புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். பூஜைக்குரியனவற்றை சேகரித்து வைத்து, ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை, எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.
ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து, மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்ட வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனை வருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.
இந்த புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும். எந்த விரதமானாலும் பகலில் தூங்கக் கூடாது. வெற்றிலை, பாக்கு போடக்கூடாது. மது, மாமிசத்தை விலக்கி பாவம் செய்வதை தவிர்க்க வேண்டும். அனைத்து உயிர்களிடத்தும் கருணை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
2017-09-13-15-54-29
-
2017-09-13-15-09-22
ஒரு முறை முனிவர்கள் எல்லோரும் கூடி கங்கை நதி கரையில் யாகம் ஒன்றை நடத்த திட்டமிட்டனர். அப்போது அங்கே நாரதர் தோன்றி, ‘மும்மூர்த்திகளில் யார் பெரியவர்?, யாருக்கு ‘அவிர்பாகம்’ கொடுப்பீர்கள்?’ என்று கேட்டார். இது முனிவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. அவர்கள் பிருகு முனிவரிடம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும்படி கேட்டுக் கொண்டனர். பிருகு முனிவர் மும்மூர்த்திகளை தேடிச் சென்றார். முதலில் பிரம்மனிடம் சென்றார். அங்கு பிரம்மா வேதத்தை ஓதி கொண்டிருந்தார். இன்னொரு வாயினால் நாராயண நாமத்தை உச்சரித்துக் கொண்டு இருந்தார். பிருகு முனிவரை கவனிக்கவில்லை. அடுத்ததாக கயிலாயத்துக்கு சிவனை காணச் சென்றார், பிருகு முனிவர். அங்கு சிவன் தியானத்தில் இருந்தார். பிருகு முனிவரை கவனிக்க முடியாமல் போய்விட்டது. ஆகவே முனிவர் வைகுண்டத்தை நோக்கி சென்றார். அங்கு மகாவிஷ்ணு திருமகளுடன் இருந்தார். பிருகு முனிவரை வரவேற்கவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த பிருகு முனிவர், விஷ்ணுவின் மார்பு மீது தன் காலால் உதைத்து விட்டார். விஷ்ணு கோபப்படவில்லை. மாறாக வாஞ்சையுடன் பிருகு முனிவரின் காலை வருடினார். பிருகு முனிவரின் செயலால் ஆத்திரமடைந்த திருமகள், திருமாலின் செய்கையால் மேலும் ஆவேசமடைந்து அவரை பிரிந்து வைகுண்டத்தை விட்டு பூலோகம் வந்து விட்டாள். அங்கு கொல்வறாழர் என்னும் ஊரில் தங்கினாள். திருமகளை விட்டு பிரிந்து இருக்க முடியாத மகா விஷ்ணுவும், வைகுண்டத்தை விட்டு கீழே இறங்கி சேஷசலத்தை தன் இருப்பிடமாக தேர்ந்தெடுத்துக் கொண்டார். இது விஷ்யோத்தர மஹாதமியத்தில் உள்ள கதையாகும்.
-
no-temple-statues
மூலஸ்தானத்தில், சுவாமி – அம்பாள் சிலைகள் இருப்பது தான் வழக்கம்; ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகிலுள்ள ஆவுடையார்கோவிலில் சிவலிங்கத்துக்கு பதிலாக குவளையும், அம்பாளுக்கு பதிலாக பாதமும் மட்டுமே உள்ளது.
பொதுவாக, சிவாலய மூலஸ்தானங்களில், ஆவுடையார் மீது லிங்கம் இருக்கும்; ஆனால், இங்கு, வெறும் ஆவுடையார் மட்டுமே உள்ளது. லிங்கம் இருக்க வேண்டிய இடத்தில் குவளை சாத்தப்பட்டுள்ளது. குவளை உடலாகவும், உள்ளிருக்கும் உருவமற்ற பகுதி ஆத்மாவாகவும் கருதப்படுவதால், சுவாமிக்கு, ‘ஆத்மநாதர்’ என பெயர் வந்தது.
இங்கு, சுவாமிக்கு தீபாராதனை செய்த தட்டை வெளியில் கொண்டு வருவதில்லை. ஆவுடையாருக்கு பின்புறம் வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் மூன்று தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. வெள்ளை நிறம் சூரியனாகவும், சிவப்பு – அக்னியாவும், பச்சை நிறம், சந்திரனாகவும் கருதப்படுகின்றன.
சுவாமிக்கு சிலை இல்லை என்பதால், அவரது மூன்று கண்களை குறிக்கும் விதமாக இந்த தீபங்களை ஏற்றுகின்றனர். இவற்றை வணங்கினாலே தீபாராதனை தட்டை வணங்கியதற்கு சமம் என்பதால், அதை வெளியில் கொண்டு வருவதில்லை.
அதேபோன்று, பொதுவாக, சிவன் கோவில்கள் கிழக்கு நோக்கியும், சில மேற்கு பார்த்தவாறும் இருக்கும். ஆனால், ஆவுடையார் கோவில் தெற்கு நோக்கி உள்ளது. சிவன், குருவாக இருந்து, தெற்கு நோக்கி அமர்ந்து உபதேசிக்கும் நிலையை, தட்சிணாமூர்த்தி என்பர்.
தட்சிணம்’ என்றால் தெற்கு; சிவன், மாணிக்கவாசகருக்கு குருவாக உபதேசம் செய்த தலம் என்பதால், தெற்கு நோக்கி அமைந்துள்ளது.சூரிய, சந்திர கிரகணங்களின் போது கோவில்களில் நடை சாத்தப்படுவது வழக்கம். ஆனால், இங்கு கிரகணநாளில், ஆறு கால பூஜை நடைபெறுகிறது. ஆதியந்தம் இல்லாத உருவமற்ற சிவனுக்கு, எக்காரணத்தாலும் பூஜை தடைபடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர்.
அம்பாளின் பெயர் யோகாம்பாள்!
இவளுக்கும் உருவம் இல்லை. சிவனை மீறி, தட்சனின் யாகத்திற்கு சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, இத்தலத்தில் யார் கண்ணுக்கும் தெரியாமல், உருவத்தை மறைத்து தவம் செய்தாள். எனவே, அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை. அவள் தவம் செய்த போது பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடைபெறுகிறது.
பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இப்பாதத்தை கண்ணாடியில் பிரதிபலிக்க செய்துள்ளனர். இவளது சன்னிதி அடைத்தே இருக்கும் என்பதால், சன்னிதி முன் உள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும்.
நைவேத்யம்!
ஆத்மநாதர் முன் உள்ள படைக்கல்லில், புழுங்கல் அரிசியில் சமைத்த சூடான சாதத்தை ஆவி பறக்க கொட்டுவர். அப்போது சன்னிதி கதவுகள் சாத்தப்பட்டு, சிறிதுநேரம் கழித்து திறக்கப்படும்.
சுவாமி உருவமற்றவர் என்பதால், உருவமில்லாத ஆவியுடன் நைவேத்யம் படைக்கப்படுகிறது. இது தவிர பாகற்காய் மற்றும் கீரையும் நைவேத்தியமாக படைக்கப்படும். வித்தியாசமான நடை முறைகள் கொண்ட இக்கோவிலை, வாழ்வில் ஒரு முறையாவது தரிசித்து விடுங்கள்!
-
siva
மற்ற எல்லா தெய்வங்களை விடவும்,சிவபெருமான் தோற்றத்தில் ரொம்பவே வேறுபாடு உடையவர். மற்ற தெய்வங்கள் அலங்கார ஜோடனையாக காட்சி தரும் போது,ஈசன் மட்டும் மரவுரியும்,ஜடாமுடியும், பாம்பு அணிகலனும்,உடல் முழுக்க சம்பலுமாக காட்சித் தருகிறார்.இதற்கு பின் உள்ள தாத்பரியங்களை பார்ப்போம்.
சிவ பெருமான் சந்திரனைச் சடைமுடியில் தரித்துக் கொண்டிருப்பது ஏன் ?
தக்கன் தன்னுடைய இருபத்தேழு பெண்களையும் சந்திரனுக்கு விவாகஞ்செய்து கொடுத்தபோது இவர்கள் அனைவரிடத்திலும், ஒரே மாதிரியான அன்பை தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் சந்திரனோ அவர்களில் மிகுந்த அழகுள்ள கார்த்திகை ,மற்றும் ரோகிணியிடம் மட்டும் மிகுந்த காதலுடன் இருந்தான். அவர்கள் அனைவரும் மனம் வருந்தித் தக்கனிடத்தில் சொல்லிக் கவலைப் பட்டுக் கொண்டார்கள். அவன் கோபங்கொண்டு சந்திரனுடைய சோடசகலைகள் அத்தனையும் அழிந்து போகும்படி சபித்தான்.
அந்த சாபத்தின்படி தினம் ஒவ்வொரு கலையாகப் பதினைந்து கலை குறையக் கண்ட சந்திரன் மிகுந்த துயரங்கொண்டு தேவேந்திரனிடத்தில் சொல்ல, இந்தச் சாபத்தை என்னால் நீக்க முடியாது, பிரமதேவனிடத்தில் போய்ச் கேள் என சொல்ல,சந்திரனும் பிரம்மனிடத்தில் முறையிட்டார். “நான் சொன்னாலும் தக்கன் இந்த சாபத்தை நிவர்த்தி செய்யமாட்டான். நீ வைகுந்தத்துக்குப் போய் விஷ்ணுவிடத்தில் ஆலோசனைக் கேள் என சொல்ல,சந்திரன் அப்படியே செய்யதான். விஷ்ணுவும் தன்னால் முடியாது, நீ ஸ்ரீ கைலாசகிரிக்குப் போய்ப் பரமசிவனிடத்தில் சரணடை என்று சொன்னார். இதைக் கேட்ட சந்திரன் ஸ்ரீகைலாயகிரிக்குப்போய், பரமசிவனைப் பணிந்து தொழுதான். பரமசிவனும் அவன் மேல் கருணை காட்டி, சந்திரனிடத்தில் இருந்த ஒரு கலையினையும் தமது முடியில் தரித்துக் கொண்டு இது உன்னிடத்திலிருந்தால் தக்கன் சாபம் இதனை அழிக்க முடியும். இனி என்னுடைய திருமுடியிலிருக்கிற கலையைத் தொடராது. இந்தக் கலையழியாமல் இருப்பதனால் உனக்கு முன்னிருந்ததுபோலநாளுக்கு நாள் ஒவ்வொரு கலையாக வளர்ந்து சோடசகலைகளும் நிறைவுபடும். அப்படி நிறைந்தாலும் வளர்ந்தது போல மறுபடி குறைவுபடுகிறதும் வளருவதுமாக இருக்கும் என வரம் அருளினார்.
பரமசிவன் தன்னுடைய ஒரு திருக்கரத்தில் மானை தரித்துக் கொண்டிருப்பது ஏன்?
பிட்சாடன மூர்த்தியாக தாருகாவனத்தில் எழுந்தருளின ஈசனைப் பார்த்து மோகித்த ரிஷி பத்தினிகள் தங்கள் கற்பு நிலை தவறினார்கள்.இதனால் தாருகாவனத்து ரிஷிகள் கோபமுடைந்து ,ஒருவேள்விசெய்து அதிலிருந்து வெளிவந்த புலியை சிவனைக் கொல்வதற்காக ஏவினர். ஈசனோ அதனைக் கொன்று அதன் தோலை ஆடையாக அணிந்து கொண்டார். வேள்வியில் இருந்து பின் வந்த மானை இடக்கையில் வைத்துக் கொண்டருளினார்.பின்பு வந்த மழுவை ஆயுதமாக வைத்துக் கொண்டார். தொடர்ந்து வந்த சர்ப்பங்களை ஆபரணமாகத் தரித்துக்கொண்டார். இவை தவிர முயலகன் என்ற அசுரன் வர அவனைக் கீழேதள்ளி முதுகிலேறி நின்றார் . ரிஷிகள் தொடர்ந்து மந்திரங்களை ஏவ,அவகைளை டமருக ரூபங்கொண்டு அவர் திருக்கரத்தில் தாங்கிக்கொண்டார்.
சிவன் ஏன் கபாலத்தை ஏந்திக்கொண்டு இருக்கிறார் ?
பிரம்மாவின் அகந்தையை அழிக்கும் பொருட்டு, அவருக்கிருந்த ஐந்து தலையில் நடுத்தலையைக் கிள்ளிக் கையிற் கபாலமாக வைத்தருளினார். அது முதல்பிரமனுக்குச் சதுர்முகனென்று பெயராகியது. பரமசிவன் கபாலம் தரித்துக் கொண்டிருப்பதனால் கபாலியென்றும் பெயருண்டானது.
பரமசிவன் கண்டத்தில் விஷம் பொருந்தியிருப்பது ஏன்?
தேவர்கள் அமிர்தம் எடுக்க பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷமுண்டானது. அதைக் கண்டு பயந்த தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட அவர்களை காக்கும் பொருட்டு விஷத்தைக் கண்டத்தில் வைத்தருளினார். இதனால் நீலகண்டன் எனப் பெயர் பெற்றார்.
பரமசிவனுக்கு ரிஷபவாகனம் ஏன்?
தருமதேவதையானது என்றும் நித்தியமாயிருக்கவேண்டும்மென்ற எண்ணங்கொண்டு ரிஷபரூபமாகிப் பரமசிவனிடத்தில் பணிந்து “இறைவனே !நான் இறவாமலிக்கும் படி அடியேனை வாகனமாகக் கொண்டருள வேண்டும்” என வேண்டிக்கொண்டது. இறைவனும் மனமிரங்கி,அதனைத் தமக்கு வாகனமாகக் கொண்டருளினார்.
-
history-of-onam
திருவோணம் பண்டிகை!
கேரளாவில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பெறும் இவ்வோணம் பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து திருவோண நட்சத்திரம் வரை பத்து நாள்களும் நடைபெறுகிறது.
கேரளாவில் கொண்டாடப் பெறும் திருவோணம் பண்டிகை மகாபலி சக்கரவர்தியின் நினைவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
முன்னொரு காலத்தில், சிவாலயத்துள் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியைத் தூண்டி, பிரகாசமாக எரிய உபகாரம் செய்தது ஒரு எலி. எனவே அவ்வெலிக்கு மூன்று லோகத்தையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை வழங்கினார் சிவபெருமான். அந்த எலியானது மறு பிறப்பில் மகாபலி என்ற என்ற பெயருடன் மன்னனாக பிறந்து, சக்ரவர்த்தியாகி மூவுலகையும் சிறப்பாக ஆட்சி புரிந்தது.

மகாபலி என்னும் மன்னன் கேரள நாட்டைச் சிறப்பாக ஆண்டுவந்தான். அவன் பெற்ற தவவலிமையால் மூவுலகையும் ஆளும் மன்னனாகத் திகழ்ந்தான். இதனைப் பொறுக்காத தேவர்கள் அசுர வலிமை கொண்ட மகாபலியை அடக்கித் தங்களின் வலிமைக்குக் கொண்டுவரத் திருமாலின் உதவியை நாடிச் சென்றனர். திருமாலும் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி மண்ணைத் தானமாகக் கேட்டார். திருமாலின் சூட்சமத்தை அறிந்த அசுர குருவான சுக்ராச்சாயான் அறிவுரையைக் கேளாத மகாபலியும் மூன்றடி மண் கொடுக்க சம்மதித்தார். திருமால் விசுவரூபம் எடுத்து வானத்தை ஒரு அடியாகவும், பூமியை மற்றொரு அடியாகவும் வைத்து அளந்து மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது வைத்தார். வாமன மூர்த்தியால் மகாபலிச் சக்கரவர்த்தி பாதாளத்துள் வீழ்த்தப்பட்டபோது, தான் ஆட்சி செலுத்திய நாட்டை ஆண்டுக்கொரு முறை வந்து கண்ணுற்று மகிழத் திருமாலிடம் வரம் வேண்டினார். பிறகு திருமாலும் மகாபலியை ஆட்கொண்டு வரம் நல்கினார். இவ்வாறு மகாபலிச் சக்கரவர்தியின் நினைவு நாளாகவும், மகாபலி மன்னன் இந்த திருவோண நன்னாளில் தான் ஆண்ட நாட்டிற்கு வருவதாகவும், அவனை வரவேற்கும் முகமாகவும் இவ்வோணம் பண்டிகை கொண்டாடப் பெறுவதாகக் கூறப்படுகிறது.

கேரளாவில் உள்ள ஒவ்வொரு வீட்டின் வாயிற் படியிலும் மகாபலி மன்னனை வரவேற்கும் முகமாக பல வண்ண மலர்களால் ஆன கோலங்களைப் பெண்கள் வரைகின்றனர். கோலத்தின் நடுவில் குத்துவிளக்கேற்றி வைத்து, அதனைச் சுற்றிப் பல வகையான காய், கனிகளையும் அழகுற அடுக்கி வைக்கின்றனர். இக்கோலத்தை “அத்தப்பூக் கோலம்” என்று அழைக்கின்றனர். அன்று மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து பலவிதமான காய், கனிகளையும் உணவு வகைகளையும் விருந்தினர்களுக்கு வழங்கித் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். திருமால் உறையும் திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
விருந்துக்கு பிறகு ஆண்களும், பெண்களும் இணைந்து பல்வேறு நடனங்களை ஆடி மகிழ்வார்கள். ஓணப்பட்டுடுத்திய பெண்கள் அத்தப்பூ கோலத்தில் மீது குத்துவிளக்கு ஏற்றி வைத்து அதனை சுற்றி நடனமாடுவார்கள். மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடி உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர். ஆண்கள் புலிக்களி நடனம், களரி, கயிறு இழுத்தல், கடுவா ஆட்டம், எறி பந்து, கிளியாந்தட்டு, ஓண ஊஞ்சல் என நடக்கும் விளையாட்டுகள் மனதிற்கும், உடலுக்கும் உரம் சேர்க்கும் வகையில் இருக்கும்.
-
guru-peyarchi-2017
குரு காயத்ரீ மந்திரம்
ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.
குரு ஸ்லோகம்
தேவனாம்ச ரிஷீணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.
இவர் தான் குரு பகவான்
சொந்த வீடு – தனுசு, மீனம்
உச்சராசி – கடகம்
நீச்சராசி – மகரம்
திசை – வடக்கு
அதிதேவதை – பிரம்மா
நிறம் – மஞ்சள்
வாகனம் – யானை
தானியம் – கொண்டைக்கடலை
மலர் – வெண்முல்லை
வஸ்திரம் – மஞ்சள்நிற ஆடை
ரத்தினம் – புஷ்பராகம்
நிவேதனம் – கடலைப்பொடி சாதம்
உலோகம் – தங்கம்
இனம் – ஆண்
உறுப்பு – தசை
நட்புகிரகம் – சூரியன், சந்திரன், செவ்வாய்
பகைகிரகம் – புதன், சுக்கிரன்
மனைவி – தாரை
பிள்ளைகள் – பரத்வாஜர், கசன்
பிரதானதலங்கள் – ஆலங்குடி(திருவாரூர்), திருச்செந்தூர்
சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி நவக்கிரகங்களில் முழு சுப கிரகமாக திகழ்பவர் . நம்முடைய வாழ்வில் எல்லா விதமான செல்வங்களையும் வியாழ பகவான் என்ற குரு பகவான் வழங்கிறார். வாழ்க்கையில் பணம், குழந்தை செல்வம் ஆகிய முக்கியமான இரண்டு செல்வங்களை அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்றவர் குரு பகவான்..
குரு பார்வை கோடி நன்மை
ஒருவர் வாழ்வில் திருமணம் மிக முக்கியமானது. அந்த திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக திகழ்பவர் குரு பகவான். குரு பார்வை அமைந்து விட்டால் திருமணத்துக்கு உரிய காலம் அமைந்து விட்டது என்று கருதலாம். குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவின் ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.
இந்தாண்டு இன்று செப்டெம்பர் இரண்டாம் தேதி குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு மாறுகிறார். துலா ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து 1 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குகிறார். துலா ராசிக்கு வரும் குரு பகவான் விருச்சிக ராசிக்கு ஸ்ரீ ஹேவிளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18ம் தேதி – 04.09.2018 – வியாழக்கிழமையன்று மாறுகிறார். துலா ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் கும்ப ராசியையும் – ஏழாம் பார்வையால் மேஷ ராசியையும் – ஒன்பதாம் பார்வையால் மிதுன ராசியையும் பார்க்கிறார்.
:
2017 குரு பெயர்ச்சியினால் நன்மை பெறும் ராசிகள்: மேஷம் – மிதுனம் – கும்பம்
2017 குரு பெயர்ச்சியினால் நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: கடகம் – கன்னி – துலாம் – தனுசு – மகரம்
2017 குரு பெயர்ச்சியில் பரிகாரத்தின் மூலம் பயன்பெறக்ககூடிய ராசிகள்: ரிஷபம் – சிம்மம் – விருச்சிகம் – மீனம்
பொது பலன்கள்:
கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு இடம் பெயர்கிறார் குரு பகவான் . துலாம் என்பது வியாபாரம் சம்பந்தபட்ட ராசியா. இந்த ராசிக்கு அதிபதி அசுர குருவாகிய சுக்கிரன் ஆவார். சுக்கிரன் அழகு – கவர்ச்சி – ஆடம்பரம் – பொருள் – பணம் – வசதி – வெண்மை ஆகிய விஷயங்களுக்கு அதிபதியாவார். இந்த சுக்கிரனுடன் அசுர குருவாக இருந்தாலும் தேவகுரு குருபகவானுடன் இணையும் போது அற்புதமான பலன்களை அள்ளித் தருவார். குருவிற்கு துலாம் நட்பு வீடு. நாட்டையும் வீட்டையும் பலவிதங்களில் தொல்லைப்படுத்தும் சமூக சீர்கேட்டாளார்கள் அழிக்கப்படுவர். உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். செவ்வாய் சாரத்தில் மாறுவதால் ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி ஏற்படும். மக்களிடம் தட்டுப்பாடு நீங்கி அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படும். பொன் பொருள் விலை மிகவும் அதிகரிக்கும். எதிரிகள் தொல்லை, அண்டை நாடு, பகை நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் கட்டுப்படுத்தப்படும்.
குருவை வணங்கி வாழ்வை மேம்படுத்தி உயர்வோம்
ஓம் குருவே நமஹ ….
-
vinaayagar
அரசர் ஒருவர் அளவுக்கு மீறிய மிகுந்த அகந்தையும், ஆணவமும் கொண்டராக இருந்தார். ஒரு சமயம் நாரதர் அவரைச் சந்திக்கச் சென்றபோது, அவரை அலட்சியம் செய்தார் அரசர். இருந்த போதிலும் நாரதர் அரசரிடம், “”மன்னா! பகவான் திருவருளால் உன் நாடு செழிப்பதாக!” என்று வாழ்த்தினார். அதைக் கேட்டு சிரித்த அரசர், “”என்ன சொல்கிறீர் நாரதரே! பகவான் அருளால் என் நாடு செழிக்க வேண்டுமா? நான் நல்ல முறையில் நிர்வாகம் செய்கிறேன். என்னால் தான் எல்லாம் நடக்கிறது. இதில் பகவானுக்கு என்ன வேலை?” என்று ஏளனமாக சொன்னார் . அரசரது பேச்சில் ஆணவம் இருந்ததைக் கண்ட நாரதர், அவருக்கு புத்திமதி சொல்லிவிட்டு, கவுண்டின்ய மகரிஷி ஆசிரமத்திற்குச் சென்றார். அங்கு மகரிஷி நடத்திய விநாயகர் பூஜையில் கலந்துகொண்டுவிட்டு கிளம்பினார்.
வழியில் விநாயகரைக் கண்டார் நாரதர். அவரது முகக்குறிப்பை அறிந்த விநாயகர், “”நாரதரே! உம் முகத்தைப் பார்த்தால் என் உதவி தேவைப்படுவது போலத் தெரிகிறதே!” என்றார்.நாரதர் அரண்மனையில் நடந்ததைச் சொன்னார். அரசருக்கு புத்தி புகட்ட விநாயகர் அந்தணனாக உருவெடுத்து, அரண்மனைக்குச் சென்றார். தனக்கு மிகவும் பசிப்பதாகச் சொல்லி உணவு கேட்டார். அரசர் அவரிடம், “”அந்தணனே! அன்ன சாலைக்குச் சென்று வயிறார சாப்பிட்டு விட்டுப் போ,” என்றான். அங்கு அவருக்கு சமையற்காரர்கள் விதவிதமான உணவுகளைப் பரிமாறினர். அவை அனைத்தையும் ஒரு பிடிபிடித்தவர்,
“உம்… இன்னும் என்ன இருக்கிறது? கொண்டு வாருங்கள்! எனக்கு இன்னும் பசி தீரவில்லை,” என்றார். அவர்கள் சமைத்து வைத்திருந்த உணவு முழுவதையும் அவருக்கு பரிமாறினர். ஊஹும்… அவர் கொஞ்சமும் பசியாறியதாகத் தெரியவில்லை. மேலும் சமைக்க வைத்திருந்த அரிசி, தானியங்களையும், அங்கு தோட்டத்தில் விளைந்த காய், பழங்களையும் சாப்பிடக்கொடுத்தனர். அதை சாப்பிட்டும் அவரது பசி நீங்கவில்லை. மிரண்டு போன சமையற்காரர்கள், பயத்தில் ஓட்டம் பிடித்தனர். நடந்ததை அறிந்த அரசர் அன்னம் பரிமாறும் இடத்திற்கு வந்தான். அவரிடம் அந்தணர், “என்ன மகாராஜா, யானைப்பசிக்கு சோளப்பொரியா? நீ பரிமாறிய உணவு எனக்கு போதவில்லையே!’”என்றார்.
அரசர் ஆத்திரத்தில்,“அந்தணனே, இங்கு மேலும் உனக்கு உணவு தர முடியாது. உன் பசி தீர்க்கும் இடம் பார்த்து நீ செல்லலாம்!” என்று கத்தினான். “நல்லாட்சி நடக்கிறது. என் நிர்வாகத்தில் மக்களுக்கு ஒருகுறையும் இல்லை. என்னால் எல்லாம் முடியும் என்று வீண் தம்பட்டம் பேசுகிறாயே! உன்னால் என் பசியைக் கூட போக்கமுடியவில்லையே” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பியவர், தன் பக்தன் திரிசுரன் வீட்டிற்குச் சென்றார். அங்கு திரிசுரனும், அவன் மனைவி விரோசனையும் விநாயகர் பூஜையில் இருந்தனர்.
அவனது வீட்டு வாசலில் நின்றவர், “ஐயா! எனக்குப் பசிக்கிறது. சிறிது உணவிருந்தால் போடுங்கள்!” என்று யாசகம் கேட்டார். அவரிடம், “ஐயா! தங்களுக்கு கொடுப்பதற்கு தற்போது எங்களிடம் ஏதுமில்லை. இனிமேல்தான் சமையல் செய்யப்போகிறேன்,” என்றாள் விரோசனை.ஆனால், திரிசுரனுக்கு வந்தவரை வெறும் கையாக அனுப்ப மனமில்லை. தன் கையில் விநாயகர் பூஜைக்காக வைத்திருந்த அருகம்புல்லை கொடுத்தான். அதை வாங்கிக் கொண்ட அந்தணர், வாயில் போட்டுக் கொண்டார். அந்த கணமே அவரது வயிறு நிறைந்தது.இவ்வேளையில் அரண்மனைக்கு அந்தணனாக வந்தது யார் என அறிய, அவரைத்தேடி திரிசுரன் வீட்டிற்கு வந்தான் அரசர். அங்கு இருவருக்கும் விநாயகர் சுயரூபம் காட்டினார். “”திரிசுரனின் உண்மையான பக்திக்கு கட்டுப்பட்டு சாதாரண அருகம்புல் கூட விநாயகரின் பசியைப் போக்கிவிட்டதே! என்னால் தான் எல்லாம் நடக்கிறது என்று ஆணவத்தால் அறிவை இழந்து விட்டேனே!” என விநாயகரிடம் மன்னிப்பு கேட்டார் அரசர்.
-
laughing-perumal
சேலம்-சென்னை தேசிய நெடுஞ் சாலையில் அமைந்திருக்கிறது நாம மலை. இந்த மலையின் மீது ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக அழகுறக் கோயில்கொண்டு அருள்பாலிக்கிறார், ஸ்ரீநிவாசப் பெருமாள்.

ராமாயண காலத்தில் இலங்கையில் இருந்து வான் மார்க்கமாக ராமர், சீதை மற்றும் விபிஷணன் ஆகியோர் அயோத்தி செல்லும் போது, அவர்கள் சென்ற ரதத்தின் நிழல் விழுந்த இடங்களில் ஒன்றுதான், ஸ்ரீநிவாசப் பெருமாள் குடிகொண்டுள்ள இடம் என்கிறார்கள். இதன் மகிமையை உணர்ந்த கிருஷ்ண தேவராயர், 16-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தக் கோயிலை நிர்மாணித்தாராம்.
மூலிகைக் கற்களைக் கொண்டு, திருப்பதியில் பெருமாள் காட்சி தரும் அதே திருக் கோலத்திலேயே இங்கும் ஸ்ரீதேவி-பூதேவி சமேத ராக ஸ்ரீநிவாசப் பெருமாள் அருளாட்சி செய்வது, கண்கொள்ளா காட்சி! மேலும் திருப்பதி மலைவாழும் ஏழுமலையான், தமது சயன நேரத்தில் இங்கு வந்து உறங்கி ஓய்வெடுத்துச் செல்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பூஜையின்போது மூலவர் பெருமாளின் திருமுகத்தில் வியர்ப்பதைக் காணலாம் என்று சிலிர்ப்புடன் பகிர்ந்துகொள்ளும் பக்தர்கள், ‘‘தரிசிக்கும் தருணத்தில் பக்தர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப சிரிப்பு, கோபம் என மாறுபட்ட முகபாவங்களைக் காட்டும் ஸ்வாமி இவர். அதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்… நமது வேண்டுதல் நியாயமானதா இல்லையா என்பதை!’’ என்று பரவசம் பொங்கச் சொல்கிறார்கள்.

நாம மலையில் மிகப்பெரிய அளவில் பாறைகளால் ஆன குளம் போன்ற ‘பாலி’ ஒன்று காணப்படுகிறது. இந்த பாலியின் தீர்த்த நீர் அதிகளவு அடர்த்திகொண்டதாம். இதில், ராமனும் சீதையும் நீராடியதாக நம்பிக்கை. அதேபோல் அடிவாரத்தில் கிணறு ஒன்று உள்ளது. பெருமாளைத் தரிசிக்கும்போது, இந்தக் கிணற்று நீரை தீர்த்தமாகத் தருகிறார்கள். மூலிகைத் தன்மை கொண்ட இந்த தீர்த்தத்தை நோய் தீர்க்கும் அமிர்தமாகக் கருதுகின்றனர்.
ஒருமுறை இந்தக் கோயிலின் அர்ச்சகர் ஒருவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘‘ராமானுஜர் இல்லாததே இத்தலத்தின் ஒரே குறை’’ என்றாராம். அந்தக் குறையைக் களையும் விதம், ஸ்ரீராமானுஜர் விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர், பக்தர்கள். வடக்கு நோக்கி அருளும் இந்த ராமானுஜரின் திருமுன் பாலைச் சமர்ப்பித்து சில நிமிட வேண்டு தலுக்குப் பிறகு, பாத்திரத்தை திறந்தால் பால் திரிந்து தயிராகியிருக்குமாம். இப்படி பால் திரிந்துபோனால், பக்தர்களுக்கு ராமானுஜரின் திருவருள் பரிபூரணமாகக் கிடைத்துவிட்டது என்பது நம்பிக்கை.
இத்திருத்தலத்துக்கு வரும் பக்தர்கள் மூலவரை வணங்கிய பின், தங்கள் வேண்டுதல் நிறைவேறுமா என்பதை அறிய, திருவுளச் சீட்டு போட்டு இறைவனிடம் உத்தரவு கேட்கின்றனர். துளசி, மஞ்சள், குங்குமம் ஆகிய மூன்றையும் தனித்தனி சீட்டுகளில் பொதிந்து சந்நிதியில் வைத்து, குழந்தைகள் மூலம் சீட்டுகளை எடுத்து பார்க்கின்றனர். அதில் துளசிச் சீட்டு வந்தால் நினைத்தது உடனே நிறைவேறும்; மஞ்சள் வந்தால் காரியத்தில் சற்று நிதானம் வேண்டும் என்று அர்த்தமாம்.
வாழ்நாளில் ஒரு முறையாவது திருப்பதி சென்று ஸ்ரீநிவாசப் பெருமாளை வணங்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் பொருளாதாரம், வயது முதிர்வு போன்ற காரணங்களால் திருப்பதி சென்று பெருமாளை வணங்காமல் தவித்து மருகும் அன்பர்களும் உண்டு. அப்படியான பக்தர்களுக்கு, திருப்பதிக்குச் சென்று வந்த புண்ணிய பலனை தந்தருளும் நாமமலை ஸ்ரீநிவாசப் பெருமாளை நீங்களும் ஒருமுறைத் தரிசித்து வாருங்களேன்; உங்கள் வருங்காலம் சிறக்கும், வாழ்க்கைச் செழிக்கும்! -
five-nandhikal
ஐவ்வகை நந்திகள் என்பவை சிவ ஆகமங்களின் அடிப்படையில் சிவாலயங்களில் அமைக்கப்பெரும் ஐந்து நந்திகளாவர். ஆகமத்தில் ஒவ்வொரு நந்தியை அமைக்கும் விதமும், அமைவிடமும், அந்த நந்திகளின் வரலாறும் இடம்பெற்றிருக்கின்றன.
நந்திகளின் வகை
கைலாச நந்தி
கைலாச நந்தி என்பவர் சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் ஒருவராவர். இவர் அனைத்து சிவாலங்களிலும் மூலவருக்கு அருகே அமைக்கப்பெறுகிறார். கைலாயத்தில் சிவபெருமானுக்கு அருகே எப்போதும் இருப்பதனால் இவருக்கு கைலாச நந்தி என்று பெயர் வந்து.
அவதார நந்தி
அவதார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் லிங்கத்திற்கு அருகே இருக்கும் கைலாச நந்திக்கு அடுத்து இருப்பதாகும். சிவபெருமானுக்கு வாகனமாக திருமால் நந்தியாக மாறியதால் இந்த நந்தியை விஷ்ணு அவதார நந்தி என்றும், விஷ்ணு நந்தி என்றும் அழைக்கின்றார்கள்.
அதிகார நந்தி
அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.
சாதாரண நந்தி
சாதாரண நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நான்காவதாக இருப்பதாகும். ஐந்து நந்திக்கும் குறைவான சிவாலயங்களில் இந்த நந்தி அமைக்கப்பெறுவதில்லை.
பெரிய நந்தி
தஞ்சை பிரகதீஸ்வர் கோவிலில் உள்ள பெரிய நந்தி
பெரிய நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நுழைவுவாயிலில் காணப்பெறும் நந்தியாவார். கைலாயத்தின் காவலனாக எந்நேரத்திலும் பேர்க்கோலம் கொண்டு விஸ்வரூபத்தில் இந்த நந்தி இருக்கிறார். அதன் காரணமாக இவரை மஹா நந்தி என்றும் விஸ்வரூப நந்தி என்றும் அழைக்கின்றனர்.
-
ko-poojai
நமது இந்து மதத்தில் கோமதாவாகிய பசுவை வணங்குவது பெரும் புண்ணியமாகக் கருதப்படுகிறது.
பசுவின் உடல் முழுவதும் தேவர்கள் வசிப்பதாக ஐதீகம். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தேவர்கள் வசிக்கின்றனர். அதனால் தான் பசுவை வலம் வந்து வணங்கினால் முப்பது முக்கோடி தேவர்களை வணங்கின புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள் சான்றோர்கள்.
பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.எனவே, கோமாதா பூஜை செய்யும் போது, பசுவை முன்புறமாக தரிசிப்பதைவிட, பின்புறம் தரிசனம் செய்வது மிகவும் நன்மை தரும்.
கோ பூஜை செய்யும் போதும், பசுவின் முன்நெற்றி மற்றும் வால்பகுதியில் சந்தனம், குங்குமம் வைத்து, மலர் அணிவித்து வழிபட வேண்டும்.பசுவின் சாணமும் லட்சுமிஅம்சமாகும். அதிகாலையில் பசுஞ்சாணத்தை கொண்டு வீட்டு வாசலை மெழுகி ,கோலம் இட்டால் , மகாலட்சுமி நம் வீடு தேடி வருவாள் என்றொரு நம்பிக்கை நிலவுகிறது.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகிய ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன என்று புராணங்கள் கூறுகிறது. பசுவின் கோமயம் எனப்படுகின்ற சாணம்,கோமியம் எனப்படுகிற மூத்திரம், பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை. இவற்றைக் கொண்டு சிவபெருமானுக்கு செய்யப்படுகிற பஞ்சகவ்ய அபிஷேகம் மிகவும் விசேஷமானது. திருமகள் வாசம் செய்யும் இதன் பின்பாகத்தை தொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும்.
கோமாதாவின் உடற் பகுதியில் உறையும் தெய்வங்களைப் பற்றியும், தேவகணங்களைப் பற்றியும் நமக்கு தெரிந்த சில ,தெரியாத பல செய்திகளைத் தெரிந்துக் கொள்வோம்.
கோமாதாவின் முகம் மத்தியில் -சிவன்
வலக் கண் – சூரியன்
இடக் கண் – சந்திரன்
மூக்கு வலப்புறம் – ஆறுமுகக் கடவுள் முருகன்
மூக்கு இடப்புறம் – முழு முதற்கடவுள் விநாயகர்
காதுகள் – அஸ்வினி குமாரர்
கழுத்து மேல்புறம் – ராகு
கழுத்து கீழ்புறம் -கேது
கொண்டைப்பகுதி –நான்முகன் பிரம்மா
முன்கால்கள் மேல்புறம் – கலைமகள் சரஸ்வதி, சங்கு சக்ரதாரி விஷ்ணுபகவான்
முன்வலக்கால் – பைரவர்
முன் இடக்கால் – சல்லின் செல்வர் ஹனுமார்
பின்னங்கால்கள் – பராசரர், விஷ்வாமித்திரர்
பின்னகால் மேல்பகுதி – நாரதர், வசிஷ்டர்
பிட்டம் கீழ்ப்புறம் – கங்கை
பிட்டம் மேல்புறம் – திருமகளான லக்ஷ்மி
முதுகுப்புறம் – பரத்வாஜர், குபேரர் வருணன்,அக்னி
வயிற்றுப்பகுதி – ஜனககுமாரர்கள் பூமாதேவி
வால் மேல் பகுதி – நாகராஜர்
வால் கீழ்ப்பகுதி – ஸ்ரீமானார்
வலக்கொம்பு – வீமன்
இடக்கொம்பு – இந்திரன்
முன்வலக்குளம்பு – விந்தியமலை
முன்இடக்குளம்பு – இமயமலை
பின் வலக்குளம்பு – மந்திரமலை
பின் இடக்குளம்பு -த்ரோணமலை
பால்மடி – அமுதக்கடல்
முப்பத்துமுக்கோடிதேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும்,அஷ்டவசுக்களும்,நவக்கிரகங்களும் ஆட்சி செய்யும் பசுவை காலையில் எழுந்ததும் தொழுவத்தில் காண்பது சுபசகுனமாக கருதப்படுகிறது.
கோபூஜையை செய்வதால் சகல சம்பத்துக்களும், முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கிவிடும் என்பதால் கோமாதாவை வணங்கி பதினாறு செல்வத்தைப் பெற்று சிறப்புடன் வாழ்வோம்.