Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • 2017-09-24-13-17-53

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தில் இரண்டாவது நாள் சின்ன சேஷ வாகனத்தில் வேணு கோபால சுவாமி அலங்காரத்தில் தரிசனம் கொடுத்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று காலை 5 தலைகளுடன் கூடிய சிறய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வேணு கோபால சுவாமி அலங்காரத்தில் நான்கு மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலீத்தார். பெரிய சேஷ வாகனத்தை ஆதிசேஷனாகவும் சிறிய சேஷ வாகனத்தை வாசுகியாகவும் நினைத்து சுவாமி வேணு கோபால சுவாமி அலங்காரத்தில் வீதிஉலா வந்ததை அயிரகணக்காண பக்தர்கள் பக்தி மனம் உருக கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி வீதிஉலாவில் கோயில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் தலைமையில் ஜீடர்களின் சீடர்கள் நான்காயிரம் திவ்ய பிரபந்தம் பாடியபடி வந்தனர். இதில் பல்வேறு மாநிலத்தில் இருந்து வந்த பக்தர்கள் கோலட்டம் ஆடியும் சுவாமியின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடம் அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளில் சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். அன்னம் பால், தண்ணீரை வேறு செய்வது போல் பக்தர்களின் தீய எண்ணங்களை அகற்றி நல்ல எண்ணங்களை சுவாமி தனது பக்தர்களுக்கு அருள் புரிவதாக ஐதீகம்.

  • 8-39

    திருப்பதி ஏழுமலையான் ஆலய பிரம்மோற்சவ பெருவிழா – கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை சமர்பித்தார். பின்னர் தேவஸ்தான சார்பில் அச்சிடப்பட்ட 2018 ஆண்டுக்காண கலெண்டர் மற்றும் டைரிகளை அவர் வெளியிட்டார். இதனைதொடர்ந்து, விஜயவாடாவை சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியரான ராமலிங்கராஜூ, 8.39 கோடி மதிப்பிலான தங்க காசு மாலையை சந்திரபாபுநாயுடு முன்னிலையில் காணிக்கையாக வழங்கினர்.

  • 2017-09-23-14-43-03

    புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில்தான் சனி பகவான் பிறந்தார். எனவே, புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும். சனிக்கிழமை அன்று முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பாகப் பேசப்படுகிறது. கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார். ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை. புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம். புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும். புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணிய பலன் அதிகம் தரும் என்பது ஐதீகம்.

  • 2017-09-23-14-11-09

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் பலவித வாகனங்களில் தாயார்களுடன் உற்சவமூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறும் விதமாக, மீன லக்னத்தில் பிரம்மோற்சவம் கொடி ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி பிரம்மாண்ட நாயகனின் பிரம்மோற்சவத்திற்காக புதிய மஞ்சள் துணியில் கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடியை நான்கு மாடவீதியில் உற்சவ மூர்த்திகளுடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. பின்னர் கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி முன்னிலையில் பட்டாட்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க கருட கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. பிரம்மோற்சவம் முன்னிட்டு மலைப்பாதைகளில் 24 மணி நேரமும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது. மேலும் இன்று தொடங்கியுள்ள பிரம்மோற்சவம் அக்.1-ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. பிரம்மோற்சவம் சமயத்தில் திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் 4 ஆயிரம் அறைகள் வழங்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. பிரம்மோற்சவத்துக்காக தேவஸ்தானம் ரூ. 9.5 கோடி செலவு செய்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்கள் வாகன சேவையுடன் ஏழுமலையானை விரைவாக தரிசனம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • 2017-09-22-13-29-31

    பழனியில் இருந்து திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவுக்கு புஷ்ப கைங்கர்ய சபா மூலம் மலர்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. முதல் நாளன்று சம்பங்கி, தாமரை, அரளி, மருகு, மரிக்கொழுந்து, செண்டுமல்லி, பட்டுப்பூ, துளசி, தாமரை, வாடாமல்லி என பலவகையான மலர்கள் சுமார் ஆயிரம் கிலோ அனுப்பப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவத்துக்கு முதல்நாளன்று இங்கிருந்து மலர்கள் அனுப்பப்படும். பிரம்மோற்சவம் நிறைவு பெறும் வரை பூக்கள் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் கிலோ வரையில் அனுப்பப்படும்.

  • 2017-09-21-16-02-09

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவையொட்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து காணிக்கை வசூலித்து கோயிலில் வழங்குவர். இந்தாண்டுக்கான தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் காலை 8 முதல் 9 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. மாலை 3 மணி முதல் 6 மணி வரை சமயசொற்பொழிவுகளும், இரவு 8 மணிக்கு கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், இரவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும் நடக்கிறது. 23ம் தேதி இரவு ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்திலும், 24ம் தேதி இரவு மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும், 25ம் தேதி இரவு காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்திலும், 26ம் தேதி இரவு சிம்மவாகனத்தில் மகிசா சுரமர்த்தினி திருக்கோலத்திலும் அம்மன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 27ம் தேதி மாலை 4.30 மணிக்கு மகிசாசூரன் வீதியுலாவும், இரவு 9 மணிக்கு பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதியுலாவும், 28ம் தேதி இரவு 9 மணிக்கு கமலவாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்திலும், 29ம் தேதி இரவு அன்னவாகனத்தில் கலைமகள் திருக்கோலத்திலும் அம்மன் வீதியுலா நடக்கிறது. 30ம் தேதி காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணி மற்றும் அதிகாலை 3.30 மணி வரை கடற்கரை வளாகத்தில் சிறப்பு பக்தி இன்னிசை, இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சிம்மவாகனத்தில் அம்மன் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன்பாக எழுந்தருளி மகிசா சூரசம்காரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

  • lingothpavar

     

     

    பகவான் மகாவிஷ்ணுவுக்கு பத்து அவதாரங்கள் என்றால் சிவபெருமானின் அவதாரங்களில் 25 முக்கியத்துவம் பெற்றவை.அவற்றுள் முக்கியமான ஒன்று லிங்கோத்பவர். சிவபெருமான் தான் லிங்கம் என்றாலும், அந்த லிங்கத்துக்குள்ளேயே, தலை, கால், கை என்று எல்லா அங்கங்களோடும் திருவுருவைத் தான் லிங்கோத்பவ மூர்த்தியாக வணங்குகிறோம்.

     மும்மூர்த்திகளும் சேர்ந்து நடத்திய திருவிளையாடலால் உருவான புதிய மூர்த்தியே லிங்கோத்பவமூர்த்தி ஆகும். பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் மூண்ட பொழுது, சிவன் நெருப்பு பிளம்பாக தோன்றி தன்னுடைய அடியையோ அல்லது முடியையோ காணுபவரே பெரியவர் என்று கேட்டதில் , உருவான வடிவமே லிங்கோத்பவர்.

    சிவ பெருமானின் திருவடியை அடியைக் காண திருமால் வராக  (பன்றி) வடிவெடுத்து நிலத்தினை குடைந்து சென்றார். பிரம்மா அன்ன வடிவெடுத்து பறந்து சென்று கங்கை குடி கொண்ட முடியைக் காண சென்றார். கோடானகோடி ஆண்டு பயணம் செய்தும் லிங்கோத்பவரின் அடியை காண இயலாமல் திருமால் திரும்பினார், பிரம்மா, தாழம்பூவை பொய் சாட்சியாக வைத்து முடியைக் கண்டதாக பொய்யுரைத்தார். அதனால் பிரம்மாவிற்கு தனித்த ஆலயங்கள் இல்லாமல் போனது என்ற வரலாற்றை  புராணங்கள் சொல்கிறது.

    அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவபெருமான் தன்னுடைய இடப்பாகத்தில்ஒவ்வொரு சிவாலயத்திலும் உள் பிரகாரச் சுற்றில் கருவறைக்கு பின்புறம், மூலவருக்குச் சரியாக பின்னால் எதிர்ப்புறம் நோக்கிய சிற்பமாக  லிங்கோத்பவர் இருக்கிறார்.

     இந்த லிங்கோத்பவமூர்த்தியை சிவாலயத்தில் மட்டுமின்றி, பிற ஆலயங்களிலும், மூலக் கருவறையின் பின்னுள்ள கோஷ்டத்தில் (திருப்பிறையில்) பார்க்க முடியும். மும்மூர்த்திகளின் அருளும் ஒரே திருவுருவில் அமைந்துள்ள லிங்கோத்பவரை வழிபட்டு வருவது சிறப்பாகும். லிங்கோத்பவமூர்த்தியை மாலையில் இருட்டத் துவங்கும் நேரத்திலும்; பவுர்ணமி தினங்களில் கூடுதலான நேரமும் வழிபடுதல் விசேஷம். இதன் மூலம் ஒவ்வொரு நாளும் நாம் ஏதோ சாதித்து விட்டதாக எண்ணுகின்ற கர்வம் அழியும்.

     இரண்யகசிபுவின் அறியாமையைப் போக்குவதற்காக, தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிம்மமூர்த்தியைப் போல, நம் அறியாமையையும் அகந்தையையும் வாழ்வில் ஏற்படும் கர்வங்களை அழித்து வழிகாட்டும் திருவுருவமாக விளங்கும் லிங்கோத்பவரை வணங்கி அமைதியான வாழ்வை பெறுவோம்.

     

    பகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும்

    லிங்காஷ்டகம் மந்திரம்

     

    பிரம்ம முராரி ஸுரார்சித லிங்கம்

    நிர்மல பாஷித சோபித லிங்கம்

    ஜன்மஜது: க்க நிநாசக லிங்கம்

    தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

    ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம் – நான்முகப் பிரம்மனாலும், முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும், எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்.

    நிர்மல பாஸித ஸோபித லிங்கம் – குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம்.

    ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் – பிறப்பு – இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம்.

    தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் – அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.

     

    இந்த லிங்காஷ்டக ஸ்லோகத்தை சிவபூஜையின் போது சிவபிரானின் திருவுருவப் படத்திற்கு நாகலிங்க மலர்களைச் சூடி இம்மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, இந்த ஸ்லோகங்களைக் கூறினால் நற்பலன்கள் ஏற்படும்.

  • 2017-09-20-11-45-28

    லட்சுமியின் அருள் கிடைக்க அதிகாலையில் வீட்டின் முன்பு சாணம் அல்லது தண்ணீர் தெளித்துக் கோலமிடுவதன் மூலம் லட்சுமி கடாட்சம் உண்டாகும். காலை எழுந்தவுடன் பசுவின் முகத்தில் விழிப்பது அல்லது பசு வடிவ பொம்மைகளை படுக்கையறையில் வைத்துக் கொண்டு அதன் முகத்தில் விழிக்கலாம். வெள்ளிக்கிழமை தோறும் ஐந்துமுக விளக்கேற்றுவது உகந்தது. பவுர்ணமி அன்று விஷ்ணுவிற்கு பழ வகைகள் நைவேத்தியம் செய்து அதை சாப்பிடுவதும் நல்லது. வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பது மட்டுமல்லாமல், சினத்தை தவிர்ப்பதன் மூலமும் பணத்தைக் கொடுக்கும் லட்சுமியை இல்லத்திற்கு வரவழைத்துக் கொள்ளலாம். திருமணப் பொருட்கள் வாங்கும் வரிசையில் முதலில் இடம் பெறுவது மஞ்சள் தான். இதற்கு காரணம் அது ஒரு மங்கலப் பொருளாகக் கருதப்படுகிறது. எந்தப் பூஜையை நாம் செய்தாலும் மஞ்சள் பிள்ளையாரை வைத்து மலரும், குங்குமமும் வைத்துப் பூஜை செய்வது வழக்கம். இலையில் விழுந்தால் அரிசி. தலையில் விழுந்தால் அட்சதை. முனை முறியாத அரிசியில் மஞ்சள் தடவித் தூவுவது தான் அட்சதை ஆகும். விரத காலங்களில் மஞ்சள் ஆடை அணிந்தால் குடும்பத்தில் மங்கலங்கள் நடைபெறும். ஆரோக்கியம் சீராகும். மஞ்சள் அரைத்துத்தடவி பல நோய்கள் குணமாவதை மருத்துவர்கள் எடுத்துரைப்பர். அதற்காக முகத்தில் மஞ்சள்தடவி முன்பு பெண்கள் குளிப்பது வழக்கம். குரு தட்சிணாமூர்த்திக்கு உகந்த வஸ்திரம் மஞ்சள் நிற ஆடைதான்.

  • manikarnika

     

    மாத அமாவாசைகள் மற்றும் விசேஷமான மஹாளய அமாவாசையில் புனித நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு திதி மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகிறது.இதில் காசியில் உள்ள ‘மணிகர்ணிகா காட்’ என்னும் இடத்திலுள்ள மணிகர்ணிகா குளம் இவையெல்லாவற்றையும்விட சிறந்ததாகப் போற்றப்படுகிறது. இந்தக் குளத்தினையொட்டிய கங்கை நதிக்கரையில் அமாவாசை தினத்தில் மட்டுமின்றி ,

    எல்லா நாட்களிலும்  மறைந்த முன்னோர்களுக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் இந்த மணிகர்ணிகா குளம்  பல தலைமுறைகளைச் சேர்ந்த முன்னோர்களுக்கு  சுவர்க்கம் செல்ல பாதையைக் காட்டும் புனிதக் குளமாகும்.நடுப்பகல் வேளையில் மணிகர்ணிகையில் ஸ்நானம் செய்து அதன் துதியையும் அவதார திருக்கதையையும் மகாளய பட்ச தினமாகிய 15 புண்ணிய தினங்களில் கூறுவோர் பெறும் புண்ணியத்தை தேவர்களாலும் கூறிட முடியாது.

     மகாவிஷ்ணு தன் தங்கை உமையவளை பரமசிவனுக்குத் திருமணம் செய்து கொடுத்து தேவர்கள், மகரிஷிகள், தேவகணங்களால் இடையூறுகள் இல்லாத பூலோகம் வந்த போது, அவர்கள் மூவருக்கும் ஒளி பொருந்திய ஓர் இடம் தென் படவே அங்கு தன் சக்ராயுதத்தால் அழகான தீர்த்தத்தை உருவாக்கினார். தன் தங்கையும், கணவன் பரமசிவனும் அதைக்கண்டு நீராட விரும்பி அழைத்து சென்ற போது தேவி அதில் எட்டிப்பார்த்து விட முகம் பொலிவாகத்தெரிந்தது. தன் நகைகளை சரி செய்த போது அவள் அணிந்திருந்த மணி குளத்தில் விழுந்தது. அதை பரமன் எடுக்க முயன்ற போது காதணிகள் நீரில் விழுந்தன.

     அம்பிகையின் மணியும், பரமணின் கர்ண குண்டலமும் விழுந்ததால் மணிகர்ணிகா என்ற பெயர் பெற்றது. இந்த விஷேச மணிகர்ணிகா தீர்த்தங்கள் காசி மட்டுமல்ல வேதாரண்யம், திருபுவனம், திருநீர் மலையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    தர்ப்பணம் செய்வதற்கு என்று சில தலங்கள்  புகழ்பெற்றவை. அங்கு சென்றும் நாம் நம் முன்னோர்களுக்கு நம் பித்ரு கடமைகளை செய்யல்லாம்.

     நாகை மாவட்டம் பூந்தோட்டத்திற்கு அருகில் உள்ள மூக்தீஸ்வரக் கோயில்.தில தர்ப்பணபுரி என்று அழைக்கப்படுகிறது. சந்திர தீர்த்தமும் அரசலாறும் ஓடுகிற இந்த தலத்தில் மஹாளய பட்ச தர்ப்பணம் செய்யலாம். ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோடியக்ரை, திருப்புல்லானி, தேவிபட்டினம், நவபாஷானை கடற்கரை தலம், கும்பகோணம் மகா மகக்குளம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறை, மூன்று நதிகள் சங்கமிக்கிற பவானி கூடுதுறை, திருச்சி அருகில் உள்ள முக்கொம்பு, மயிலாடுதுறை, காவிரிக்ரை மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள திருராமேஸ்வரம் ஆகிய தலங்களிலும் தர்ப்பணம் செய்யலாம்.

                                                                     

    அவ்வாறு புனித தலங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள்,வீட்டில்  உயிர் நீத்த பெரியவர்களின்  படத்தை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து பொட்டு வைக்க வேண்டும். முன்னோர் பெயரைச் சொல்லி எள்ளும் தண்ணீரும் விட வேண்டும். பிறகு யாருக்கு தர்ப்பணம் செய்தோமோ அவக்குப் பிடித்தமான பண்டத்துடன், தேங்காய்,வாழைப்பழம் வைத்து மலர் துளசி போட்டு நெய் தீபம் காட்ட வேண்டும். தர்ப்பண நீரை அருகில் உள்ள நீர் நிலைகளில் அல்லது செடிகளில் விட்டு வரவேண்டும்.

     

    பித்ருக்களும் தேவர்களும் காக்கை வடிவில் உணவு எடுக்க வருவதாக சாஸ்திரம் கூறுவதால் அமாவாசை  மற்றும் தர்ப்பண தினங்களில் காக்கைக்கு அன்னமிட்டு கயாவில் சிரார்த்தம் செய்தது போல இந்த தர்ப்பணம் செய்தேன் என்று கூறுகிறோம். இது போல் நாம் செய்யும் பித்ரு தர்ப்பண பூஜையின் போது மனிதர்களுக்கு  செய்யப்படும் உணவு தானத்தைப் போன்று, காக்கைக்கும் பசுவுக்கும் பிண்ட உணவு, இறைகின்ற அரிசி எள் என மற்ற உயிர்களுக்கும் தானம் இடும் புண்ணியத்தைப் பெறுகிறோம். தர்ப்பண  காலங்களில் பசுவுக்குப் புல் எடுத்துப்போட்டு அதைத் தர்ப்பணமாக ஏற்கும் படி பித்ருக்களை வணங்கலாம்.

     

    இப்படி நம்மால் எந்த வகையில் செய்ய முடியுமோ ,அந்த வகையில் நம் முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை தாம் தவறாமல் செய்ய வேண்டும். இவ்வுலக வாழ்க்கைக்கு பொருள் மட்டும் போதாது, நம் முன்னோர்களின் அருளும் ஆசியும் வேண்டும். அந்த ஆசியை நாம் அனைவரும் பெறுவோம்.

     

  • 2017-09-18-15-07-59

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா செப்டம்பர் 20-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு 20-ந் தேதி மாலையில் பராசக்தி அம்மன் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து வாண வேடிக்கைகளுடன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து அம்மனுக்கு 21-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 22-ந் தேதி கெஜலட்சுமி அலங்காரமும், 23-ந் தேதி மனோன்மணி அலங்காரமும், 24-ந் தேதி ரிஷப வாகன அலங்காரமும், மாலையில் பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும் நடைபெற உள்ளது. 25-ந் தேதி ஆண்டாள் அலங்காரமும், 26-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 28-ந் தேதி மகிஷாசூரமர்த்தினி அலங்காரமும், மேலும் அன்று சரஸ்வதி பூஜையும், மாலையில் உண்ணாமலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், 29-ந் தேதி விஜயதசமியான அன்று காலை திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகமும், காலையில் பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும் நடைபெற உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. தினமும் அருணாசலேஸ்வரரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். பவுர்ணமி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும், விசேஷ நாட்களிலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.