Tag: Vinayakar

  • Vinayakar Thirvuruva Vilakkam

    இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள் விநாயகர். விநாயகரின் திருவுருவ விளக்கத்தை அறிந்து கொள்ளலாம்.

    இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள் விநாயகர். விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாக காணப்படுகிறது. அத்துடன் இந்து சமயம் தவிர்த்து பௌத்தம், சமணம் போன்ற மதங்களிலும் உள்ளது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார்.

    திருவடி :

    ஆன்மாவைப் பொருந்தி நின்று மலகன்ம மாயைகளை தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.

    பெருவயிறு :

    ஆகாசம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது.

    ஐந்துகரங்கள் :

    பிள்ளையாரின் ஒரு கை பாசத்தை ஏந்தியுள்ளது. அது படைத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே பிரம்மாவாகிறார். தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது. எனவே இவரே மகாவிஷ்ணுவாகிறார் துதிக்கை அனுக்ரகம் செய்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது.எனவே, இவா் ருத்ரா் ஆகிறார் மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது. எனவே,இவரே சா்வ சக்தி படைத்த பரமேஸ்வரனாகவும் இருக்கிறார்.

    கொம்புகள் :

    மகாபாரதத்தை எழுதுவதற்காக தமது கொம்பையே ஒடித்தது வெளித்தோற்றத்தை விட அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டியதை உணர்த்துவதாகக் கூறப்படுகின்றது.

    தாழ்செவி :

    விநாயகரின் முறம் போன்ற பெரிய காதுகள் செவியில் விழும் செய்திகளை சலித்து நல்லவற்றை மட்டும் தேர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றன.
     

  • Vinayakar Poojai Muraigal

    1. முல்லை இலை – அறம் வளரும்

    2. கரிசலாங்கண்ணி இலை – இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.

    3. வில்வம் இலை – இன்பம். விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

    4. அருகம்புல் – அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். 21 அருகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது

    5. இலந்தை இலை – கல்வியில் மேன்மையை அடையலாம்.

    6. ஊமத்தை இலை – பெருந்தன்மை கைவரப்பெறும்.

    7. வன்னி இலை – பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.

    8. நாயுருவி – முகப் பொலிவும், அழகும் கூடும்.

    9. கண்டங்கத்தரி – வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.

    10. அரளி இலை – எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.

    11. எருக்கம் இலை – கருவிலுள்ள சிசுவுக்கு பாதுகாப்புக் கிட்டும்.

    12. மருதம் இலை – மகப்பேறு கிட்டும்.

    13. விஷ்ணுகிராந்தி இலை – நுண்ணிவு கைவரப்பெறும்.

    14. மாதுளை இலை – பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.

    15. தேவதாரு இலை – எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.

    16. மருக்கொழுந்து இலை – இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.

    17. அரசம் இலை – உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.

    18. ஜாதிமல்லி இலை – சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்.

    19. தாழம் இலை – செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.

    20. அகத்தி இலை – கடன் தொல்லையிலிருந்து விடுதலைக் கிடைக்கும்.

    21. தவனம் பூவின் இலை -: நல்ல கணவன் மனைவி அமையப்பெறும்
     

  • Vinayakar poojai time

    நாம் கடையில் சென்று பிள்ளையாரை வாங்க செல்லும் போது ஒரு தாம்பூலத் தட்டில் சிறிது அரிசி, மஞ்சள், அறுகம்புல் பரப்பி அதன் மீது பிள்ளையார் வைத்து கொண்டு வரவேண்டும். விநாயகரை வீட்டுக்கு கொண்டு வந்ததும். வாசலில் கற்பூரம் ஏற்றி வழிபட்டு உள்ளே அழைத்து வர வேண்டும். கணபதி வீட்டுக்கு வந்த உடன் அவருக்கு ஒரு பட்டுத் துணி அல்லது காவி துணி உடுத்தி சிறிது பூ வைத்து வணங்கவும்.

    பின்னர் பிள்ளையாருக்கு சந்தன பொட்டு வைத்து, மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.  அவருக்கு பிடித்த அருகம் புல் அல்லது எருக்கம்பூ மாலை செய்து அணிவித்தால் நலம் 

    வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், உள்ளிட்ட பழங்களை வைக்கவும். விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, மோதகம் உள்ளிட்ட இனிப்பு வகைகள், பலகாரங்களை செய்து படைக்கலாம்.

    எளிமையான வழிபாட்டிலேயே மனம் நிறைந்து அருள்பவர் கணபதி. எனவே, கிடைக்கும் பொருள்களைக் கொண்டு எளிமையாக விநாயகர் சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    நாளை (22.8.20) அன்று சனிக்கிழமை, காலை 9 மணி முதல் 10.30 வரை. எனவே பூஜையைக் காலை 7 மணி முதல் 8 மணிக்குள்ளும் 10.30 முதல் 11.30 மணிக்குள்ளும் மேற்கொள்ளலாம். மாலையில் 5 மணி முதல் 7 மணிக்குள் விநாயகருக்கு பூஜை செய்யலாம்.
     

  • Vinayakar Agaval

    சீதக் களபச் செந்தா மரைப்பூம்
    பாதச் சிலம்பு பலவிசை பாடப்
    பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
    வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
    பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
    வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
    அஞ்சு கரமும் அங்குச பாசமும்
    நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
    நான்ற வாயும் நாலிரு புயமும்

    மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
    இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
    திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
    சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
    அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
    முப்பழ நுகரும் மூஷிக வாகன!

    இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
    தாயா யெனக்குத் தானெழுந் தருளி
    மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
    திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
    பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
    குருவடி வாகிக் குவலயந் தன்னில்
    திருவடி வைத்துத் திறமிது பொருளென
    வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
    கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

    உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
    தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
    ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
    இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
    கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
    இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
    தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
    மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

    ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
    ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
    ஆறா தாரத்(து) அங்குச நிலையும்
    பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
    இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
    கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
    மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
    நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
    குண்டலி யதனிற் கூடிய அசபை
    விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

    மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
    காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
    அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
    குமுத சகாயன் குணத்தையும் கூறி
    இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
    உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
    சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
    எண் முகமாக இனிதெனக் கருளிப்
    புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
    தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
    கருத்தினில் கபால வாயில் காட்டி
    இருத்தி முத்தி யினிதெனக் கருளி
    என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து

    முன்னை வினையின் முதலைக் களைந்து
    வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
    தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
    இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
    அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்
    எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
    அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
    சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
    சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

    அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
    கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
    வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
    கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
    அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
    நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
    தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
    வித்தக விநாயக விரைகழல் சரணே!
     

  • Vetri Tharum Vinayakar Gayathri Mandiram

    விநாயகர் சகஸ்ரநாமம்:
     
    சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
    ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

    விநாயகர் காயத்ரி மந்திரம்:
     
    வக்ரதுண்டாய ஹீம் 
    ஓம் நமோ ஹேரம்ப மதமோதித 
    மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா 
    ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.
     
     விநாயகர் ஸ்லோகங்கள்….

    1)  கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
    கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
    உமாஸுதம் சோக வினாச காரணம்
    நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
     
    2) ஓம் தத்புருஷாய வித்மஹே 
    வக்ரதுண்டாய தீமஹி 
    தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
     
    3) ஐந்து கரத்தனை யானை முகத்தனை 
    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை 
    நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் 
    புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
     
    4) மூஷிக வாகன மோதக ஹஸ்த 
    சாமர கர்ண விளம்பித சூத்ர 
    வாமன ரூப மஹேஸ்வர புத்ர 
    விக்ன விநாயக பாத நமஸ்தே.
     
    5) அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த 
    தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல 
    குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும் 
    கணபதியைக் கைதொழுதக் கால்.
     
    விநாயகர் மந்திரத்தை தினமும் படித்து அருகம்புல்லால் விநாயகரை வழிபட்டு வந்தால் விநாயகரின் அருள் நமக்குக் கிடைக்கும். பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும்.
     

  • Vinayakar Chadurthi Special Pongal

    தேவையான பொருட்கள்:
    பச்சரிசி –  1 கப்
    பாசிப் பருப்பு  – 50 கிராம்
    முந்திரிப் பருப்பு – 30 கிராம்
    காய்ந்த திராட்சை  – 30 கிராம்
    சுக்கு பொடி –  சிறிதளவு
    ஏலக்காய் –  6
    சிறிய தேங்காய் –  1
    நெய் –  200 கிராம்
    கருப்பட்டி  – 600 கிராம்
    தண்ணீர் – தேவைக்கேற்ப

    செய்முறை:   

    முதலில் கருப்பட்டியை நன்றாக தூளாக்கிக் கொள்ள வேண்டும்.  பின்னர் குக்கரில் ஒரு கிண்ணம் அரிசிக்கு 3 மூன்று பங்கு தண்ணீர் விட்டு பச்சரிசி, பாசிப்பருப்பு ஆகியவற்றை போட்டு சாதமாக குழையவிடவேண்டும்.  

    தொடர்ந்து குக்கரில் பிரஷர் போனதும் குக்கரை திறந்து அதில் தூளாக்கி வைத்துள்ள கருப்பட்டியை போட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்து ஒன்றாக திரண்டதும்,  வாணலியில் சிறிது நெய்யைவிட்டு  அதில் முந்திரிப் பருப்பு, திராட்சைப் பழம், துருவிய தேங்காயைப் போட்டு வறுக்க வேண்டும்.  

    தேங்காய் பொன்னிறமாக வதங்கிய பின் கலவையை குக்கரில் போட்டு ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி, மீதமுள்ள நெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும். சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார். 
     

  • Vinayakar patriya arpudhangal

    விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார்.

    யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார்.

    விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர்.

    விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார்.

    அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது.

    கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்தியகை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புரிகின்றார்.

    விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றார்.

    முருகர், அம்பிக்கை ராமர், கிருஷ்ணர் முதலிய உருவங்கள் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டியவை. அவை சிற்ப லட்சணத்திற்கு மாறுபட்டிருந்தால் வழிபாடு செய்பவருக்கு நன்மை கிடைக்காது. ஆனால் பிள்ளையார் உருவம் அப்படி அல்ல. மஞ்சளை அரைத்து ஒரு சிறு குழந்தை கூட பிடித்து வைத்தால் போதும் பிள்ளையார் தயார். பிள்ளையார் அவ்வடிவில் எழுந்தருளி அருள்புரிவார்.

    சந்தனம், களிமண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடு வார்கள்.

    விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.

    விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.

    விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.

    புரட்டாசி மாத சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும்.

    சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது.

    தும்மைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மா விலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.

    விநாயகர் பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.

     தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது.

    கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.

    சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தைத் தான் கடைப்பிடித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங் களையும் பெற்றான்.

     திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ. மேற்கே அமைந்துள்ள கிராமம் தீவனூர். அந்த கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.
     

  • Arul Tharum Vinayakar Thudhi

    பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
    இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்
    கோலம் செய்துங்க  கரிமுகத்து தூமணியே
    நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா!

    பொருள்:

    பாலையும், கலப்படம் அற்ற தெளிந்த தேனையும், சர்க்கரை கலந்த பாகையும், வேகவைத்த கடலை பருப்பையும் கலந்து ஒரு சுவையான உனக்கு நான்  நைவேத்தியமாக படைக்கிறேன்.
    கோலமிகுந்த (அழகு மிகுந்த) துங்க  (துதிக்கை அமைந்த) கரிமுகத்து (யானை முகம் படைத்த) தூய்மையான மணி போன்ற பொக்கிஷமே! நீ எனக்கு இயல், இசை, நாடகம் என முப்பரிமாணத்தில் மிளிரும் தமிழ் மொழியை அருள்வாயாக !
     

  • Thirumana Thadai Neekum Vinayakar

    மகாகணபதி எழுந்தருளியிருக்கும் கோயில்களில் ஒன்று, சேண்பாக்கம்.  ஒரே கருவறையில் பதினோரு சுயம்பு லிங்கங்களாக விநாயகப்பெருமான் திருவருள்புரியும் இத்திருத்தலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள சேண்பாக்கத்தில் உள்ளது. பிரதான விநாயகராக செல்வ விநாயகர் அருள்கிறார். தலமரமாக வன்னிமரம் போற்றப்படுகிறது. இது மிகவும் தொன்மையான தலம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மராட்டிய அமைச்சரான துக்காஜி தனது தேரில் இவ்வழியாக சென்று கொண்டிருந்தார். 

    ஓரிடத்தில் சக்கரத்தின் அச்சு முறியவே கீழே இறங்கி பார்த்தார். சக்கரத்தின் கீழிருந்து ரத்தம் கொப்பளித்தது. பயந்து போனார் துக்காஜி. அப்போது விநாயகர் அசரீரியாக ‘இவ்விடத்தில் ஏகாதச வடிவில் நான் இருக்கிறேன். என்னை வெளிக்கொண்டு வந்து ஆலயம் எழுப்பு,’ என்று ஆணையிட்டார். அதன்படி இவ்விடத்தில் லிங்க வடிவில் இருந்த 11 விநாயகர்களையும் எடுத்து பிரதிஷ்டை செய்தார் துக்காஜி. மூலவரான செல்வ விநாயகரின் முதுகின் வலது பக்கத்தில் தேர் சக்கரம் ஏறிய வடு இன்னமும் உள்ளது.

    ஆதிசங்கரருக்கு சுயம்பு மூர்த்தங்களை தரிசனம் செய்வதில் மிகவும் விருப்பம். சேண்பாக்கத்தில் 11 சுயம்பு மூர்த்திகள் இருப்பதை அறிந்து அவர் இத்தலத்திற்கு வந்தார். 11 சுயம்பு மூர்த்திகளும் லிங்க வடிவிலேயே இருப்பதைக் கண்டார். பின் தன் ஞானதிருஷ்டியால் அனைத்து லிங்கங்களும் விநாயகரே என்பதை அறிந்தார். சுயம்பு மூர்த்திகளுக்கு எதிரில் ஈசான்ய மூலையில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்தார். இவ்வாறு ஆதிசங்கரரின் இக்கோயிலை வழிபட்டிருக்கிறார் என்பதிலிருந்தே இந்தக் கோயிலின் பழமையும் சிறப்பும் விளங்கும்.  

    இந்த யந்திரத்தின் அருகே நவகிரக மேடை அமைத்துள்ளனர். இதிலிருக்கும் சனிபகவான் தனக்கு அதிபதியான விநாயகரை பார்த்திருப்பது தனி சிறப்பு. திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை இல்லாதவர்கள் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து தீபம் ஏற்றி விநாயகரை வழிபாடு செய்தபின், ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் அமைத்துள்ள இடத்திலுள்ள நவகிரகத்தை வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பாலவிநாயகருக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள்.  விநாயகருக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
     

  • Vinayakar chadurthi sirappugal

    ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை 'விநாயகர் சதுர்த்தி' என்று அழைக்கின்றோம். அன்றைய தினம் நாம் விரதமிருந்து முறையாக விநாயகரை வழிபட்டு அருகிலிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு அவரைக் கொண்டாடினால், நமக்கு எல்லா விதமான நன்மைகளும் விளையும் என்பது ஐதீகம். 

    கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை கணபதி என்று சொல்கின்றோம். எனவே, அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப் பெருமானாகும்.

    எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத் தான் நாம் தொடங்குவது வழக்கம். 'பிள்ளையார் சுழி' போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. எனவேதான் 'மூல கணபதி' என்று அவரை நாம் வர்ணிக்கின்றோம்.

    அந்த ஆனைமுகனுக்கு உகந்த மாதம் தான் ஆவணி மாதம். அந்த திருநாள்ஆவணி மாதம் 6ம் தேதி சனிக்கிழமை (22.08.2020) அன்று வருகிறது. அன்றைய தினம் பிள்ளையாரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

    வீட்டிலும் சிலை வைத்து வழிபாடு செய்யலாம். விக்ரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்கும் சென்று வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை முழு நம்பிக்கையோடு நாம் வழிபட்டால், இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும்.