Tag: Temple

  • Viswanathar temple pradhosham

    ராணிப்பேட்டை அடுத்த லாலாபேட்டை கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத விஸ்வநாத ஈஸ்வரர் சன்னதியில் மார்கழி பிரதோஷ விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

    இந்த மார்கழி பிரதோஷ நாளில் கோவிலுக்கு சிவனுக்கு முன்பாக அமைந்துள்ள நந்தி பகவான் மற்றும் பிரதோச உற்சவநாதருக்கு மஞ்சள், குங்குமம், தயிர், இளநீர் தேன், பன்னீர், பால் , ஆகிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நந்தி மற்றும் உற்சவநாதருக்கு புஷ்பா பூ மலர்களால் அலங்காரம் செய்து மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    மேலும் பூ மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிரதோஷ நாதரை கோவிலில் இருந்த திரளான பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோவில் முழுவதும் பக்தி பாடல்களை பாடியபடி வலம் வந்து  நமச்சிவாய வாழ்க நமச்சிவாய வாழ்க என பக்தி பரவசத்துடன் முழக்கம் விட்டனர் அதன் பின்னர் கோவில் கருவறையில் இருக்கும் காசி விசாலாட்சி சமேத விஸ்வநாத ஈஸ்வருக்கு பஞ்சஆரத்தி ,தட்டஆரத்தி கும்பஆரத்தி ஆகிய மஹா  தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

  • 2 minutes closing krishnan temple

    கோவில் மூடுவதற்கு நேரம் இல்லா கிருஷ்ணர் கோயில். இது உலகிலேயே மிகவும் அசாதாரணமான கோயில். ஒவ்வொருநாளும் திறந்திருக்கும் நேரம் 23.58 x 7. கோயில். மூடுவதற்கு நேரம் இல்லை. இங்கே இருக்கும் கிருஷ்ணருக்கு எப்பொழுதும் பசித்துக் கொண்டே இருக்குமாம். அற்புதம்!

    1500 ஆண்டுக்கும் மேல் பழமையான இந்த கோவில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் திருவார்பூ வில் அமைந்துள்ளது. இங்கு கிருஷ்ணர் எப்போதும் பசியாக இருக்கிறார். எனவே 23.58 மணி நேரமும், 365 நாட்களும் கோவில் திறந்திருக்கும். கோயில் 2 நிமிடங்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது. 11.58 மணி முதல் 12 மணி வரை.

    இந்த கோவிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால், கோவில் நடை சாத்தி அடுத்த இரண்டாவது நிமிடம் மீண்டும் கோவில் நடை திறக்க தந்திரியின் கைகளில் ஒரு கோடாரியும் கொடுக்கப்படுகிறது. கிருஷ்ணரால் பசியை சகித்துக் கொள்ள முடியாது என்று நம்புவதால், ஏதாவது ஒரு காரணத்தால் கதவு திறக்கப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டால், கோடாரி உதவியுடன் கதவைத் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

    கம்சனைக் கொன்ற பிறகு கிருஷ்ணர் மிக உஷ்ணமாக இருந்தார். அந்த நிலையில் இருந்த கிருஷ்ணரே இக்கோவில் மூலவர் சிலை என்று மக்கள் நம்புகின்றனர். அபிஷேகம் முடிந்தபின், மூலவரின் தலையை முதலில் உலர்த்தியபின், நைவேத்திம் அவருக்குப் படைக்கப்படும், பின்னர் அவருடைய உடல் உலர்த்தப்படும்.

    இந்த கோயிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால், கிரகணத்தின் போது கூட கோயில் மூடப்படுவதில்லை. அப்படி மூடினால் இந்தக் கிருஷ்ணர் பசி தாங்க மாட்டார் என்று மக்கள் நம்புகிறார்கள். ஒருமுறை, கோயில் கிரகணத்தின் போது மூடப்பட்டது. கதவைத் திறந்தபோது, ​​ஆண்டவரின் இடுப்புப் பட்டை வீழ்ச்சியடைந்ததைக் கண்டார்கள்.

    அந்த சமயத்தில் வந்த ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார், கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால் தான் அவ்வாறு நடந்தது என்று சொன்னார். அப்போதிருந்து, கிரகணத்தின் போதும் அக்கோவில் மூடப்படுவதில்லை. கிருஷ்ணர் தூங்கும் நேரம் தினமும் 11.58 மணி முதல் 12 மணி வரை. 2 நிமிடங்கள் மட்டுமே.

    தினமும் 11.58 மணி (ஆலயத்தை மூடுவதற்கு முன்பு) பூசாரி சத்தமாக “இங்கு யாராவது பசியாக உள்ளீர்களா?” என அழைப்பார். பிரசாதம் வழங்குகளில் அனைத்து பக்தர்களும் பங்கேற்க வேண்டும். மற்றொரு முக்கிய விஷயம், நீங்கள் பிரசாதம் சுவைத்தால், நீங்கள் அதன் பிறகு பசியால் வாட மாட்டீர்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உணவுப்பிரச்சனை இருக்காதாம்.

    திருவார்பு கிருஷ்ணா கோயில், திருவார்பூ, -686020
    கோட்டையம் மாவட்டம்,
    கேரள மாநிலம்.
    கோவில் நடை சாத்தும் நேரம் நள்ளிரவு நள்ளிரவு 11.58 மணி முதல் 12 மணி வரை…
    பிரசாதம் பெறாமல் பக்தர்கள் கோவிலை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை.

  • thirupachur sivan temple

    திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் என்ற இடத்தில் உள்ளது அருள்மிகு தங்காதலி வாசீஸ்வரர். மிக மிக பழமையான கோவில். இந்த கோவில் வரலாறை படித்தால் ஆச்சர்யம் காத்திருக்கிறது. இக்கோவில் ஆதிசங்கரர் கையால் கல்லில் வரைந்த ஸ்ரீ சக்கரம் உள்ளது. இச்சக்கரத்தை வரைந்த பின்னரே இக்கோவில் அடிக்கல் நாட்டப்பட்டதாம். தட்சனின் மகளாய் பிறந்த பார்வதி தேவி,திருமணம் முடிக்க எண்ணி சிவபெருமானை வேண்டி தவம் செய்த இடமே இக்கோவில்.

    தன் காதலியே நான் வந்துவிட்டேன் என சிவன் கூறியதால் இக்கோவிலில் அம்மன் தங்காதலி என அழைக்கப்படுகிறார். மேலும் வெங்கடாஜலபதி குபேரனிடம் கடனை தீர்க்க இக்கோவிலில் வந்து 11 கணபதிக்கு 11 தேங்காய் மாலை,11 வாழைப்பழ மாலையை அணிவிக்க உன் கடன் தீரும் என சிவபெருமான் கூறியதால் இக்கோவிலில் வந்து வெங்கடாஜலபதி கணபதியை வணங்க அவர் கடன் தீர்ந்தது.

    இக்கோவில் 5000 வருட பழமையான மூங்கில் உள்ளது. மூங்கிலின் உள்ளே தான் சிவன் சுயம்புவாக உருவானார்.மேலும் இக்கோவில் சிவ பெருமான் வாசி என்ற கோடாரியால் மூங்கிலுக்கு கீழே எடுக்கும் போது அவர் மீது இரத்தம் வந்துவிட்டது. ஆதலால் இக்கோவில் சிவலிங்கை தொடாமல் தான் பூஜை செய்கிறார்கள்.பசு ஒன்று யாருக்கும் தெரியாமல் சிவனுக்கு பால் சுரந்து கொடுக்குமாம், அப்போது மூங்கில் தானாக விலகி சிவலிங்கத்தை பசுவுக்கு காட்டுமாம்.

    இந்த ஊரில் சிறு மன்னன் ஒழுங்காக வரி கட்ட தவறியதால் கரிகால அரசன் பெரும் படையெடுத்தான். ஆனால் போரில் வெற்றி பெறுவதற்காக காளி உருவில் வானில் இருந்து அம்புமலை பொழிந்ததால் அவனுடைய பெரும்படைகள் அழிந்தது, மீண்டும் கரிகாலன் சிவனை வேண்டி போரில் வெற்றி பெற்றான். போரில் வெற்றி பெறுவதற்காக காளியை தனியே விநாயகர் மூலம் கட்டிவைத்தார் சிவபெருமான். அந்த காளியின் பெயர் சொர்ண காளி,தனி சந்நதி உள்ளது.

    உன்னை இங்கு வரவழைக்கவே போரில் உன்னை ஜெயிக்க வைத்தேன் என கரிகாலனிடம் சிவன் கூறினாராம். இக்கோவிலை கட்ட கரிகாலனுக்கு ஆதிசங்கரர் உதவி புரிந்திருக்கிறார். ஆதிசங்கரர் வந்தார் என்பதற்கு ஆதாரம் தான் அவர் கையால் வரைந்த ஸ்ரீ சக்கரம். இக்கோவிலின் சொர்ணபைரவர் தெற்கு பார்த்து இருப்பார். முக்கியமான விஷயம் இது ஒரு கேது ஸ்தலம். மிக மிக மிக அருமையான கோவில். தெய்வமில்லை என்பவர்கள் இங்கு வந்தால் கண்டிப்பாக தெய்வத்தை காணலாம்.

  • poomparai murugan temple

    கொடைக்கானலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை கிராமம். இந்த முருகன் நினைத்தால் தான் நாம் இங்கு வர முடியும்*

    இந்த தேதியில், இந்த நேரத்தில் வரவேண்டும் என்பது அவன் விருப்பம் . மிகவும் சக்திவாய்ந்த நவபாசான முருகன்.

    இந்தியாவில் உள்ள எல்லா கோவில்களிலும் ஐம்பொன் வெங்கலம் கற்களால் ஆன சிலைகள்தான் உள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள இரண்டு கோவில்களில் மட்டுமே நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் உள்ளன, அவை

    1, பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் சிலை,
    2. பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர் முருகன் சிலை. 

    உலகிலேய நவபாஷான சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் மாமுனிசித்தர் போகர் என்ற மாமுனிவராகும். இவர் உருவாக்கிய பழனி மலை முருகன் மட்டும் தான் என்று எல்லோரும் அறிவர் 

    ஆனாலும் பூம்பாறை முருகன் சிலையும் அவர்தான் நவபாஷானத்தால்  உருவாக்கியவர் என்பது அறியாத தெரியாத செய்தியும் கூட, அதுபோல் அருள் பாலிப்பதிலும் பழனி முருகன் போன்று அருள் தர வல்லவர் என்பது அந்த கோவிலு்க்கு சென்று அனுபவ ரீதியாக பயன் அடைந்தவர்களுக்குத்தான் தெரியும்.

    சுமார் 10/12ம் நூற்றாண்டு வாக்கில் மாமுனி சித்தர் போகர் தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாண்டவர் வனவாசம் மேற்கொண்ட போது கடைசி 12வது வனமான பழனி கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையாகும். 

    பழனி மலைக்கும், பூம்பாறை மலைக்கும் நடுவில் உள்ள யானை முட்டி குகையையில் அமர்ந்து, தான் கற்று வந்த கலைகளை சோதிக்க அதற்கான மூலிகைகள் ராசாயண பொருட்கள் சேகரித்து முதலில் ஒரு முருகன் சிலையை உருவாக்கினார். 

    அந்த சிலையைத் தான் பழனி மலை மீது பிரதிஷ்டை செய்தார். தண்டம் கொண்டு அச்சிலையை உருவாக்கியதால் அதற்கு தண்டாயுதபாணி என்று பெயர் 

    அக்கோ விலை இறைவனிடம் வேண்டி சிவ பூதங்களால் கோவில் மற்றும் மண்டபகங்களை கட்ட செய்தார் என்பது வரலாறு.

    பின்னர் மறுபடியும் சீீனநாட்டிற்கு சென்று பஞ்சபூத சக்திகளை மீண்டும் பெற்று யானை முட்டி குகைக்கு வந்து ஞான நிலையை அடையும் பிரம்மத்தை உணர்ந்து கொள்ளவும்

     ஆதிபராசக்தியின் துணைகொண்டு குருமூப்பு என்ற அருமருந்தை நிலைநிறுத்தவும் பஞ்சபூதங்களை நிலைப்படுத்தி அதன் மூலம் குருமூப்பு சிலையை உருவாக்கினார், 

    அந்த சிலைதான் பூம்பாறை மலையுச்சியுள்ள சேர மன்னன் தவத்திற்கு பழனி முருகன் திருமண காட்சியளித்து சேர மன்னனால் கட்டப்பட்ட திருமண மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தார்.

    அருணகிரிநாதர் பூம்பாறை மலைக்கு வந்து முருகனை தரிசிக்க வந்தார். அப்போது இரவு நேரமானதால் கோவில் மண்டபத்தில் தங்கி தூங்கிவிட்டார். 

    அப்போது ராட்சசி ஒருத்தி அருணகிரிநாதரை கொல்ல வந்தபோது முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்திருந்த அருணகிரி நாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததைக்கண்டு குழந்தையும் தாயும்தான் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி அருணகிரிநாதரைக் கொல்லாமல் சென்று விட்டதாம். ,

    இதனை தனது ஞான திருஷ்டியால் நடந்த சம்பவத்தை கண்டு குழந்தை வேடம் வந்து தன் உயிரை காப்பாற்றியதால் குழந்தை வேலர் என்று அழைக்கப்பட்டு குழந்தை வேலப்பராக இன்றும் அருள் பாலித்து வருகிறார். 

    அவரின் பக்கத்திலேயலே அருணகிரி நாதருக்கும் சிலையுடன் கோவில் உள்ளது.

    வேண்டுவோரரின் பாவ வினைகள் தீர்த்து குழந்தை வடிவம் கொண்டு தன்னை வழிபடும் பக்தர்களை அருள் பாலித்து வருகிறார் குழந்தை வேலப்பர்.

  • Mayilam murugan Temple

    1000 வருடங்களுக்கு முந்தைய வரலாறு உடையது மயிலம் முருகன் கோவில். எப்போதும் அமைதி நிலவும் மயிலம் முருகன் கோவிலுக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.

    விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஒரு சிறிய குன்றின் மீது, நெடிய ராஜகோபுரத்துடன் விளங்குகிறது. பசுமையான மரங்கள் சூழ்ந்து இருப்பதால், தூரத்தி லிருந்து பார்க்கும்போது அந்த குன்று ஒரு மயில் தோகை விரித்திருப்பது போல் அழகாகக் காட்சியளிக்கிறது.

    கோபுரமானது மயிலின் கொண்டை போல உச்சியில் இருக்கிறது. கோயிலைப் போலவே இந்த மலையையும் புனித மாகக் கருதி பக்தர்கள் வழி படுகிறார்கள்.

     முருகப் பெருமானால் போரில் சூரபத்மன் தோற் கடிக்கப்பட்டான் அவன் மனம் திருந்தி, இறையருள் வேண்டி… மயிலம் வந்து மயில் வடிவ மலையாக மாறி கடும் தவம் புரிந்தான். தவத்தில் மகிழ்ந்து முருகன் அவனுக்கு காட்சி தந்தார். அப்போது ‘‘என்னை தங்கள் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!’’ என முருகனிடம் சூரபத்மன் வேண்டினான்.

    மேலும் ‘‘மயில் வடிவ மலையாக இருந்து நான் தவம் புரிந்த இந்த மலைக்கு ‘மயூராசலம்’ எனப் பெயர் வழங்க வேண்டும். தாங்கள் எந்த நாளும் இங்கு வீற்றிருந்து அன் பர்களுக்கு அருள் புரிய வேண்டும்!’’ என்றும் கோரிக்கை வைத்தான்.

    உடனே முருகன் அவனிடம் ‘‘எதிர் காலத் தில் பாலசித்தர் என்பவர் இங்கு தவம் புரிவார். அப்போது உன் விருப்பம் நிறைவேறும்!’’ என்று கூறிவிட்டு மறைந்தார். சூரபத்மன், அதுவரை மலையாக நிலை கொண்டு அங்கு காத்திருந்தான். ‘மயூரா சலம்’ என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.

    பாலசித்தர் வழங்கும் வேலாயுதம் :

    பொதுவாகவே சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த தலங்களில், பக்தர்களுக்கு வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எவரிடமும் சரணடையாத முருகனது வேலாயுதம், பாலசித்தரிடம் வசமானது என்பது ஐதீகம். இதிலிருந்து பாலசித்தரின் சக்தி விளங்கும். இன்றைக்கும் மயிலத்தில் நடக்கும் கந்த சஷ்டி விழாவின்போது சூர சம்ஹாரத்துக்குக் புறப்படும் முருகர், பாலசித்தரிடமிருந்தே வேலாயுதத்தைப் பெற்றுச் செல்கிறார்.

     வள்ளி- தெய்வானையுடன் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி தரும் முருகனின் ஒரு கையில் வேல். இன்னொரு கையில் சேவற்கொடி. பெரும்பாலான கோயில்களிலும் முருகனின் வாகனமான மயில் தெற்கு நோக்கியோ, நேராகவோ இருக்கும். இங்கு மட்டும் வடக்குத் திசையை நோக்கியபடி இருப்பது கோயிலின் சிறப்பு.

    தவத்துக்கு உரிய திசை வடக்கு. சூரபத்மன் இங்கு வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்குள்ள மயில் வாகனத்துக்கு கிடைத்திருக்கிறது.

    3 உற்சவர்கள் :🙏

    மயிலம் கோயிலில் முருகன் மூன்று விதமான உற்ச வராகக் காட்சியளிக்கிறார். இவர்களில் பிரதான உற்சவர் வள்ளி- தெய்வானை சமேதரான பாலசுப்பிரமணியர்.

    பகலில் வெள்ளிக்காப்பு அணிந்தும், மாலை பூஜைக் குப் பிறகு தங்கக் காப்பு அணிந்தும் அருள் பாலிக்கும் இவர் மாதாந்திர கார்த்திகைகளிலும், பங்குனி உத்தரப் பெருவிழாவிலும் வீதியுலா வருகிறார். மலையைச் சுற்றி இருக்கும் மூன்றாம் பிராகாரத்தில் வீதியுலா நடக்கிறது.

    பங்குனி உத்திரம் இங்கு பன்னிரண்டு நாட்கள் பிரம்மோற்சவமாக விமரிசையாக நடக்கிறது. முருகனுக்கு மயில் மட்டுமின்றி, பல்வேறு விதமான வாகனங்கள் இருப்பதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இதை நினைவுறுத்தும் விதமாக பங்குனி உத்தரப் பெருவிழாவில் திருமணக் கோலத்தில் தினம் ஒரு வாகனத்தில் முருகன் வீதியுலா வருகிறார். மயில், யானை, ஆட்டுக் கிடா, நாகம், பூதம் என விதம் விதமான வாகனங்களில் வலம் வருவார் இந்த மூலவர்.

    இரண்டாவது மூலவர் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி. பரணி நட்சத்திரத்தின்போது வீதியுலா வரும் இவர், தினசரி சுற்றுப் பிராகாரத்தில் இருந்தபடி அருள் பாலிக்கிறார். மாசிமக தீர்த்தவாரியின்போது இந்த உற்சவரை புதுவை கடற்கரைக்குத் தோளில் சுமந்து செல்கிறார்கள். 5 நாட்கள் அங்கிருந்தவாறே அருள் வழங்கும் இவர் 6&வது நாளன்று திரும்பி வருவார்.

    மூன்றாவது உற்சவர் ஆறுமுகங்கள் கொண்ட சண்முகப் பெருமான். கந்த சஷ்டி உற்சவத்தின்போது ஆறு நாட்கள் வீதியுலா வருவது இவர்தான்.
    இவை தவிர சித்திரையில் வசந்த உற்சவம், ஆனியில் ஏழு நாட்கள் லட்சார்ச்சனை என இங்கு பெரும்பாலும் திருவிழா மயம்தான்!

    முருகனுக்கு மிகவும் உகந்த நொச்சி மரங்கள் மயிலம் மலையில் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கிறார்கள்.

    மூலவர் வீற்றிருக்கும் கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன. மயிலம் கோயிலில் செவ்வாய்க் கிழமை தோறும் காலசந்தி பூஜையின் போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இப்படி அர்ச்சனை செய்யும் பக்தர்களுக்குக் கடன் தொல்லையுடன் பணப் பிரச்சினைகள் அகலும் என்பது நம்பிக்கை.

    இதேபோல உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பதால், ஒவ்வொரு செவ்வாயிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.

    எப்போதும் அமைதி நிலவும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும். 

  • Ezhumalayan temple agarbathigal

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு அணிவிக்கப்படும் விதவிதமான மலர்கள் மூலம் நறுமணம் மிக்க அகர்பத்திகளை தயாரிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்காக அகர்பத்திகளை தயாரிக்க கர்நாடக மாநிலம், பெங்களூரு தர்ஷன் இண்டர்நேஷனல் நிறுவனம் முன்வந்தது. குறைந்த விலையில் தரமான அகர்பத்திகளை தயார் செய்யவேண்டும் என தேவஸ்தானம் கோரிக்கை விடுத்தது. அதன்படி, கோசாலையில் இதற்கான தொழிற்சாலை அமைக்கப்பட்டது. ஏழுமலையானுக்கு சூட்டிய மலர் மாலைகள் உட்பட தேவஸ்தானத்தின் அனைத்து கோயில்களில் இருந்தும் சுவாமிகளுக்கு சூட்டப்பட்ட மலர் மாலைகளையும் தோட்டக்கலை துறையினர் தினமும் சேகரித்து, தொழிற்சாலைக்கு கொண்டு வந்து ஒப்படைக்கின்றனர்.

    இங்கு மலர்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு இயந்திரம் மூலம் உலர வைத்து பொடியாக்கி சில வாசனை, ரசாயனங்கள் கலந்து அகர்பத்தி தயார் செய்யப்படுகிறது. ஏழுமலைகளை குறிக்கும் விதமாக 7 விதமான நறுமணத்துடன் அகர்பத்திகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனையை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தொடங்கி வைத்தார். இந்த அகர்பத்திகள் ரூ.45, ரூ.85 விலையில் இது விற்கப்பட உள்ளது. முதற்கட்டமாக திருமலையில் உள்ள லட்டு கவுன்டர் அறைகளை காலி செய்த பிறகு டெபாசிட் ரூபாய் வழங்கும் டெபாசிட் ரிபண்ட் கவுண்டரில் அகர்பத்திகள் விற்பனை செய்யப்பட உள்ளது.

    விரைவில் சென்னை, சேலம், வேலூர், கன்னியாகுமரி, பெங்களூரு உள்ளிட்ட நாடு முழுவதும் இருக்கும் தேவஸ்தான தகவல் மையங்களில் இந்த அகர்பத்திகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

     

  • palani murugan temple dharshan

    பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள சூழலில், கோவில்களில் வழிபாடு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு நீக்கியுள்ளது. இதனை தொடர்ந்து நாளை முதல் (திங்கட்கிழமை) பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    இதுகுறித்து பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் இணை ஆணையர் நடராஜன் நிருபர்களிடம் கூறும்போது, பழனி முருகன் கோவிலுக்கு 1 மணி நேரத்திற்கு 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    கோவிலின் இணையதள முகவரியான www.palanimurugan.hrce.tn.gov.in என தேர்வு செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.  இதுதவிர, 04545-242683 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் முன்பதிவு செய்து கொள்ளலாம். பஞ்சாமிர்தம், லட்டு, அதிரசம், முறுக்கு போன்ற பிரசாதங்கள் விற்பனை செய்யப்படும்.

    அன்னதானங்கள் பொட்டலங்களாக வழங்கப்படும். பக்தர்கள் தேங்காய், பூ மற்றும் பழம் போன்றவற்றை கொண்டு வருவதற்கு அனுமதி இல்லை.  பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

  • manakula vinayakar temple

    புதுச்சேரியில் அமைந்துள்ளது மணக்குள விநாயகர் திருக்கோவில். மிகவும் பிரபலமான ஆன்மீக மற்றும் சுற்றுலா தலம். 

    ஒரு வித பிரஞ்ச சாயலுடன் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோவில் இது. வங்காள விரிகுடா கடலுக்கு 400 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த கோவில். தென் சென்னையிலிருந்து 165 கி.மீ தொலைவில் இந்த கோவிலை அடையலாம். இந்த கோவிலின் மூலவர் பிள்ளையார் ஆவார். கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார்.

    கடற்கரை சாலைக்கு அருகில் இருப்பதால் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடமாக இக்கோவில் உள்ளது. 2015 ஆம் ஆண்டில் புனரமைக்கபட்ட கோவில் இது. 500 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கோவில் இங்கே அமைதுள்ளது. இந்த கோவிலுக்கான பெயர் காரணம் மணல் மற்றும் குளம் மணல் நிறைந்த குளத்தருகே அமைந்த விநாயகர் என்பதே காலப்போக்கில் மருவி மணக்குள விநாயகராக ஆனதாக நம்பிக்கை நிலவுகிறது.

    இங்கு நடைபெறும் விழாக்களில் முக்கியமானது பிரம்மோட்ச்சவம். 24 நாட்கள் பெரும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது. இந்த கோவிலின் அதிசயம் யாதெனில், பிள்ளையார் கோவில்களில் வேறெங்குமே இல்லாத வண்ணம் இங்கு மட்டும் பள்ளியறை உண்டு. இங்கே அவருடன் தாயார் உள்ளார். இவர் பள்ளி யறை நீங்குவதை உணர்த்தும் வகையில் உற்சவ மூர்த்தியாக செல்வது பாதம் மட்டுமே. 

    மூலவரான விநாயகர் திருவுருவம் அமைந்திருக்கும் பீடம் அமைந்திருப்பதே ஒரு கிணறு அல்லது குளத்தின் மீது தான் என்பது நம்பிக்கை. இந்த பீடத்திற்கு அருகில் ஒரு சிறு குழி உண்டு. இந்த குழி முழுவதும் நீர் மட்டுமே நிரம்பியிருக்கிறது. அந்த குழியின் ஆழத்தை ஒருபொதும் கணக்கிட முடிந்ததில்லை.

    இங்கிருக்கும் மற்றொரு அதிசயம் தங்க தேர். இது முழுக்க முழுக்க பக்தர்களின் நன்கொடையால் உருவானது. இந்த தேருக்காக பயன்படுத்தப்பட்ட தங்கம் 7.5 கிலோ வாகும். 10 அடி நீளமும், 6 அடி அகலமும் கொண்டது இந்த தேர். மேலும் இந்த இடத்தில் தான் 300 ஆண்டுகளுக்கு முன்பு தொள்ளை காது சித்தர் முக்தி அடைந்து சமாதியானார் என்பது வரலாறு. பிறந்த குழந்தைகளை முதன் முறையாக இந்த கோவிலுக்கு அழைத்து வரும் பழக்கம் இதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக உண்டு. 
     

  • Triplicane parthasarathy temple

    மங்களாசாசனம் பாடப்பெற்ற பெருமாளின் 108 திவ்ய தேசங்களில், சென்னை திருவல்லிக்கேணியில் இருக்கும திருக்கோயில் 61வது திவ்ய தேசம் ஆகும். கடமையிலிருந்து நழுவ நினைத்த அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்து உலகத்திற்கே 'கீதோபதேசம்" செய்த கண்ணன் வீற்றிருக்கும் தலம் சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவில். இத்தலத்திற்கு பஞ்ச வீரத் தலம் என்ற பெயரும் உண்டு.

    கோயில் சிறப்பு :

    இத்தலத்து எம்பெருமான் மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்கு (அர்ஜுனன்) தேரோட்டி (சாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார். இத்தலத்து மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் பெயரிலே புகழப்பெற்றுள்ளது.

    9 அடி உயர மூலவர், சாரதிக்குரிய மீசையுடனும், தன் பிரதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார். இதுவே இத்தலத்தின் மிக முக்கிய சிறப்பாக கருதப்படுகிறது. குடும்ப சமேதராக பெருமாள் காட்சியளிக்கிறார்.

    மகாபாரதப் போரில் பீஷ்மர் எய்த அம்புகளை அர்ஜுனனுக்காக தானே தன் மீது தாங்கியதால், திருமாலின் முகத்தில் பல்வேறு வடுக்கள் ஏற்பட்டன. இப்படி ஏற்பட்ட வடுக்களை இப்போதும் உற்சவர் திருமுகத்தில் காணலாம். 

    காயங்களுடன் இருப்பதால், எம்பெருமானுக்கு நைவேத்தியத்தில் சற்று அதிகமாக நெய் சேர்க்கப்படுகிறது. அதோடு மிளகாய் போன்ற காரமான பொருட்களை அதில் சேர்க்கப்படுவதில்லை.

    பெரும்பாலும் 4 கரங்களுடன் இருக்கும் பெருமாள் இந்த கோயிலில் கிருஷ்ணர் எனும் மானிட வடிவில் காட்சி தருவதால் இரண்டு கரங்களுடன் அருள்பாலிக்கிறார்.

    கோயில் திருவிழா :

    சித்திரை மாத பிரம்மோற்சவம், ஆனி மாத நரசிம்மர் பிரம்மோற்சவம், ஆடி மாதம் பௌர்ணமி மறுதினம் உற்சவரின் தங்ககவசம் கலைந்து திருமஞ்சனம் நடைபெறும், ஆவணி மாத ஸ்ரீP ஜெயந்தி, புரட்டாசி அனைத்து சனிக்கிழமைகளில் விசேஷம், மார்கழி பகல்பத்து, வைகுண்ட ஏகாதசி, இராப்பத்து திருவிழா, மாசி மாத தெப்ப உற்சவம் என பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    பிரார்த்தனை : 

    இங்குள்ள நரசிம்மரை வணங்கினால் கல்வி வேள்விகளில் சிறந்த ஞானம் கிடைக்கும். தவிர இத்தலத்து பெருமாளை மனமுருக வேண்டினால் கல்யாண வரம், குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும்.

    அழகாக பிறக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருப்பவர்கள், இந்த ஆலயத்தில் திருமாலின் இந்த கோலத்தை தரிசித்தால், அழகு என்பது அழியக்கூடியது, நிரந்தரமற்றது என்ற தத்துவத்தை உணர்வார்கள்.

    நேர்த்திக்கடன் :

    சுவாமிக்கு திருமஞ்சனம் செய்தும், சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

    பிரசாதம் :

    இக்கோயிலில் 'திருக்கண்ணமுது" எனப்படும் ஒரு வகை பாயாசம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது இக்கோயிலின் மற்றொரு சிறப்பு ஆகும்.

  • Visweswara swamy temple

    கோவையின் வடக்கே அமைந்துள்ளது அக்ரஹார சாமக்குளம் கிராமம். கரிகால் சோழனின் முக்கிய மந்திரிகளில் ஒருவரான சாமய்யன் என்பவர் இங்கு சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் குளம் வெட்டி விவசாயம் செழிப்புற ஏற்பாடுகள் செய்தார். ஆகவே இந்த கிராமம் அக்ரஹார சாமக்குளம் என அழைக்கப்படுகிறது.

    இங்குதான் ஸ்ரீவிசாலாட்சி சமேஸத ஸ்ரீவிஸ்வேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த சிவலிங்கம் உளிபடாத லிங்கத் திருமேனி.

    ஈசானிய மூலையில் அமைந்துள்ள சிவன் கோயிலில் ஸ்வாமி மூலவர் கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளனர். மேலும் அதிகார நந்தி, பிரதோச நந்தி, விஷ்ணு நந்தி, கிழக்கே அக்னி மூலையில் சூரியன், கன்னி மூலையில் ஸ்ரீவிநாயகப் பெருமான், மேற்குப் பிராகாரத்தில் ஸ்ரீ ஐயப்பன், வாயு மூலையில் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமண்ய ஸ்வாமி ஆகியோர் அருள்புரிகின்றனர். ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீ வைஷ்ணவி, ஸ்ரீதுர்க்கை ஆகியோர் சந்நிதிகளும் அமைக்கப்பட்டு சிறப்பாக பூஜைகள் நடக்கின்றன.