Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • விநாயகப் பெருமானுக்கு யானைமுகம் வந்த வரலாறு: நாக சதூர்த்தி

     

    கயமுகாசுரன் தேவர்களாலும் பூதங்களாலும் மனிதர்களாலும் மிருகங்களாலும் ஆயுதங்களாலும் இறவாதிருக்கச் சிவபெருமானிடம் வரம் பெற்றிருந்தான்.

    அப் பேற்றால் அகந்தை கொண்டு அவன் தேவர்களைப் பெரிதும் துன்புறுத்துவானாயினான். அதனைப் பொறுக்கலாற்றாத தேவர்கள் சிவபெருமானைச் சரணடைந்து தமது துன்பத்தையெல்லாஞ் சொல்லி முறையிட்டனர்.

    அடைந் தாரைப் புரந்தருளும் அருட்பெருந்தகையாளராகிய சிவபெருமான் தேவர்களுக்குத் தேறுதல் கூறி அவர்களை அனுப்பிவிட்டுத் தாம் பார்வதிதேவியாருடன் கைலை மலைச் சாரலில் அணிமலர்ச் சோலையகத்த தாயதொரு திருமணி மண்டபத்துக்கு எழுந்தருளினர்.

    ஆண்டொரு சித்திரச் சுவரில் தீட்டப்பட்டிருந்த சித்திரங்களை அண்ணலுந் தேவியுங் கண்ணுற்றுச் செல்லுங்காலைப் பிரணவமந்திரம் ஒரு சித்திரமாய் வரையப்பட்டிருக்கக் கண்ட சிவபெருமான் யானைமுக வடிவிற்றாய அவ்வோங்காரத்தைக் கயமுகாசுரனைக் கொன்று தேவர்களைக் காத்தருளும் திருக்குறிப்புடன் நோக்குவாராயினர்.

    அவ்வளவிலே அவ் வோங்காரம் களிறும் பிடியுமாய்ப் பிரிந்துகூட அக் கூட்டத்தின் விளைவாக விநாயகப் பெருமான் யானைமுகத்துடன் தோன்றிக் கணங்களுக்குத் தலைமை பூண்டு கணபதியாய்க் கைலாயத்தில் அமர்ந்தருளித் தேவர்கள் குறைதீர்க்கக் கயமுகாசுரனோடு போர்புரிந்து, ஆயுதங்களால் அவன இறவானென்பதை உணர்ந்து தமது திருமுகத் திருகோட்டில் வலக்கோட்டை ஒடித்து வீசு அதனால் அவ்வசுரனைக் கொன்றனர்.

    சிந்துரன் என்னும் அசுரனை அழித்தற்பொருட்டுக் கருவுருக் கொண்டிருக்கையில் அவ்வசுரனால் சிரங் கொய்யப்பட்டு ஆவணி மாதச் சதுர்த்தியில் சிரமின்றித் திருவவதாரஞ்செய்து பின்னர்க் கயாசுரன் சிரத்தைக்கொண்டு திருவுரு முற்றுப் பெற்றதாகக் கூறும் விநாயகபுராணம். ‘கசானனர் திருவவதாரப்படலம்’ காண்க.

    வேறு பிற புராணங்கள் பல, வேறு பலவாறாகக் கூறுவதுமுண்டு. பிரணவ சொரூபம் விளக்கவந்த திருவுருவென்று கோடலே சாலும்.
    ஒவ்வொரு கற்ப காலத்திற்கு சில வேறுபாடுகள் வரும்.

    ஆன கருவைப் பதிற்றுப்பத்
    தந்தா திச்சொல் அலங்கல்முற்றும்
    ஞான உருவாம் களவீசன்
    நளின சரண மிசைச்சாத்தத்
    தான அருவி பொழி தடக்கைத்
    தறுகட் சிறுகட் புகர்முகத்துக்
    கூனல் இளவெண் பிறைக்கோட்டுக்
    குணகுஞ் சரத்தின் அடிதொழுவாம்.

    திருமேனி முற்றும் ஞானவடிவாம் களவீசனது தாமரைமலர்போன்ற திருவடிமீது திருக்கருவைப் பதிற்றுப்பத் தந்தாதியான சொல்மாலையைச் சாத்த, மதத்தை அருவிபோலச் சொரியும் நீண்ட துதிக்கையையும்,

    அஞ்சாமையையும், சிறிய கண்களையும், புள்ளிவாய்ந்த முகத்தையும் வளைந்த இளமையான வெள்ளிய பிறைபோன்ற தந்தங்களையும் உடைய குணவிநாயகருடைய திருவடிகளை வணங்குவாம்.

    குட்டித்திருவாசகம் எனும் திருக்கருவைப் பதிற்றுப்பத் தந்தாதி எனும் அருள் நூல்லிருந்து.

  • நாராயணா என்ற திருநாமத்தின் பெருமை

     

    அண்ட சராசரத்தில் உலவிக்கொண்டு, சதா சர்வ காலமும் நாராயணா என்று கூறிக்கொண்டிருந்த நாரதருக்கு திடீரென்று ஒரு சந்தேகம். இப்படி மூச்சுக்கு முந்நூறு தடவை நாராயணா என்று சொல்கிறோமே , அப்படி என்றால் என்ன?. கேள்வி மண்டையை குடைய ,ஒரு முனிவரிடம் கேட்டார். “நாராயணன் என்றால் என்ன அர்த்தம்?”

     அதற்கு முனிவர் தனக்கு தெரிந்த அளவில்,“ரொம்ப சுலபம்…”நாரம்’ என்றால் “தண்ணீர்’. “அயனன்’ என்றால் “சயனித்திருப்பவன்’. அவன் கடலிலே சயனம் கொண்டவன் அல்லவா? அதனால் நாராயணன் என்றார்.ஆனால் நாரதருக்கு இந்த பதிலில் திருப்தி ஏற்படவில்லை. அதனால் நாராயணனிடமே ஓடினார்.

    “ஐயனே! உம்மை நான் நாராயணா…நாராயணா என்று சதாசர்வகாலமும் துதிக்கிறேன். ஆனால், அதற்கு சரியான விளக்கம் தெரியவில்லை! அது உம் பெயர் தானே! நீரே விளக்கம் சொல்லுமே!”என்று நாரதர் குறும்பாக கேட்க, நாராயணனும் “அடடா…எனக்கும் தெரியாதே! எதற்கும் நீ நர்மதைக்கரையில் இருக்கும் வண்டிடம் போய் கேள். அதற்குத் தெரியும் என்று கேள்விப்பட்டேன்”என்றார் .  இது போதாதா நாரதருக்கு,வண்டிடம் ஓடினார்.

    “வண்டே! நாராயணன் என்ற பதத்திற்கு அர்த்தம் தெரியுமா?” என்ற கேள்வியைக் கேட்ட மாத்திரத்திலேயே வண்டு விழுந்து இறந்து போனது.

    நாரதர் நாராயணனிடம் திரும்பினார். “நாராயணன் என்ற நாமம் கேட்பவர்கள் இறந்து விடுவார்கள் என்று தானே அர்த்தம்,” என்றார்.

    “அப்படியா , எதற்கும் அதோ! அந்தக் கிளியிடம் கேள்,” என்று ஒரு மரத்தை நோக்கி கைநீட்டினார் பகவான்.

    கிளியிடம் இதே கேள்வியை நாரதர் கேட்க, கிளி சுருண்டு விழுந்து இறந்து போனது. நாரதர் பயந்து போய்  விட்டார். மூச்சுக்கு முன்னூறு தடவை “நாராயணா’ என்கிறோமே! நாமும் செத்து விடுவோமா!” பயத்துடன் நாராயணனிடம் வந்தார்.

    “பெருமாளே! அதற்கு அர்த்தம் ‘அது’தான்…உறுதியாகி விட்டது.

    “நாரதா! அவையெல்லாம் விதி முடிந்து இறந்து விட்டது . எதற்கும் அந்த பசுவின் கன்றிடம் போய் கேள்” என்றார்.  “அய்யோ … இதை நான் போய் கேட்க, அந்த கன்று இறந்து போக, பசுக்கன்றை கொன்ற கொடியபாவம் என்னை அணுக வேண்டுமா முடியாது” என்றார் நாரதர்.

    “அப்படி ஏதும் ஆகாது. தைரியமாக போ ”என்று உசுப்பிவிட்டார் பெருமாள். நாரதரும் சற்று தைரியத்துடன் கன்றிடம் போய் கேட்க, கன்றின் கதை முடிந்தது.

    “நாராயணா! எல்லாம் போச்சு! பசுக்கன்றைக் கொன்ற கொடிய பாவத்துக்கு என்னை ஆளாக்கி விட்டாய்! வருகிறேன்!” எனக் கிளம்பியவரை, பெருமாள் தடுத்தார்.

    “நாரதா! கலங்காதே! இதுவரை நீ கேட்டது பூச்சி, பறவை, விலங்குகளிடம்! இனி காசி இளவரசனிடம் போய் கேள், அவன் மனிதனாயிற்றே! அவனுக்கு ஏதும் ஆகாது!” என்ற நாராயணனை,”அய்யா! என்னை அரசதண்டனைக்கு ஆளாக்க எத்தனை நாள் திட்டம் போட்டு வைத்திருந்தீர்! முடியாதைய்யா! முடியாது” என்ற நாரதரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

    நாரதர் பயந்தபடியே இளவரசனிடம் கேட்டார். அவனுக்கு ஏதும் ஆகவில்லை. அவன் அழகாகப் பதில் சொன்னான். “நாரதரே! வண்டாய், கிளியாய், கன்றாய் உம் முன் காட்சி தந்தது நானே! உம் வாயால் “நாராயணா’ என்ற நாமத்தை திரும்பத் திரும்பக் கேட்டு உயர்ந்த மனிதப்பிறவி. அதிலும் செல்வங்களையெல்லாம் அனுபவிக்கத்தக்க இளவரசனாய் பிறந்திருக்கிறேன். தொடர்ந்து நாராயண மந்திரத்தை பக்தியுடன் ஓதி வைகுண்டம் செல்வேன்!” என்றான்.

    இப்போது தான் நாரதருக்கு புரிந்தது.“ஆகா! “நாராயணன்’ என்றால் “வாழும் காலத்தில் செல்வம் அருள்பவன்’, “வாழ்வுக்குப் பின் பிறவிப்பணி தீர்ப்பவன்’ என்றல்லவா அர்த்தம் என இறைவனை மனதார  துதித்தார்.

    ஓம் நமோ நாராயணா …..

  • இன்று வரலட்சுமி விரதம்! சுமங்கலி பாக்கியம் நிலைக்கட்டும்

     

    திருமாலின் துணைவியான மகாலட்சுமி, நமக்கு வரங்களை அள்ளித் தருவதால் ‘வரலட்சுமி’ என பெயர் பெற்றாள். செல்வத்துக்கு அதிபதியான இவளை, நம் வீட்டுக்கு வரவேற்கும் நன்னாள் இன்று.

    துறவியான ஆதிசங்கரர் கூட தனக்கு நெல்லிக்கனியை பிட்சை அளித்த பெண்மணிக்காக ‘கனகதாரா ஸ்தோத்திரம்’ பாடி லட்சுமியருளால் தங்க நெல்லிக்கனிகளை மழையாக பொழியச் செய்தார்.கிருஷ்ணரைக் காண ஏழை குசேலர் வந்த போது, மகாலட்சுமி தன் கடைக்கண் பார்வையை அவர் வசித்த ஊரை இருந்த திசை நோக்கி திரும்பினாள். அந்த ஊரே செல்வத்தால் நிறைந்தது.

    பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தருபவள் அவளே. அவளே சீதையாக, ருக்மணியாக பூமிக்கு வந்து வாழ்ந்து காட்டினாள். சீதையாகப் பிறந்த போது தன் கணவருடன் காட்டிற்குச் சென்றாள். கணவனே கண் கண்ட தெய்வம் என ராமரைப் பிரியாமல் வாழ்ந்தாள். திருப்பதி ஏழுமலையான் மார்பில் தொங்கும் ஆரத்திற்கு லட்சுமி ஆரம் என்பர். லட்சுமி தாயார் அவரது இதயத்தில் குடியிருப்பதாக ஐதீகம்.

    லட்சுமி தாயார் திருமாலின் மார்பை விட்டு பிரியாமல் இருப்பது போல சுமங்கலிகளும் தங்கள் கணவரின் இதயத்தில் இடம் பிடித்து அவர்களோடு ஒற்றுமையாக வாழ வரலட்சுமி நோன்பை மேற்கொள்கின்றனர்.இந்த நல்ல நாளில் அனைவருக்கும் சுமங்கலி பாக்கியம் நிலைக்க லட்சுமி தாயாரை வழிபடுவோம்.

  • கடன் தீர்க்கும் ஸ்ரீதோரண கணபதி!

     கணபதி வழிபாடு கைமேல் பலன்’ என்பது அவ்வையின் வாக்கு. ஆமாம்! ஒரே ஒரு கணம், கணபதியை மனதால் தியானித்து முறையிட்டால் போதும்; நமது கவலைகள் யாவும் சடுதியில் விலகும். வேண்டியது வேண்டியபடி நிறைவேறும்.

    நாம் அவரைத் தேடிப் போக வேண்டியது இல்லை. அவரே, நம்மை நாடி வந்து அருளும் பொருட்டு, நாம் இருக்கும்- புழங்கும் இடங்களுக்கு அருகிலேயே… தெருக்கோடியிலும், மரத்தின் அடியிலும், நதிகளின் கரைகளிலுமாகக் கோயில் கொண்டிருக்கிறார்.

    அரச மரத்தடி விநாயகரை வணங்கினால், குழந்தைப் பேறு வாய்க்கும். வன்னி மரத்தடியில் அருளும் விநாயகரை வழிபட கிரக தோஷங்கள் நீங்கும். ஆலமரத்தடி விநாயகரைத் தரிசித் தால் தீய சக்திகள் விலகியோடும். வேப்ப மரத்தடி விநாயகரை வழி படுவதால் நாள்பட்ட நோய்கள் அகன்று நிம்மதி கிடைக்கும். ஆலயங்களின் கோஷ்டத்தில் அமர்ந்திருக்கும் விநாயக ரூபத்தை வழிபட்டால், சகல தெய்வங்களின் திருவருளும் ஒருங்கே கிடைக் கும் என்கின்றன புராணங்கள். இந்த வரிசையில், ஸ்ரீதோரண விநாயகரை வணங்கி வழிபட்டால், ‘ருணம்’ எனும் கடன் தீரும்!

    யார் இந்த தோரணர்? இவர் எங்கு அமர்ந்து அருள்பாலிப்பார்?!
    சக்தி தேவியர் தனியாகக் கோயில் கொண்டிருக்கும் திருத் தலங்களில், தோரண வாயிலைப் பார்த்தபடி, அம்பிகைக்கு வலப் புறமாக சந்நிதி கொண்டிருப்பார். ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேலிரு கரங்களில் அங்குச- பாசமும், கீழ் இரு கரங்களில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு அருள்வார், ஸ்ரீதோரண கணபதி. ஸ்ரீதோரண கணபதி, தமது கையில் இருக்கும் தந்தத்தைப் பயன்படுத்தி, நமது வாழ்வில் உள்ள ருணம் எனும் கடன்களை தீர்த்து அருள்கிறார் என்று சிவாகம துதிகள் கூறுகின்றன.

    சக்தி மேகல்வாசம் சகல கல்யாண மூர்த்திம்
    அங்குச பாச ஹஸ்தம் கிரீட மகுட தாத்ரீம்
    அஷ்ட லக்ஷ்மீ சகிதம் தோரண கோபுர நேத்ரம்
    ருணமோசன கணேசம் நௌமி ஸதா ப்ரசன்னம்!
    மூல ஆலயத்திலிருந்து பார்க்கும்போது, இவர் அமர்ந்திருக்கும் இடம் பிரம்ம ஸ்தானமாக அமைவதால், கடனைத் தீர்ப்பதில் இவர் கறாராக இருக்கிறார். தாமரை பீடத்தில் அமர்ந்தவராக, அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமிகடாட்சத்தைக் கொடுக்கிறார்!

    தோரண கணபதியை வழிபடும்முறை:
    மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவ கடன், பித்ரு கடன், மானுட கடன் ஆகிய மூன்று கடன்களை நிச்சயம் சந்தித்தாக வேண்டும். இவற்றில் மானுட கடனைத் தீர்க்க, ஸ்ரீதோரண கணபதி வழிபாடு கை கொடுக்கும்.
    செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீதோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தோரண கணபதியை வழிபடலாம். இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து ஆறு வாரங்கள்… குறிப்பிட்ட கிழமைகளில் ஸ்ரீதோரண விநாயகரைத் தரிசித்து, அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட வேண்டும். 

    ஸ்ரீதோரண கணபதி மந்திரம்:
    ‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே
    சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
    ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.

     

    அத்துடன் கணபதியின் மேகலை – பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐவகைப் பழங்களைப் படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து, நிம்மதி பிறக்கும்.

  • சிவமே மூச்சாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்கள் – (திண்ணன் கண்ணப்பன் ஆன கதை)

     

    வழக்கமாக நாம் இறைவனை ,பல நாமங்களை சொல்லி உரிமையுடன் கூப்பிட்டு கொண்டாடுவோம். ஆனால் இறைவனே தனது பக்தன் ஒருவனை அப்பா என்று அன்புடன் கூப்பிட்ட கதை ஒன்று உள்ளது.அந்த அற்புதத்தை இப்போது தெரிந்துக் கொள்வோம்.

    உடுப்பூர் என்னும் வனப் பகுதியில் நாகன் என்ற வேடுவ தலைவனுக்கும் ,அவன் மனைவி தத்தை என்பவளுக்கும் நீண்டகாலமாக பிள்ளை பாக்கியம் இல்லாததால் குல தெய்வமான முருகக் கடவுளை வேண்டி விரதம் இருந்தார்கள்.

    முருகப்பெருமானின் அருளால்  நாகனுக்கும் தத்தைக்கும் தை மாதம் மிருகசீர்ஷ நட்சத்திரத்தில் ஒரு பிள்ளை பிறந்தான். பிறக்கும் போதே நன்றாக கனமாக இருந்த காரணத்தால் குழந்தைக்கு‘திண்ணன்’ என்று பெயர் சூட்டினார்கள்.

    திண்ணன் வளர்ந்து, காட்டு விலங்குகளின் இயல்புகளை நன்கறிந்து கொண்டு வேட்டையாடும் பயிற்சியையும் மேற்கொண்டான். பயிற்சியின் தொடர்ச்சியாக  வேட்டைக்குச் சென்றான். திண்ணனுக்கு உதவி புரிவதற்காக, சில வேடுவர்களும் அவனுடன் சென்றார்கள். ஒரு பன்றியை வேட்டையாட, அதனைத் தொடர்ந்து வெகுதூரம் சென்று, ஒரு மலையின் அடிவாரத்தில் பன்றியை, திண்ணன் வில்லால் அடித்து வீழ்த்தினான்.

    திண்ணன், உயர்ந்து நின்ற மலையை மிகுந்த ஆர்வத்துடன் நோக்கி, உடன் வந்தவர்களிடம் அதைப்பற்றிக் கேட்டான். “இந்த மலையின் பெயர் திருக்காளத்தி,  இதன் உச்சியில் குடுமித்தேவர் எழுந்தருளியிருக்கிறார்.” என்று அவர்கள் கூறியதும், ஏதோ ஒன்று அவனை ஈர்த்து, திண்ணன் மலைமீது ஏறத் தொடங்கினான். மலை உச்சியிலே ஏகாந்தமாக, வீற்றிருந்த காளத்தியப்பரைத் பார்த்த நொடி பரவசமாகி , திண்ணன் ,ஓடிச் சென்று சிவலிங்கத்தைக் கட்டித் தழுவிக் கொண்டான்.

     

                                                                      

    உடன் வந்தவர்களைத் திரும்பிச் செல்லுமாறு கூறிவிட்டு, காளத்தியப்பரை விட்டுப் பிரிய மனமின்றி அங்கேயே இருக்கலானான் திண்ணன்.“காளத்தியப்பா! உனக்குப் பசிக்குமே!” என்று நெக்குருகி மலையிறங்கி வந்தான். சற்று நேரத்திற்கு முன் கொன்று போட்ட பன்றியின் இறைச்சியைப் பக்குவம் செய்து எடுத்துக் கொண்டான். அபிஷேகம் செய்ய வேண்டும் அல்லவா ?அதற்காக  ஆற்றுநீரை வாயிலே தேக்கிக் கொண்டு, காட்டுப் பூக்களையும் பறித்துக் கொண்டு மலைமேலை ஏறினான். வாயிலிருந்த நீரால் குடுமித்தேவரை நீராட்டினான். மலர்களை அவருக்கு அர்ச்சனை செய்வித்து, பன்றி இறைச்சியை நிவேதனம் செய்தான்.திண்ணன்  உள்ளன்போடு செய்ததினால் ஈசனுக்கு எச்சில் நீர் பன்னீராக  இருந்தது.  ஐந்து நாட்களாகத் தொடர்ந்து,காளத்தியப்பரைப் பிரிய மனமின்றி அங்கேயே இருந்த திண்ணன். அவரைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்து தனது பக்தியால் இறைவனை திக்குமுக்காட வைத்தான்.

    இது இப்படி இருக்க ,காளத்தியப்பருக்கு வழக்கமாக பூஜை செய்ய வருகின்ற அந்தணர்,காளத்தியப்பருக்கு அருகிலே வேடுவனையும், முன்னால் சிதறிக் கிடந்த இறைச்சித் துண்டுகளையும் கண்டு முகம் சுளித்து விட்டு பூஜை செய்யாமலே சென்று விட்டார். அன்று இரவு அவர் கனவிலே சிவபெருமான் தோன்றி, “நாளை மலைக்கு வந்து, திண்ணன் அறியாதபடி மறைந்திருந்து பார்.” என்று உத்தரவிட்டார்.

    மறுநாள் கண் விழித்த திண்ணன் , காளத்தியப்பரின் ஒரு கண்ணிலிருந்து உதிரம் வழிந்ததைக் கண்டதும் பதறினான். உடனே சிறிதும் யோசிக்காமல் வேலால் தன்னுடைய கண்ணைத் தோண்டி,அப்பனின் கண்ணில் அப்பியதும் உதிரம் நின்றது. திண்ணன் ஆனந்தமடைந்தான். ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் மற்றொரு கண்ணில் உதிரம் வடிந்தது கண்டு அரண்டான். வேலை எடுத்து  மற்றொரு கண்ணையும் தோண்ட தயாரானான். ஆனால் காளத்தியப்பரின் உதிரம் வழியும் கண் இருக்கும் இடம் தெரியாதே என்று, தனது செருப்பணிந்த காலை, அவர் கண்ணருகே வைத்தான். திண்ணன் தனது  இரண்டாவது கண்ணைத் தோண்டும்போது சிவபெருமான் அங்கே தோன்றி,“கண்ணப்பா நில்!” என்று அவன் கைகளைப் பற்றிக் கொண்டார்.

    இவை அனைத்தையும் மறைந்து நின்று பார்த்துக்கொண்டிருந்த அந்தணர், திண்ணனின் பக்தியை பார்த்து மெய் சிலிர்த்தார். காளத்தியப்பரின் வாய்மொழியால் ‘கண்ணப்பா’ என்று அழைக்கப்பட்டவர்  ஆதலால் , வேடுவராக இருந்தபோதிலும்  அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப்படுகிறார்.

     

    ஓம் நமச்சிவாயா !

     

  • ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளை வழிபடுங்கள்! நினைத்தது கைகூடும்

    வாரத்தில் உள்ள ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாக கருதப்படுகிறது. எனவே ஒவ்வொரு நாளும் அந்த நாட்களுக்குரிய கடவுகளை தரிசித்து வழிபடுவது சிறந்தது.

    திங்கள்

    திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த நாள். எனவே திங்கள்கிழமை நீலகண்டனுக்கு விரதமிருந்து, சிவபெருமானுக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரை படைக்க வேண்டும்.

    செவ்வாய்

    செவ்வாய் கிழமை அனுமன் மற்றும் துர்க்கை அம்மனுக்கும் மிகவும் உகந்த நாளாகும். எனவே செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு போட்டு வந்தால், வாழ்க்கை வளம் பெரும்.

    புதன்

    புதன் கிழமை விநாய பெருமானுக்கு உகந்தது. எனவே புதன் கிழமை அன்று விநாயகர் கடவுளுக்கு விரதமிருந்து வழிபட்டு வந்தால், எந்த ஒரு காரியம் சிறப்பாக நடக்கும்.

    வியாழன்

    வியாழன் கிழமை தட்சணாமூர்த்தி, விஷ்ணு மற்றும் விஷ்ணு பகவானின் மனைவியான லக்ஷ்மி தேவி ஆகிய கடவுளுக்கு உகந்தது. எனவே வியாழக்கிழமை அன்று இந்த கடவுளுக்கு விரதம் இருந்து வழிபட வேண்டும்.

    வெள்ளி

    துர்க்கை அம்மனையும் அவரது அவதாரங்களையும் வெள்ளிக்கிழமை விரதமிருந்து வழிபட வேண்டும். இந்த நாளில் அம்மனின் அனைத்து அவதாரங்களையும் ஒன்றாகவும் வழிபடுவது மிகவும் சிறந்தது.

    சனி

    சனிக்கிழமை சனி கிரகத்தை சார்ந்ததாகும். சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனி பகவான், பெருமாள், ஆஞ்சநேயர் மற்றும் காளி தேவியை வழிபட்டால், வாழ்கை சிறப்பாக இருக்கும்.

    ஞாயிறு

    நவகிரகத்தின் முதன்மைக் கடவுளான சூரிய பகவானை ஞாயிறு அன்று விரதமிருந்து வழிபடுவது உகந்தது. இதனால் சூரிய தோஷம் மற்றும் வாழ்க்கையில் உள்ள இன்னல்கள் தீரும்.

     

  • பதினாறு பேற்றையும் அள்ளித்தரும் வரலக்ஷ்மி விரதம்

     

    ஆடி அல்லது ஆவணி மாதத்தில், பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் சுமங்கலிகள் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள்.இதனால் மங்களமும் ,சௌபாக்கியமும் அடையலாம். பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம். சுமங்கலிப் பெண்களுக்கு ,மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். திருமணதோஷம் உள்ள கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.வரலக்ஷ்மி பூஜையை முறைப்படி தவறாமல் செய்தால்  செல்வம், தான்யம், தைரியம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், கல்வி போன்ற செல்வங்கள் அனைத்தும் கிடைக்கும்.வரலட்சுமி விரதம் அன்று ,அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிப்பது நல்லது. இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பார்கள். இம்மாதம்  வெள்ளிக்கிழமை (04.08.2017) இந்த விரதத்தை பெண்கள் கொண்டாட உள்ள நிலையில்,லக்ஷ்மி தேவியின் வரலாற்றை பற்றி நாம் அறிந்துக்கொள்வோம்.

     

                                                                       

    ஸ்ரீவைகுண்டத்தில், சவுந்தர்யமே வடிவான லட்சுமியின் அழகையும், கீர்த்தியையும் யாழிசைத்தபடி பாடிய  கந்தர்வப் பெண் ஒருத்திக்கு லட்சுமி, மனம் மகிழ்ந்து, தன் கூந்தலில் சூடியிருந்த நறுமணம் மிக்க மலர் சரத்தை  பரிசாக கொடுத்தாள். அதை பிரசாதமாக நினைத்த அந்தப் பெண், தன் யாழில் சுற்றிக் கொண்டாள். வானவெளியில் துர்வாசர் என்ற முனிவர் அவளைச் சந்தித்துப் பேசினார்.

     அப்போது அதுவரை உணராத நறுமணம் கமழவே, அதற்கான காரணத்தை அந்த பெண்ணிடம்  கேட்டார். லட்சுமி தனக்கு பிராசதமாக  தந்த சரத்தில் இருந்தே அந்த மணம் கமழ்வதாக சொன்னதோடு,“உங்களைப் போன்ற மகாமுனிவர்களே மகாலட்சுமியின் இந்த பிரசாதத்தை பெறத் தக்கவர்கள்…’ என்று அதை முனிவரிடம் கொடுத்தும் விட்டாள்.

     அதை சாட்சாத் மகாலட்சுமியே தனக்கு தந்ததாகக் கருதிய துர்வாசர், அந்த மலர்ச்சரத்துடன் வானவெளிக்கு சென்றார். அச்சமயம் ஐராவதம் எனும் யானையின் மீது பவனி வந்த இந்திரனுக்கு, மலர் பிரசாதத்தின் அருமையைக் கூறி, அதைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். அவனோ  அதை அலட்சியமாக வாங்கி, யானையின் மத்தகத்தில் வைக்க , அதில் இருந்த வண்டுகள், யானையை மொய்க்கவே, அது எரிச்சலடைந்து மலரை இழுத்து போட்டு மிதித்தது.

     இதைக்கண்டு கோபமடைந்த துர்வாசர், “இந்திரா… உனக்கு கற்பக விருட்சம், காமதேனு,ஐராவதம் போன்ற கேட்பதைத் தருபவை இருப்பதால் தானே, லட்சுமி தாயாரின் தயவு தேவையில்லை என நினைத்து இவ்வாறு செய்தாய். அவை எதுவும் உனக்கு இல்லாமல் போகட்டும்…’ என்றார்.

    அவை, பாற்கடலில் சென்று மூழ்கி விட்டன. திருமாலின் பொறுமையை பரிசோதிப்பதற்காக, பிருகு மகரிஷி,  அவரது மார்பில் எட்டி உதைத்தார். இதனால், திருமாலின் மார்பில் வசித்த லட்சுமியும்,கோபத்தில்  பாற்கடலில் சென்று மறைந்தாள்.

     லட்சுமி கடாட்சத்தையும், செல்வத்தையும் இழந்த இந்திரன், மீண்டும் அதைப் பெறுவதற்காக பிரம்மனை வேண்டினான். அவர்கள் திருமாலின் உதவியை நாடி  பாற்கடலைக் கடைந்த போது, ஒவ்வொரு பொருளாக வெளியே வந்தது. லட்சுமி தாயாரும் வெளிப்பட்டாள். அவள் வெளியே வரும் போதே, முத்துமாலைகள் அணிந்தும், கையில் மணமாலையை ஏந்தியும் காட்சி தந்தாள். நவரத்தினங்கள் இழைத்த பொற்கலசங்களில் தீர்த்தமேந்தி வந்த யானைகள் அவளுக்கு அபிஷேகம் செய்தன. பிரம்மா  பல ஆபரணங்களை வழங்கினார். சரஸ்வதி,நட்சத்திரங்களை மாலையாகக் கோர்த்து கொடுத்தாள். வானம் பட்டாடைகளை அளித்தது. வைஜெயந்தி என்ற மாலையை வருணன் அளித்தான். நாகலோகத்தினர் நெற்றிச் சுட்டியும், மகர குண்டலமும் அளித்தனர்.

     அவளுக்கு பிடித்தமானவரை திருமணம் செய்து கொள்ளலாம் என பிரம்மா கூறவே, அவள் தன் கையில் இருந்த மணமாலையை திருமால் கழுத்தில் அணிவித்தாள்; வரலட்சுமி விரத நன்னாளில், லட்சுமியின் வரலாற்றைப் படித்து, பூஜை செய்பவர்கள் செல்வ வளம், மாங்கல்ய பாக்கியம் பெற்று சிறப்புடன் வாழ்வர்.

     

     

  • எது உண்மையான சரணாகதி ?

     

    சரணாகதி என்ற வார்த்தைக்கு சரியான  அர்த்தம் என்பது தெரியாமலேயே நம்மில் பலர் அந்த வார்த்தையை உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.நமக்கு ஒரு கஷ்டம் வரும் போது வாய் மட்டும் தான் இறைவா என்று சொல்லிக்கொண்டு இருக்கும். ஆனால் மனமோ சஞ்சலப்பட்டுக் கொண்டு தான் இருக்கும். அப்படி இல்லாமல் எது நடந்தாலும் இறைவனே கதி என இருப்பது தான் உண்மையான சரணாகதி.

    ஒரு முறை இந்திராஜூம்னன் என்ற ஒரு அரசன், விஷ்ணு பகவான் மீது அதீதமான பக்தி கொண்ட காரணத்தினால்  சதா சர்வகாலமும்  திருமாலின் பெயரைச் சொல்லிக்கொண்டே, அதே நினைவில் பக்தியில்  மூழ்கி திளைத்து இருப்பான். அனுதினமும் ஒரு சிறிய  காரியம்என்றாலும் விஷ்ணுவை கும்பிடாமல் செய்ய மாட்டான்.

    அவனுடைய பக்தி எந்த அளவிற்கு என்றால்,அவன் பூஜையில் இருக்கும் போது யார் வந்தாலும் அவனுக்குத் தெரியாது. அந்த அளவிற்கு ஆழ்ந்த பக்தி கொண்ட அவன்  பூஜையில் இருக்கும்போது ஒரு நாள் கோபத்துக்கு பேர் போன  துர்வாச முனிவர் அந்த அரசரைக் காண வருகிறார். அவரும் வெகு பொறுமையாக காத்திருந்து பார்த்தார்.

    சரி மன்னன் தான் பக்தியில் தன்னைக் கண்டுகொள்ளவில்லையே , நாமாவது நினைவுப் படுத்தலாம் என்று லேசாக தனது தொண்டையை செருமினார். அதற்கும் அசையவில்லை அந்த அரசன். இதனால் தனது இயல்பின்படி கோபம் கொண்ட துர்வாச முனிவர் , வந்ததே கோபம் பிடி என் சாபம் என்று,“நான் வந்து நிற்பது கூடத்தெரியாமல், பெரிய பக்தன் என்ற ஆணவத்தில் என்னை மதிக்காமல் இருந்தாய். நீ மதம் பிடித்த யானையாக காட்டில் அலைந்து திரியக்கடவது” என்று சாபமிட்டுவிட்டார். அரசன் தன் தவறை உணர்ந்து துர்வாசரிடம் மன்னிப்புடன்  சாப விமோசனம் வேண்டினான்.  

    அதற்கு முனிவரும் ,“நீ யானையாக ஆனாலும் திருமால் மீது கொண்ட பக்தியை மறக்காமல் இருப்பாய். அத்தோடு குளத்தில் இருக்கும் ஒரு முதலை உன் காலைப் பிடிக்கும்போது நீ ஆதி மூலமே என்று அழைக்க, உடனே அந்த திருமால் வந்து உன்னைக் காப்பார். உனக்கு சாப விமோசனமும்,மோட்சமும், கிடைக்கும்” என்றார்.

     அதன்படியே அந்த அரசன் கஜேந்திரன் என்ற மிகப் பெரிய கம்பீரமான யானையாக காடுகளில் தன் குட்டிகளுடன் அலைந்து திரிந்து கொண்டிருந்தான்.  அந்தக் காட்டில் இருந்த ஒரு குளத்தில் கூஹூ என்ற ஒரு அரக்கன் தண்ணீருக்குள் இருந்து கொண்டு அங்கு குளிக்க வருபவர்களின்  காலைப்பிடித்து இழுத்து பயமுறுத்திக் கொண்டிருந்தான். அகத்திய மாமுனிவரையும்,அந்தக் குளத்தில் நீராட வந்தபோது அவருடைய காலையும் பிடித்து இழுத்தான்.

    கோபத்தில் அவன் முதலையாகப் போகவேண்டும் என்று சாபமிட்டார் முனிவர். அவனும் தம் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு, சாப விமோசனமும் கேட்டான். “கஜேந்திரன் என்னும் யானை வரும்போது அதன் காலைப்பிடிப்பாய், அப்போது அதைக் காக்க வரும் கடவுள் உன்னையும் காக்கும் என்று முனிவர் கூறினார். தனது சாப விமோசனதிற்காக ,அந்த அரக்கனும் முதலை வடிவில் குளத்தினுள் காத்துக் கிடந்தான்.

    அரசனுக்கும் ,அரக்கனுக்கும் சாப விமோசனத்திற்காக நேரமும் வந்தது. கபிஸ்தலம் என்னும் இடத்தின் அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோவிலின் முன்னால் கிழக்கு திசையில் உள்ள கபிலதீர்த்தத்தில் நீர் அருத்துவதற்காக பொய்கையை அடைந்த கஜராஜன் தன் துதிக்கையால் தாமரைப் பூ. அல்லி ஆகியவற்றின் மகரந்தங்கள் நிறைந்த அந்த இனிய பொய்கை நீரை உறிஞ்சி பருகி, அந்த நீரைத் தன் பரிவாரங்களுக்கும் வழங்கினான்.

     தான் வணங்கும் பெருமாளுக்கு ஒரு தாமரை மலரைப் பறித்து சமர்பிக்க விரும்பிய கஜராஜன், அந்த பொய்கைக்குள் காலை வைத்த போது அதிலிருந்த முதலை கஜேந்திரனின் காலைக் கவ்விக் கொண்டு கஜேந்திரனை தண்ணீருக்குள் இழுக்க முயன்றது .

    உடனே கஜேந்திரன், “என்னை காப்பாற்றுங்கள்” என்று கத்தியது. உடனே பெண் யானைகளும், குட்டிகளும் வந்து கஜேந்திரனை விடுவிக்க பெரும்பாடு பட்டன. நீருக்குள் இருக்கும் போது முதலையின் பலம் அதிகம் அல்லவா? அதனால் கஜேந்திரனால் அந்த முதலையிடமிருந்து மீண்டு வரமுடியவில்லை.

    கஜேந்திரனுக்கு உடல் பலம் முழுவதும் குறைந்த நேரத்தில் “ஆதிமூலமே” என்று அவன் அலறிய மறுகணம் கருட வாகனத்தில் கையில் சுதர்சன சக்கரத்துடன் வந்து கஜேந்திரனின் துயர் தீர்த்தான் ஆபத்பாந்தவன்.

    தன்னை நோக்கி அபாய குரல் எழுப்பியது ஒரு யானையாக இருந்தாலும் இறைவன் ஓடோடி வந்ததற்கு காரணம் , கஜேந்திரன் இறைவனிடம் அடைந்த சரணாகதி தான்.நாமும் இறைவனிடம் கேள்வியற்ற சரணாகதி அடைந்து அவன் அருள் பெறுவோம்.

    ஸ்ரீமன் நாராயணா  போற்றி ….

     

     

  • ஆஞ்சநேயரை பற்றி தெரிந்து கொள்ள!

     ஆஞ்சநேயரை வணக்கும் அடியவர்கள் ‘ ஸ்ரீ ராம ஜெயம் ‘ கூறுவதன் மூலம் ஆஞ்சநேயரின் பேரருளை மிக எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.

    சிவ விஷ்ணுவின் ஐக்கியமே ஸ்ரீ ராம நாமம். நாரயனானில் இருந்து வருகின்ற ‘ரா’ வும் நமசிவய வில் இருந்து வருகின்ற ‘ம’ வும் சேர்ந்த நாமமே ‘ராம’.

    சொல்லில் அடங்கா புகழவன். சொல்லின் செல்வன். அஞ்சனைப் புதல்வன். சிவனின் அவதாரன். அவன் அழகைக் காண கோடி கண்கள் வேண்டும். அவன் புகழ்பாடி வையகமே திரளவேண்டும். அனுமன் என்னும் நாமம் அனைத்திலும் தித்திக்கும் பாணம். வானுயர வளர்ந்தாலும் வானரன். தானுயரப் பார்பதில்லை. ‘ராம’ என்று ஓரு முறை உரைத்தால் போதும். கூனிக்குறுகி அணுவளவாய் மாறிடுவான்.

     அனுமனுக்கு பிடித்த அர்ச்சனை பொருட்கள்:

     வடை மாலை

    வெற்றிலை மாலை

    துளசி மாலை

    சிந்தூரம்

    பசு நெய்

    பழங்கள்

    அனுமன் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அனுமன் பிறந்த நாளன்று காலையிலேயே எழுந்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். ஏனெனில், அனுமனின் ஆசிரியர் சூரியன். அவரிடமே அனுமன் இலக்கணம் படித்து, சர்வ வியாகரண பண்டிதர் என்னும் பட்டம் பெற்றார்.

    இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப்பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம்.

    அனுமன் அவதார நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் தலத்திற்கு சென்று

    ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே

    ராமதூதாய தீமஹி

    தன்னோ அனுமன் பிரசோதயாத்

     என்ற அனுமன் காயத்ரி சொல்லி அவரது அருள்பெறுவோம்.

    அனுமனை வணங்குவதன் பலன்: அனுமனை வணங்குவதால், புத்தி, பலம், புகழ், குறிக்கோளை எட்டும் திறன், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்குவன்மை ஆகியவற்றைப் பெறலாம்.

     

    திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழனன்று வெற்றிலை மாலை, துவங்கிய வேலைகளில் தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சாத்தலாம்.

     ராமதூதர் அனுமனுக்கு துளசிமாலை சாத்துவதால் ராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் பெறலாம். அசோகவனத்தில் சீதையைக் கண்டு ராமபிரானின் நிலையை அனுமன் எடுத்துரைத்தார். சந்தோஷமடைந்த சீதை அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த

    வெற்றிலையைக் கிள்ளி தலையில் தூவி ஆசிர்வதித்தாள். இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும் என்றாள். வெற்றிலையை காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் பக்தர்கள் தங்கள் செயல்பாடுகள் வெற்றி பெற வெற்றிலை மாலை சாத்துகின்றனர்

     வெண்ணெய் சாத்துவது ஏன்: வெண்ணெய் வெண்மை நிறமுடையது. வெள்ளை உள்ளமுள்ள பக்தர்களை அனுமனே தன்னுடன் சேர்த்து அருள் செய்கிறான் என்பதன் அடையாளமாக வெண்ணெய் சாத்தப்படுகிறது.

     அனுமன் இன்றி ஸ்ரீ ராமன் இல்லை, ஸ்ரீ ராமன் இன்றி அனுமன் இல்லை.

     

  • கேட்பவர்க்கு கேட்ட வரம் அருளும் அழகர் சித்தர்

    நம்முடைய கலாச்சாரத்தில் பலவிதமான பிரார்த்தனைகள் , நேர்த்திக்கடன்கள். அவரவர் மன நிம்மதிக்காகவும் , கவலைகளை தீர்க்கும் பொருட்டும் கடவுளிடம் வேண்டிக்கொண்டு செலுத்தும் நேர்த்திக்கடன்கள் அநேகம்.அது அம்மனை நினைத்து  பூக்குழியாக பாவித்து இறங்கும் தீக்குழியாக இருக்கட்டும், சிறு துரும்பு குத்தினாலும் தங்களது உடலெங்கும் அலகு குத்திக்கொள்வதில் ஆகட்டும் ,இது தான்.இப்படித்தான் நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்ற அளவுகோல் இல்லை.

    தென்னம்பாக்கம் அழகுமுத்தையனார் ஆலயமும் வித்தியாசமான நேர்த்திக்கடனால் தனித்து நிற்கிறது. ஸ்ரீ அழகர் சித்தரின் சக்திவாய்ந்த ஜீவசமாதி உள்ள இந்தக் கோவிலில் ,பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை காகிதத்தில் எழுதி கோவிலில் கட்டுகிறார்கள்.வேண்டுதல் நிறைவேறியதும்,விதவிதமான பொம்மைகளை வாங்கி கோவிலுக்கு கொடுக்கிறார்கள்.

    கடலூரில் இருந்து சுமார் 16 கிலோமீட்டர்  துரத்தில்  அமைந்துள்ளது தென்னம்பாக்கம் . அங்கு ஏரிக்கரையின் வடகரையில், ஊருக்கு வெளியே இலுப்பைத் தோப்பில் பூரணி, பொற்கலை சகிதமாக கம்பீரமாக ஊர்க்காவலராக நிற்கும் அழகு முத்தையனார் கோவிலின் பின்புறமுள்ள கிணற்றில் ஜீவசமாதியடைந்து இன்றும் பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார்  அழகர் சித்தர்.

    சுமார் 200 ஆண்டுகளுக்குமுன் தென்னம்பாக்கம் வந்த சித்தர், தனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்தது அழகு முத்தையனார் கோவில் வளாகத்தைத்தான். இவர் ஊர்மக்களின் குறைகள் பல தீர்த்து, அற்புத சித்துகள் செய்துகாட்டியவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களின் மனதில் நிலைத்த சித்தர்,ஒருநாள் முத்தையனார் கோவிலுக்குப் பின்புறம்  இருந்த கிணற்றில் இறங்கினார். சித்தர்  கிணற்றில் இறங்குவதை கண்ட  அவ்வூர் மக்கள் ,அருகில் சென்று பார்க்கையில் ,கிணற்று நீரில் ஜீவசமாதியான நிலையில் சித்தர் இருப்பதைப் பார்த்தனர். தகவலறிந்து ஊரே திரண்டுவிட்ட நிலையில், சித்தரின் குரல் “நான் இங்கு ஜீவசமாதியாகிவிட்டேன். கிணறை மூடிவிடுங்கள். முத்தையனாரோடு எனக்கும் கோவில் அமைத்து வழிபடுங்கள். என்னை நாடிவரும் பக்தர்களின் குறையெல்லாம் தீர்த்து, வாழ்வை வளம்பெறச் செய்வேன்” என்று அசரீரியாக ஒலித்தது.

    அவர் வாக்குப்படி, கிணற்றை மூடி சமாதி அமைத்து கோவிலாக்கினர் ஊர் மக்கள். சமாதி மீது சூரிய ஒளியும்ஆகாயமும்  தெரியவேண்டுமென்பது சித்தரின் கட்டளை என்பதால் ,அதற்காக சமாதியின் மேற்கூரையின் மையப்பகுதியை  திறந்தே வைத்திருக்கிறார்கள்.

    ஆலயம் வரும் பக்தர்கள் முதலில் அழகு முத்தையனாரையும், பின்பு அழகர் சித்தரையும் வணங்கியபின்பே மற்ற தெய்வங்களான  சிவன் சந்நிதி, சனி பகவான் சந்நிதியோடு, அம்மன் சந்நிதியை வணங்குகின்றனர்.

    கோவில் வளாகமெங்கும் நேர்த்திக் கடன் செய்துகொண்டவர்கள் வழங்கிய ஒரு அடி முதல் ஐந்தடி வரையிலான மனித சிற்பங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன.

    தங்களின்  பிள்ளைகள்  டாக்டராக, வக்கீலாக  கலெக்டராக வர வேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர்கள் ,இந்தக் கோவிலில் வேண்டிக்கொண்டு  சீட்டெழுதிக் கட்டுகிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் தங்களின் பிள்ளைகள் போல் சிற்பம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள் என்கிறார் தலைமை பூசாரி.

    படிப்பு, திருமணம், குழந்தைப்பேறு , தீராத நோய்கள், வழக்கில் வெற்றி என சாதாரண மக்களின் வாழ்க்கையோடு பிணைந்துள்ள பிரச்சினை ஒவ்வொன்றுக்கும் இங்குவந்து முறையிட்டு தீர்வு காண்கின்றனர் சுற்றுவட்டார மக்கள். ஒவ்வொரு சிலையும் ,இது கதையல்ல நிஜம் என்று சொல்லாமல் சொல்கிறது.

    அழகர் சித்தர் சித்திரை மாதமொன்றின் முதல் திங்கட்கிழமை ஜீவசமாதியடைந்தார் என்பதால் வருடம்தோறும் சித்திரை முதல் திங்கட்கிழமையை இங்கு வெகுவிமரிசையாகக் கொண்டாடுகின்றனர். அழகருக்கு உகந்த திங்கட்கிழமையில் பக்தர்கள் திரளாக வந்து அவர் ஆசி பெற்று செல்கின்றனர்.

                                                                   

     

    கோவில் வளாகத்திலேயே  பக்தர்கள் விருப்பம் போல் உயரத்திலும் உருவத்திலும் சிலைகளை செய்து தருபவர்களும் காணப்படுகிறார்கள். கூப்பியக் கரங்களுடன் சிலநூறு மீட்டர் தொலைவுக்கு அணிவகுத்து நிற்கும் சிலைகளைப் பார்க்கும் போதே  சித்தரின் மகிமையை நம்மால் உணர முடிகிறது.

     

                                                                     

     

    சித்தர் வழிபாடு நம் வாழ்வை இனிதாக்கும் …..