சபரிமலை ஐயப்பன் கோவில் வைகாசி மாத பூஜைக்காக மே 14-ந் தேதி நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த திருவிழா நாட்கள் தவிர, ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விசு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். இந்த நிலையில், வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவிலில் வருகிற மே14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை செய்கிறார். 15-ந் தேதி முதல், தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை, படிபூஜை உள்பட பல்வேறு பூஜை-வழிபாடுகள் நடைபெறுகிறது. 19-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
அருணாசலேஸ்வரர் கோயிலில் மன்மத தகனம்…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற மன்மதனை தகனம் செய்யும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. அக்னி ஸ்தலமான அண்ணாமலையார் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான உற்சவம் ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, தினமும் காலை, மாலை வேளைகளில் மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் நிறைவு நாளில் இரவு 11 மணிக்கு கோயில் கொடிமரம் எதிரே மன்மதனை தகனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக, அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர், அருணாசலேஸ்வரர் எய்த அம்பில் சிக்கிய மன்மதன் கண்ணிமைக்கும் நேரத்தில் எரிந்து சாம்பலானார்.
இந்த நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் திரண்டிருந்தனர்.
எரிந்த மன்மதனின் சாம்பலை பக்தர்கள் எடுத்து நெற்றியில் திருநீறாக பூசிக் கொண்டனர். இத்துடன், இந்தக் கோயிலின் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம் நிறைவு பெற்றது. -
பாவ கணக்கை குறைத்து புண்ணிய கணக்கை கூட்டும் சித்திரை பவுர்ணமி வழிபாடு
தமிழ் மாதங்களில் முதலாவதாக போற்றப்படும் சித்திரை மாதத்திற்கு பல சிறப்புகள் உண்டு . சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் . படைப்பு கடவுளான பிரம்மதேவன் தான் சித்திரை முதல் நாளை படைத்ததாக நம் புராணங்கள் கூறுகின்றன. மற்ற எல்லா பவுர்ணமிகளைக் காட்டிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த சித்திரை பவுர்ணமியும் இம்மாதத்தில் வருவதால் இதன் சிறப்பு இன்னும் அதிகமாகிறது . சித்திரை மாதத்தில் பௌர்ணமி வருவதால் சித்ரா பௌர்ணமி என்று அழைக்கின்றனர்.
எல்லா மாதங்களிலும் தான் பவுர்ணமி வருகிறது . அதென்ன சித்திரை மாதத்து பவுர்ணமிக்கு அப்படி ஒரு விசேஷம் ?
இன்றைய நாளை சித்திர குப்தன் பிறந்தநாள் என்றும், இன்னும் சிலர் சித்திர குப்தனின் திருமண நாள் என்றும் கூறுவர் . இதன் பின்னணியில் சில புராணக்கதைகள் சொல்லப்படுகிறது .

இவ்வுலகின் பாவ புண்ணிய பலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப்பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்ட , சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்ற பெயரும் வைத்தார். இந்த சித்திர புத்திரன் , சித்ரா பவுர்ணமி தினத்தில் அவதரித்தார். அண்ட சராசரங்களிலுள்ள முன்னாள் கணக்குகளையும், பிரம்மா விஷ்ணு முதலானவர்களுடைய பாவ புண்ணிய கணக்குகளையும் தினமும் தமக்குத் தெரிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி சித்திர புத்திரனார் கயிலையிலிருந்து கொண்டு கணக்குகளை எழுதிவந்தார்.
ஒரு சமயம் தேவேந்திரன் தனக்கு மக்கட்பேறு வேண்டுமென்று தருமங்கள் பல புரிந்து இறைவனை நோக்கி இந்திராணியுடன் தவம் புரிந்தார். சிவபெருமான் காமதேனுவை அழைத்து, இந்திரன் இந்திராணி தவத்தை எடுத்துரைத்துப் பின்னர், சித்திரபுத்திரரை இந்திரனுக்குப் புத்திரனாகப் பிறந்து, அவன் கவலையை தீர்க்குமாறு அருள்புரிந்தருளினார். அங்ஙனமே சித்திரபுத்திரனார் காமதேனுவின் வயிற்றில் உதித்து பாவ புண்ணியங்களைப் பகுத்து வந்தார்.
சித்திர புத்தரைப் பற்றி இன்னும் ஒரு சுவாரசியமான கதையும் சொல்லப்படுகிறது . கோடிக்கணக்கான மக்களின் பாவ, புண்ணியங்களை தான் ஒருவரே மேற்பார்வையிடும் பணி எமதர்மனுக்கு சிரமமாக இருக்கவே ஈசனிடம் சென்று முறையிட்டார் . ஈசனும் அவருக்கு மனமிரங்கி , அருகில் நின்றிருந்த பிரம்மனிடம் எமதர்மனுக்கு ஒரு உதவியாளனைத் தரவேண்டியது பொறுப்பை ஒப்படைத்தார் . எமனின் தந்தையான சூரியபகவானிடம் பிரம்மன் அச்செயலை ஒப்படைக்கும் பொருட்டு , சூரியனுக்குள் ஒரு அக்னியை தோற்றுவித்தார்.

இதன் காரணமாக சூரியன் வானில் சஞ்சரிக்கும்போது எதிர்பட்ட வானவில்லை ஏழு வண்ணங்களாக ஒருங்கிணைக்க அது ஒரு பெண்ணாக உருமாறியது . அப்பெண்ணை நீனாதேவி என்று பெயரிட்டு அவளுடன் வாழ்ந்து வந்தார். அதன் காரணமாக ஒரு சித்திரைத் திங்களில், பௌர்ணமி நாளில் பிறந்த புத்திரனுக்கு சித்திர புத்திரன் என்று பெயரிட்டனர். அக்குழந்தையின் இடக்கையில் ஏடும், வலக்கையில் எழுத்தாணியுமாக தோன்றினார். வானவில்லான அவரது தாயின் பல வண்ணங்களை உணர்த்தும் பொருட்டுதான் சித்திரகுப்தருக்கு பல வண்ண துணியை சாற்றுகிறோம் .
ஒரு சமயம் சித்ரகுப்தர் காஞ்சியில் சிவபெருமானை கடுமையாக பூஜை செய்ததன் பலனாக , அறிவாற்றலும் எல்லா சித்திகளும் அவருக்கு கிடைத்தன. வரம் பெற்றவர்கள் வழக்கம் போல் செய்வது போல் சித்திர குப்தரும் தனது சக்தியினை சோதிக்க விரும்பி படைப்புத் தொழிலை மேற்கொள்ள ஆரம்பித்தார். இதனால் பிரம்மா உட்பட தேவர்கள் அனைவரும் அதிர்ந்தனர். இதனை அவரது தந்தையான சூரியனிடம் தெரிவித்தனர். உடனே சூரியன் மகனிடம் மக்களின் இரவு,பகல் என்று பொழுதினைக் கணக்கிட்டு, மக்களின் வாழ்க்கையை நடைமுறைப்படுத்துபவன் நான். என் மகனான நீயும் அதே போல் மக்களின் கணக்கினை அதிலும் பாவ, புண்ணியத்தை கணக்கெடுப்பாயாக. படைப்புத்தொழில் உனக்கன்று. அது பிரம்மனின் தொழில் என்று எடுத்துரைத்தார் .
மேலும், தனது மகனுக்கு திருமணம் செய்தால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வருவான் என்று நினைத்த சூரியன், சித்திரகுப்தருக்கு மனைவியாக வரவேண்டி தவம் புரிந்த கன்னியர்களான சிவாம்சத்தில் உதித்து சத்ரிய தர்மத்தை வகித்த மயப்பிரம்மனின் மகள் நீலாவதி, அந்தணர் தர்மத்தை வகித்த விஸ்வ பிரம்மாவின் மகளான கர்ணகி ஆகியோரை தன் மகனுக்கு திருமணம் செய்வித்தார்.
சித்திரகுப்தன் பணியினை மறந்து இல்லற வாழ்க்கையில் மூழ்கி தன் கடமை மறந்தார் . இதனால் மீண்டும் கலவரம் அடைந்த எமதர்மன் நேராக தந்தை சூரியனிடம் சென்று தன் மனக் குறையை விளக்கினார். சூரியனும் சித்ரகுப்தருக்கு அவரின் பொறுப்புகளை விளக்கி எமதர்மனுக்கு உதவிபுரிய அனுப்பிவைத்தார். தன் மனைவியருடன் எமபுரிக்கு புறப்பட்ட சித்ரகுப்தர் அங்கே அமர்ந்து மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எந்த தவறும் வராதபடி இப்பொழுதும் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

சித்திரை பவுர்ணமி விழா
சித்திரை பவுர்ணமி விழா சைவர்களுக்கு மிக முக்கிய விழாவாக கருதப்படுகிறது . இந்த விழாவை கொண்டாடுவதன் மூலம் எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்தர், தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும்.
இந்த பூஜை இன்றளவும் கிராமப்புறங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது . அன்றைய தினம் வீட்டின் பூஜை அறையில் சித்திர குப்தன் படியளப்பு எழுதி , கூடவே விநாயகர் படத்தினை வைத்து அதற்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கல் படையலிடுகின்றனர். மேலும் இவற்றோடு காய்கறி ,பருப்பு மற்றும் தயிர் கடையும் மத்தினையும் வைக்கின்றார்கள். சித்திர குப்தரிடம் “எங்களில் மலையளவு பாவத்தினைக் கடுகளகாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக் கொள்” என வேண்டுகின்றனர். இந்நாளில் சித்திர குப்த நாயனாரின் புராணத்தினைப் படிப்பதைக் கிராமத்தில் இன்றும் வழக்கமாக வைத்துள்ளார்கள்.இந்த நாளில் கடல், ஆறு, வாயக்கால் போன்ற நீர்நிலைகளில் நீராடுவதும் சிறப்பு .
இந்திரன் தன் குருவை அலட்சியம் செய்த பாவம் அகலுவதற்காக மதுரைக்குச் சென்று அங்கிருந்த சுயம்பு மூர்த்திக்கு இந்திர விமானம் அமைத்து வழிபட்டு தன் பாவத்தைப் போக்கிக் கொண்டான் என்றும் சொல்லப்படுகிறது . ஆண்டுதோறும் தேவேந்திரனே நேரில் வந்து சுந்தரேஸ்வரருக்கு இந்நாளில் பூஜை செய்வதாக ஐதீகம். அந்தப் புண்ணிய தினத்தில் அன்னதானம் செய்வது மிகச்சிறந்தது என்றும் கூறுவர்.
இவ்வளவு சிறப்புமிக்க சித்திரகுப்தருக்கு காஞ்சிபுரத்தில் ஒரு ஆலயமும், திருவண்ணாமலையில் ஒரு சன்னதியும் உள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே கோடங்கிப்பட்டி, கோவை சிங்காநல்லூர் எமதர்மன் கோயில்களிலும் சித்ரா பவுர்ணமி தினத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்ய கடன் வசூலாகும், வாணிபம் சிறக்கும், ஆயுள்பலம் கூடும் என்பது மக்களிடையே காலகாலமாக நிலவி வரும் நம்பிக்கை.

இத்தகைய சிறப்புமிக்க இன்றைய சித்திரை பவுர்ணமி தினத்தில் நாமும் தனங்கள் பல செய்து நமது புண்ணியக் கணக்கில் அதிக வரவினை வைப்போம் .
-
பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் அழகர்….
சித்திரை திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வாக மதுரை வைகையாற்றில் அழகர் இன்று இறங்கினார். வைகை ஆற்றில் இறங்கிய அழகரை கைகளில் தீபம் ஏந்தி ஏராளமான பக்தர்கள் வரவேற்றனர். அப்போது கோவிந்தா கோவிந்தா என்ற பக்தர்களின் கோஷத்தால் வான் அதிர்ந்தது. கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் சித்ரா பெளர்ணமி தினமான இன்று நடைபெற்றது. இதனையொட்டி வைகை ஆற்றில் மக்கள் வெள்ளம் நிறைந்து காணப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசிக்க மதுரையில் திரண்டனர். ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து, பட்டுடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஸ்ரீராமானுஜர் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா மதுரை மக்களுக்கு இன்னொரு தீபாவளி போன்றது. அழகர் ஆற்றில் இறங்கும்போது அவர் அணிந்து வரும் உடையை பொறுத்தே அந்த ஆண்டில் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் ஊகிக்கப்படும். கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வந்தால் விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு அழகர் பச்சைபட்டுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் பவனி வந்தார். ஆற்றில் இறங்குவதற்காக மதுரை வந்த அழகருக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர் சேவையுடன் உற்சாக வரவேற்பளித்தனர். வைகையில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக அழகர்மலையில் இருந்து தங்கப் பல்லக்கில் நேற்று முன்தினம் இரவு 7.45 மணிக்கு அழகர் மதுரை புறப்பட்டார்.
நேற்று அதிகாலை மதுரை மூன்றுமாவடியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்சேவையுடன் அவரை வரவேற்றனர். தொடர்ந்து நேற்றிரவு தல்லாகுளம் பெருமாள் கோயில் வந்தார். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கிளி பரிவட்டம் உள்ளிட்டவைகள் அணிந்துதான் வைகை ஆற்றில் கள்ளழகர். அதன்படி இரவு திருமஞ்சனமாகி தங்கக் குதிரை வாகனத்தில் அமர்ந்தார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலையை அணிந்து கிளி பரிவட்டம் உள்ளிட்வைகளை உடுத்தி கொண்டு பக்தகோடிகளுக்கு கள்ளழகராக காட்சியளித்தார். முன்னதாக ஸ்ரீ ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை கிளி மற்றும் பரிவட்டம் ஆகியவைகளை திருக்கோவிலின் சார்பில் ஸ்தானிகர் பெற்று கொண்டு நான்கு மாட வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று மதுரைக்கு சென்றார். முன்னதாக ஆற்றுக்கு செல்லும் வழியில் அழகர், வெட்டிவேர் சப்பரத்திலும், பின்னர் மைசூர் மண்டபத்தில் ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளினார். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் வைகையாற்றில் இறங்கினார். ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு, பச்சை பட்டு உடுத்தி அழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதனை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்தனர்.
-
தெரிந்த கோயில் தெரியாத அதிசயம்…. தேவிகாபுரம் பொன்மலைநாதர் கோயில்
திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.
-
ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மங்களப் பொருட்கள் அனுப்பும் விழா
மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு, ஸ்ரீஆண்டாள் சூடிக் களைந்த மங்கள பொருட்கள் அனுப்பும் விழா ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் நடைபெற்றது. ஸ்ரீஆண்டாள் சூடிக் களைந்த வஸ்திரம், மாலை, கிளி உள்ளிட்டவற்றை மே9 ஆம் தேதி இரவு தல்லாகுளம் பெருமாள் திருக்கோயிலில் கள்ளழகர் திருமஞ்சனம் கண்டருளி சூடிக் கொள்வார். அதன் பின்னரே வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக ஸ்ரீஆண்டாளுக்கு விசேஷ மாலை, புது வஸ்திரம், கிளி உள்ளிட்டவை சூடப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் இவை மாட வீதிகளின் வழியே உலா வரப்பெற்று மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
-
தெரிந்த கோயில் தெரியாத அதிசயம்…. சோட்டானிக்கரை பகவதி அம்மன்
அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.
-
திருமலை உண்டியல் காணிக்கை….
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும், பக்தர்கள் ரூ.79.25 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர். கோடை விடுமுறையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை விட்டதையொட்டி வெளிமாநில பக்தர்கள் உட்பட தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் பக்தர்கள் ரூ.79.25 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர். இது கடந்தாண்டை விட ரூ.1.35 கோடி ரூபாய் அதிகம். இந்த மாதம் கோடைவிடுமுறை என்பதால் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தீவினைகள் விலகி, மனநிம்மதி தரும் மந்திரம்….
செல்வவளம் உண்டாக, பீடைகள், திருஷ்டி, தீவினைகள் விலக இந்த ஸ்ரீ தத்தாத்ரேயர் சாந்தி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
திருஷ்டி, தீவினைகள் விலகும் ஸ்ரீ தத்தாத்ரேயர் சாந்தி மந்திரம்நமஸ்தே பகவான் தத்தாத்ரேய ஜகத்பதே ….
சர்வ பாத ப்ரசமனம் குரு சாந்தி ப்ரயச்ச மே ….இந்த மந்திரத்தை ஜெபித்து வரக் குடும்பத்தில் அமைதி, மனநிம்மதி உண்டாகும். புதன்கிழமை புதன் ஹோரையில் இடது கையில் பஞ்சபாத்திரத்தில் நீர் வைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை சிறிது அருந்திப் பின்னர் மீதம் உள்ள தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க செல்வவளம் உண்டாவதோடு பீடைகள், திருஷ்டி, தீவினைகள் விலகும். தீர்த்தத்தை கால்களில் மிதிபடாதபடித் தெளிக்கவும்.
-
மகா பைரவர் கோயிலில் பிரம்மோற்சவம்….
செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் சாலையில் உள்ள ஈச்சங்கரணை மகா பைரவர் ருத்ராலய பிரம்மோற்சவம் விழா தொடங்கியது.
காலையில் கணபதி ஹோமம், விநாயகர் உற்சவத்தைத் தொடர்ந்து பைரவருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அங்குரார்ப்பணம், பைரவர் ஹோமத்துடன் கொடியேற்றமும், புதன்கிழமை காலை அஷ்டமி தின சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.அன்று மாலை பைரவருக்கு வெள்ளிக் கவசம் அணிவித்தலும், இரவு அன்னவாகன வீதியுலாவும் நடைபெறுகிறது. 3-ஆம் நாளான வியாழக்கிழமை மகா பைரவர் ஹோமம், அன்னதானம், நந்தி வாகன வீதி உலாவும், 6ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை பைரவருக்கு சந்தன காப்பும், ஸ்ரீ ஆனந்த மகா பைரவருக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.
8ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை தேர்த் திருவிழாவும், 9ஆம் நாள் மாலை படிபூஜை, இரவு யானை வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது.
மே 11-ஆம் தேதி வியாழக்கிழமை காலை தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தினமும் பட்டிமன்றம், இன்னிசை விழா, பரத நாட்டியம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.