Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • கும்பாபிஷேகம் கோடிப் புண்ணியம்

     

     

     நாம் வணங்கும் தெய்வத் திருவுருவச்  சிலைகள் கற்களால்  ஆனது என்றாலும் , அவற்றிற்குள்  தெய்வ சக்தியை  ஊடுருவ செய்வதற்கு கடைப்பிடிக்கப்படும் பல சாஸ்திர சம்பிரதாயங்களுள்   ஒன்றுதான் கும்பாபிஷேகம்.

     

    கல்லினால் திருவுருவத்தை அமைத்துத் தானிய வாசம், ஜலவாசம் வைத்து அந்த இறைவனின் மந்திரங்களை எழுதி மந்திர யந்திரத்தை 48 நாள் வழிபாட்டில் வைப்பார்கள். வேத சிவாகம விர்ப்பனர்கள்  யாகசாலை அமைத்து இனிய மந்திரங்களை ஓதி , யாக அக்னி வளர்த்து வரும் ஜோதியைக் கும்பத்தில் சேர்ப்பார்கள். ஒருங்கிணையப் பெற்ற அந்த மந்திரங்களை  ஒன்றாகக் குவியச் செய்து, இறைவனின் கருவறையில் அதன் சக்தியை ஏற்றுவதற்கு பெயர் தான்  குடமுழுக்கு .  வைணவ சம்பிரதாயத்தில்  சம்ப்ரோட்சணம் என்றும்; சைவத்தில் கும்பாபிஷேகம் என்றும் சொல்லப்படுகிறது .

     

    ஒரு அந்தணர், தெருவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். அவர் நெடுநேரம் தேடுவதைப் பார்த்த ஒருவர், ஐயா… என்ன தேடுகிறீர்கள்? என்று கேட்டார். சிவ பூஜைக்கு, வாழைப்பழம் வாங்குவதற்காக, ஓரணா வைத்திருந்தேன். அது கீழே விழுந்து விட்டது. அதைத்தேடிக் கொண்டிருக்கிறேன்… என்றார். பரவாயில்லை பூஜைக்கும் நாழியாகிவிட்டது;நான் ஓரணா தருகிறேன். வாழைப்பழம் வாங்கி, பூஜையை முடித்துக் கொள்ளுங்கள்…என்று சொல்லி, ஓரணாவைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். அவரும், ஓரணாவுக்கு வாழைப்பழம் வாங்கி வைத்து,பூஜையை முடித்தார்.

     

    தேவேந்திரன், ஒரு நாள், தர்மராஜன் சபைக்கு வந்தான். எமதர்மன்,தேவேந்திரனை உபசரித்து வரவேற்றான். சபையில், ஒரு ரத்ன சிம்மாசனமும்,ஒரு தங்கத்தாலான சிம்மாசனமும், போடப்பட்டிருந்தது. அந்த சமயம்,இரண்டு தேவ விமானங்கள் வந்தன. எமதர்மன், ஓடிப்போய் விமானத்திலிருந்தவரை வரவேற்று உபசரித்தான். ஒவ்வொரு விமானத்திலிருந்தும், ஒவ்வொரு புண்ணிய புருஷர் இறங்கினர். எமதர்மன்,ஒருவரை, ரத்ன சிம்மாசனத்திலும், மற்றொருவரை, தங்க சிம்மாசனத்திலும்,உட்கார வைத்தான்.

     

    புண்ணிய புருஷர்களான நீங்கள் இங்கு வந்தது என் பாக்யம்… என்று சொல்லி, அவர்களை, எமதர்மன் உபசரித்ததை பார்த்த தேவேந்திரன், எமதர்மனைப் பார்த்து, இவர்கள் அப்படி என்ன புண்ணியம் செய்தனர்! அதிலும், ஒருவரை ரத்ன சிம்மாசனத்திலும், ஒருவரை தங்க சிம்மாசனத்திலும் உட்கார வைத்திருக்கிறாயே… என்று கேட்டான்.அதற்கு எமதர்மன், இதோ தங்க சிம்மாசனத்தில் இருப்பவர், தினமும், சிரத்தையுடன் சிவ பூஜை செய்தவர். அந்த புண்ணியத்தினால், இவரை தங்க சிம்மாசனத்தில் உட்கார வைத்திருக்கிறேன்.

     

    மற்றொருவரோ சிவ பூஜைக்கு உதவி செய்தவர். ஒரு நாள், சிவ பூஜைக்கு வாழைப்பழம் வாங்க வைத்திருந்த காசை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் போது, இந்த ரத்ன சிம்மாசனத்தில் இருப்பவர், அவருக்கு காசு கொடுத்து வாழைப்பழம் வாங்க,உதவி செய்தவர். அதனால், இவருக்கு ரத்ன சிம்மாசனம்… என்றான் எமதர்மன். தேவேந்திரன் ஆச்சரியப்பட்டு, சிவபூஜை செய்தவரை விட, சிவ பூஜைக்கு உதவி செய்தவருக்குத்தான் அதிக புண்ணியம் என்பதை தெரிந்து கொண்டேன்… என்று சொல்லி, எமதர்மனிடம் விடைபெற்று, தேவலோகம் சென்றான்.

     

    நம்முடைய முன்னோர்கள் நமக்கு பல விஷயங்களை கதைகளின் வாயிலாகத்தான் நமக்கு சொல்லியிருக்கிறார்கள் . இந்த கதை நமக்கு தரும் பாடமானது ,

    ஒரு சிவபூஜை அல்லது கும்பாபிஷேகம் ஆகியவற்றை முன் நின்று நடத்துபவரை விட, அதற்கு உதவி செய்பவர்களுக்கு புண்ணியம் அதிகம்.

    நம்மில் எத்தனையோ பேர் ஊரில் இருக்கும் நமது குலதெய்வ கோவில் கும்பாபிஷேகமோ அல்லது  நமக்கு தெரிந்த கோவில் கும்பாபிஷேகமோ , நம்மால் நேரில் செல்ல முடியா விட்டாலும்  நம் வீட்டில் உள்ளவர்களுக்கு பணத்தை அனுப்பி , வைப்போம் . எப்படியாவது அந்த புண்ணியக் காரியத்தில் பங்கேற்க வேண்டும் என்று ஆசைப்படுவோம் . அத்தகைய  புண்ணியமிக்க கும்பாபிஷேகத்தைப் பற்றி நாம் அறிந்தது கையளவு . நாம் அறியாத உண்மைகள் கடலளவு .

    அத்தகைய  சில தகவல்களை இந்தப் பதிவில் பார்ப்போம் .

     

    கும்பாபிஷேகத்தில்  வகைகள் நான்காக அறியப்படுகிறது .

     

    ஆவர்த்தம்  எனப்படும்  வகையில் ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் தெய்வ விக்கிரகங்களுக்கு  கும்பாபிஷேகம் செய்யப் படுகிறது .

     

    அனாவர்த்தம்  எனப்படுவது ,இந்துக் கோவில்களில் காணப்படும் மூன்று மற்றும் ஆறுகால பூஜை முறைகள்  இல்லாமலும் இயற்கை சீற்றம் காரணமாக ஆறு,கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்த  கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.

     

    புனராவர்த்தம்  முறை கும்பாபிஷேகமாவது , ஒரு கோவிலின் கருவறை,பிரகாரம்,கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால், அதற்கு  பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்ட பந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.

     

     அந்தரிதம்  முறையில் ,கோயிலுள் ஏதேனும்  அசம்பாவிதமோ அல்லது அதன் புனிதத்திற்கு  பங்கம் விளைந்திடின் அதன் பொருட்டு சந்தி செய்யப்படும் .

     

    இனி அடுத்ததாக கும்பாபிஷேக வைபவத்தின் போது விக்ரகப் பிரதிஷ்டையில் பின்பற்றப்படும் முக்கியமான வழிமுறைகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம் .

     இத்தகைய தெய்வப் பணியை திறம்பட செய்ய தகுதியுள்ள ஓர் ஆசாரியனைத் தேர்ந்து எடுத்து , இச்செயலைச் செய்வதற்கு இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்தலை அனுஞை  அல்லது அனுமதி வாங்குதல்எனப் படுகிறது .

    அடுத்ததாக  சங்கல்பம்  . அதாவது இறைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.

     

    இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்கு தேவையான பூஜா பாத்திரங்களை சுத்தம் செய்தல் பொருட்டு அந்தந்த பாத்திரங்களுக்கு உரிய தேவதைகளை பூஜை செய்தலே  பாத்திர பூஜை

     

    நம் இந்து மத வழக்கப்படி , எந்த செயலை தொடங்கும் முன்னர் விக்கினங்களை நீக்க விநாயகரை வணங்குதல் மரபு . ஆதலால்  – செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடும் கணபதி பூஜை.

     

    வருண பூஜை யினால் அவ்விடம்சுத்தம் செய்யப் பட வருண பகவானையும் , சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.

     

    பஞ்ச கவ்யம் –தெய்வப் பணி செய்வதற்கு முன் நம்முடைய ஆன்மாவை  சுத்தம் செய்தல் அவசியமாகிறது . ஆகவே ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால்,தயிர்,நெய்,பசுநீர்,பசுசானம் முதலியவைகளை வைத்து செய்யப்படும் கிரியை தான் பஞ்ச கவ்யம் .

     

    வாஸ்து சாந்தி – தேவர்களை வழிபட்டுக் கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி இனிது நிறைவேற , செயலுக்கும் , அச் செயலை செய்பவர்க்கும் எந்த வித இடையூறும் வராதபடி காக்கச் செய்யப்படுவது .

     

    பிரவேச பலி – நல்லது நடக்கும் இடத்ஹில் தீய சக்திகள் நுழையா வண்ணம் ,எட்டு திக்கிலும் உள்ள திக் பாலகர்களுக்கு உரிய பிரீதி செய்து அவர்களை அந்தந்த இடத்தில் இருக்க செய்தல்  

     

     மிருத்சங்கிரஹணம் – ஆலயம் நிர்மாணம் செய்ய பூமா தேவியை கஷ்ட படுத்தியதற்கு  பிராயச்சித்தமாக ,  பூமா தேவியை மகிழ்விக்க  அஷ்ட திக் பாலகர்களிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்தில்ருந்து மண் எடுத்து அபிஷேகம் செய்தல்.

     

    மண்ணை பாலிகைகளில் விதைகளையிட்டு முளை வளர செய்தல் .  12சூர்யர்களான  வைகர்த்தன்,விவஸ்வதன்,மார்த்தாண்டன்,பாஸ்கரன்,ரவி,லோகபிரகாசன்,லோகசாட்சி,திரிவிக்ரமன்,ஆதித்யன்,சூரியன்,அம்சுமாலி,திவாகரன் போன்ற இவர்களையும் சந்திரனையும் வழிபடுதலே அங்குரார்ப்பணம் எனப்படுவது .

     

    இவ்வளவு கிரியைகளையும் செய்யும்  ஆசாரியனுக்கும் எவ்வித இடையூறுகள் வராதபடிக் காத்தற் பொருட்டு அவன் கையில் மந்திர பூர்வமாகக் காப்பு கட்டுதலே ரக்ஷாபந்தனம் எனப்படுகிறது .

     

    கும்பலங்காரம் யாதெனில்  கும்பங்களை அதாவது  கலசங்களை இறைவன் உடம்பாகவே  பாவித்து அலங்காரம் செய்தல்.

     

    விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்க்கு மந்திர பூர்வமாக அழைத்தலே சக்தி அழைத்தல் அல்லது கலா கர்ஷ்ணம் எனப்படுகிறது .

     

    யாகசாலா பிரவேசம்  என்பது கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.

     

    சூர்ய,சோம பூஜையின் போது ,  யாகசாலையில் சூர்ய சந்திரனை வழிபடுகிறோம் .

     

    மண்டப பூஜை யின் மூலமாக , அமைக்க பட்டிருக்கும் யாகசாலைக்கு  பூஜை செய்யப்படுகிறது .

     

     பிம்ப சுத்தியால்   விக்ரகங்கள் மந்திர பூர்வமாக சுத்தம் செய்யப்படுகிறது .

     

    யாகசாலை இடத்திற்கும் மூல திருமேனிக்கும் தர்பைக் கயிறு, தங்க கம்பி,வெள்ளிக் கம்பி, அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்தி இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இந்த இனைப்பு மூலமாக விக்ரஹங்களுக்கு கொண்டு சேர்த்தலே நாடி சந்தானம்   எனப்படுகிறது .

     

    விசேஷ சந்தி  எனப்படுவது 36 தத்துவ தேவதைகளுக்கும் அர்க்யம் தருவது,உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கு அர்க்யம் தருவது.

     

    இந்த மனித உடம்பை தெய்வ உடம்பாக மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தலே பூத சுத்தி

     

    36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்ரகங்களுக்குகொண்டு சேர்த்தலைஸ்பர்ஷாஹுதி என சொல்லப்படுகிறது .

     

     அஷ்ட பந்தனம்  என்பது எட்டு பொருள்களால் ஆன  மருந்தினால் மூர்த்தியையும், பீடத்தையும் ஒன்று சேர்த்தல். இதை மருந்து சாத்துதல் என்பார்கள் .

     

    பூர்ணாஹுதி  மூலம் யாகம் பூர்த்தி செய்யப்படுகிறது .

     

    கும்பாபிஷேகம் /குடமுழுக்கு  எனப்படுவது யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார்.

     

     கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்ரஹத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல் மஹாபிஷேகம் .

     

     இறுதியாக , 48நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து விக்ரஹத்தில் வீற்றிருக்கும் இறைவனை முழு சக்தியுடன் இருக்கச் செய்வதுமண்டலாபிஷேகம் ஆகும் .

     

    இனிவரும் நாட்களில் நம் ஊரிலோ , அல்லது குறைந்தபட்சம் நம் தெருவில் இருக்கும் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்ததால் , அந்த புனித வைபவத்தில் கலந்துக் கொண்டு இறையருள் பெறுவோமாக .

     

     

     

  • சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

     

    நம்முடைய தினசரி நடவடிக்கை  என்றாலும் சரி , நம் வாழ்வில் நடக்கக் கூடிய எந்த ஒரு பெரிய விஷயம் என்றாலும் சரி , இறைவனின் கருணை இருந்தால் தான்  அது நல்ல விதமாக  நடக்க முடியும் . ஆனால் பலர் எதோ தன்னுடைய முயற்சியினால்  தான் எல்லாமே நடக்கிறது என்று கர்வம் கொள்வதுண்டு . சாதாரண மனிதனில் இருந்து இதிகாச நாயகர்கள் வரை இந்த குணம்  உண்டு .  வில்லுக்கோர்  விஜயன் என்று பெயரெடுத்த அர்ஜுனனையும் இந்த கர்வம் விடவில்லை .

    பாரதப்போர் நடந்து கொண்டிருந்த சமயம்  அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் தேரோட்டியாக இருந்து வழிநடத்தினார் .  ஒரு நாள் யுத்தம் முடிந்து பாசறைக்கு திரும்பினான் அர்ஜுனன். அவனுக்கு தன் வில் வித்தையால்தான் வெற்றி அடைகிறோம் என்ற கர்வம் உண்டாயிற்று.

    அதனால், வழக்கமாக முதலில் தேரிலிருந்து இறங்கும் அவன், அன்று கிருஷ்ணரை முதலில் இறங்கும்படி கூறினான். அர்ஜுனனின் எண்ண ஓட்டத்தை புரிந்துகொண்ட பகவான், அவனது அகந்தையை நீக்க முடிவு செய்தார். “வழக்கமாக நீதானே முதலில் இறங்குவாய்? இன்று மட்டும் ஏன் என்னை முதலில் இறங்கச் சொல்கிறாய்?” என்று கேட்டார். இதற்கு அர்ஜுனன், “இன்று வழக்கத்தை மாற்றலாமே!” என எகத்தாளமாக பதிலளித்தான்.

     

    அதற்கு கிருஷ்ணர் “இல்லை! நீதான் முதலில் இறங்க வேண்டும். நான் இறங்கினால் உனக்குத்தான் ஆபத்து” என்றார். “எனக்கு ஆபத்தா? என்ன ஆபத்து? என் கையில்தான் வில் இருக்கிறதே!” என்றான் அர்ஜுனன் கர்வத்துடன்.

     

    “அதெல்லாம் பிறகு பேசிக்கொள்ளலாம். முதலில் நீ கீழே இறங்கு!” என பகவான் கட்டளையிடும் தொனியில் கூறினார். அதற்கு மேல் மறுப்பு தெரிவிக்க பயந்தவனாக அர்ஜுனன் கீழே இறங்கினான். பகவான் பின்னர் இறங்கினார். கிருஷ்ணர் இறங்கியதும் அந்த தேர் தீப்பிடித்து எரிந்தது.

     

    கிருஷ்ணர் அர்ஜுனனை நோக்கி, “நான் முதலில் இறங்கியிருந்தால் தேருடன் சேர்ந்து நீயும் சாம்பலாகியிருப்பாய்” என்றார். அர்ஜுனன் மிகவும் பயந்து போய், எதனால் இப்படி நேரிட்டது என்று கேட்டான். கிருஷ்ணர் இவ்வாறு பதிலளித்தார்: “அர்ஜுனா! உனக்கு எதிராக போரிட்டவர்கள் மந்திர சக்தி கொண்ட அம்புகளை எய்தனர். அவை செயல்படாமல் நான் தடுத்து வந்தேன். நான் தேரை விட்டு இறங்கியதும் அம்புகளின் மந்திர சக்தி வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. அதனால்தான் தேர் தீப்பற்றிக் கொண்டது. உன்னை இதுவரை காப்பாற்றி வந்தது உனது வீரம் அல்ல. எனது சக்திதான். இதை முதலில் புரிந்துகொள்!” என்றார். அர்ஜுனின் கர்வம் காணாமல் போனது.

    அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்ற எண்ணத்துடன் சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்று இருந்து விட்டால் அனைத்தையும் அந்த பரம் பொருள் பார்த்துக்கொள்ளும் .

  • ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான புண்ணியத் தலம்

     

    அருள்மிகு லலிதாம்பிகை ஆலயம் , திருமீயச்சூர், திருவாரூர் மாவட்டம்

     

    பண்டாசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அவர்கள் தங்களை காக்க வேண்டி அன்னை பராசக்தியை வேண்டினார்கள். வேண்டுதலை ஏற்ற பராசக்தி, அசுரனை வதம் செய்வதற்காக ஒரு வேள்வி குண்டத்திலிருந்து ஸ்ரீசக்ர ரதத்தில் லலிதாம்பிகை என்ற திருநாமத்துடன் தோன்றினாள். அசுரனுடன் போர் செய்து அவனை அழித்தாள்.  உக்ரமாக இருந்த அவளைச் சமாதானம் செய்யும் பொறுப்பை ஏற்ற சிவன் , உலக உயிர்களின் நன்மை கருதி அவளை கோபம் தணியும்படியும், இதற்காக “மனோன்மணி’ என்ற திருநாமத்துடன் ஸ்ரீபுரவாசினியாக பூலோகம் சென்று தவம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார் . அம்பிகையும் இத்தலம் வந்து தவம் செய்து சாந்தமானாள். தன் முகத்திலிருந்து, “வசின்யாதி வாக் தேவதைகள்’ என்பவர்களை வரவழைத்து தன்னை ஆயிரம் திருநாமங்களால் வர்ணிக்கும்படி கட்டளையிட்டாள். இதுவே “ஸ்ரீ மாத்ரே’ என துவங்கும் ‘லலிதா சகஸ்ரநாமம்’ என்று தல வரலாறு கூறுகிறது .

    ஆன்மீக அன்பர்களால் தாய் லலிதாம்பிகையை ஸ்மரித்து மெய்யுருக பாடப்படும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான தலம் தான் திருமீயச்சூர். மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்தில் இருந்து ஒரு கி.மீ தூரத்தில் உள்ளது திருமீயச்சூர்.

     

    காஷ்யபருக்கு வினதை மற்றும் கர்த்துரு என்று இரு மனைவியர் இருந்தனர். நீண்ட நாள் குழந்தை பேறு இல்லாத இவர்கள் குழந்தை வரம் வேண்டி சிவனை பெருமானை  வழிபட்டனர். அவர்கள் இருவருக்கும் ஒரு முட்டையைக் கொடுத்த சிவன், ஓராண்டு காலம் பாதுகாக்கும்படி சொன்னார். வினதையிடம் இருந்த முட்டையில் இருந்து  கருடன் பிறந்து, அது மகாவிஷ்ணுவின் வாகனமாகும் தகுதியைப் பெற்றது.கர்த்துருவின் முட்டையில் இருந்து ஏதும் வராததால், அவசரப்பட்ட அவள் அந்த முட்டையை உடைத்துப் பார்க்க அதனுள் இருந்து குறை உடலுடன் ஒரு குழந்தை பிறந்தது . தன் தவறுக்கும் வருந்திய  அவள் மிகவும் வருத்தப்பட்டு சிவனிடம் மன்னிப்பு கோரினாள்.

    சிவனும் மனமிரங்கி  அவளை மன்னித்து, அந்தக் குழந்தை சூரியனின் ஏழு குதிரை கொண்ட தேரை ஓட்டும் சாரதியாவான் என்றும், சூரிய உதயம் அவனது பெயரால் “அருணோதயம்’ என்று வழங்கப்படும் என்றும் அருள் செய்தார். சிறந்த சிவபக்தனான  அருணன் சிவதரிசனம் வேண்டி தவமிருந்தான். இதையறிந்த சூரியன் உடலில் குறைபாடுள்ள நீ எப்படி கைலாயம் செல்ல முடியும் என கேலி செய்தான். இருந்தாலும் விடாமுயற்சியால் சிவனை குறித்து தவம் செய்து,  சிவனின் தரிசனத்தைப் பெற்றான் அருணன். மேலும் அவனைக் கேலி செய்த சூரியனை ஒளி யிழக்கும்படி சபித்து விட்டார் சிவன். பதறிப்போன சூரியன், பார்வதி பரமேஸ்வரனை யானையில் அமர வைத்து வழிபாடு செய்து, மீண்டும் ஒளி பெற்றான். இந்த சிவனே இங்கு ‘மேகநாதன்’ என்ற பெயரில் அருளுகிறார் என்று சொல்லப்படுகிறது . சூரிய பகவான் தன் கருமை நிறத்திலிருந்து மீண்டு வந்ததின் அடிப்டையில் இத்தலம் “மீயச்சூர்’ என அழைக்கப்படுகிறது.

    சனீஸ்வரர், எமதருமர், அருணன், கருடன், வாலி, சுக்ரீவன் ஆகிய ஆறு பேரும்  அவதரித்ததாக சொல்லப்படுவதால் , திருமீயச்சூர் மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது ..        

    இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள்.. வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது என்பதால் இவளுக்கு அதிக சக்தி உண்டு என்கிறார்கள் பலனடைந்தவர்கள் .

     

    கோவில் சிறப்பம்சங்கள்

     

    மதுரையில் மீனாட்சி மற்றும்  ஸ்ரீவில்லிப்புத்தூர்  ஆண்டாளுக்கு அடுத்து  இங்குள்ள துர்க்கையின் கையில் கிளி இருக்கிறது.

    லலிதாம்பிகையிடம் உபதேசம் பெற்ற ஹயக்கிரீவர் அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமையைப் பற்றி விவரித்தார். இதைக்கேட்ட அகத்தியர், “லலிதா சகஸ்ரநாமத்தை எத்தலத்தில் கூறினால் முழுப்பலன் கிடைக்கும் ?” என கேட்டதற்கு , ஹயக்கிரீவர்,  “பூலோகத்தில் அம்பாள் மனோன்மணியாக வீற்றிருக்கும் இடத்திற்குச் சென்று சொன்னால் பூரண பலன் கிடைக்கும்,” என்றார்.

    அகத்தியரும் தன் மனைவி லோப முத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து, லலிதா சகஸ்ரநாமம் சொன்னார். அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள். அப்போது அகத்தியர், “லலிதா நவரத்தின மாலை’ என்னும் ஸ்தோத்திரம் பாடியதாக சொல்லப்படுகிறது .

     

    சூரியனாரின் சாபம் போக்கிய தலம் என்பதால் இங்கே நவக்கிரகங்களுக்குச் சந்நிதி இல்லை. மாறாக, 12 ராசிகளுக்கு உரிய 12 நாகர்களும் உள்ளனர்.

     சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் சித்திரை 21 முதல் 27 வரை உள்ள நாட்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவனின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.

    மூலவர் மேகநாத சுவாமிக்கு அவரவர் ஜென்ம நட்சத்திரத்தில் ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்கின்றனர்.

     இங்குள்ள கல்யாணசுந்தரரை மணமாகாத பெண்கள் வழிபட்டு இறைவனுக்கு மாலை சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் கூடும் என்பது நம்பிக்கை.

    ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் இங்கு செய்வது சிறப்பாக கருதப்படுகிறது .

    பிரண்டை அன்னத்தை, தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து, அன்னதானம் செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. இதற்கும் ஒரு புராண கதை சொல்லப்படுகிறத்து .

    சதய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன், இத்தல இறைவனை நீண்ட ஆயுளைத்தரக்கூடிய 1008 சங்குகளால் அபிஷேகம் செய்து, எமலோகத்தின் தல விருட்சமும் சக்தி வாய்ந்ததுமான பிரண்டை கலந்த அன்னத்தை மேகநாத சுவாமிக்கு நைவேத்யம் செய்து வழிபட்டான் என்கிறார்கள்

    அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் தலமான திருமீயச்சூர்அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய முக்கியத் தலமாகும் .

     

  • பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில், வைகாசி மாதம் கொண்டாடப்படும் வைகாசி விசாக திருவிழா வசந்த உற்சவம் என்று வர்ணிக்கப்படுகிறது. சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஒளி பிளம்பாய் முருகப்பெருமான் தோன்றிய நாள் வைகாசி விசாக திருநாளாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா வில்வ வனம் என்று அழைக்கப்படும், பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக் கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பெரியநாயகி அம்மன் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு பூஜையும், 16 வகை அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி உட்பிரகாரம் வலம் வந்து, கொடிக்கட்டு மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் விநாயகர் பூஜை, கொடி மரம் மற்றும் கொடி படத்துக்கு பூஜைகள் நடந்தன. அதையடுத்து காலை 10.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு வேத விற்பனர்கள், ஓதுவார் கள் மந்திரங்களை ஓதினர். தொடர்ந்து கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பிறகு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

  • தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் வைத்தியநாத சாயி

     பாபாவின் சமஸ்தானத்தில் அவரிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் பல விதம் . பொன் பொருள் வேண்டி நிற்போர் ஒரு விதம் . பாபாவின் அருள் வேண்டி நிற்போர் ஒரு விதம் . முன் வினை காரணமாக தீராத வியாதிக்கு  தீர்வு தேடி  அவர் முன் நிற்பவர் ஒரு விதம் . இதில் தங்கள் வியாதிகளிடமும்  இருந்தும் , வலிகளிடம் இருந்து விடுதலை கிடைக்க வேண்டி அவர் முன் கண்ணீர் மல்க நிற்பவர்களே அதிகம் . எப்பேர்ப்பட்ட வைத்தியனாலும் கைவிடப்பட்ட  நோய்களும்  அந்த வைத்தியநாத சாய்  முன் தங்கள் கைவரிசையை  காட்ட முடியாது என்று  அவர் பக்தர்கள் நம்பினார்கள் .

    திக்கற்றவர்களுக்கு  சாய் தான்  தன்வந்திரி தெய்வம் . ஏழை நோயாளிகளுக்கு பாபாவே கண்கண்ட தெய்வம். தங்கள் மருத்துவர்கள் மேல் அவர்கள் வைத்து இருந்த நம்பிக்கையை விட, பாபா மேல் இருந்த நம்பிக்கை  தான்  அதிகம். பூட்டி என்று பெயர் கொண்ட ஒரு அடியவருக்கு , ஒருமுறை ஒரே நேரத்தில் இரண்டு சிக்கல்கள் நேர்ந்தன. ஒன்று கடுமையான வயிற்றுப் போக்கு. இன்னொன்று ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை வாந்தி. நீர் சத்து மிகுந்து வெளியேறியதால் , மிகச் சில நாள்களிலேயே மிகுந்த பலவீனம் அடைந்தார் பூட்டி . எல்லா மருத்துவர்களும் கைவிரித்து விட்ட நிலையில் , கிழிந்த நாராகப் படுத்திருந்த அவரை எவ்விதமேனும் அழைத்து வருமாறு,ஓர் அடியவரை  பாபா அனுப்பினார். அவரைக் கைத்தாங்கலாகப் பற்றிக்கொண்டு பூட்டி, மசூதிக்கு வந்துசேர்ந்தார்.

    பாபாவை கண்ட நொடியில் ,பாபா! என்னைக்  காப்பாற் றுங்கள்! என்று கதறினார். பூட்டியையே உற்றுப் பார்த்த பாபா, உன் வயிற்றுப் போக்கு, வாந்தி இரண்டுமே உடனடியாக நிற்க வேண்டும், இது என் ஆணை, தெரிந்ததா?என்று கண்டிப்பான குரலில் கட்டளையிட்டார். பாபாவின் மந்திர சக்திக்கு கட்டுப்பட்ட  ,வயிற்றுப் போக்கையும் வாந்தியையும் உண்டாக்கிய நோய்க்கிருமிகள் , அவரது அதட்டலால் பயந்து , அடுத்த கணமே பூட்டியை விட்டு நீங்கிவிட்டது. பாபாவின் திருவடிகளைப் பணிந்த அவர், கம்பீரமாக நடந்து இல்லம் திரும்பினார். பாபாவின்  ஒரே அதட்டலுக்கு  அந்த நோய்க் கிருமிகள்  கட்டுப்பட்டதை எண்ணி ஆச்சரியப் பட்டதுடன் பாபாவின் கருணையை நினைத்து அவரது நெஞ்சம் நெகிழ்ந்தது.

    கொடிய வகைப்பட்ட மலேரியாவால் கஷ்டப்பட்ட பாபாவின் இன்னொரு  பக்தரான கண்பத் , பாபாவே கதியென  சரணடைந்தார். அவரை உற்றுப் பார்த்த பாபா, முன்வினையால் தான் அந்த நோய் அவரைத் தாக்கியிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார். ஆனால் அந்த நோய்க்கு பாபா சொன்ன வைத்தியம் தான் யாரும் எதிர்பாராதது. கொஞ்சம் சோறை எடுத்துத் தயிரோடு கலந்துகொள்! என்று பாபா ஆரம்பித்தபோது, கண்பத், தயிர் கலந்த சோறை எத்தனை வேளை சாப்பிடவேண்டும் என அக்கறையோடு விசாரித்தார். பாபா நகைத்தவாறே நீ அதைச் சாப்பிட வேண்டும் என்று நான் சொல்லவில்லையே? என்றார். 

    கொஞ்சம் சோற்றை எடுத்துச் சிறிது தயிரோடு கலந்து, அதை லட்சுமி கோயில் முன்னால் சுற்றிக் கொண்டிருக்கும் கருப்பு நாய்க்குக் கொடுக்கச் சொன்னார். தன் மலேரியாவுக்கும், அந்த நாய்க்கும் என்ன சம்பந்தம் என்று கண்பத்திற்குப் புரியவில்லை. ஆனாலும் கேள்விகளுக்கும் , சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர் பாபா என்பதால் , எதையும் ஆராய்ச்சி செய்யாமல் பாபாவை ஏற்றுக் கொள்வதுடன் , அவர் சொன்னபடி நூறு சதவிகிதம் அப்படியே செய்வதும் தான் நல்லது என்பதை அவர் உள்மனம் அவருக்கு உணர்த்தியது. கண்பத் அன்று வீட்டிற்குப் போனவுடன் அவரின் கண்ணெதிரே கொஞ்சம் சோறும் தயிரும் சமையலறையில் தென்படுவதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார் .  உடனே பாபா சொன்னபடி செய்வோம். தன் மலேரியாக் காய்ச்சலைப் பொருட்படுத்தாமல் தயிரையும் சோறையும் ஒன்றாகக் கலந்து எடுத்துக்கொண்டு லட்சுமி கோயில் நோக்கி விரைந்தார். அவருக்காகவே காத்திருந்ததுபோல் அங்கிருந்த கருப்பு நாய் ஒன்று,பாய்ந்தோடி அவர் முன்னே வந்து நின்று வாலை ஆட்டியது. தான் முன்பின் பார்த்திராத நாய் தன்னருகே வந்து வாலை ஆட்டும் அதிசயத்தைப் பார்த்த கண்பத் வியப்படைந்தார்.

    பின் சுதாரித்துக்கொண்ட கண்பத், அந்த நாய்முன் தான் கொண்டுவந்திருந்த தயிர் சோற்றை வைத்தார். அது எத்தனை நாள் பசியால் தவித்ததோ? பாய்ந்து பாய்ந்து அந்த உணவைச் சாப்பிட்டது. பிறகு ஏதோ சாதனை செய்து முடித்த நிறைவில், லட்சுமி கோயில் வெளிப்புறச் சுவரின் அருகாகப் போய்ப் படுத்துக்கொண்டது. கண்பத் வீடுநோக்கித் திரும்பினார். பழைய ஆரோக்கியத்தோடு தெம்பாக நடப்பதை உணர்ந்தார். மருத்துவர்களால் குணப்படுத்த முடியாது என்று கைவிடப்பட்ட கொடிய மலேரியா நோய்,நிரந்தரமாகத் தன் உடலிலிருந்து நீங்கிவிட்டதை அவரால் உணர முடிந்தது. மருத்துவர்களும் அவரது ரத்தத்தைப் பரிசோதனை செய்து பார்த்து அந்த அதிசயத்தை உறுதிப்படுத்தினார்கள். கண்பத்தின்  கண்களும் ,இரு கைகளும் அளவற்ற பக்தியோடு பாபாவை நோக்கிக் குவிந்தன.

    இதில் நாம் வியப்பதற்கு எதுவும் இல்லை . பாபா நினைத்தால் , அவர் கருணை இருந்தால் முடியாத காரியம் என  இந்த உலகத்தில் எதுவும் இல்லை என்பதை பாபாவின் பக்தர்கள் நன்கு அறிவார்கள் .

     

    ஸ்ரீ சாயி திருவடிகளே சரணம்

    சாய் சரிதம் தொடரும் …

  • கங்கைகொண்டான் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

    நெல்லை அடுத்துள்ள கங்கைகொண்டானில், அருள்மிகு ஆனந்தவல்லி அம்பாள் சமேத கைலாசநாதர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
    மிகப் பழமையான இக்கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக மே 31 ஆம் தேதி காலை விக்னேஷ்வர பூஜை, 4ஆம் கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனை, மாலையில் 5ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
    விழாவின் சிகர நிகழ்வாக ஜூன் 1 ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு கோயில் விமான கோபுரத்துக்கு மஹா கும்பாபிஷேகமும் காலை 10 மணிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  • ஷீரடி சாய்பாபாவுக்கு குடமுழுக்கு….

    திருத்தணி அருகே உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலின் நுழைவு வாயில் கோபுரத்தின் மகா குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
    திருத்தணி அடுத்த, தலையாறிதாங்கல் கிராமத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் தான் குடமுழக்கு விழா நடைபெற்றது. இக்கோயில் முன், புதிதாக நுழைவு வாயில் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
    இதன் குடமுழுக்கு விழா, பாலசுப்பிரமணியர், நவக்கிரகங்கள் ஆகிய மூர்த்திகள் ஸ்தபன நவ கலசாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    இதையொட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை காலை, 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நவக்கிரஹ பூஜை, லட்சுமி பூஜை, கோ பூஜை, தன பூஜை பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றன. புதன்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை, மாலையில் 3-ஆம் கால யாக பூஜை, இரவு பாபா திருவீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  • மண்ணே !மாமணியே ! மஹா பெரியவா தந்த அட்சதை

     

    காஞ்சி பெரியவருடன்  அனேகருக்கு பல விதமான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன .  குழந்தையை நேசிக்கும் ஒரு தாய்க்கு தன் குழந்தையின் தேவை என்னவென்று  தெரிவது  போல்  அந்த நடமாடும் தெய்வமும் , தன் அடியவர்களின் வாழ்வில் நடந்தது ,   நடக்கப்போவது  என்ன என்பதை இருந்த இடத்திலிருந்தே  உணர்ந்து அவர்களை கடாக்ஷிப்பவர் .

     காஞ்சி மாமுனிவரை தம் தன் தெய்வமாக ஏற்று ,நடந்து வந்த ஒரு அடியவருக்கு பெரியவாவுடன் ஏற்பட்ட  மெய் சிலிர்க்கும் அனுபவத்தை இந்த பதிவில் காணலாம்

    ஒருமுறை விழுப்புரத்துக்கு அருகே வெங்கிடாத்திரி அகரம் என்ற கிராமத்தில் முகாமிட்டிருந்தார் பெரியவா. சென்னை, திருச்சி, கும்பகோணம், சேலம் போன்ற பல ஊர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பெரியவா தரிசனத்துக்காக அங்கே குவிந்தனர்.

    இந்தக் கிராமத்தில் மஹாபெரியவா முகாமிட்டிருப்பது அறிந்து, அவரைத் தரிசனம் செய்வதற்காகத் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு சேலத்தில் இருந்து பயணமானார் ராமசாமி ஐயர்.

    வெங்கிடாத்திரி அகரத்தில் மஹாபெரியவாளை உள்ளம் குளிரத் தரிசித்து விட்டு, சேலம் புறப்படுவதற்காக உத்தரவு கேட்டார் ராமசாமி. பெரியவாளும் புன்னகையுடன் அவரை ஆசிர்வதித்து, உத்தரவு கொடுத்தார். அப்போது மேனாவில் (யாத்திரையின் போது பயன்படுத்தப்படும் பல்லக்கு) இருந்தபடியே பக்தர்கள் எல்லோருக்கும் அட்சதையை அவரவர் வஸ்திரத்தில் ஆசிர்வாதமாகப் போட்டுக் கொண்டிருந்தார் பெரியவா. கருணைத் தெய்வத்தின் திருக்கரங்களால் அட்சதை பெறும் பாக்கியத்தைப் பெரும் பேறாக எண்ணிய பலரும், தங்களது மேல்வேஷ்டியை மற்றும் புடவைத் தலைப்பை அவருக்கு முன் நீட்டி, அதில் விழும் அட்சதையைத் தங்கள் கண்களில் ஒற்றிக் கொண்டு பத்திரப்படுத்தினர்.

    இப்படி அட்சதை பெற்றுக் கொள்ள விரும்பி நின்றிருந்தவர்களின் நீண்ட வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டார் ராமசாமி. பெரியவாளின் அட்சதையுடன் பயணப்படலாமே என்பது அவரது எண்ணம். ராமசாமியின் மனைவியும் ஓர் ஓரமாக நின்றபடி பெரியவா தரிசனத்தில் மெய்மறந்து காணப்பட்டார்.

    வரிசையில் நின்றிருந்தவர்கள், ஒவ்வொருவராக நகர்ந்து கொண்டிருந்தனர். இப்போது ராமசாமி ஐயரின் முறை வந்தது. மிகுந்த பயபக்தியுடன் தனது மேல்வஸ்திரத்தை அகலமாகப் பிரித்து பெரியவாளின் முன்னே ராமசாமி நீட்டினார். ஆனால் நிகழ்ந்தது வேறு விதமாக இருந்தது.
    தன் ஆசிர்வாதமான அட்சதையை அவரது வஸ்திரத்தில் போடாமல் தரையில் மண்ணோடு மண்ணாகப் போட்டார் பெரியவா.

    இது கண்டு மிகவும் கலக்கமுற்றார் ராமசாமி. அருகே இருந்த அவரது மனைவியும் ஏகத்துக்கும் வருத்தமுற்றார். தரையில் விழுந்த அட்சதையை எடுக்கலாமா, வேண்டாமா என்கிற தயக்கத்தில் இருந்தனர் இருவரும். அப்போது முகம் நிறைய பிரகாசத்தோடு, ‘என்ன ராமசாமி..அட்சதை தரைல விழுந்துடுத்தேனு பார்க்கறியா… மண்ணோடு மண்ணாக அந்த அட்சதையை அப்படி எடுத்து நீயும் உன் பார்யாளும் மடில முடிஞ்சு வெச்சுக்கோங்கோ’என்றார் பெரியவா நிதானத்துடன்.

    இந்த நிகழ்வைக் கண்டு சுற்றி நின்றவர்களும் ஒரு கணம் திகைத்தனர். எல்லோருக்கும் அவரது மேல்வஸ்திரத்திலோ, புடவையிலோ அட்சதையை ஆசிர்வாதத்தோடு தெளிந்த மஹாபெரியாவா, இவரது முறை வரும்போது மட்டும் ஏன் மணலில் – அதாவது தரையில் அட்சதையைப் போட்டார். இதற்கு என்ன அர்த்தம் என்ன என்று குழம்பினார்கள்.

    மஹாபெரியவா என்கிற கருணைத் தெய்வம் மனம் கனிந்து சொல்கிறதே என்பதற்காக தரையில் குனிந்து, மணலோடு மணலாகச் சிதறிக் கிடந்த அட்சதையை ஒருவிதமான உணர்ச்சியுடன் பொறுக்கி எடுத்து மடியில் முடிந்து கொண்டனர் இருவரும்.

    ‘போயிட்டு வாப்பா ராமசாமி…. அதான் உனக்கு உத்தரவு அப்பவே கொடுத்துட்டேனே! என்று வரை புன்சிரிப்புடன் வழியனுப்பினார் பெரியவா.
    ராமசாமிக்கு அடுத்து வரிசையில் வந்தவர்களுக்கு வழக்கம் போல் மேல் வஸ்திரத்திலேயே அட்சதை போட்டு ஆசிர்வதித்து அனுப்பிக் கொண்டிருந்தார் மஹான்.

    சேலம் திரும்புவதற்கு ராமசாமி ஐயருக்கு மஹாபெரியவா உத்தரவு கொடுத்த பிறகு, வெங்கிடாத்திரி அகரத்தில் இருந்து மனைவியுடன் வண்டியில் புறப்பட்டார். சுகமான காற்று உடலை வருடிக் கொண்டிருந்தாலும், ராமசாமி ஐயரின் மனம், மணலில் போட்ட அட்சதையிலேயே இருந்தது.

    சேலத்துக்கு வண்டியில் போகும்போது ராமசாமியும் அவரது மனைவியும் இயல்பான நிலையில் இல்லை. அட்சதையை பெரியவா மணல் மேல் போட்ட நினைவே ஃப்ளாஷ்-பேக் போல் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது.
    ஏன் மணலில் அட்சதையைப் போட்டு அதை எடுத்துக் கொள்ளச் சொன்னார்?மற்றவர்கள் போல் நமக்கு வஸ்திரத்தில் போடவில்லையே… இந்த நிகழ்வு எதை உணர்த்துகிறது?
    சேலத்தை நோக்கி வண்டி வேகத்தில் போய்க் கொண்டிருந்தாலும் ராமசாமியின் மனதில் வெறுமையே இருந்தது.

    எல்லோருக்கும் அவரவர் மேல்வஸ்திரத்திலோ, புடவைத் தலைப்பிலோ விழுமாறு அட்சதையைப் போட்ட மஹா பெரியவா, தனக்கு மட்டும் மேல்வஸ்திரத்தில் போடாமல் ஏன் தரையில் போட்டார் என்று மருகிப் போனார் ராமசாமி ஐயர். எவ்வளவு முயன்றும்,யோசித்தும் இதற்கான விடை அவருக்குக் கிடைக்கவில்லை. மகான்களின் இயல்பை மனிதர்கள் அறிய முடியுமா?

    ஆனால், சேலத்துக்கு வந்ததும் இந்த நிகழ்வு அன்றே அவரது நினைவில் இருந்து விடுபட்டது. காரணம் – வழக்கமான அவரது வக்கீல் பணிகள். இயல்பு வேலைகளில் பிஸியானார் ராமசாமி ஐயர்.
    வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து சேலத்துக்கு வந்த இரண்டாம் நாள் மதியம்… அன்று ஏதோ முக்கிய பணிக்காக வீட்டில் இருந்த ராமசாமி ஐயருக்கு, கனமான பதிவுத் தபால் ஒன்று வந்தது. அனுப்பியவர் முகவரியைப் பார்த்தார். அதில், அவரது மாமனாரின் பெயரும் விலாசமும் குறிப்பிடப்பட்டிருந்தது. சாதாரணமாக ஒரு இன்லேண்ட் கடிதம் எழுதி,சம்பிரதாயத்துக்கு விசாரிப்பவர், பதிவுத் தபாலில் என்ன அனுப்பி இருப்பார் என்கிற ஆவலுடன், மனைவியையும் உடன் வைத்துக் கொண்டு பிரித்தார்.

    உள்ளே – ரெஜிஸ்திரார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரம் ஒன்று இருந்தது. ஒரு கணம் குழம்பியவர், பத்திரத்தில் உள்ள வாசகங்களை முழுக்கப் படித்து விட்டுப் பிரமித்துப் போனார். பத்திரத்துடன் இருந்த ஒரு கடிதத்தில், ராமசாமியின் மாமனார் தன் கைப்பட எழுதி இருந்தார்: ‘வக்கீல் தொழிலில் சிறந்து விளங்கினாலும், சொந்தமாக நில புலன் எதுவும் இல்லாமல் இருந்து வரும் உங்களுக்கு – உங்கள் பெயரிலேயே ஏதாவது நிலம் எழுதி வைக்கலாம் என்று திடீரெனத் தோன்றியது. அதன் வெளிப்பாடுதான்,இத்துடன் இணைத்திருக்கும் பத்திரம். தங்கள் பெயருக்குப் பதிவு செய்து, சில ஏக்கர் நன்செய் நிலங்களை எழுதி வைத்திருக்கிறேன். இறைவனின் அருளுடனும், தாங்கள் வணங்கும் மகா பெரியவா ஆசியுடனும் இதை நல்லபடியாக வைத்துக் கொண்டு சுபிட்சமாக வாழுங்கள்.’

    ராமசாமி ஐயருக்கும் அவரது மனைவிக்கும் ஏக சந்தோஷம்.இருக்காதா பின்னே!எதிர்பார்க்காத நேரத்தில் இப்படி ஒரு சொத்து – அதுவும் நல்ல நன்செய் நிலம் – தானாகக் கைக்கு வந்து சேர்ந்தால், மனம் மகிழ்ச்சியில் துள்ளாதா? பரவசப்பட்டுப் போனார்கள் இருவரும்.
    மாமனாரிடம் இருந்து தானமாக வந்த நில புலன்களில் ஏற்கெனவே பயிர்கள் நன்றாக விளைந்து கொண்டிருந்தன. மகசூலும் நன்றாக இருந்தது. அதனால்,இதைப் பராமரிப்பதில் பெரிதாக ஒன்றும் சிரமம் இல்லை ராமசாமி ஐயருக்கு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் நேரில் போய் நல்ல முறையில் பார்த்து வந்து கொண்டிருந்தார்.

    இதற்கிடையில் வெங்கடாத்திரி அகரத்தில் மகா பெரியவா,அட்சதையை ஏன் தரையில் போட்டார் என்கிற சம்பவத்தை ஏறக்குறைய மறந்தே போயிருந்தார் ராமசாமி ஐயர். ஆனால், அப்படி அட்சதை போட்டு ஆசி புரிந்த மகா பெரியவா இதை மறப்பாரா?

    நில புலன்கள் சேர்ந்தால் நிலச் சுவான்தார்தானே! இப்படி ஒரு நிலச் சுவான்தார் ஆன பிறகு, ‘இந்த நல்ல செய்தியை மகா பெரியவாளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.’ என்று எண்ணினார் ராமசாமி ஐயர். ஒரு நாள் காஞ்சிக்குப் போய் அவரைத் தரிசிக்க ஆர்வம் கொண்டார்.அந்த நாளும் கூடிய விரைவிலேயே வாய்த்தது.

    தனது நிலத்தில் இருந்து முதன் முதலாக அறுவடை ஆன நெல்லில் இருந்து,அரிசி அரைத்துக் கொண்டு, அந்த அரிசி மூட்டைகளுடன் காஞ்சிபுரம் மடத்துக்கு வந்தார் ராமசாமி ஐயர். அந்த மூட்டைகளுள் ஒன்றில் இருந்து சில அரிசி மணிகளை எடுத்து, தன் மேல்துண்டில் முடிந்து வைத்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போல் மகா பெரியவா முன்னால் போய் நின்றார். உடன்,அவரது மனைவியும் இருந்தார்.

    “வாப்பா ராமசாமி… சேலத்துலேர்ந்து வர்றியா? இல்லே உன் வயல்லேர்ந்து நேரா இங்கே வர்றியா?” – மகா பெரியவா கேட்டதும், ராமசாமி ஐயர் வாயடைத்துப் போனார். ஏதும் பேசவில்லை. மகா பெரியவாளே தொடர்ந்தார்:“இப்பல்லாம் உன் நிலத்துல விளைஞ்ச அரிசியைத்தான் சமைச்சு சாப்பிடுறாயாமே?”

    மகா பெரியவா திருவாய் மலர்ந்தருளிய மறுகணம் விதிர்விதிர்த்துப் போனார் ராமசாமி ஐயர். சட்டென்று நிதானத்துக்கு வந்து, “ஆமா பெரியவா.வெங்கடாத்திரி அகரத்துக்கு வந்து பெரியவாளைத் தரிசனம் பண்ணிட்டு ஊருக்குப் போன உடனே,என் மாமனார்கிட்டேர்ந்து பத்திரம் வந்தது. நிலமே இல்லாமல் இருந்த எனக்கு, அவராவே சில ஏக்கர்களை எழுதி சாசனம் பண்ணி, தபால்ல அனுச்சிருந்தார். அதான் பெரியவாளைப் பாத்துச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.முதல் விளைச்சல்ல வந்த சில அரிசி மூட்டைங்களையும் மடத்துக்குக் காணிக்கையா கொண்டு வந்திருக்கேன்.”

    “எல்லாம் சரிதான். அன்னிக்கு உன் மேல்வஸ்திரத்துல போட வேண்டிய அட்சதையை நிலத்துல போட்டபோது குனிஞ்சு எடுக்கறப்ப, அவ்வளவு வருத்தப்பட்டியே ராமசாமி… இன்னிக்கு அதே மாதிரிதானே, இந்த அரிசியைக் கொண்டு வர்றதுக்கும் குனிஞ்சு நிமிர்ந்திருக்கே! உன் சொந்த நிலத்துல குனிஞ்சு, கதிர் அறுத்த நெல்லை அரிசி ஆக்கி, உன் மேல்வஸ்திரத்துல முடிஞ்சு வெச்சுண்டு இப்ப என்னைப் பாக்க வந்திருக்கே?! இல்லியா?” என்று சொல்லி விட்டு, இடி இடியென பெரியவா சிரித்தபோது, ராமசாமியின் கண்களில் இருந்து பொலபொலவென்று நீர் சுரந்தது. மகா பெரியவாளின் ஞான திருஷ்டியை உணர்ந்து மெய் சிலிர்த்தார். பெரியவாளின் இந்தப் பேச்சைக் கேட்ட பிறகு அவரது மனைவிக்குப் பேச்சே எழவில்லை.

    மேல்வஸ்திரத்தை எடுத்துப் பிரித்து, அதில் முடிந்து வைத்திருந்த அரிசியைக் கையில் திரட்டி, மகா பெரியவாளின் முன்னால் இருந்த ஒரு பித்தளைத் தட்டில் சமர்ப்பித்தார் ராமசாமி. பிறகு, அவரது திருப்பாதங்களுக்குப் பெரிய நமஸ்காரம் செய்தார். “ஆமா பெரியவா… அன்னிக்கு நீங்க பண்ண அனுக்ரஹத்தாலதான் எனக்கு இன்னிக்கு இப்படி ஒரு சொத்து கிடைச்சிருக்கு. கூடிய சீக்கிரமே நிலம் உனக்குக் கிடைக்கப் போறதுங்கறதை சொல்லாம சொன்னேள்! அட்சதையை நிலத்துல போட்டேள். இந்த மூளைக்கு அப்ப இது எட்டலை. உங்களோட கருணைக்கும்,தீட்சண்யத்துக்கும் அளவேது பெரியவா” என்று சொல்லி, முகத்தை மூடிக் கொண்டு தேம்பலானார்.

    இதை அடுத்து, அந்தப் பரப்பிரம்மம், தியானத்தில் மூழ்கியது.

    ‘சொந்தமாக நில புலன் உனக்குக் கிடைக்கும்’ என்பதை தீர்க்க தரிசனமாக ராமசாமி ஐயருக்கு உணர்த்த விரும்பிய மகா பெரியவா, வஸ்திரத்தில் போட வேண்டிய அட்சதையைத் தரையில் போட்டதன் தாத்பர்யம் அவரைத் தவிர வேறு யாரால்தான் புரிந்து கொள்ள முடியும்?

     

  • எமனை உயிர்ப்பித்த ஞீலிவனேஸ்வரர்

     

    திருப்பபைஞ்ஞீலி அற்புதங்கள்

     

    ஞீலி என்பது கல்வாழையில் ஒரு வகை. பைஞ்ஞீலி என்றால் பசுமையான வாழை என்று பொருள் . பசுமையான ஞீலி வாழையை  தல விருட்சமாக கொண்டுள்ளதால் இத்தலத்திற்கு திருப்பபைஞ்ஞீலி என்று பெயர் .

     தேவாரம் பாடிய அப்பர் சுவாமிகள்  , திருச்சி மலைக்கோயில்,திருவானைக்கோயில், திருவெறும்பூர், திருப்பராய்த்துறை ஆகிய தலங்களில் தரிசனம் செய்து முடித்து விட்டு நடைப்பயணமாக திருப்பைஞ்ஞீலிக்கு வந்தார். கடும் வெயிலில்  நடந்து வந்த  களைப்பு, பசி மயக்கம் என மிகுந்த களைப்புடன் அப்பர் இருந்த நிலையில் , எதிரில் நடந்து வந்த ஒருவர், ” அய்யா , யார் நீங்கள் ?எங்கு செல்கிறீர்கள்? களைப்புடன் இருக்கிறீர்களே?” என்று அன்பு பொங்க கேட்டார். அப்பர், “ நான் திருப்பைஞ்ஞீலி செல்கிறேன். அங்குள்ள சிவ பெருமானை தரிசிக்க வேண்டியே இந்த பயணம்  .” என பதிலளித்தார். உடனே அப்பரை கேள்வி எழுப்பியவர், ” நான் சிவபெருமானை பூஜிக்கும் அந்தணர். என்னிடம் கட்டு சாதம் உள்ளது. இதை உண்டு , தாகம் தீர்த்து செல்லலாம்.நானே அழைத்து செல்கிறேன்”  என்றார். அப்பர்  களைப்பு தீரப் பசியாறிய பின்னர், அந்த அந்தணர் , அப்பரை, திருப்பைஞ்ஞீலி திருக்கோயிலுக்கு அழைத்து சென்றார். அதுவரை அப்பருடன் பேசிக்கொண்டு வந்த அந்தணர் அங்கு திடீரென மறைந்து விட்டார்.ஆச்சர்யப்பட்டு நின்ற அப்பருக்கு , ரிஷப வாகனத்தில் சிவபெருமான் , பார்வதி தேவியுடன் சேர்ந்து காட்சியளித்தார். தன்னை பசியாற்றி,  இறைவன் கொடுத்த தரிசனத்தால் உள்ளம் மகிழ்ந்த அப்பர் , அங்கு திருக்கோயில் கொண்டிருக்கும்  ஞீலிவனேஸ்வரரை போற்றிப்  பாடினார்.

     

    திருச்சியை அடுத்த மணச்சநல்லூருக்கு வடமேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் திருப்பைஞ்ஞீலி ஸ்ரீலிவனேஸ்வரர் திருக்கோயில்.  தன்னை நாடி வந்தவர்களுக்கு அருள்பாலிக்கும் அற்புதமான  தலம் திருப்பைஞ்ஞீலி திருத்தலம். இங்கு விசாலாட்சி அம்பிகை சமேதராய்  அருள்பாலிக்கிறார் ஞீலிவனேஸ்வரர். பங்குனி, புரட்டாசி மாதங்களில் மூன்று நாட்கள் சுயம்பு லிங்கமான  சுவாமி மீது சூரிய ஒளிக்கதிர் விழுகிறது. வசிஷ்ட முனிவருக்கு, எம்பெருமான் நடனக் காட்சியை காட்டி அருளிய தலம் இது என்பதால் மேலைச் சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது .

     

    வாயுவுக்கும், ஆதிசேசனுக்கும், யார் பெரியவர் என்று ஏற்பட்ட போட்டியில்  , அதிசேசன் கைலாய மலையை சுற்றி வளைத்துக் கைலாயத்தை  தளர்த்த சண்ட மாருதத்தை உண்டு பண்ணினார். கடுமையாக வீசிய சண்ட மாருதத்தால்  கைலாயத்திலிருந்து எட்டு சிகரங்கள்  பெயர்ந்து விழுந்தன.

     இவற்றுள் சுவேதகிரி என்பதே திருப்பைஞ்ஞீலி திருத்தலமாகும் .  ஆகவே இது தென்கைலாயம் எனவும்  வழங்கப்படுகிறது.

     

    தல  புராணம்

     

    பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிகளும் தங்களது திருமணத்திற்கு முன்பு இத்தலம் வந்து அம்பாளின் தரிசனம் வேண்டி தவம் செய்ததாகவும்  அவர்களுக்கு அம்பாள் காட்சி தந்து, தகுந்த காலத்தில் நல்ல வரன்கள் அமையப்பெற்று சிறப்புடன் வாழும்படி வரம் தந்ததாகவும் கூறப்படுகிறது . சப்தகன்னிகளின் வேண்டுகோளின்படி அம்பாள் இங்கே  எழுந்தருளி,  சப்த கன்னிகளிடம்,நீங்கள் வாழை மரத்தின் வடிவில் இருந்து நீண்ட காலத்திற்கு என் தரிசனம் காண்பீர்கள், என்றாள். அதன்படி சப்த கன்னிகள் வாழை மரங்களாக மாறி இங்கேயே தங்கி விட்டனர் . பிற்காலத்தில் வாழை வனத்தின் மத்தியில் அம்பாள் இருந்த இடத்தில் சிவனும் சுயம்புவாக லிங்க வடிவில் எழுந்தருளினார் என்கிறது தல வரலாறு .

     

     

    மேலும் அப்பருக்கு  அந்தணர் உருவில்  அமுது பாலித்ததால் சோற்றுடை ஈஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கும் ஆண்டவருக்கு  சித்திரை மாதம் அவிட்டம் நட்சத்திர நாளில் அப்பர் திருநாவுக்கரசருக்கு சோறு படைத்த விழா  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

     

     

     

     குழந்தை வடிவில் எமன்

     

    பூமிக்கு அடியில் சற்று பள்ளத்தில் உள்ள இந்த குடைவரைக் கோவிலில் சோமஸ்கந்தர் ரூபத்தில் சிவன் அம்பாள் இருவருக்கும் இடையே முருகன் பாலகனாக அமர்ந்திருக்க, சுவாமியின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமன் இருக்கிறார். திருக்கடவூர் தலத்தில் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் எமனை சம்ஹாரம் செய்ததால்  , உலகில் இறப்பு என்பதே இல்லாமல் போக பூமியின் பாரம் அதிகரித்தது. பாரம் தாங்காத பூமி தேவி  சிவபெருமானிடம் முறையிட்டாள். மற்ற தேவர்களும் சிவனிடம் எமனை உயிர்ப்பித்து தருமாறு முறையிட , சிவபெருமான் மனமிரங்கி எமனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்தார் .  தர்மம் தவறாமல் நடந்து கொள்ளும்படி அறிவுரை கூறி மீண்டும் தன் பணியை செய்து வரும்படி அருள் செய்தார் . அதனால் இந்த சந்நிதி முன்பு திருக்கடவூரில் செய்வது போல சஷ்டியப்தபூர்த்தி, ஆயுள்விருத்தி ஹோமம் ஆகியவை நடத்துகின்றனர்.   

     

    எமனுக்கு தனி சந்நிதி உள்ளதால்  ஞீலிவனேஸ்வரர் ஆலயத்தில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி இல்லை. ஞீலிவனேஸ்வரர் சன்னதிக்கு முன்னுள்ள நந்தியின் அருகே உள்ள ஒன்பது குழிகளில்  தீபம் ஏற்றி அதையே நவக்கிரகங்களாக எண்ணி வணங்குகின்றனர்.

       

     

    ஆலயத்தின் விசேஷ பரிகார பூஜை

     

    பார்வதி தேவி ஒருமுறை இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள். நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு தனக்கு பணிவிடை செய்ய வந்த சப்த கன்னிகளை வாழை மரங்களாக அருகில் இருக்கக் கூறி அருள்செய்தாள். அத்தகைய பெருமை பெற்ற வாழைக்குப் பரிகாரம் செய்ய விரைவில் திருமணம் கைகூடும். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைக்குப் பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பாகும் என்கிறார்கள் .  

     

    இந்த பரிகார பூஜை நேரம் காலை 8.30 முதல் பகல் 12.30 மணி வரையும், மாலையில் 4.30 முதல்5.30 வரையும் நடத்தப்படுகிறது .

     

    கல்லில் உள்ள தேரைக்கும் படியளக்கும் எம்பெருமான் ஈசன் , அப்பருக்கு படியளந்த இந்த  அற்புத திருத்தலத்தைப் பார்க்க நம் மனமும் விழைகிறது அல்லவா ?

     

    திருச்சிற்றம்பலம் …….

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

  • திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம்….

    திருவாரூரில் வரலாற்று சிறப்பு மிக்க தியாகராஜ சுவாமி கோவிலில் ஆழித் தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    இக்கோவிலின் ஆழித் தேரானது ஆசிய கண்டத்திலே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
    இக் கோவில் விழாக்களில் பங்குனி உத்திர விழா சிறப்பு வாய்ந்தது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித் தேரோட்டம், கமலாலய குளத்தில் தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    30 அடி அகலம், 30 அடி உயம், 220 டன் எடை கொண்ட ஆழித்தேரானது மூங்கில் மற்றும் பனங்கட்டைகள் கொண்டு மொத்தம் 96 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்டு 300 டன் எடையுடன் உள்ளது.
    திருவாரூர் ஆழித் தேராட்டம் இன்று காலை நடைபெற்றது. அமைச்சர் காமராஜ், கலெக்டர் நிர்மல் ராஜ் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
    தேர் நகர தொடங்கியதும் பக்தர்கள் ஆரூரா, தியாகேசா என் பக்தி முழக்கம் எழுப்பினர். தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தேரானது கீழ வீதி, மேல வீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி வழியாக மாலை நிலைக்கு வந்தது. ஆழித் தேருக்கு பின்னால் சண்டிகேஸ்வரர், அம்மன் தேர் இழுத்து வரப்பட்டது.