Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்….

    சிவகங்கை மாவட்டம், பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பழமையான குடவரைக் கோயிலான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்றன. திருப்பணிகள் முடிந்து யாகசாலை மண்டபம் அமைப்பதற்காக மார்ச் 9-ம் தேதி முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

    ஏப். 24-ம் தேதி கும்பாபிஷேக விழாவுக்கான கணபதி ஹோமம் நடைபெற்றது. ஏப். 27-ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு ராஜகோபுரம், மற்ற விமானங்களுக்கும், காலை 10:30 மணிக்கு மூலஸ்தான விமானத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    மாலையில் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. பிச்சைக் குருக்கள் தலைமையில் சிவாச்சாரி யார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

  • அட்சய திருதியை விரதம் இருக்கும் முறை

    அட்சய திருதியை தினத்தில் அதிகாலை எழுந்து நீராடி, பூஜை அறையில் கோலமிட வேண்டும். லட்சுமி நாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் படங்கள் வைத்து, சந்தனம், குங்குமம் இட்டு மாலையிட வேண்டும். அந்தப் படங்களின் முன்பு குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பூஜை அறையில் போடப்பட்ட கோலத்தின் மீது பலகை வைத்து, அதன் மீதும் கோலம் போட வேண்டும். ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயம், சிறிய நகைகளை போட வேண்டும். பின்னர் அந்த சொம்பில் நீர் நிரப்பி, அதற்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். பின்னர் சொம்பின் மேல் தேங்காய் வைத்து, அதைச் சுற்றிலும் மாவிலையை வைத்து கலசமாக தயார் செய்து பலகையில் வைக்க வேண்டும்.

    பிறகு கும்பத்தின் முன்பு நுனி வாழை இலையில் அரிசியை பரப்பி, அதன் மீது விளக்கு ஏற்றிவைக்க வேண்டும். அதன் அருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து, அதற்கு குங்குமம் இட்டு பூ போட வேண்டும். மேலும் பொன் மற்றும் புதியதாக வாங்கிய பொருட்களை கலசத்திற்கு அரு கில் வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் அளவற்ற பலன் கிடைக் கும் என்பது ஐதீகம்.

    அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத் தடை  நீங்கும். உணவு தானியம் அளித்தால் அகால மரணத்தைத் தடுக்கலாம். கால்நடைகளை தானமாக வழங்கினால், வாழ்வு வளம் பெறும். மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால், பாவ விமோசனம் கிடைக்கும். ஏழைகளுக்கு தயிர்சாதம் தருவது, 11 தலைமுறைக்கு குறையில்லா அன்பை கிடைக்கச் செய்யும்.

  • செல்வம் அருளும் அட்சய திருதியை

    சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் திரிதியை, ‘அட்சய திருதியை’ எனப்படுகிறது. ‘அட்சயம்’ என்றால் வளர்வது என்று பொருள். அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பலமடங்கு வளரும். அதனால் அட்சய திருதியை அள்ள, அள்ள குறையாமல் செல்வத்தை அள்ளி தரும் சிறப்புமிக்க திருநாள் என்று போற்றப்படுகிறது.
    வனவாச காலத்தில், சூரிய பகவானை வேண்டி தர்மர் அட்சய பாத்திரம் பெற்றதும், மணி மேகலை அட்சய பாத்திரம் பெற்றதும், பரசுராமர் அவதரித்த தினமும் இதே அட்சய திருதியை தினத்தில்தான் என்று புராணங்கள் எடுத் துரைக்கின்றன. அன்னபூரணி தாயாரிடம் இருந்து சிவபெருமான் தனது பிச்சைப்பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்று, பிரம்மஹஸ்தி தோஷத்தில் இருந்து விடுபட்டதும் இந்த நாளில் தான். தங்கம் மட்டுமின்றி உப்பு, அரிசி, ஆடைகள், விலை உயர்ந்த பொருட்கள் என்ன வாங்கினாலும் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். மேலும் அன்று புதிதாக தொழில் தொடங்குவதும், பூமிபூஜை செய்வதும் நல்ல பலனைத் தரும். அட்சய திருதியை அன்று ஏழைகளுக்கு தானம் செய்தால், அது பல மடங்கு புண்ணியத்தை தரும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் பிதுர் தர்ப்பணம், பல தலைமுறைக்கு முன் வாழ்ந்த மூதாதையர்களுக்கும் சென்றடையுமாம். அதே நேரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்களுக்கு, வறுமைநீங்கி வளமான வாழ்வு அமையும்.

  • திருச்சி மலைக்கோட்டை கோவிலில் சித்திரை தேர் ….

    சிறப்பு மிகுந்த மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை தேர் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. அதற்காக வருகிற 29-ந்தேதி மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், வாஸ்து பூஜையும் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து 30-ந்தேதி காலை மிதுன லக்கனத்தில் தாயுமானசுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் சித்திரை தேர் திருவிழா தொடங்குகிறது.

    இதில் மே மாதம் 4-ந்தேதி காலை நூற்றுக்கால் மண்டபத்தில் 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மிதுன லக்கனத்தில் செட்டிப்பெண் மருத்துவம் என்ற ஐதீக நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சுகபிரசவ மருந்து, பீஜாதானம் பக்தர்களுக்கு வழங்கப்படும். குழந்தை தொட்டிலில் இடும்விழா காலை விழாவாகவும், மாலை விழா அறுபத்து மூவர் முதலான பக்தகோடிகள் சூழ ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி ரத்தினாவதி அம்மையாருக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி தெரு அடைச்சான் விழாவாக நடைபெற உள்ளது. இதில் 6-ம் நாளான 5-ந்தேதி காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் சுவாமி அம்பாளுக்கு நூற்றுக்கால் மண்டபத்தில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக அம்மன் காலையில் நந்தவன திருக்குளத்தில் எழுந்தருளி தவசு பூஜை செய்தல், திருக்கல்யாண உற்சவத்தில் மாலை மாற்றுதல் வைபவம் ஆகியவையும் நடைபெறும். பிறகு நூற்றுக்கால் மண்டபத்தில் காலை 11 மணிக்கு திரு நாண் பூட்டுதல் திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம், சந்தனம், கற்கண்டு, தாலிசரடு ஆகியவை சுமங்கலி பெண்களுக்கு வழங்கப்படும். இதில் 9-ம் நாளான 8-ந்தேதி காலை 6 மணிக்கு சாமி புறப்பாடு செய்யப்பட்டு தேர் நிலைக்கு விநாயகர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் ஒரு தேரிலும், சுவாமி அம்பாள் சோமாஸ் கந்தராக சுவாமி தேரிலும், அம்பாள் தனியாக அம்மன் தேரிலும் காலை 6 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.

  • திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய செயலி ….

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆர்ஜித சேவா டிக்கெட் வழங்க ‘திவ்யானுக்கிரகம்’ என்ற பெயரில் புதிய செயலி விரைவில் வெளியிட உள்ளது.
    திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாடு முழுவதும் விஜயா வங்கியின் உதவியுடன் 86 இ-தர்ஷன் கவுன்ட்டர்களை அமைத்துள்ளது. ஆனால் அதில் 50 கவுன்ட்டர்களில் தினசரி 2 அல்லது 3 பக்தர்கள் வந்து ஏழுமலையான் தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.
    அதில் 27 கவுன்ட்டர்கள் தேவஸ்தான வளாகத்துக்குள் உள்ளதால் தேவஸ்தானமே அதை நிர்வகித்து வருகிறது. மற்ற 23 கவுன்ட்டர்களை விஜயா வங்கி உதவியுடன் நடத்தி வருகிறது. இங்கு வாடகை அறை முன்பதிவு, ரூ. 300 விரைவு தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் முன்பதிவு உள்ளிட்ட சேவைகளை பக்தர்கள் பெற்று வருகின்றனர்.
    இந்நிலையில், மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் தேவஸ்தானம் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை இணையதளம் மூலம் வெளியிட்டு வருகிறது. இதனை முன்பதிவு செய்யும் பக்தர்கள் சில தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஆர்ஜித சேவையில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படுகிறது.
    இதுகுறித்து பக்தர்கள் சேவா தேதிக்கு முன்பாக தேவஸ்தானத்துக்கு தெரிவித்தால், அந்த டிக்கெட்டுகளை தேவஸ்தானம் மற்ற பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் வழங்கி வருகிறது.
    இதுகுறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு இல்லாத நிலையில், இந்த சேவா டிக்கெட்டுகளை எளிதில் பக்தர்களுக்கு அளிக்க தேவஸ்தானம் ‘திவ்யானுக்கிரகம்’ என்ற புதிய செயலியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

  • புண்ணியம் செய்த சீரடி மண்

    சீரடி மண்ணை எவர் ஒருவர் பக்தியுடன் மிதிக்கின்றாரோ அவரது பாவங்கள் அனைத்தும் அவரை விட்டு நீங்கி விடும். என்பது சாய் பாபாவின் சத்திய வாக்கு .

    புண்ணிய பூமியாம் பாரத நாட்டில் மகாராஷ்டிரா மாநிலம், கோதாவரி நதிக்கரையில்அமைந்துள்ள சீரடி கிராமம் மிகவும் புண்ணியம் வாய்ந்தது . அங்கு வாழும் மக்கள் மிகவும் பாக்கியம் செய்தவர்கள் . பின்னாளில் உலகமே போற்றும் மகான் ஒருவர் மூலம் அந்த கிராமம் ஒரு புண்ணிய ஷேத்திரமாக மாறப் போவதை அப்போது அந்தமக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை .
    தன்னை நாடி வந்தோர்க்கு தாயுமானவனாக நின்ற சீரடி சாயியின் தாயும் தகப்பனும் யார் என்று யாருக்கும் தெரியாது . பெற்றோர் பெயர் என்ன ?, சொந்த ஊர் எது?அவரின் இயற்பெயர் தான் என்ன? இவை எதுவும் யாரும் அறிந்ததில்லை. சீரடிமக்களுக்கு பாபாவின் அறிமுகமே ஒரு விசித்திர அனுபவம் . கிராமத்தில் இருந்த ஒருமிகப்பழமையான மசூதியின் பின்பக்கம் ஒரு வேப்பமரம் இருந்தது . அதன் அடியில் .ஒரு நாள் தெய்வீக தேஜசுடன் பதினாறு வயது சிறுவன் தியானம் செய்துகொண்டிருந்தான். சிறுவனின் அருள் பொருந்திய முக அழகில் ஈர்க்கப்பட்டனர் அக்கிராமத்து மக்கள் .ஆனால் சில தினங்களில் அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.அவர் எங்கு சென்றார் , எங்கு இருந்தார் என்பதை யாரும் அறியவில்லை.

    சாய் பாபாவின் முதல் அற்புதம்

    சாந்த் பட்டேல் என்ற வணிகர் ஒருவர் காட்டு வழியில் சென்று கொண்டிருந்தபோது,பாபாவை கண்டார். பாபா அவரிடம் இளைப்பாறும்படி கூறினார். அவர்கள் இருவரும் புகைபிடிக்க நெருப்பு தேவையாக இருந்தது. பாபா தன் கையிலிருந்தகத்தியால் நிலத்தை தோண்ட நெருப்பு வந்தது. பிறகு கைத்தடியால் பூமியின் மீது அடிக்க தண்ணீர் வந்தது. பேச்சின் நடுவே சாந்த் பட்டேலின் குதிரை காணமல் போனதையும் பாபா அறிந்துக் கொண்டார் . காணாமல் போன குதிரை இருக்கும் இடத்தையும் பாபா கூறினார். அவர் சொன்ன இடத்தில் குதிரையை கண்டெடுத்த சாந்த் பட்டேல் , பாபாவின் மகிமையை புரிந்து கொண்டார். சாந்த் பட்டேல்,பாபாவை தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். சில நாட்கள் தன் வீட்டிலேயே தன்னுடனையே பாபாவைத் தங்க வைத்து உபசரித்தார்.
    சாந்த் பட்டேல் தன் மைத்துனரின் மகனது திருமண நிகழ்ச்சிக்காக சீரடி சென்றபோது,பாபாவையும் தன்னுடன் சீரடிக்கு அழைத்து சென்றார். கந்தோபா எனும் ஆலயத்தின் பூசாரி மகால்சாபதி , பாபாவின் ஒளிபொருந்திய தோற்றத்தைக் கண்டு அவரை சாய் என்று அழைத்தார். சாய் என்றால் பாரசீகத்தில் சுவாமி என்று பொருள் . சீரடி மக்கள்பாபா என்று அழைக்க இரண்டும் சேர்ந்து `சாய்பாபா’ என்ற திருப்பெயரேநிலைத்துவிட்டது.

    வேப்ப மரமே குரு

    சீரடியிலேயே தங்கிவிட தீர்மானித்த பாபா சீரடியில் பழமையான மசூதி அருகிலுள்ள வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்தார். பாபா அமர்ந்திருந்த வேப்பமரத்தின் இலைகளில் அதன் இயல்பான கசப்புச்சுவை மாறியது. மாறியது வேப்ப மரத்தின் கசப்பு மட்டுமா , சீரடி மக்களின் வாழ்க்கை முறையும் தான் . பாபா தனது வழக்கமான வேப்பமரத்தை விட்டு வேறு ஒரு இடத்திலும் அமர மறுப்பதைக் கண்ட அந்த ஊர் மக்கள் அது பற்றி அவரிடமே கேட்டார்கள். அதற்கு இந்த வேப்பமரமே தனது குருஎன்று பதில் கூறினார். பின் அந்த மரத்தினடியில் ஒரு இடத்தைக் காட்டி அந்தஇடத்தைத் தோண்டச் சொன்னார். சிறிது ஆழம் தோண்டியதும் அங்கு உள்ளே ஒருசிறு அறையில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்ததும் அந்த ஊர்மக்கள் மெய் சிலிர்த்து போனார்கள். தெய்வாம்சம் பொருந்திய அவரை , தங்கள் வாழ்க்கையை உய்விக்க வந்த தெய்வமாகவே கருதினார்கள் அவரின் அற்புதங்கள் பல சீரடி மண்ணில் அரங்கேற தொடங்கியது . சாய்பாபா அந்த கிராமத்து மக்களுள் ஒருவராக மாறி அவர்களை நேசிக்க துவங்கினார் . அவரின் பெருமைகள் சீரடியையும் தாண்டி மணம் பரப்ப துவங்க பல ஊரிலிருந்தும் மக்கள் அவரின் பாதம் பணிந்துதங்கள் துயர் நீங்க சீரடிக்கு வரத் துவங்கினார்கள்.

  • சிவ ஸ்வரூபமான மஹா பெரியவா

    மஹா பெரியவா என்று தனது பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் காஞ்சி சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் . காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியான இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்கள் இருக்கிறார்கள் . இன்றும் அவரை தெய்வத்திற்கு இணையாக மக்கள் பூஜிக்க காரணம் காஞ்சி பீடத்தின் மடாதிபதி என்கிற எந்த டாம்பீகமும் காட்டாமல் ,தன்னை நாடி வரும் பக்தர்களிடம் தனது கருணை மழையை தாராளமாக பொழிந்தவர் .
    அஷ்டமா சித்திகளை முழுமையாக கைவர பெற்றவராக இருந்தாலும் , அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் எளிமையின் உருவமாக , நடமாடும் தெய்வமாக திகழ்ந்த மகான் . இன்றும் காஞ்சி மடத்தில் உள்ள அவரின் அதிஷ்டானத்தின் முன்னே நின்று தங்களது கோரிக்கையை சொல்லி பலனடைபவர்கள் அநேகர் .
    எத்தனையோ அபூர்வ அதிசயங்களை அசாதாரண நிகழ்ச்சிகளை தனது தபோ பாலா சக்தியினால் சர்வ சாதாரணமாக காதும் காதும் வைத்தாற்போல் நடத்திக் காட்டிய நடமாடும் தெய்வம். பலரின் வாழ்க்கையில் அவர் நடத்திய , நடத்திக் கொண்டிருக்கும் அற்புதங்கள் பல .

    அதில் நெஞ்சை நெகிழவைக்கும் ஒரு சம்பவம் இதோ .
    நாள் தோறும் பெரியவா காலையில் எழுந்தவுடன் மடத்தில் இருக்கும் தொழுவத்தில் கோ தர்சனம் (பசுவை தரிசிப்பது வழக்கம்)
    மாலை வேளைகளில் பசுமாடுகள் கட்டியிருந்த கொட்டகை சென்று அங்கு அமர்ந்து வேளைகளில் உரையாடுவது வழக்கம்.சுற்றியிருக்கும் மக்களைக் கொசுக்கள் பிடுங்கி எடுக்கும். அவர் கொசுவையா லட்சியம் பண்ணுவார் ? எதைப் பற்றியும் சிந்திக்காமல், தான் சொல்ல நினைத்தது எதுவோ அதை மட்டும் எல்லோருக்கும் சொல்லிக்கொண்டே இருப்பார். அவரை நேரடியாக பார்த்து அவர் சொல்வதைக் கேட்டவர்களுக்கு இனி பிறவி கிடையாது என்பது நிச்சயம்.
    ஒருநாள் அவர் இவ்வாறு காலை கோதர்சனம் சயந்திரம் அங்கு பக்தர்களோடு சம்பாஷணை செய்யும்போது அந்தக் கொட்டகையில் உள்ள ஒரு பசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது. பேறுகாலம்.அதனால் பசு வேதனைப்பட்டுக்கொண்டே இருந்ததே தவிர, அதனால் கன்றை ஈன்றெடுக்க முடியவில்லை.வைத்தியர்கள்
    வரவழைக்கப்பட்டனர்.கால்நடைத் துறையில் சிறந்து விளங்கும் டாக்டர்கள் அவர்கள்; ஒருவர் அல்ல இருவர் அல்லர், காஞ்சிமகான் மடம் என்பதால் ஆறுபேர் வந்திருந்தனர்.

    பசுவை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்த அவர்கள், பசு ஏன் இன்னமும் பிரசவிக்க வில்லை என்கிற காரணத்தைக் கண்டு பிடித்தனர். கன்றுக்குட்டி வயிற்றுக்குள் இறந்து போயிருந்தது. அதை வெளியே எடுக்காவிட்டால் பசுவும் இறந்துவிடும். அந்த ஆறுபேரும் ஏகோபித்து சொன்ன முடிவு அது. இதைக் கேட்ட நிர்வாகிகள்
    நேராக மகானிடம் போய் மெதுவாக விஷயத்தைச் சொன்னார்கள். தன் இருக்கையை விட்டு எழுந்த அவர், நேராக பசு இருந்த கொட்டகைக்கு வந்தார். பசுவின் எதிரே அமர்ந்தார். அவரது பார்வை வேறு பக்கம் திரும்பவே இல்லை.கன்று வயிற்றுக்குள் இறந்து போயிற்று என்று ஏகோபித்த முடிவாகச் சொன்ன டாக்டர்கள் ஒருபக்கமாக நின்று, மகானையும், பசுவையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். இப்படியும் அப்படியுமாக நிலைகொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருந்த பசு….. ஓர் இடத்தில் நின்றது. சற்று நேரத்தில் அதன் வயிற்றில் இருந்த கன்றுக்குட்டி வெளியே வந்தது. துள்ளியபடி நின்றது.இறந்து போனது என்று டாக்டர்கள் சொன்ன அதே கன்றுதான் உயிரோடு வெளியே வந்தது. இறந்ததாக பெரிய பெரிய வேடேரினரி சர்ஜன்கள் அடித்து சொன்ன கன்றுக்குட்டி எப்படி உயிர் பெற்றது???
    ஆறு டாக்டர்களுக்கும் இது விந்தையான நிகழ்ச்சிதான். அவர்களும் அப்போதுதான் மகானின் அருட்பார்வை எப்படிப்பட்டது என்கிற பேருண்மையைத் தெரிந்துகொண்டனர்.பசுமாட்டை நன்றாகத் தடவிக் கொடுத்தபின் புன்னகையோடு மஹா பெரியவா உள்ளே போனார்.

    பெரியவா தரிசனம் கோடி புண்ணியம் . புண்ணியத் தேடலை தொடருவோம்…

  • ஏறின எடை குறையும் அதிசய கருடாழ்வார்….

    இந்து மதம் , பல ஆழ்ந்த வாழ்க்கை தத்துவங்களையும் , ஆச்சர்யமான பல நுட்பமான அதிசயங்களையும் தன்னுள் கொண்டுள்ளது . கோயில் , கோயில் கோபுரம் , பிரகாரம் , கொடி மரம் , பலி பீடம் , சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ள விதம் என ஒவ்வொரு படைப்பிலும் நம் முன்னோர்கள் காட்டிய நுட்பங்கள் , இன்றைய நவீன தொழில் நுட்பம் வளர்ச்சிக்கு சவால் விடுபவையே. இன்றைக்கும் எந்த நவீன தொழில் நுட்பமும் இன்னொரு தஞ்சை பெரிய கோயிலை கட்ட முடியாது என்பதே உண்மை.

    நம் நாட்டில் ஒவ்வொரு கோயிலும் ஒரு பேரதிசயமே. உள்ளத்தை கொள்ளை கொள்ளும் கட்டடக்கலை , இதைத் தாண்டி சூட்சுமமான பல அரிய பொக்கிஷங்கள் நம் கோயில்களில் மறைந்து கிடக்கின்றது. இங்கு சில ஆன்மிக அதிசயங்களை உணர்வோம்.

    ஸ்கேன் கருவிக்கு முன்பே கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை சிற்பமாக்கிய அதிசயம்

    திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, அந்தந்த மாதக்கணக்கில் எந்த வடிவத்தில் , என்ன நிலையில் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிற்பங்களாக கல்லில் வடித்து வைத்துள்ள நம் முன்னோர்களின் திறன் வியக்க வைக்கிறது .

    தொடர்ந்து வந்த பல அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட இந்த அதிசய சிற்பங்கள் சிதையாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்க முடிகிறது . காலங்களை முன் கூட்டி உணர்வதில் அறிவியலுக்கு அப்பாற்பட்ட அறிவை கொண்டவர்கள் நம் மூதாதையர் என்பதற்கு நிலைத்திருக்கும் சாட்சியாக நிற்கிறது இந்த சிற்ப காட்சிகள்.

    சிங்கத்தின் வாயில் வழியே குளித்தவர்கள்

    வாசல் வழிக்கு தமிழில் வாயில் என்றொரு சொல் உண்டு. சிங்கத்தின் வாயில் வழியே குளித்திருக்கிறார்கள் நம் முன்னோர். ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில் கிணறு தான் இந்த வரலாற்று அதிசயத்தின் சாட்சி. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் தென்படும் ஒரு கதவின் மூலம் கீழே இறங்கினால் அந்த கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்ப்பவர்க்கு நாம் குளிப்பது தெரியாது. இது அன்றைய ராணிகள் பாதுகாப்பாக நீராட கட்டப்பட்ட கிணறு. அக்கோவிலில் உள்ள கருவறையில் சுவர்கள் மரகதகற்கள் பதிக்கப்பட்டவை . இதன் சிறப்பம்சமே வெளியே வெயில் அடித்தால் உள்ளே குளிரும். அதே போல வெளியே மழை பெய்தால் உள்ளே கதகதப்பாக இருக்கும். இது மட்டுமில்லாமல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள் பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம் உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும் படைவீரர்களும் பதுங்கும் வகையில் கட்டியுள்ளார் சோழக் குலத் திலகம் ராஜேந்திர சோழர். கங்கை கொண்ட சோழ பெருமக்கள் புகழ் போற்றுவோம்.

    ஏறின எடை குறையும் அதிசயம்

    கும்பகோணம் அருகே , உள்ள நாச்சியார் கோவில் கருட சேவை மிகவும் பிரசித்தி வாய்ந்தது . இங்குள்ள கல் கருடாழ்வாரின் எடை அதிகமாகிக்கொண்டே போவது இன்று வரை அனைவருக்கும் வியப்பை அளிக்கக் கூடியது . காரணம் பெருமாள் புறப்பாட்டின் போது , சன்னதியிலிருந்து வெளியே வரும் வேளையில் கருடன் நான்கு பேர் தூக்கி வரும் அளவிற்கு தான் கனம் இருக்கும் . ஆனால் அதுவே பிரகாரத்தை சுற்றி வரும்போது எட்டு பேர் வேண்டும், அடுத்து பதினாறு பேர், பின்னர் வெளியே வரும் போது முப்பத்திரெண்டு பேர் , வெளியே வந்தவுடன் அறுபத்து நான்கு பேர் என எடை கூடி , தூக்கி வரும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாகிகொண்டே போகும் . இதுவே , வெளியே இருந்து பிரகாரங்கள் சுற்றி சன்னதிக்கு உள்ளே திரும்பி வரும் போது ஏறின விகிதத்திலேயே எடை குறைந்து வரும் . காலங்களை கடந்து தொடர்ந்து வரும் இந்த அதிசயத்தின் காரணம் மிகவும் சுவாரசியமானது .

    பெருமாள் மேதாவி முனிவருக்கு கொடுத்த வரத்தின் படி , தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளுகின்றாள் . பெருமாளோ கருடனில் எழுந்தருளுகின்றார். அன்னத்தை ஒப்பிடும் போது கருடன் பலம் மிகுந்தவர் , வேகமாக செல்லக்கூடிய பறவை. எனவே தான் கல் கருடனின் எடை கூடிக்கொண்டே செல்வதாக புராணம் கூறுகிறது . அதனால் இத் திருகோவிலில் இப்போதும் தாயாருக்கு தான் முதலிடம் .
    பெருமாளை தாங்கி உலா வருவதால் கல் கருடன் முகத்தில் வியர்வை வரும் காட்சி பார்க்கும் பக்தர்களுக்கு எல்லாம் மெய் சிலிர்க்க செய்யும் .
    ஆன்மீக அதிசயங்கள் வளரும் .

  • அட்சய திருதியை நாளில் என்ன வாங்கலாம்

    அட்சய திருதியை நாளில் செல்வ வளம் பெருகி சிறப்பாக வாழ, மங்களப் பொருட் களில் ஏதேனும் ஒன்றை வாங்குவது நல்லது. ஆலயங்களில் ஏலம் போடும் பொழுது, அதிக விலை கொடுத்து உப்பு வாங்குவார்கள். உப்பு வாங்கினால் பணம் சேரும் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையில் அட்சய திருதியை நாளில் பொன், பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் மட்டுமன்றி உப்பு, தானியங்கள், மளிகைச் சாமான்கள், சோறு வடிக்கும் பாத்திரம், மஞ்சள் வண்ண ஆடை, தெய்வப் படங்கள், கனி வகைகள், சங்கு, சீர்வரிசை சாமான்கள், பூஜையறையில் உபயோகப்படுத்தும் புனிதமான பொருட்கள், அகல்விளக்கு, வெண்கல மணி, எழுதுகோல், லட்சுமி படம், அடுப்பு, பணப்பெட்டி, மணிபர்ஸ், சர்க்கரை வெல்லம், நெல்லிக்காய், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வசதிக்கேற்ப வாங்கி வைக்கலாம். அன்னதானம் அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்வதும் சிறப்பான பலனைத் தரும். அன்னை பராசக்தி இந்த நாளில் ஈசனுக்கு அன்னம் அளித்தாள் என்பர். இந்த நாளில் அன்னதானம் செய்தால் இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிடைக்கும் மற்ற நாட்களில் இறைவனுக்கு நிவேதனம் என்ற பெயரில் உணவு படைக்கிறோம். மேலும் கிருஷ்ணர் வழிபாட்டை மேற்கொண்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும். கஷ்டம் விலகும் அட்சய திருதியை நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து விட்டு பசு மாட்டுக்கு வாழைப்பழம் கொடுக்க வேண்டும். பசு மாட்டில் தான் அனைத்து தேவர்களும் இருப்பதாக ஐதீகம். அத்துடன் ஏழை எளியவர்களுக்கு தானதர்மம், அன்னதானம் செய்வதன் மூலம் பெருமாளின் கருணையால் குடும்பத்தில் உள்ள வறுமை, கஷ்டம் விலகும். எனவே தங்கம். வெள்ளி வாங்க இயலாதவர்கள் ஒரு பாக்கெட் உப்பு மட்டுமாவது வாங்கலாம். ஏழை ஒருவருக்கு அன்னதானம் அளிக்கலாம்.

  • ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயிலுக்கு பாதயாத்திரை

    வைணவ குரு ராமானுஜரின் 1,000-ஆவது ஆண்டு ஜயந்தியை முன்னிட்டு, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராமானுஜர் கோயிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் சென்றனர்.

    சென்னை, அரும்பாக்கம் ஸ்ரீஹரி மடம் ஸ்ரீமதே நம்பிள்ளை ராமானுஜ மகா தேசிகர் சுவாமிகள் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட ராமானுஜ அடியார்கள் மற்றும் பக்தர்கள், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை வைணவ ஒற்றுமையை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை பாதயாத்திரை புறப்பட்டனர்.
    இதில் ஸ்ரீராமானுஜரின் புகழையும், மங்களாசாசனம் மற்றும் பஜனை நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடியபடி, காஞ்சிபுரத்தில் உள்ள காந்தி சாலை, நான்கு ராஜ வீதி, பேருந்து நிலையம், சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சுங்குவார்சத்திரம் வழியாக ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயிலை சென்றடைந்து அங்கு சுவாமி தரிசனம் செய்தனர்.