Category: old…

old…

  • ஏழுமலையான் கோயிலில் கூடுதல் உண்டியல்

    திருமலையில் ஏழுமலையான் கோயிலில் உண்டியலில் காணிக்கை செலுத்த பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால், கோயில் வளாகத்தில் கூடுதல் உண்டியல் அமைக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
    செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் இதனை தெரிவித்தார். பல கோயில்களுக்கு இந்து தர்ம பிரச்சாரம் சார்பில் மராமத்து பணிகளை செய்ய ஆலோசனை நடத்தப்படும் என்றும், திருமலையில் உள்ள தேவஸ்தான அஸ்வினி மருத்துவ மனையில் வசதிகள் அதிகரிக்கப் படும் எனவும் கூறினார். ஸ்ரீவாரி மெட்டு பகுதியில் முதியோர், குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்க உத்தர விடப்பட்டுள்ளதாகவும், பக்தர்களின் ஆலோசனைப்படி தரிசனம் முடிந்து வெளியே வரும் பக்தர்களுக்கு கூடுதலாக சடாரி, தீர்த்த மையம் அமைக்க ஆலோசனை நடத்தப்படும்என்றும் கூறினார். திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உண்டியலில் காணிக்கை செலுத்த கூட்ட நெரிசல் ஏற்படுவதால் தேவைப்படும் இடங்களில் கூடுதல் உண்டியல்கள் அமைக்கப்படும் என்றும் சாம்பசிவ ராவ் கூறினார்.

  • விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிடி கொழுக்கட்டை….

    பலரும் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு பல வகையான கொழுக்கட்டைகளை செய்து படைக்க விரும்புவார்கள். கொழுக்கட்டையில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் பிடி கொழுக்கட்டை. நீங்கள் அப்படி விரும்புபவர்களானால், இந்த வருடம் பிடி கொழுக்கட்டையையும் செய்யுங்கள்.
    பிடி கொழுக்கட்டை செய்ய எளிய செய்முறை இதோ….

    தேவையான பொருட்கள்:
    வெல்லம் – 1/4 கப்
    அரிசி மாவு – 1/2 கப்
    தண்ணீர் – ஒன்றேகால் கப்
    துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
    எண்ணெய் – சிறிது

    செய்முறை:
    முதலில் வெல்லத்தை தட்டி நீரில் போட்டு அடுப்பில் வைத்து, கரைய வைக்க வேண்டும். வெல்லம் கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டி, ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி, மீண்டும் அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.
    பாகு நன்கு கொதிக்கும் போது, அதில் ஏலக்காய் பொடி தூவி மீண்டும் கொதிக்க விடவும்.
    பின்பு தீயை குறைத்து, அதில் அரிசி மாவை மெதுவாக தூவிக் கொண்டே, கட்டிகள் சேராதவாறு தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
    ஒரு கட்டத்தில் மாவானது பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் வேளையில் அடுப்பை அனைத்து, குளிர வைக்க வேண்டும்.
    மாவானது வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது, கைகளில் எண்ணெயைத் தடவிக் கொண்டு, அந்த மாவை சிறிது எடுத்து, கொழுக்கட்டை போன்று பிடித்து, இட்லி தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
    பின்னர் அந்த இட்லி தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், பிடி கொழுக்கட்டை ரெடி.

  • விநாயகர் சதுர்த்தியன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள்….

    விநாயகர் அகவல்….

    சீதக் களபச் செந்தா மரைப்பூம்
    பாதச் சிலம்பு பலவிசை பாடப்
    பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
    வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
    பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
    வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
    அஞ்சு கரமும் அங்குச பாசமும்
    நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
    நான்ற வாயும் நாலிரு புயமும்
    மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
    இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
    திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
    சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
    அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
    முப்பழ நுகரும் மூஷிக வாகன!
    இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
    தாயா யெனக்குத் தானெழுந் தருளி
    மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
    திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
    பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
    குருவடி வாகிக் குவலயந் தன்னில்
    திருவடி வைத்துத் திறமிது பொருளென
    வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
    கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
    உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
    தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
    ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
    இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
    கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
    இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
    தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
    மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
    ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
    ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
    ஆறா தாரத்(து) அங்குச நிலையும்
    பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
    இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
    கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
    மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
    நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
    குண்டலி யதனிற் கூடிய அசபை
    விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
    மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
    காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
    அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
    குமுத சகாயன் குணத்தையும் கூறி
    இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
    உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
    சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
    எண் முகமாக இனிதெனக் கருளிப்
    புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
    தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
    கருத்தினில் கபால வாயில் காட்டி
    இருத்தி முத்தி யினிதெனக் கருளி
    என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து
    முன்னை வினையின் முதலைக் களைந்து
    வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
    தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
    இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
    அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்
    எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
    அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
    சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
    சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
    அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
    கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
    வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
    கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
    அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
    நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
    தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
    வித்தக விநாயக விரைகழல் சரணே!

  • திருப்பதி கோயிலை ஹெலிகாப்டரில் சுற்றிபார்க்க ரெடியா?

    திருப்பதி கோயிலுக்கு ஹெலிகாப்டரில் ஆன்மிகச் சுற்றுலா மேற்கொள்வதற்கான வெள்ளோட்டம் இரண்டு நாள்களில் நடக்கவுள்ளது.
    இந்த புதிய சுற்றுலாச் சேவை மூலம் ஸ்ரீசைலம், திருமலை கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    விஜயவாடாவிலிருந்து காலை 8 மணிக்கு ஹெலிகாப்டர் புறப்பட்டு நேராக ஸ்ரீசைலத்தை சென்றடைகிறது. அங்கிருந்து கார் மூலம் பக்தர்கள், கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு அபிஷேகம், குங்கும அர்ச்சனை செய்வித்து, விஐபி தரிசனம் வழங்கப்படுகிறது.

    அதன்பின் இழுவை ரயில் மூலம், பாதாள கங்கைக்கு அழைத்துச் சென்று படகு சவாரி செய்ய வைக்கின்றனர். பின்னர் மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு 1.30 மணிக்கு ஹெலிகாப்டர் திருப்பதியை அடைகிறது.

    திருப்பதியிலிருந்து கார் மூலம் திருச்சானூர், சீனிவாசமங்காபுரம், ஸ்ரீகாளஹஸ்தி கோயில்களில் தரிசனம் செய்ய வைக்கின்றனர். இதையடுத்து, திருமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இரவு அங்கு தங்கும் வசதி அளிக்கப்படுகிறது.

    மறுநாள் காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க வைக்கின்றனர். பின்னர் அங்கிருந்து காலை 7.30 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு 8.30 மணிக்கு மீண்டும் விஜயவாடாவை சென்றடைகிறது.

    இதில், விஜயவாடா- ஸ்ரீசைலம் – திருமலை, ஹைதராபாத்-ஸ்ரீசைலம்-திருமலை என இரண்டு சுற்றுலாத் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. ஒரு ஹெலிகாப்டரில் 6 பேர் வசதியாக அமர்ந்து பயணம் செய்யலாம். ஒரு நபருக்கு ரூ. 15,000 கட்டணமாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் பயணிகள் ஓய்வெடுக்கும் சமயத்தில் ஸ்ரீசைலம், திருமலை அருகில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களை கண்டுகளிக்கவும் சுற்றுலாத் துறை வாய்ப்பு அளிக்கிறது. இதற்கு, ஒரு நபருக்கு ரூ. 2,500 கூடுதலாக கட்டணம் வசூலிக்க உள்ளனர். இதற்கான வெள்ளோட்டம் இன்னும் இரு நாள்களில் நடைபெற உள்ளதாக ஆந்திர சுற்றுலாத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  • ஓணம் பண்டிகைக்கு சபரிமலை நடை திறப்பு எப்போது?

    ஓணம் பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை செப்டம்பர் 13-ந்தேதி திறக்கப்படுகிறது
    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின்போதும் முக்கிய பண்டிகைகளின் போதும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம்.
    அதேபோல மகரவிளக்கு பூஜை, மண்டல பூஜையின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.
    இதனிடையே ஆவணி மாத பூஜைக்காக சமீபத்தில் திறக்கப்பட்ட ஐயப்பன் கோவில் நடை கடந்த வாரம் அடைக்கப்பட்டது.
    இந்த நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வருகிற செப்டம்பர் 13-ந்தேதி மாலை சபரிமலை கோவில் நடைதிறக்கப்படுகிறது. அன்று மாலை சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை மட்டும் காட்டப்படும். வேறு பூஜைகள் ஏதும் நடைபெறாது.
    மறுநாள் முதல் சுவாமி ஐயப்பனுக்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும். ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவசம்போர்டு செய்து வருகிறது.

  • வேளாங்கண்ணி–திருப்பதி இடையே சிறப்பு ரயில்

    வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
    வேளாங்கண்ணியில் இருந்து 6–ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் வேளாங்கண்ணி–திருப்பதி சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு திருப்பதி சென்றடையும். இந்த ரெயில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், அரக்கோணம், திருத்தணி, ரேணிகுண்டா ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அதுபோல, வேளாங்கண்ணியில் இருந்து 8–ந் தேதி மாலை 6.45 மணிக்கு புறப்படும் வேளாங்கண்ணி–செகந்திராபாத் சிறப்பு ரெயில் மறுநாள் இரவு 8 மணிக்கு செகந்திராபாத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கி விட்டதாகவும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

  • விநாயகர் சிலைகள் தயார்

    விநாயகர் சதுர்த்தியையொட்டி, பிரதிஷ்டை செய்ய, விநாயகர் சிலைகள் தயாராக உள்ளன.
    வருகிற 5–ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் விற்பனை அதிகரித்துள்ளது.
    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. திருப்பத்தூர் தென்மாப்பட்டு பகுதியில் ஆர்டரின் பேரில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி முடிவடைந்து அவற்றை வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    ஆர்டரின் பேரில் சிறிய மற்றும் பெரிய சிலைகள் தயார் செய்யப்பட்டு தற்போது, அந்த சிலைகள் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறைந்தது 3 அடி முதல் அதிக பட்சமாக 12 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

  • திருச்செந்தூரில் சுவாமி பச்சை சாத்தி வீதி உலா…

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா 8ஆம் திருவிழாவான பச்சை சாத்தி வீதி உலா நடைபெற்றது.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியருள்கின்றனர்.
    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, கடந்த வெள்ளிக்கிழமை ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோயிலில் குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது. ஆறாம் திருவிழாவான சனிக்கிழமை காலையில் கோ ரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீதி உலா வந்தது.
    ஞாயிற்றுக்கிழமை ஏழாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஆறுமுகப்பெருமான் வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தந்து, பிள்ளையன்கட்டளை மண்டபம் சேர்ந்தார். அங்கு வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்னர் மாலை சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அதனை தொடர்ந்து ஆகஸ்டு 29 ஆம் தேதி காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் சுவாமி வெள்ளை சாத்தி எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோயில் சென்றார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பகல் 12.05 மணிக்கு மேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் சேர்ந்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

  • ஔவையார் ஒரு சித்தரா?

    ஆத்திச்சூடி தெரியும்,  அதைப் பாடிய ஔவைப் பாட்டியையும் தெரியும். ஆனால் அவர் ஒரு சித்தர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

    நமது தமிழ் மூதாட்டி ஔவை ஒரு பெண் சித்தர்தான் என்கிறார்கள், சித்தர்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்  அன்பர்கள். அதற்கு அவரின் பாடல்களையே ஆதாரமாக காட்டுகிறார்கள் அவர்கள். ஔவையார் பெண் சித்தர் என்பதற்கு அவரது ஔவைக் குறள், வினாயகர் அகவல் போன்றவைகளே சாட்சி என்கிறார்கள்.

    நரம்பெனும் நாடி யிடைமினுக் கெல்லாம்

    உரம்பெறும் நாடியொன் றுண்டு

    உந்தி முதலாகி ஓங்காரத் துட்பொருளாய்

    நின்றது நாடி நிலை

    உந்தியு னுள்ளே ஒருங்கச் சுடர்பாய்ச்சில்

    அந்தி யழலுருவ மாம்

    நாபி யகத்தே நலனுற நோக்கிடில்

    சாவது மில்லை யுடம்பு

    ஆவிபாழ் போகா தடக்கி யிருந்தபின்

    ஓவிய மாகு முடம்பு

    மயிர்க்கால் வழியெல்லாம் மாய்கின்ற வாயு

    உயிர்ப்பின்றி யுள்ளே பதி

    வாசலீ ரைந்து மயங்கிய வாயுவை

    ஈசன்றன் வாசலி லேற்று.

                                   – ஔவையார்

     

    இந்த பாடலில் நாடிகளைப் பற்றி நுணுக்கமாகவும், விரிவாகவும் பேசியிருக்கிறார் ஔவைப் பாட்டி.

    உடலிலுள்ள 72000 நாடிகளில் முதன்மையான நாடிகள் பத்து. இவற்றுள் முதன்மையான நாடியானது, உந்தி வழியாக சிரசு வரை கீழும் மேலுமாகப் பதிந்திருக்கிறது. நாடிகளின் இயக்கங்களைத் தெரிந்து கொண்டு, அதன் வழியாக செறிவாகி, ஒடுங்கி, நீடுகின்ற ஒளியைக் காண்பதே அறிவின் சிறப்பாகும் என்கிறார் ஔவையார். அவ்வாறு சிவத்தை அறிந்து, உணர்ந்து, அடங்கியிருப்பவர் நாடிகளில் எல்லாம் சிவம் நிறைந்திருக்கும்.

    வாயுவின் வழக்கத்தை அறிந்து, செறிந்து, அடக்கினால் ஆயுள் பெருக்கம் உண்டாகும். வெளியே போகின்ற வாயுவை உள்ளே அடக்கப் பழகிக் கொண்டால் தேகம் சிவத்துக்கு ஒப்பாகும். இதில் விசேஷம் என்னவென்றால், வழக்கமான சித்தர் பாடல்களைப் போல மறைபொருளாகச் சொல்லப்படாமல், எல்லோரும் தெளிவாகப் புரிந்து கொள்ளும்படி எளிமையாகவே சொல்லிவிட்டார் ஔவையார்.

    மேலும் ஐந்து புலன்களையும் ஒடுக்கி, மெய்யறிவான சிவத்தோடு ஒன்றி இருந்தால் சரீரம் அழியாது என்றும், வாயுவை வசப்படுத்தி, சுவாசத்தை உள்ளடக்கப் பழகியவர்களுக்கு எளிதில் சிவத்தியானம் வாய்க்கும் என்றும் சிவத்தியானம், குண்டலினி யோகம், வாசியோகம் பற்றி ஔவை எளிமையாக விளக்குகிறார்.

    அட்டமகா சித்திகளை ஒரு வருடத்தில் அடைந்துவிடலாம் என்பது ஔவையின் கருத்து. ஆனால் சித்த சமாதி நிலைக்கு, சிவானந்த சிவயோக சித்திக்கு பல வருடங்கள் முயன்று உழைக்க வேண்டும் என்கிறார். வினாயகர் அகவலில் குண்டலினி யோகம் பற்றி இதுபோல் பல எளிமையான தெளிவான விளக்கங்களை அளித்திருக்கிறார் அருந்தமிழ் மூதாட்டி ஔவை.

  • கிருஷ்ண ஜெயந்திக்கு பிரத்யேகமான பலகாரங்கள்….

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தில், பல விதமான பலகாரங்களை நமது வீட்டில் செய்து வழிப்படுவது வழக்கம். அவ்வகையில் கிருஷ்ண ஜெயந்திக்கு பிரத்யேகமாக செய்யப்படும் சில பலகாரங்களை எளிமையாக செய்து சுவைத்து மகிழுங்கள். 

    ரவா லட்டு….

    கிருஷ்ணருக்கு பிடித்தது மட்டுமல்ல, நமது பட்ஜெட்டிற்கு ஏற்ற பலகாரங்களில் ரவா லட்டு முக்கியமானது. செலவும் குறைவாகவும், மிகவும் எளிய முறையிலும் வீட்டில் தயாரிக்கலாம்.

    தேவையான பொருட்கள்…

    ரவை – ஒரு கப்

    நெய் – 4 டீ ஸ்பூன்

    சர்க்கரை – அரை கப்

    தேங்காய் துருவல் – அரை கப்

    ஏலக்காய் பொடி செய்தது – கால் ஸ்பூன்

    நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி – 10

    சூடான பசும்பால் – அரை கப்

    செய்முறை…

    அகலமான வாணலியில் நெய்யை ஊற்றி அதில் முந்திரி திராட்சையை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே நெய்யில் ரவையை போட்டு நன்றாக வறுத்து அகலமான பாத்திரத்தில் கொட்டவும். ரவையில் வறுத்த முந்திரி திராட்சை, ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல், பொடித்த சர்க்கரை சேர்த்து கலக்கவும். இதில் பசும்பாலை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும். உருண்டை பிடிக்கும் அளவுக்கு பால் ஊற்றினால் போதும். பின்னர் நமக்கு தேவையான அளவில் உருண்டை பிடித்து வைக்கலாம். சாப்பிட சுவையாக இருக்கும். செய்வதற்கும் எளிதான இனிப்பு இது.

    அக்கார அடிசல்….

    நெய், வெல்லம் சேர்த்து செய்த அக்கார அடிசல் எனப்படும் இனிப்பு வகை பண்டிகை நாட்களில் பிரசித்தம். நெய் சொட்டச் சொட்ட செய்யப்படும் இந்த இனிப்பை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

     

    தேவையான பொருட்கள்…

    பாசுமதி அரிசி – 1 கப்

    பாசிப்பருப்பு – ½ கப்

    பால் – 750 மிலி

    வெல்லம் – 2 கப் முந்திரி,

    திராட்சை – கால் கப்

    ஏலக்காய்தூள் – 1 டீஸ்பூன்

    நெய் – 50 கிராம்

    பச்சைக் கற்பூரம் – சிறிதளவு 

    செய்முறை…

    வெல்லத்தை தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டவும். பின்னர் சுத்தமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். அரிசி, பருப்பை இரண்டு முறை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். பாலை 1 கப் தண்ணீர் விட்டு காய்ச்சி பொங்கிவரும் போது அரிசியையும், பருப்பையும் போட்டு அடுப்பை சிம்மில் எரியவிடவும். நன்கு வெந்தபின் வெல்லப்பாகை ஊற்றி அதனுடன் கொஞ்சம் நெய்யை விட்டு அடி பிடிக்காமல் கிளறவும். லேசாக கெட்டியான பின் அதில் வறுத்த முந்திரி திராட்சையை சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறவும். கடைசியில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய் பொடி தூவி நன்கு கிளறி இறக்கவும். அக்கார அடிசல் சுவையும், வாசனையும் சூப்பராக இருக்கும். சூடாக சாப்பிடலாம்.

    வெல்லம் பால் கொழுக்கட்டை

    வெல்லம், பால் சேர்த்து செய்த கொழுக்கட்டை சுவையோடு சத்தானதாகவும் இருக்கும்.

    தேவையான பொருட்கள்…

    இட்லி அரிசி – 1 கப்

    எண்ணெய் – 3 டீ ஸ்பூன்

    காய்ச்சிய பால் – 1 கப்

    வெல்லம் – 1 கப்

    ஏலக்காய் பொடி – 1/2 டீ ஸ்பூன்

    சுக்குப் பொடி – 1/2 டீ ஸ்பூன்

    அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்

    தேங்காய்த் துருவல் – ஒரு கப் வெல்லப்பாகு

    செய்முறை…

     

     வெல்லத்தை தட்டி பொடியாக்கவும். பொடியாக்கிய வெல்லத்தை ஒரு கப் எடுத்து சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். வெல்லம் தண்ணீரில் முழுமையாகக் கரைந்த பின் வடிகட்டியால் வெல்லக் கரைசலை வடிகட்டவும். பாலைக் காய்ச்சி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். கொழுக்கட்டை செய்முறை இட்லி அரிசி ஒரு கப் எடுத்து மூன்று மணி நேரத்திற்கு ஊற விடவும். ஊறிய அரிசியை நன்றாக இரண்டு, மூன்று முறை கழுவிக் கொள்ளவும். அரிசியை சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு நைஸான மாவாக அரைக்கவும். கொழுக்கட்டை செய்வதற்கான மாவு, இட்லிக்கான மாவைக் காட்டிலும் சற்று கெட்டியான மாவாக இருக்க வேண்டும். எனவே அதற்கு ஏற்றவாறு மாவு அரைக்கும் போது தண்ணீர் அதிகம் சேர்ந்துவிடாமல், குறைந்த அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி, அரைத்த மாவை அதில் சேர்த்து மிதமான தணலில் வைத்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். எண்ணெய் மாவின் எல்லாப் பகுதிலும் சீராகப் பரவும் படி, கரண்டி கொண்டு நன்றாகக் கலக்கி விட்டு வதக்கவும். வதக்கிய மாவை ஆறவிட்டு ஒரே அளவிலான வடிவத்தில் உருட்டிக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அதனுடன் ஏலக்காய், சுக்குப் பொடி சேர்க்கவும். அடுப்பின் தணலைக் குறைத்து, கொதிக்கும் தண்ணீரில் உருட்டி வைத்த மாவு உருண்டைகளைச் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக விடவும். கொழுக்கட்டைகள் நன்றாக வெந்து வரும் நிலையில் அதனுடன் காய்ச்சிய பாலையும், வெல்லக் கரைசலையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விடவும். அரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன் எடுத்து, சிறிதளவு தண்ணீர் விட்டுக் குழைத்து மாவுக் கரைசல் தயாரிக்கவும். இந்த மாவுக் கரைசலை கடைசியாக கொழுக்கட்டைப் பாலில் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். இது கொழுக்கட்டையின் பாலை திக்காக்க உதவுவதுடன், நல்ல சுவையையும் தரும். விருப்பமானால் சிறிது தேங்காய்த் துருவலை பால் கொழுக்கட்டையின் மீது தூவி பின் அடுப்பிலிருந்து இறக்கவும்.

    பால் கோவா ….

    பாலை வைத்து கொஞ்சம் வித்தியாசமாக செய்யப்படும் பால் கோவா

    தேவையான பொருட்கள்…

    மில்க் மெய்டு – 500 கி

    பால் – 150 மி.லி

    தயிர் – 125 கி

    நெய் – 100 கி

    செய்முறை…

     முதலில் மில்க் மெய்டையும், தயிரையும் ஒரு நான்-ஸ்டிக் பாத்திரத்தில் போட்டு கட்டி கட்டியாக இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும். பின் அதோடு பாலை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு அதனை ஒரு மரக்கரண்டியால் தொடர்ந்து கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த கலவையானது முதலில் தண்ணீர் போன்று தான் இருக்கும். அதனைக் கிண்ட கிண்ட சிறிது நேரம் கழித்து கெட்டியாகி விடும். அப்போது நெய்யில் பாதியை அத்துடன் ஊற்றி கிளரவும். அதை கிளர கிளர சிறிது நேரம் கழித்து பால் கோவா பதத்திற்கு வரும் முன் மீதமுள்ள நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கைவிடாமல் கிண்டவும். இப்படி கிளரும் போது பால் கோவா ஆனது நெய்யிலிருந்து பிரியும் நிலைக்கு வந்ததும், அதனை இறக்கி விடவும்.