Tag: Vinayakar

  • Navagraga vinayakar

    செங்கல்பட்டு படாளம் கூட்ரோடு வழியாக வேடந்தாங்கல் செல்லும் வழியில் அமைந்துள்ளது ஸ்ரீ அம்ருதபுரி ராமானுஜ யோகவனம் என்கிற தியான மண்டபம். இங்கு அபூர்வமான கஜகேசரியோகம் கொடுக்கக்கூடிய நலம் தரும் நவக்கிரக விநாயகர் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    சுமார் 12 அடி உயரத்தில் உள்ள ஸ்ரீ விநாயகப் பெருமானை, அவரது திருமேனியில் முன்புறம் அமைந்துள்ள நவக்கிரகங்களுடன் தரிசனம் செய்யலாம். விநாயகரின் பின்புறம் யோக நரசிம்மரை சேவிக்கலாம்.
     
    இந்த நவக்கிரக விநாயகர் தரிசனம், அனைத்துவிதமான தோஷங்களையும் நீக்கி வாழ்வில் நலன்கள் தரவல்லது. இங்கு விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
     

  • Vinayakar chadurthi Festival

    விநாயகர் சதுர்த்தி நாள் விநாயகருக்கு மிகவும் விசேஷமான நாள்! இந்நாள் அன்று, பின்வருவதைக் கடைபிடிப்பது சிறப்பு…

    அதிகாலையில் குளித்து, வாசலில் மாவிலைத் தோரணத்தைக் கட்டி, வீட்டை மற்றும் பூஜை அறையைச் சுத்தம் செய்ய வேண்டும்.

    இந்த நாள் அன்று காலையில் இருந்து விரதம் மேற்கொள்வது சிறப்பு.

    பூஜை அறையில் ஒரு சிறிய கோலம் போட்டு, அதன் மேல் தலை வாழை இலையை வைத்து, இலையில் பச்சரிசியை பரப்பி வைக்க வேண்டும்.

    அந்த இலையில் களிமண்ணாலான விநாயகரை வைத்து, அவரைப் பலவகை புஷ்பங்கள் மற்றும் அறுகம்புல் மாலையினால் அலங்கரிக்க வேண்டும்.

    அதன் பிறகு, அவருக்குப் பழங்களைப் படைத்து, அதனுடன் அவர் விரும்பும் மோதகம், எள்ளுருண்டை, கொழுக்கட்டை, நெய்வேத்தியம், பாயாசம் போன்ற பலகாரங்களைச் செய்து படைக்க வேண்டும்.

    விநாயகரின் பாடல்களைப் பாடி வணங்கி, உங்களது விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

    இறுதியாக, களிமண்ணால் செய்யப் பட்ட இந்த விநாயகரை ஏதாவது நீர்நிலையில் கொண்டுபோய் கரைப்பது வழக்கம்.
     

  • Vinayakar Chadurthi Special

    ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை 'விநாயகர் சதுர்த்தி' என்று அழைக்கின்றோம். அன்றைய தினம் நாம் விரதமிருந்து முறையாக விநாயகரை வழிபட்டு அருகிலிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு அவரைக் கொண்டாடினால், நமக்கு எல்லா விதமான நன்மைகளும் விளையும் என்பது ஐதீகம். 

    கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை கணபதி என்று சொல்கின்றோம். எனவே, அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப் பெருமானாகும்.

    எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத் தான் நாம் தொடங்குவது வழக்கம். 'பிள்ளையார் சுழி' போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. எனவேதான் 'மூல கணபதி' என்று அவரை நாம் வர்ணிக்கின்றோம்.

    அந்த ஆனைமுகனுக்கு உகந்த மாதம் தான் ஆவணி மாதம். அந்த திருநாள்ஆவணி மாதம் 20ம் தேதி திங்கள் கிழமை (05.09.2016) அன்று வருகிறது. அன்றைய தினம் பிள்ளையாரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

    வீட்டிலும் சிலை வைத்து வழிபாடு செய்யலாம். விக்ரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்கும் சென்று வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை முழு நம்பிக்கையோடு நாம் வழிபட்டால், இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும்.
     

  • Vinayakar Chidurthi poritha modhagam

    தேவையான பொருட்கள்:
    கோதுமை மாவு – 2 கிண்ணம்
    மைதா மாவு – 1/2 கிண்ணம்
    நாட்டுச்சர்க்கரை – 1 கிண்ணம்
    தேங்காய் – 1 கிண்ணம் (துருவியது)
    ஏலக்காய்ப் பொடி – 1 தேக்கரண்டி

    நெய் – தேவையான அளவு

    எண்ணெய் – தேவையான அளவு (பொரிப்பதற்கு)

    செய்முறை:  

    முதலில் கோதுமை மாவு மற்றும் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, வெதுவெதுப்பான நீர் மற்றும் நெய் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து. 15-20 நிமிடம் ஊற விடவும்.

    பின்னர்,  வாணலியில் சிறிது நெய்விட்டு காய்ந்ததும்,  தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.  பின்பு ஒரு கிண்ணத்தில் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய்  மற்றும் வதக்கி வைத்துள்ள தேங்காயைப் போட்டு, கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.  அடுத்த படியாகப் பிசைந்து வைத்துள்ள மாவைச் சிறு சிறு உருண்டைகளாக்கி, கையால் தட்டையாக தட்டி,  அதன் நடுவே தேங்காய் கலவையை சிறிது வைத்து  உருட்டி மேலே குமிழ்ப் போன்று வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.

    பிறகு,  வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.  சுவையான பொரித்த  மோதகம் தயார்.
     

  • Vinayakar pattriya Ariya kurippugal

    காரைக்கால் அம்மையார் வேண்டுகோளுக்கு ஏற்ப இறைவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடிய ஸ்தலம் சென்னை அருகேயுள்ள திருவாலங்காடு. இந்த ஆலயத்தில் சித்தி விநாயகரைத் தரிசிக்கலாம்.

    பூஜையின் முதல் வணக்கம் விநாயகப் பெருமானுக்குத்தான். இது தேவர், மனிதர் உட்பட அனைவருக்கும் பொருந்தும், விநாயகரை நினைக்காமல் செய்யும் எந்த பூஜைகளும், காரியங்களும் பலன் தராது.

    மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுள்ள முக்குறுணிப் பிள்ளையாரும், நெல்லையப்பர் கோயிலில் உள்ள பிள்ளையாரும் மிகப் பெரியன.

    திருவாரூர் கோயிலுள்ள, ஐங்கலக் காசு விநாயகர் முழுக்க தங்கத்தால் உருவானவர். அழகிய சோழ மன்னன் தந்த ஐந்து காலம் பொற்காசுகளை வைத்து உருவாக்கப்பட்டது இந்தத் தங்க விநாயகர் சிலை.

    சுசீந்திரம் கோயிலில் விக்னேஸ்வரி என்ற பெண் உருவில் விநாயகர் சிலை உள்ளது.
     
    மாணிக்கவாசகர் ஸ்தலமான ஆவுடையார் கோவில் குளக்கரையில் வல்லபையுடன், பத்துக் கரங்களுடன் வல்லபை விநாயகராகக் காட்சி தருகிறார்.

  • Vinayakar Statue Video

    நாடு முழுவதும் செப்டம்பர் 2 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் விற்பனை அதிகரித்துள்ளது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. பல இடங்களில் ஆர்டரின் பேரில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி முடிவடைந்து அவற்றை வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

     ஆர்டரின் பேரில் சிறிய மற்றும் பெரிய சிலைகள் தயார் செய்யப்பட்டு தற்போது, அந்த சிலைகள் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறைந்தது 3 அடி முதல் அதிக பட்சமாக 12 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
     

  • Vinayakar koil Ganapathy Homam

    அரக்கோணத்தில் ஸ்ரீ வரசித்தி வினாயகர் ஆலயத்தில் ஆடி பூரத்தை முன்னிட்டு ஸ்ரீ வாஞ்ச கல்ப லதா கணபதி ஹோமம் மஹா சண்டியாக விழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது..

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் ஸ்ரீபகவான் மகாவீரர் தெருவில்  அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி வினாயகர் ஆலயத்தில் ஆடி பூரத்தை முன்னிட்டு ஸ்ரீ வாஞ்ச கல்ப லதா கணபதி ஹோமம் மஹா சண்டியாக விழா வெகு விமற்சையாக நடைபெற்றது. 

    இதில் உலக அமைதிக்காகவும்  மழை வேண்டியும்  பூஜைகள் செய்யப்பட்டது.வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழுங்க சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
     

  • Vinayakar Thudhi

    விநாயகர் – பாலும் தெளிதேனும் 

    பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
    இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்
    கோலம் செய்துங்க  கரிமுகத்து தூமணியே
    நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா!

    பொருள்:

    பாலையும், கலப்படம் அற்ற தெளிந்த தேனையும், சர்க்கரை கலந்த பாகையும், வேகவைத்த கடலை பருப்பையும் கலந்து ஒரு சுவையான உனக்கு நான்  நைவேத்தியமாக படைக்கிறேன்.
    கோலமிகுந்த (அழகு மிகுந்த) துங்க  (துதிக்கை அமைந்த) கரிமுகத்து (யானை முகம் படைத்த) தூய்மையான மணி போன்ற பொக்கிஷமே! நீ எனக்கு இயல், இசை, நாடகம் என முப்பரிமாணத்தில் மிளிரும் தமிழ் மொழியை அருள்வாயாக !
     

  • Vinayakarai Vazhi padum pothu

    விநாயகரை விழிபடும் போது தலையில் குட்டிக்கொள்வது ஏன் என்பது தெரியுமா?

    அகத்தியர் வடநாட்டில் இருந்து தென்இந்திய நாட்டிற்கு வந்து கொண்டிருந்த போது அவர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதி நீரை காகம் வடிவில் வந்து விநாயகர் கவிழ்த்தார்.

    பின்னர் அந்தணச் சிறுவன் வடிவில் விநாயகர் அகத்தியர் முன் வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார்.

    அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மை காக்க காவிரியை உருவாக்க அப்படி செய்ததாகக் கூறினார்.

    தன் தவறுக்கு வருந்திய அகத்தியர் தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். அன்று முதல் விநாயகர் வழிப்பாட்டில் தலையில் குட்டிக்கொள்ளும் வழக்கம் வந்தது.

    நெற்றியின் இரு பொட்டுகளிலும் குட்டிக்கொள்வதால் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி நன்கு சுரக்கும்.
     

  • Vinayakarai Vaithu vananga Vendiya Disai

    அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் முதன்மையாக இருக்கும் விநாயகரை நாம் மங்கலகரமான விழாக்களின் போது பெரும்பாலும் வீட்டில் ஹால் அல்லது பூஜை அறையில் வைத்து தான் வணாங்குவோம்.

    விநாயகரை வாஸ்து சாஸ்திரத்தின்படி வைத்து வணங்கினால் அவரின் அருள் கிடைக்கும். செல்வம் பெருகும். விநாயகரின் தும்பிக்கையானது எப்போதும் இடதுபுறமுள்ள அவரின் தாயார் கௌரியை பார்த்த வண்ணமே இருக்க வேண்டும்.

    விநாயகரின் பின்புறமானது வீட்டின் எந்த ஒரு அறையினையும் பார்த்தப்படி இருக்கக்கூடாது. ஏனெனில் அவரின் பின்புறம் வறுமையினை குறிக்கும் என்பதால் வீட்டின் வெளிப்புறத்தினை பார்த்தப்படி தான் இருக்க வேண்டும்.

    தென்புற திசையில் விநாயகரை வைத்து வணங்க கூடாது. கிழக்கு அல்லது மேற்கு புறமாக தான் வைத்து வணங்கவேண்டும். கழிவறையுடன் இணைக்கப்பட்டுள்ள சுவரை நோக்கி விநாயகரை வைக்கக்கூடாது. அதே போன்று அந்த சுவரில் சாய்த்தும் வைக்கக்கூடாது.

    உலோகத்தில் செய்யப்பட்ட விநாயகர் என்றால் கிழக்கு அல்லது மேற்கு திசையினை பார்த்து வைத்து வணங்கவேண்டும். வடகிழக்கு மூலையில் வைத்து வணங்குவது இன்னும் சிறப்பான பலனை தரும்.

    வீட்டிற்குள்ளாக மாடிப்படி இருந்தால் அதற்கு அடியில் விநாயகரை வைக்கக்கூடாது. ஏனெனில் மாடிப்படிகளில் ஏறி நடப்பது அவரின் தலை மீது ஏறி நடப்பதை போன்றதாகும். இது துரதிர்ஷ்டத்தினை ஏற்படுத்தும்.