்ந்த அமைதியுடன் நானும் என் கணவரும் நிம்மதியாக ரசித்தோம்.

    கோவிலுக்கு உள்ளேயே சில கடைகள் இருக்கின்றன. இங்கு பாரம்பரிய திபெத் உடைகள், பொருட்கள், சிலைகள், நகைகள், சந்தன சோப்பு வகைகள், சென்ட் வகைகள் என பல்வேறு பொருட்கள் இருப்பதால் ஆன்மீகத்துடன் சேர்ந்து ஆனந்தமான ஷாப்பிங் அனுபவமும் கிடைக்கிறது.

    – ஹேமா ராக்கேஷ்

    தந்தி தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர். ஆவணப் பட இயக்குனரும் கூட.. தர்மபுரி தொட்டில் குழந்தைகள் திட்டத்தை மையமாக வைத்து இவர் இயக்கிய பூந்தளிர்கள் என்ற ஆவணப்படம் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது. முகநூலில் சாதனை பெண்களை அடையாளப்படுத்த ஆராதனா என்ற பக்கத்தில் பல சாதனை பெண்கள் குறித்து கட்டுரைகளை எழுதி வருகிறார்.

  • ஆடியில் சதுரகிரி மலைக்கு செல்ல உகந்த நாட்கள்

    ஆடி அமாவசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்ல வரும் 28 ஆம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 4 ஆம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    சதுரகிரி மலையில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், நவராத்திரி, மகாசிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் விசேஷ பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெறும். இதில் ஆடி அமாவாசை பிரசித்த பெற்ற திருவிழாவாகும். ஆடி அமாவாசை தினத்தன்று தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வர்.

    சதுரகிரி கோவிலில் ஆடி அமாவாசை வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறும். பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4 மணிக்கு சயாட்சை பூஜை, இரவு 7 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும்.

    இதனை முன்னிட்டு வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 4-ந்தேதி வரை சதுரகிரி மலைக்கு சென்றுவர பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதையொட்டி சதுரகிரி அடிவார பகுதியான அடிப்படை வசதிகளை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் பாதுகாப்பு பணியில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த போலீசாரும், மதுரை மாவட்ட போலீசாரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் வனத்துறை, தீயணைப்புத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 7

    அருவியைப் போல் நாங்களும் மலையிலிருந்து சடாரெனக் கீழே இறங்கினோம். மலைப் பாதை முக்கியச் சாலையில் இணையுமிடத்தில் ஒரு பெரிய உணவு விடுதி இருந்தது. உள்ளே ஆளரவமில்லை. ஆனால், மிகப் பெரிய உணவு விடுதி. கைகளைக் கழுவப் போன இடத்தில் பார்த்தால் அது ஒரு மிகப் பெரிய அறைகலன் கடையும்கூட என்று தெரிந்தது. மிகப் பெரிய கட்டில்கள், உணவு மேசை, அதற்கேற்ற நாற்காலி, என விதவிதமான மரச் சாமான்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

    எல்லாவற்றின் விலையும் அமெரிக்க டாலரில் குறிக்கப்பட்டுத் தொங்க விடப்பட்டிருந்தது. அதிக விலை என்று சொல்ல முடியாது. ஆனால் வாங்கினால் அதைக் கப்பலில் எடுத்துச் செல்லும் செலவு மிக அதிகமாக இருக்கும். நல்ல வேலைப்பாடமைந்த மாபெரும் கட்டில்கள். நாற்காலிகள் பார்த்துப் பார்த்து அலங்கரிக்கப்பட்டிருந்தன. இலேசாக சீன பாணி தெரிந்தது. ஒரு நாற்காலியில் என்னைப் போன்ற இருவர் தாராளமாக அருகருகே உட்கார்ந்து கொள்ளலாம். அவ்வளவு அகலம் ! இதையெல்லாம் வாங்குவோர் வீடு மாறினால் எப்படித் தூக்கிப் போவார்களோ ! அம்புட்டு கனம் !

      

    காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது போன்ற ஒரு பரந்த மேசையைச் சுற்றி உட்கார்ந்தோம். ஒரு பக்கத்துக்கு இருவர் வீதம் எட்டுப் பேர் தாராளமாக அமரலாம். தாகத்துக்கு இளநீர் குடித்தோம். அது உள்ளூர்க்காரர்கள் உணவருந்த வரும் கடை மாதிரித் தெரியவில்லை. வெளிநாட்டுப் பயணிகளை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கும் கடை போலத் தெரிந்தது. எல்லாவற்றின் விலையும் அமெரிக்க டாலரில்தான்.

    பயணிகளுக்குப் பொதுவாகவே கம்போடியா முழுவதும் புழக்கத்தில் இருப்பது அமெரிக்க டாலர்தான். அந்த நாட்டு ரியல் நாணயத்துக்கு அவ்வளவு மதிப்பில்லை. எனவே, பயணிகள் அனைவரும் டாலரில்தான் பணத்தை மாற்றி வைத்துக் கொண்டு செலவழிக்க வேண்டும். ஆனால் உள்ளூர்வாசிகள் சொந்த நாணயத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நமக்கு அதை டாலருக்கு மாற்றி மாற்றித் தலைசுற்றிப் போகிறது.     ஒரு நிலையில் அதைக் கைவிட்டு டாலரில் மட்டும் யோசிக்கத் தொடங்கிவிட்டோம்.

    நல்ல பசி இருந்ததால், இளநீர் போய் விழுந்த இடம் தெரியவில்லை. அசைவம் இருந்தது. ஆனால் அவர்கள் சமைத்த விதம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் காரணமாக சைவ உணவையே தெரிவு செய்தேன். அசைவம் உண்ணும் பழக்கம் இருந்தாலும் பொதுவாக வெளியூர் சென்றால் எனக்குச் சைவம் சிறந்தது. வயிற்றுக்குப் பெரிதாக ஏதும் தொந்தரவு வராது. ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்படும் ஆபத்தும் கம்மி. வழக்கம்போல வேகவைத்த காய்கறிகள், பசை போன்ற வெள்ளைச் சோறு, முட்டை ஆம்லெட் என்று சுவையாகவே அமைந்தது உணவு. சுத்தமான சூழல், ஆரோக்கியமான உணவு, நியாயமான விலை.

    அங்கிருந்து தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய நன்னீர் ஏரியாகிய டோன்லே சாப் ஏரியைப் பார்க்கப் புறப்பட்டோம். ஒன்றரை மணி நேரப் பயணம். சாலை மிகத் தரமானதாக இருந்தது. செல்லும் வழியில் ஓடை போன்ற கால்வாய் எங்கள் கூடவே வந்தது. இரண்டு பக்கமும் நெல் வயல்கள். புல் முளைத்துக் கிடந்த தரிசு நிலங்கள். சிறு குட்டைகள். அதில் மேயும் வாத்துகள். மோட்டார் சைக்கிளில் அவ்வப்போது போவோர் வருவோர் தவிரப் பெரிய வாகனங்கள் கிட்டத்தட்ட அந்தச் சாலையில் இல்லை. 

    அந்தக் குளுமை, பசுமை, வயல்வெளியைப் பார்த்ததும் பரணிக்குள் உறங்கிக் கொண்டிருந்த விவசாயி மெல்லக் கண்விழித்தான். ஆங்காங்கே வண்டியை நிறுத்தி அந்த ஏகாந்தத்தை அனுபவித்தோம். பழங்காலத் தஞ்சை மாவட்டம் போலிருந்தது. ஆங்காங்கே நல்ல உறுதியான வீடுகள். எல்லாமே கான்கிரீட் தூண்களுக்கு மேல் கட்டப்பட்டிருந்தன. மழைக் காலத்தில் வெள்ளம் பாயும் பகுதிகள் போலும். அந்த வட்டாரத்திலிருந்த பெரும்பாலான வீடுகள் ஒரு ஆள் உயரத்தில்தான் இருந்தன. மரப்படிகளால் வீடு தரையோடு இணைக்கப்பட்டிருந்தது. மரச் சுவர்கள், மரத்தால் ஆன சரிவான கூரை. பார்ப்பதற்கே ரம்மியமாக இருந்தது.

    கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளின் விளைநிலத்தைக் குத்தகைக்கு எடுத்து அதில் பயிர் செய்து தானியங்களை இறக்குமதி செய்வது குறித்து சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகள் ஆலோசித்து வருகின்றன. அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் முன்னரே தொடங்கிவிட்டன. வருங்காலச் சந்ததிகளுக்குத் தேவையான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது அதன் நோக்கம். பயிர் செய்யத் தேவையான மூலதனம், தொழில்நுட்பம், உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் எல்லாவற்றையும் குத்தகைக்கு எடுத்த நாடுகள் தரும். பயிர் விளைந்ததும் அறுவடை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படும். இரண்டு தரப்பினருக்கும் லாபம்.

    நாங்கள் பயணம் செய்த விளை நிலங்களைப் பார்த்தபோது அப்போதுதான் நாற்று நட்டுப் பாவி இருந்தார்கள். பரணிக்கு உண்மையிலேயே நிலைகொள்ளவில்லை. எனக்கு ரெண்டு ஏக்கர் இங்க குடுத்தா அப்படியே விவசாயம் பண்ணிக்கிட்டு இங்கேயே பொழுதை ஓட்டிருவேன் என்று புலம்பிக் கொண்டே வந்தார்.

    நீர்வளம் நிறைந்த செழிப்பான பூமியைப் பார்த்ததும் எந்தவொரு விவசாயிக்கும் வரக்கூடிய இயல்பான உணர்வுதான் அது.

    தமது இளமைக் காலத்தில் செய்த விவசாய வேலைகளைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார் பரணி. ராஜுவும் விவசாயக் குடும்பம்தான். அவருக்கும் ஃபிளாஷ்பேக் வந்துவிட்டது. டார்டாய்ஸ் கொசுவர்த்திச் சுருளைச் சுற்றாத குறைதான். எல்லாருமே 20, 30 ஆண்டுகள் பின்னால் போய்விட்டோம். நான் வறண்ட ராமநாதபுரம் ஜில்லாக்காரன். டிப்ளமோ படிக்கத் தஞ்சை மாவட்டம் சீர்காழிக்கு அருகிலுள்ள புத்தூருக்கு வந்தபோது அந்தப் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சுற்றி இருந்த பசுமை எனக்குப் புதிது.

        

    கல்லூரி விடுதிக்குப் பின்னால் குமட்டிப் பழம் பயிரிடுவார்கள். அது நல்ல மணற்பாங்கான இடம். அதில் நெல் விளையாதுபோலும். கல்லூரிக்கு எதிரே பச்சைப் பசேலென நெல் வயல்கள். அவற்றின் பின்னால் ரயில் தண்டவாளம். அவ்வப்போது அதில் ரயில் போகும் காட்சியை மழைக் காலத்தில் பார்த்தால் ஏதோ பெரிய ஐரோப்பிய ஓவியர் வரைந்த தைல ஓவியம்போல இருக்கும்.

    மழைக் காலத்தில் தஞ்சை மாவட்டத்தினூடாகச் சோழன் போக்குவரத்துக் கழகப் பேருந்திலும் தனியார் பேருந்திலும் பயணம் செய்யும் சுகத்தைச் சொல்லில் வடிக்க முடியாது. இரண்டு பக்கமும் வயல்வெளிகள். ஆங்காங்கே சின்னச் சின்ன அய்யனார் கோயில்கள். ஆலமரம், அதன்கீழே உள்ள சதுரத் திண்ணைகள், வெள்ளைப் பள்ளிவாசல்கள், ஆற்றோரம் இடிந்துபோன பழைய மண்டபங்கள் என வரலாற்றுக் காலம் நம்மோடு கூடவே ஓடிவரும். பேருந்தில் ஓடும் இனிய பாடல்கள்தான் இது நவீன காலம் என்ற உணர்வை நமக்குத் தரும்.

    அதிலும் கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் போகும் வழியில் பசுபதி கோயிலில் இருந்து பள்ளியக்ரஹாரம் வரையுள்ள 10 கிலோமீட்டர் தொலைவு இருக்கிறதே.. யம்மாடீ ! அப்படி ஒரு பசுமை.                

    தொலைவில் சித்திரம் போலத் தஞ்சைப் பெரிய கோயில் விமானமும், அரண்மனைக் காவல் மாடமும் தெரியும். மாலை மயங்கும் நேரத்தில் அந்தப் பாதையில் அப்போது வெளியான முதல் மரியாதை, இதயக் கோயில், தென்றலே என்னைத் தொடு, கீதாஞ்சலி படப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே போகும் சுகம் இருக்கிறதே..        அடடா.. அடடா.. எந்த ஒரு ஹோம் தியேட்டர் சிஸ்டமும் தர இயலாத இன்பம் அது. இந்தப் பயணம் இப்படியே நீண்டுகொண்டே இருக்காதா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் பயணம் அது.

    அதே அளவுக்கு உல்லாசமான பயணமாக இருந்தது ஏரியை நோக்கிச் சென்ற எங்கள் பயணமும். படகில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் சென்று ஆறு ஏரியோடு சங்கமிக்கும் இடம் வரை சென்று திரும்புவது எங்கள் திட்டம். ஆங்காங்கே வயல்களைப் பார்த்ததும் இறங்கிப் படம் எடுத்துக் கொண்டே போனோம். சீக்கிரம் போகணும் இருட்டி விட்டால் எதையும் ரசிக்க முடியாது என்று ஓட்டுநர் ரா விரட்டவில்லையென்றால் வயலுக்குள்ளேயே அன்றைய இரவுப் பொழுதைக் கழித்திருப்போம்.

    வழியில் ஒரு பெரிய கிராமம் வந்தது. அதற்குள் வண்டி வளைந்து வளைந்து போனபோது எல்லாரும் எங்களையே பார்த்தார்கள். பயணிகள் அவ்வளவாக வந்து போகாத பாதை போலும் இது. நல்ல மழை பெய்து வெறித்திருந்தது. மண்ணில் நீர் ஊறி இலேசாக ஆவி எழுந்து கொண்டிருந்தது. 

    பெரிய பாதையிலிருந்து விலகி இப்போது ஒற்றையடிப் பாதையை விடக் கொஞ்சம் பெரிய பாதைக்கு வந்திருந்தோம். சற்று நேரத்தில் இறங்கவேண்டிய இடம் வந்தது. எதிரிலேயே கால்வாய் ஓடிக் கொண்டிருந்தது. அது இயற்கையான ஓடையா அல்லது தஞ்சாவூர்ப் புதுவாய்க்கால் போலச் செயற்கையாகப் பாசனத்துக்காக வெட்டப்பட்ட கால்வாயா எனத் தெரியவில்லை. அதிலிருந்து ஏராளமான கால்வாய்கள் வயல்களுக்குள் பிரிந்து செல்வதைக் கண்டோம்.

    ஒரு நீளமான விசைப் படகில் ஏறிக் கொண்டோம். மணி நாலரை இருக்கக்கூடும். நல்ல தெளிவான வானம். மெதுவாக ஊரத் தொடங்கிப் பின்னர் சற்று வேகமெடுத்தது படகு. இரண்டு பக்கமும் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தோம். கொஞ்ச தூரம் போனதும் கால்வாய் அகலமானது. அந்தப் பகுதியில் ஒரு ஊரே கால்வாய்க்குள் இருந்தது. நாலு, ஐந்து ஆள் உயரத்தில் கம்புகள் நடப்பட்டு அவற்றின் மேல் மரத் தரை, சுவர் அமைத்து வரிசையாக வீடுகள்.

     

    போகும் வழியில் நிறைய கான்கிரீட் தூண் கொண்ட வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். எல்லாமே உயரமானவை. அந்தப் பகுதியில் மழைக் காலத்தில் வெள்ளம் பெருகும்போலும். நாங்கள் பார்க்கப் போகும் ஏரியின் சிறப்பே அதுதான்.                          

    டோன்லே சாப் ஏரி அளவில் மிகப் பெரியது. டோன்லே சாப் நதி, அந்த ஏரியை, மாபெரும் மீகோங் நதியோடு இணைக்கிறது. அந்த நதி 100 கிலோமீட்டருக்கும் மேல் நீளமுள்ளது. ஏரியை மேலிருந்து பார்த்தால், ஒரு பெரிய மீன் மாதிரி இருக்கும். அங்கோர் நாகரிகத்தின் செழிப்புக்கு இந்த நதியும் ஏரியும்தான் முக்கியக் காரணம்.           

    கோடைக்காலத்தின் முடிவில், இந்த நன்னீர் ஏரி 120 கிலோமீட்டர் நீளமுள்ளதாக இருக்குமாம். அகலம் 20 கிலோமீட்டருக்கு மேல் இருக்கும். அப்போது இதன் சராசரிப் பரப்பளவு சுமார் 2500 சதுர கிலோமீட்டர். மூன்று சிங்கப்பூரை மொத்தமாக உள்ளே அமுக்கி வைத்துவிடலாம். அதே ஏரி மழைக்காலத்தில் தண்ணீரால் ஊதிப் பெருத்துவிடுமாம். 250 கிலோமீட்டர் நீளமும் ஆக அகலமான இடத்தில் 100 கிலோமீட்டர் அகலமும் கொண்டு ராட்சத ஏரியாகிவிடும். இது செப்டம்பர், அக்டோபர் மாதங்களில். இந்த நேரம்தான் புனோம் பென்னிலிருந்து சியாம் ரீப்புக்கு படகில் செல்ல முடியும் காலம்.  

    மழைக் காலத்தில் ஏரியின் பரப்பளவு 16,000 சதுர கிலோமீட்டர் அளவுக்குப் பெருகிவிடும். மழைக்காலத்தில் உள்ளே வரும் வெள்ளம், மீகோங் நதியில் நீர்வரத்து குறையும்போது ஏரியிலிருந்து மீண்டும் மீகோங்கிற்குள் புகுந்து வற்றிவிடும். இது இந்த ஏரியின் தனித்தன்மை. இதன் காரணமாகவே இதன் பல்லுயிரிப் பெருக்கம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. பழங்கால மனிதர்கள் அளவுக்கு இக்காலச் சந்ததியினர் இந்த ஏரியை ஆக்ககரமாகப் பயன்படுத்துகிறார்களா என்றால் இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

    கடுமையான சூழியல் பிரச்சினைகளால் இன்று இந்த ஏரி கடுமையான நெருக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறதாம். நாங்கள் பார்த்தவரை அதில் கழிவுகள் ஏதும் கலக்கவில்லை. நாங்கள் படகில் சென்ற கால்வாயிலிருந்து எவ்வித துர்-நாற்றமும் எழவில்லை. கால்வாயும் ஏரியும் இணையும் இடத்திற்கு அருகே ஏராளமான மரங்கள் தண்ணீருக்குள் நிற்கின்றன. பிச்சாவரத்தை நினைவுபடுத்துவதுபோல்.. ஆனால், பிச்சாவரத்திலுள்ள சுரபுன்னை மரங்கள் குட்டையானவை. இங்கிருந்த மரங்கள் பெரியவை.

    என்ன மரம் என்று என்னால் இனங்காண முடியவில்லை. வழியில் படகிலேயே பலர் குடும்பம் நடத்துவதைக் காணமுடிந்தது. படகிலேயே சமைக்கிறார்கள். சிறுவர்கள் சர்வசாதாரணமாகத் தண்ணீரில் குதித்து நீந்திப் பக்கத்து வீட்டுக்குப் (படகுக்கு ?) போகிறார்கள். இவர்களுக்குச் சளிப் பிடிக்காதா ? ராத்திரி நேரத்தில் இயற்கை உபாதையைக் கழிக்க எங்கே செல்வார்கள் ? வழியில் ஒரே ஒரு சிறிய மருத்துவமனை கண்ணில்பட்டது. அது இவர்களின் அவசரத் தேவைகளுக்குப் போதும்போலும்.

    சிறுவர்களின் பற்கள் வெண்மையாக இல்லை. பழுப்பாக இருந்தன அவை. அவர்கள் சிரிக்கும்போது தெரிந்தது. ஆக இவர்களுக்குச் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் இல்லை. நிலத்தடி நீர்தான் குடிநீர் ஆதாரம்போலும். புயல் மழைக் காலத்தில் இந்த வீடுகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும் ? எப்படி இவர்கள் தைரியமாக இங்கேயே படுத்துத் தூங்கி, உண்டு வாழ்ந்து முடிக்கிறார்கள் ? நினைத்தால் வியப்பாக இருந்தது. அவர்களுக்குப் பழகி இருக்க வேண்டும். யாரும் அதைப் பொருட்படுத்துவதுபோல் தெரியவில்லை. சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள்.

    கால்வாயிலிருந்து எங்கள் படகை ஏரிக்குள் செலுத்த வேண்டுமா என்று படகோட்டி கேட்டார். ஏன் போகலாம்தானே என்று கேட்டோம். அலைகள் வேகமாக வந்து மோதிப் படகு ஆடும் பரவாயில்லையா என்றார். எதிரே ஒரு பெரிய கடல்போல் கிடந்தது ஏரி. காற்று காதை உரசிச் சென்றது. பரவாயில்லை உள்ளே போங்கள் என்றதும் தண்ணீரைக் கிழித்துப் புகுந்தது படகு.

    கடலில் வருவது போன்ற பெரிய அலைகள் இல்லை. ஆனால் அலை இருந்தது. சளப் சளப் எனப் படகில் மோதியதால் படகு மொத்துண்டு ஆடியது. கொஞ்சதூரம் போனதும் நான்கு பக்கமும் கலங்கலான ஏரி நீர் மட்டுமே இருந்தது.

    காரைக்குடியில் நான் படித்த முனிசிபல் உயர்நிலைப் பள்ளிக்கு அருகே பருப்பூரணி என்று ஒரு ஊருணி இருக்கும். அதன் தண்ணீர் இப்படித்தான் இருக்கும். குடிப்பதற்குப் படு ருசியாக இருக்கும். ஆறாம் வகுப்புப் படிக்கும்போது மதிய உணவை அங்கே எடுத்துச் சென்று சாப்பிட்டு, பருப்பூரணித் தண்ணீரைக் குடித்திருக்கிறேன். 25 ஆண்டுகள் கழித்துப் போய்ப் பார்த்தபோது பருப்பூரணி வற்றிக் காய்ந்து சுற்றிலும் கழிவுகளோடு வானம் பார்க்கக் கிடந்தது. கால்வாய்கள் தூர்ந்து நீர்வரத்து நின்று போயிருக்க வேண்டும்.

    என் மனத்தில் இருந்த ஊருணி எப்போதோ செத்துப் போய்விட்டதுபோலும். மனம் வலித்தது அதைப் பார்த்தபோது. எவ்வளவு இலட்சோப லட்சம் நீர்நிலைகளை நம் தலைமுறையில் சின்னாபின்னப்படுத்தி இழந்திருக்கிறோம் ? நம் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் நம்மைக் காலம் பூராவும் சபிக்கப் போவது உறுதி.

    டோன்லே சாப் ஏரியின் பிரம்மாண்டம் அச்சுறுத்தியது. லேசாக பயம் எட்டிப் பார்த்தது. ஏரியின் ஆழம் குறைவுதான். மூன்று அல்லது நான்கு அடிதான் இருக்குமாம். இருந்தாலும், ஏரியின் அளவை நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருந்தது. போதும் திரும்புகள் என்று சொல்லிவிட்டோம். வந்த பாதையிலேயே படகில் திரும்பினோம்.

    இடப் பக்கமாக சூரியன் மேற்குவாயில் விழத் தொடங்கியிருந்தான். மேகங்களுக்கு இடையே வெளிச்சம் கசிந்து வண்ணக் களறியாக இருந்தது வானம். போகும்போதும் வரும்போதும் படகின் முனையில் போய் நின்று கொண்டும் படுத்துக் கொண்டும் தண்ணீரை ரசித்தோம். கைகளை அகலமாக விரித்துப் பொருளற்ற ஓசையெழக் கத்தினோம். படகோட்டிக்கு இதெல்லாம் பழக்கமாகி விட்டது போலும். பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஓட்டுநர் ரா அமைதியாகத் தனது கைத் தொலைபேசியை நோண்டிக் கொண்டே வந்தார்.

    எங்களுக்கு இந்த நிலக் காட்சி புதிது. மனம் கட்டவிழ்ந்து கிடந்தது. இன்றைய நாளில் கிடைத்த அனுபவங்கள் எல்லாமே இனியவை. படகுப் பயணம் முடித்து இரவு உணவுடன் கூடிய அப்சரஸ் நடனம் காணச் செல்வதாக ஏற்பாடு.. அங்கிருந்து சுமார் ஒன்றரை, இரண்டு மணி நேரத்தில் சியாம் ரீப் சென்று சேர்ந்தோம். அவ்வளவு நேரமும் வயல், பசுமை, அருவி, தண்ணீர், ஏரி, கால்வாய் எனப் பார்த்துவிட்டுத் திடீரென நகர்ப் பகுதிக்குள் நுழைந்தபோது வாகனப் புகையும் சந்தடியும் முகத்தில் அறைந்தன. உணவு விடுதிக்குமுன் எங்களை இறக்கி விட்டபின் சற்று நேரம் கழித்து வந்து அழைத்துச் செல்வதாகக் கூறி அகன்றார் ரா.

    நாங்கள் ஐந்து பேரும் அந்தப் பெரிய உணவகத்துக்குள் நுழைந்தோம்.

    – பொன். மகாலிங்கம்

     

    சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com