ஜி.எஸ்.டி வரி விதிப்பால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்கு குறைந்த விலையில் வாடகை அறை, மானிய விலையில் லட்டு, அன்னதானம் ஆகியவற்றை திருப்பதி தேவஸ்தானம் வழங்கி வருகிறது. தற்போது நாடு முழுவதும் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த வரி விதிப்பால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட், பிரசாதங்கள் மற்றும் அறை வாடகை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சேவை வரியிலிருந்து திருமலை – திருப்பதி தேவஸ்தானத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜி.எஸ்.டி வரிவிதிப்பு இனி திருப்பதி தேவஸ்தானத்துக்கும் பொருந்தும். இதனால், திருப்பதியிலுள்ள தங்கும் அறைகள், லட்டு பிரசாதம் உள்ளிட்டவற்றின் விலை உயரும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
ரம்பா இளமை வரம் வாங்கிய கோவில்..
ஏதோ ஒரு பெயர் தெரியாத பழைய திரைப்படத்தில் தேவலோகத்தில் ரம்பா, ஊர்வசி, மேனகா எல்லாம் அட்டகாசமாக ஆடிக் கொண்டிருந்தார்கள். இந்திரன் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த ரம்பா, ஊர்வசிக்கெல்லாம் வயசே ஆகாதா? எப்பப் பார்த்தாலும் அப்படியே இருக்காங்களே என்றேன். அப்படியே இளமையா இருக்கணும்னுதான் ரம்பா, ஊர்வசி, மேனகா எல்லாம் பூலோகத்திற்கு வந்து வரம் வாங்கிட்டு போனாங்க என்றார் என் நண்பரின் பாட்டி. எந்த ஏரியாவில வரம் வாங்கினாங்க பாட்டி என்றேன்.
கிண்டல் பண்ணாதேடா, இலம்பையங்கோட்டூர்னு ஒரு ஊர் இருக்கு. அங்கே தான் இவங்கல்லாம் வந்து தவம் இருந்து இளமை வரம் வாங்கிட்டு போனாங்க, அவங்க வந்துபோன கோவில் கூட இன்னும் அங்கே இருக்கு தெரியுமா என்று எங்களை அடுத்தடுத்து வியப்பில் ஆழ்த்தினார் பாட்டி. சரி தான், ரம்பை வந்துபோன கோவிலை பார்த்துவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தேன்.ஒருநாள் அதிகாலையிலேயே நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு, ரம்பையின் பாதச்சுவடிகளை ஃபாலோ பண்ண ஆரம்பித்தேன். இந்த ஊர் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிறது என்றார்கள். அங்குள்ள திருவிற்கோலம் எனப்படும் கூவம் சிவன் கோவிலிலிருந்து தென்மேற்கே 4 கி மீ. போனால் இந்த ஊரை அடையலாம் என்றார்கள். ஏற்கனவே நான் கூவம் கிராமத்திற்கு (இங்கிருந்துதான் சென்னையின் ஜீவநதி கூவம் புறப்பட்டு வருகிறது) போயிருப்பதால் அது வரை எந்த சிக்கலும் இல்லாமல் போய்விட்டேன்.அங்கு சென்று விசாரித்தபோது இலம்பையங்கோட்டூரா அப்படி எதுவும் இங்கே கிடையாதே என்று இடியை இறக்கினார் ஒருவர். பயணம் அவ்வளவுதானோ என்ற அச்சத்துடன் வேறொரு பெரியவரை விசாரித்தோம். அவங்க செட் ஆளைப் பற்றி தெரிந்திருக்கும் என்ற நப்பாசை தான். நம்ம கணக்கு சரியாக இருந்தது. இலம்பையங்கோட்டூரைத் தான் இப்போ எலுமியன்கோட்டூர்னு சொல்றாங்க, இன்னும் 4 கிலோ மீட்டர் போங்க ஊர் வந்துடும் என்று வயிற்றில் பால் வார்த்தார். அப்பாடா, தப்பிச்சோம்.
அழகான வயல்வெளிகளுக்கு இடையில் கொக்குகள் வானில் பறக்க, ஒற்றையடிப் பாதையில் வண்டியில் பறந்தோம். அப்படியே வளைந்து நெளிந்து சென்றதில் ஒரு சிற்றூர் எதிர்ப்பட்டது. அடிபம்பில் துணி துவைத்துக் கொண்டிருந்த ஒரு நவீன ரம்பையிடம், அக்கால ரம்பை வந்துபோன கோவில் பற்றி விசாரித்தோம். அப்படியே கிழக்கால போங்க என்று கையை வீசினார். தூரத்தில் இருந்து பார்க்கும் போதே ஒரு சிதிலமடைந்த பழங்காலக் கோவில் தெரிந்தது.ரம்பா, ஊர்வசி, மேனகா எல்லாம் வந்துபோன கோவில் என்பதால் உள்ளே காலை வைத்ததும் இதயத்தில் சிலிர்க்கிறதா என்று பார்த்தேன். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் கோவிலின் புராதனம் நம்மை மெல்ல சூழ்ந்து கொள்கிறது. ஒரு கனத்த மௌனத்தை உணர முடிந்தது. ஒரு இனம் புரியாத அமைதி நெஞ்சில் பரவியது. கோவில் குருக்களின் வீடும், பசு மடம் ஒன்றும் கோவில் வளாகத்திற்குள்ளேயே இருக்கிறது. குருக்கள் கோவிலின் தல வரலாற்றை விளக்கினார். அதை முதலில் சுருக்கமாக பார்த்துவிடுவோம்.திரிபுர சம்ஹாரத்தின்போது சிவ பெருமான் தேரேறி புறப்பட, அவருடன் சென்ற தேவர்கள் தன்னை வழிபடாமல் சென்றதால் விநாயகர் தேரின் அச்சை முறித்து விட்டார். தேர் நிலைகுலைந்து சாய்ந்தது. ஆனால் தேர் கீழே விழாமல் மகாவிஷ்ணு அதைத் தாங்கிப் பிடித்தார். அப்போது சிவபெருமான் கழுத்தில் அணிந்திருந்த கொன்றை மாலை விழுந்த இடத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். அந்த இடம்தான் இலம்பையங்கோட்டூர் திருத்தலம்.தேவலோக மங்கைகளான ரம்பா, ஊர்வசி, மேனகா ஆகியோர் மாறாத இளமை வேண்டுமென்று இத்தல இறைவனை பூஜித்து வரம் பெற்றனர். இரம்பை வழிபட்டதால் இறைவனுக்கு அரம்பேஸ்வரர் என்ற பெயரும் உண்டாயிற்று. இரம்பை வழிபட்ட இத்தலம் இரம்பைக்கோட்டூர் என்று ஆகி, நாளடைவில் மருவி இலம்பயங்கோட்டூர் என்று மாறி தற்போது எலுமியன்கோட்டூர் என்று வழங்கப்படுகிறது. இங்குள்ள சிவன் மீது திருஞானசம்பந்தர் பதிகம் பாடியுள்ளார்.இந்த ஆலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு முகப்பு வாயில் மட்டுமே இருக்கிறது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடமும், அதிகார நந்தி மண்டபமும் இருக்கின்றன. இத்தலத்தில் கொடிமரம் எதுவும் இல்லை. வளிப் பிரகாரத்தில் இடதுபுறம் இரம்பை வழிபட்ட அரம்பேஸ்வரர் 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறையில் இறைவன் தெய்வநாதேஸ்வரர் எனப்படும் அரம்பேஸ்வரர் கிழக்கு நோக்கி லிங்க உருவில் இருக்கிறார். ஆலயத்திற்கு ஒரு பிரகாரம் மட்டுமே உள்ளது. பிரகாரத்தை வலம் வருகையில் குருந்த விநாயகர் சந்நிதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர் சந்நிதி, பைரவர் சந்நிதி ஆகியவை உள்ளன. கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், அவரை அடுத்து தட்சிணாமூர்த்தி, கருவறை பின்புறம் லிங்கோத்பவருக்கு பதில் அவ்விடத்தில் மகாவிஷ்ணு, அடுத்து பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி யோக தட்சிணாமூர்த்தியாக சின் முத்திரையை இதயத்தில் வைத்து காணப்படுகிறார். வலது காலை மடித்து பீடத்தில் வைத்து, இடது கையை ஆசனத்தில் அழுத்திக் கொண்டு, கண்களை மூடிக் கொண்டு மிக அமைதியாக அமர்ந்திருக்கின்ற இவரது சிற்பம் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது. இத்தல இறைவன் ஒரு சுயம்பு, மூலவர் தீண்டாத் திருமேனி. பெரிய ஆவுடையார் அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பில் காணப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு வெளியே இரு புறமும் மல்லிகை தீர்த்தமும், சந்திர தீர்த்தமும் அமைந்துள்ளன. தட்சனால் சாபம் பெற்ற சந்திரன் இங்குள்ள மல்லிகை தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கியதாக கூறப்படுகிறது.தேவர்கள் வழிபட்ட இந்த தெய்வநாதேஸ்வரரை வணங்கினால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யோக தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்கிறார்கள்.ரம்பா, ஊர்வசி, மேனகா போல இளமை மாறாமல் இல்லாவிட்டாலும், இருக்கிற வரை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டு வெளியில் வந்தோம். ரம்பா ஊரை பார்த்துட்டோம் டோய்னு… இனி எல்லார் கிட்டேயும் சொல்ல வேண்டியதுதான். -
நளனுக்கு நல் வாழ்வு அளித்த திருநள்ளாற்று நாயகன்
ஒருமுறை தேவலோகத்தில் ஒரு மண்டபம் கட்ட முடிவாயிற்று. அதில், தேவலோகத்தில் வசிப்பவர்கள் அனைவரும் தங்கி, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கலாம் என்பது திட்டம். சிவபெருமானுக்கு இதில் இஷ்டமில்லை. அதேநேரம், அவரது மனைவி பார்வதி மண்டபம் கட்டும் விஷயத்தில் ஆர்வமாக இருந்தாள்.தேவஜோதிடர்கள் மண்டபம் கட்ட நாள் பார்த்தனர். அப்போது ஒருவர், இதைக் கட்டி முடித்தாலும் எரிந்து போகும். சனியின் பார்வை சரியில்லை, என்றார். இருந்தாலும், சனீஸ்வரனை சரிக்கட்டி விடலாம் என நினைத்த பார்வதி மண்டபத்தை கட்ட ஏற்பாடு செய்தாள். பார்வதி சிவனிடம், மண்டபத்தை அழியாமல் பாதுகாக்கும்படி சனீஸ்வரனிடம் சொல்வோம். அவன் நம்மை மீறவா செய்வான்? அப்படி மீறினால், நீங்கள் எனக்கு ஒரு சமிக்ஞை செய்யுங்கள். அவன் எரிப்பதற்கு முன் நானே எரித்து விடுகிறேன். அவன் ஜெயிக்கக்கூடாது என்றாள். எல்லாருக்கும் பாவபுண்ணிய பலனைத் தர வேண்டும் என்ற உத்தரவு போட்டவரே மீறலாம் என்றால் எப்படி? சிவன் பார்வதியிடம், நானே அவனிடம் விஷயத்தைச் சொல்கிறேன். அவன் கேட்க மறுத்தால், தலைக்கு மேல் உடுக்கையைத் தூக்கி அடித்து சமிக்ஞை செய்கிறேன். நீ தீ வைத்து விடு, என சொல்லிவிட்டு சென்றார். சனீஸ்வரனிடம் சென்று, தேவர்களுக்காக இந்த மண்டபத்தை விட்டுக்கொடேன், என்றார். சிவனே சொல்லும் போது என்ன செய்ய!சனீஸ்வரர் தடுமாறினார். வேறு வழியின்றி, பெருமானே! தாங்கள் நடனமாடுவதில் வல்லவர். உங்கள் நடனத்தை நான் பார்த்ததில்லை. எனக்காக ஆடிக்காட்டினால் விட்டு விடுகிறேன், என்றார்.எனக்கு சகாயம் செய்த உனக்கு நான் இதைக்கூடவா செய்யமாட்டேன்! என்ற சிவன், உடுக்கையை தலைக்கு மேல் தூக்கி அடித்தபடியே ஆடினார். பார்வதியின் காதில் சத்தம் விழுந்தது. ஆஹா! சனீஸ்வரன் சம்மதிக்கவில்லை போலிருக்கிறதே! என்று எண்ணியவள், மண்டபத்துக்கு தீ வைத்து விட்டாள். சனீஸ்வரனும் கடமையைச் செய்து விட்டார், சிவனும் நினைத்ததை சாதித்து விட்டார். அவரவர் பாவ புண்ணியத்தைப் பொறுத்து சனீஸ்வரன் பலன் வழங்கியே தீருவார் என்பதற்கு இந்த சம்பவத்தை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம் .
மூன்றாவது சுற்று
படபடப்பையும், பயத்தையும் தரும் ஏழரையின் மூன்றாவது சுற்று ஐம்பது வயதைத்தாண்டி வரும் . இள வட்டங்கள் மத்தியில் ஏளனமாகப் பார்க்கப்படும் போதும் நிதானம் இழக்காமல் இருக்க வேண்டும் . நம்மிடத்தில் ஒரு கட்டுப்பாடும் , மன முதிர்ச்சியையும் கொண்டு வரும் காலகட்டம் இது .
எது நடந்தாலும் நெற்றிக் கண்ணை திறந்து குற்றம் குற்றமே என்று வெறும் குற்றத்தை மட்டுமே கண்டுபிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. மொத்தத்தில் இந்த மூன்றாவது சனியில் நமக்கென்று முதல் மரியாதையை எதிர்பார்க்கக் கூடாது. விட்டு கொடுத்துப் போவதால் கெட்டுப் போகப்போவதில்லை என்று தெளிந்தால் இனி இருக்கப்போகும் வாழ்க்கை தெளிந்த நீரோடை தான் . எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருந்தால் நம்மை சனி உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பார்.
சனி தோஷம் நீங்குவதற்கு சனிக் கிழமைகள் தோறும் விரதமிருந்து, சனி பகவான் சந்நதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட்டு, எள்ளன்னம் நைவேத்யம் படைத்து, மனமுருக, சனி கவசம்,சனிஸ்வர அஷ்டோத்ரம் பாராயணம் செய்திடலாம். சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர் என்பதால் இதன் மூலம் பயன் பெறலாம் . முடிந்தவரை ஏழைகளுக்கு எள்ளன்னம், கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் தந்தும் அவர் கருணையைப் பெறலாம் . சனியின் பார்வை நேரிடையாக நம்மீதுபடக்கூடாது என்பதால் ,சனி பகவானை நேருக்குநேர் வணங்காமல் பக்கவாட்டில் நின்றவாறு வணங்க வேண்டும் என்பது நியதி .
சனியின் தோஷத்திற்கு ஆளான ஸ்ரீ நள சக்கரவர்த்தி பட்டப் பாடு நாம் அனைவரும் அறிந்ததே . ஏழரை ஆண்டு சனி பிடித்து, எல்லா துன்பங்களையும் அனுபவித்த நளன் மனைவியையும், குழந்தைகளையும் விட்டு விட்டு காட்டுக்குச் செல்லும் சமயம் கார்கோடகன் என்ற பாம்பு கடிக்க சுய உருவத்தை இழக்க நேரிட்டது. பல துன்பங்களுக்குப் பின் அயோத்தி அரசனிடம் தேரோட்டியாக நளன் வேலை பார்த்தார். நளனின் மனைவியான தமயந்தி தன் கணவர் தோற்றம் மாறி வாழ்ந்து வருவதை ஒற்றர்கள் மூலம் அறிந்து மிகவும் மன வேதனை அடைந்தாள்.
நளமகராஜன் இந்த பிரமை நீங்க திருநள்ளாறுக்கு குடும்பத்துடன் வந்து வழிபட ஏழரை சனியின் கொடுமை நீங்கியதாகத் அறிகிறோம் .
“நிடத நாட்டு அரசன் நள சக்கரவர்த்தி நீ அரசர்களுள் சிறந்தவன். தோல்வியை அறியாதவன். உன்னிடம் ஏழரை ஆண்டுகள் வசித்து வந்தேன். உனது குடும்பத்தை யார் தரிசனம் செய்கின்றார்களோ, அவர்களை நான் காப்பேன் . நீ எனக்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கு. இந்த நள தீர்த்தத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி என்னை தரிசனம் செய்பவர்களுக்கு என்னால் வரும் துன்பங்கள் யாவும் நீக்கப்படும் என்று என்று சனீஸ்வர பகவான் அருள்பாலித்தார் என்கிறது புராணம் .
நளனும் அவ்வாறே நள தீர்த்தத்தை உருவாக்கி ஸ்ரீ சனீஸ்வர பகவானின் அருளால் இழந்த செல்வத்தைப் பெற்று இன்புற்றார் என்பதை அறியும் போது , உண்மையில் சனி பகவான் கொடுக்க ,எவர் தடுக்க முடியும் என்ற வழக்கு உண்மை என்பது தெளிவாகிறது .
சனி பகவான் துதிப்பாடல்
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா
-
கொடுத்துக் கெடுத்தாலும் , மீண்டும் கொடுப்பவர் சாயா புத்திரன்
சூரியனுக்கும், சாயா தேவிக்கும் பிறந்தவர் தான் தர்ம ராஜனின் அவதாரம் என போற்றப்படும் சனீஸ்வரர் . ஒவ்வொருவர் வாழ்விலும் ஏழரை சனியின் தாக்கம் இருந்தே தீரும். அவரின் பார்வையில் இருந்தும் , தீர்ப்பில் இருந்தும் யாரும் தப்பிக்க முடியாது . சராசரி மானிடரில் இருந்து தேவலோகத்துக்கு அதிபதியான இந்திரனாக இருந்தாலும் அவருக்கு எல்லோருமே ஒன்று தான் .
ஒரு சமயம் தேவேந்திரன், சனி பகவானிடம் சென்று, ‘நான் தேவர்களுக்கெல்லாம் தலைவன். என்னை நீ எப்படி பிடிக்கலாம்?’ என்று கேட்டான். அதற்கு சனி பகவான், ‘நான் நீதிமான். எல்லோரையும் சமமாக பாவித்துத்தான் கிரக பரிபாலனம் செய்து வருகிறேன். என் பார்வையில் இருந்து எவரும் தப்ப முடியாது’ என விளக்கம் சொன்னார்.‘அப்படியென்றால் நீ என்னை பிடிக்கும் நேரத்தையாவது சொல்லி விடு’ என்று தேவேந்திரன் வேண்டினான். சனீஸ்வரர் அந்த கால நேரத்தை தெரிவித்தார். சனீஸ்வரர் தெரிவித்த அந்த நேரம் வந்ததும் தேவேந்திரன் பெருச்சாளி உருக்கொண்டு சாக்கடையில் போய் ஒளிந்துகொண்டான். சனி குறிப்பிட்ட கால நேரம் கடந்த பிறகு வெளியே வந்த தேவேந்திரன், சனீஸ்வரரிடம் சென்று, ‘உங்கள் பார்வையில் இருந்து தப்பி விட்டேன் பார்த்தீர்களா’ என்று பெருமையடித்துக் கொண்டான். சனீஸ்வரர் சிரித்துக்கொண்டே, ‘நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் உழன்றீர்களே.. அதுகூட என் பார்வை, பீடிப்பினால்தான்’ என்றார். இதன்மூலம் சனீஸ்வரர் ஓர் பாரபட்சம் இல்லாத நீதிமான் என்பதை அறிந்துக் கொள்ளலாம் .
ஏழரைக்குப் பிறகு ஒவ்வொரு மனிதனுக்கும் தெளிவும் நிதானமும் வந்து விடும் . அந்த அளவிற்கு மனிதனை பண்படுத்தும் காலக்கட்டம் என்று கூட சொல்லலாம் . ஒருவர் முற்பிறவியில் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மை ,தீமைகளையும் தருவார் என்று சொல்லப்பட்டாலும் , சனி கொடுத்தால் யார் தடுப்பார் என்று சொல்லும் அளவிற்கு ஏழரையின் முடிவில் அளவில்லாமல் வாரி வழங்கவும் செய்வார் .
இரண்டாவது சுற்று
இருபத்தேழு வயதுக்கு மேல் நடக்கும் ஏழரைச் சனிக்கு பொங்கு சனி என்று பெயர். பறித்தல்,பறித்ததை காத்தல் , காத்ததை அதன் வீரியம் குறையாமல் பாதுகாத்தல், பாதுகாத்ததை அதோடு நிற்காமல் பலமடங்காக பெருக்கி , எடுத்தவருக்கே அதை திருப்பி தருதல் என பொங்கு சனியின் இயல்பை குறிப்பிடலாம் . இதனால் தான் கொடுத்துக் கெடுப்பவர்; கெடுத்து கொடுக்கிறவர் என்று சனி பகவானைக் குறிப்பிடுவதுண்டு . காசு, பணம், பதவி,கல்யாணம், சொத்து, சுகம் எல்லாம் வந்தாலும் , வந்த வேகத்திலேயே காணாமலும் போகும் . ‘நான்’ என்ற அகந்தையை ஒருவரிடம் இருந்து பிடுங்கவே இந்த அதிரடி நடவடிக்கை . இந்தக் காலக்கட்டத்தில் தான் நாம் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் . ‘நான்’ , ‘எனது’ , ‘என்னால் தான்’ என்ற எண்ணம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் .
‘‘நம் கையில எதுவும் இல்லை’’ என்கிற சரணாகதி தத்துவம் தான் இந்த காலகட்டத்தில் உத்தமம் . நம் நேர்மையை சோதிக்கவும் சனி பகவான் செய்வார் . மனம் சஞ்சலப்படாமல் நேர்மையின் பக்கம் நின்று விட்டால் பின் எல்லாமே ஜெயம் தான் .
நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய் என முக்கூட்டு எண்ணெயினை ஓர் இரும்புச் சட்டியில் இட்டு , வெள்ளை, கறுப்பு, சிவப்பு வண்ண நூல்களைத் திரியாக இட்டு , நீலசங்கு புஷ்பம், , வில்வ இலைகளைக் கொண்டு சனி பகவான் சன்னதியில் மேற்கு திக்கில் தீபம் ஏற்றி வர நலம் பயக்கும் .
சனி பகவான் ஸ்தோத்திரம்
ஸூர்யபுத்ரோ தீர்க்கதேஹோ விசாலாக்ஷ: ஸிவப்ரிய:
தீர்க்கசார: ப்ரஸந்நாத்மா பீடாம்ஹரதுமே ஸனி:
சூர்யபுத்திரனும், நீண்டதேகமுள்ளவனும், சிவப்ரியனும் தெளிந்த மனம் உள்ளவனுமான சனீஸ்வரபகவான் என்னுடைய தோஷத்தை எல்லாம் போக்க வேண்டும்.
-
சோதித்து, பின் சாதிக்க வைக்கும் சனி பகவான்
நவகிரகங்களில் ஒன்றான சனி பகவானுக்கு மட்டும் தான் தன் பெயருக்குப் பின்னால் ஈஸ்வரன் பட்டம் உள்ளது . நாம் யாருக்கு பயப்படுகிறோமோ இல்லையோ, நம் மனசாட்சிக்கு அதாவது சனி பகவானுக்கு பயப்பட்டே ஆக வேண்டும். ஏனென்றால் சனி பகவானிடம் இருந்து யாராலும் தப்ப முடியாது. அது சிவனாக இருந்தாலும், சரி… ஆண்டியாக இருந்தாலும் சரி…அவரின் தீர்ப்பு தர்ம நெறிக்கு உட்பட்டதாக தான் இருக்கும் . ஆனால் பெரும்பாலும் மக்கள் இவரை தண்டிக்கும் தெய்வமாகத்தான் பார்க்கிறார்கள் . ஆனால் சோதனையின் மூலம் ஒருவரைப் பக்குவப்படுத்துவதில் இவருக்கு நிகர் யாரும் இல்லை எனலாம் .
ஒருவருக்கு சனி தசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை பற்று வைத்திருக்கிறாரோ , அதனை அவரிடம் இருந்து பிரித்து, அதன் மூலம் அவர் மனதைப் பக்குவப்படுத்தி பின் அதனை வட்டியும் முதலுமாக உரியவருக்கே திருப்பிக் கொடுப்பார்.
சனீஸ்வரன் ஒரு ராசியில் 21/2 ஆண்டுகள் இருப்பார். அதாவது சனீஸ்வர பகவான் ஒரு ராசி வீட்டை கடக்கும் கால அளவு ,இரண்டரை ஆண்டுகள் எனக் கூறப்படுகிறது . ஜாதகத்தில் ஒருவரின் ராசிக்குப் பின் ராசியிலும் , அவரின் ராசிக்குள்ளும் மற்றும் ஒருவரின் ராசிக்கு அடுத்த ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம். சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும் வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும் கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை கங்கு சனி என்றும் சொல்கிறோம் .
இந்தப் பதிவில் ஏழரையின் முதல் சுற்றில் , நிகழக்கூடிய சாதகப் பாதகங்களைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் .
ஏழரையின் முதல் சுற்று
மனிதன் பிறந்ததிலிருந்துஅவனுடைய இருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கத்தை சிறுவர்களிடம் மிகத் தெளிவாகக் காண முடியும் . சனி பகவான் இந்தக் காலக்கட்டத்தில் ஃபுல் பார்மில் இருப்பார் என்று சொல்லப்படுகிறது . முதல் சுற்று, நடக்கும் பொது , குழந்தைகளை கையாளுவதே பெற்றோர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும் என்கிறார்கள் . செய்த தவற்றையே திரும்ப திரும்ப செய்து பெற்றோறரை டென்ஷனாக்குவதில் தொடங்கி , அடிக்கடி மருத்துவ செலவு என்று முழி பிதுங்கும் .
குழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான இந்த சுற்றில் தான் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே கருத்து மோதல்கள் , ஏட்டிக்குப் போட்டி வாதங்கள் , பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் தலையை காட்டும் .
கணவன் மனைவிக்குள் மூன்றாவது நபரால் பிரச்னை உருவாகும். 13லிருந்து 19 வரையுள்ள ஏழரைச் சனி நடக்கும் பிள்ளைகளை கண்கொத்தி பாம்பாக பாதுகாக்கவேண்டும்.
மந்தம், மறதி, தூக்கம் என்று ‘வீட்ல அடங்காத பிள்ளைகளை ஊர் அடக்கும் விதமாக ’ சனிபகவான் திருத்துவார் . ஏழரைச் சனியின் போது பெறக்கூடிய அனுபவங்களும் அவமானங்களும் காயங்களும் ,அவர்கள் வாழ்க்கை முழுதும் மறக்க முடியாதபடி இருக்கும். அதுவே வாழ்க்கையை சீர் தூக்கிப் பார்த்து திருந்த வழி வகுக்கும் .
இந்த நேரத்தில் தான் பெற்றவர்களும் குழந்தைகளுக்கு இறை நம்பிக்கையையும் , நேர் மறை சிந்தனையையும் ஊக்குவிக்க வேண்டும் . தினமும் காலையில் எழுந்து வீட்டுக்கு அருகே உள்ள கோவிலுக்கு சென்று வர பழக்க வேண்டும் .
சனி பகவான் காயத்ரி
காகத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்னோ மந்தப்ரசோ தயாத்”
என்னும் இந்த சனி பகவான் காயத்ரி மந் திரத்தை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து , அவர்களை தினமும் சொல்ல வைத்து , சனீஸ்வரர் அருள் கிடைக்கச் செய்யலாம் .
ஏழரையின் இரண்டாம் சுற்றில் நடக்கூடிய விளைவுகளைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்
-
சிவமே மூச்சாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்கள்
சிவனை தவிர வேறெந்த சிந்தனையின்றி அவன் தாள் பற்றி வழிநடந்தவர்கள் நாயன்மார்கள். சிவாய நம என்றால் அபாயம் ஏதும் இல்லை என்று தொண்டாற்றிய நாயன்மார்களின் பாடல்கள் , சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7ஆம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்களாகும். ஒவ்வொருவரும் தம் வாழ் நாளில் ஓர் குறிப்பிட்ட தொழிலை செய்து வந்தாலும் , சிவ நாமத்தையே மூச்சாக கொண்டு வாழ்ந்து வந்தவர்கள் .
அறுபத்துமூன்று நாயன்மார்களில் மூவர் மட்டுமே பெண்கள். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையார் , நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற அறியப்படும் மதுரையை ஆண்ட கூன் பாண்டியனின் மனைவி மங்கையர்கரசியார் , திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயன்மாரின் மனைவி இசைஞானியார் என்று மூன்று பெண்கள் உள்ளனர் .
வரும் பதிவுகளில் இந்த அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் .முதலாவதாக அதிபத்தர் என்னும் ஆதி சிவனின் பக்தரைப் பற்றி தெரிந்துக் கொள்வோம் .
பொன்னுக்கு ஆசைப்படாத அதிபத்தர்
மீனவச் சமூகத்தை சேர்ந்த அதிபத்தர், சோழ நாட்டில் சிறந்து விளங்கிய நாகப்பட்டினம் துறைமுகத்தில் வாழ்ந்து வந்தவர் . சிறந்த சிவ பக்தரான அவர் , தினமும் நண்பர்களுடன் சேர்ந்து மீன் பிடிக்கச் செல்வார். அப்படி போகும் போது நடுக்கடலில் கிடைக்கும் முதல் மீனை “இது ஈசனுக்கு” என்று சொல்லி மீண்டும் கடலிலேயே விட்டு விடுவார்.
சில நாட்களில் மீன் எதுவும் கிடைக்காமல் போவதும் உண்டு . அப்படி மீன்களே கிடைத்திடாத காலங்களிலும் கூட , வலையில் மிக அரிதாக கிடைக்கும் மீனையையும் கூட இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு பட்டினியாக கிடக்கும் பக்குவத்தையும் பெற்றிருந்தார் . அதிபத்தர் இந்த செயல் நீண்ட நாட்களுக்கு தொடர்ந்தது .
ஒரு முறை கொடிய பஞ்சம் வந்தது. அப்போதும் கூட கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற அதிபத்தர் , வறுமையிலும் தான் கொண்ட கொள்கையை மட்டும் தவறவிடவில்லை. தினமும் கிடைக்கும் ஒரே ஒரு மீனையும் , இறைவனுக்கு என்று சொல்லி கடலிலேயே விட்டுவிடுவார். இப்படி நாட்கள் சென்றாலும், தன்னுடைய பணியையும், பக்தியையும் அவர் விடவே இல்லை.
சும்மா இருப்பாரா நம் திருவிளையாடல்களின் நாயகன் , அதிபத்தர் அன்பை சோதிக்க விரும்பினார் . ஒருநாள் அதிபத்தரின் வலையில் நவரத்தினமும் , பொன்னும் பதிக்கப்பட்ட அதிசய மீனை சிக்க செய்தார். வறுமை காலத்திலும் ,வலையில் சிக்கிய விலை மதிப்பற்ற அந்த ஒரு மீனையும் அதிபத்தர் எவ்வித தயக்கமும் இன்றி சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்தார். தொடர்ந்து ஈசனும் அந்த அதிசய மீனை அவர் வலையில் சிக்கும்படி செய்தார் . அதிபத்தரும் பொன் பொருளுக்கு ஆசைப்படாமல் அந்த மீனையும் இறைவனுக்கே அர்ப்பணம் செய்தார் .

அவரது அன்பில் மயங்கிய சிவபெருமான், பார்வதியுடன் அதிபத்தருக்கு காட்சியளித்தார் என்கிறது வரலாறு.
நாயன்மார்களின் வரலாறு தொடரும் ….
-
வைகாசி விசாகம் வழிபாடு,,,,
விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.
வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும். இந்நாளில் எமனுக்கு தனிபூஜை செய்வது உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை அவர் வழங்குவதாக ஐதீகம்.
வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.
வைகாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ள லாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘ஓம் முருகா’ என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.
முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முருகன்கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தால் விசேஷம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும்.
-
துன்பங்கள் போக்கும் வைகாசி விசாகம்
சிவபெருமானின் பெருமையை உணராத பிரம்ம தேவர் மற்றும் இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும், தட்சனுக்கு பயந்து அவன் நடத்திய யாகத்தில் கலந்துகொண்டனர். அதனால் அவர்கள் அனைவரும் பெரும் துன்பத்தில் துவளும் நிலை ஏற்பட்டது.
உங்கள் அம்சம் பொருந்திய சக்தியை தவிர வேறு எந்த சக்தியாலும் எங்களுக்கு அழிவு வரக்கூடாது என்று சிவபெருமானிடம் வரம் பெற்றிருந்த சூரபத்மன் மற்றும் அவனது சகோதரர்களால் அந்த துன்பம் தேவர்களுக்கு வந்து சேர்ந்தது.
சூரபத்மனால் தேவர்கள் அனைவரும் வெற்றி கொள்ளப்பட்டனர். பல ஆண்டுகாலமாக சூரபத்மன் மற்றும் அவனது சகோதரர்களால் துன்பம் அனுபவித்து வந்த தேவர்கள், சிவ பெருமானை நோக்கி தவம் இயற்றினர். அவரை சந்திக்க நந்தி எம்பெருமானிடம் அனுமதி கேட்டு கயிலையின் கதவு அருகே காத்திருந்தனர். எதற்கும் பலனில்லாமல் போயிற்று. செய்த பாவங்கள் அவர்களை துரத்தி வந்தன.
இறுதியாக ‘சிவபெருமானை தரிசித்து தங்கள் துயரங்களை போக்கும்படி கூறி மன்றாடுவது எப்படி’ என்று விஷ்ணுவிடம் தேவர்கள் அனைவரும் சென்று கேட்டனர். அதற்கு அவர், ‘சிவபெருமானின் அம்சத்தில் உருவாகும் குமாரனால் தான் சூரபத்மனுக்கு அழிவு நேரும். இமயனிடம் வளர்ந்து வரும் பார்வதியின் மீது சிவபெருமானுக்கு மையல் வரும் வகையில், மன்மதனை கொண்டு காம பாணம் தொடுக்கச் சொல்லுங்கள்’ என்று கூறினார்.
அதன்படி பிரம்மதேவர், மன்மதனை அழைத்து, சிவ பெருமான் மீது மன்மத அம்பு தொடுக்கும்படி கூறினார். நெருப்பே வடிவான ஈசனின் கோபத்தைப் பற்றி தெரிந் திருந்ததால், பயந்து போன மன்மதன் எவ்வளவோ மறுத்தும், பிரம்மதேவர் விடவில்லை. இறுதியில், ‘என் சாபத்திற்கு ஆளாவாய்!’ என்ற பிரம்மதேவரின் மிரட்டலுக்கு அடிபணிந்தான் மன்மதன்.
நந்தி தேவரிடம் அனுமதி பெற்று உள்ளே சென்ற மன்மதன், யோக நிலையில் இருந்த சிவனின் மீது காம பாணத்தை தொடுத்தான். அந்த அம்பு அவரை தொடும் முன்பாகவே, அனைத்தும் அறிந்த ஈசன் தன் நெற்றிக்கண்ணை திறந்து மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். தேவர்கள் அனைவரும் பயத்தில் நடுங்கிப் போய்விட்டனர்.
அவர்கள், ஈசனின் முன்போய் அவரை துதித்து பாடத்தொடங்கினர். சாந்த நிலைக்கு வந்த ஈசன், இமயமலை சென்று பார்வதியை மணம் முடித்து கயிலாயம் திரும்பினார்.
அப்போது தேவர்கள் அனைவரும், ‘சர்வேஸ்வரா! இவ்வுலகில் தங்களுக்கு சமமானவர் எவரும் இல்லை. ஆயினும், சூரபத்ம அசுரர்களை அழிக்கும் வகையில், உங்களுக்கு நிகரான மைந்தனை தாங்கள் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினர்.
தேவர்களுக்கு மேலும் துன்பம் அளிக்க விரும்பாத சிவபெருமான், தனது பழமையான ஆறு திருமுகங் களையும் கொண்டார். ஈசானம், தத் புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், அதோமுகம் என்னும் அந்த ஆறு முகத்தில் இருந்தும் ஆறு தீப்பொறிகள் தோன்றின. சூரியனைக் காட்டிலும் பன்மடங்கு ஒளி பொருந்திய அந்த தீப்பொறிகள் வெளிக் கொணர்ந்த சத்தமும், வெப்பமும் அம்பிகை, தேவர்கள் அனைவரையும் நடுநடுங்கச் செய்தன.
பின்னர், அந்த ஆறு தீப்பொறிகளையும் கங்கையில் விடும்படி அக்னி மற்றும் வாயு தேவர்களுக்கு சிவபெரு மான் உத்தரவிட்டார். அவர்கள் அதனை கங்கையில் சேர்த்தனர். கங்கை அந்த ஆறு தீப்பொறிகளையும், சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்ப்பித்தது. அங்கு ஆறு தீப்பொறிகளும் ஆறு அழகிய திருவுருவம் கொண்ட குழந்தைகளாக மாறின. அந்த குழந்தைகளை ஆறு தாமரை மலர்கள் தாங்கின.

விண்ணை முட்டும் அளவுக்கு முழக்கம். ‘வானவர்களுக்கும், வையகத்தில் அனைவருக்கும் வாழ்வளிக்க வந்து விட்டான் ஆறுமுகப் பெருமான்‘ என்று எங்கும் ஒரே முழக்கம். சிவ பெருமான், அம்பிகையுடன் சரவணப் பொய்கைக்கு வந்து சேர்ந்தார். அங்கு அம்பிகை ஆறு குழந்தைகளையும் ஒரே குழந்தையாக்கி தன் கையில் அள்ளி, ஞானப்பால் பருகக் கொடுத்தார்.அன்னையின் கையில் தவழ்ந்து, ஞானப்பால் குடித்து தாகம் தணிந்ததும் ஆறுமுகக் கடவுள் சிரித்த அழகு வர்ணிப்புக்குள் அடங்காதது. தேவர் களுக்கு அந்த அழகு சிரிப்பில், சூரபத்மனின் அழிவு கண்கூடாக தெரிந்தது.
-
பக்தர்களுக்கு புதிய சலுகை…. திருப்பதி தேவஸ்தானம் முடிவு
முன் கூட்டியே தங்கும் அறைகளை காலி செய்தால் அவர்கள் செலுத்திய பணத்தை 50 சதவீதம் வரை திருப்பித் தர திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கு பக்தர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இதில் சிலர் மட்டுமே தங்கும் அறைகளை முன்பதிவு செய்கின்றனர். பலர் நேரடியாக திருமலைக்கு வந்த பின்னர் அறை எடுத்து தங்குகின்றனர். திருமலையில் மட்டும் 7,000 தங்கும் அறைகள் உள்ளன. இதில் ரூ.50 முதல் ரூ.7,500 வரை ஒரு நாளைக்கு வாடகை வசூல் செய்யப்படுகிறது. இதில் சாமானிய பக்தர்கள் தங்கும் அறை கள் வெறும் 4,500 மட்டுமே உள்ளன. இவை ரூ.50 முதல் ரூ.1,500 வரை உள்ளன. இவை பெரும்பாலும் அதிக கூட்டமுள்ள நாட்களில் கிடைப்பது அரிதாக உள்ளது.
முன்னாள் தேவஸ்தான தலைமை அதிகாரி சாம்பசிவ ராவ் இருந்தபோது திருமலையில் சாமானிய பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக இடமும் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணி தொடங்கப்பட்டது. இதனிடையே புதிய தலைமை நிர்வாக அதிகாரி அணில்குமார் சிங்கால் பதவியேற்றார். இவர் தற்போது தங்கும் அறைகள் குறித்து சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். அதாவது, தங்கும் அறைகளை முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நேரத்துக்கு கோயிலுக்கு வர இயலாமல் போகும் பக்தர்கள், அல்லது தங்க ளது வருகையை தள்ளிப்போடும் பக்தர்களுக்கு அவர்கள் முன்பதிவு செய்த பணத்தை அவர்களுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்கு முன் அந்தப் பணம் திருப்பி அனுப்பப்பட்ட தில்லை. மேலும், தங்கும் அறைகள் எடுத்து தங்குவோர் 12 மணி நேரத்திற்கு முன் காலி செய்தால் 50 சதவீதமும், 6 மணி நேரத்திற்கு முன் காலி செய்தால் 25 சதவீதமும் பணம் திருப்பி தரப்படுமென அறிவித்துள்ளார். இத்திட்டத் துக்கு பக்தர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. -
ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை
ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு ஸ்படிகலிங்க தரிசனமும், 6 மணிக்கு கால பூஜையும், 8 மணிக்கு ஸ்ரீராமர் வீதி உலாவும் நடைபெற்றது.பிற்பகல் 12 மணிக்கு சுவாமி சன்னதியில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெற்றது.
கோயில் குருக்கள் கையில் சிவலிங்கத்தை ஏந்தி அருள்கொண்டு ஆடியபடியே முதல் பிரகாரத்தில் வலம் வந்து, சுவாமி சன்னதியில் சிவலிங்கத்தை வழங்கினார். தொடர்ந்து சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.