Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • அருள் தரும் பஞ்ச பூத திருத்தலங்கள் (வாயு தலம் – காற்று)

     

    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சிவசக்திகளால் ஆனது இவ்வுலகம் . பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படும்  இந்த ஐந்து சக்திகளுக்கு உலகை ஆக்கும், காக்கும், அழிக்கும் வல்லமைகள்  உண்டு. சமஸ்கிருத மொழியில் இந்த பஞ்ச பூதங்களை பிருத்வி(நிலம்), அப்பு(நீர்), தேயு(நெருப்பு), வாயு(காற்று ), ஆகாசம்(வான்) என அழைக்கிறோம் . எம் பெருமான் பஞ்ச பூதங்களின் வடிவில்  அருள்புரியும் ஐந்து சிவதலங்கள் நம் தென் இந்தியாவில் உள்ளது .

     

    வாயு தலம் – காற்று

     

    ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் ஞானப்பூங்கோதை திருக்கோயில் வாயுதலமாகும். தட்சிண கைலாசம், அகண்டவில்வாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம் என்றெல்லாம் புகழப்படும் இத்தலத்தில் பிவேசிப்பதே முக்தி எனப்படுகிறது. சிலந்தி, பாம்பு, யானை என உயிர்கள் வழிபட்டு சிவபெருமானை அடைந்த தலம்.

     

    சிலந்தி ஒன்று, சிவனை வழிபட நினைத்தது. தன்னிடம் சுரக்கும் நூல் போன்ற திரவத்தால், மதில், கோபுரம், மண்டபம், மாளிகை, கருவறை, கலசம் என, கோவில் அமைத்தது. யாராவது அதை அறுத்து விட்டால், விடாமல் புதுப்பித்தது.

    சிலந்தியின் அன்பை சோதிக்க விரும்பிய சிவன், தன் சன்னிதியில் இருந்த விளக்கை, சுடர்விட்டு எரியும்படி செய்தார். ஒரு நொடியில் சிலந்தி அமைத்த கோவில் எரிந்தது. மனம் வருந்திய சிலந்தி, உயிர்விடத் துணிந்து, விளக்கில் விழ முயன்ற போது, தடுத்தார் சிவன். சிலந்திக்கு காட்சி தந்து, “வேண்டும் வரம் கேள்!’ என்றார்.

    உலகப்பொருட்கள் மீது ஆசையில்லாத சிலந்தி, “பெருமானே… உன் திருவடியின் கீழ் அமரும் பாக்கியத்தை தர வேண்டும்…’ என்றது. சிவனும் அவ்வாறே அருள்புரிந்தார். காளன் என்னும் பாம்பு, அரிய வகை ரத்தினக்கற்களை சிவனின் திருமுடியில் வைத்து பூஜித்து வந்தது. அத்தி எனும் யானை, அந்த ரத்தினங்களை தள்ளிவிட்டு, ஆற்றிலிருந்து நீர் எடுத்துவந்து, சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ இலைகளை வைத்துச் சென்றது. மறுநாள் வந்த பாம்பு, “ரத்தினக் கற்களை சிதறடித்து, ஏதோ இலையை குப்பை போல் போட்டிருக்கின்றனரே…’ என்று புலம்பியவாறே, அதைச் சுத்தப்படுத்தி, மீண்டும் ரத்தினக் கற்களை இறைவன் திருமுடியில் சூட்டி, பூஜித்து சென்றது.

    யானை வழக்கம் போல் வந்து மணிகளைத் தட்டிவிட்டு, வில்வத்தைச் சூட்டிச் சென்றது. பல நாட்கள் இதே நிலை தொடர்ந்தது. ஒருநாள், யார் இப்படி செய்கின்றனர் என அறிய, சன்னிதிக்குள் மறைந்திருந்தது பாம்பு. அப்போது யானை, அங்கு வந்து மணிகளைத் தட்டி விடவே, ஒளிந்திருந்த பாம்பு சீறியெழுந்து, யானையின் துதிக்கையில் உள்ள துளைக்குள் புகுந்து, மத்தகத்தை அடைந்து குடையத் தொடங்கியது.

    யானை அதைத் தாங்க முடியாமல், நிலத்தில் தும்பிக்கையை அடித்தும், ரத்தம் வரும் அளவு மத்தகத்தை தரையில் தேய்த்தும் பார்த்தது; குடைச்சல் தீரவில்லை. இதனால், “உடலில் புகுந்த பாம்பைக் கொன்று, நாமும் இறப்போம்…’ என்று கருதி, கோபத்துடன் அங்குள்ள மலைமேல் மோதியது.

    இந்த முழக்கத்தைக் கேட்ட தேவர்கள் நடுங்கினர். குகைகளில் தங்கியிருந்த முனிவர்கள் பயந்தனர். யானை தலை பிளந்து மயங்கி விழுந்தது. பாம்பு வெளியே வர முடியாமல் தவித்தது. அப்போது சிவபெருமான் உமையம்மையோடு காளை வாகனத்தில் தோன்றி, யானையை எழுப்பினார். உள்ளிருந்த பாம்பு வெளியே வந்தது. இரண்டிற்கும் தரிசனம் தந்த சிவன், அவற்றிற்கு முக்தியளித்தார்.

    “சீ’ என்றால் சிலந்தி. காளம் என்றால் பாம்பு. ஹஸ்தி (அத்தி) என்றால் யானை. சிலந்தி, பாம்பு, யானை ஆகியவை இத்தலத்து இறைவனை வழிபட்டு முக்தி அடைந்ததால் இத்தலத்தை, “சீகாளத்தி’ என்றும், காளஹஸ்தி என்றும் அழைத்தனர்.

    தட்சிண (தென்) கயிலாயம் என்னும் சிறப்புடைய இத்தலத்தில் இறைவன் வாயுலிங்கமாக காட்சி தருகிறார் . சுவர்ணமுகி எனப்படும் பொன்முகலி ஆற்றின் கரையில் உள்ளது இத்திருத் தலம். வடக்கு முகமாகப் பாய்ந்து ஓடுவதால் இவ்வாறு  உத்தரவாகினி  என அழைக்கப்படுகிறது . இங்கு அஸ்தி கரைப்பது விசேஷமாக கருதப்படுகிறது .

    மூலவர், சுயம்பு – தீண்டாத் திருமேனி. இங்குள்ள ஆவுடையார் பிற்காலத்தில் கட்டப்பட்டது.

     

    சுவாமி மீது தங்கக் கவசம் சார்த்தும்போதும் எடுக்கும்போதும் கூட சுவாமியைக் கரம் தீண்டக்கூடாது. இருபத்தேழு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ள இக்கவசத்தில் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவமும், மத்தியில் யானையின் இருதந்தங்களும், மேற்புறத்தில் ஐந்து தலை பாம்பு வடிவமும் வலப்பால் கண்ணப்பர் கண் அப்பிய வடுவும் அழகுற அமைந்துள்ளன.  மூலவர் எதிரில் கதவருகில் உள்ள இரு தீபங்கள் காற்றினால் மோதப்பெற்றதுபோல் எப்போதும் அசைந்து கொண்டு , வாயுத்தலம் என்பதற்கு சாட்சியாக  இருக்கிறது .

    சர்ப்ப தோஷம் முதலியவை நீங்கும் தலமாதலின் இங்கு இராகு கால தரிசனம், இராகுகால சாந்தி முதலியன விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

    இக்கோயிலில் உச்சி காலம் முடித்து நடைசார்த்தும் வழக்கமில்லை; காலை முதல் இரவு வரை திறந்தே இருக்கின்றது.

  • அருள் தரும் பஞ்ச பூத திருத்தலங்கள் (தேயு தலம் – நெருப்பு )

     

    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சிவசக்திகளால் ஆனது இவ்வுலகம் . பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படும்  இந்த ஐந்து சக்திகளுக்கு உலகை ஆக்கும், காக்கும், அழிக்கும் வல்லமைகள்  உண்டு. சமஸ்கிருத மொழியில் இந்த பஞ்ச பூதங்களை பிருத்வி(நிலம்), அப்பு(நீர்), தேயு(நெருப்பு), வாயு(காற்று ), ஆகாசம்(வான்) என அழைக்கிறோம் . எம் பெருமான் பஞ்ச பூதங்களின் வடிவில்  அருள்புரியும் ஐந்து சிவதலங்கள் நம் தென் இந்தியாவில் உள்ளது .

     

    தேயு தலம் நெருப்பு

     

    அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், மற்றும் சம்பந்தர் சிறப்பாக பாடியுள்ள சிறந்த பாடல் பெற்ற தலமாக தமிழ்நாட்டின்  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாசலேஸ்வரர் உண்ணாமுலையம்மை திருக்கோயில் விளங்குகிறது . இது தேயு தலமாகும். ‘தேயு’ என்றால் நெருப்பு என்று பொருள்படும் . ஒரு முறை  பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையே யார் பெரியவன் என்று நிகழந்த போரில்  , அடிமுடி காணமுடியாத நெருப்பு பிரளயமாக உயர்ந்து , தானே பெரியவன் என்று சிவபெருமான் உணர்த்தினார். பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் இறைவன் நெருப்பாக தோன்றி அருள் செய்த தலம் இது.

     

    கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் வரும் நாளில்  மலையின் உச்சியில் ஏற்றப்படும் மஹா தீபத்தை தரிசிக்க ஆயிரக்கணகில் பக்தர்கள் இங்கு கூடுவது வழக்கம் .  திருவண்ணாமலையில்  ஓவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் கிரிவலம் வருவது புண்ணியமாக கருதப்படுகிறது. லட்சக் கணக்கான சிவ பக்தர்கள் பௌர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர்.

    அருணாச்சலேஸ்வரர் கோயிலில்  அமைந்துள்ள இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம், எனப்படும்  எட்டு வித லிங்கங்கள் மனிதனுடைய ஓவ்வொரு காலகட்டத்தை குறிப்பதாக நம்பப்படுகிறது . 

  • அருள் தரும் பஞ்ச பூத திருத்தலங்கள் (அப்பு தலம் – நீர்)

     

    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சிவசக்திகளால் ஆனது இவ்வுலகம் . பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படும்  இந்த ஐந்து சக்திகளுக்கு உலகை ஆக்கும், காக்கும், அழிக்கும் வல்லமைகள்  உண்டு. சமஸ்கிருத மொழியில் இந்த பஞ்ச பூதங்களை பிருத்வி(நிலம்), அப்பு(நீர்), தேயு(நெருப்பு), வாயு(காற்று ), ஆகாசம்(வான்) என அழைக்கிறோம் . எம் பெருமான் பஞ்ச பூதங்களின் வடிவில்  அருள்புரியும் ஐந்து சிவதலங்கள் நம் தென் இந்தியாவில் உள்ளது .

     

    அப்பு தலம் –  நீர்

     

    தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், திருவானைக்காவல் என்று அழைக்கப்பெறும் ஐம்புலிங்கேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் ,அப்பு தலமாகும். ‘அப்பு’ என்றால் நீர் என்று பொருள்படும் .  புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.

    சிவ பக்தர்களாக யானையும் சிலந்தியும் சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும்.

    சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது.

    உமையம்மை ஈசனை வணங்க நீரைக் கொண்டு லிங்கம் செய்ததால் , இந்த லிங்கம் அப்புலிங்கம் என்று அழைக்கப்படுகிறது.

    மூலரான ஜம்புகேசுவரரின் லிங்கம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால்  எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருப்பதைப் பார்க்க முடியும் கோடையில், காவேரி வற்றிப் போகும்  நேரங்களிலும், கூட இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

     

    திருவானைக்காவில் ஆட்சி செய்யும் அன்னையின் திருநாமம்  அகிலாண்டேஸ்வரி. மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக காட்சியளித்த  அம்பாளை சாந்தம் செய்ய ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமாக  காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது. அதிகாலையில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

     

  • அருள் தரும் பஞ்ச பூத திருத்தலங்கள்

     

    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சிவசக்திகளால் ஆனது இவ்வுலகம் . பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படும்  இந்த ஐந்து சக்திகளுக்கு உலகை ஆக்கும், காக்கும், அழிக்கும் வல்லமைகள்  உண்டு. சமஸ்கிருத மொழியில் இந்த பஞ்ச பூதங்களை பிருத்வி(நிலம்), அப்பு(நீர்), தேயு(நெருப்பு), வாயு(காற்று ), ஆகாசம்(வான்) என அழைக்கிறோம் . எம் பெருமான் பஞ்ச பூதங்களின் வடிவில்  அருள்புரியும் ஐந்து சிவதலங்கள் நம் தென் இந்தியாவில் உள்ளது .

     பிருத்வி தலம் நிலம்

     

    பஞ்சபூத தலங்களில் பூமிக்கான திருத்தலம் திருவாரூர். திருவாரூரில் பிறந்தால் முக்தி என்று புகழப்படும் சிறப்பினை உடையது இத்திருத்தலம் .  மிகவும் பிரம்மாண்டமாக  33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள  இக்கோயில்,  9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் , 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் கொண்டு புகழ்பெற்று விளங்குகிறது  . ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும்.

     

    நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம் மற்றும்  நட்பின் முக்கியத்தை உணர்த்த , சுந்தரருக்காக , சிவனே வீதியில் நடந்துசென்று பெண் கேட்ட திருத்தலம் என ஏகப்பட்ட சிறப்புகளுக்கு சொந்தமான இக்கோயிலில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன. வான்மீகிநாதர் ,மற்றும் தியாகராஜர் என சிவபெருமானுக்கு இரண்டு திருநாமங்கள். மிகவும் பழமையான வான்மீகி நாதர் சந்நிதியில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதால் புற்றிடங் கொண்ட நாதர் என்று வழங்கப்படுகிறார்.

    இதே போன்று காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலும் பஞ்ச பூத தலங்களில் நிலத்துக்கான ஒன்றாக கருதப்படுகிறது .

  • சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு….

    வைகாசி மாத பூஜைகள் நிறைவு பெற்றதையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது.
    வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 14-ந் தேதி மாலையில் திறக்கப்பட்டது. 15-ந் தேதி முதல் வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ர கலச பூஜை, களபாபிஷேகம் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

    இந்த பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை வழிபட்டனர். 5 நாட்களாக நடைபெற்று வந்த வைகாசி மாத பூஜைகள் நேற்று நிறைவு பெற்றது. முன்னதாக தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் நேற்று லட்ச்சார்ச்சனையும், தொடர்ந்து மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி தலைமையில் களபாபிஷேகமும், களபம் தாங்கிய கலசத்துடன் ஊர்வலமும் நடைபெற்றது. இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்பட்டது.
    சபரிமலையில் சாமி விக்ரகம் அமைக்கப்பட்ட தினம் ஜூன் 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 3-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். 4-ந் தேதி வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம் உள்பட பூஜைகள் நடைபெறும்.
    அன்றைய தினம் இரவு நடை அடைக்கப்பட்டு, மீண்டும் ஆனி மாத பூஜைக்காக கோவில் நடை ஜூன் 14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் ஆனி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

  • தாயுமானவர் சாட்சிநாதர் ஆன கதை

     

    திருப்புறம்பியம் – கோயில் சூழ் கும்பகோணம் நகரில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிவ தலம். பொன்னியின் செல்வன் வரலாற்று காவியம்  படித்த வாசகர்கள் நெஞ்சில் நிலைத்துள்ளது  திருபுறம்பியம் பள்ளிப்படைக்கோவில்.

     

    திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும்  சேர்ந்து பாடிய அபூர்வ கோவில்களில்  ஒன்று திருப்புறம்பியம் சாட்சிநாதசுவாமி கோவில். முற்காலத்தில் பிரளயம் ஏற்பட்டு அனைத்து ஊர்களும் அழிந்த காலத்தில் இந்த ஊர் மட்டும் சாட்சியாக நிலைத்துள்ளது.

     

    சுற்றிலும் உள்ள நீரை ஊருக்குள்ளே புகவிடாமல் விநாயகர் தடுத்து புறத்தே நிறுத்தி காத்ததால்  ,இந்த ஊருக்கு ‘திரும்புறம்பயம்’ என்றும், விநாயகருக்கு ‘பிரளயம் காத்த விநாயகர்’ என்றும் பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது . வருண பகவானால் நத்தான்கூடு, கிளிஞ்சல், கடல் நுரை போன்ற பொருட்களால் உருவாக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டது தான் இந்த பிரளயம் காத்தவிநாயகர் .

     

    விநாயகப்பெருமானுக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியன்று நடத்தப்பெறும் தேனாபிஷேகத்தை தவிர, வேறு எந்த நாளிலும் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதும் விநாயகப்பெருமானின் திருமேனியில் உறிஞ்சப் பெறுவது வேறு ஏங்கும் காணக்கிடைக்காத  அதிசயம் .மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோவிலில் இரு தீர்த்தங்கள் உள்ளன. இந்த தீர்த்தங்களில் பிரளயத்தின் ஏழு கடல்களும் வந்து அடங்கி உள்ளதாக  ஐதீகம்.

     

    கோபுர வாயிலுக்கு வெளியே வலதுபுறம் தனிக்கோவிலில் கருணையே வடிவான குரு பகவான் குடி கொண்டுள்ளார். தமிழகத்திலேயே தனிக்கோவிலில் குரு பகவான் எழுந்தருளி அருள் வழங்கும் திருத்தலம் இது ஒன்று தான் என்பது கூடுதல் சிறப்பு .

     

     

     

    இறைவன் சாட்சிநாதர் ஆன கதை

     

     மனிதனின் வாக்கிற்கு மதிப்பு நிலைக்காத நேரத்தில் தன்னை நோக்கி அபாய குரல் எழுப்பிய நங்கைக்கு இறங்கி இறைவனே சாட்சி சொன்னதால் சாட்சிநாதர் ஆனார் .

     

    காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த அரதன குப்தன் என்ற வணிகன் ஒருவன் ,மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு , மதுரையிலேயே வாழ்ந்து வந்தான்.

     

    காவிரிபூம்பட்டினத்தில் அவன் தங்கையும் ,தங்கையின் கணவரும் வசித்து வந்தனர்  . அவர்களுக்கு தங்கள் மகள் ரத்னாவளியை அரதன குப்தனுக்கே மணம் முடித்து வைக்க ஆசை  .ஒரு நாள் எதிர்பாராமல் தங்கையும் , அவள் கணவரும் இறந்துவிட்டதாக  தகவல் அறிந்த  அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான் .

     

    இரவானதால் பயணக்களைப்பில் , வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்தில் இருந்த ஒரு புன்னைவனத்தில் தங்கினர் .அங்கே ஒரு வன்னிமரத்தின்  அருகில் ஒரு சிவலிங்கம் , சற்றுத் தள்ளி ஒரு கிணறு இருந்தது . அன்றிரவு இருவரும் அங்கேயே தங்கி விட முடிவு செய்து உறங்கினார்கள் . காலையில் கண் விழித்த ரத்னாவளி,   அரவம் தீண்டி பிணமாக இருந்த அரதன குப்ததைப்  பார்த்து கதறி அழுதாள் .

     

    அப்போது அவ்வழியே வந்த திருஞானசம்பந்தர் , அப்பெண்ணுக்கு மனமிரங்கி ஈசனிடம் முறையிட, இறைவனும் அரதன குப்தனை உயிரோடு எழுப்பினார் . இருவரையும் பற்றி தெரிந்துக்கொண்ட சம்பந்தர்  “ஈசனுக்கு முன்பாகவே இந்தப் பெண்ணுக்கு ஒரு தாலியைக் கட்டி , இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ..”என்று கூறினார் .

     

    மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன். வன்னிமரமும், கிணறும் , சிவலிங்கமும் கல்யாணத்திற்கு சாட்சிகலானார்கள் . இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள். கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்டாள்  முதல் மனைவி .  ரத்னாவளி நடந்த விஷயங்களை , உள்ளது உள்ளபடியே  எவ்வளவோ சொல்ல முயன்றும்  அதை கொஞ்சமும் நம்பாமல் ,  ரத்னாவளி கேவலமாக பழித்துப் பேசினாள்  .

     

    வழக்கு சபைக்கு வந்தது. திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்க “மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி..” என்று கூறினாள் ரத்னாவளி.முதல் மனைவி கேலியாக ,“அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?” என்று கேட்க கூடி இருந்தவர்களும் சிரித்தார்கள்.

     

    தனக்கு ஏற்பட்ட அவமானத்தால் கூனிக்குறுகிப் போன ரத்னாவளி , கைகூப்பி இறைவனிடம் அழுதாள் .  “ஈசனே…இது என்ன சோதனை..? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்..? என ரத்னாவளி கதறி அழ ,அங்கே அசரீரியாக கேட்டது  ஒரு குரல் ,”நாங்கள் சாட்சி..” கூட்டத்தினர் அனைவரும் திகைத்துப் பார்க்க….ஈசன் அங்கே எழுந்தருளி“ ஆம்…இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான். ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக ,கல்யாணம் நடந்த இடமான திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல் ,இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் ‌சாட்சியாக இருக்கும்..” என்று சொல்லி மறைந்தார் திருவிளையாடலின்  நாயகன்  ஈஸ்வரன்.

     

    இப்போதும் , மதுரையில் சுவாமி சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில் வன்னி மரம் , கிணறு, சிவலிங்கம் ஆகியவற்றைக் காண  முடியும் .

     

    அன்று ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்காக தாயுமானவராக மாறிய ஈசன் , ரத்னாவளிக்காக சாட்சிநாதர் ஆனார். இறைவனை  நம்பினோர் என்றைக்கும் கைவிடப்படார். ஓம் நமச்சிவாய….

  • பகலில் கோபுரத்தின் நிழலை காண முடியாத பூரி ஜெகன்நாதர் கோவில்

     

    வைணவத் திருக்கோயில்களில் ஒன்றான பூரி ஜெகன்நாதர் கோவில் 12ஆம் நூற்றாண்டில் கீழைக் கங்க குல அரசன் ஆனந்தவர்மனால் கட்டப்பட்டது .  ஒடிசா மாநிலத்தில், பூரி கடற்கரை நகரத்தில் அமைந்தள்ள இக்கோவிலின் ரத யாத்திரை உலகப் புகழ் பெற்றதாகும் .  ஆண்டு தோறும் 9 நாட்கள் நடைபெறும் தேரோட்டத் திருவிழாவில்,  இலட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் நாடு முழுவதிலிருந்து கலந்து கொள்கிறார்கள்.

    தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பாலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வர்.

    ஆண்டுதோறும் ,45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர், திருவிழாவிற்காக மரத்தால் கட்டப்படுகிறது.

    பாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் ‘ரத்ன வீதி’யைத் தங்கத் துடைப்பத்தால் பூரி நகர மன்னர் கஜபதி பெருக்கிச் சுத்தம் செய்வார். முதலில் பாலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகன்நாதர் எழுந்தருளிய தேர் புறப்படும்.

    இக்கோயிலின் மூலவர்களான ஜெகன்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரையின் திருமேனிகள் முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் அமைந்துள்ளது .  மரத்தால் ஆன இத் தெய்வத் திருமேனிகள் , 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிய சடங்குகளுடன், புதிய மரத்தால் செதுக்கி அமைக்கப்படும்.

     

    இதற்கான  புராண கதையும் சுவாரசியமானது

     

    பூரியை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் எனும் அரசனின் கனவில் கிருஷ்ணன் கூறியவாறு, பூரி கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு சிலையை செதுக்குமாறு பெருமாள் கூறினார். ஒரு நாள் ஒரு பெரிய மரக்கட்டை கடலில் மிதந்து வந்தது. அதைக் கொண்டு காவலர்கள் எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர். அரசன் அந்த மரக்கட்டைக்கு பெரிய பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலை செய்யும்படி கூறினார். தச்சர்களின் தலைவர் சிலை செய்வதற்காக அந்த மரத்தில் உளியை வைத்தவுடன் உளி உடைந்துவிட்டது. அப்போது அவர் முன்பு பெருமாள் ஒரு முதிய தச்சனைப் போல வேடமணிந்து தோன்றினார். அரசனிடம் 21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலைசெய்யும் அறையை யாரும் திறக்கக் கூடாது என்றும் கூறினார். அதற்கு அரசனும் ஒப்புக்கொண்டார். 15 நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச்சத்தம் கேட்டது. எனவே அரசன் வேலை மும்முரமாக நடக்கிறது என எண்ணி அந்த அறைப்பக்கம் போகவில்லை. அதையடுத்து மூன்று நாட்கள் சத்தமே இல்லை. இதனால் தச்சர் தூங்கிவிட்டாரோ என எண்ணி, அரசன் அவசரப்பட்டு கதவைத் திறந்து விட்டான். உடனே தச்சர் கோபமடைந்தார். மூன்று நாட்கள் சத்தம் வரவில்லை என்றதும் எனது அறைக்கதவை திறந்துவிட்டாய். எனவே இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரைகுறையாகவே இருக்கும். அப்படி இருந்தாலும் பரவாயில்லை. அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு. இந்த கோயிலுக்கு வருபவர்கள் சிலையைப் பார்த்துவிட்டு பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வார்கள் என்று அருள்பாலித்தார். அந்த அறையில் வேலை முடியாத நிலையில் ஜெகன்நாதர், பலராமன், சுபத்திரா ஆகியோரின் சிலைகள் இருந்தன. அந்த சிலைகளையே அரசர் பிரதிஷ்டை செய்தார்.

     

    பூரி ஆலயம் ,தேரோட்டத்திற்கு மட்டுமன்றி வேறு சில அதிசயங்களையும் பெருமைகளாகக் கொண்டது .

    பூரி ஜெகன்நாதர் ஆலய கோவிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.

    கோவில் இருக்கும் பூரி என்ற ஊரில் எந்த இடத்தில் , எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் , கோவிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும் அமைப்பைக் கொண்டது .

    பொதுவாக கடற்கரை நகரங்களில்  காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் , காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும்  மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும். ஆனால் பூரியில் இதற்கு நேர் எதிராக நடக்கும் அதிசயத்தை காணலாம் . 

    இக்கோயிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில் எந்த நேரத்திலும் காண முடியாது .

    இந்த கோவிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகளோ பறக்காதது ஆச்சரியமான ஒன்றாகும் .

     

    இவை எல்லாவற்றையும் விட ,  இந்த கோவிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும். வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி , இருபது லட்சமானாலும் சரி இதுவரை அங்கு சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதுமில்லை. மீந்து போய் வீணானதுமில்லை.

    இந்த கோவிலின் சமையலறையில் ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு , விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள். அப்படி சமைக்கும் போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும்.

    சிங்கத் துவாராவின் முதல் படியில் கோவிலின் உற்புறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது , கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது. ஆனால் , அதே சிங்கத் துவாராவின் முதல் படியில் கோவிலின் வெளிபுறமாக நுழையும் போது ,கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்கு கேட்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இவ்வாலயத்தின் சிறப்பு . 

  • ஸ்ரீகிருஷ்ணர் ஏன் இப்படி செய்தார் ?

    மகாபாரத கதைகளில்  நாம் அதிகம் அறிந்து கொள்ள படாத பாத்திரங்களில் விதுரரும் ஒருவர் .  விதுரர் தர்மத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர்.., தர்மராஜர்…, அப்பழுக்கில்லாதவர்…

    ‘பெண்கள் –  தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக என எந்த நிலையிலும் அவர்களை உயர்வாக வைத்து போற்ற வேண்டியவர்கள்’ என தர்ம சாஸ்திரம் சொல்கிறது.

    திரெளபதியை துச்சாதனன் துகில் உரியும்போது விதுரர் ஒருவரை தவிர மற்ற பெரிய வீரர்கள் அனைவரும் வாய் திறக்காமல் மெளனமாக இருந்த காரணத்திற்கான  தண்டனை தான்… விதுரரை தவிர மற்ற பெரிய வீரர்கள் அனைவருக்கும் யுத்தத்தில் மரணம் அடைந்தார்கள் .  கெளரவர் பக்கத்திலிருந்து போராடும் பெரிய பெரிய வீரர்களை வீழ்த்த ஸ்ரீகிருஷ்ணர் போட்ட திட்டங்கள் அவ்வளவு கடினமானது இல்லை.

    ஏனெனில், ஒவ்வொருவருக்கும் ஒரு பலஹீனம் இருந்தது. எனவே அவர்களை எளிதில் வீழ்த்த முடிந்தது. ஆனால், மேற்கண்ட பண்புகளால் விதுரரை மட்டும்  வீழ்த்தவே முடியாது… விதுரர் ‘வில்’ எடுத்தால் அவரை ஜெயிக்கவே முடியாது…

    யுத்தம் என்று வந்தால்… மற்ற பெரியவர்கள் – பீஷ்மர், துரோணர் போல் விதுரரும் செஞ்சோற்றுக் கடனுக்காக, கெளரவர்கள் பக்கம் நின்று போரிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற முடியாது.

    மஹாபாரதப் போரின் முடிவு திசை மாறியிருக்கும்.

    அதனால்…தான் எல்லோரையும் விட மிக முக்கியமான நபராக  கிருஷ்ணனால் குறிக்கப்பட்டவர் விதுரர் . அவர் கெளரவர்களுக்காக நிச்சயம் போரிடக் கூடாது.

    மேலும், தர்மநெறி படி விதுரர் போரில் மரணமடைய கூடிய நியதியும் கிடையாது.

    விதுரரை போரிடாமல் எப்படி தடுக்க  ஸ்ரீகிருஷ்ணர் தர்ம வியூகம் அமைக்கிறார். அதன்படி, பாரதப்போரைத் தடுக்க, ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்காகத் தூது செல்கிறார்.  ‘கிருஷ்ணர் வருகிறார் ‘ என்று தெரிந்ததும்… திருதராஷ்டிர மகாராஜா தடபுடல் வரவேற்பு எற்பாடு செய்திருந்தார்.

    துரியோதனன் சபைக்குச் செல்லும் நாளுக்கு முந்தின இரவு, ‘ஸ்ரீகிருஷ்ணர் யார் வீட்டில் தங்குவார்?’ என்ற கேள்வி பிறந்தது. நான், நீ என்று எல்லோரும் அவரை அழைத்தார்கள்.  ஸ்ரீகிருஷ்ணரோ, “நான் தூதுவன்… என் வேலை வெற்றி பெற்றால்தான் உங்கள் உபசரணைகளை ஏற்றுக்கொள்வேன்.

    இப்போது இந்த இரவில் நான் விதுரர் வீட்டுக்குச் சென்று என் பொழுதைக் கழிக்கிறேன்…” என்றார்.  விதுரருக்கு மகா சந்தோஷம்… தனக்கு பிரியமான கிருஷ்ணர் தன் விருந்தினராக வருவதைப் பெரும் பாக்கியமாகக் கருதினார்.

    விதுரர் வீட்டில் கிருஷ்ணர் இரவு பொழுதைக் கழித்தார்… மறுநாள், அரச சபையில் ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்காக  வாதாடினார். துரியோதனன், “ஒரு ஊசி முனை நிலத்தைக்கூடப் பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது…” என்று சொல்லி கிருஷ்ணரையும் அவமதித்துப் பேசினான்.

    கிருஷ்ணரும், “யுத்தம் நிச்சயம்…” என்று சொல்லிவிட்டு பாண்டவர் முகாமுக்குத் திரும்பினார்.  வழியில்… கிருஷ்ணருடைய சாரதி, “சுவாமி! எந்த நோக்கத்தில் நீங்கள் விதுரர் மாளிகையில் தங்க முடிவு செய்தீர்கள் ?” என்றான்.

    கிருஷ்ணா் சொன்னார், “அனைத்தும் நல்லதுக்கே… இதன் விளைவு இப்போது துரியோதனன் சபையில் நடந்து கொண்டிருக்கிறது…” என்று சொல்லி சிரித்தார்.

    அதேபோன்று… அப்போது துரியோதனன் சபையில் எல்லோரும் துரியோதனனிடம் கெஞ்சி, ‘கிருஷ்ணா் பேச்சைக் கேட்டு யுத்தத்தை தவிர்க்க வேண்டும்…’ என்று வாதாடினார்கள்.  அதில் விதுரர் குரல் தான் ஓங்கி ஒலித்தது ஏற்கனவே துச்சாதனன் துயில் உறியும் போது விதுரர் தட்டி கேட்டது…

    பாண்டவ தூதரான கிருஷ்ணரை விதுரர் தன் வீட்டில் முதல் நாள் இரவு தங்கவைத்து  உபசாரம் செய்தது… என துரியோதனனுக்கு விதுரர் மேல் வெறுப்பு இருந்தது…

    இதன்மூலம் அவர் பாண்டவர்கள் கட்சி என்றும் ஒரு நினைப்பு. இப்போதும் விதுரர், கிருஷ்ணர் பேச்சைக் கேட்டு கொண்டு போரை நிறுத்த வாதாடியதும், துரியோதனனுக்குக் கோபம் பொத்துக் கொண்டுவந்தது… என்ன பேசுகிறோம் என்ற நினைப்பில்லாமல் நாக்கில் நரம்பின்றி விதுரரை அவமானப்படுத்திப் பேசினான்.

    குறிப்பாக, அவரை ‘தாசி புத்திரன்’ என்று திட்டித்தீர்த்தான். இதனால்,விதுரர் மிகுந்த அவமானமடைந்தார்… ஆவேசமடைந்த விதுரர், சபையோர்கள் நடுங்க சபதமிட்டார்.

    “உனக்கு அழிவு காலம் நெருங்கி விட்டது துரியோதனா!… இனி உனக்காக நான், என் வில்லை எடுத்துப் போரிட மாட்டேன்… அதே சமயம் நான் பாண்டவர்கள் பக்கமும் செல்லமாட்டேன்… எனக்கு இங்கே இனிமேல் வேலையில்லை…” என்று சொல்லித் தன்னுடைய வில்லை இரண்டாக உடைத்துவிட்டு சபையிலிருந்து வெளியேறினார்.

    யுத்தம் முடியும் வரை அவர் தீர்த்த யாத்திரையிலிருந்து திரும்பவில்லை…

    ஸ்ரீகிருஷ்ணர், விதுரர் வீட்டில்  தங்காமல் இருந்தால்…விதுரர் வில்லை உடைத்து வெளியேறியிருக்க மாட்டார் . துரியோதனனுக்காகப் போராட வேண்டிய ஒரு கட்டாயம் விதுரருக்கு வந்திருக்கும் . விதுரர் வைத்திருந்த ‘வில்’தர்ம சக்கரம் கொண்ட மஹாவிஷ்ணுவின் வில்…

    ‘கோதண்டம்’ எனப்படும் அந்த வில்லை எவராலும் வெல்ல முடியாது.  அர்ஜுனன் கையில் உள்ள வில் பிரம்மாவுடையது. ‘காண்டீபம்’ என்பது அதன் பெயர். போரில் விதுரர் கோதண்டத்துடன் வந்து நின்று விட்டால் ஆனானப்பட்ட அர்ஜுனனால் கூட தன் வில்லான காண்டீபம் கொண்டு அவரை வெல்ல முடியாது!

    தர்மராஜனான விதுரரை ஜெயிக்கவே முடியாது என்ற தர்மம் உணர்ந்த ஸ்ரீகிருஷ்ணர் செய்த மஹா தர்ம யுக்தி தான் மஹாபாரத வெற்றி…!

     புத்தியுள்ளவன் பலவான்…. ஸ்ரீ கிருஷ்ணார்ப்பனம்

  • தெரிந்த கோயில் தெரியாத அதிசயம்…. கும்பகோணம் நல்லம் ஆலயம்

     

    கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.

  • ரங்கநாதர் கோயிலில் பலிபீட திருமஞ்சன பூஜை

    உலக நன்மை, மழை வேண்டி ஸ்ரீரங்கம் கோயிலில் பலிபீட திருமஞ்சன பூஜை நடந்தது. உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தங்க கொடி மரம் அருகே பலிபீட திருமஞ்சன பூஜை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் 2012ல் நடந்தது. அந்த பூஜை நடந்து முடிந்த பின் அப்போது மழை பெய்தது. அதேபோல் இந்தாண்டும் இந்த பலிபீட திருமஞ்சன பூஜை நேற்று காலை நடந்தது. முன்னதாக காவிரியாற்றிலிருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டு தங்க கொடி மரத்திற்கும், பலி பீடத்திற்கும் பால், தயிர், இளநீர் மற்றும் பன்னீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் பலிபீடம் மற்றும் ெகாடிமரத்திற்கு புதிய வஸ்திரம் மற்றும் மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது. இந்த பலிபீட பூஜையில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மண்டல இணை ஆணையர் கல்யாணி, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன் பட்டர்கள் உள்பட கோயில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.