Rishabam Ragu Kedhu Peyarchi palangal

ரிஷப ராசி அன்பர்களே, 
ராகு உங்கள் ராசியிலேயே சஞ்சாரம் செய்வதன் பலன்! 
ராகு பகவான், இப்பொழுது, உங்களது ராசியான ரிஷப ராசிக்கே பெயர்ச்சி ஆகிறார். இது, உங்கள் முதலாவது வீடாகும். பொதுவாக இது, அணுகுமுறை, நடத்தை என இரண்டிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய காலமாக இருக்கும். பிறரை ஏமாற்றும் விதத்தில் நடந்து கொள்ளவும், நண்பர்கள், சமுதாயம், குடும்பம், தொழில்துறை சகாக்கள் போன்றவர்கள் மத்தியில் பெயர், புகழ் பெறுவதற்காக நேர்மையற்ற முறையில் செயல்படவும் தூண்டும் எண்ணங்களுக்குப்  பலியாகாமல் நீங்கள் இருப்பது அவசியம். 

உங்கள் உடல்நிலை, மனநிலை ஆகியவற்றை நன்கு கவனித்துக் கொள்வதும் நன்மை தரும். ஆரோக்கியத்தைப் பொருத்தவரை, உங்களில் சிலர், தலைப் பகுதி அல்லது அதிலுள்ள உறுப்புகள் ஆகியவை குறித்து, சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கலாம். எனினும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதிலும், புதிய சூழ்நிலைகளைச் சமாளிப்பதிலும் இப்பொழுது உங்கள் திறமை பளிச்சிடும். மேலும், உலகம் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய உங்கள் விழிப்புணர்வை நீங்கள் மேம்படுத்திக் கொண்டால் இந்தப் பெயர்ச்சி காலத்தில் உங்கள் அறிவாற்றல் மேலும் வளரும். 

ஆனால், உங்களில் சிலருக்கு சற்றே அகங்கார உணர்வு தலை தூக்கும் வாய்ப்புள்ளது. இது உங்கள் பலவீனத்திற்கும், துக்கத்திற்கும் காரணமாக அமையக் கூடும். எனவே எச்சரிக்கை தேவை. மொத்தத்தில் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது.

கேது உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

கேது பகவான், இப்பொழுது, உங்களது ராசியான ரிஷபத்திற்கு ஏழாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அவர், அங்கு சஞ்சாரம் செய்யும் இந்தக் கால கட்டம் மகிழ்ச்சியான மற்றும் இணக்கமான உறவைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நேரமாக இருக்கும். குறிப்பாக உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவைப் பேண வேண்டியது அவசியம். 

நீங்கள் உங்கள் துணையுடன் தேவையற்ற வாக்கு வாதத்தில் ஈடுபடும் வாய்ய்புள்ளது. ‘நான் செய்வதே சரி’ போன்ற தேவையற்ற விவாதங்கள் செய்து, உங்கள் வலிமையை நிரூபிக்கவும் நீங்கள் முயலக் கூடும். ஆனால் இதற்காக முடிவில் நீங்கள் வருத்தப்பட நேரிடும். எனவே, உங்கள் கணவர் அல்லது மனைவியுடனான பிரச்சினைகளை முடிந்தவரை இணக்கமாகத் தீர்க்க முயற்சி செய்வது பலவகையிலும் நன்மை தரும். இந்த நேரத்தில் அமைதியாகச் செயல்படுவதும் நல்ல பலனளிக்கும். தொழில் துறையில் உள்ள ரிஷப ராசி அன்பர்களுக்கு ஒரு எச்சரிக்கை! நீங்களும், உங்கள் தொழில் கூட்டாளியும் மேற்கொள்ளும் அனைத்து பரிவர்த்தனைகளிலும் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

 உங்கள் இருவருக்கும் இடையேயான இணக்கமான நல்லுறவை நீங்கள் மேம்படுத்திக் கொள்ளும் தேவையும் உள்ளது. அயல்நாடுகளிலோ அல்லது வெளிநாட்டு வியாபார முயற்சிகளிலோ இப்பொழுது நீங்கள் அதிக நற்பலன்களை எதிர்பார்க்க இயலாது. மேலும், இந்தக் காலக் கட்டத்தில் நீங்கள் எது சரி, எது தவறு என்பதை நன்கு பகுத்தறிந்து செயல்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது. 


நாகை சுந்தர மூர்த்தி, சோதிட ஆய்வாளர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *