Author: சக்தி ஆன்லைன் டீம்

  • New Year: Devotees offer special prayers at temples across Tamil Nadu!

    2025  புத்தாண்டை வரவேற்று தமிழகம்  முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.  

    2025 ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதிலும் மக்கள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டனர். புத்தாண்டையொட்டி சென்னை வடபழனி முருகன் கோவில் உள்படதமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில்  சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.   

    மேலும் திருச்சி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, திருநெல்வேலி, திருத்தணி, பழனி, திருச்செந்தூர் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.  

    கோவையில் பிரசித்தி பெற்ற ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலை உள்ள புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அருகம்புல் மாலை, 108 தேங்காய்களால் ஆன மாலை மற்றும் புஷ்ப மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகரை பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். அவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார்  5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில் நடை இன்று அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

    அதேபோன்று ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. புத்தாண்டின் முதல் நாள் தரிசனத்திற்காக பம்பை முதல் சன்னிதானம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். இதேபோல், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினியில் உள்ள ஸ்ரீ மஹாகாலேஷ்வர் ஜோதிர்லிங்க கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர். டெல்லியின் ஜந்தேவாலன் கிருஷ்ணர் கோயில், பிர்லா மந்திர், சத்தார்பூர் துர்க்கை கோயில், ஹனுமன் கோயில், கல்காஜி கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற சிறப்பு ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர். ஹரியானாவின் பஞ்ச்குலாவில் உள்ள மான்சா தேவி கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    அயோத்தியில் புத்தாண்டு வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சரயு நதியில் நீராடி சூரியனுக்கு தீபம் காட்டி, பின்னர் ராமர் கோயில் சென்று வழிபாடு மேற்கொண்டனர். உத்தராகண்ட்டின் ஹரித்வார் நகரில் அதிகாலை முதலே பக்தர்கள் கங்கையில் நீராடி வழிபாடு மேற்கொண்டனர். ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள குவாஜா கரீப் நவாஸ் தர்காவில் ஏராளமான இஸ்லாமியர்கள் அதிகாலையிலேயே கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அஸ்ஸாமில் உள்ள காமாக்கியா கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து தீபம், ஊதுபத்தி ஆகியவற்றைக் காட்டி வழிபாடு மேற்கொண்டனர்.

    ஒடிசாவின் பூரி ஜெகந்நாதர் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது.  
     

  • Srirangam Ranganathar Temple: Pagal Pathu Utsavam begins

    108 திவ்ய தேசங்களில் முதன்மையான பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.

    பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருநாள் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி நம்பெருமாள் காலை 7.45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு அர்சுன மண்டபம் வந்தடைந்தார். மஞ்சள் நிற பட்டு (பீதாம்பரம்) அணிந்து ரத்தின பாண்டியன் கொண்டை அணிந்து, நெற்றி பூ சாற்றி, வைர அபய ஹஸ்தம், பதக்கம், அடிக்கை, ஒட்டியா ணம், கைகளில் தாயத்து சரம், திருவடியில் தண்டை அணிந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.

    மதியம் 12 மணிவரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர். இரவு 7.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடை கிறார். பகல்
    பத்தின் முதல் நாளான இன்று மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார்.

    இதே போல் பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10 ஆவது நாள் நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 10 ஆம் தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள்  வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும்.

    அன்று அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவா சலில் எழுந்தருள்வார். இதை யொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்த ர்களுக்கு அருள்பாலிப்பார்.

    சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபத வாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 11 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். 16 ஆம் தேதி மாலை 4 மணிமுதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும்.  

    சொர்க்கவாசல் திறப்பு தினமான 10 ஆம் தேதி முதல் ராப்பந்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
    ராப்பத்து ஏழாம் திரு நாளான 16 ஆம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 17 ஆம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 19 ஆம் தேதி தீர்த்தவாரியும், 20 ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவடையும்.

  • Simple remedies to sweeten your married life.

    ர் ஆணின் ஜாதகத்தில், லக்னத்தில் இருந்து 7-வது இடம் மனைவி ஸ்தானத்தைக் குறிக்கும். இந்த வீட்டுக்குரிய கிரகம் சிறப்பாக இருக்க வேண்டும். அதோடு, இந்தக் கிரகம் 2, 4, 5, 9 ஆகிய வீடுகளுக்குரிய கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலோ, அந்தக் கிரகங்களின் நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தாலோ, திருமணத்துக்குப் பின் வாழ்க்கையில் பெரும் அதிர்ஷ்டம் தரக்கூடிய பெண், இல்வாழ்க்கைத் துணைவியாக அமைவாள்.

    ஆணின் ஜாதகத்தில் 7-ஆம் வீட்டுக்குரிய கிரகம் (சப்தமாதிபதி) சுபத் தன்மை பெற்ற குருவின் பார்வை பெறுவது சிறப்பு. அதேபோல் லக்னாதிபதி வலுவடைந்து, 7-ஆம் வீட்டுக்குரிய கிரகமும் பாவக் கிரகங்களின் பார்வையோ, சேர்க்கையோ இல்லாமல் இருந்தால், அழகு, அன்பு, அறிவு, அந்தஸ்து, நற்குணம் கொண்ட மனைவி அமைவாள்.

    அதேநேரம் ஓர் ஆணின் ஜாதகத்தில் 7-ஆம் வீட்டுக்குரிய கிரகம் 6, 8 ஆகிய வீடுகள் மற்றும் பாதகாதிபதியுடன் சேர்ந்திருந்தாலோ அல்லது அவர்களின் பார்வை பெற்றாலோ, திருமணத்துக்குப் பிறகு பிரச்னைக்குரிய வாழ்க்கையே அமையும்.

    திருமணத்துக்குப் பிறகு நல்வாழ்க்கை அமைந்து இல்லறம் இனிக்க கீழ்க்காணும் எளிய பரிகாரங்களைச் செய்து பலன் பெறலாம்.

    ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவி செய்யலாம் அல்லது திருமணச் செலவின் குறிப்பிட்ட பகுதியை மனமுவந்து ஏற்பது சிறப்பு. குறிப்பாக, அந்தப் பெண்ணுக்கு மாங்கல்யம் வாங்கித் தருவது நல்லது. அதேபோல் கன்னிப் பெண்களுக்கு வெள்ளியால் ஆன பொருள் தானம் செய்வது சிறப்பாகும்.

    சஷ்டி திதியன்று திருத்தணி சென்று முருகப் பெருமானை வழிபட, அதிர்ஷ்டம் அள்ளித்தரும் பெண் மனைவியாக அமைவாள்.

  • Hanuman Jayanti: A grand celebration at Namakkal Anjaneyar Temple!

    நாமக்கல் கோட்டையில் புராதன சிறப்புப் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு  ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். 

    அதன்படி நடப்பாண்டு மார்கழி மாதத்தையொட்டி கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி (வியாழக்கிழமை) ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து நடப்பாண்டு 2 ஆவது முறையாக மார்கழி மாதத்தை முன்னிட்டு இன்று 30 ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக தொடங்கியது. 

    விழாவையொட்டி ஒரு டன் வண்ண மலர்களால் கோவில் வளாகம் முழுவதும் அலங்கரிப்பட்டு இருந்தது. அதிகாலை 5 மணிக்கு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. இதையடுத்து ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு திரை விலக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரத்துடன் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இவ்விழாவில் தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். காலை 11 மணிக்கு வடை மாலை அலங்காரம் கலைக்கப்பட்டு நல்லெண்ணெய், பால், தயிர், திருமஞ்சள், சீயக்காய்தூள், பஞ்சாமிர்தம் போன்ற வாசனைப் பொருட்களால் சாமிக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

    பின்னர் மதியம் 1 மணிக்கு ஆஞ்சநேயருக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. சுமார் 20-க்கும் மேற்பட்ட கோவில் பட்டாச்சாரியார்கள் பூஜை பணிகள் செய்தனர். 

    ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு முதலே சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை வழிபட்டு செல்கின்றனர். ஆஞ்சநேயர் ஜெயந்தி பெருவிழாவையொட்டி நாமக்கல் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    5 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக நாமக்கல்லில் கோட்டை ரோடு, பார்க் ரோடு பகுதிகளில் போக்குவரத்து தடை தடை செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டது. நாமக்கல் கோட்டை பகுதி முழுவதும்   போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  

  • Are Rahu and Ketu bad omens? Simple remedies…

    காலப் பிரகாசிகை, சுக்ர நீதி போன்ற பழம்பெரும் நூல்கள் ராகுவும், கேதுவும் ஈடு இணையற்ற வல்லமை பொருந்திய கிரகங்கள் எனக் கூறுகின்றன. ஒருவரின் தாய்வழிப் பாட்டன், பாட்டிக்கு அதிபதியாக ராகு வருகிறார். கேது – தந்தை வழிப் பாட்டன், பாட்டிக்கு அதிபதியாக வருகிறார். ராகு- கேது குறித்து முழுமையாக அறிந்துகொண்டால், தோஷத்துக்கு மட்டுமல்ல; பல தருணங்களில் பூரண சந்தோஷத்துக்கும் இவர்களே காரணமாகத் திகழ்வது புரியும்.

    ராகு தோஷ பாதிப்புகள் மட்டுப்பட, வீட்டிலேயே சனிக்கிழமைகளில் மாலையில் அம்பிகைக்கு ஐந்து தீபங்கள் ஏற்றி வைத்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபடலாம். திருநாகேஸ்வரம் சென்று வழிபட்டு வரலாம். அதேபோல், பாம்பணையில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளை தரிசித்து வழிபட்டு வருவதாலும் ராகு தோஷப் பாதிப்புகள் விலகும்.

    கேதுபகவானின் திருவருளைப் பெற செவ்வாய்க் கிழமைகளில், கேது பகவான் காயத்ரீ மந்திரம் சொல்லி வழிபடுவது சிறப்பு. பிள்ளையாருக்கு அருகம்புல் மோதகம் சமர்ப்பித்து, நெய்தீபம் ஏற்றிவைத்து வழிபட்டால், கேது பகவான் மகிழ்வார். ஏழை மாணவர்களின் படிப்புக்கும் சமயச் சொற்பொழிவு முதலான ஆன்மிக காரியங்களுக்கும், கோயில் திருப்பணிகளில் ஈடுபடும் அன்பர்களுக்கும் உதவி செய்வதால் கேதுபகவானின் திருவருளைப் பரிபூரணமாகப் பெறலாம்.

    காஞ்சி சித்ரகுப்தரைத் தரிசித்து வருவதும் கேது பகவானுக்கு ப்ரீத்தியானது. கீழப் பெரும்பள்ளம், திருப்பாம்புரம் தலங்களுக்கும் சென்று வழிபடலாம்.
     
    ஓர் ஆணின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டுக்கு உரிய கிரகம் மறைந்து பலவீனமாகி இருக்க, அந்தக் கிரகத்துடன் 6, 8-ஆம் வீட்டுக்கு உரிய கிரகங்களும், பாதகாதிபதியும் சேர்ந்திருந்தால், அவருக்குத் திருமணம் ஆன நாளில் இருந்தே மனைவியால் மருத்துவச் செலவுகளும், மற்ற செலவுகளும் வந்துகொண்டே இருக்கும்.

    அதேபோல், ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதி, ராசிநாதனுடன் 6-க்கு உரிய கிரகமும் சேர்ந்து, இவர்களுடன் 8-ஆம் வீட்டுக்கு உரிய கிரகமும் சேர்ந்து, இந்தக் கூட்டுக் கிரகங்களை சனி பார்த்து விட்டால், அவருக்கு மருந்தே வாழ்க்கையாகி விடும். அதாவது, அவர் வாழ்நாள் முழுக்க மருந்து, மாத்திரைகளுடனேயே வாழ்வார். பூர்வ புண்யாதி பதியுடன் 6, 8-ஆம் வீட்டுக்கு உரிய கிரகம் சேர்ந்தால் பிள்ளைகளால் மருத்துவச் செலவு ஏற்படும்.

    பொதுவாக, மேஷம் தொடங்கி மீனம் வரையிலான 12 ராசியினருக்குமே நோய்கள் வந்து மருத்துவச் செலவு ஏற்பட்டாலும், மேஷம், ரிஷபம், துலாம், விருச்சிகம் ஆகிய நான்கு ராசியினர் அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள்; உடல்ரீதியான பிரச்னைகளைச் சந்திப்பார்கள். ராசிநாதனே இந்த நான்கு ராசிகளுக்கும் 6, 8-ஆம் வீட்டுக்கு அதிபதியாக வருவதால், மற்ற ராசியினரைவிட இவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.

    இவர்கள் சில பரிகாரங்களைச் செய்தால், நோயற்ற நிம்மதியான வாழ்க்கையைப் பெறலாம்.

    மருத்துவச் செலவு தேவைப்படும் நபர்களுக்கு முடிந்த அளவு உதவி செய்யலாம். பழைமையான ஆலயங்களின் தலவிருட்சப் பராமரிப்பில் ஈடுபடலாம். மா, அத்தி உள்ளிட்ட பால் மரக் கன்றுகளை பொது இடங்களில் நட்டுப் பராமரிக்கலாம்.

    தெரிந்தோ தெரியாமலோ யாருடைய சொத்தையோ பணத்தையோ அபகரித்து இருந்தால், அவற்றை நாணயமாகத் திருப்பிக் கொடுத்துவிடுவது நன்று.

    இந்தப் பரிகாரங்களோடு, கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் கோயில்கொண்டுள்ள சரபேஸ்வரரை வழிபட்டு, அவரவர் வயதைக் குறிக்கும் எண்ணிக்கை யில் நெய் தீபம் ஏற்றி வணங்கினால், நோய், கடன், வழக்கு பிரச்னைகளில் இருந்து நிம்மதி கிடைக்கும்.

    – கே.என். கோபால சாஸ்திரி
     

  • 2025 English New Year: Special arrangements at Thiruverkadu Temple

    ருகிற 2025 ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட உள்ளன. 

    திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 1 ஆம் தேதி அன்று அம்மனை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்காக, முந்தைய தினமான டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடை திறப்பது கடந்த 40 வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது. 

    இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஏற்பாடுகளைச் செய்வது குறித்து, கோவில் அலுவலகத்தில் கோவில் இணை ஆணையர் அருணாசலம் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

    அதன்படி, வருகிற புத்தாண்டையொட்ட்டி  நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்வது, கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பான குடிநீர் வசதி, கழிவறை மற்றும் குளியலறை வசதி, அன்னதானம், பிரசாதம் வழங்குதல், பக்தர்களுக்கு இலவச மருத்துவ உதவி, வாகனங்கள் நிறுத்தும் வசதி, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி எளிதாக தரிசனம் செய்யும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்வது என முடிவு செய்யப்பட்டது. 

    கோவிலில் நள்ளிரவு 12 மணிக்கு கோ பூஜை தொடங்கி, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தேவி கருமாரியம்மன் தங்க கவசத்தில் காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலின் உப கோவிலான சம்மந்தரால் பாடல்பெற்ற தொண்டை நாட்டு சிவாலயமும், நான்கு வேதங்களும், வேல மரங்களாய் நின்று சிவபெருமானை வழிபட்ட தலமான பாலாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் திருக்கோவிலிலும், 2025 புத்தாண்டு சிறப்பு தரிசனத்திற்காக டிசம்பர் 31 ஆம் தேதி 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அபி ஷேகங்கள் செய்யப்படும். சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு இறைவன் இறைவி அருள் பாலிக்கவும் ஏற்பாடு செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. 
     

  • Mars Dosha: Effective Remedies to Mitigate Its Effects!

    பூர்வஜென்ம குற்றம் – குறைகளுக்கு, நிவர்த்தி தேடினால் தோஷங்களின் பாதிப்பு குறையும். அவ்வகையில், வாழ்வில் பலரும் சந்திக்கும் தோஷங்கள், பாதிப்புகள், அவற்றுக்குக் காரணமான கிரக நிலைகள், எளிய பரிகாரங்கள் இங்கே… 

    தோஷங்களில் அதிக பயத்துக்கும் பாதிப்புக்கும் ஆளாக்குவது, செவ்வாய் தோஷம்தான். பிறக்கும்போது லக்னத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு நிலையில் செவ்வாய் கிரகம் அமைந்திருக்கும். அப்படி அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் ஆகும்.

    சில தருணங்களில் இந்த தோஷம் வலு குன்றியதாகவும் திகழும். செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தாலோ, குருவோடு சேர்ந்து நீச கதியில் நின்றாலோ, வர்க்கோத்தமம் பெற்றிருந்தாலோ (உங்கள் ஜாதக ராசி கட்டத்திலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருப்பது) செவ்வாய் தோஷத்தின் பாதிப்பு குறையும்.

    செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் தோஷத்தைச் சேர்ப்பதுதான் நல்லது என்பதே எனது கருத்து. ஏனெனில், உணர்ச்சிக்குரியதே செவ்வாய் கிரகம். உடல் மற்றும் மன உணர்வுகளைச் சமமாக இருவரும் வெளிப்படுத்தும்போது, கணவன்-மனைவிக்குள் வீண் பிரச்னைகள் எழாது.

    பரிகாரங்கள் என்னென்ன?

    செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் புளி சாதம், புளிச்ச கீரையை உணவில் குறைவாகச் சேர்ப்பது நல்லது. அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் செவ்வாய் ஆதிக்கமுள்ள நிலம், சகோதரர்கள் முதலான விஷயங்களில் நேர்மறையான அணுகுமுறையை வைத்துக்கொண்டால், செவ்வாய் தோஷத்தின் வீரியம் குறையும்.

    பூர்வீகச் சொத்துப் பிரிவினையில் சகோதர- சகோதரிகள், பெற்றோரின் மனத் தாங்கலுக்கு ஆளாகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முதன் முதலாக வாங்கும் சொத்தை நிலமாக வாங்காமல், கட்டப்பட்ட கட்டடமாக வாங்குவது சிறப்பு. ஊர் எல்லையில் கோயில்கொண்டிருக்கும் காவல் தெய்வங்களுக்குச் செம்பருத்திமற்றும் விருட்சிப்பூ சாற்றி வணங்குங்கள். வீட்டில் வில்வம், வன்னி மரக்கன்றுகள் நட்டுப் பராமரியுங்கள்.

    தொடர்ந்து 6 செவ்வாய்க் கிழமைகள் வீட்டில் ஷட்கோணம் வரைந்து, அதில் ஆறெழுத்து மந்திரத்தை எழுதிவைத்து, 6 நெய் தீபங்கள் ஏற்றிவைத்து குமார ஸ்தவம், சண்முகக் கவசம் படித்து வழிபடலாம். அப்போது வெல்லம் கலந்த தினைமாவு நைவேத்தியம் செய்து, முல்லைமலர், செவ்வரளி அல்லது செம்பருத்தி சமர்ப்பித்து முருகனை வணங்கிட, செவ்வாய் தோஷ பாதிப்புகள் விலகும்.

    – கே.என். கோபால சாஸ்திரி
     

  • Vaikunta Ekadasi: Special Arrangements at Ezhumalaiyan Temple

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வருகிற ஜனவரி 10  ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு 19 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். 

    இந்த 10 நாட்களுக்கு உண்டான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்த டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 25 நிமிடத்தில் 1.40 லட்சம் டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்தனர். ஆனால் இந்த டிக்கெட்டுகளை பெறுவதற்காக 14 லட்சம் பேர் தேவஸ்தான இணையதளத்தில் முயற்சி மேற்கொண்டு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்த 10 நாட்களுக்கான இலவச தரிசன டோக்கன்கள் திருப்பதியில் 9 இடங்களில் வழங்கப்பட உள்ளது. இதற்கான கவுண்டர்கள் ஏற்பாடு செய்வதை செயல் அதிகாரி ஷியாமளா ராவ் மேற்கொண்டார். 

    திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்திற்காக ஜனவரி 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 3 நாட்களுக்கு உண்டான 1.20 லட்சம் இலவச சர்வ தரிசன டோக்கன்கள் ஜனவரி 9 ஆம் தேதி காலை 5 மணிமுதல் தொடர்ந்து வழங்கப்படும். 3 நாட்களுக்கான டோக்கன்கள் முடிந்த பின்னர், அந்தந்த நாட்களுக்கு டோக்கன்கள் முந்தைய நாள் வழங்கப்படும்.

    இதற்காக திருப்பதியில் 8 மையங்களில் 87 கவுண்டர்களும், திருமலையில் 4 கவுன்டர்களும் என மொத்தம் 91 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களின் ஆதார் அட்டையை காண் பித்து டோக்கன் பெற வேண்டும். இந்தமுறை முறைகேடுகள் நடக்காமல் இருக்க டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு அவர்களின் புகைப்பட அடையாளத்துடன் கூடிய டோக்கன் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Murugan who removes endless suffering…

    தீராத துன்பத்தை போக்கும் முருகன் …

    முருகனை வழிபாடு செய்பவர்களுக்கு எப்பேற்பட்ட கஷ்ட சூழ்நிலையும் படிப்படியாக விலகி ஓடும்.

    முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள் மிக அதிகம். வழிபாடுகளிலும் வழிபாட்டு முறைகளிலும் முருகப்பெருமானுக்குத்தான் பலவிதமான வழிபாடுகளும் நேர்த்திக்கடன்களும் இருக்கின்றன என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    முருகப்பெருமானுக்கு எல்லா சிவாலயங்களிலும் சந்நிதி அமைந்திருக்கும். பெரும்பாலான சிவன் கோயில்களில் முருகக் கடவுளும் சாந்நித்தியம் கொண்டவராகத் திகழ்வார். ஆறுபடை வீடுடையோன் என்று முருகக் கடவுளைச் சொன்னாலும் ஆறு படைவீடுகள் என்று சொல்லப்படும் கோயில்களையும் தாண்டி ,ஏராளமான முருகன் கோயில்கள் இருக்கின்றன. அதுவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்கள் இருக்கின்றன.

    அதேபோல், பல அம்மன் கோயில்களிலும் முருகக் கடவுளுக்கு சந்நிதிகள் இருக்கின்றன. அம்மையப்பன் என்று சிவபார்வதியைச் சொல்வோம். அம்மை குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் அப்பன் சிவனார் குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் மைந்தன் கந்தனுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன.

    ஆறுபடை வீடுகள் எனும் பட்டியலுக்குள் வராத, வடபழநி, வயலூர், குமரன் குன்றம், குன்றத்தூர் விராலிமலை முதலான ஏராளமான கோயில்களில் இருந்துகொண்டே தன் பக்தர்களின் குறைகளைப் போக்கி அருளிக்கொண்டிருக்கிறான் அழகன் முருகன்.

    வழிபாடுகளும் நேர்த்திக்கடன்களும் வேலவனுக்கு ஏராளம். காவடி எடுத்து வழிபடுவார்கள். வேல் எடுத்து வந்து பூஜிப்பார்கள். பால் குடம் ஏந்தி வருவார்கள். பாத யாத்திரை மேற்கொள்வார்கள். பாலபிஷேகம் செய்வார்கள்.. முடிகாணிக்கை செலுத்துவார்கள். சேவல் வழங்குவார்கள்.

    முருகப்பெருமானை எப்படி வழிபட்டாலும் ஏற்றுக் கொண்டு அருளுவான் என்கிறார்கள் பக்தர்கள். அதேசமயம் முருக மந்திரத்தைச் சொல்லி மனமுருகி வழிபட்டால், பட்ட கஷ்டங்களையெல்லாம் பனி போல் விலக்கிவைத்து அருளுவான். அடைந்த துன்பங்களில் இருந்தெல்லாம் ஆனந்த வாழ்க்கையை மாற்றித் தந்திடுவான் கந்தன்.

    ஓம் செளம் சரவணபவ
    ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம் செளம் நமஹ

    எனும் முருகப்பெருமானின் மந்திரத்தை, செவ்வாய்க்கிழமைகளில் அவசியம் சொல்லி வாருங்கள். செவ்வாய்க்கிழமையில் காலையும் மாலையும் இந்த மந்திரத்தைச் சொல்லி வாருங்கள். முடிந்தால் நெய்விளக்கேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். இந்த மந்திரத்தை 21 முறை அல்லது 54 முறை அல்லது 108 முறை சொல்லி வாருங்கள். அதேபோல், செவ்வாய்க்கிழமை என்றில்லாமல் எல்லா நாளும் சொல்லி வழிபடுங்கள். தினமும் சொல்லி வழிபடுங்கள். நம் வினைகளையெல்லாம் தீர்த்துவைப்பான் வேலவன். சிக்கல்களையெல்லாம் போக்கி அருளுவான் சிங்காரவேலன்.

     

  • கும்பம் ராசிக்கான டிசம்பர் மாத ராசிபலன்

    கும்பம் அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

    கிரகநிலை:

    ராசியில் சனிதன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் ராகு சுக ஸ்தானத்தில் குரு()  – ரண ருண ரோக  ஸ்தானத்தில் செவ்வாய்அஷ்டம  ஸ்தானத்தில் கேதுதொழில்  ஸ்தானத்தில் சூர்யன், புதன் (), சந்திரன்லாப  ஸ்தானத்தில் சுக்கிரன் என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    03-12-2024 அன்று சுக்கிரன்  லாப  ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    15-12-2024 அன்று சூர்யன் தொழில்  ஸ்தானத்தில் இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-12-2024 அன்று சுக்கிரன் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    பலன்:

    கும்பராசியினரே இந்த மாதம் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம்  ஏற்படும். எதிர் பாலினத்தாரால்  லாபம் கிடைக்கக் கூடும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பணவரத்து கூடும். வீண் அலைச்சல் திடீர் கோபம் உண்டாகலாம்காரிய வெற்றி தரும். மதிப்பும், அந்தஸ்தும் உயரும்.

    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்ப வர்களுக்கு கடன் பிரச்சனைகள் தீரும். போட்டிகள்  குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு  சங்கடப்பட வேண்டி இருக் கும்வாக்குவன்மையால் நன்மை ஏற்படும்.

    குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும்கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள்  நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும்.

    பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாக லாம். காரிய வெற்றி பணவரவு எதிர்பார்த்த படி இருக்கும்.

    மாணவர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்பாடங்களில் கவனம் செலுத்துவது  அதிகரிக்கும்.

    அவிட்டம்:

    இந்த மாதம் பிரிந்துசென்ற தம்பதியினர் ஒன்றுசேர்வார்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. மருத்துவத் தொழில்புரிவோருக்கு அதிக வருவாய் வரும் மாதம். சோதனைகள் வெற்றியாக மாறும்.

    சதயம்:

    இந்த மாதம் காரியங்கள் அனைத்தும் கைகூடும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். மனஅடக்கம் பெற தியானம் செய்யுங்கள். படிப்பில் நாட்டம் கூடும். பெற்றோர்கள், பிள்ளைகள் விரும்பியதை  வாங்கிக்கொடுப்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும்.

    பூரட்டாதி:

    இந்த மாதம் கல்வியில் புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. செய்யும் உத்தியோகத்தில் இடமாற்றமோ அல்லது பணி நிரந்தரமோ ஏற்படலாம்.

     

    பரிகாரம்: ஆஞ்சனேய கவசத்தை படித்து வருவதுடன் அநாதை இல்லங்களுக்கு சென்று தொண்டு செய்து வர மன குழப்பங்கள் நீங்கும். தைரியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள்  நன்கு நடந்து முடியும்.

    அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17

    சந்திராஷ்டம தினங்கள்: 23, 24