Category: old…

old…

  • “வாழ்க்கை போதித்தது என்ன?” – காஞ்சி மஹாப்பெரியவா

    மகாப்பெரியவா என்று மக்களால் பெரிதும் போற்றப்படும் காஞ்சி மகானைப் பற்றிய செய்திகள், சம்பவங்கள் படிக்க படிக்கத் திகட்டாதவை. மகாப்பெரியவா பற்றி  ஏராளமான முத்துக்கள், நவரத்தினங்கள் இணையத்தில் பரவியுள்ளன. அப்படிப்பட்ட நவரத்ன கட்டுரை ஒன்றை சக்திஆன்லைன் வாசகர்களுக்காக சமர்பிக்கின்றோம். முகமறியாத மொழிபெயர்ப்பாளர்களுக்கு நன்றியுடன்.

    பாரத கலாச்சாரத்தைப் போற்றி வணங்கிய ஏராளமானவர்களில் குலபதி கே.எம்.முன்ஷி ஒருவர். போற்றியதோடு நில்லாமல் அதைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அப்படியே தர வேண்டும் என்ற எண்ணமும் கொண்டவராய் அவர் இருந்தார். ‘பாரதீய வித்யா பவன்‘ என்ற நிறுவனத்தை நிறுவியதோடு பாரம்பரியச் செல்வ ரகசியத்தை அனைவருக்கும் அள்ளித் தர ‘பவன்ஸ் ஜர்னல்‘ என்ற பத்திரிகையையும் ஆரம்பித்தார். அந்த பவன்ஸ் ஜர்னலுக்கு  காஞ்சி பரமாச்சார்யாள் (ஸ்ரீ சந்திர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள்) அருளிய ‘வாழ்க்கை எனக்குப் போதித்தது என்ன?‘ என்ற அற்புதமான கட்டுரையை வெளியிடும் பெரும்பேறு  கிடைத்தது. பொதுவாக, பெரும் அருளாளர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றிப் பேசவே மாட்டார்கள். அதுவும் காஞ்சிப் பெரியவர், லோக க்ஷேமம் எனப்படும் உலக நன்மைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அதைப் பற்றி மட்டுமே பேசுபவர். அவரே மிகுந்த வினயத்துடன் மிக அரிதான ஒரு கட்டுரையை அருளி, அதில் தன் வாழ்க்கையின் அர்த்தத்தை இறுதி வாக்கியத்தில் கூறியிருப்பது உள்ளத்தை நெகிழ வைக்கிறது.

    மரநாயும் பொன்னுச்சாமி எடுத்த தங்க வளையலும்

    அவரது மூன்றாம் வயதிலோ அல்லது நான்காம் வயதிலோ நடந்த இரு சம்பவங்களுடன் கட்டுரை ஆரம்பிக்கிறது. மரநாய் ஒன்று, வெல்லம் இருந்த ஜாடியில் தலையை விட்டுக் கொண்டு அதை மீண்டும் எடுக்க முடியாமல் தவித்துக் கூக்குரலிட்டதைக் கேட்டுத் திருடன்தான் வந்து விட்டானோ என்று எண்ணிய அண்டை அயலார் கம்பு தடிகளுடன் வர, நாய் பிடிபட்டது. அதை ஒரு கம்பத்தில் கட்டி ஒருவாறாக ஜாடியைப் பிரித்தனர். பேராசை தந்த பெருங்கேட்டை ஆச்சார்யாள் விளங்கிக் கொண்டாராம்.

    அடுத்த சம்பவம் அவரது தங்க வளையலைப் பற்றியது. தனியாக இருந்த குழந்தையைப் பார்த்த திருடன் ஒருவன் தங்க வளையலைக் குறி வைத்து வீட்டின் உள்ளே வர, அவரே அதைக் கழட்டும் விதத்தைச் சொல்லி அதை ரிப்பேர் செய்து எடுத்து வரக் கூறுகிறார். மிக்க மகிழ்ச்சியுடன் பொன்னுசாமி (அப்படித்தான் வந்தவன் தன் பெயரைக் கூறி இருந்தான் – தங்கத்திற்குச் சாமி!) தன் வளையலை ரிப்பேர் செய்து எடுத்து வரப்போகும் செய்தியைத் தன் வீட்டாருக்குக் குழந்தை கூறியது.

    அவசரம் அவசரமாக வெளியில் வந்த குழந்தையின் வீட்டாருக்குப் பொன்னுசாமி தென்படவே இல்லை. கவர்ச்சி, திருடு, பேராசை, ஏமாற்றுதல், புலம்பல் ஆகிய அனைத்தையும் இந்த இரு சம்பவங்களும் ஆச்சார்யாளுக்கு விளக்கி விட்டன! ஆனால் வயதாக ஆக, சில ஆத்மாக்கள் பிறருக்காகவே அறநெறியின் அடிப்படையில் வேரூன்றி வாழ்கின்றனர் என்ற பேருண்மையை அவர் உணர்ந்தார்.

    பீடம் ஏறிய வரலாறு

    அவர் 1907ஆம் ஆண்டு திண்டிவனத்தில் கிறிஸ்டியன் மிஷன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது கலவை என்ற இடத்தில் அப்போதைய சங்காராச்சார்யார் சித்தி அடைந்து விட்டார். ரிக்வேதம் படித்தவரும் மடத்தில் இருந்தவருமான அவரது தாய் வழி உறவினருள் ஒருவர் அடுத்த சங்கராச்சாரியராக நியமிக்கப்பட்டார். தன் அம்மாவுடன் காஞ்சிபுரம் செல்கிறார் பரமாச்சார்யாள். அவருக்கு அப்போது வயது 13. அந்தச் சமயத்தில் அவருக்கு மட்டும் தனியே ஒரு வண்டியில் வருமாறு கூறப்பட்டது. சங்கராச்சாரியராக நியமிக்கப்பட்ட அவரது உறவினர் ஜுரத்தின் உச்சக்கட்ட நிலையில் நினைவிழந்து இருப்பதையும், ஆகையால் அவரையே அடுத்த சங்கராச்சாரியராக நியமிக்க உத்தேசம் என்பதையும் அறிந்து கொண்டார் 13 வயதான பரமாச்சார்யாள்!

    இப்படியாகத்தான், சிறு வயதில் திடீரென்று நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியால் பீடமேறினார் சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி என்னும் திருநாமம் கொண்ட பரமாச்சார்யாள். அவருக்கு சாஸ்திர பாடமும் பயிற்சிகளும் ஆரம்பமாயின.

    இரு நிகழ்ச்சிகள்

    1923ஆம் ஆண்டு திருச்சியில் முகாம் இட்டிருந்தபோது 12 வயதுச் சிறுமி ஒருத்தி தன் சகோதரனைப் பொய் சொன்னதற்காகக் கண்டித்ததைப் பார்த்து வியந்தார் ஆச்சார்யாள். அந்தச் சம்பவத்தை அவரால் மறக்கவே முடியவில்லை.

    இன்னொரு சம்பவம் கேரளாவில் நடந்தது. அவர் முகாமிட்டிருந்த இடத்தில் பக்கத்து அறையில் நடந்த ஒரு நிகழ்ச்சி அவரது கவனத்தைக் கவர்ந்தது. பக்கத்து அறையில் பூஜை செய்யப் போன ஒரு நம்பூதிரி அங்கிருந்தவர்களுடன் அரட்டையில் பங்கு கொண்டார். சிறிது நேரத்தில் அவர் தன் தவற்றை உணர்ந்து கொண்டார். பூஜையில் அவர் மனம் செல்லவில்லை. தன் தவற்றைப் பகிரங்கமாகக் கூறி, மனம் பூஜை செய்யும் லயத்தில் இல்லை என்று அவர் கூறியதையும் ஆச்சார்யாள் கேட்டார். அவரது குறிக்கோளில் இருந்த நேர்மை ஆச்சார்யாளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

    நேசித்துப் போற்றியோர்

    அடுத்து ஆசார்யாள், தன்னை மிகவும் அன்பு பாராட்டி மதித்து நேசித்தவர்கள் எப்படித் தன்னைப் போற்றினர் என்பதை எடுத்துக் கூறுகிறார், இறுதியில் கட்டுரையை “கடவுள், சிலரைப் பிறருக்காகவே வாழப் படைத்திருக்கிறார்” என்ற வரியுடன் முடிக்கிறார்.

    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

    – கோமதி சுரேஷ்

  • யாதுமாகி நின்று அருளும் சிறுவாச்சூர் மதுர காளி

    யாதுமாகி நின்றாய் காளி

    எங்கும் நீ நிறைந்தாய்

    தீது நன்மை எல்லாம் – நிந்தன்

    செயல்கள் அன்றி இல்லை.

     – மகாகவி பாரதி

     

    ஆதிபராசக்தியே க்ரியாசக்தி (துர்கை), இச்சாசக்தி (லக்ஷ்மி), ஞானசக்தியாய் (சரஸ்வதி) தன் பிள்ளைகளுக்கு தாயாக அருள் பாலிக்கிறாள்.துர்கா தேவி அம்பா, காத்யாயினி, பார்வதி என எண்ணற்ற வடிவங்கள் கொண்டவளாய் நம்மை ஆட்கொள்கிறாள் . அதில் ஒரு அம்சம்.  தான் காளி. இவளின் புறத்தோற்றம் அச்சம் தரக் கூடியதாக இருந்தாலும் அரவணைக்கும் தாயவள் .அண்டசராசரங்களையே ஆடையாய் அணிந்திருக்கும் இவள், ‘திகம்பரி ஆவாள் . சக்தி வழிபாட்டு முறையில் வந்தவர்களுக்கு காளி குலதெய்வமாக இருக்கிறாள் . 

    ஒரு முறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும், போர் மூண்டபோது, துர்கை தனது அதீத சக்தியான காளிகாதேவிக்கு உயிர் கொடுத்ததாய் சொல்லப்படுகிறது. காளிகாதேவி, அசுர வடிவங்களை சம்ஹாரம் செய்து,மாலையாக்கி கோர தாண்டவம் புரிகிறாள். பிரளயத்தில் ஒரு யுகமே முடிந்த அறிகுறியுடன், கோர தாண்டவம் ஆடுகிறாள். தன் பணி முடிந்ததும் தெரியாமல் அவள் அழிவில் மூழ்கியிருக்கும் போது, சிவன் ஒரு குழந்தை உரு கொண்டு மயானத்தில் தோன்றுகிறார். குழந்தையைக் கண்ட மாத்திரத்தில் அவள் வெறியும் கோபமும் அடங்கி, இறப்பின் நடுவில் பிறப்பின் தத்துவத்தை உணர்த்துபவளாய் அதைத் தன் மார்போடு அணைத்துப் பாலூட்டுவதாய் புராணம் கூறுகிறது.

    காளியே பின்பு ‘பத்ரகாளி’யாக சாந்த உருப்பெற்று அருள்பாலிக்கிறாள்.’பத்ர’ என்றால் சௌபாக்யம் அருள்பவள் என்று பொருள். கோப வடிவமாக இருக்கும் அன்னையை சாந்தம்  செய்தால் உடனே இளகி அருள்பாலிப்பாள் .

    கல்கத்தா  நகரில் உள்ள காளிக் கோயிலை போலவே  தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற ஒரு காளி கோவில் இருக்கிறது. திருச்சியைத் தாண்டி பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் என்ற ஸ்தலத்தில்,மதுரகாளியம்மன்  கோவில் இன்றும் பல பக்தர்களின் நம்பிக்கைக்குரிய வழிபாட்டு ஸ்தலமாக சிறந்து விளங்குகிறது.

    பல பக்தர்களுக்கு குலதெய்வமாய் விளங்கும் அன்னையின் திருக்கோவில்,திங்கள்  மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திறந்திருக்கிறது. திருக்கோயில் வளாகத்தில் உள்ள  கிணற்றடியில் குளித்து, அங்கேயே மாவிளக்கு இடித்து அம்மனுக்குப் படைக்கிறார்கள். குளிக்க, மாவிடிக்க என எல்லாவற்றிற்கும் வசதி கோவிலிலேயே இருக்கிறது. தற்போது இன்னும் விஸ்தாரமாய் உடை மாற்ற சுற்று மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.. உடுக்கை ஒலிக்க அம்மனை பூஜை செய்து அழைக்கும் பொழுது சிலிர்ப்பு உண்டாவதை உணர முடியும் .

    ஸ்தல வரலாறு 

    ஆதியிலே சிறுவாச்சூரிலே செல்லியம்மனே வழிபடும் தெய்வமாக விளங்கினாள். அனைவருக்கும் தாயான அவளிடம்  ஒரு மந்திரவாதி தவம் செய்து பல அரிய சக்திகளைப் பெற்றான். அன்பிற்கும் தவத்திற்கும் தான் கட்டுப்படுபவள் என்பதை அன்னை இத்திருவிளையாடல் மூலம் விளக்கினாள். ஆனால் தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல அந்த அன்னை அளித்த மந்திர சக்தியால் அந்த அன்னையையே கட்டுப்படுத்தி தீய செயல்களுக்கு பயன் படுத்தி வந்தான் அவன். மந்திரவாதியின் கொடுமையால் அவதிப்படும் தன் மக்களைக் காக்க ஒரு வெள்ளிக்கிழமை இரவு மதுர காளியம்மன் இத்தலம் வந்து இரவு தங்க செல்லியம்மனிடம் அனுமதி கேட்கின்றாள். செல்லியம்மனும் மந்திரவாதிக்கு பயந்து இடம் கொடுக்க மறுக்க அனைத்தும் உணர்ந்த அன்னை சிரித்து நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன் என்று அன்றிரவு அங்கேயே தங்கினாள். அடுத்த நாள் மந்திரவாதி தனது மந்திர வேலைகளை அன்னையிடம் காட்டினான், தேவர்கள் மனிதர்கள் மற்றும் சகல ஜீவவராசிகளையும் காக்க சண்டன்,முண்டன், ரக்த பீஜன், மகிஷன் போன்ற வல் அசுரர்களையே வதம் செய்த அகிலாண்ட நாயகியை சாதாரண மந்திரவாதியால் என்ன செய்து விட முடியும். அவனது செருக்கையழித்து அவனை வதம் செய்து பக்தர்களைக் காப்பதோடு துஷ்டர்களையும் தான் அழிப்பவள் என்று காட்டினாள் மதுர காளியம்மன் .

    செல்லியம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி இத்தலத்திலேயே கோவில் கொள்கிறாள் அன்னை. செல்லியம்மன் அருகிலுள்ள பெரியசாமி மலை சென்று கோவில் கொள்கிறாள். ஆதியிலே இங்கே அமர்ந்தவள் என்பதால் செல்லியம்மனுக்கே எப்போதும் முதல் மரியாதை செய்யப்படுகின்றது. பூசையின் போது தீபாரதனை காட்டும் போது முதலில் மலை நோக்கி தீபாரதனைக் காட்டப்பட்டு பின்னரே மதுர காளியம்மனுக்குத் தீபாராதனை காட்டப்படுகின்றது.

    இத்தலத்தின் மற்றொரு ஐதீகம், அம்பிகை சிலப்பதிகார நாயகி மதுரை கண்ணகி என்றும், கற்புடை தெய்வம் கண்ணகி தன்னுடைய கணவருக்கு பாண்டியன் நெடுஞ்செழியனால் இழைக்கப்பட்ட அநீதியை கண்டு பொறுக்க முடியாது கோபம் கொண்டு மதுரையை எரித்த பின் மன அமைதியின்றி அலைந்த போது இத்தலம் வந்ததாகவும் அந்த மதுரை காளியம்மனே மதுர காளியானாள் என்பது செவிவழிச் செய்தி.மதுரை காளியம்மன் என்ற திருநாமமே பின்னாட்களில் மருவி மதுரகாளியம்மனாக மாறியது என்றும் நம்பப்படுகின்றது. சினங்கொண்டு வந்த மதுரை காளியம்மன் இங்கு வந்து சாந்தமடைந்து பக்தர்களுக்கு எல்லாவித இனிய நிகழ்வுகளையும் அருளுவதால் மதுர காளியம்மன் (மதுரம் – இனிமை) என்ற திருநாமம் கொண்டாள்.

     

    கோவில் திறக்கும் நேரம் 

    சிறுவாச்சூருக்கு வெள்ளியன்று வந்த அம்மன் திங்களன்று பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தாள் என்பதனால் வெள்ளி மற்றும் திங்கள் மட்டுமே அன்னையின் சன்னதி திறக்கப்பட்டு பூசை செய்யப்படுகின்றது. மற்ற நாட்களில் செல்லியம்மனுடன், மதுர காளியம்மனும் பெரிய சாமி மலையிலே தங்குவதாக ஐதீகம். காலை 6 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு காலை 11 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. பின்பு தங்கக் கவசம் சார்த்தப்படுகின்றது. இரவு 8 மணி வரை அன்னையை தரிசிக்கலாம். மாலையில் சில நாட்களில் சந்தனக் காப்பு அலங்காரமும் அன்னைக்கு செய்யப்படுகின்றது.

     

    சிறப்பு அம்சம்

    மதுரகாளி  மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் .ஒரு முறை அம்மனை தரிசனம் செய்தவர்களை மறுபடியும் மறுபடியும் தன்னிடம் ஈர்க்கின்றாள் அன்னை. எழிலார்ந்த ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் வடக்கு நோக்கிய சன்னதி. பூசை நாட்களில் காலை 11 மணிக்கு தொடங்கும் அபிஷேகம் பகல் 1.30 மணியளவில் தங்கக் கவச அலங்காரத்துடன் மஹா தீபாரதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகின்றது. மஹா தீபாரதனைக்கு முன் உடுக்கை அடிப்போர் இருவர் அன்னையை அழைக்கின்றனர், அப்போதுதான் மலையை விட்டு அன்னை ஆலயத்தில் பிரவேசிப்பதாக ஐதீகம்.

    சதாசிவ பிரம்மேந்திராள் இத்தலத்திற்கு எழுந்தருளி அன்னை சன்னதியில் ஸ்ரீ சக்ரம் ஸ்தாபித்ததாக கூறுகின்றார்கள்.

    பலனளிக்கும் பிராத்தனைகள்

    செல்லி அம்மனிடம்  குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ,  குழந்தை பிறந்தால் “பால் முடி” கொடுப்பதாக வேண்டிக்கொண்டு தங்களால் இயன்ற காசினை மஞ்சள் துணியில் முடிந்து வைத்தால் அவர்களின் குறையை அன்னை தீர்த்து வைக்கிறாள் என்று நம்பப்படுகிறது.அவ்வாறு அன்னையின் கருணையால் பலன் பெற்றவர்கள் குழந்தைக்கு மூன்று மாதம் முடிவடையும் முன்  சென்று முடி காணிக்கை செலுத்துகிறனர்

    அங்க பிரதக்ஷணம் அம்மனுக்கு ஒரு சிறந்த பிரார்த்தனை. மற்றுமொறு சிறந்த பிரார்த்தனை மாவிளக்கு. வெளியில் எங்கும் மாவு தயாரிக்காமல் ஆலய வளாகத்திற்குள்ளாவே அரிசி கொணர்ந்து ஊற வைத்து மாவு தயாரித்து நெய் விளக்கிடுகின்றனர் பக்தர்கள்.

    பில்லி, சூனியம் வைத்த மந்திரவாதியை அன்னை அழித்ததால் பில்லி,சூனியம் போன்றவைகளால் ஏற்படும் பாதிப்புகள் இத்தலம் வந்து அன்னையை வழிபட விலகி சென்று விடுகின்றன. ஊமை, செவிடு போன்ற குறைகள் எல்லாம் மனமுருக அன்னை முன் முறையிட கரைந்து காணாமற் போய் விடுகின்றன

    தன்னை நாடி வரும் அடியாருக்கு தன் கருணைத் திறத்தால் நல்லன நல்கி நலமான வாழ்வமைத்து தரும் மதுர காளியம்மனை மனமுருகி வழிபட்டு நன்மை அடைவோமாக.

    மதுரகாளியம்மன் ஆலயத்தின் அதிகார பூர்வ இணையதளம் :

    http://siruvachurmadhurakaliamman.tnhrce.in/index.html

    – ப .கோமதி சுரேஷ்

  • புற்றில் இருந்து வந்த புன்னைநல்லூர் மாரியம்மன்

    ஒரு முறை தஞ்சையை ஆண்டுவந்த துளஜா என்னும் மராத்திய மன்னன் தன் குதிரையிலேறி தன் சிறு பெண் குழந்தையுடன் இராமேஸ்வரம் சென்று திரும்பினார். ஊர் திரும்பிய பின் அந்தப் பெண் குழந்தையின் கண்களிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது. அரண்மனையில் சித்த வைத்தியம், யுனானி வைத்தியம், ஆயுர்வேதம் ஆகியவைகள் இருந்தும் எந்த வைத்தியராலும் எதுவும் செய்ய முடியவில்லை.

     

     

    மன்னன் சமயபுரம் மாரியம்மனின் பக்தன். உடனே அந்த மாரியம்மனிடம் வேண்டிக் கொண்டான், தன் மகளின் கண் உபாதையை அம்மா சரிசெய்ய வேண்டுமென்றும், தங்கத்தால் ஒரு கண் செய்து அம்மனுக்குக் காணிக்கை அளிப்பதாகவும் அம்மனிடம் வேண்டிக் கொண்டான். அப்போது அவன் கனவில் சமயபுரம் மாரியம்மன் தோன்றி, “ உன் அருகிலேயே புன்னைமரக் காட்டில் நான் இருக்க சமயபுரம் தேடி போவானேன்”, என்றாள். கண் விழித்துப் பார்த்த மன்னனுக்கு மர்மம் புரியவில்லை. தன் ராஜ்யத்திலேயே புன்னைமரக் காட்டில் இருப்பதாகச் சொன்னாளே, அது எங்கிருக்கிறது. அங்கு அன்னை மாரியம்மா எங்கிருக்கிறாள் என்பதை அறியாமல் போனேனே என்று வருந்தி, அந்த இடத்தைக் கண்டுபிடிக்கத் தன் புரவியில் ஏறி புன்னைமரக் காடு இருக்கும் திசை நோக்கிச் சென்றான்.

    தஞ்சை நகரத்திலிருந்து சில கல் தொலைவிலேயே இருந்த ஒரு பகுதி புன்னை மரக்காடாக இருந்து வந்தது. அந்த காட்டிற்குள் அன்னை சொன்ன இடம் எது என்றறிய மன்னன் தேடிப் போனான். அப்போது வழியில் ஒரு சிறு பெண் நின்று கொண்டிருக்க, அந்தப் பெண் அந்தக் காட்டிற்குள் எப்படி வந்தாள் என்று வியந்து மன்னன் அந்தப் பெண்ணை விசாரிக்க, அவள் “என்னுடைய இருப்பிடம் இங்குதான்” என்று ஓரிடத்தைக் காண்பித்து ஓடிவிட்டாள். அந்த இடத்தில் ஒரு புற்று வளர்ந்திருந்தது. அதனருகில் ஒரு மரத்தினடியில் அவதூதராக ஒரு ஞானி ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைக் கண்டான். அவரைக் கண்டதுமே அவர் ஒரு மகான் என்பதை உணர்ந்த மன்னன் அவரை வணங்கி தொழுது நின்றான். கண்விழித்துப் பார்த்த அவரை மீண்டும் மன்னன் வணங்கி அவர் ஆசி வேண்டி நின்றான். தன்னுடைய கனவில் சமயபுரம் மாரியம்மன் தோன்றி சொன்ன செய்தியையும் சொல்லி, பின்னர் தன்னை அங்கு ஒரு சிறு பெண் அழைத்து வந்து தன் இருப்பிடம் இதுதான் என்று அந்த புற்றைக் காட்டிவிட்டு மறைந்து போனாள் எனும் செய்தியைச் சொன்னான்.

    அந்த மகான் எழுந்து அந்த புற்றை அஷ்ட கந்தங்கள் எனும் எட்டு வாசனை திரவியங்களான சாம்பிராணி, புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோஜனை, அகில், சந்தனம், குங்குமப்பூ, பச்சை கற்பூரம் ஆகியவைகளைக் கொண்டு அந்த புற்று மண்ணோடு கலந்து புற்றை மாரியம்மன் உருவம் சமைத்தார். உடனே சர்வ சக்தி படைத்த ஜன ஆகர்ஷண சக்கரம் ஒன்றை தயார் செய்து அம்மன் முன்பாக வைத்து அதனைத் தொடர்ந்து பூஜை செய்து வருவோர்க்கு மனக்குறை தீரும் என்று சொன்னார். சமயபுரம் மாரியம்மனே இங்கும் வந்து கொலுவீற்றிருப்பதையும், மருந்துகளாலும், ஆகர்ஷண சக்கரத்தாலும் சக்தி படைத்த அந்த புற்று மாரியம்மன் வேண்டிய வரம் தருவாள் என்பதை மன்னன் உணர்ந்தான். அப்படி புற்றை அம்மனாக மாற்றியவர்தான் மஹான் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர். அந்த மஹான் சொன்னபடி அந்த மாரியம்மனைப் பணிந்து வேண்டி வந்த மன்னனுக்கு அவன் மன சஞ்சலம் விலகும்படி அவன் பெண் குழந்தையின் கண் பார்வை சரியானது. மாரியம்மனின் சக்தியையும், ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரரின் திருவிளையாடலையும் எண்ணி மன்னன் மனம் மகிழ்ந்தான்.

    அந்த இடத்தில் ஒரு ஆலயத்தை எழுப்பச் செய்தான் மன்னன். அங்கு முறையாக பூஜைகள் நடைபெற கட்டளை பிறப்பித்தான். மன்னன் குடும்பத்தாருக்குக் குல தெய்வமாக இருந்து புன்னைநல்லூர் மாரியம்மன் காத்து வந்தாள். இந்த அம்மனுக்கு ஐந்தாண்டுகளுக்கொரு முறை தைலாபிஷேகம் எனும் புனுகுச் சட்டம் அணிவிப்பது நடைபெறுகிறது.

    இங்கு வந்து வேண்டிக் கொண்டவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதைக் கேள்விப்பட்டு மக்கள் வெள்ளம் போல இங்கு வந்து தரிசித்துச் செல்கிறார்கள். ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரரின் அருள் விளையாட்டுக்களில் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன் உருவமும் ஒன்று என்பதை இன்றும் மக்கள் வியந்து போற்றி வணங்கி வருகிறார்கள்

  • கந்தசஷ்டி கவசம் ஏன் சொல்ல வேண்டும்?

    கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள் தங்கள் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.

    இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள் இவர் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். இந்த சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது.சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர்.

    நாம் அந்தத் திரு வடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும். இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம். கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரன் மற்ற எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறரர்கள்.
    முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், ப்ன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.
    அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேச்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.
    அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனைப உடம்பில் தான் எத்தனை பாகங்கள்ப காக்க என்று வேலை அழைக்கிறார், வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல் மார்பிற்கு ரத்தின வடிவேல்,
    இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல் பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல் சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல் முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ரவேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க. அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன.
    அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.
    அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயல் இழந்து விடும் என்கிறார். பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார்.
    நோய்களை எடுத்துக்கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார். இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள்.
    சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்

  • சரபேஸ்வரர் வழிப்பாடு

    இந்த உலகமும் மானுடமும் மேன்மை அடைய சிவா பெருமான் எடுத்து வந்த அவதாரங்கள் எண்ணில் அடங்காது. அவற்றில் குறிப்பாக சரபேஸ்வரராக எடுத்த வடிவம் வெகு சிறப்பு மற்றும் சக்தி வாய்ந்தது. தான் என்ற அகந்தை கொண்டு திரிந்த ஹிரண்ய கசிபுவின் செய்த தெய்வ நிந்தனையை தாங்காது பிரகலாதன் வேண்டியபடி , தூணைப் பிளந்து உக்கிரமாக வெளிவந்தார் எம்பெருமான் நரசிம்மர்.

     ஹிரண்ய கசிபுவின் நெஞ்சைப் பிளந்து, குடலை உருவி மாலையாக அணிந்து அவன் உடலில் இருந்து வழிந்த உதிரம் குடித்து, அவன் கதை முடித்தும்,உக்கிரம் தணியாமல் , கோபம் கொப்பளிக்க அவன் அழிவு சக்தியாக ஆர்ப்பரித்து எழுகையில், தேவர்களும் முனிவர்களும் செய்வது அறியாமல் சிவபெருமான் திருவடியில் தஞ்சம் புகுந்தனர். சிவபெருமான்,பறவையும், மனித உடலும், மிருகமும் கலந்த ஒரு மகா பயங்கர வடிவெடுக்கிறார் .

    அவரே சரபேஸ்வரர் என போற்றப்படுகிறார் . சரப திருவுருவின் நிழல் பட்ட உடனே ஆக்ரோஷம் மேலிட வந்து கொண்டிருக்கும் நரசிம்மரின் உக்கிரம் தணிகிறது . உக்கிர நரசிம்மரின் அவதாரத்தினை, சாந்த நரசிம்மராய் , லட்சுமி நரசிம்மராய் வெளிப் பட்ட கோபத்தை தன்னுள்ளே ஐக்கியப் படுத்திக் கொண்டு சாந்த ரூபமாக, விளங்கும் ஸ்ரீ சரபேஸ்வரன் சகல சத்ரு விநாசராகவும் பிறவிப் பிணியை நீக்குபவராகவும், கஷ்டங்களை போக்குபவராகவும் அருள் பாலிக்கிறார் .

    பிரதோஷ நேரத்தில் தான் ஜோதி பிழம்பான சிவபெருமான் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியாய் அவதாரம் கொண்டு ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் ஆக்ரோஷதினை தணித்தார். எனவே, பிரதோஷ காலத்தின் போது ஸ்ரீசரபேஸ்வர வழிபாடு அதி அற்புத பலன்களைப் நமக்கு தருகிறது.

     

  • தீபம் ஏற்றும் முறை

    எத்தகைய மேன்மை பொருந்திய , திருமகளின் அம்சமான திரு விளக்கை ஏற்றுவதற்கு முன் நாம் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இருகின்றன .விளக்கு ஏற்றும் முன்  வீட்டின் முன்கதவைத் திறந்து வைத்து பின்புறக்கதவை சாத்தியபிறகே விளக்கேற்ற வேண்டும். பிரம்ம முகூர்தமான அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் விளக்கு  ஏற்ற வேண்டும் .  மாலை ஆறரை மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் எல்லா வளமும், நலனும் நமக்கு கிட்டும் .  விளக்கை குளிர்விக்கும் போது,  பூவால் குளிர்விக்கலாம் அல்லது  தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம்.. விளக்கின் ஒளி நம் வீட்டினை எப்படி பிரகாசமாக மாற்றுகிறதோ அதன் பலன் நம் மன இருளையும் அகற்றி ஒளி பெறச் செய்யும் .

  • திருவிளக்கின் மகிமைகள்

    திருகார்த்திகயன்று  நம் வீட்டிலோ அல்லது அருகில் உள்ள கோயில்களிலோ திருவிளக்கு பூஜை நடத்தினால், லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். விளக்கின் ஒளி சுற்றுப்புற இருளை அகற்றுவதோடு, நம் மனதின் இருளையும் அகற்றுகிறது என்றால் அது மிகையில்லை . பூஜையறையில் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் வாசல் தெளித்து மாக்கோலம் இட்டு, விளக்கை ஏற்றிவைத்து,வழிப்பட்டால்  மகாலட்சுமி நம் இல்லத்தில் வாசம் செய்வாள் என்பது ஐதீகம்.

  • பிள்ளையார் பெருமை

    விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம். இதில் எடுத்த செயல் வெற்றி பெறச் செய்யும் தனிச்சிறப்புடைய காரிய சித்திமாலையின் விளக்கம் தரப்பட்டுள்ளது. கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இத்துதியை விநாயகர் முன் அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பங்கள் எளிதில் நிறைவேறும். சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும்(காலை, மதியம், மாலை) உரைப்பவர்கள் நினைத்த காரியங்கள் கைகூடும். அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும். எட்டு நாட்கள் ஓதிவர மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம் பட்டுத் திகழும் என்பது ஐதீகம்.

     

    உயிர்களை இயல்பாகப் பற்றி இருக்கும் பந்த பாசங்களை நீக்கும் இயல்புடையவரும், அனைத்து உயிர்களையும் தம்மிடம் இருந்து தோற்றுவிப்பவரும், வேதங்களையும், ஆகமங்களையும் வெளிப்படுத்தி அருள் செய்தவருமாகிய விநாயகப்பெருமானின் திருவடிகளை அன்புடன் போற்றுகின்றோம். கண்களால் காணப்பெறும் உலகமுழுவதும் நீக்கமற நிறைந்துஇருப்பவரும், விருப்பு வெறுப்பு இல்லாதவரும், நாம் செய்கின்ற செயல்களின் பலனை நமக்குத் தருபவரும், களைபவருமான முழுமுதற்பொருளான கணபதியை உவந்து சரணடைந்து போற்றுகின்றோம். தீயில் விழுந்த பஞ்சுபோல இடர்களை முழுவதும் நீக்குபவரும்,தன்னை அன்புடன் தொடரும் உயிர்கள் அனைத்தையும் நற்கதிக்கு இட்டுச் செல்பவரும், எடுத்த செயல்களை எளிதாகவும், இனிதாகவும் நிறைவு செய்து அருள்பவரும் ஆன ஒற்றைக்கொம்பன் விநாயகரின் திருவடிகளைச் சரணமாகப் பற்றுகின்றோம்.திருத்தலங்கள் தோறும் கோயில் கொண்டிருப்பவரும், கங்கை முதலான தீர்த்தங்களாகத் திகழ்பவரும், உயிர்களின் அறியாமையை அறிவினைத் தருபவரும், கருணை நிறைந்த வருமாகிய கணபதியின் திறத்தினைப் புகழந்து பாடி திருவடிகளைச் சரண் அடைகிறோம். உயிர்கள் செய்யும் வினையின் முதலாகவும், செய்யப்படும் பொருளாகவும், செய்வினையின் பயனாகவும், அந்த பயன் விளைவிக்கும் விளைவைப் பயன்பெறச் செய்பவனும் திகழ்கின்ற மெய்ப்பொருளான கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று அடைக்கலம் புகுகின்றோம்.வேதங்களாலும் அறியமுடியாதவரும், வேதத்தின் முடிவாக விமலனாகத் திகழ்பவரும், எங்கும் பரந்து விளங்கும் பரமானந்த வடிவாக வீற்றிருப்பவரும்,எண்குணங்களை உடையவரும் ஆகிய கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று பற்றுகின்றோம்.நிலத்தில் ஐந்து குணங்களாகவும், நீரில் நான்கு குண்ங்களாகவும், தீயில் மூன்று குணங்களாகவும், காற்றில் இரண்டு தன்மையுடையவனாகவும், வானில் ஒன்றாகவும் திகழும் அண்ணல் கணபதியின் அன்புத்திருவடிகளை அடைக்கலமாகப்புகுகின்றோம்.’பாச அறிவினாலும், பசு அறிவினாலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருளாகவும், பாச அறிவையும், பசு அறிவையும் அறியச் செய்யும் இறைவனாகவும், பாச, பசு அறிவினைப் போக்கி ஞானஅருள் வழங்கும் தலைவனாகவும் திகழும் கணபதியைச் சரண் அடைந்து போற்றுகின்றோம்.

     

  • திருவிளக்கின் மகிமைகள்

    திருகார்த்திகயன்று நம் வீட்டிலோ அல்லது அருகில் உள்ள கோயில்களிலோ திருவிளக்கு பூஜை நடத்தினால், லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். விளக்கின் ஒளி சுற்றுப்புற இருளை அகற்றுவதோடு, நம் மனதின் இருளையும் அகற்றுகிறது என்றால் அது மிகையில்லை . பூஜையறையில் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் வாசல் தெளித்து மாக்கோலம் இட்டு, விளக்கை ஏற்றிவைத்து,வழிப்பட்டால் மகாலட்சுமி நம் இல்லத்தில் வாசம் செய்வாள் என்பது ஐதீகம்.

    தீபம் ஏற்றும் முறை

    எத்தகைய மேன்மை பொருந்திய , திருமகளின் அம்சமான திரு விளக்கை ஏற்றுவதற்கு முன் நாம் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இருகின்றன .விளக்கு ஏற்றும் முன் வீட்டின் முன்கதவைத் திறந்து வைத்து பின்புறக்கதவை சாத்தியபிறகே விளக்கேற்ற வேண்டும். பிரம்ம முகூர்தமான அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் விளக்கு ஏற்ற வேண்டும் . மாலை ஆறரை மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் எல்லா வளமும், நலனும் நமக்கு கிட்டும் . விளக்கை குளிர்விக்கும் போது, பூவால் குளிர்விக்கலாம் அல்லது தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம்.. விளக்கின் ஒளி நம் வீட்டினை எப்படி பிரகாசமாக மாற்றுகிறதோ அதன் பலன் நம் மன இருளையும் அகற்றி ஒளி பெறச் செய்யும் .

    விளகேற்றுவதினால் ஏற்படும் பலன்கள்

    ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்
    இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்
    மூன்று முகம் ஏற்றினால் – புத்திரதோஷம் நீங்கும்
    நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்
    ஐந்து முகம் ஏற்றினால் – சகலநன்மையும் உண்டாகும்

    விளக்கேற்றும் திசை

    கிழக்கு திசை – துன்பங்கள் நீங்கும் , குடும்பம் அபிவிருத்தி அடையும்
    மேற்கு திசை – கடன் மற்றும் , தோஷங்கள் நீங்கும்
    வடக்கு திசை – திருமணத்தடை அகலும்
    தெற்கு நோக்கி- எக்காரணம் கொண்டும் எத்திசையில் விளக்கேற்றக்கூடாது.
    கோயிலில் நாம் ஏற்றும் தீபத்திற்கு நிறைய பலன்கள் உண்டு. நம்மை அறியாமல் செய்த பாவங்கள் கூட தீபத்தை தரிசிப்பதால் விலகிவிடும்.

  • பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள்

    1.நீ உன் சுவாசத்தை ஒரு முனைப்பாக  கவனித்தால் ,அது தானாகவே கும்பத்தில் {நிறுத்தல் }உன்னை கொண்டு சேர்த்து விடும் .இது பிராணாயாமம் 

     2. நீ எவ்வளவுக்கு எவ்வளவு அடங்கி பணிவாக இருக்கிறாயோ அத்தனைக்கு அத்தனை எல்லாவிதத்திலும் உனக்கு நல்லது

     3. மனதை உள்ளிழுத்துக் கொள்வதால் எங்கு வேண்டுமானாலும் எந்தச் சூழ்நிலையிலும் இருக்கலாம்

     4. உலகை கனவாக மட்டுமே கருத வேண்டும் 

     5. மனதை நீ  வெளி  விஷயங்களிலும் ,எண்ணங்களாலும் திசைதிருப்ப விடக்கூடாது .

     வாழ்வில் உனக்கு கடமையாக அமைந்த வேலைகளை நிறைவேற்றும் வேளை தவிர மீதமான நேரமெல்லாம் ஆன்ம நிஷ்டையில் செலவிட வேண்டும் .ஒரு கணமும் கவனக் குறைவிலோ ,சோம்பலிலோ வீணாக்காதே .

     6. யாருக்கும் இம்மியும் தடையோ ,தொந்தரவோ விளைவிக்காதே .தவிர உன் வேலைகளை எல்லாம் நீயே செய்துகொள் .

     7. விருப்பும்,வெறுப்பும் இரண்டும் தவிர்க்கத்தக்கவை

     8. எண்ணங்கள்  அனைத்தையும் குவித்து ஒரு முகப்படுத்தி தன்னுள் செலுத்தி தயங்காமல் :”நான் யார் ” என்று விசாரணை செய்ய வேண்டும்  

     ஒருமுனைப்பாக இதைச் செய்தால் சுவாசம் தானே அடங்கும்         

    இந்த மாதிரி கட்டுப்பாடாக சாதனை செய்யும் சமயம் ,மனம் திடீரென்று கிளம்பும் .அதனால் கவனமுடன் விசாரத்தை தொடர வேண்டும் .

     

     “‘நான் யார் “”என்று எண்ணங்களின்றி இருத்தல்    நிஷ்டை 

    “‘நான் யார் “”என்று எண்ணங்களின்றி இருத்தல்    ஞானம் 

    “‘நான் யார் “”என்று எண்ணங்களின்றி இருத்தல்  மோட்சம் 

     “‘நான் யார் “”என்று எண்ணங்களின்றி இருத்தல்   சகஜம் 

    அதனால் எண்ணங்களின் நிழல் கூட இல்லாமல்  இருத்தலே பரிபூரண நிலையாயாகும் இது நிஜம்