Category: old…

old…

  • முதன்முதலில் ஸ்ரீராமஜெயம் எழுதியவர் யார்?

    முதன்முதலில் ஸ்ரீராமஜெயம் எழுதியவர் யார்? என்ற கேள்விக்கு உங்களில் பலர் சரியான பதிலை கணித்திருப்பீர்கள். ஆம், நீங்கள் நினைத்தது சரிதான். ராம பக்த ஆஞ்சநேயர் தான் அந்த புண்ணியத்தை தொடங்கி வைத்த புண்ணியவான்.

    ஸ்ரீராமபிரான் ராவணணை போரில் வென்ற செய்தியை சீதையிடம் தெரிவிக்க முதலில் ஓடிவந்தவர் ஹனுமான். அவருக்கு சீதையைக் கண்டதும் உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் வரவில்லை. வெற்றிக் களிப்பில் சீதா தேவியின் முன் பணிந்து "அம்மா!" என்று மட்டும் சொல்ல முயன்றார். ஆனால், நா தழுதழுத்ததால் சொல்ல வந்ததை மணலில் எழுத முயன்றார். சீதையின் முன் மணலில் ""ஸ்ரீராமஜெயம்'' என்று எழுதிக் காண்பித்தார். அந்த குறிப்பைப் படித்த சீதை, ராமன் வெற்றி பெற்றதைத் தெரிந்து கொண்டாள்.

    இப்படித்தான் முதன்முதலில் "ஸ்ரீராமஜெயம்" மந்திரம் எழுதப்பட்டது. அன்று முதல் நாமஜெபம் என்ற பெயரில் ராமநாமத்தை பனை ஓலைகளில், காகிதத்தில் எழுதும் வழக்கம் உண்டானது. ஸ்ரீராமஜெயம் எழுதுவதோ, ராம நாமத்தை உச்சரிப்பதோ எவ்வளவு பெரிய பாவத்திலிருந்தும் நம்மை விடுவிக்கும் என்று சொல்வர்.

  • சென்னையை காக்கும் காளிகாம்பாள்

    சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில். நெரிசல் மிகுந்த தம்புசெட்டித் தெருவில் தற்போது வசிக்கும் காளிகாம்பாள் ஆரம்ப நாட்களில் கடற்கரையோரமாக காற்று வாங்கிக் கொண்டு நிம்மதியாக குடியிருந்தாள்.

    ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் வங்கக் கடலை ஒட்டி ஒரு சிறிய மீனவ கிராமம்தான் இருந்தது. இந்த கிராமத்தினரின் கடவுளாக இருந்த காளிகாம்பாளுக்கு அவர்கள் செந்தூரம் சாத்தி வழிபட்டு வந்தனர். இதனால் சென்னியம்மன் என அழைக்கப்பட்டாள். சென்னியம்மன் குப்பம் என்ற பெயரே பின்னர் சென்னை என்று மருவியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

    விஸ்வகர்மா சமூகத்தினர் நாயக்கர் காலகட்டத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் கோயில் திருப்பணிகளுக்காக சென்னையில் குடியேறியபோது திருவண்ணாமலையில் இருந்து கல் எடுத்து வந்து கட்டிய ஆலயம் இது என்று கூறப்படுகிறது. பின்னர் 1640இல் ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியபோது, கோவில் கோட்டைக்குள் வந்துவிட்டது. இப்படி கோட்டைக்குள் வைத்து வழிபட்டதால் கோட்டையம்மன் என்றும் ஒரு பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.


    ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் கோட்டைக்கு வெளியே தம்புசெட்டித் தெருவிற்கு இடம்மாறினாள் இந்த அம்மன். தம்புசெட்டித் தெருவில் உள்ள கோவிலை முத்துமாரி ஆச்சாரி என்பவர் நிர்மாணித்தார். இடம் மாறியதே தவிர பக்தர்களின் எண்ணிக்கை மாறவில்லை. அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்துகொண்டே இருந்தனர். அப்படி வந்த ஒரு விஐபி பக்தர்தான் சத்ரபதி சிவாஜி.

    1677இல் சென்னையை நோக்கி படையெடுத்து வந்தார் சத்ரபதி சிவாஜி. அப்போது சென்னையின் ஆளுநராக இருந்தவர் ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர் (Streynsham Master). இவர் ஏற்கனவே சிவாஜியின் வீரத்தைப் பார்த்திருக்கிறார். 1670இல் சிவாஜி சூரத் நகரில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் கோட்டையைத் தாக்கியபோது அதனை எதிர்கொண்டவர் இதே ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர்தான்.

    தனது தென்னகப் படையெடுப்பால் வேலூர், செஞ்சி, ஆற்காடு ஆகிய பகுதிகளை கைப்பற்றிய சிவாஜியின் அடுத்த குறி சென்னைதான் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் மெட்ராஸ்வாசிகள் அடுத்து என்ன எனத் தெரியாமல் அச்சத்தில் உறைந்து போயிருந்தனர். இப்படி நிமிடங்கள் திக்..திக்.. என கடந்து கொண்டிருந்த நிலையில், 1677, மே 14ஆம் தேதி சிவாஜியின் தூதர் ஒருவர் புனித ஜார்ஜ் கோட்டைக்கு வந்தார்.

    சத்ரபதி சிவாஜி சில விலை உயர்ந்த கற்களையும், விஷமுறிவு மருந்துகளையும் கேட்பதாகவும், அதற்குரிய பணத்தை அளித்து விடுவதாகவும் அந்த தூதர் தெரிவித்தார். ஆனால் ஆங்கிலேயர்கள் பணம் எதையும் பெறாமல் சிவாஜி கேட்ட பொருட்களை அனுப்பி வைத்தனர். சிவாஜி சென்னையைத் தாக்காமல் இருக்க என்ன விலையையும் கொடுக்க அவர்கள் தயாராக இருந்தனர். 

    சில நாட்கள் கழித்து மீண்டும் சில கோரிக்கைகளோடு திரும்பி வந்தார் சிவாஜியின் தூதர். இம்முறை வாங்கும் பொருட்களுக்கு உரிய விலையை கண்டிப்பாக கொடுக்கும்படி சிவாஜி வலியுறுத்தியதாக கூறினார். ஆனால் இரண்டாம் முறையும் விலையில்லா பொருட்களே அவருக்கு வழங்கப்பட்டன. மூன்றாவது முறையாக மீண்டும் வந்த தூதர், இம்முறை சில ஆங்கிலேய பொறியாளர்களை சிவாஜி அழைத்து வரச் சொன்னதாகத் தெரிவித்தார். ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க முடியாதென மிகவும் பணிவாக மறுத்துவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். இதனால் ஆத்திரமுற்று சிவாஜி சென்னை மீது படையெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. இதனிடையே சில அரசியல் மாற்றங்கள் காரணமாக சிவாஜி மீண்டும் தனது ராஜ்ஜியத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டி இருந்தது.

    காளிகாம்பாள் கோவிலில் உள்ள சிவாஜி பற்றிய குறிப்பு

    இந்த இடத்தில்தான் வரலாற்றில் ஒரு புதிர் அவிழ்க்கப்படாமல் நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. சிவாஜி சென்னைக்குள்ளேயே வரவில்லை என்கிறார்கள் சில வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால் காளியின் பக்தரான சிவாஜி, யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் வந்து தம்புசெட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாளை தரிசித்துவிட்டுச் சென்றார் என்கிறார்கள் சிலர். அக்டோபர் 3, 1677இல் சிவாஜி காளிகாம்பாள் கோவிலுக்கு வந்தார் என கோவிலில் ஒரு குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு உறுதியான வரலாற்று ஆவணங்கள் எதுவும் இல்லை.

    மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில், பணியாற்றிக் கொண்டிருந்தபோது பிராட்வேயில் தங்கியிருந்தார். அப்போது அடிக்கடி இந்த கோவிலுக்கு வழிபட வருவாராம். ‘‘யாதுமாகி நின்றாய் காளி’’ என்ற அவரது பாடலில் வருவது காளிகாம்பாள்தான்.

    சத்ரபதி சிவாஜி, பாரதியார் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலரையும் ஆசிர்வதித்த காளிகாம்பாள், 3 நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் தனது அன்பால் சென்னையை அரவணைத்துக் கொண்டிருக்கிறாள்.

    – பார்த்திபன், வரலாற்று ஆய்வாளர் (தினத்தந்தியில் வெளியான கட்டுரையில் இருந்து..)

    —————

    பார்த்திபன் – பத்திரிகையாளர், வரலாற்று ஆய்வாளர். சென்னை மாநகரம் பற்றி மூன்று புத்தகங்களை எழுதி இருக்கிறார். அந்தக்கால சென்னை பற்றி தினத்தந்தி நாளிதழில் 100 வாரங்கள் கட்டுரை எழுதியவர். இந்தியாவின் முக்கியமான மாநகரங்களில் ஒன்றான சென்னையைப் பற்றிய ஏராளமான தகவல்களை தெரிந்துவைத்திருப்பவர். அவற்றை சுவைபட எழுதவும் செய்கிறார் என்பதுதான் கூடுதல் தகவல்.

  • உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்

    அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான். பெரிய திருவாசியை தனியே வார்த்தாகி விட்டது. சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது.

    சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும். மழு தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமாக ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். மழு தயார் நிலையில் இருந்தது. திரும்பி மனைவியைப் பார்த்து துவங்கி விடட்டுமா? என்று கேட்டான். மனைவி சரியென்று தலையசைத்தாள்.

    படுக்க வைக்கப்பட்ட பெரிய களிமண் அச்சுக்கு முன் கைகூப்பி நின்றான். இது ஆறாவது முறை. என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பின்னம் நடந்து கொண்டிருக்கிறது. முதன்முறை மூக்கில்லை. இரண்டாம் முறை விரல்களெல்லாம் மொத்தமாகி விட்டது. மூன்றாம் முறை இடுப்பு பக்கம் மிகப் பெரிய பள்ளம் விழுந்துவிட்டது, நான்காம் முறை காதுகள் காணாமல் போய்விட்டன. ஐந்தாம் முறை பாதம் பாதியில் நின்றுவிட்டது. முழுவதும் மழு போகவில்லை. இது ஆறாவது முறை, உன்னை நான் உருவமாகச் செய்கிறேன் என்ற கர்வம் எனக்கில்லை. ஈசனே, நீயே வந்து குடி கொண்டாலொழிய உன் உருவத்தை ஒரு நாளும் செய்ய முடியாது.

    நீ, இவ்விதம் இருக்கிறாய் என்பது என்னுடைய கலைக்கற்பனை, மனிதருள் சிறந்தனவாய் இறைவன் காட்சியளிப்பான், என்பது என் எண்ணம். அவன் ஆடல் கலையிலும், பாடல் கலையிலும், போரிலும், பேச்சிலும், வேதப் பயிற்சியிலும், விவேகத்திலும் மிகச்சிறந்தவனாக இருப்பான் என்பது என் எண்ணம், எங்களுள் சிறந்தவனாக இருக்கின்ற ஒருவனின் முகச்சாயலை மனதுக்குள் கொண்டு வந்து அது நீ என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

    இது ஒரு குழந்தை விளையாட்டு. ஆனால், நீ எல்லாவற்றிலும் மேன்மையானவன், எல்லோரிலும் மேன்மையானவன், உனக்கு உருவமில்லை, நீ எங்கும் நிறைந்தவன், எப்படியும் இருப்பவன், உன்னை எந்த உருவத்திலும் அடக்க முடியாது என்று எனக்குத் தெரியும். ஆனால், எனக்கு புரிவதற்காக என் மனம் நிறைவதற்காக என் கண்கள் நிறைவதற்காக, என் புத்தியின் அமைதிக்காக, என் மக்களின் நன்மைக்காக உன்னை நான் உருவமாக்குகிறேன்.

    நீயே வந்து இதற்குள் உட்கார்ந்தாலொழிய உன்னை நான் உருவமாக்க முடியாது, எங்கேனும் ஒரு கர்வத்தில் நான் இருப்பின் தயவுசெய்து என்னை தண்டித்துவிடு. இந்த உருவத்திற்குள் வராமல் போகாதே என்று வேண்டினார்.

    அந்தப்பகுதி, அரசனுடைய குரல் அவன் காதில் விழுந்தது.

    வேண்டுமென்றே தவறு செய்கிறாய் சிற்பியே, என்னிடம் காசு வாங்குவதற்காகவே நீயாக ஏதேனும் தவறு செய்துவிட்டு, பின்னமாகிவிட்டது குறையாகிவிட்டது, என்று வருத்தப்படுகிறாய், கடந்த நான்கு வருடங்களாக நடராஜர் சிலையை செய்வதாக கூறி என்னுடைய சம்பளத்திலே தின்றுகொழுத்து செய்துவருகிறாய், இதுவே கடைசி முறை இன்னும் இரண்டு நாட்களில் நடராஜர் சிலையை செய்யவில்லையெனில் நீ இங்கிருந்து புண்ணியமில்லை உன்னை சிற்பி என்று நாங்கள் அழைத்து லாபமில்லை எனவே உன் கதையை என் வாளால் முடிப்பேன் என்று சீறினான் அரசன்.

    அந்த அரசன் நான்கு வருடங்கள் பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம். அவன் பொறுமை மீறும்படியாக என்ன ஏற்பட்டது தெரியவில்லை, அரசனிடம் இருந்து நடராஜர் சிலை செய்ய உத்தரவு சிற்பிக்கு வந்ததுமே அற்புதமான ஒரு நடராஜர் ஆயிரமாயிரம் காலத்திற்கு நிற்க வேண்டிய நடராஜர் செய்ய வேண்டும் என்ற வேகம் வந்தது. அந்த வேகத்தோடு கர்வம் வந்ததோ, என்னவோ தெரியவில்லை. ஐந்து சிலைகள் செய்தும் சரியாக வரவில்லை. இது ஆறாவது சிலை.

    நான்கு வருடமாக சிலை செய்து கொண்டிருக்கிறாய், ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு விஷயம் பின்னமாகி கொண்டிருக்கிறது. அப்படி என்றால் நீ வேலையை சரியாகச் செய்யவில்லை என்று அர்த்தம். உனக்கு சிலை செய்கின்ற எண்ணமே இல்லை என்று அர்த்தம். சும்மா கண் துடைப்புக்காக ஏதோ செய்துவிட்டு பின்னமாகி விட்டது என்று என்னை ஏமாற்றுகிறாய் என்று அரசன் உரத்த குரலில் அவரை அதட்டியது, ஊர் மக்கள் முன்னால் தன்னை அவமானப்படுத்தியது ஞாபகம் வந்தது.

    இப்பொழுது சொல்கிறேன் கேள் சிற்பியே. இன்னும் இரண்டு நாட்க்களுக்குள் நீ இந்த சிலையை செய்து முடிக்கவில்லை என்றால். உன் உயிர் உன்னிடம் இருக்காது என்று பயமுறுத்தி விட்டு போயிருக்கிறார்.

    இந்த சிற்பி மூன்றாவது முறை சிலை தவறாக வந்தவுடனேயே தற்கொலை செய்து கொள்ளவேண்டுமென்ற எண்ணத்திலிருந்தான். ஆனால், அவன் மனைவி தான் காப்பாற்றினாள். ஏதோ ஒரு காரணத்திற்காக தான் இந்த விதமாய் பிழைகள் ஏற்படுகின்றன. மிக அற்புதமான சிலை நீங்கள செய்ய வேண்டுமென்ற எண்ணத்தை கொண்டிருக்கிற ஈசன், உங்களை சோதிப்பதற்காக இந்த நாடகங்களை நடத்திக்கொணடிருக்கிறார். எனவே எத்தனை முறை பழுதுபட்டாலும் நீங்கள் மனம் தளரக்கூடாது. மறுபடி, மறுபடியும் நீங்கள் முயற்ச்சிக்க வேண்டும். இறையருள் உங்களில் பொங்கியெழுந்து நிற்கும் போது இந்த சிலையும், அற்புதமாக நிற்கும். இது உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற சோதனை.

    உங்களை இறைவன் கொதிக்க வைத்து கொண்டிருக்கிறான். எனவே சற்றும் மனம் தளராதீர்கள். நன்கு கொதியுங்கள், நீர்த்த மழுவாய் மாறுங்கள். எல்லா இடமும் பரவுங்கள், ஒளியோடு பரவுங்கள் என்று அவள் அவனை உற்சாகப்படுத்தினாள். அவன் புரிந்து கொண்டான். ஆனால், அரசன் பயமுறுத்தல் அவனை அதிகம் நடுங்க வைத்தது. அவன் சாவதற்கு பயப்படவில்லை. தண்டனை பெற்று சாக வேண்டுமா என்கிற வேதனையைத் தான் அவன் முதலில் அடைந்தான்.

    ஒரு சிறு தவறும் நேராதவாறு எல்லா விஷயங்களையும் ஒரு முறைக்கு இரு முறை சோதித்து மெழுகால் சிலை செய்து பிறகு அதன் மீது களிமண் பூசி, சரியான இடத்தில் ஓட்டைகள் வைத்து காற்றுப் போக வழிகள் செய்து அவன் மழுவைக் காய்ச்சி இறைவனை வழிபடத் தொடங்கினான்.

    மழு உச்ச நிலையில் கொதித்துக் கொண்டிருக்க, என்னுடைய வாழ்க்கை உயர்வதும், தாழ்வதும் இப்பொழுது உன்கையில் இருக்கிறது. உனக்கு விருப்பம் இருப்பின் இதற்குள் வந்து உட்கார்ந்து கொள் இல்லையெனில் என்னை சாக விடு என்று சொல்லிவிட்டு முழுமனதோடு மழுவை கிளரத் தொடங்கினான்.

    உலையின் அனல் உடம்பு முழுவதும் அடித்தது. இருட்டில் யாரோ தொலைவிலிருந்து வருவது தெரிந்தது. வந்தவர்கள் ஆணும், பெண்ணுமான வயதான அந்தணர்கள். 

    அப்பா திருநல்லம் என்கிற ஊர் எது, ஏனப்பா மிகப்பெரிய ஊர் என்று சொல்கிறார்கள், ஏன் இப்படி வயல்களுக்கு நடுவே இருக்கிறது. இதை தேடிக் கண்டுபிடித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஐயா, சிற்பியே, தயவுசெய்து குடிப்பதற்கு ஒரு குவளை நீர் கொடு என்று கேட்டார்.

    சிற்பி திரும்பி ஆச்சரியத்தோடு அந்தணர்களைப் பார்த்தான், என்ன இந்த அந்தணர் தன்னைப் போய் நீர் கேட்கிறாரே, என்று ஆச்சரியப்பட்டான்.

    அய்யா, நான் சிற்பி, கருமார் இனத்தை சேர்ந்தவன், அந்தணர்கள் வசிக்கும் பகுதி கோயிலுக்கு பின்புறம் இருக்கிறது. நீங்கள் பார்ப்பதற்கு அந்தணர்கள் போல் இருக்கிறீர்கள். எனவே, கோயிலுக்கு பின்புறம் போய் அந்தணர் வீட்டில் குடிக்க நீர் கேளுங்கள், தருவார்கள் என்று சொன்னான்.

    மறுபடியும் வேலையில் மூழ்கினான். வந்தவன் கைதட்டி அழைத்து எனக்கு தாகமாக இருக்கிறது ஐயா, அக்ரஹாரம் போகிறவரையில் என்னால் தாங்க இயலாது சுரண்டு விடுவேன் என்று தோன்றுகிறது எனவே உன் கையால் ஒரு குவளை நீர் கொடு என்றான்.

    நான் இங்கு வேலை செய்து கொண்டிருப்பது உன் கண்ணில் படவில்லையா, ஒரு சிலை வடிப்பது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியாது? கவலையோடு நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். குடிக்க தண்ணீர் கொடு என்று என் உயிரை ஏன் வாங்குகிறீர்கள். என்னிடம் தண்ணீர் இல்லை, இந்த மழு தான் இருக்கிறது வேண்டுமானல் இதை குடியுங்கள் என்று பதட்டத்தோடு சொல்ல.

    சரி அதையே குடித்துக் கொள்கிறேன் என்று அருகே வந்த கிழவர், உஞ்சவர்த்தி பிராமணர் போல ஒரு சொம்பை இடுப்பில் கட்டி தொங்கவிட்டிருந்தார். அந்தச் சொம்பை விட்டு மழுவை மொண்டார், கொதிக்கின்ற நெருப்பு ஒளியோடு வீசுகின்ற மழுவை எடுத்து உயர்த்திக் குடித்தார். மழு வாய்க்குள் போயிற்று, மழுவை அவர் குடித்துக் கொண்டிருக்கும் போது சற்றுத் தொலைவில் நின்றிருந்த அவரது மனைவி வாய்விட்டுச் சிரித்தாள்.

    சுற்றியுள்ள உதவியாட்களும், சிற்பியும் பயந்து போய் ஓவென்று கூவ, வந்தவரையும் காணோம், வந்தவர் மனைவியும் காணோம். 

    ஐயா, கொதி நிலைக்கு வந்துவிட்டது என்று உதவியாளர் கூவ, எல்லாரும் கொதிக்கும் பாத்திரத்தின் அடிப்பக்க குழாயைத் திறந்து விட்டார்கள். மழு தரைவழிந்து பள்ளத்தில் வழியே சிற்பத்திற்குள் நதிபோல் ஓடி புகுந்து கொண்டது. சரியாய் எண்பது நொடிகளில் எல்லா உருக்கு உலோகமும் சிலைக்குள் போய் தங்கிவிட்டது.

    அடுத்தது பார்வதியும் அவ்விதமே திறந்து ஊற்ற, அதுவும் சிலைக்குள் போய் அமர்ந்து மெழுகை வெளியே அனுப்பியது, மெழுழு உருகி வெளியேறும் புகையில் அடுத்தவர் முகம் தெரியவில்லை.

    கிழவரையும், கிழவியையும் யாரும் தேடவில்லை. உருக்கு மொத்தமும் வழிந்ததும் அவரவர் ஓரம் போய் திண்ணைகளில் சாய்ந்தார்கள். தலைக்கு துணிவைத்துக் கொண்டு மயக்கத்தில் ஆழ்ந்தவர்கள் போல் தூங்கினார்கள், விடிந்து என்ன நடந்தது என்று யோசித்தார்கள், வந்தது சிவபெருமானே என்று முடிவு செய்தார்கள்.

    ஒடிப்போய் களிமண்ணில் நீர் ஊற்றி மெல்ல மெல்ல பிரித்து சிலையைப் பார்த்தார்கள். சிலை ஆறடி உயரத்திற்கு மேலாய் அற்புதமாய் வந்திருந்தது.

    படம் உதவி – பொன். மகாலிங்கம்

    குமிழ் சிரிப்பும், கொவ்வைச் செவ்வாயும், அகலமான கண்களும், தீர்க்கமான நாசியும் அற்புதமான கோணத்தில் நடனமாடும் சிவனுருவம் மிகச் சிறப்பாக வந்திருந்தது.

    நிமிர்த்தி பீடத்தில் நிற்க வைத்தார்கள், சடையையும், திருவாசியையும் மாட்டினார்கள். சிவகாமியையும் நிமிர்த்தி பீடத்தோடு பொருத்தினார்கள். ஊர்கூடிப் பார்த்து வியந்தது, கன்னத்தில் போட்டு கொண்டது. மன்னனுக்கு ஓடிப்போய் மந்திரிகள் செய்தி சொல்ல, மன்னனும் விரைந்து வந்து பார்த்தான். 

    உங்களுக்கெல்லாம் கத்தி எடுத்தால் தானடா காரியம் செய்ய முடிகிறது. தலையை கொய்து விடுவேன் என்று நான் ஆணையிட்டதனால் தானே இரண்டு நாளில் இத்தனை அற்புதமான ஒரு சிற்பத்தை செய்து முடித்தாய், இதுவரை நீ ஏமாற்றிக் கொண்டிருந்தது உண்மை என்று இப்போது தெள்ளத் ‍தெளிவாக புரிந்து விட்டது பார் என்று சிரிப்போடும் கடுப்போடும் மன்னன் பேசினான்.

    சிற்பி இல்லை என்று தலையாட்டினார், என்ன சொல்ல வருகிறாய் மன்னன் மறுபடியும் சீறினான்.

    இது சிவானல் செய்யப்பட்ட சிலை, இப்படி அந்தணர் உருவத்தில் சிவன் வந்து நின்றார். மனைவியுடன் வந்து என்னிடம் பேசினார், தண்ணீர் கேட்டார் மறுத்தேன், இது தான் இருக்கிறது என்று மழுவை காண்பித்தேன், மழுவை ஏந்திக் குடித்தார் மறைந்தார், என்று சொல்ல இந்த கதையெல்லாம் என்னிடம் விடாதே என்று மறுபடியும் சீறினான்.

    இல்லை அரசே இது சிவன் இருக்கிற சிலை, சிவன் மழுவுக்குள் கரைந்த சிலை. எனவே இதனுள் இறைவன் இருக்கிறான். இது என்னால் செய்யப்பட்ட சிலை அல்ல, என்று பணிவாக சொல்ல, அரசன் கொக்கலித்து சிரித்தான். உளியை சிற்பியிடமிருந்து பிடுங்கி, இது சிவன் உருவம் சிவன் இருக்கிற உருவம் என்றால் இதை குத்தினால் ரத்தம் வருமோ என்று காலில் ஒரு காயத்தை ஏற்படுத்தினான், பளிச்சென்று ரத்தம் பீச்சி அடித்தது, தரை நனைத்தது. மக்கள் பயந்தார்கள், அரசன் திகைத்துப் போனான். பயத்தில் சுருண்டு விழுந்தான்.

    இறைவனை சோதித்த அரசனின் உடம்பு முழுவதும் தொழுநோய் பரவியது. அவன் சிற்பியிடமும், இறைவனிடமும் கைகூப்பி மன்றாடி மன்னிப்பு கேட்டான் என்பது கோனேரி ராஜபுரத்தின் கதை.

    எங்கே இருக்கிறது இந்த கோனேரிராஜபுரம், கும்பகோணம் காரைக்கால் பேரூந்து பாதையில் புதூர் என்ற ஊரை அடைந்து, அங்கேயிருந்து வலதுபுறமாக போகும் சாலையில் விசாரித்துக் கொண்டு போக வேண்டும், வயல் வெளிகளுக்கு நடுவே ஒரு பெரிய கிராமம் அமைதியாக உட்கார்ந்திருக்கிறது.

    கோனேரி ராஜபுரத்திற்கு முற்காலப் பெயர் திருநல்லம். இந்த கோனேரி ராஜபுரத்திற்கு சோழமன்னன் கண்டராதித்தனும் அவன் மனைவி செம்பியன் மாதேவியும் பல நிவந்தங்கள் விட்டிருக்கிறார்கள்.

    ஊர் மிகச் செழிப்பான ஊர். நடராஜர் விக்ரகத்தை பார்க்க வேண்டுமானால் அதை கோனேரி ராஜபுரத்தில் தான் பார்க்க வேண்டும். உலகத்திலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை இந்த ஊரில் தான் இருக்கிறது. அழகு என்றால் அழகு அப்படியொரு கொள்ளையழகு. சிற்ப கலை தெரிந்தவர்கள் மட்டுமல்ல, சிற்பக் கலைப்பற்றி தெரியாதவர்கள் கூட அருகே போய் நின்றார்கள் என்றால் அப்படியே பரவசமாகிவிடுவார்கள்.

    சிற்பக் கலை தெரிந்தவர்கள் மயக்கமாகிவிடுவார்கள். கைரேகை, அக்குள் பக்க கருப்பு, அங்கு வழக்கமாய் எல்லா ஆண்களுக்கும் இருக்கின்ற கொழுப்புக் கட்டி, புறங்கை தேமல் என்று பல்வேறு விஷயங்கள் அற்புதமாக அந்த சிற்பி செய்திருக்கிறான். அரசன் உளியால் செதுக்கிய இடமும் பாதத்திற்கு மேல் அப்படியே இருக்கிறது. கோயில் ஆயிரம் வருடத்து கோயில், ராஜராஜனும், ராஜேந்திரனும், குந்தவையும் இரண்டாம் ராஜராஜனும், குலோத்துங்கனும் வந்து போயிருக்கிற விஷயம், கல்வெட்டுகளால் தெரிந்து கொள்ளலாம்.

                                               கோவிலில் உள்ள கல்வெட்டு

    சுற்றுப்பிரகார சுவர் முழுவதும் அரசர்கள் தங்கள் வருகையை பதிவு செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இந்த நடராஜர் முன்பு கைகூப்பி நின்றுவிட்டு போயிருக்கிறார்கள். கோனேரி ராஜபுரம் சுவாமியின் பெயர் உமாமகேஸ்வரர் அல்லது பூமீஸ்வரர், தோட்டமும் துறவுமாய் பூமி பாக்கியம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இவரை வணங்கினால் நிச்சயம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நான் செழிப்பாக இருக்க நல்ல பூமியை கொடு என்று இந்த இறைவனிடம் வேண்டிக் கொண்டு உழைத்தால் நிச்சயம் அவன் கையகல பூமிக்காவது சொந்தக்காரனாவான் என்று நம்பப்படுகிறது.

    தவிர அங்கு வைத்தியநாதன் சன்னதி இருக்கிறது, அந்த வைத்திய நாத சன்னதியில் ஜபம் செய்தால். வேறு யாருக்கேனும் உடம்பு சரியில்லை என்று நாம் இறைவன் பெயரை திரும்பத் திரும்பத் சொன்னால் சம்மந்தப்பட்டபவருக்கு நோய் குணமாவதாகவும் அன்பர்கள் சொல்கிறார்கள்.

    இறைவி பெயர் தேகசௌந்தரி, ஸ்தலமரம் அரசு, தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், திருஞான சம்மந்தரும், அப்பரும் பாடியிருக்கிறார்கள். கோயிலுக்குள் போன உடனேயே கோயிலுக்கு எதிரே பெரிய குளம் இருக்கும், குளம் தாண்டி சுற்றிக் கொண்டு போனால், கோயில் வாசல் சாதாரணமாக இருக்கும், உள்ளுக்குள்ளே அற்புதமான கோயில் தெளிவாக பார்க்கலாம். இந்த நடராஜ சிலை மட்டுமல்ல, கல்யாண சுந்தரர் சிலை, திருமஞ்சனத்திற்கான நடராஜர் சிலை, ஆருத்ர தரிசனத்திற்காக தனியே ஒரு சிலை என்று பல்வேறு சிலைகளை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். கல்யாணசுந்தரருக்கு வடையில் தேன் தோய்த்து நைய்வேத்தியம் செய்தால் திருமணமாகிறது என்று நம்பப்படுகிறது.

                                                                     கோவில் சுவரில் உள்ள பழங்கால ஓவியங்கள்

    கும்பகோணம் போகிறவர்கள் அரை நாள் கோனேரிராஜபுரத்திற்கு ஒதுக்கி வைத்துவிடவேண்டும். நிதானமாக பார்த்துவிட்டு வரவேண்டும். குறிப்பாக அந்த வைத்தியநாத சன்னதி மண்டபத்தில் உட்கார்ந்து ஜபம் செய்துவிட்டு அல்லது கண்மூடி இறைவன் பெயரைச் சொல்லிவிட்டு வருதல் மிக அவசியம் எல்லாவற்றையும் விட உங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த நடராஜனை பார்த்து கைகூப்பிவிட்டு வாருங்கள் கை நிறைய வில்வம் குடந்தையிலேயே வாங்கி கொண்டு போய் அவன் கால் அடியில் சொரிந்துவிட்டு வாருங்கள்.

    அந்த வணக்கம் சிலை செய்ய சொன்ன அரசனுக்கா, செய்த சிற்பிக்கா, அல்லது இவர்கள் எல்லாவற்றையும் இயக்கி தன்னை உள்ளடக்கிக் கொண்டியிருக்கிற சிவனுக்கா யோசியுங்கள் திருநல்லம் ஒரு முறை போய்ப்பாருங்கள்.

    – எழுத்துச் சித்தர் பாலகுமாரன்

  • ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் யோகா – ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

    மிக விரைவான இன்றைய வாழ்வியலில் மிக அதிக அளவு மக்கள் தங்களது ஆழ்ந்த கேள்விகளுக்கு விடை காண  முயல்கின்றனர். வாழ்க்கையில் இதற்கு மேல் ஏதேனும் இருக்கிறதா? வாழ்க்கையின் நோக்கம் என்ன? உண்மையில் வெற்றி என்பது என்ன? இவற்றுக்கெல்லாம் விடை காண்பது எளிதல்ல. அவ்வாறு கண்டறிந்தாலும் அவற்றினை திருப்தியுடன் ஒருவர் ஏற்றுக் கொள்ளக்கூடாது. இவற்றுக்கெல்லாம் ஓர் நிலையான விடை இருந்தால், மொத்த விஷயமுமே இந்நேரம் முடிந்திருக்கும். இக்கேள்விகள் அனைத்தும், ஒருவர் மிக கவனமாக மீண்டும் மீண்டும் உள் நோக்கிச் செல்ல வழிவகுக்கும் ஓர் பாதையாகும்.   

    பல்வேறு தரப்பு மக்களுக்கும் ஆறுதலைத் தரும் யோகா, காலச் சோதனையை வென்ற ஓர் பழமையான இந்திய மருத்துவ முறையாகும். 35 ஆண்டுகளுக்கு முன்னர் வாழும் கலை துவங்கப் பெற்றபோது, ஹிப்பிகளால் மட்டுமே பின்தொடரப்பட்ட யோகா இன்று பெருமளவில் பிரபலமாகியுள்ளது. அனைத்துக் கண்டங்களிலும் கோடிக்கணக்கான மக்களால் இன்று யோகப் பயிற்சி செய்யப்படுகிறது. மாறிக் கொண்டிருக்கும் இன்றைய உலக மக்களின் விருப்பதேர்விற்கு ஏற்றபடி தன்னை  பொருத்தியமைத்துக்கொள்ள துவங்கியது.  இது, ஆச்சாரமான  நாடுகளில் கூட உலகளாவிய மற்றும் மதச்சார்பற்ற சான்றுகளை நிறுவி, பல்வேறு  நம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் ஆகியவற்றில் ஈடுபாடுள்ள மக்களும்  யோகப்  பயிற்சி செய்ய உதவியுள்ளது.

    யோகாவின்  ஆரோக்கிய தத்துவம் அதன் எட்டு உறுப்புக்களைச்  சுற்றி அமைந்திருக்கின்றது. துரதிருஷ்டவசமாக, மக்கள் அவற்றை  எட்டு படிகள், ஒன்றன் பின் ஒன்றாகத் தான் செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர். இந்த உறுப்புக்கள் வரிசைமுறையில் இல்லை; அவை முழுமையின் பகுதிகள் ஆகும். இந்த எட்டு உறுப்புக்களும் ஒரு நாற்காலியில் உள்ள நான்கு கால்கள் போன்றவையாகும். ஒரு காலை இழுத்தால், முழு நாற்காலியும் நகரும். யோகாசனம் முக்கியம்தான் என்றாலும், பிராணயாமம், தியானம் இன்றி யோகா இல்லை. ஒரு சிறிய அளவிலான தியானம் ஒருவரது வாழ்க்கையையே  மாற்றப்  போதுமானதாகும்.

    சிறைகளில் நடைபெறும் நமது பயிற்சித் திட்டங்களில் இதைப் பார்த்திருக்கிறேன். தியான அனுபவத்தைப் பெற்ற கைதிகளின் முழு சிந்தனை, செயல்முறை மற்றும் நடத்தை முறை மாற்றம் அடையும். அவர்கள்  பழிவாங்கும் உணர்வு, கோபம் ஆகியவற்றை எளிதாகக்  கைவிட்டு, ஆக்கப்பூர்வமாக சமூகத்திற்கு பங்களிக்க விரும்பும் அகிம்சை பாதையில் வரத் துவங்குவர். தியானம் (6வது உறுப்பு),  யாமங்கள்(1வது உறுப்பு ) மற்றும் நியமங்கள்(2வது உறுப்பு ) இவையிணைந்து ஒருவரது வாழ்க்கையில்  வெளிப்படுகின்றது. யோகா மூலம், மக்கள்  மனஅழுத்தம், பதட்டம், பணிக்களைப்பு, போதைக்கு அடிமையாதல், தூக்கமின்மை போன்ற பல நோய்களிலிருந்து நிவாரணம் அடைந்திருக்கின்றனர்.

    உலக மக்களுக்கு யோகா ஒரு சக்தி வாய்ந்த கருவியாக இருக்கிறது. எனவே ஆதாரபூர்வமான அதை முன்வைக்கவும், தவறான கருத்துக்களை அகற்றவும் உதவுவதற்காக நமக்கு தகுந்த ஆசிரியர்கள் வேண்டும். முழுமையான அதன் தூய வடிவில் உள்ள யோகா, நவீன வாழ்க்கையின் அனைத்து துன்பங்களுக்கும் மூலகாரணத்தை ஆராய்ந்து அகற்ற முடியும் என்னும்  ஞானத் திறனைக் கொண்டிருக்கிறது.

     

    வாழும்கலை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற யோகப்பயிற்சி

    இன்று வாழ்க்கையின் மிகப் பெரிய நோய்களில்  ஒன்று மனஅழுத்தம். மிக குறைந்த நேரத்தில் மிக அதிகமாக பணிச்சுமையை ஏற்கும்போது மனஅழுத்தம் ஏற்படுகிறது. பணியைக் குறைப்பதும் நேரத்தை அதிகரிப்பதும் சாத்தியமற்றவை. எனவே நமக்கு  உள்ள ஆற்றல் நிலையை  அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. யோகா குறைந்தபட்ச நேரத்தில் அதிகபட்ச ஆற்றலை உருவாக்குகிறது. ஒரு சில நிமிடங்கள் செய்யும்  தியானம் ஒரு சில மணி நேரம் தூக்கத்திற்கு ஒப்பான ஓய்வை வழங்க முடியும். யோகா வழங்கும்  ஆழமான ஓய்வினால் ஒருவர், அதிக செயலாற்றலுடன்  கூர்மையான விழிப்புணர்வுடன் முடிவுகள் எடுப்பதில் உள்ளுணர்வுடன் விளங்க முடியும். அதன் பின்னர் அற்ப விஷயங்களில் சிக்கி அமிழ்ந்து போகாமல் பெரிய பிரச்சினைகளை  எதிர்கொண்டு பிறருக்காக அவற்றைத் தீர்க்கும் வலிமை படைத்தவராகிறார்.

    யோகா என்பது  ஒரு பயிற்சி மட்டுமல்ல, அது மொத்த வடிவுலகையும் கடக்கும் ஓர் மெய்யுணர்வு நிலையாகும். இன்றைய உலகில் ஒருவரது,  ஆழமான ஆற்றல்களை கண்டுணர்ந்து காக்கும் ஓர் வழியாகும்.

    – குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

  • பாம்பன் சுவாமி காவி உடுத்தியது ஏன்?

    பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 1848ம் ஆண்டில் ராமேஸ்வரத்தில் சாத்தப்ப பிள்ளைக்கும், செங்கமலத்தம்மையாருக்கும் பிறந்தவர். இவரது  இயற் பெயர் அப்பாவு. சேஷகிரிராயர் என்ற பெரியவர் இவருக்கு வைத்த பெயர் தான் குமரகுருதாசர். சுவாமிகளின் சொந்த ஊர் ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் ஆனதால், இவரது அடியார்கள் இவரை பாம்பன் சுவாமிகள் என அழைத்து வருகிறார்கள். அவர் ஞான சொரூபனான கந்தவேலவனையே வணங்கி வந்தார். இருபது ஆண்டுகள் இல்லறத்தில் இருந்து பின்னர் துறவு மேற்கொண்டார். ஸ்ரீ அருணகிரிநாதரையே தன் ஞானகுருவாக கொண்டார். இறைவன் அருளால் இளம் வயதிலேயே முருகப்பெருமான் மீது பாடல்கள் இயற்றி பாட ஆரம்பித்தார். முத்தைத்தரு என்னும் தொடக்கம் அருணகிரியாருக்கு அருளியதுபோல், கங்கையை சடையில் பரித்து என்னும் தொடக்கம் முருகப் பெருமானால் சுவாமிகளுக்கு அருளப்பட்டது. முருகப் பெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு 6666 பாடல்களையும், 32 வியாசங்களையும் இயற்றி அருளினார். சுவாமிகளின் இந்த பாடல்கள் மந்திரங்கள் போல் சக்தி வாய்ந்தவைகளாக கருதப்படுகிறது.

    தமது பாடல்களிலும் சாத்திரங்களிலும் சுப்பிரமணிய தத்துவத்தையும் அதன் மேன்மையையும் தெளிவுபட விளக்கியுள்ள தவ சீலர் பாம்பன் சுவாமிகள். பொய்யாமையையும்,கொல்லாமையையும் வலியுறுத்தி வாழ்வாங்கு வாழ்ந்த மகான். அவருடைய பாடல்கள் மந்திர சித்தி பெற்றவை. குறிப்பாக சண்முக கவசம், தௌத்தியம், குமாரஸ்தவம் போன்றவை மிகவும் சிறப்புப் பெற்றவை.

    பாம்பன் சுவாமிக்கு  காவியுடன் ஏற்பட்ட தொடர்பு 

    பாம்பன் சுவாமிகள் எனப் அனைவராலும் பெரிதும்  போற்றப்பெறும் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் தோற்றம் காண்பவரை கையெடுத்து கும்பிட வைக்த்கும். இதுகுறித்து ஒரு சுவையான வரலாறும் உண்டு. பாம்பன் சுவாமிகள் பொதுவாக இடுப்பில் வெண் கோவணமும் மேலே போர்த்திக்கொள்ள வெள்ளை ஆடையும் உடுத்தே காணப்படுவார்.

    பாம்பன் சுவாமிகள் ஒரு முறை காசியில் உள்ள திருத்தலங்களைத் தரிசிக்க யாத்திரை மேற்கொண்டார். அங்கு ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளின் திருமடத்திற்குச் சென்றார். அங்கிருந்த அன்பர்கள் அவரை வரவேற்று வணங்கி, அவர் தங்குவதற்கு அறை அளித்து உபசரித்து மகிழ்ந்தார்கள். பாம்பன் சுவாமிகள் நாள்தோறும் கங்கையில் குளித்து திருத்தலங்களை வணங்கி திரும்புவதை  வழக்கமாக  கொண்டிருந்தார். அப்படி ஒருநாள் தனது  வழிபாட்டினை முடித்து காசித்திருமடத்தில் தம் அறைக்குத் திரும்பியபோது தாம் எப்போதும் அணியும் வெள்ளுடைகள் இல்லாததை அறிந்தார். அப்போது அத்திருமடத்தின் காவியுடுத்திய வயோதிக அன்பர் ஒருவர் பாம்பன் சுவாமிகளின் எதிரே வந்து அவரது இடுப்பில் பொன்னூல் இழையுடன் கூடிய ஒரு காவி உடையினையும் தோளில் ஒரு காவி உடையினையும் அணிவித்து வணங்கினார். பாம்பன் சுவாமிகள் அவரிடம் இது என்ன என வினவிய போது, அவ்வடியார் சுவாமி இது குமரகுருபர சுவாமிகளின் திருமடம், அவர் பெயரைத் தாங்கிய நீங்கள் இந்த உடையை ஏற்க வேண்டும் இதனைச் செய்யத் திருவருளே என்னைத் தூண்டியது என்றார். பாம்பன் சுவாமிகளும் அச்சொல் ஸ்ரீகுமரகுருபரருடைய ஆணையே என்று எண்ணி மனத்தால் வணங்கி அன்று முதல் சித்தியடையும்வரையிலும் அவ்வாறே காட்சி தந்தார். இன்று நம் கண்முன்னே காவியுடை போர்த்தி காட்சிதரும் அத்திருவுரு ஸ்ரீகுமரகுருபரசுவாமிகளின் திருவருளினால் ஸ்ரீகாசித்திருமடத்தில் கிடைத்த தோற்றமாகும்.

  • காஞ்சி மகாபெரியவா அருள்மொழிகள்

    ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்…

    • நம் கஷ்டங்களைச் சொல்வதாக இருந்தால் கடவுளிடம் மட்டும் உங்கள் கஷ்டங்களைச் சொல்லுங்கள் . கண்டஇடங்களிலும் கண்ணில் பட்ட மனிதர்களிடம் எல்லாம் நம் துன்பங்களைச் சொல்வதால் எப்பயனும் இல்லை.
    • பாவங்களை எப்படி தீர்த்துக் கொள்வது என்றால் புண்ணியத்தால் தான் தீர்த்துக் கொள்ள முடியும். போன பிறவியில்செய்த பாவங்களை இந்த பிறவியிலாவது தீர்க்கட்டும் என்ற கருணையினால் தான் இறைவன் நமக்கு பிறப்பினைத் தருகிறார்.
    • மனம் இருக்கும்வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும் . அதனால் மனதை அடக்கி விட வேண்டும். மனம் அடங்கக்கற்றுக் கொண்டால் மரணநிலையில் இருப்பதுபோல், ஒரு சக்தியுமின்றி ஜடம் போல் ஆகிவிடுவோம் என்றுஎண்ணக்கூடாது. மாறாக, மனம் அடங்கும் போது, சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை உருவாகும்.
    • சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இணைந்திருப்பது. மனதில் உள்ளதை மறைக்காமல் அப்படியே உண்மையாக இருப்பது சத்தியம். மனதில் ஒன்றும் , வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அது அசத்தியமாகும்.
    • பேசும்போது வளவள என்று மிகையாகப் பேசாமல் நிதானமாக அளந்து பேச வேண்டும். திருவள்ளுவரும் எதை காக்காவிட்டாலும் நாக்கைக் கட்டுப்படுத்திப் பழகவேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்
  • ஆயிரம் பலன் தரும் அபூர்வ அரசமரம்

    அரச மரம் இருக்கும் இடத்தில் மும்மூர்த்திகள் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. அரச மரத்தின் அடிப்பக்கம் பிரம்மா, நடுமரம் விஷ்ணு, கிளைகள் கொண்ட மேற்பாகம் சிவன் என்பர். இம்மரம் மகாவிஷ்ணுவின் வலது கண்ணிலிருந்து தோன்றியது. எனவே இந்த மரத்தை எக்காரணத்தைக் கொண்டும் வெட்டுவதும், அதன்மேல் ஏறுவதும், கிளைகளை ஒடிப்பதும் தகாத செயல்கள் ஆகும். அரச மரத்திற்கு “அஸ்வத்தா’ என்ற பெயரும் உண்டு. அஸ்வத்தா என்றால்,”வழிபடுபவர்களின் பாவத்தை மறு நாளே தீர்ப்பது’ என்று பொருள்.

    இந்த அரச மரத்தை திங்கட்கிழமையில் வரும் அமாவாசையன்று விரதம் கடைப்பிடித்து வழிபட்டால் வாழ்வில் வசந்த ராகம் பாடும்; வளமான வாழ்வு கிட்டும். காலை வேளையில் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் நூற்றியெட்டு முறை வலம்வந்து வணங்கினால் குழந்தை பாக்கியம் கிட்டும். மழலைச்செல்வம் கேட்க அரசமர வழிபாடு போல் வேறு எதுவும் இல்லை.

    அரசமர நிழல்படுகின்ற நீர்நிலைகளில் வியாழக்கிழமை அன்றும் அமாவாசை அன்றும் நீராடுவது திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்குச் சமம்.

    சோமவார அமாவாசை என்றாலே நம்முன் அரசமரம் தோன்றும். இந்த நன்நாளில் அரசமரத்தை 108 பிரதக்ஷணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பிரதக்ஷண முடிவில் ஒரு பழமோ இனிப்போ சமர்ப்பிக்க வேண்டும். பிறகு பூஜை முடிந்தவுடன் தூப தீபம் காட்டி பூஜை செய்து வைத்தவருக்கும் நம்மால் முடிந்தவரை தக்ஷிணை கொடுக்க வேண்டும். இதுபோல் சோமவார அமாவாசை விரதம் மூன்றாண்டுகளாவது செய்ய கைமேல் பலன் கிடைக்கும். பித்ருக்களை வழிபட்டு அவர்கள் ஆசி பெற சோமவார அமாவாசை மிகச்சிறந்த ஒரு நாள். வடநாட்டில் அரசமரத்தை வெள்ளை நூலினல் 108 சுற்று சுற்றி வருவார்கள்

    “ஆயுர்விருத்தி பகவத் தஸ்யவர்த்தந தேஸர்வ ஸம்பத்’ என்று பத்ம புராணம்சொல்கிறது. அரச மரத்தைப் பார்த்ததும் வணங்கியவருக்கு ஆயுள் வளரும்; செல்வ வளம் பெருகும். கோவில்களில் உள்ள அரச மரத்திற்கு இன்னும் அதிகமான சக்தி உண்டு. இந்த அரச மரத்தடியில் விநாயகப் பெருமான் எழுந்தருளியிருப்பார். அத்துடன் நாகர் சிலைகளும் அங்கு இருக்கும். இதனால் இது தோஷ நிவர்த்தி மரமாகவும் கருதப்படுகிறது.

    அரச மரத்தை காலை வேளையில் ஏழு மணிக்கு முன் வலம் வருவது சிறப்பு. சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் மரத்தைத் தொடக்கூடாது.சனிக்கிழமையன்று அரச மரத்தடியில் ஸ்ரீலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.

    அரச மரத்தைச் சுற்றும்போது கீழ்க்கண்ட சுலோகத்தைச் சொல்லிக்கொண்டே வலம் வந்தால் கூடுதல் பலன் கிட்டும்.

    “மூலதோ ப்ரும்மரூபாய

    மத்யதோ விஷ்ணு ரூபிணே

    அக்ரத் சிவரூபாய

    வ்ருக்ஷ ராஜாயதே நம!’

    இம்மரத்திலிருந்து 30 மீட்டருக்குள் எந்த ஒரு கோவில் இருந்தாலும், அந்தக் கோவிலில் மனஅமைதி இருக்கும். மனஅமைதி கொடுப்பதிலும் ரத்த ஓட்டத்தைச்சீர்செய்வதிலும் அரசமரம் முதன்மையான இடத்தை வகிக்கிறது. புத்தருக்கு ஞானம்பிறந்த போதி மரம், அரசமரம்தான்.

    விஞ்ஞான ஆய்வின்படி ஒரு அரசமரம் நாளொன்றுக்கு 1800 கிலோ கரியமில வாயுவை உட்கொண்டு, 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுகிறது. அரசமர சமித்துகளை மந்திரப்பூர்வமாக ஹோமத் தீயிலிட்டு, அந்த ஹோமப் புகை வீட்டில் பரவினால் கண்களுக்குத் தெரியாத பூச்சிகள், கிருமிகள் அழிந்துவிடும்.

    இப்படி ஆயிரக்கணக்கான பலன்களை அள்ளித்தரும் அரச மரத்தை உரிய முறையில் தொடர்ந்து வழிபட்டு வந்தால், குழந்தைச் செல்வம் உள்ளிட்ட பல பாக்கியங்களையும் பெற்று நீடுழி வாழ்வர்.

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 2

    தொடர்ச்சி….
     
    புது இடத்தில் எனக்குத் தூக்கம் வருவது சிரமம். ஆனால், பயணக் களைப்பில் அதெல்லாம் பறந்து போனது. நல்ல தூக்கம். சாப்பிட்டவுடனே படுக்கப் போனதும் ஒரு காரணமாக இருந்திருக்கும். எட்டு மணிக்குத்தான் எல்லாரும் எழுந்தோம். நான், பரணி, ராஜூ மூவரும் ஓர் அறையில் தங்கிக் கொண்டோம். மகாதேவனும் நவீனும் ஓர் அறையில்.  
     
    அறைக்கு நேர் எதிரே, அடக்கமான நீச்சல் குளம். வெளியே எழுந்து வந்து பார்த்தபோது, நல்ல மழை பெய்து துடைத்து விட்டது போல் இருந்தது தோட்டம். நீச்சல் குளத்தைச் சுற்றிலும் அழகான தோட்டம் போட்டிருந்தனர். சின்னச் சின்ன வெள்ளைப் பூக்கள். அரளிசெம்பருத்தி, கல்வாழை என வெப்ப மண்டலத்துக்கே உரிய பூக்கள். அறைக்கு வெளியே வராந்தாவில், கம்போடிய பாணி ஓவியங்கள் தொடர் வரிசையில் வரையப்பட்டிருந்தன. எல்லாமே இராமாயண, மகாபாரதக் காட்சிகள். நகல் ஓவியங்களாக இருந்தாலும் நல்ல ஓவியங்கள்.
     
    விடுமுறை என்று வந்துவிட்டாலே அதற்கென ஒரு மனம் கூடிவிடுகிறது. வழக்கமான வேலையைச் செய்யாமல் மாற்றிச் செய்தாலே மனம் புத்துணர்ச்சி கொண்டு விடுகிறது. தங்கும் விடுதியிலேயே காலை உணவுக்கும் வசதி இருந்தது. அது எவ்வளவு பெரிய வசதி என்று இன்னும் இரண்டு நாள் கழித்துத் தெரிந்தது எங்களுக்கு. விடுதிக் கட்டணம் ஐம்பது அமெரிக்க டாலர்தான். என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை.
     
    இந்தியாவாக இருந்தால் இந்தத் தூய்மைக்கும் விசாலத்துக்கும் பத்தாயிரம் ரூபாய் தீட்டி விடுவார்கள். இங்கே தங்கும் அறை கொள்ளை மலிவுக் கட்டணத்தில் கிடைக்கிறது. மலேசியாசிங்கப்பூரில் கூட இவ்வளவு மலிவான கட்டணத்தில், இவ்வளவு தூய்மையான அறை கிடைப்பது சிரமம். காலை உணவுக்கு முன் நான் போட்ட சட்டையைப் பார்த்து பரணியும் ராஜூவும் ஒரே கிண்டல். இப்படி ஒரு சட்டையைப் போட்டா எங்களையெல்லாம் யாரு பாப்பா என்று கேள்வி. இது கிண்டலா பாராட்டா என்று கேட்டால், அதற்கும் ஒரு வியாக்யானம் வைத்திருப்பார்கள் இருவரும். சரி பாராட்டு என்றே வைத்துக் கொள்வோமே ! போத்தீஸில் எடுத்த நாலு சட்டையில் ஒரு சட்டையை அன்று வெள்ளோட்டம் விட்டேன். தீபாவளி விளம்பரத்தில் கூட ஒரு ஆள் அந்தச் சட்டையைப் போட்டிருந்தார். ஏனோ தெரியவில்லை. சில வாரம் கழித்து வந்த விளம்பரத்தில் ஐந்து சட்டைகளில் ஒன்றாக இருந்த அந்தச் சட்டையை மட்டும் எடுத்து விட்டார்கள். சரி சட்டையை விடுவோம்.
     
    சாப்பாட்டுக்கு வருவோம். சாப்பாடு சராசரிக்குச் சற்று மேல். பெரிய நட்சத்திர விடுதி அளவுக்கு அதிக வகைகள் இல்லை. ஆனால், அன்பாக கவனிக்கும் பணியாளர்கள் இருந்தனர். கேட்டதை உடனே சூடாகச் செய்து கொடுத்தனர். சாப்பிட்டு இரண்டாவது காஃபி அருந்திப் புறப்பட்டோம். எங்கே போவதுன்னு இன்னமும் முடிவாகலையே !
     
    இன்று அங்கோர் வாட் போக முடியாது. அதற்கு ஒரு முழு நாள் வேண்டும். சரியான தூக்கம் இல்லாமல் அதை முழுமையாக ரசிக்க முடியாது என்பதால் மற்ற இடங்களைப் பார்க்கலாம் என்று முடிவானது. என் வீட்டில் வாடகைக்கு இருக்கும் கார்த்தி சொல்லி அனுப்பியிருந்தார். சார் கம்போடியாவில், ஹெலிகாப்டர் பயணம் இருக்காம். நாங்க பார்க்கலை. நீங்க எப்படியாவது போயிட்டு வாங்க ! என்று. அதனால் அதுபற்றி ஓட்டுநர்வழிகாட்டி ரா-வைக் கேட்டோம். பக்கத்தில்தான் அலுவலகம், சென்று விசாரிக்கலாம் என்றார். எட்றா வண்டியை !
     
    உண்மையிலேயே ஹெலிகாப்டர் நிர்வாக அலுவலகம் பக்கத்தில்தான் இருந்தது. நாங்கள்தான் முதல் போணி என்று நினைக்கிறேன். ஒரு ஆளுக்கு 90 அமெரிக்க டாலர். எட்டு நிமிடப் பயணம். அங்கோர் வாட்டை  வலப்பக்கமாகச் சென்று பார்க்கலாம். பருந்துப் பார்வையில் சுற்றியுள்ள அகழியோடு சேர்த்து ஆலயத்தைப் பார்ப்பது, ஒரு தனி அனுபவம். விமானி தவிர, ஒரு பயணத்தில் குறைந்தது மூவராவது செல்ல வேண்டும். அதற்குக் குறைந்து வண்டி புறப்படாது. நாங்களோ ஐந்து பேர்.. ஒரு தடவைக்கு மூன்று பேர் என்றாலும் இரண்டாவது தடவைக்கு ஒரு ஆள் குறைந்தது. என்ன செய்யலாம் ?
     
    ராஜூ நான் ரெண்டு வாட்டி பறக்கிறேன் என்று முடிவெடுத்தார். உலங்கு வானூர்திப் பயணம் உறுதியானது. (அதுதாங்க ஹெலிகாப்டருக்குத் தமிழ்ப் பதம்..) பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு நேரே சியாம் ரியெப் அனைத்துலக விமான நிலையத்தை அடைந்தோம். இது எனக்கு இரண்டாவது ஹெலிகாப்டர் பயணம். 1984-ல் என் அப்பா தஞ்சாவூரில் வருவாய்க் கோட்டாட்சியராகப் (RDO) பணியாற்றியபோது தஞ்சை மாவட்டத்தில் வெள்ளம் வந்தது. அப்போது வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உணவுப் பொட்டலம் விநியோகிப்பதற்காக இராணுவத்தில் இருந்து ஹெலிகாப்டர் வந்தது. அதில் போய்ரொட்டி, புளிசாதப் பொட்டலங்களைப் போட்டு வந்தோம். அது அரை மணி நேரப் பயணம். பதின்ம வயதில் அந்தப் பயணத்தை முழுமையாக அனுபவித்தேனா தெரியவில்லை. ஆகவே, இம்முறை தவற விடக்கூடாது. சும்மா அசத்திரணும் என்ற முடிவோடு போனேன்.
     
    நிக்கான் படக்கருவியைத் தொட்டுத் தடவி, மின்கல நிலையைச் சோதித்து உறுதிப்படுத்தி நாலு படமும் எடுத்துப் பார்த்து விட்டேன். விமான நிலையக் கம்பி வேலிக்கு வெளியே வாகனத்தை நிறுத்திக் காத்திருந்தோம். சிவப்பு நிற ஹெலிகாப்டர் தொலைவில் ஒரு தட்டான்பூச்சி மாதிரித் தெரிந்தது.  டப டப டப டப என்ற சத்தத்துடன் ஒய்யாரமாக வந்து இறங்கி நின்றது. முதல் பயணத்தில், நான், பரணி, ராஜூ மூவரும் ஏறிக் கொண்டோம். அதற்கு நடக்கும்போதே படம் எடுத்துக் கொண்டோம். உள்ளே வெள்ளைக்கார விமானி இருந்தார். சிறுவயது. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து, இங்கே வந்து இதை ஓட்ட வேண்டுமென்று இவருக்கு எம்பெருமான் விதித்திருக்கிறார். நல்ல நட்பான மனிதர். பேச்சில் உண்மையான சிநேகம் தெரிந்தது. 
     
    வலப்பக்க சன்னல் ஓரத்தில் ராஜூ. இடப்பக்க சன்னலோரம் எனக்கு. எனக்கு எதிரே, விமானிக்கு இணையாக உள்ள இருக்கையில் பரணி. உள்ளே உட்கார்ந்து காதில் ஹெட்ஃபோன் மாட்டிக் கொண்டோம். இல்லாவிட்டால்,ஹெலிகாப்டர் புறப்பட்டு விட்டால், அது போடும் சத்தத்தில், விமானியின் உத்தரவும் விளக்கமும் எங்களுக்குக் கேட்காது. அது வழியாகத்தான் தொடர்பு சாத்தியம்.
     
    உட்கார்ந்து இருக்கை வார்களை மாட்டிக் கொண்டதுமே, ஜிவ்வென்று மேலே புறப்பட்டது ஹெலிகாப்டர். ரங்க ராட்டினம் சுற்றும்போது, அடிவயிற்றில் குபீரென்று ஒரு அசைவு வருமே ! அப்படி வருமென்று எதிர்பார்த்தேன். ஒன்றும் வரவில்லை. சாதாரணமாகத்தான் இருந்தது. விமான ஓடுதளத்தில் சின்னச் சின்ன இலகு ரக விமானங்கள் சில நின்று கொண்டிருந்தன. சட்டென வளைந்து திரும்பியதும், தொலைவில், அங்கோர் வாட் ஆலயத்தைச் சுற்றியுள்ள அகழியின் நீரில் சூரியன் பிரதிபலிப்பது தெரிந்தது. அங்கோர் வாட்டை நெருங்கும் முன், மலைக்கு நடுவே இருந்த இன்னோர் ஆலயத்தைக் காண்பித்தார் விமானி. தெளிவாகத் தெரியவில்லை என்றபோதும் ஒரு பாசிபடர்ந்த கற்குவியல் தெரிந்தது. அங்கோர் வாட்டும் அப்படித்தான் இருந்தது.    
     
     
    முந்திய இரவில் மழை பெய்திருந்தது எங்கள் பாக்கியம். எல்லா இடங்களும், குளித்து விட்டு வந்து அம்மணமாய் நிற்கும் குழந்தைபோல் தெய்வீக அழகுடன் இருந்தன. அங்கோர் வாட்டைச் சுற்றிப் பெரிய அகழி. அதுவே ஒரு பிரம்மாண்டம். ஒன்றரை கிலோமீட்டருக்கு 1 புள்ளி 3 கிலோ மீட்டர் நீள, அகலம் கொண்ட அகழி. அகலம் 190-மீட்டராம். மேற்குப் பார்த்த ஆலயம் அங்கோர் வாட். அதன் தென் பகுதி அகழிக்கு மேலே சற்றுத் தள்ளிப் பறக்கிறது ஹெலிகாப்டர். ஆலயத்துக்கு நேர் மேலேயோ குறுக்கேயோ பறக்க அனுமதியில்லை. ஏதேனும் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு ஹெலிகாப்டர் கீழே விழுந்தால், ஆலயம் சேதமுற்றுவிடும் என்பதால், நேர்மேலே பறக்க அனுமதியில்லையாம். சரிதான். தேவையான நிபந்தனைதான் என்று நினைத்துக் கொண்டேன்.
     
    படம் எடுக்கும் மும்முரத்தில் இயற்கையின் அழகைத் தவற விட்டுவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். சில படங்கள் எடுத்து விட்டுப் படக் கருவியை மூடி விட்டேன். சூரியனின் பொற் கிரணங்கள் அகழியில் பட்டுப் பிரதிபலிக்கையில், அதன் நடுவே ஆலயத்தைப் பார்த்தபோது சொல்லின்மை கைகூடியது. இதைக் கட்டிய மன்னனுக்குக்கூட கிடைக்காத வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன். தங்க ஜரிகைக்கு நடுவே மரகதக் கற்களைக் குவித்துப் போட்ட மாதிரி எனக்குள் ஓர் உணர்வு. ஆலயத்தின் முகடுகள் ஏதோ கனவு லோகத்தில் கட்டப்பட்ட கட்டங்களைப் போல் தெரிந்தன. இந்த கட்டட பாணி நான் இதுவரை என் வாழ்நாளில் அதிகம் பார்த்திராத முற்றிலும் புதிய பாணி. தென்னிந்திய திராவிடக் கட்டடக் கலைக்கும் இதற்கும் அதிகத் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஒரிசாவிலும் அதன் பக்கத்து வட்டாரங்களிலும் உள்ள வாழைப் பூ போன்ற வடிவமுள்ள கோபுரங்களை ஒத்திருந்தன அங்கோர் வாட் ஆலய முகடுகள்.
     
    அகழிக்குத் தண்ணீர் வழங்கும் நீர்ப் பாதை, தொப்பூழ் கொடி போலத் தெரிந்தது மேலிருந்து பார்க்கையில். ப வடிவ சூலாயுதத்தை மேலிருந்து பார்ப்பதுபோல் இருந்தது. சுற்றிலும் திகட்டத் திகட்டப் பசுமை. தண்ணீர். மரங்கள். நல்லவேளை. இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் இருந்தோமே என்று நினைத்துக் கொண்டோம். கார்த்திக்கு நன்றி. இல்லாவிட்டால் இப்படி ஒரு பயணம் இருப்பதே தெரியாமல் போயிருக்கும். போன சுருக்கிலேயே ஹெலிகாப்டர் வளைந்து திரும்பி, விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. ஒன்பது நிமிடங்கள் ஆகியிருந்தது. நேரம் போனதே தெரியவில்லை. ஏதோ ஒரு கனவுக்குள் புகுந்து வெளிவந்தது போல் உணர்ந்தேன்.
     
     
    ஆச்சு. என் ஆயுளில் நான் காண விரும்பிய இடங்களில் இரண்டில்  ஒன்றை,  எளிதில் பார்க்க முடியாத கோணத்தில் பார்த்து விட்டேன். நாளைஇதை அணு அணுவாகப் பக்கத்தில் இருந்து பார்க்க வேண்டும். அடுத்த கனவான எகிப்தியப் பிரமிடுகளை எப்போது காண்பேன் ? எப்போது அதுபற்றி இப்படி ஒரு கட்டுரை எழுதுவேன் 
     
    பொன். மகாலிங்கம், சிங்கப்பூர்
     
    ———————————————————————————————————————————
    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com
  • பிரதோஷம் பிறந்த கதை..

    சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம். தோஷம் என்றால் குற்றம் என்றும், பிரதோஷம் என்றால் குற்றமற்றது என்றும் பொருள். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாகும். இதை சந்தியாகாலம் என்றும் அழைப்பார்கள். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என்னும் 2 காலங்களிலும், திரயோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும். 

    இந்த பிரதோஷம் எப்போது எப்படி ஏற்பட்டது என்பதற்கு ஒரு புராண கதை இருக்கிறது. அது இதுதான்..

    பன்னெடுங் காலத்திற்கு முன் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் ஒரு அதிபயங்கர போர் மூண்டது. இருபுறத்திலும் ஏராளமானோர் மடிந்தனர். எனவே தேவர்கள், பிரமனை அடைந்து சாகாமல் இருக்க என்ன வழி என ஆராய்ந்தனர். அவர், தேவர்களை நாராயணனிடம் அழைத்துச் சென்று முறையிட அமிர்தம் உண்டால் சாகாமலிருக்கலாம் என்று அவரும் யோசனை தெரிவித்தார்.

    பாற்கடலைக் கடைந்தால்தான் அமிர்தம் எடுக்க முடியும், அசுரர்கள் தயவில்லாமல் பாற்கடலை கடைய முடியாது. அவர்களை சேர்த்துக் கொண்டால், அசுரர்களுக்கும் பங்குதர வேண்டும். வேறு வழியில்லாததால், தேவர்கள் அசுரர்களையும் துணைக்கழைத்துக் கொண்டனர்.

    தந்திரசாலியான, விஷ்ணுவின் ஏற்பாட்டின்படி, அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தனர். மேரு மலையை மத்தாகவும், ஆயிரம் நாக்குடைய வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு, வால்பக்கம் தேவர்களும் தலைப்புறத்தை அசுரர்களும் பிடித்துக் கடைய ஆரம்பித்தனர்.

    இவ்வாறு ஆயிரம் ஆண்டுகள் கடைந்தனர். இரண்டு பக்கத்தினரும் மாறி மாறி இழுத்ததால் வாசுகியின் உடல் புண்ணானது. அவன் தன்னையும், அறியாமல் வலி பொறுக்காமல், ஆயிரம் வாயினாலும் விஷத்தைக் கக்கிவிட்டான். அச்சமயத்தில், கடலில் இருந்து விஷம் பொங்கியது. இப்படி பாம்பினால் கக்கப்பட்ட ‘காளம்’ என்று நீல விஷமும், பாற்கடலில் பிறந்த ‘ஆலம்’ என்கிற கருப்பு விஷமும் சேர்ந்து கருப்புப் புயல் போல் கொடிய வெப்பமும். கடும் புகையும் கொண்டதாக மாறி உலகை வருத்தத் தொடங்கியது.


    தலைப்பக்கம் நின்ற பல நூற்றுக்கணக்கான அசுரர்கள் எரிந்து சாம்பலாக தேவர்கள் தறி கெட்டு, ஓடி ஒளிந்தனர். எல்லோரும் பயந்து போய், ஈசனிடம் முறையிட கயிலங்கிரி சென்றனர்.

    நந்தியம் பெருமானிடம் அனுமதி பெற்று உள்ளே சென்று சிவபெருமானிடம் அழுது, தொழுது முறையிட்டனர். அப்பொழுது ஈசன் தன் நிழலில் இருந்து தோன்றியவரும், பேரழகரும் ஆகிய ‘சுந்தரர்’ என்னும் அணுக்கத் தொண்டரை அனுப்பி “அவ்விஷத்தை இவ்விடம் கொண்டுவா!” என்று பணிந்தார்.

    சிவபெருமான் கட்டளைப்படி சுந்தரரும், கொடிய ஆலகால விஷத்தை ஒரு துளியாக கொண்டு வந்தார்.

    எல்லோரும் அதிசயிக்க, சிவபெருமான் ஒரு கண நேரம் ‘விஷாபகரணமூர்த்தி’ என்னும் ரௌத்ர வடிவம் தாங்கி அவ்விஷத்தை உண்டருளினார். அப்போது தேவியார் அவ்விஷத்தை ஈசன் உண்டால் சகல புவனமும் அழியுமே என்று கருதி அவருடைய கழுத்தில் தங்கும்படி செய்தாள். ‘கண்டத்தில்’ விஷத்தை நிறுத்தியதால் ‘நீலகண்டர்’ ஆனார். விஷம் கொண்டுவந்த ‘சுந்தரர்’ ‘ஆலால சுந்தரர்’ என்று அழைக்கப்பட்டார்.

    கயிலையில் ஈசன் விஷம் உண்ட பிறகு சிறிது நேரம் மௌனமாக இருந்தார். அனைவரும் அவரை போற்றித் துதி பாடியவாறு இருந்தனார்.

    ஏகாதசியன்று விஷம் உண்ட பெருமான் துவாதசி முழுவதும் பள்ளி கொண்ட நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் மாலை வேளையில் எழுந்து, உமையவனை ஒரு பக்கம் கொண்டு சூலத்தை சுழற்றி மருகத்தை ஒலித்து ‘சந்தியா நிருத்தம்’ எனும் நடனம் ஆடினார்.

    இந்நாட்டியத்தை கண்ட தேவர்கள் மகிழ்ந்தனர். நந்தி சுத்த மத்தளம் வாசிக்க அனைவரும் ‘ஹரஹர’ என்று துதித்தனர்.

    அன்று முதல் பெருமான் ஒவ்வொரு நாளும் அந்தி வேளையில் இக்கூத்தை நிகழ்த்தி வருகிறார். இவ் கூத்தில், சரஸ்வதி வீணையையும், பிரமன் தாளத்தையும், விஷ்ணு புல்லாங்குழலையும் பூதங்கணங்கள் எண்ணற்ற இசைக்கருவிகளையும் இசைக்கின்றனர் என்பர்.

    பிரதோஷ வேளையில் சிவனை வழிபடுவதால் நமது முற்பிறவி குற்றங்கள், சகல தோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும். பாவம் விலகி புண்ணியம் சேரும். வறுமை அகலும். பயம், மரண வேதனை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகப்பேறு பெறுவர். பிறவி ஒழித்து முக்தி பேற்றினை அடைவர். கல்வியில் மேன்மை பெறுவார்கள். 

  • ராம நாமம் யாருக்கு சொந்தம்?

    இந்த தலைப்பை கண்டவுடன், நம் மனதுக்கு வருபவர்கள் ஹனுமாரும், சீதையும் தான். அல்லது சொல்பவர்களுக்கு சொந்தமாக இருக்கலாம் என்று நமக்குத் தோன்றும், ஆனால் உண்மையில் அதற்கு சொந்தக்காரரை நாம் சந்திப்போமா, வாருங்கள்.
     
    இராமாயணம் எழுதி முடித்து சில காலம் கழித்து மனிதர்கள்,தேவர்கள்,ரிஷிகளுக்கிடையே ஒரு வாக்குவாதம் எழுந்தது. இராமாயணமும் அதில் உள்ள ஒரு லட்சம் ராம நாமமும் யாருடையது என்று. மனிதர்கள் ராமாவதாரமே மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை எடுத்துரைக்கத் தான் ஆதலால், இராமாயணம் மனிதர்களுக்கே சொந்தம் என்றனர். தேவர்களோ உலகில் அரிதான விஷயங்கள் அனைத்தும் தேவர்களுக்கே உரியது என்று குரல் எழுப்பினர். ரிஷிகளோ ராமாவதாரத்தின் போது வனவாசத்தில் ராமர் தங்கியது ரிஷிகளுடன்தான், ஆதலால் இராமாயணமும் அதில்  உள்ள ஒரு லட்சம் ராம  நாமமும் தங்களுக்கே சொந்தம் என வாதிட்டனர்.
     
    இந்த வழக்கு நாரதரிடம் சென்றது. அவரோ இதற்கு தக்க நீதிபதி உலகின் தந்தையான சிவபெருமானே, எனவே அவரிடமே செல்வோம் என்றார். வழக்கை விசாரித்த நீலகண்டரோ, ஒரு லட்சம் ராம நாமத்தை சரிவிகிதமாக பிரித்தார். அதன்படி 30000,30000,30000 ஆக பிரித்தார்.
    மிச்சம் இருந்த 10000த்தை 3000,3000,3000, ஆக பிரித்தார். மீதி இருந்த 1000த்தை 300,300,300 ஆகப் பிரித்தார். மீதமிருந்த 100ஐ 30,30,30 ஆக பிரித்தார். மிச்சமிருந்த 10ஐ 3,3,3 ஆக பிரித்தார். 
     
    இப்போது எஞ்சியிருந்த ராமா என்ற‌ ஒற்றை வார்த்தையை, இந்த வழக்கிற்கு நீதிபதியாக இருந்த தனக்கு தருமாறு கேட்டார். அதற்கு
    அனைவரும்  சம்மதித்தனர். அதன்படி ராம என்ற சொல்லுடன் ஒரு லட்சம் ராம நாமமும் சிவனையே சென்றடைந்தது. எனவே ராம நாமத்தை கூறும்போது அதற்கு சொந்தமான சிவனின் அருளையும் நாம் பெருகிறோம். அரியும் சிவனும் ஒன்று என்று உணர்த்திய அழகிய நிகழ்வு இது.
     
    – ரம்யா சுரேஷ்
    —————————————————————————–
     
    ரம்யா சுரேஷ் – சிங்கப்பூர் வாழ் பட்டிமன்ற பேச்சாளர், குழந்தைகளுக்கான நிகழ்ச்சி தயாரிப்பாளர். சிறுவர் நூலாசிரியர் மற்றும் பகுதி நேர ஆசிரியர். (கலாச்சாரம்). இவரைத் தொடர்பு கொள்ள – sangemahathi@gmail.com