திருமுல்லைவாயில் அடுத்த பொத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆகஸ்டு 21 ஆம் தேதி அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனையொட்டி 20 ஆம் தேதி மஹாகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சுதர்சன ஹோமம் போன்றவை நடக்கின்றன. அன்று மாலை வாஸ்து ஹோமம், முதல் காலயாக சாலை பூஜை போன்றவை நடக்கின்றன. 21 ஆம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜை, மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. பெருங்குளம் ராமகிருஷ்ண சோதிடர் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கிறார். பெருங்குளம் சுப்பிரமணிய சோதிடர் முன்னிலை வகிக்கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரவிசேகர் செய்து வருகிறார்.
Category: old…
old…
-
திருப்பதியில் பவித்ரோற்சவம் நிறைவு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ரோற்சவ விழா நேற்று நிறைவு அடைந்தது.
திருப்பதி ஏழுமலையானுக்கு வருடாந்திர, மாதாந்திர, வாராந்திர, தினசரி உற்சவங்களின் போது ஏற்படும் குற்றம் குறைகளை நிவர்த்தி செய்யவும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் ஊழியர்களால் ஏற்படும் தோஷங்களை களையவும் ஆண்டுக்கு ஒருமுறை 3 நாட்கள் பவித்ரோற்சவத்தை தேவஸ்தானம் நடத்துகிறது.அதன்படி ஆகஸ்டு 14 ஆம் தேதி பவித்ரோற்சவம் விமரிசையாக தொடங்கி 16 ஆம் தேதி நிறைவு பெற்றது. நிறைவு நாளான நேற்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் பவித்ரோற்சவம் நிறைவடைந்தன் அடையாளமாக ஹோமம் வளர்த்து, பூர்ண ஷூதி நடைபெற்றது. இதில் பக்தர்கள், தேவஸ்தான அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-
திருப்பதியில் ஆர்ஜித சேவை தற்காலிக ரத்து
பவித்ரோற்சவத்தை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 நாட்களுக்கு ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தினமும் நடக்கும் பூஜைகளில் அல்லது யாராவது தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளுக்காகவும், தோஷங்களுக்காகவும் ஆண்டுதோறும் பவித்ரோற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு வருடாந்திர பவித்ரோற்சவம் நேற்று தொடங்கியது.இதையொட்டி காலை 9 மணி முதல் 11 மணி வரை உற்சவமூர்த்திகளான தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6 மணி முதல் 8 மணி வரை வைர, வைடூரியம் அணிந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், பூவராக சுவாமி கோயிலில் பவித்ர மாலை சமர்ப்பிக்கப்பட்டது. இதையொட்டி 3 நாட்களுக்கு கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு….
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆகஸ்டு 16ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதம் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 8ஆம் தேதி ஐயப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை மிக விமரிசையாக நடைபெற்றது. ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆகஸ்டு 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது. 16-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து, 21-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
17-ந் தேதி முதல் வழக்கமான பூஜைகள் தந்திரி கண்டரரு ராஜீவரு, மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி ஆகியோர் தலைமையில் நடைபெறும். தினமும், சிறப்பு பூஜைகளான படிபூஜை, உதயாஸ்தமான பூஜை ஆகியவை நடத்தப்படும். 21-ந் தேதி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு ஆவணி மாத பூஜை நிறைவுபெறும்.
மீண்டும், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை செப்டம்பர் மாதம் 12-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 13-ந் தேதி முதல் ஓணம், 14-ந் தேதி திருவோண தின சிறப்பு பூஜையும் நடக்கிறது.
-
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கும்பாபிஷேகம்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில் உள்ள நரசிம்மர் சுவாமி சன்னதி உள்ளிட்ட திருப்பணிகள் நடக்கும் சன்னதிகள் மற்றும் கோபுரங்களுக்கு ஆகஸ்டு 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்….
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும், புராதன மிக்க பார்த்தசாரதி சுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள யோகநரசிம்மர், வரதராஜசுவாமி, திருமழிசையாழ்வார், கருடாழ்வார் மற்றும் குளக் கரை ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகளுக்கும், அதன் விமானங்களுக்கும், பின்கோபுரவாசல் விமானம், பாண்டிகோபுரம், நரசிம்மர் கல்யாண மண்டபம், நரசிம்மர் மண்டபத்தின் மேல்தளம், கீழ்தளங்கள், குளக்கரை ஆஞ்சநேயர் விமானம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் திருப்பணிகள் கடந்த ஜூலை 10-ந் தேதி தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுபடி ஆகஸ்டு 18ஆம தேதி மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இத்திருப்பணிகள் பழமை மாறாமல் தொல்லியல் துறை வல்லுனர்களின் ஆலோசனைப்படி, ரூ.95 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ரூ.55 லட்சம் மதிப்பில் சுவாமி கிரீடம், கர்ணபத்திரம், ஸ்ரீசடகோபம், கவசங்களுக்கு தங்க ரேக் பதிக்கும் பணியும், கோபுர கலசங்களுக்கு தங்கநீர் தோய்க்கும் பணியும் மற்றும் முதல் முறையாக நரசிம்ம சுவாமிக்கு சொர்ணபந்தனமும், கஜேந்திரவரதராஜ சுவாமிக்கு ரஜதபந்தனமும் பொருத்தப்பட உள்ளது.
இந்த திருப்பணிகள் ஏற்பாடுகளை அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் மா.வீரசண்முகமணி மற்றும் துறை அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்ததாகவும் அரசின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
உலகின் மிகப்பெரிய ஆலயம் – பாகம் 9
உணவகத்தை விட்டு வெளியே வந்து, அமெரிக்கரோடு பேசிக் கொண்டிருந்து விட்டு எங்கள் விடுதிக்குத் திரும்பினோம். அமெரிக்கருக்கு அமெரிக்காவில் மனைவியும் வளர்ந்த பிள்ளைகளும் இருக்கிறார்களாம். ஆண்டுக்குச் சில மாதங்கள் மட்டும் விடுப்பில் கம்போடியா வந்து இந்த ஊர் மனைவியோடு குடும்பம் நடத்தி விட்டுச் செல்கிறாராம். இது கம்போடியாவில் பரவலாகப் புழக்கத்தில் இருக்கிறது. கம்போடியாவில் மட்டுமல்ல, தாய்லந்து, இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலும் இந்தப் பழக்கம் இருக்கிறது.
இந்தோனேசியாவின் பாலித் தீவுக்குச் சென்றிருந்தபோதும் இதுபோன்ற கதைகளைக் கேள்விப்பட்டோம். பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பேங்காக் சென்றிருந்தபோது, விமான நிலையத்திலேயே வெள்ளைக்காரர்கள் (பெரும்பாலும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள்) உள்ளூர்ப் பெண்களோடு அறிமுகமாகி ஊர் சுற்றுவதை சகஜமாகக் காண முடிந்தது. அந்த நாட்டுக்குத் தனியாக வருபவர்கள், உள்ளூரில் துணையைத் தேடிக் கொண்டு உல்லாசமாகப் பொழுதைக் கழித்துவிட்டுப் போகிறார்கள் என்றுதான் அப்போது புரிந்து கொண்டேன். பெரும்பாலும் அப்படித்தான்.
ஆனால், வெள்ளைக்காரக் கணவருக்காகவே இந்த நாடுகளில் காத்திருக்கும் பருவகால மனைவிகளும் இருக்கிறார்கள் என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன். புதிய இளம் மனைவிக்கான முழுச் செலவையும் வெளிநாட்டுக் கணவர் ஏற்றுக் கொள்கிறார். மிகப் பெரும்பாலோர் தரமான வீடும் வாங்கிக் கொடுத்து விடுவார்களாம்.
இளம் மனைவிக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்துக்கே இந்த வெள்ளைக்கார முதிர் மாப்பிள்ளைகள் பொறுப்பேற்றுக் கொள்கிறார்களாம். தாத்தா, பாட்டி உட்பட… இவ்வாறு வயதான வெள்ளைக்கார மாப்பிள்ளைக்கு வாழ்க்கப்படுவது குறித்து இளம்பெண்களுக்கு எந்த மனக்குறையும் இருப்பதாகத் தெரியவில்லை. மகிழ்ச்சியாகவே அதை ஏற்றுக் கொள்கிறார்கள் போலும்.
அந்த நாட்டு வறுமைச் சூழல் அவர்களை அதை ஏற்றுக் கொள்ளச் செய்திருக்க வேண்டும். இந்தக் கதை தெரிந்த பின் கண்ணில் தென்படும் பொருத்தமற்ற ஜோடிகள் பற்றிய எங்கள் மனப்போக்கு மாறியது. அவரவர் வாழ்க்கை அவரவர் முடிவு. இதில் நாம் யார் அதுபற்றித் தீர்மானிக்க ?
உணவகத்துக்கு அருகிலிருந்த ஒரு பெரிய பேரங்காடியில் சில பொருட்களை வாங்கிக் கொண்டு விடுதிக்கு வந்து உடனே தூங்கி விட்டோம். நாளைக் காலையில், கருக்கலில் சென்று அங்கோர் வாட் ஆலயத்தைக் காணத் தீர்மானித்திருந்தோம். ஒரு நாள்தான் இருக்கிறது. முழுமையாகப் பார்த்துவிட முடியுமா என்று தெரியவில்லை. பார்ப்போம். அங்கோர் வாட்டுக்குப் பிறகு பாயோன் கோயில் பார்த்துவிட்டு மாலையே புனோம்பென் புறப்படுவதாகத் திட்டம்.
அதிகாலையில் பல்விளக்கித் தயாராக இருந்தோம். குளிக்கவில்லை. புலரியில் ஆலயத்தைப் பார்த்துப் படங்கள் கொஞ்சம் எடுத்துவிட்டு மீண்டும் விடுதிக்கு வந்து குளித்துக் கிளம்பிக் கோயிலை விஸ்தாரமாய்ப் பார்ப்பதாக ஏற்பாடு. டாண் எனக் காலை ஐந்து மணிக்கு ஓட்டுநர் ரா வந்துவிட்டார். பொழுது விடியும் நேரத்தில் எந்த ஊரும் அழகுதான்.
எங்களைப் போன்ற சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாய் வண்டிகளில் வந்து கொண்டிருந்தார்கள். அங்கோர் வாட் ஆலய வளாகத்துக்குச் செல்ல சியாம் ரீப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நுழைவுச் சீட்டு கொடுக்கிறார்கள். ஒரு நாள் சுற்றிப் பார்க்க, இரண்டு நாள் பார்க்க, ஒரு வாரம், ஒரு மாதம், ஆறு மாதம் தங்கி ஆய்வு செய்ய எனத் தனித்தனியாகக் கட்டணம். நாங்கள் ஒருநாள் நுழைவுச் சீட்டு சூரியோதய வேளைக்குச் சேர்த்து வாங்கினோம். 20 அமெரிக்க டாலர் வழக்கம்போல்.
நுழைவுச் சீட்டு ஒவ்வொருவராக, தனித்தனியேதான் எடுக்க வேண்டும். அங்கேயே உள்ள கேமராவை நம்மைப் பார்க்கச் சொல்லிப் படமெடுத்து அதை நுழைவுச் சீட்டில் பதித்து விடுகிறார்கள். ஆள் மாறாட்டம் செய்ய முடியாது. “கோளாறுக்காரப் பயபுள்ளைக”தான் என்று நினைத்துக் கொண்டேன். சிங்கப்பூரில் கூட இந்தப் பழக்கமில்லை. பதியப்பட்ட படத்தைப் பார்த்து எனக்கே பயமாகிவிட்டது. குளிக்காமல் கொள்ளாமல் ஙே என்று முழித்துக் கொண்டிருந்தேன் படத்தில்.
சியாம் ரீப்பில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆலய வளாகத்திற்கு நம்ம ஊர் ஆட்டோபோல சின்னச் சின்ன வாகனங்கள் அழைத்துச் செல்கின்றன. எங்களிடம் வேன் இருந்ததால் அதிலேயே சென்றோம். எனக்கு மனம் திக்திக்கென அடிக்கத் தொடங்கியது. கடவுளே ! நிஜமாகவே நான் அங்கோர் வாட்டைப் பார்க்கப் போகிறேனா ? இது நிஜம்தானா ? வேன் செல்லும் வேகத்தைத் தாண்டி என் ஆவல் பறந்தது.
வாழ்நாள் கனவு ஒன்று இன்னும் சில நிமிடங்களில் நிறைவேறப் போகிறது என்ற பதற்றம் என்னை நிலையழியச் செய்தது. நண்பர்களோடு அதிகம் பேசவில்லை. எனக்குள் மூழ்கிப் போனேன். எத்தனை ஆண்டுகள் நினைத்து நினைத்து ஏங்கிய இடம் ?
சிங்கப்பூருக்கு வந்திருக்காவிட்டால் இங்கே என்னால் வந்திருக்க முடியுமா? அதற்கு வாய்ப்புக் கிடைத்திருக்குமா? அதற்கான பொருளாதார வசதி இருந்திருக்குமா? நான் சிங்கப்பூர் வருவதற்குக் காரணமாக இருந்த ஆருயிர்த் தோழன் அசோகன், சம்பத், வீரமணி உள்ளிட்ட நண்பர்களை மனத்துக்குள் நினைத்துப் பார்த்து நன்றி சொன்னேன். அசோகன் இந்த பூமியிலேயே இல்லை. ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் காசநோயால் காலமாகிவிட்டான். அசோகா நீ எங்காவது பக்கத்தில் இருக்கிறாயாடா ? இருந்தால் உன்னைத் தழுவிக் கொள்கிறேனடா..
இதோ உன் தோழன் அங்கோர் வாட் பார்க்கப் போகிறான் ! காரைக்காலில் நீ எடுத்துக் கொடுத்த விசா மூலம் சிங்கப்பூர் வந்தவன், சிறுவயதிலிருந்து கனவு கண்ட இடத்தை நேரில் பார்க்கப் போகிறான். மானசீகமாக உன்னோடு இந்த இடத்தைப் பார்க்கப் போகிறேனடா..
வெளியே இன்னும் விடிந்திருக்கவில்லை. ஆலயத்திற்கு எதிரே எங்களை இறக்கிவிட்டுக் குறிப்பிட்ட நேரத்தில் அதே இடத்துக்கு வரும்படி சொல்லிவிட்டு ரா போய்விட்டார். நாங்கள் ஓட்டமும் நடையுமாய், அகழியைக் கடப்பதற்காக உள்ள பாதையில் சென்றோம். நன்கு மழை பெய்து வெறித்திருந்ததால், பாசி படிந்த சுவர்கள் மழைநீரில் ஊறிப் பேரழகோடு திகழ்ந்தன. ஆலயங்களை அவற்றின் பழமை மாறாமல் புதுப்பித்துக் கொண்டிருந்தனர்.

ஆலயத்திற்கு ஏறிச் செல்லும் படிகள் வழக்கத்தை விடச் சற்றே உயரமான படிகள். வெளிச்சம் லேசாகத்தான் வரத் தொடங்கியிருந்தது என்றாலும், நன்கு வியர்த்தது.
அகழியைக் கடக்குமிடத்திலிருந்து உள்ளே இருக்கும் ஆலய முகடுகள் தெரியவில்லை. முதலில் உள்ள மூன்று மொட்டைக் கோபுரங்கள்தான் தெரிந்தன. அதற்குப் பின்னால் வெகுதொலைவில் இருக்கின்றன ஐந்து மேருக்களும். அகழிப் பாதையின் இரண்டு பக்கத்திலும் நீண்ட வாலுடைய ஏழு தலை நாகங்களும் அவற்றின் முடிவில், கலிங்கப் பேரரசின் சின்னமான சிங்கமும் இருந்தன.

பல இடங்களில் ஏழு தலை நாகங்களின் தலை உடைந்து அதை சிமெண்ட்டால் மாற்றிக் கட்டியிருந்ததைக் கண்டோம். நடைபாதைக் கற்களின்மீது ஆங்காங்கே மழைநீர் தேங்கிக் கிடந்தது. முதல் படிக்கட்டை ஏறி மொட்டைக் கோபுரத்தைக் கடந்ததும் புலரத் தொடங்கியிருந்த நீலவானப் பின்னணியில் ஆலய முகடுகள் விளிம்பு ரூபமாய்த் தெரிந்தன. படிக்கட்டில் ஏறி கல்நிலைச் சட்டத்துக்குள் அந்த முகடுகளை ஓர் ஓவியம்போலப் பார்த்தபோது மெல்லிய இசை கேட்பது போலிருந்தது எனக்கு. தாஜ்மகாலைப் பார்த்த போதும் இப்படித்தான் உணர்ந்தேன்.
மொட்டைக் கோபுரத் தளத்திலேயே நின்று சற்று நேரம் ஆலயத்தை ரசித்தோம். கேமராவில் படம் எடுத்துப் பார்த்தால் கொஞ்சம் வெளிச்சமாக இருப்பது போலிருந்தது. ஆனால் உண்மையில் அவ்வளவாக வெளிச்சம் வரவில்லை. ஆலயத்துக்கு உள்ளேயும் வெளியிலும் ஏராளமான பனைமரங்கள் நின்றிருந்தன. ஐந்து மேருக்களும் அடங்கக்கூடிய படங்களில் முகடுகளின் இருபக்கங்களிலும், கேரளக் கோயில் திருவிழாக்களில் யானை மேல் அமர்ந்து பிடிப்பார்களே.. அலங்கார வேலைப்பாடு மிக்க இரண்டு பெரிய வட்டங்கள்.. அதுபோல் உயரமான இரண்டு பனைமரங்கள் நிற்பதைப் பார்க்கலாம்.

நாங்கள் ஆலயத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பயணிகள் சாரி சாரியாக உள்ளே செல்லத் தொடங்கினர். நாங்கள் நின்றிருந்த இடத்தைச் சுற்றிப் பெரிதாக சிற்ப வேலைப்பாடுகள் இல்லை. தூண்களில் அப்சரஸ் நடனமணிகள் பல நிலைகளில் இருந்தனர். சில படங்கள் எடுத்துவிட்டு மெதுவாக நடக்கத் தொடங்கினோம். மேரு நாங்கள் நெருங்க நெருங்க எங்களை விட்டு விலகிச் சென்று கொண்டே பெரிதாகத் தொடங்கியது.
இணைப்புப் பாதையின் இரண்டு பக்கங்களிலும் இடிந்த இரண்டு மண்டபங்கள் இருந்தன. அவை முழுமையாக இருந்தால் கூட இவ்வளவு அழகும் அமானுஷ்யமும் அவற்றுக்குக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அவை அக்கால நூலகங்களாம். பின்னர் வந்த வழிகாட்டி சொன்னார். ஆலய வளாகத்துக்குள் நூலகத்துக்கும் இடமளித்த மன்னன் இரண்டாம் சூரியவர்மனுக்கு ஒரு ஜே !..

இப்போது நன்கு விடிந்து விட்டிருந்தது. ஆலயம் மேற்குப் பார்த்தது என்பதால், சூரியக் கிரணங்கள் மேருக்களுக்குப் பின்னாலிருந்து எழும். மசமசவெனப் பரவிய வெளிச்சம் மஞ்சள் நிறத்தை அடைந்தது. மேருவை நோக்கிய பாதையின் இரண்டு புறங்களிலும் சின்னக் குளங்கள் உள்ளன. அவற்றில் இடப்பக்கமாக உள்ள குளத்தில் தண்ணீர் நிறையவே இருந்தது. அதன் கரையில்போய் நாங்கள் நின்று கொண்டோம்.

ஆலயத்தின் ஐந்து முகடுகளும் சுற்றியிருந்த மதில் சுவரோடு சேர்ந்திருந்த மொட்டைக் கோபுரங்களோடு குளத்து நீரில் எதிரொளித்தன. ஆலயத்தையும் அதன் பிரதிபலிப்பையும் ஒருசேரக் காண்பது இனிமையாக இருந்தது. சிதம்பரம் சிவகங்கைக் குளத்தில் இப்படித்தான் வடக்குக் கோபுரம் அழகாகப் பிரதிபலிக்கும். காணத் திகட்டாத காட்சி.
கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் ஏறியது. அங்கே அந்த அனுபவத்தைச் சிதைப்பதற்கென்றே சிறு வியாபாரிகள் கூட்டமொன்று இருக்கிறது. காஃபி, தேநீர், நொறுக்குத் தீனி, காலை பசியாற என்று என்னென்னவோ விற்கிறார்கள். ஆனால் நம்மை வற்புறுத்தவில்லை வாங்கச் சொல்லி. அதுவரை பரவாயில்லை. இருந்தாலும் சளசளவெனப் பேசிக் கொண்டு குறுக்கும் நெடுக்கும் அவர்கள் அலைவது அந்த இடத்தின் அமைதியைக் குலைப்பதாகவே பட்டது எனக்கு.
எத்தனை ஆண்டுகளாக இந்த ஆலயம் நிற்கிறது? என்னென்ன அரசியல் மாற்றங்களையும் இயற்கைச் சீற்றங்களையும் இது மௌன சாட்சியாய்ப் பார்த்திருக்கும்? ஆலயத்தின் முன்புறத்திலிருந்து சூரியக் கிரணங்கள் விழுந்து கோபுரங்கள் கொஞ்சம் கொஞ்சமாய்த் துலக்கம் பெறுவது ஒருவகை. ஆனால் இங்கோ ஒளி பின்னால் இருந்து எழுவது ஆலய விளிம்புகளை ஒளிரச் செய்து ஒரு வசீகரத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
தாஜ்மகாலில் அதன் நுணுக்கமான வேலைப்பாடும் எழிலும் நம்மை பிரமிக்க வைக்கும். ஆனால் இங்கே முதலில் கண்ணுக்குத் தெரிவது இதன் பிரமாண்டமும் ஒத்திசைவும்தான். வரிசை வரிசையாக அணிவகுக்கும் தூண்கள். ஆங்காங்கே கோபுரங்கள். எல்லாவற்றையும் சரடுபோல் இணைக்கும் சாளரங்கள். அவற்றை மூடிய கற்பாளங்கள். அங்கோர் குழும நினைவுச் சின்னங்களில் இதுவே தலையாயது. ஆகப் பெரியது. முழுமையாக இன்று கிடைக்கக் கூடியது.
அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சிக்குச் சென்றுவிட்டு அங்கு எடுத்த படங்களை, ஓவியரான நண்பர் பாஸ்கரிடம் காட்டிக் கொண்டிருந்தேன். எனக்கு ஓவிய ஞானமெல்லாம் கிடையாது.
பிக்காசோ ஓவியம் வந்திருக்கிறதே என்று பார்க்கப் போனேன். அப்போது பாஸ்கர் ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கிருந்த ஓர் ஐரோப்பிய ஓவியத்தில் ஏசு சிலுவையில் அறையப்பட்ட காட்சி என்னைப் பெரிதும் கவர்ந்தது. அது அழகாய் இருப்பதாக நான் சொன்னபோது பாஸ்கர் அந்த ஓவியரின் திறமையை உணரச் செய்யும் மற்ற அம்சங்களை எடுத்துக் காட்டினார். ஒவ்வொன்றையும் சமன்படுத்தும் வகையில், வண்ணச் சேர்க்கை ஆங்காங்கே தீட்டப்பட்டிருந்ததைச் சுட்டினார்.
ஓர் ஓவியராக அவர் அந்தப் படைப்பைச் சிலாகித்தது அதன் சமநிலையை. அதேபோல், அங்கோர் வாட் ஆலயம் எல்லாக் கோணத்திலும் சமநிலைப்படுத்தப்பட்டிருந்தது. இடப்பக்கம் ஒன்றிருந்தால் உடனே வலப்பக்கமும் அதே போன்ற ஒன்று சமன்படுத்துகிறது. இது விரிந்து விரிந்து மிகப் பெரிய ஒத்திசைவை உண்டாக்குகிறது. இதன் பிரமாண்டம், பேரழகு எல்லாவற்றுக்கும் இதுதான் அடிப்படைக் காரணமாக இருக்க வேண்டும்.
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் உள்ள புகழ்பெற்ற நீண்ட மூன்றாம் பிரகாரத் தூண்களை நினைத்துக் கொள்ளுங்கள். அதுபோன்ற ஒத்திசைவு எப்போதுமே அழகுதான் கட்டடக் கலையில். வரிசை வரிசையாக நிற்கும் தூண்களுக்கு இடையே ஒருவரை நிற்க வைத்துப் படம் எடுத்தால் அதில் ஓர் அழகு கூடிவரும். அது இதனால்தான்.

இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் கண்களைத் திருப்பித் திருப்பி ஆசை தீர அங்கோர் வாட்டின் அழகை அள்ளிப் பருகினோம். இந்தக் காலை நேர இதமான சூழலை நினைவுக்குள் பொதிந்து வைக்கப் படமும் எடுத்துக் கொண்டோம். விடுதிக்குச் சென்று குளித்து, பசியாறித் திரும்புவோம் என்று புறப்பட்டோம். வழியில் அவ்வப்போது நின்று ஆலயத்தைத் திரும்பிப் பார்ப்போம். இன்னும் பல இடங்களில் சீரமைப்புப் பணிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. மதில்களுக்கு மேல், மொட்டைக் கோபுரங்களுக்கு மேல் என்று பிளாஸ்டிக் கூரையமைத்துப் பல நிபுணர்கள் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அது இப்போதைக்கு முடியாத செயலாக இருக்க வேண்டும்.
ஆங்காங்கே கற்கள் குவியல் குவியலாகக் கிடக்கின்றன. அவற்றை எடுத்து அடையாளங்கண்டு உரிய இடத்தில் பொருத்த வேண்டும். எப்படி அந்தந்தக் கற்களுக்கு உரிய இடத்தைக் கண்டுபிடிப்பார்கள்? ஆச்சர்யம்தான். ஆனால், அவர்கள் அதற்கெனப் பயிற்சி எடுத்திருப்பார்களாக இருக்கும். தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலை, இந்தியத் தொல்லியல் துறை இப்படித்தான் புதுப்பித்தது. ஒவ்வொரு கல்லையும் திசை, வரிசை, மேலிருந்து கீழ் எனக் கணக்கிட்டுப் பிரித்து உரிய முறையில் மீண்டும் அடுக்கியிருந்ததைக் கண்ணால் பார்த்தேன். இப்போதும் தாராசுரம் மதில் சுவரில் எண்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காண முடியும்.
அதுபோல் அங்கோர் வாட் ஆலயம் 20, 30 ஆண்டுகள் கழித்து சீரமைப்புப் பணிகள் முடியும்போது புதுக் கோணத்தில் வடிவத்தில் இருக்கலாம். யார் கண்டது? மனித மூளையின் ஆற்றலுக்கு ஏது இணை?
– பொன். மகாலிங்கம்
சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com
-
இணையதளம் மூலம் ஒரு லட்சம் பேருக்கு யோகா…
வாழும் கலையின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முதன்முறையாக இணையதளத்தின் மூலம் தனித்துவம் வாய்ந்த சுதர்சனக் கிரியா கற்றுத் தரவிருக்கின்றார். இந்தியா முழுவதிலும் ஒரு லட்சம் பேருக்கு மேல், இந்த பயிற்சியினை மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகஸ்ட் 19 முதல் 21 வரை ஆனந்த அனுபவம் என்றழைக்கப்படும் இந்த பயிற்சி நடைபெறும்.
இந்தியா முழுவதிலும் – ஷில்லாங் முதல் மும்பை வரை, ஜம்மு முதல் சென்னை வரை 2000 க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து தோற்ற நிலையில் பங்கேற்பவர்கள் ஒன்று கூடுவர். பயிற்சி நடைபெறும் அனைத்து இணைய தள இடங்களிலும் வாழும் கலையின் ஆசிரியர் களும் தன்னார்வத் தொண்டர்களும் உடனிருப்பர்.
இணைய தளம் தவிர ஸ்ரீ ஸ்ரீயிடமிருந்து இந்த நுட்பத்தை நேரிடையாகப் பயில சுமார் 3000 பேர் பெங்களூருவிலுள்ள வாழும் கலையின் சர்வ தேச மையத்திற்கு பயணம் செய்ய இருக்கின்றனர்.
“அதிகப் பணி, குறைவான நேரம், ஆற்றலில்லாத நிலை ஆகியவையே மன அழுத்தம் ஏற்படக் காரணமாகின்றன” என்று கூறும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் “ஆனால் உங்கள் ஆற்றலை அதிகரித்துக் கொள்ள முடியும். பிராணாயாமம், தியானம் மற்றும் சுதர்சனக் கிரியா ஓர் நாளுக்குத் தேவையான ஆற்றலை அதிக அளவில் அளித்து, உங்களை மேலும் ஆக்க வளம் கொண்டவராக ஆக்குகிறது” என்கிறார்.
ஆனந்த அனுபவப் பயிற்சியின் மைல் கல்லாகிய சுதர்சனக் கிரியா என்பது ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் அறியப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த தாள லயத்துடன் அமைந்த மூச்சுப் பயிற்சியாகும். இந்த தனித்துவம் வாய்ந்த மூச்சுப் பயிற்சி நுட்பம் மன அழுத்தம், களைப்பு, கோபம், விரக்தி, சோர்வு போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் அனைத்தையும் அகற்றி சாந்தம், ஆற்றல் கவனம் மற்றும் இளைப்பாறல் ஆகியவற்றைத் தரும்.
கடந்த 35 ஆண்டுகளாக, இந்த நுட்பத்தால் பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்கள் – மருத்துவர்கள், இல்லதரசிகள், தீவிரவாதிகள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், போர் வீரர்கள், இளைஞர்கள், வர்த்தகர்கள், சட்ட வல்லுநர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர், யூதர்கள், சமணர்கள் – மூச்சு சக்தி மூலம் மனித இனத்தை இணைக்கின்றனர்.
சுவாச நுட்பம், யோகா, பிராணாயாமம் மற்றும் தியானம் தவிர, பயிற்சியில் வாழ்வில் எத்தகைய சிரமமான நிலையையும் கையாள நடைமுறைக் கருவிகளைக் கற்பிக்கும் ஞான அமர்வுகளும் இருக்கும். பயிற்சியின் இறுதியில் பங்கேற்பவர்கள் சாந்தம், ஸ்திரம் மற்றும் ஆனந்தமான மன நிலையையும், தன்னைச் சுற்றியிருப்பவர்களுடன் நல்ல தொடர்பினையும் அடைவர்.
பிரசித்தி பெற்ற AIIMS மற்றும் NIMHANS உட்பட பல மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடை பெற்றுள்ள ஆய்வின்படி, சீராகத் தினமும் செய்யப்படும் சுதர்சனக் கிரியாவின் மூலம் கீழ்கண்ட பயன்கள் கிடைக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது :
- இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராகும்
- படபடப்பு குறையும். மருத்துவம் மற்றும் உளப்பிணி சிகிச்சைகள் பயனளிக்காத நிலையிலுள்ள தனிநபர்கள் 71 % முதல் 73 % வரையில் குணமடைந்தும், 41 % பிணி குறைந்தும் உள்ளனர்.
- மன அழுத்தம் நிறைந்த நோயாளிகள் சுதர்சனக் கிரியா பயின்ற பின்னர் ஒரு மாதத்திற்குள்ளாகவே 68 % முதல் 73 % வரையில் நோய் குறைவினை உணர்ந்திருக்கின்றனர்.
- மூன்று மடங்கு அதிக ஆழ்ந்த ஓய்வு நிறைந்த உறக்க நிலைகளை பெற்றுள்ளனர்.
- 12 வாரங்களில் நோய் எதிர்ப்பு செல்கள் மேம்பாட்டினைப் பெற்றுள்ளனர்.
சென்னை நகரில் இப்பயிற்சி 57 இடங்களில் நடைபெறும். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இப்பயிற்சியினை எடுத்துக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு
8144265265 என்னும் எண்ணிற்கு அழைக்கவும். ஊடகத் தொடர்பான கேள்விகளுக்கு 9884017767 என்ற எண்ணில் ராஜலக்ஷ்மி சுவாமிநாதனை அழைக்கவும்.
-
திருப்பதியில் அறை முன்பதிவுக்கு முன்பணம் தேவையில்லை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆன்லைன் மூலம் தங்கும் அறைகள் முன்பதிவுக்கு இனி முன் பணம் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி அறை வாடகை மட்டும் செலுத்தினால் போதும். இந்த திட்டம் அகஸ்டு 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
திருமலைக்கு வரும் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தும்விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் 4வது யாத்ரீக சமுதாயக்கூடத்தில் பக்தர்கள் தங்கவும், தங்களது உடமைகளை அங்கேயே வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தங்கும் அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கும், நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கும், அறை முன்பதிவின்போது, செலுத்தப்படும் முன்பணம் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, அவர்கள் அறைவாடகை மட்டும் செலுத்தினால் போதும்.
-
வரலட்சுமி விரதம் வழிபடும் முறைகள்…..
ஆகஸ்டு 12 ஆம் தேதி வெள்ளி கிழமை சுமங்கலிகளுக்கான மிக முக்கியமான பண்டிகை வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஆவணி மாதம் கொண்டாடப்படும் இப்பண்டிகை இந்த ஆண்டு ஆடி மாதம் வருவதே ஒரு அபூர்வம் தான். இந்த விரதம் மாமியார் தொடங்கிக் கொடுக்க மருமகள் தொடர்ந்து செய்வது வழக்கம். பின்னர் அந்த மருமகள் எடுத்துக் கொடுக்க அடுத்து வரும் மருமகள் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும். அவரவர்களும் தனித்தனியே தாயார் திருமுகம் வைத்துக்கொள்ள வேண்டும்.
கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தைகள் பிறந்து குலம் தழைக்கவும், அஷ்ட ஐஸ்வரியம் கிடைக்கவும் வேண்டி சுமங்கலிப் பெண்கள் இப்பண்டிகையைக் கொண்டாடுவார்கள். அன்றைய தினம் பூஜையில் வைத்த மஞ்சள் சரடைப் பூஜைக்காக இல்லம் வரும் அனைத்துப் பெண்களும் கட்டிக் கொள்வார்கள்.
இந்த விரதம் பிறந்த கதை என்ன…. மகத ராஜ்ஜியத்தில், குணதினபுரம் என்ற ஒரு நகரம் இருந்தது. அங்கு சாருமதி என்கிற பெண்ணும் அவளது கணவனும் வசித்துவந்தனர். அவள் தன் குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவள்.சிறந்த பக்தி உடைய அவளின் கனவில் வந்த லட்சுமி, தன்னை வரலட்சுமியாக வழிப்பட்டால் அவளுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்று கூறினாள். தாயாரே எடுத்துக் கொடுத்ததாக எண்ணிய சாருமதி அதன் பிறகு வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி அம்மனை வழிபட்டாள். வரலட்சுமியை வழிபட்டு அவளின் வாழ்வின் தரம் உயர்வதைக் கண்ட பிற பெண்களும், சாருமதியிடம் தங்களுக்கும் இப்பூஜையை எடுத்துத் தருமாறு கூறி, அதன் பின்னர் வரலட்சுமி விரதத்தை அவர்களும் கடைப்பிடித்தனர்.
வரலட்சுமி விரதத்தன்று வரலட்சுமி தாயாரை மனதால் வேண்டினால், ஆதி லட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, வித்யா லட்சுமி, வீர லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி ஆகிய அஷ்டலட்சுமிகளையும் வேண்டிய பலன் ஒரு சேரக் கிடைக்கும் என்பது ஐதீகம். இவர்கள் அனைவரும் வரலட்சுமி விரதத்தன்று ஒரே தாயாரான வரலட்சுமியில் ஐக்கியம் ஆவதாக நம்பிக்கை.
வரலட்சுமி விரதம் வழிபடும் முறை….. அழகிய தாம்பாளத்தின் மீது தலை வாழை இலை இட்டு அதன் மீது அரிசி பரப்ப வேண்டும். பின்னர் இதன் மீது கலசம் வைக்க வேண்டும். இக்கலசத்தினுள் கால் பங்கு அரிசியை நிரப்பி, காதோலைக் கருக மணி, கரும் புள்ளி இல்லாத மஞ்சள் நிற எலுமிச்சம் பழம், தங்கக் காசு, வெள்ளிக் காசு, சிறிய கண்ணாடி, மரச் சீப்பு, இரண்டு வெற்றிலைப் பாக்கு ஆகியவற்றை இட்டு நிரப்ப வேண்டும். கலசத்தின் அகன்ற வாய் பகுதியின் மீது தேங்காயின் குடுமிப் பகுதி மேல்புறம் இருக்குமாறு வைக்க வேண்டும்.
அத்தேங்காய்க்கு மஞ்சள் குங்குமம் இட வேண்டும். பின்னர் ஆண்டுதோறும் தாயார் முகமாக வைக்கப்படும் திருமுகத்தை, தேங்காயின் குடுமிப் பகுதி மறையுமாறு செருக வேண்டும். தாயாருக்குப் பொட்டு இட்டு, அதில் ஜொலிக்கும் கற்களைப் பதிக்கலாம். பின் பகுதியில் பூச்சரமும், பூ ஜடையும் வைத்தால் அழகாக இருக்கும். தாயாருக்கும், கலசத்திற்குமாக அழகிய ஆடை அணிய வேண்டும். அழகிய முத்து மாலை உள்ளிட்ட நகைகளைத் தாயாருக்கு அணிவிக்க வேண்டும்.
முதல் நாளான வியாழன் இரவே தாயார் தயாராகிவிடுவார். ஒரு வருடமாக பூஜை அறையில் பெட்டிக்குள் இந்தத் தாயார், கண் திறக்கும் நேரத்தில் உணவு படைக்க வேண்டும். முன்னதாக வெண்பொங்கல் தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். வெற்றிலை பாக்கு, பழம் ஆகியவற்றைத் தட்டில் வைத்து, தீபாராதனை, ஆரத்தி போன்றவற்றைத் தயார் நிலையில் வைத்துவிட வேண்டும். புதிய கண் மை எடுத்துத் தாயார் திருமுக மண்டலத்தில், கண்களுக்கு இட வேண்டும். இதனையே தாயார் கண் திறத்தல் என்று சொல்வார்கள். பின்னர் தாயாருக்குப் படைத்த பிரசாதத்தையே நோன்பு நோற்கும் பெண் சாப்பிட வேண்டும்.
மறுநாள் விடியற்காலை இந்தத் தாயாரை இல்லத்திற்குள் வருமாறு அழைக்க வேண்டும். பக்கத்திற்கு ஒருவராக இரு சுமங்கலிப் பெண்கள் அலங்கரித்து வைத்துள்ள தாயாரைத் தாம்பாளத்துடன் தூக்கி வந்து முன்னதாகத் தயாரிக்கப்பட்ட சிறிய மண்டபத்தினுள் வைக்க வேண்டும். அந்த மண்டபத்தின் இரு புறமும் வாழைக்கன்றுகளைக் கட்டி, மாவிலை, தென்னை இலை தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். மண்டபத்துக்கும் மஞ்சள், குங்குமம் இட வேண்டும்.
முதலில் விநாயகர் பூஜையைச் செய்துவிட்டு பிறகு மகாலட்சுமி அஷ்டோத்திரம் பாடி வழிபட வேண்டும். நோன்புச் சரடுக்குத் தனியாகப் பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்தபின்பு தாயாருக்குப் பருப்பு பாயாசம், தேங்காய், உளுந்துக் கொழுக்கட்டை, பால், தயிர், வெற்றிலைப் பாக்கு, பழம் இவை அனைத்தையும் நைவேத்தியம் செய்ய வேண்டும். பிறகு பெரியோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின்னர் நோன்புச் சரடை வலது கையில் கட்டிக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்தும் பூஜை, ஸ்ரீவரலட்சுமி பூஜை. தாயாரை வழிபட்டு தனம் பெற்று வாழ்வோம். -
வரம் தரும் வயலூர் முருகன்
குன்றுதோறும் குமரன் இருப்பது வழக்கம். அப்படி ஒரு குன்றுமீதுதான் ஏற இருக்கிறோம் என்ற எதிர்பார்ப்போடு எங்களின் வயலூர் பயணம் இருந்தது. திருச்சியில் இருந்து மேற்கே 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது வயலூர். அந்த ஊருக்கு இட்டுச் செல்லும் பாதையும் வயல்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. நெல்லும், வாழையும், தென்னையுமாக செழித்து நிற்கிறது ஊர்.. நாங்கள் காரில் சென்று கொண்டிருந்தோம். போகப் போக…. பசுமை கண்களை குளிர்வித்துக்கொண்டே வந்தது. ரசித்துக்கொண்டே சென்றபோது …என்ன இன்னும் எந்த குன்றையும் காணவில்லையே தப்பான வழியில் போகிறோமோ என்று சந்தேகம் வேறு.. இதோ வந்தேவிட்டது வயலூர்..
வழக்கமாக குன்றின்மேல் குடியிருக்கும் முருகன் இங்கு குன்றில்லாத சமவெளியில் குடியிருக்கிறான். அழகான ஆலயம்.
இனி கோயிலை பற்றி…

இந்த திருத்தலத்தின்பெருமை ஞானம் விளையும் திருத்தலம் என்பது. ஆ என்ற காமதேனுவும், சோமன் வழிபட்ட சோமரசம்பேட்டையும் சூழ இருக்கிறது வயலூர். இங்கு கந்தன் தனது வேலால் குத்தி ஒரு திருக்குளத்தை உருவாக்கி தந்தையாகிய சிவபெருமானை வழிபட்டதாக கூறுகிறது புராணம். அக்னித்தீர்த்தம் என்று அழைக்கப்படும் அந்த தீர்த்தம் அக்னித்தேவனும் வழிபட்டதால் ஆலயத்தின் சிவபெருமான் அக்னீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தேவி முன்னிலை நாயகி என்று அழைக்கப்படுகிறார்.
உறையூரை தலைநகராக கொண்டு சோழர்கள் ஆட்சி செய்த காலம் அது.. வேட்டைக்குச்சென்ற சோழ மன்னன் தாகத்தோடு ஓரிடத்தில் அமர, அங்கு 3 கிளைகளுடன் காட்சி தந்ததாம் ஒரு கரும்பு. அதனை ஒடித்தபோது ஒரு கரும்பில் இருந்து ரத்தம் கொட்ட பதறிப்போனான் மன்னன். உடனடியாக அந்த இடத்தைத் தோண்ட அங்கு லிங்க ரூபத்தில் எழுந்தருளினார் சிவபெருமான். அவருக்கு கோயில் கட்ட நினைத்த மன்னனின் ஆசை ஈடேறவில்லை. அதன் பின்னர் சிறு கோயிலாக எழுந்தது இந்த ஆலயம்..
‘அருளில் சீர் பொய்யாத கணபதி
திருவக் கீசன் வாழும் வயலியில்
அழகு கோயில் மீதில் மருவிய பெருமானே ’
இந்த பாடலின் அழகும் அருணகிரி நாதரின் வாக்கும் இனிமையே இங்குள்ள முருகனைப்போல. வயலூரின் சிறப்பே, அருணகிரிநாதருக்கு முருகன் மயில் மீது அமர்ந்து காட்சி கொடுத்து திருப்புகழ் பாட வைத்ததுதான். சும்மா இரு. சொல்லற என்று சொல்லி, வா என் புகழ் பாடு என அருள் சுரந்து அருணகிரிநாதருக்கு முன்மொழிந்து தந்த இடம் வயலூர் என்கிறது இந்த கோயிலின் தல வரலாறு. அவர் இங்கு நீண்டகாலம் தங்கியிருந்து முருகப்பெருமானை வழிபட்டு, பாடி பரவசப்பட்ட இடம் இந்த வயலூர்.
அருணகிரிநாதர் மட்டுமல்ல, ஞானவரோதயர் என்ற அடியாருக்கு அருள் புரிந்த திருத்தலம். இந்த ஞானவரோதயர், கந்தபுராணத்தில் 7 ஆவது காண்டமாகிய உபதேச காண்டம் பாடியவர். விராலிமலைத் தலப்புராணமும் இவர் பாடியிருக்கிறார்.
தாய், தந்தையை வழிபட்டு அனைவருக்கும் வழிகாட்டுகிறான் இந்த வயலூர் முருகன். அதனால் கோயிலுக்குள் சென்றதும் நாம் எதிர்கொள்வது சிவ சொரூபமே.
.பிள்ளையாரப்பாவுக்கு இல்லாத முதல் வணக்கமா? இந்த திருத்தலத்தில் உள்ள கணபதி பொய்யாக்கணபதியாக பெயர் கொண்டுள்ளார். இவரிடம் வேண்டினால் பொய்க்காது என்பது வாக்கு. இவர் சந்நிதிக்கு அருகே அருணகிரி நாதருக்கு பீடம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
எதிர்புறம் கல்லால மரத்தடியில் தட்சிணாமூர்த்தியின் தவக்கோலக்காட்சி. பொய்யாக்கணபதி சந்நிதியை அடுத்து முத்துகுமார சாமி. மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள முருகனைக்காண கண் கோடி போதுமோ? இந்த ஜென்மம்தான் தீருமோ?
அடுத்து முத்துகுமார சுவாமியை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சகிதமாக காட்சியளிக்கிறார். வடபுற மூலையில் மகாலட்சுமி அருள்பாலிக்கிறார். வயலூர் முருகனை தரிசிப்பவருக்கு எனது அருள் கண்டிப்பாக உண்டு என்பதுபோல காட்சி தருகிறாள் மகாலட்சுமி..
கோயிலின் வெளியே கல்லால மரத்தடியில் வேல் வடிவில் உள்ள தோற்றத்தை இடும்பன் கோயில் என்றும், கிராம தேவதைக்கோவில் என்றும் சொல்கிறார்கள். முருகன் கை வேலின் வடிவமாகிய தேரடியான் கோயிலும் வந்தோர்க்கு வளம் தரும் அம்சமாக காட்சியளிக்கிறது.
வயலூர் முருகனை வழிபட்டு இறவாப்புகழை பெற்றார் அருணகிரிநாதர் என்ற ஒன்று போதும் இந்த தலத்தின் பெருமைக்கு சான்று. பழனி, திருச்செந்தூருக்கு வேண்டுதல் வைத்தவர்கள் இந்த கோயிலில் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தலாம். ஆனால், வயலூரானுக்கு வைத்த வேண்டுதலை வேறு கோயிலில் செலுத்த முடியாது அசலோடு வசூலித்துவிடுவான் இந்த வடிவேலன் என்பது இந்த ஊர் மக்களின் சொல்லாக இருக்கிறது.
தத்து திருப்புதல் என்ற நேர்த்திக்கடன் இந்த கோயிலின் வழக்கமாக இருக்கிறது. தோஷம் உள்ள குழந்தைகளை குறிப்பிட்ட காலம் வரை கோயிலுக்கு தத்து கொடுத்தலும், உரிய காலம் முடிந்ததும் தத்து திருப்புதலும் செய்கிறார்கள்.
திருமண பரிகார தலமாகவும் வயலூர் இருக்கிறது. வரம் தருவான் வயலூரான் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாகவும், பெரும்பாலான நேரங்களில் நிஜமாகவும் இருக்கிறது. இந்த கோயிலில் வைகாசி விசாகம், கார்த்திகை திருவிழா, சஷ்டி விழா என வழக்கமான விழாக்களும் வெகு விமரிசையாக நடக்கின்றன.
இந்த கோயிலுக்கும், கிருபானந்த வாரியருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. இந்த கோயில் கோபுரம் அமைக்க வாரியார் நிதி திரட்ட பெரும் முயற்சி செய்தார். இதனால் கோயில் அறக்கட்டளைக்குழுவில் கிருபானந்தவாரியார் இருந்தார்.
கடன்தொல்லையோ, பிள்ளைகளுக்கான வேண்டுதல்களோ, திருமண பரிகாரங்களோ எதுவானாலும் வந்தவர்களின் மனம் குளிர வைக்கிறான் இந்த வயலூர் முருகன். வைத்த கண் வாங்காமல் பார்க்க வைக்கும் இந்த வடிவேலனை, வயலூர் நாயகனை கண்குளிர பார்த்துவிட்டு வந்தவர்களின் மனங்களையும் இவர் ஆட்சிகொண்டு விடுகிறான். அந்த அனுபவம் பெற்றது பெரும் பேறு.