Papanaasanathar Koyil

நெல்லை மாவட்ட கோயில்கள்

பாபநாசநாதர் கோயில்

திருநெல்வேலியிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் இறைவன் பாபநாசநாதர், இறைவி உலகம்மை ஆவர். 

கோயிலின் அனைத்துக் கருவறைகளயும் உள்ளடக்கியவாறு கோயிலைச் சுற்றிக் கருங்கல் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. சாளுக்கிய பாண்டியர்களால் கட்டப்பட்ட இக்கோயில் பின்னர் 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்களாலும் நாயக்கர் அரசர்களாலும் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாயக்கர் காலக் கலைப்பாணியிலான சிற்பங்கள் இக்கோயிலில் காணப்படுகின்றன.

இந்து சமயப் புராண வரலாற்றின்படி, இறைவன் சிவனுக்கும் பார்வதிக்கும் கயிலை மலையில் நடந்த திருமணத்தை அகத்தியர் காண முடியாமல் போனது. அகத்தியர்,  இறைவனின் திருமணக் கோலத்தைக் காண விரும்பி  அவனை வேண்டினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் அகத்தியருக்கும் லோபமுத்திரைக்கும் இத்தலத்தில் இறைவன் தன் இறைவியுடன் திருமணக் கோலத்தில் காட்சியளித்தார். இக்கோயிலுக்கு அருகிலுள்ள அருவி அகத்தியர் அருவி என அழைக்கப்படுகிறது. 

இந்தக் கோயிலின் நுழைவாயில் கோபுரம் ஏழடுக்குகள் கொண்டதாகும். கோயிலின் முதன்மைக் கடவுளாக பாபநாசநாதர் லிங்க வடிவிலுள்ளார். இறைவி உலகம்மையின் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையின் வெளிச்சுவற்றில் விநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவகோள்கள் ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொடிமரத்தை அடுத்துள்ள சிறுகோயிலில் யாளிகளைமைந்த தூண்களைக் கொண்ட மண்டபத்தில் நடராசர் உள்ளார். 

இங்கு ஆனந்த தாண்டவ கோலத்தில் காணப்படும் நடராசர் புனுகு சபாபதி என அழைக்கப்படுகிறார்.  இக்கோயில் குளம் பாபநாச தீர்த்தம் எனப்படுகிறது. மேலும் அகத்திய தீர்த்தமும் கல்யாணி தீர்த்தமும் இக்கோயிலைச் சேர்ந்தவையாகும். 
மதுரை நாயக்க வம்சத்தைச் சேர்ந்த, வீரப்ப நாயக்கரால் (கிபி1609-23), யாகசாலை, கொடிமரம், நடராசர் மண்டபம் கட்டப்பட்டன. தற்காலத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறையால் இக்கோயில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலியிலிருந்து இந்த கோயில் அமைந்துள்ள பாபநாசம்  சென்றுவர நல்ல போக்குவரத்து வசதிகள் இருக்கின்றன.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *