Tag: Vinayakar

  • Vinayakar Chadurthi Viradha Nadaimurai

    அன்றைய தினம் விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைக்கலாம். பிறகு, பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மணையை வைக்க வேண்டும்.

    அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.

    பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம். பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.

    அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம். அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம்.

    உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.

    பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம்.

    பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.

    இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.

    இத்தனை நாள் விரதத்துக்குப் பிறகுதான் பிள்ளையாரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் போடுவது வழக்கம். பதினைந்து நாள் அனுசரித்தாலும் சரி, விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும் அனுசரித்தாலும் சரி, மேற்கொள்ளும் விரதத்தை உளப்பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் முக்கியம்.

    வருடத்திற்கு ஒருமுறை இப்படி விநாயகர் சதுர்த்தி அனுசரிப்பதுபோல மாதந்தோறும் பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளிலும் விரதம் இருப்பது சிலருடைய வழக்கம். அன்றைக்கு முழுவதும் பட்டினி இருந்து, விநாயகர் சிலை அல்லது படத்துக்கு முன்னால் தீபமேற்றி, விநாயகர் பாடல்கள், ஸ்தோத்திரங்களை பாடி, மாலையில் கொழுக்கட்டை நைவேத்யம் செய்து, பிறகு சந்திர தரிசனம் செய்துவிட்டு எளிமையான உணவை எடுத்துக்கொண்டு விரதத்தை முடிப்பதும் சிலர் வழக்கம்.

    இந்த விரதங்களால் உள்ளம் மேன்மைஅடையும்; உடல் ஆரோக்கியம் வளரும்; எல்லா வளங்களும் நிறையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன எல்லாம் அருள்வார்.

  • Vinayakar Temple viswakarma jayanthi

    கரூரில் உள்ள விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்து. ஸ்ரீ விஸ்வகர்மா தொழில் கடவுளாக அனைவராலும் பூஜிக்கப்பட்டு வருகிறார்.

    இந்தியா முழுவதும் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.  கரூரில் தேர்வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோயிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு விஸ்வகர்மா ஜெயந்தி திருநாள் காரணமாக விஸ்வகர்மா ஹோமம், கணபதி ஹோமம், பஞ்சபிரம்ம ஹோமம், நவக்கிரக ஹோமம், காயத்ரி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் போன்றவை நடத்தப்பட்டன.

    அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், அரிசி மாவு, கரும்பு சாறு, பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சுவாமிகளுக்கு தீபாராதனை கும்பா ஆரத்தி, கற்பூர ஆரத்தி,மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

    இந்த சிறப்பு நிகழ்ச்சியானது விஷ்வகர்மா சித்தி விநாயகர் அறக்கட்டளை தலைவர் கருப்புசாமி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

  • Vinayakar muzhu mudhal kadavul

    முதல் கடவுள் என்றால் முதலில் தோன்றிய அல்லது முதலில் வணங்க வேண்டிய கடவுள் என்று பொருள் கொள்ளலாம். எதற்கு முழு முதல் கடவுள் என்று அழைக்க வேண்டும்?! இதில் தான் விநாயகர், ஆனைமுகத்தோன், பிள்ளையார் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் விண்ணின் நாயகனான தலைவனின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

    இவரைக் காண நாம் பல கிலோ மீட்டர் தொலைவு சென்று வணங்க வேண்டியதில்லை. தெரு முனைகளில் மரத்தடியின் கீழ் கருணையுடன் நமக்காகக் காத்திருப்பார். குறிப்பாக அரச மரத்தடியின் கீழ் அமர்ந்திருப்பார். படிப்பு நல்லா வரனுமா? குழந்தை வரம் வேணுமா ? காரியத் தடைகள் உடையனுமா ?  108 குடம் தண்ணீர் எடுத்து விநாயகர் சிலைக்கு ஊற்று. அரச மரத்தை 108 சுத்து சுத்து முடியலைன்னா 3 சுத்தாவது சுத்து என்று நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

    இப்படித் தண்ணீர் குடம் குடமா அந்தக் கல் சிலை மேல ஊத்தி, மரத்தை சுத்தினா குழந்தை வரம் எப்படிக் கிடைக்கும் ? சுத்தப் பேத்தல், மூடநம்பிக்கைன்னு  நம்மில் பலர் நினைக்கக் கூடும். ஆனா, ஆறு அல்லது குளத்தில் இருந்து தண்ணீரைக் குடத்தில் எடுத்துக் கொண்டு நடந்து வந்து நடந்து வந்து விநாயகர் சிலை மீது ஊற்றுவது உடல் பயிற்சி. மூச்சு மேலும் கீழும் வாங்கும். கெஸ் வாங்குதுன்னு சொல்வாங்க இல்ல, அது போல இப்படி மூச்சை அதிக அளவில் நாம் நுரையீரலுக்குள் செலுத்துகிறோம். அதுவும் அரச மரத்தினடியில். அரச மரம் Oxygen எனும் (ஆக்சிஜன்) பிராணக் காற்றை அதிகம் வெளியிடக்கூடிய ஒரு மரம். இதனால் நாம் அதிக அளவில் ஆக்சிஜனை நம் உடலுக்குள் அனுப்புகிறோம்.

    இதனால் மூளை தொடங்கி கால் பாதம் வரை தூய்மையான ஆக்சிஜன் சென்று சேரும். உடலும், உள்ளமும் உறுதியும், புத்துணர்வும் பெறும். மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் கல்வி கற்கத் தேவையான ஞாபக சக்தியைத் தரும். குழந்தை வரம் வேண்டுபவருக்கு மூச்சின் சுவாச முறைகளை ஒழுங்கு படுத்தி உடல் உள்ளத்தினை வளப்படுத்தும்.

    உண்மையைக் கூறினால் மூச்சுப் பயிற்சியின் ஒரு அங்கம்தான் இந்த விநாயகர் – அரசமரம் – தண்ணீர் – சுற்றுதல் – வணங்குதல் எல்லாம். உணவு தண்ணீர் இல்லாம ஒரு குறிப்பிட்ட காலம் இருக்க முடியும். ஆனால் மூச்சு விடாம 5 நிமிடங்கள் கூடத் தாக்குப் பிடிக்காது. உயிர் ஆட்டம் காட்டிடும். அதனால்தான் மூச்சு எனும் முழுமுதல் கடவுளாகிய விநாயகனை வணங்குகிறோம். வணங்கி நல்ல மூச்சு, நல்ல புத்தி, நல்ல உடல், மன நலம் கொடுன்னு வேண்டுறோம்.

    விநாயகரை முதலில் வணங்கித்தான் பல சித்தர்களின் பாடல்களே தொடங்குகின்றன. ஒளவையாரின் விநாயகர் அகவல் வெறும் மூச்சுக் காற்றின் கடவுளைப் பற்றியது மட்டுமல்ல பேரண்டத்தின் பெரும் பொருளைப் பற்றிய இரகசியங்களை உணரும் ஒரு பெரிய ஃபார்மூலா அது.

    விநாயகர்னா சும்மா இல்ல. ஒரு கட்டத்துக்குப் பிறகு உருவ வழிபாடே தேவையில்லைன்னு அறிவுறுத்திய இராமலிங்க வள்ளல் பெருமானார் தொடக்கத்தில் நிறைய பாடல்கள் விநாயகரைப் பற்றி எழுதியிருக்கார் தெரியுமா? அவ்வளவு சிறப்பு வாய்ந்தவர் ஆனைமுகத்தோன்.

    சித்தர் பெருமான் திருமூலர் எழுதிய பாடல்தான்

    ஐந்து கரத்தனை யானை முகத்தனை
    இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
    நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
    புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

    எனும் பிரபலமான பாடல்.

    இராமலிங்க வள்ளலார் பெருமானார்

    அஞ்சுமுகத் தான்மகன்மால் அஞ்சுமுகத் தான்அருள்வான்
    அஞ்சுமுகத் தான்அஞ் சணிகரத்தான் – அஞ்சுமுக
    வஞ்சரையான் காணா வகைவதைத்தான் ஓர்அரையோ
    டஞ்சரையான் கண்கள் அவை. என்றும்

    உலகெலாம் தழைப்ப அருள்மத அருவி ஒழுகுமா முகமும்ஐங் கரமும்
    இலகுசெம் மேனிக் காட்சியும் இரண்டோ டிரண்டென ஓங்குதிண் தோளும்
    திலகவாள் நுதலார் சித்திபுத் திகளைச் சேர்த்தணைத் திடும்இரு மருங்கும்
    விலகுறா தெளியேன் விழைந்தனன் சித்தி விநாயக விக்கினேச் சுரனே.

    என்றும் மெய்யியல், இறையியல், மெய்ஞானம் ததும்பும் பாடல்களை இயற்றியுள்ளார்.

    விநாயகரை மறப்பது மூச்சுக் காற்றை மறப்பது போன்றது. மறவாமல் ஆனைமுகவனை வணங்கி வருவோம். ஏனெனில் இறைப் பெருநிலை அடைய அவர்தான் "முதல்" படி. முழு முதல் கடவுள்.

    – வளர்மெய்யறிவான் (எ) விஷ்வா விஸ்வநாத்

     

  • Vinayakar peruman ariya kurippugal

    மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுள்ள முக்குறுணிப் பிள்ளையாரும், நெல்லையப்பர் கோயிலில் உள்ள பிள்ளையாரும் மிகப் பெரியன.

    சுசீந்திரம் கோயிலில் விக்னேஸ்வரி என்ற பெண் உருவில் விநாயகர் சிலை உள்ளது.

    காரைக்கால் அம்மையார் வேண்டுகோளுக்கு ஏற்ப இறைவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடிய ஸ்தலம் சென்னை அருகேயுள்ள திருவாலங்காடு. இந்த ஆலயத்தில் சித்தி விநாயகரைத் தரிசிக்கலாம்.

    பூஜையின் முதல் வணக்கம் விநாயகப் பெருமானுக்குத்தான். இது தேவர், மனிதர் உட்பட அனைவருக்கும் பொருந்தும், விநாயகரை நினைக்காமல் செய்யும் எந்த பூஜைகளும், காரியங்களும் பலன் தராது.

    மாணிக்கவாசகர் ஸ்தலமான ஆவுடையார் கோவில் குளக்கரையில் வல்லபையுடன், பத்துக் கரங்களுடன் வல்லபை விநாயகராகக் காட்சி தருகிறார்.

    திருவாரூர் கோயிலுள்ள, ஐங்கலக் காசு விநாயகர் முழுக்க தங்கத்தால் உருவானவர். அழகிய சோழ மன்னன் தந்த ஐந்து காலம் பொற்காசுகளை வைத்து உருவாக்கப்பட்டது இந்தத் தங்க விநாயகர் சிலை.

  • vinayakar arul tharum sangadahara chadurthi

    முன்பு ஒரு காலத்தில் பிரம்மன், சிவபெருமானை தரிசிக்க திருக்கயிலாயத்திற்கு சென்றார். அப்போது நாரதர் அங்கே ஒரு கனியுடன் வந்திருந்தார். அந்த தெய்வீகக் கனியை முருகனுக்கு கொடுக்கும் படி பிரம்மதேவன் சிவபெருமானிடம் கூறினார்.

    சிவனும் அந்தப் பழத்தை முருகனிடம் வழங்கினார். இதைப்பார்த்த மூத்த பிள்ளையான விநாயகருக்கு எரிச்சல் வந்தது. அவர் பிரம்மதேவனை கோபத்துடன் பார்த்தார். விநாயகரின் கோப பார்வை பிரம்மனை அஞ்சி நடுங்கச் செய்தது. தன் தவறை உணர்ந்த பிரம்மன், விநாயகரை நோக்கி, முழு முதற்பெருமானே, என் பிழையை பொருத்தருள வேண்டும் என்று சொல்லி இரு கரம் குவித்து, தலை தாழ்த்தி உடம்பை குறுக்கிக் கொண்டு பணிந்து நின்றார்.

    இக்காட்சியை அங்கு இருந்த சந்திரன் பார்த்தான். முனிவர்கள், ரிஷிகள் பெரியோர்கள் கூடியுள்ள இடத்தில் பிரம்மனை பார்த்து, இகழ்ச்சியுடன் சிரித்த சந்திரனின் மீது விநாயகர் கோபப்பார்வை திரும்பியது. அவர் சந்திரனை பார்த்து, ‘பெரியோர்கள் கூடியுள்ள சபையில், அடக்கமின்றி சிரித்த சந்திரனே! உன் பிரகாசம் உலகில் எங்கும் இல்லாமல் போகக்கடவது. உன் பிரகாசம் யார் கண்களுக்கும் புலப்படாமல் மறைந்து போகட்டும்’ என்று சபித்தார். அப்போதே வானத்தில் சந்திரன் இல்லாமல் போனது. பவுர்ணமி பூஜை, அமாவாசை திதி எதுவும் நடைபெறவில்லை.

    நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த இந்திரனும், தேவர்களும், சந்திரனுக்கு சாப விமோசனம் அளிக்குமாறு விநாயகரை வேண்டினர். கருணைக்கடவுளான விநாயகர் மனம் மகிழ்ந்து ‘வருடத்தில் ஆவணி மாத சதுர்த்தியன்று சந்திரனை பார்ப்பவர்கள் துன்பப்படுவார்கள்’ என்று கூறி சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை குறைத்து விட்டார். மேலும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியன்று விரதம் இருந்து தம்மை வழிபடுபவர்களின் சங்கடங்களை எல்லாம் நான் நிவர்த்தி செய்வேன். அவர்கள் புண்ணிய பேறுகளை அடைவர் என்றும் திருவருள் புரிந்தார்.

    இதைக்கேட்ட சந்திரன் தன் தவறை உணர்ந்து விநாயகரை குறித்து கடும் தவம் இருந்தான். அவனது தவத்துக்கு மனம் மகிழ்ந்த விநாயகர் அவனுக்கு அருள்புரிந்து வளரும் வரத்தை கொடுத்தார். அவ்வாறு சந்திரன் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி தினமாகும். ஆகவே சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்ததானது. வளர்பிறை சதுர்த்தி திதியை பார்த்தால் தீங்கு விளையும். பகவான் கிருஷ்ணர், செவ்வாய், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளை பெற்றனர். முற்பிறவியில் நாம் செய்த வினையின் பயனால், நமக்கு இப்பிறவியில் சங்கடங்கள் வரும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால், அவர் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி அளவில்லாத நன்மைகளையும் தருவார்.

  • Vinayakar Slogam

    வர கணபதி

    ஸிந்தூராபம் இபாநநம் த்ரிநயநம்
    ஹஸ்தே ச பாஸங்குஸௌ
    பிப்ராணம் மதுமத் கபாலம் அநிஸம்
    ஸாத்விந்து மௌலிம் பஜே
    புஷ்ட்யாஸ்லிஷ்டதநும் த்வஜாக்ர கரயா
    பத்மோல்லஸத்தஸ்தயா
    தத்யோந்யாஹித பாணிமாத்தவ வஸூமத்
    பாத்ரோலஸத் புஷ்கரம்

    செந்நிறத் திருமேனி, மூன்று கண்கள், பாசம், அங்குசம், தேன் கிண்ணம், கொடி உள்ள நான்கு கரங்கள், ஆகியவற்றுடன், சந்த்ரனைத் திருமுடியில் தரித்த வர கணபதியைத் துதிக்கிறேன். அவர் கொடியோடு கூடிய தாமரை உள்ள கரத்தால், தம் தேவியானவளைத்  தழுவி நிற்பவர். செல்வம் நிரம்பிய மின்னலென ஒளிரும் பாத்திரத்தைத் துதிக்கையில்  ஏந்தியவர்.

    த்ரயாக்ஷர கணபதி

    கஜேந்த்ரவதநம் ஸாக்ஷாச் சலாகர்ண ஸூசாமரம்
    ஹேமவர்ணம் சதுர்பாஹூம் பாஸாங்குஸதரம் வரம்
    ஸ்வதந்தம் தக்ஷிணே ஹஸ்தே ஸவ்யே த்வாம்ரபலம் கதா
    புஷ்கரே மோதகஞ்சைவ தாரயந்தம் அநுஸ்மரேத்

    யானை முகத்துடன், அசையும் காதுகளில் சாமரம் என்னும் அணிகள் மின்னும் பொன்னிற மேனியை உடையவரும், நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம்,   தந்தம், மாம்பழம் ஆகியவற்றைத் தரித்தவரும், துதிக்கையில் மோதகம் தாங்கியருளுபவருமான  த்ர்யாக்ஷர கணபதியைத் துதிக்கிறேன்.

    க்ஷிப்ர-ப்ரஸாத கணபதி

    த்ருதபாஸாங்குச கல்பலதாஸ் வரதஸ்ச பீஜபூரயுத:
    ஸஸிஸகல கலிதமௌளி: த்ரிலோசநோருணஸ்ச கஜவதந:
    பாஸூர பூஷணதீப்தோ ப்ருஹதுதர: பத்ம விஷ்டரோல்லஸித:
    விக்நபயோதரபவந: கரத்ருத கமலஸ்ஸதாஸ்து பூத்யை

    பாசம், அங்குசம், கற்பகக் கொடி, வரத முத்திரை, தாமரை, தர்ப்பை தாங்கிய ஆறு திருக்கரங்களுடன், துதிக்கையில் மாதுளையைத் தரித்தவரும்,, சந்த்ரன் ஒளி வீசும் திருமுடி(மௌலி)யுடன் கூடியவரும் , முக்கண்ணரும், சிவந்த மேனியரும், ஆனை முகத்தவரும், ஒளிரும் ஆபரணங்கள் இலங்கும் பெருவயிறு  உடையவரும், பத்மாசனத்தில் இருப்பவரும், மேகத்தைத் தாக்கும் காற்றைப் போன்றவரும், தாமரையைக் கையில் தரித்தவரும், (பிரார்த்தித்த) உடனே வந்து செல்வங்களருளும் க்ஷிப்ர ப்ரஸாத கணபதியைத் துதிக்கிறேன்.

    உத்தண்ட கணபதி

    கல்ஹாராம்புஜ பீஜபூரக கதா
    தந்தேக்ஷூ பாணைஸ்ஸதா
    பிப்ராணோமணி கும்பஸாலி கலஸோ
    பாஸஞ்ச சக்ராந்விதம்
    கௌராங்க்யா ருசிராரவிந்த கரயா
    தேவ்யாஸ் ஸதாஸம்யுத:
    ஸோணாங்கஸ் ஸூபமாதநோது பஜதாம்
    உத்தண்ட விக்நேஸ்வர:

    நீலோத்பலம், தாமரை, மாதுளை, கதை, தந்தம், கரும்பு, வில், நெற்கதிர், கலசம், பாசம், அம்பு ஆகியவற்றைக் கரங்களில் தரித்தவரும், கைகளில், தாமரை மலரைத் தாங்கி நிற்கும் பச்சை வண்ண தேவியுடன் எப்போதும் இருப்பவரும், மங்களங்கள் அருளுபவருமான  உத்தண்ட கணபதியைத் துதிக்கிறேன்.

    திரிமுக கணபதி

    ஸ்ரீமத்தீக்ஷ்ண ஸிகாங்குஸாக்ஷவரதாம்
    தக்ஷே ததாந: கரை:
    பாஸாம்ருத பூர்ணகும்ப-மபயம்
    வாமே ததாநோ முதா
    பீடே ஸ்வர்ணமயாரவிந்த விலஸத்
    ஸத்கர்ணிகா பாஸூரே
    ஆஸீநஸ்த்ரிமுக: பலாஸருசிரோ
    நாகாநந: பாதுந:

    கூர்மையான அங்குசம், அக்கமாலை, வரதமுத்திரை ஆகியவை மூன்று வலக்கரங்களில் ஒளிவீச,  பாசம், அமுத கலசம், அபயம் இடக்கரங்களில் மின்ன, அழகான கர்ணிகையுடன் ஒளி வீசும் தங்க மயமான தாமரைப்பீடத்துடன் கூடியவரான‌, செந்நிறத் திருமேனியும், மூன்று முகங்களும் உடையவரான மும்முக கணபதி என்னைக் காப்பாற்றுவராக.

    ஸிம்ஹ கணபதி

    வீணாம் கல்பலதாம் அரிஞ்ச வரதம்
    தக்ஷே விதத்தே கரை:
    வாமே தாமரஸஞ்ச ரத்நகலசம்
    ஸந்மஞ்ஜரீ சாபயம்
    ஸூண்டாதண்டலஸந் ம்ருகேந்த்ரவதந:
    ஸங்கேந்துகௌர: ஸூப:
    தீவ்யத் ரத்ந நிபாம்ஸூகோ கணபதி:
    பாயாதபாயாத் ஸந:

    வீணை, கற்பகக்கொடி, ஸிம்ஹம், வரதம் ஆகியவை வலக்கரங்களிலும், தாமரை, ரத்ந கலசம், மலர்க்கொத்து, அபய முத்திரை ஆகியவை இடக்கரங்களிலும் தாங்கி, தடி போன்ற துதிக்கையுடன் விளங்குகின்ற ம்ருகேந்த்ர முகம் கொண்ட, சங்கு போன்ற (வெண்ணிறமுடைய) சந்த்ரனைத் தரித்த, உயர்வான ரத்நம் போன்ற ப்ரகாசமான ஆடையை அணிந்தவரான‌ ஸிம்ஹ கணபதியை முறையோடு எப்போதும் துதிக்கிறேன்.

    துர்கா கணபதி

    தப்தகாஞ்சந ஸங்காஸஸ்ச
    அஷ்டஹஸ்தோ மஹத்தநு:
    தீப்தாங்குஸம் ஸரஞ்சாக்ஷம்
    தந்தம் தக்ஷேவஹந் கரை:
    வாமே பாஸம் கார்முகஞ்சலதாம்
    ஜம்பூத்யதத் கரை:
    ரக்தாம்ஸூகஸ்ஸதா பூயாத்
    துர்கா கணபதிர் முதே

    உருக்கிய  பொன் போன்ற திருமேனியும், எட்டு திருக்கரங்களுடன் பெரிய உருவமும் கொண்டு,  ஜ்வலிக்கின்ற அங்குசத்தையும், அம்பு, அக்ஷமாலை, தந்தம் ஆகியவற்றை வலக்கரங்களிலும், பாசம், வளைந்த வில், கற்பகக் கொடி, நாவற்பழம் ஆகியவற்றை இடக்கரங்களிலும் ஏந்திய செந்நிற ஆடை உடுத்தியுள்ள துர்கா கணபதியைத் துதிக்கிறேன்.

    ஸங்கடஹர கணபதி

    பாலார்காருண காந்திர் வாமே பாலாம் வஹந் நங்கே
    லஸதிந்தீவர ஹஸ்தாம் கௌராங்கீம் ரத்ந ஸோபாட்யாம்
    தக்ஷேSங்குஸ வரதாநம் வாமே பாஸஞ்ச பாயஸ பாத்ரம்
    நீலாம்ஸூகலஸமாந: பீடே பத்மாருணே திஷ்டந்
    ஸங்கடஹரண: பாயாத் ஸங்கடபூகாத் கஜாநநோ நித்யம்

    பால சூர்யன் போன்ற நிறத்துடன் கூடியவராக, நீல மலரைத் தாங்கியுள்ள பச்சை மேனியளான தேவி இடது தொடையில் அமர்ந்திருக்க,  வரதம், அங்குசம் ஆகியவை வலக்கரங்களிலும்,  பாசம், பாயஸ பாத்ரம் ஆகியவை இடக்கரங்களிலும் தாங்கி, நீல நிற ஆடை அணிந்து, தாமரைப் பீடத்தில் நின்ற திருக்கோலத்துடன் கூடியவராகக் காட்சி தந்து, ஸங்கடத்தின் போது எல்கள் தொடர்ந்து பெற்றிட நமது ஆன்மீக தகவல்கள் குழுவில் இனையுங்கள் . குழுவில் இனையப்போதும் தோன்றி அருளும் யானைமுகக் கடவுளைத் துதிக்கவும்.

     

  • Vinayakar slogam

    பால கணபதி
    கரஸ்த கதலீ சூத பநஸேக்ஷூக மோதகம்
    பால ஸூர்ய ப்ரபாகாரம் வந்தேஹம் பாலகணபதிம்

    தனது துதிக்கையோடு சேர்ந்த ஐந்து கரங்களில்,முறையே, மா, வாழை, கரும்பு, பலா, மோதகம் ஆகியவற்றைத் தாங்கியவரும், இளஞ்சூர்ய நிறத் திருமேனியை உடையவருமான, பால கணபதியை வந்தனம் செய்கிறேன்.

    பக்த கணபதி

    நாளிகேராம்ர கதலீ குளபாயஸ தாரிணம்
    ஸரச்சந்த்ராப வபுஷம் பஜே பக்த கணாதிபம்   

    தேங்காய், மாம்பழம், வாழைப்பழம், வெல்லத்தாலான பாயஸம் நிறைந்த கலசம் ஆகியவற்றைத் தாங்கியவரும், குளிர் காலத்தில் மிக வெண்மையாக ஒளிரும் நிலவை விஞ்சும் வெண்ணிறத் திருமேனியை உடையவருமான  பக்த கணபதியைத் துதிக்கிறேன்.

    ஸக்தி கணபதி

    ஆலிங்க்ய தேவீம் ஹரிதாம் நிஷண்ணம் பரஸ்பராஸ்லிஷ்ட கடெளநிவேஸ்ய
    ஸந்த்யாருணம் பாஸஸ்ருணிம் வஹந்தம் பயாபஹம் ஸக்தி கணேஸமீடே

    பச்சை நிறத்தவளான தேவியைப் பரஸ்பரம் ஆலிங்கனம் செய்த திருக்கோலத்துடன், மாலை நேரச் சூரியனின் இளமஞ்சள் நிறத் திருமேனியை உடையவரும், திருக்கரங்களில் பாசம், அங்குசம் ஆகியவற்றைத் தாங்கியவரும், (பக்தர்களின்) அச்சத்தைப் போக்குபவருமான ஸக்தி கணபதியை வணங்குகிறேன்.

    ஸித்தி கணபதி

    பக்வ சூத பலகல்ப மஞ்ஜரீ மிக்ஷூ தண்ட திலமோதகைஸ்ஸஹ
    உத்வஹத் பரஸூஹஸ்த தே நம: ஸ்ரீ ஸம்ருத்தியுத தேவ பிங்கல

    மாம்பழம், மலர்க்கொத்து, கரும்புத் துண்டு, எள்-கொழுக்கட்டை, பரசு ஆகியவற்றைக் கரங்களில் தாங்கிய, பசும்பொன் நிறத் திருமேனியை உடைய ஸ்ரீ ஸம்ருத்தி என்ற தேவியுடன் வீற்றிருக்கும் ஸித்தி கணபதியைத் துதிக்கிறேன்.

    உச்சிஷ்ட கணபதி

    நீலாப்ஜம் தாடிமீ வீணா ஸாலீ குஞ்ஜாக்ஷ ஸூத்ரகம்
    தததுச்சிஷ்ட நாமாயம் கணேஷ: பாது மோக்ஷத:

    சதுர்புஜம் ரக்ததநும் த்ரிநேத்ரம் பாஸாங்குசம் மோதகபாத்ர தந்தகம்
    கரை: ததாநம் ஸரஸீருஹஸ்தம் உந்மத்த-முச்சிஷ்ட கணேசமீடே

    நீலோற்பலம், மாதுளை, வீணை, நெற்கதிர், ருத்ராக்ஷமாலை இவற்றைத் தரித்தவரும், முத்தியளித்துக் காப்பவருமான உச்சிஷ்ட கணபதியின் பாதம் பணிகிறேன்.

    நான்கு  கரங்களை உடையவராகவும், அவற்றில் பாசம், அங்குசம், மோதக பாத்ரம், தந்தம் இவற்றைத் தரித்திருப்பவராகவும், செந்நிறமானத் திருமேனியும், முக்கண்ணும் உடையவராகவும், செந்தாமரைப் பூவிலே எழுந்தருளி இருப்பவராகவும், உந்மத்தராகவும் உள்ள உச்சிஷ்ட கணபதியை த்யானிக்கிறேன்.

    க்ஷிப்ர கணபதி

    தந்த கல்ப லதாபாஸ ரத்நகும்பாங்க குஸோஜ்வலம்
    பந்தூக கமநீயாபம் த்யாயேத் க்ஷிப்ரகணாதிபம்

    தந்தம், கற்பகக் கொடி,  பாசம், துதிக்கையில் இரத்தினத்தால் இழைத்த பொற்குடம், அங்குசம் இவற்றுடன், செம்பருத்தி மலர் நிறத்தில் பிரகாசமான திருமேனியை உடைய க்ஷிப்ரகணபதியைத் தியானிக்கிறேன்.

    விக்ந ராஜ (விஜய) கணபதி

    பாஸாங்குஸஸ்வதந் தாம்ர பலவாநாகுவாஹந:
    விக்நம் நிஹந்து நஸ்ஸர்வம் ரக்தவர்ணோ விநாயக:

    பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றுடன், மூஷிக வாகனத்தில் அமர்ந்து எல்லா இடர்களையும் களைபவராய் எழுந்தருளும், செவ்வண்ண மேனியராம் விஜய கணபதியைத் துதிக்கிறேன்.

    ஸ்ருஷ்டி கணபதி

    பாஸாங்குஸஸ்வதந் தாம்ர பலவாநாகுவாஹந:
    விக்நம் நிஹந்து நஸ்ஸோண: ஸ்ருஷ்டிதக்ஷோ விநாயக:

    பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றுடன், மூஷிகத்தை வாகனமாக உடையவரும்,  , அனைத்து தடைகளையும் நீக்குபவருமான‌ஸ்ருஷ்டி கணபதியைத் தியானிக்கிறேன்.

    ருணமோசந கணபதி

    பாஸாங்குஸௌ  தந்த ஜம்பூ ததாந ஸ்படிகப்ரப:
    ரக்தாம்ஸூகோ கணபதிர் முதேஸ்யாத் ருணமோசக:
    ஸிந்தூரவர்ணம் த்விபுஜம் கணேஸம் லம்போதரம் பத்மதலே நிவிஷ்டம்
    ப்ரஹ்மாதி தேவை: பரிஸேவ்யமாநம் ஸித்தைர்யுதம்தம் ப்ரணமாமி தேவம்

    பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் ஆகியவை தாங்கியவரும் வினைகளகற்றுபவரும் ஸ்படிக நிறத் திருமேனியில் ரக்த வண்ண ஆடை தரித்தவருமான  ருணமோசன கணபதியைத் துதிக்கிறேன். செந்நிறம், இரண்டு கரங்கள், பெரிய  திருவயிறு, ஆகியவற்றை உடையவரும்,  பத்மாஸநத்தில் அமர்ந்து, ப்ரஹ்மாதி தேவர்களால் ஸேவிக்கப் பெறுபவரும், சித்தர்களால் சூழப்பட்டவருமான தேவனை (விநாயகரை) நமஸ்கரிக்கின்றேன்.

    டுண்டி கணபதி

    அக்ஷமாலாம் குடாரஞ்ச ரத்நபாத்ரம் ஸ்வதந்தகம்
    தத்தேகரைர் விக்நராஜோ டுண்டிநாம முதேஸ்துந:

    ருத்ராக்ஷமாலை, கோடரி, ரத்தின பாத்திரம், தந்தம் ஆகியவை தாங்கியவரும் தடைகளகற்றுபவருமான டுண்டி விநாயகரைத் துதிக்கிறேன்.

     

  • Vazhvil nalam tharum vinayakar vazhipadu

    பக்தி நெறியில் பிள்ளையாரின் அருளைப்பெற்ற மகான்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. தனக்கு அளிக்கப்பட்ட இட்சுவாகு குல தனமான ஸ்ரீரங்கநாதரை ரங்கவிமானத்துடன் விபீஷணன் இலங்கைக்கு எடுத்து செல்லுங்கால், தனது திருவிளையாடல் மூலம் ஸ்ரீரங்கத்தில் நிலைப்படுத்தி அருளியதும் விநாயகரே. 

    "அற்புதம் நின்ற கற்பகக் களிறே' என்று பாடிய ஒளவையைத் தன் துதிக்கையால் கைலாயத்தில் சேர்த்தார். திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி, விநாயகரின் அருளால் தேவாரங்களை மீட்டெடுத்தார். 

    வேதங்களை வகைப்படுத்தி அருளிய வியாஸர் மஹாபாரதத்தை தான் சொல்லச் சொல்ல அதனை தனது தந்தத்தை உடைத்து எழுதியதும் விநாயகப்பெருமானே. ந்தரமூர்த்தி சுவாமிகள், சேரமான் பெருமானோடு திருவையாறு அருகில் வரும்போது காவிரி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஈசனை நினைந்து அவர் வேண்ட, ""சுந்தரனே வா!'' என ஓலமிட்டு அழைத்து காவிரியின் நடுவில் பாதை அமைத்து அவருக்கு உதவியவர் விநாயகரே.  இவ்வாறு விண்ணோருக்கும் மண்ணோருக்கும் விநாயகர் அருளிச்செய்த செயல்கள், அற்புதங்கள் பட்டியல் நீளூம்.

    சதுர்த்தி திதி கணேசருக்கு மிகவும் உகந்த நன்னாள். ஒவ்வொரு தமிழ் ஆண்டும் ஆவணி மாதம் அமாவாசை கழித்து வரும் வளர்பிறை சதுர்த்தி திதியன்று "விநாயக சதுர்த்தி' பூஜை கொண்டாடப்படுகிறது. 

    பூஜை வழிபாடுகளில் மிக எளிமையானது விநாயகர் வழிபாடாகும். பொதுவாக எந்த நல்ல காரியங்களை ஆரம்பிப்பதென்றாலும் அவை தடைகள் இன்றி நடைபெறுவதற்கு மஞ்சளினால் செய்த பிள்ளையாரை பூஜை செய்து வழிபாட்டுடன் துவக்குவது வழக்கம். 

    விநாயக சதுர்த்தியன்று களி மண்ணினால் செய்த விநாயகர் திருவுருவத்தை (பிம்பத்தை) வீட்டில் முறைப்படி பூஜை செய்ய வேண்டும். இதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகின்றது…..

    உலக சிருஷ்டியின் ஆதியில் தோன்றிய வஸ்துக்களில் பிருதிவி எனப்படும் மண்ணும், கடலும் முக்கியமானவை. விநாயகரே ஆதிதேவராக இருப்பதால் இவரை பிருதிவியால் (களிமண்ணால்) உருவாக்கி விநாயக சதுர்த்தியன்று பூஜிக்கின்றோம். புனர்பூஜை கழித்து திரும்பவும் அந்த பிம்பத்தை கடல்நீரில் கரைத்து விடுகின்றோம்.

    விநாயகர் பூஜையில் அவசியம் இடம் பெறவேண்டியவை:
    அணிவிப்பதற்கு: எருக்கம் பூக்களால் ஆன மாலை,
    அர்ச்சிப்பதற்கு: அருகம் புற்கள்,
    நிவேதனத்திற்கு: மோதகம் என்று சொல்லப்படும் அரிசிமாவினால் ஆன கொழுக்கட்டை, வழிபாட்டில் பின்பற்ற வேண்டியவை: நெற்றிப்பொட்டில் கைகளால் குட்டிக் கொள்வதும், தோப்புக்கரணம் போடுதலும் நன்று.

    வெற்றிகளை அளிக்கும் வித்தகக் கடவுளான விநாயகப் பெருமானை எந்நாளிலும் வழிபடுவோம்.  நம்பிக்கையுடன் அந்த தும்பிக்கையானை வழிபட்டால் கற்பகத் தருவாக இருந்து வாழ்வில் நாம் நலம் பெற வேண்டியவைகள் அனைத்தையும் அருளுவார். 
     

  • Vinayakar thudhi

    உயிர்களை இயல்பாகப் பற்றி இருக்கும் பந்த பாசங்களை நீக்கும் இயல்புடையவரும், அனைத்து உயிர்களையும் தம்மிடம் இருந்து தோற்றுவிப்பவரும், வேதங்களையும், ஆகமங்களையும் வெளிப்படுத்தி அருள் செய்தவருமாகிய விநாயகப்பெருமானின் திருவடிகளை அன்புடன் போற்றுகின்றோம். 

    கண்களால் காணப்பெறும் உலகமுழுவதும் நீக்கமற நிறைந்துஇருப்பவரும், விருப்பு வெறுப்பு இல்லாதவரும், நாம் செய்கின்ற செயல்களின் பலனை நமக்குத் தருபவரும், களைபவருமான முழுமுதற்பொருளான கணபதியை உவந்து சரணடைந்து போற்றுகின்றோம். 

    தீயில் விழுந்த பஞ்சுபோல இடர்களை முழுவதும் நீக்குபவரும்,தன்னை அன்புடன் தொடரும் உயிர்கள் அனைத்தையும் நற்கதிக்கு இட்டுச் செல்பவரும், எடுத்த செயல்களை எளிதாகவும், இனிதாகவும் நிறைவு செய்து அருள்பவரும் ஆன ஒற்றைக்கொம்பன் விநாயகரின் திருவடிகளைச் சரணமாகப் பற்றுகின்றோம்.

    திருத்தலங்கள் தோறும் கோயில் கொண்டிருப்பவரும், கங்கை முதலான தீர்த்தங்களாகத் திகழ்பவரும், உயிர்களின் அறியாமையை அறிவினைத் தருபவரும், கருணை நிறைந்த வருமாகிய கணபதியின் திறத்தினைப் புகழந்து பாடி திருவடிகளைச் சரண் அடைகிறோம். 

    உயிர்கள் செய்யும் வினையின் முதலாகவும், செய்யப்படும் பொருளாகவும், செய்வினையின் பயனாகவும், அந்த பயன் விளைவிக்கும் விளைவைப் பயன்பெறச் செய்பவனும் திகழ்கின்ற மெய்ப்பொருளான கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று அடைக்கலம் புகுகின்றோம்.

    வேதங்களாலும் அறியமுடியாதவரும், வேதத்தின் முடிவாக விமலனாகத் திகழ்பவரும், எங்கும் பரந்து விளங்கும் பரமானந்த வடிவாக வீற்றிருப்பவரும்,எண்குணங்களை உடையவரும் ஆகிய கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று பற்றுகின்றோம்.

    நிலத்தில் ஐந்து குணங்களாகவும், நீரில் நான்கு குண்ங்களாகவும், தீயில் மூன்று குணங்களாகவும், காற்றில் இரண்டு தன்மையுடையவனாகவும், வானில் ஒன்றாகவும் திகழும் அண்ணல் கணபதியின் அன்புத்திருவடிகளை அடைக்கலமாகப்புகுகின்றோம்.

    'பாச அறிவினாலும், பசு அறிவினாலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருளாகவும், பாச அறிவையும், பசு அறிவையும் அறியச் செய்யும் இறைவனாகவும், பாச, பசு அறிவினைப் போக்கி ஞானஅருள் வழங்கும் தலைவனாகவும் திகழும் கணபதியைச் சரண் அடைந்து போற்றுகின்றோம்.

  • Vinayakar mandirangal

    விநாயகர் சகஸ்ரநாமம்:
     
    சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
    ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

    விநாயகர் காயத்ரி மந்திரம்:
     
    வக்ரதுண்டாய ஹீம் 
    ஓம் நமோ ஹேரம்ப மதமோதித 
    மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா 
    ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.
     
     விநாயகர் ஸ்லோகங்கள்….

    1)  கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
    கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
    உமாஸுதம் சோக வினாச காரணம்
    நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
     
    2) ஓம் தத்புருஷாய வித்மஹே 
    வக்ரதுண்டாய தீமஹி 
    தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
     
    3) ஐந்து கரத்தனை யானை முகத்தனை 
    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை 
    நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் 
    புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
     
    4) மூஷிக வாகன மோதக ஹஸ்த 
    சாமர கர்ண விளம்பித சூத்ர 
    வாமன ரூப மஹேஸ்வர புத்ர 
    விக்ன விநாயக பாத நமஸ்தே.
     
    5) அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த 
    தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல 
    குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும் 
    கணபதியைக் கைதொழுதக் கால்.
     
    விநாயகர் மந்திரத்தை தினமும் படித்து அருகம்புல்லால் விநாயகரை வழிபட்டு வந்தால் விநாயகரின் அருள் நமக்குக் கிடைக்கும். பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும்.