Tag: Temple

  • Mistakes to avoid while worshipping at temple and home!

    நாம் கடவுளை வணங்கும்போது, கோவிலிலோ அல்லது வீட்டிலோ, அறியாமல் சில தவறுகளைச் செய்கிறோம். இவை நாம் எதிர்பார்க்கும் நல்ல பலன்களைத் தடை செய்யலாம். இத்தவறுகளைத் தவிர்த்து, சரியான முறையில் வழிபாடு செய்ய உதவும் வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.

    முதலில், கோவிலில் தீபம் ஏற்றும்போது, அதற்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே ஏற்ற வேண்டும். சிலைகளுக்கு அருகில் தீபம் ஏற்றுவது தவறு, ஏனெனில் இது புனிதத்தைக் குறைக்கலாம். அதேபோல், வீட்டில் பூஜை செய்யும்போது, சுவாமி சிலைகளைத் தொடாமல் வழிபடுவது முக்கியம். சிலைகளைத் தொடுவது அவமரியாதையாகக் கருதப்படலாம். மேலும், பூஜைக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் (பூ, பழங்கள், பிரசாதம்) பூஜை செய்யப்படாத பொருட்களுடன் கலந்துவிடக் கூடாது. இதற்காக, பூஜைப் பொருட்களைத் தனியாக வைத்து, புனிதத்தைப் பேண வேண்டும்.

    வழிபாட்டின் போது மனதை ஒருமுகப்படுத்துவது அவசியம். பூஜை செய்யும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்; அசுத்தமான இடத்தில் வழிபாடு செய்வது பலனைத் தராது. மேலும், பூஜைக்கு முன் குளித்து, சுத்தமான ஆடைகளை அணிந்து, மனதைத் தூய்மையாக வைத்திருப்பது முக்கியம். பூஜையின் போது மந்திரங்களை உச்சரிக்கும்போது, சரியான உச்சரிப்புடன், புரிந்து செய்வது பலனை அதிகரிக்கும்.

    கோவிலில் வழிபாடு செய்யும்போது, மற்றவர்களுக்கு இடையூறு செய்யாமல், அமைதியாக நடந்துகொள்ள வேண்டும். பிரசாதத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து, அனைவருக்கும் மரியாதை அளிக்க வேண்டும். இறுதியாக, வழிபாட்டில் நம்பிக்கையும், பக்தியும் முக்கியம். மனதில் எந்தவித கவலையும் இல்லாமல், முழு ஈடுபாட்டுடன் வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.

    இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், நம் வழிபாடு முழுமையடையும். தவறுகளைத் தவிர்த்து, பக்தியுடன் வழிபடுவோம்; கடவுளின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

  • Benefits of lighting a ghee lamp!

    இறைவனை வழிபடுவதில் தீப வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. தீப ஒளியில் சரஸ்வதி தேவியும், சுடரில் லட்சுமி தேவியும், வெப்பத்தில் பார்வதி தேவியும் எழுந்தருளி அருள்புரிவதாக ஐதீகம் உள்ளது. ஆகவே, தீபத்தில் முப்பெரும் தேவியரும் கடாட்சம் செய்வதாக நம்பப்படுகிறது.

    விளக்குகளின் எண்ணிக்கை மற்றும் பலன்கள்:

    • 5 நெய் விளக்குகள்: சிறந்த கல்வி மற்றும் ஞானம் பெறலாம்.

    • 9 நெய் விளக்குகள்: நவகிரக தோஷங்கள் விலகும்.

    • 12 நெய் விளக்குகள்: தடைகள் நீங்கி, எடுத்த காரியம் வெற்றியடையும்.

    • 18 நெய் விளக்குகள்: கால சர்ப்ப தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் அகலும்.

    • 27 நெய் விளக்குகள்: திருமண தடை நீங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    • 36 நெய் விளக்குகள்: சகல தோஷங்களும் நீங்கும்.

    • 48 நெய் விளக்குகள்: தொழில் விருத்தி மற்றும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

    • 108 நெய் விளக்குகள்: அம்மனின் அருள் முழுமையாக பெறலாம்.

    நெய் விளக்கு ஏற்றிய பிறகு, கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வருவது சிறப்பு.

    நெய் தீப பரிகாரங்கள்:
    வீடுகளில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அல்லது மாலை 6 மணிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. இதனால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் நாகராஜ சிலைக்கு அபிஷேகம் செய்து, செவ்வரளி சாற்றி, நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்தால், தம்பதியரிடையே ஒற்றுமை நிலைக்கும்.

    பித்ரு தோஷம் உள்ளவர்கள் அமாவாசை அன்று பெருமாளுக்கு நெய் விளக்கு ஏற்றினால் தோஷம் நீங்கும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு விரதம் இருந்து, தொடர்ந்து நெய் தீபம் ஏற்றினால், விரைவில் கருத்தரிக்கலாம். தீபம் ஏற்றும்போது வடக்கு, கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்து ஏற்றினால் செல்வ செழிப்பு பெருகும்.

    கோவில்களில் அதிகாலை, நண்பகல், அந்தி பொழுது நெய் தீபம் ஏற்றுவது சிறப்பு. கருவறையில் உள்ள தூங்கா விளக்கில் நெய் ஊற்றி வழிபட்டால், கடுமையான பிரச்சினைகளும் விலகும். சமூக வலைதளங்களில், இந்த பரிகாரங்களை பலரும் பகிர்ந்து, இறைவனின் அருளை பெறுவதற்கு நெய் தீபம் ஏற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர்.

  • The holy place that cures rheumatism: Kumaramala Sangutheertham!

    புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில், காரையூர் வழியாக 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குமரமலை. இது முருகப் பெருமான் அருளால் பக்தர்களுக்கு புனிதமாக விளங்கும் தலமாகும்.

    பழநிக்கு சென்று முருகனை தரிசிக்க முடியாமல், உடல்நிலை பாதிக்கப்பட்டு வருந்திய ஒரு பக்தரின் கனவில் முருகன் தோன்றி அருள்பாலித்த தலமாக இது அறியப்படுகிறது. அந்த பக்தருக்கு முருகன் கனவில் அறிவுறுத்தியபடி, மலை மீது சங்கஞ்செடி, விபூதிப்பை, ருத்ராட்ச மாலை இருந்த இடத்தில் வேல் ஊன்றி வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. பின்னர், அங்கு பாலதண்டாயுதபாணி கோயில் எழுப்பப்பட்டு, பக்தர்களின் வழிபாட்டு தலமாக மாறியது.

    குமரமலை முருகனை வணங்கி, மலை மீது உள்ள சங்கு தீர்த்த நீரை சிறிது தலையில் தெளித்து, சிறிது பருகினால், வாத நோய் உள்ளிட்ட தீராத நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வாத நோய் தீர்ந்தால், பாதம் அடித்து வைப்பதாக பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர். இந்த சங்கு தீர்த்தம், ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    சமூக வலைதளங்களில், இந்த தலத்தின் புனிதம் குறித்து பக்தர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். குமரமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. உடல்நலம் மற்றும் மன அமைதி வேண்டி பலரும் இங்கு வந்து வழிபடுகின்றனர். இந்த தலம், முருக பக்தர்களுக்கு ஆன்மீக பலத்தையும், நோய்களிலிருந்து விடுதலையும் அளிக்கும் புனித தலமாக விளங்குகிறது.

  • Madurai meenatchi amman temple palalayam

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தங்க விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு வரும் 21-ஆம் தேதி பாலாலயம் செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகளான நிலையில் கோவில் வளாகத்தில்  தீ விபத்து  ஏற்பட்டு அதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது இதன் காரணமாக கும்பாபிஷேகம் ஆகமவிதிப்படி நடத்தபடவில்லை.

    இந்த நிலையில் கும்பாபிஷேகம் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக முதற்கட்டமாக 5 கோபுரங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி  விமான பாலாலயம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக கோவிலின் தங்க விமானங்கள், விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு வரும் 21ஆம் தேதி  பாலாலயம் நடைபெறவுள்ளது.

    21ஆம் தேதி  காலை 09.30 மணி முதல் விக்னேச்வர பூஜை, புண்யாஹவாசனம், நான்காம் கால யாக பூஜை, த்ரவ்யாஹீதி, மஹாபூர்ணாஹீதி, தொடர்ந்து உபசாரங்கள் நடைபெறும், 12.00 மணிக்கு மஹாதீபாராதனை, யாத்ராதானத்துடன் கலசங்கள் புறப்பாடாகும்.

    12:15 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர்  திருக்கோயில் தங்கவிமானம் மற்றும் கோபுர பாலஸ்தாபன மஹாகும்பாபிஷேகம், மஹாதீபாராதனை நடைபெறும் என்றும். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பாலாலய நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறவிருப்பதால் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் மேற்கொள்ள கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

  • Thirupathy temple urchavam

    திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் தெப்ப உற்சவத்தின் நான்காம் நாள் ஆன இன்று இரவு உற்சவர், ஆண்டாள் சமேதராக கிருஷ்ணர் அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

     ஐந்து நாட்கள் நடக்கும் தெப்போற்சவத்தின் நான்காம் நாளான இன்று உற்சவர் கிருஷ்ண அலங்காரத்தில் ஆண்டாள் சமேதராக கோவிலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக திருக்குளத்தை அடைந்தார்.

    தொடர்ந்து தெப்பத்தில் எழுந்தருளிய உச்சவர்கள் தெப்போற்சவம் கண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவிந்தராஜரின் தெப்போற்சவத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.

  • Annual Abhishekam in Ayyanar Temple!

    பரமக்குடி அருகே ராதாப்புலி தடியார் உடையவர் அய்யனார் கோயிலில் வருடாபிஷேகம்!

    இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள ராதாப்புலி ஸ்ரீ தடியார் உடையவர் அய்யனார் திருக்கோவில் 16 ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

  • Vinayakar Temple viswakarma jayanthi

    கரூரில் உள்ள விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்து. ஸ்ரீ விஸ்வகர்மா தொழில் கடவுளாக அனைவராலும் பூஜிக்கப்பட்டு வருகிறார்.

    இந்தியா முழுவதும் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.  கரூரில் தேர்வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோயிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு விஸ்வகர்மா ஜெயந்தி திருநாள் காரணமாக விஸ்வகர்மா ஹோமம், கணபதி ஹோமம், பஞ்சபிரம்ம ஹோமம், நவக்கிரக ஹோமம், காயத்ரி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் போன்றவை நடத்தப்பட்டன.

    அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், அரிசி மாவு, கரும்பு சாறு, பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சுவாமிகளுக்கு தீபாராதனை கும்பா ஆரத்தி, கற்பூர ஆரத்தி,மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

    இந்த சிறப்பு நிகழ்ச்சியானது விஷ்வகர்மா சித்தி விநாயகர் அறக்கட்டளை தலைவர் கருப்புசாமி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

  • Biravar Temple yagam

    விழுப்புரம் அருகே பைரவர் கோயிலில் 108 மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழுப்புரம் அருகே உள்ள அரசூர் கிராமத்தில்  அமைந்துள்ள ஶ்ரீ சம்ஹார பைரவர் ஆலயத்தில்  ஒவ்வொரு  தமிழ் மாதம் முதல் வரும் செவ்வாய் அன்று இந்த ஆலயத்தில் 108 மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் மற்றும் பூஜையுடன் சம்ஹார பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்படுவது வழக்கம்.

    அதன்படி ஆடி மாதம் முதல் செவ்வாய் கிழமை சம்ஹார பைரவருக்கு  சந்தனம் பன்னீர் குங்குமம் பால் தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  ரோஜா மல்லி என பல்வேறு வகை  மலர்களைக் கொண்டு சம்ஹார பைரவருக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. இந்த விழாவில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சம்ஹார பைரவரை வழிபட்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  • Siruvapuri murugan temple

    சென்னைக்கு வடமேற்கே சென்னை,கொல்கத்தா நெடுஞ்சாலையில் சிறுவாபுரி (சின்னம்பேடு) பாலசுப்ரமணிய பெருமான் ஆலயம் உள்ளது. வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் வளர்ந்து வந்த ராமனின் குழந்தைகளான லவனும், குசனும் ராமனின் குதிரையை கட்டிப்போட்டனர். ராமனே நேரில் வந்து சிறுவர்களுடன் போரிட்டு வென்று குதிரையை மீட்டு சென்றதாக ராமாயணம் கூறுகிறது. இப்படி ராமனிடம் லவனும் குசனும் சண்டை செய்த இடமே சிறுவாபுரி என்பது வரலாறு.

    சிறுவாபுரி கோயில்களின் பெருமைகள் பல. அதில் முருகம்மையார் கை தழைக்கச் செய்தது, தேவர் இருந்து அமுதுண்டது, தேவேந்திர பட்டணம் கிடைத்தது, இந்திரனுக்கு பதவி உயர்வு கிடைத் தது, லவன், குசன் ராமனின் அசுவத்தை கட்டிய இடம், மரகதப் பச்சை கல்லில் செய்யப்பட்ட தெய்வத் திருவுருவங்கள் அமைந்த தலம் என 12 சிறப்பம்சங்களை கொண்டது இத்திருத்தலம்.

    சிறுவாபுரிக்கு வரும் பக்தர்கள் வேண்டியபடி வீடு, வாகனம், தொழில், திருமணம் என குடும்பம் சிறக்க சிங்காரவேலன் அருள்பாலிக்கிறார். 6 வாரங்களுக்கு செவ்வாய் தோறும் சிறுவாபுரி முருகனை வணங்கினால் நினைத்த காரியம் ஈடேறுமென பக்தர்கள் கூறுகின்றனர்.

    சென்னை-நெல்லூர் சாலையில் அமைந்துள்ள திருத்தலம் ‘சிறுவாபுரி’. இத்தலத்தில் உள்ள முருகன் கோயிலில் முருகப்பெருமான் வள்ளியம்மையுடன் திருமணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். முருகன் திருத்தலங்கள் யாவற்றிலும் காணக் கிடைக்காத அபூர்வ காட்சியாகும் இது.

  • Ranipet Saibaba temple

    ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் உள்ளே  அருள்பாலித்து வரும் வினை தீர்க்கும் விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ சாய்பாபா சுவாமிக்கு நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

    இதில் முன்னதாக நேற்று இரவு வேத பண்டிதர்கள், மந்திரங்கள் ஓத அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம் உள்ளிட்டவை பல்வேறு ஹோமங்கள் யாகசாலையில் நடைபெற்றது தொடர்ந்து இன்று அதிகாலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, யஜமானர்கள் சங்கல்பம் பூர்ணாஹீதி யாகம் உள்ளிட்டவை யாகசாலையில் வைக்கப்பட்டு பூஜை செய்த கலசமானது  ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை முழுவதும் வலம் வந்து விமான கோபுர கலசத்திற்கு பல்வேறு பூ மலர்களை கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக நடைபெற்ற பின்னர் விமான கலசத்தில் மேலே தண்ணீரை ஊற்றி மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து கலசத்தின் மீது ஊற்றப்பட்ட புனித நீரை கோவில் வளாகத்தின் வெளியே இருந்த திரளான பக்தர்கள் மீது தெளிக்கப்பட்ட பின்னர் கருவறையில் உள்ள வெள்ளைக்கல் பதித்த ஸ்ரீ சாய்பாபா திருவுருவ  சிலைக்கு கும்பாபிஷேக தண்ணீர் மற்றும் பால் அபிஷேகங்களை செய்து தீபாராதனை காட்டப்பட்டது..

    இந்த கும்பாபிஷேக விழாவில் ராணிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.