Jothiyaga katchi thandha vallar

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூரில் பிறந்தவர் வள்ளற் பெருமான் என்கின்ற இராமலிங்க வள்ளலார். இவர் சென்னை, கருங்குழி, வடலூர், ஆகிய பகுதிகளில் வசித்து வந்தார். 14 ஆண்டுகள் கருங்குழியில் தங்கிய வள்ளலார் திருவருட்பா எழுதினார். இறைவன் ஒளி வடிவானவர் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்தியஞான சபையை வள்ளலார் நிறுவினார்.

ஏழை, எளிய மக்களின் பசியை போக்க சத்தியஞான சபையை அருகிலேயே தருமச்சாலையை நிறுவினார். அன்று முதல் இன்று வரை அந்த தருமச்சாலையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் வள்ளலார் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்றார்.

மனித ஸ்தூல உடல் அமைப்போடு ஒப்பிடும் வகையில் சத்தியஞான சபை எண் கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தெற்கு வாயில் வழி உள் சென்றால், வலப்புறம் பொற்சபையும் இடப்புறம் சிற்சபையும், பஞ்சபூதங்களைக் குறிக்கும் ஐந்து படி களையும் காணலாம். அவற்றைக் கடந்து உள்ளே சென்றால், சதுர வடிவ பீடத்தின் மேல் வள்ளலார் ஏற்றி வைத்த அணையா தீபமும், அதற்குப் பின்னே 6.9 அடி உயரமும், 4.2 அடி அகலமும் கொண்ட நிலைக் கண்ணாடியையும் காணலாம். கண்ணாடியை மறைக்கும் வண்ணம் ஏழு நிறங்களைக் கொண்ட ஏழு திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. 

இந்தத் திரைகளை விலக்கி, கண்ணாடி யில் தெரியும் தீபத்தை தரிசிப்பதே ‘ஜோதி தரிசனம்’ எனப்படுகிறது. இந்த ஜோதி தரிசனத்தை 1872-ம் ஆண்டு தைப்பூசத்தன்று சத்தியஞான சபையில் வள்ள லார் தொடங்கி வைத்தார். அது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தைப்பூசத்தன்று மட்டுமே ஏழு திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனத்தை காணலாம். மற்ற மாதங்களில் வரும் பூச நட்சத்திர நாளன்று ஆறு திரைகள் மட்டுமே விலக்கப்படும்.  அதன்படி இன்று காலை 6 மணிக்கு 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *