Tag: Perumal

  • Tirupathy Perumal Ragasiyam

    பல கோடி ரூபாய் சொத்துக்களின் அதிபதியாக இருக்கும் ஏழுமலையானுக்கு தினந்தோறும் கோடி கோடியாக உண்டியல் காணிக்கை சேருகிறது என்றாலும் அவருக்கு படையல் மண்பானையில் வைக்கப்படும் தயிர்சாதம்தான். மன்னன் கொடுத்த தங்கப் பூ மாலையை விட மண்ணால் குயவர் செய்த மாலையை அன்போடு ஏற்றுக்கொண்டவர் திருப்பதி ஏழுமலையான்.

    மன்னன் தொண்டைமானுக்கு ஏழுமலையான் மீது பக்தியோடு பாசமும் அதிகம். ஏழுமலையானுக்கு ஆலயம் அமைத்து தினமும் பொன்மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான். ஒருநாள் பூஜையின்போது பொன்மலர்களுக்கிடையே மண்மலர்களும் வந்து விழுந்தது. தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என உள்ளுக்குள் வருந்தினான்.

    பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். பிறவியிலேயே அவனுக்கு கால் ஊனம். தனது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் ஏழுமலையான் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான். வேங்கடவனும் அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்கு கனவில் காட்டி பின்பு மறைந்து விட்டார். பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள் புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரம்.

    பீமய்யாவும், தனது கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே செய்தான். அதன்பின்னர் மண்ணால் ஏழுமலையானின் உருவத்தை வடித்து, மலர்கள் தூவி வழிபட்டு வந்தான். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யன், பெருமாளின் சிந்தனையிலேயே தொழிலையும் செய்து வந்தான். 

    இப்படி தொழில் செய்து கொண்டிருக்கும் போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான். அச்சமயயங்களில் தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாத நிலையிலேயே, பிசைந்து கொண்டிருக்கும் களி மண்ணையே மலர்களாக பாவித்து பெருமாளுக்கு அர்ச்சிப்பான்.

    இது இப்படியிருக்க குழப்பத்திலிருந்த தொண்டைமான் ஒருநாள் அபூர்வக் கனவொன்றைக் கண்டான். அக்கனவில் வேங்கடநாதன் தோன்றி, தமது பக்தன் பீமய்யன் செய்யும் பூஜையே நீயும் செய்து பார் அப்போது உண்மை விளங்கும் என்று கூறி மறைந்தார். தொண்டைமானும் திருமால் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பீமய்யன் செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனித்தான். 

    உடனே பீமய்யனைச் சென்று கட்டித் தழுவிக்கொண்ட தொண்டைமான் அவனிடம் உன் பக்தி உயர்வான பக்தி. உனது வழிபாட்டைத் திருமால் ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்றான்.

    ஏழுமலையான் அன்றைய தினம் பீமய்யனின் கனவிலும் தோன்றினார். அதைப்பார்த்த பீமய்யாவின் மெய்சிலிர்த்தது. உன் பக்தியின் பெருமையை என்று பிறர் கூற அறிகின்றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுண்டத்திற்கு அழைத்துக் கொள்வேன் எனக் கூறியிருந்தார். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வழிபட்டால், செல்வமும், நிம்மதியும் கிடைக்கும் என்பதோடு, முக்தியும் வாய்க்கும் என்பது ஐதீகம்.
     

  • Perumal Saturday

    புதனுக்கு சனி பகவான் நட்பு கிரகம். அதனால் சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்தால் சனியின் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காப்பார்.

    பெருமாளுக்குரிய கிரகமான புதன் கன்னி ராசியில் புகுவதும், உச்சம் பெறுவதும் புரட்டாசியில்தான் நிகழ்கிறது. அதே நேரம் புரட்டாசி மாதத்தில்தான் சூரியனும் கன்னி ராசியில் புகுகிறது. ஆகவேதான் புரட்டாசி சனிக்கிழமைகள் அன்று விரதம் மேற்கொள்கிறார்கள். 

    புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ‘ஓம் நமே நாராயணாய’ என்ற திரு மந்திரத்தை ஓதி நாராயணனை வழிபட வேண்டும். அன்று ஒரு பொழுது மட்டுமே உணவு எடுத்துக் கொள்வது நல்லது. 

    அதுவும் சாத்வீகமான எளிய உணவாக இருத்தல் வேண்டும். மாலையிலும் நீராடி பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் வேண்டும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே நீராடி புருஷோத்தமனை வணங்கிய பின்பு சாதாரணமான உணவுகளை உண்ணலாம். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் சனிக் கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும். 

    மகரம், கும்பம் ராசிகளுக்கு அதிபதியாகவம், லக்னங்களில் ரிஷபம், கன்னி, துலாம், கும்பத்திற்கு யோகாதிபதி ஆகவும் விளங்குகிறார். இவர்கள் தங்கள் பலன்களை அதிகரித்துக் கொள்ளவும், மற்ற ராசியினரும் லக்னத்தினரும் அவரால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ளவும். தவறாமல் சனிக்கிழமை விரதம் இருக்க வேண்டும்.
     

  • Perumal Sayan Kola Thalangal

    மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களையும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களையும் அவசியம் தரிசிக்கவேண்டும்.

    அனைத்து தலங்களையும் தரிசிக்க முடியாவிட்டாலும் தங்களால் எத்தனை முடியுமோ அத்தனை தலங்களை தரிசிக்கவேண்டும்.

    ஸ்ரீரங்கம் – வீர சயனம்
    மகாபலிபுரம் – தல சயனம்
    திருமயம் – போக சயனம்
    திருக்கோஷ்டியூர் – பால சயனம்
    கும்பகோணம் – உத்தான சயனம்
    திருவனந்தபுரம் – அனந்த சயனம்
    திருமோகூர் – பிரார்த்தனா சயனம்
    திருப்புல்லாணி – தர்ப்ப சயனம்
    திருச்சித்திரக்கூடம் – போக சயனம்
    திருநீர்மலை – மாணிக்க சயனம்
    ஸ்ரீவில்லிபுத்தூர் – வடபத்திர சயனம்

    திருமாலின் சயனங்கள் 10 வகைப்படும். அவைகள்:

    1. ஜல சயனம்
    2. தல சயனம்
    3. புஜங்க சயனம் (சேஷசயனம்)
    4. உத்தியோக சயனம்
    5. வீர சயனம்
    6. போக சயனம்
    7. தர்ப்ப சயனம்
    8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை)
    9. மாணிக்க சயனம்
    10. உத்தான சயனம்
     

  • perumal slogam

    இந்த துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

    துன்பங்களை போக்கும் பெருமாள் ஸ்லோகம்
    ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
    ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
    ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்
    ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே !

    பொதுப்பொருள் : 

    திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

    இத்துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். தவிர புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.
     

  • Thirupathy Ezhumalayan Puspayagam

    திருப்பதி ஏழுமலையானுக்கு 7 டன் மலர்களால் புஷ்பயாகம் நடைபெற்றது. இதில் ஏராளமனோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை மாத திருவோண நட்சத்திரத்தில் ஆண்டு தோறும் ஏழுமலையானுக்கு புஷ்பயாகம் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் இருந்து 7 டன் மல்லி, முல்லை, ரோஜா, சாமந்தி உள்ளிட்ட மலர்கள் கொண்டு வரப்பட்டன.

      இந்த மலர்கள் பாபவிநாசம் வனத்தில் வைக்கப்பட்டு காலை 10 மணிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் மேள தாளம் முழங்க ஏழுமலையான் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

    இதில் திருப்பதி தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி, செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி மற்றும் உறுப்பினர்கள், அர்ச்சகர்கள், உள்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

    மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை ஏழுமலையானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மலர் அபிஷேகம் நடைபெறுகிறது.
     

  • Perumal Grapes Alangaram

    சென்னை திருவொற்றியூரில் 400 ஆண்டு பழமை வாய்ந்த காலடிப்பேட்டை கல்யாண வரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது வார சனிக்கிழமை பெருமாளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது.

    மூலவர் கல்யாணவரதராஜ பெருமாளுக்கு விதவிதமான வண்ண மலர்களால் பிரமாண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

    இதனையடுத்து உற்சவர் பவழ வண்ண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்களுடன் பட்டாடை உடுத்தி அலங்காரப் பொருட்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட உலர் திராட்சை மாலைகள் அணிவிக்கப்பட்டு ராஜ அலங்காரத்தில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    புரட்டாசி மாதம் நான்கு வாரங்களிலும் கல்யாண வரதராஜப் பெருமாள் கோவிலில் விதவிதமான பழங்களிலும் பருப்பு வகைகளிலும் மாலைகள் அணிவிக்கப்பட்டு வருவதனால் ஆண்டுதோறும் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

    பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் வீடுகளில் பூஜை செய்து பின்னர் கோவிலுக்கு சென்று வழிபடுவது நடைமுறையில் ஒன்று இதனை அடுத்து மூன்றாவது வாரமான புரட்டாசி சனிக்கிழமையில் காலை முதலே கோவிலில் கூட்டம் குவியத் தொடங்கியுள்ளது நவராத்திரி பூஜைகள் நிறைவு பெறும் நிலையில் ஆயுத பூஜை விஜயதசமி தொடர் விடுமுறை தினமான சனிக்கிழமை ஆன இன்று  அதிகாலை முதலே கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
     

  • Thirupathy Perumal Padiyai Kadakkum Ore Prasadam

    திருப்பதி பெருமாளின் கருவறைப் படியைக் கடந்து தயிர்சாதம் நிறைந்த ஒரு மண்சட்டியைத் தவிர வேறு எந்தப் பிரசாதமும் செல்வதில்லை.  இந்தக் கருவறைப் படியும் சரி, மண்சட்டி தயிர்சாதமும் சரி இரண்டின் பின்னணியில் பக்திபூர்வமான வரலாறு உண்டு. 

    கருவறைப் படி குலசேகரப்படி என்றே அழைக்கப்படுகிறது.

     யார் இந்தக் குலசேகரன்? 

    சேரநாட்டு திருவஞ்சைக்களத்தில் சேரர் குலத்தில் தோன்றிய அரசர்தான் குலசேகரர்.  கொல்லிக் காவலன், கூடல் நாயகன், கோழிக்கோ, மாதவன் மாமன் என்றெல்லாம் சிறப்பித்துப் போற்றப்பெறும் குலசேகரர் பரந்தாமனிடம் கொண்ட பக்தியால் ஆழ்வாராகப் போற்றப் பெறுகிறார். 

    பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான இவர், திருமாலின் கௌஸ்துப மாலையின் அம்சமாகத் தோன்றியவர்.  சிறுவயது முதற்கொண்டே ராமபிரானின் மீதும், கிருஷ்ணரின் மீதும் அளவு கடந்த பக்தியைக் கொண்டிருந்தார். 

    நல்லாட்சி புரிந்த இவருக்குப் பாண்டிய மன்னர் தனது மகளைத் திருமணம் செய்து கொடுத்தார். வெற்றித்திருமகளை தன்னருகே வைத்திருந்த குலசேகரர் திருமாலின் அடியார்கள் மீது பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தார்.

    ஒருமுறை ராமாயணம் உபந்நியாசம் கேட்டுக் கொண்டிருந்த போது, ராமபிரான் முனிவர்களின் தவத்தைக் கெடுக்கும் அரக்கர்களை அழிக்கப் புறப்படுகிறார் என்ற செய்தியை அறிந்ததும், ராமபிரானுக்கு உதவ உடனே தனது படைகளை ஆயத்தமாகும்படி கட்டளையிட்டார். அந்த அளவுக்கு ராமபிரானிடம் பக்தி செலுத்தினார். 

    எப்போதும் திருமால் அடியார்களுடனே இருந்தால், நாட்டை நிர்வகிப்பது எப்படி? எனவே, இவரைச் சுற்றி இருந்த அடியவர்கள் கூட்டத்தை அப்புறப்படுத்த எண்ணி, இவரது அமைச்சர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர்.

     ஒருமுறை அரண்மனைக்கு வந்திருந்த அடியார்களுடன் குலசேகரர் பகவத் விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தபோது, அமைச்சர்கள் ஒரு நவரத்தின மாலையை ஒளித்து வைத்துவிட்டு, அந்த மாலையை அடியார்கள் திருடிக் கொண்டதாகக் குற்றம் சாட்டினார்கள். 

    அடியார்கள்மீது பழிசுமத்தியது பொறுக்கமாட்டாத குலசேகரர்,  ஒரு பானையைக் கொண்டு வரச் செய்து அதில் கொடிய விஷமுள்ள கருநாகத்தை இடச் செய்தார். பிறகு 'ராமன்மீது ஆணையாக இந்தத் திருட்டை அடியார்கள் செய்திருக்கமாட்டார்கள்' என்று நான் சொல்வது உண்மையானால், இந்தக் கருநாகம் என்னைத் தீண்டாதிருக்கட்டும்' என்று சொல்லியபடி பானைக்குள் கையை விட்டார். கருநாகம் குலசேகரரை எதுவும் செய்யவில்லை. 

    எனவே நடந்தது அமைச்சர்களின் சூழ்ச்சி தான் என்பதைப் புரிந்துகொண்டு, மகனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு, அரசப் பதவியைத் துறந்து திவ்வியதேச யாத்திரையை மேற்கொண்டார். 

    முதலில் திருவரங்கம் சென்றார். அங்கு பவித்ரோற்சவ மண்டபம், மூன்றாம் மதில் உள்ளிட்ட  பல்வேறு ஆலய திருப்பணிகளைச் செய்தார். 

    திருவரங்கத்தில்தான் தனது அருமை மகளை ரங்கநாதருக்குத் திருமணம் செய்து மகிழ்ந்தார். இன்றும் சேரகுலவல்லியோடு ரங்கநாதர் காட்சி தருவதைக் காணலாம். பெரியாழ்வார் போலவே தனது மகளை அரங்கனுக்குத் திருமணம் செய்ததால் இவரும் 'மாதவன் மாமன்' எனும் பெருமை பெற்றார். 

    திருமாலின் மீது பக்தி கொண்டு 105 பாசுரங்களைக் கொண்ட 'பெருமாள் திருமொழி' என்னும் பிரபந்தத்தை இயற்றினார்.  தலம்தோறும் சென்று திருமாலை வணங்கி பேறு பெற்றார். 8 வைணவத் தலங்களைத் தரிசித்துப் பாடி மங்களாசாசனம் செய்தார். 

    திருமலை திருப்பதிக்குச் சென்ற குலசேகர ஆழ்வார் வெங்கடேசப்பெருமாளின் அழகில் மயங்கி பாடல்களைப் பாடினார். எனக்கு தேவ பதவி போன்ற உயர்ந்த பதவிகள் எதுவும் தேவையில்லை. 

    திருவேங்கடத்துப் பொய்கையில் ஒரு மீனாகவோ, அல்லது ஏதேனும் ஒரு தாவரமாகவோ பிறக்கமாட்டேனா என்றெல்லாம் ஏங்கிப் பாடியவர், எப்போதும் திருவேங்கடவன் கருவறைப் படியாக இருந்து தினமும் பெருமாளின் பவள வாய் அழகை தரிசிக்கும் பேறு கிடைக்காதா என்றும் ஏங்கிப் பாடினார். 

    'செடியாய வல்வினைகள் தீர்க்குந்திருமாலே நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல் அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.' என்றெல்லாம் பாடினார். 

    இவரது வேண்டுதல் பெருமாளை உருக்கியது. அதன் காரணமாகவே, குலசேகரரின் பெயரால் அந்தப் படி அழைக்கப்படும் பேறுபெற்றார். ஆம், இன்றும் திருமலையின் வாயிற்படி இவர் பெயராலேயே குலசேகரப்படி என்றே  அழைக்கப்படுகிறது. 

    இந்தக் குலசேகரப் படியைக் கடந்து தயிர்சாதம் நிரம்பிய ஒரே ஒரு மண்சட்டியைத் தவிர வேறு எந்த வைர,வைடூரிய, தங்க, வெள்ளி பாத்திரங்கள்கூட செல்வதில்லை

    தயிர் சாதம் நிரம்பிய ஒரே ஒரு மண்சட்டி மட்டுமே குலசேகரப் படியை தாண்டி பெருமாளிடம் செல்வதன் பின்னணியில், ஒரு ஏழை மண்பாண்டத் தொழிலாளி, பெருமாளிடம் கொண்டிருந்த பக்தியின் மகத்துவம் அடங்கியுள்ளது.

     பீமன் என்ற மண்பாண்டத் தொழிலாளி திருமலை பெருமாளின் மீது தீராத பக்தி கொண்டவன். இவன் செய்து தரும் மண்பாண்டங்கள் பெருமாளின் பூஜைக்குப் பயன்படுத்தப்பட்டது. பாண்டங்கள் செய்தது போக மீதமிருக்கும் மண்ணில் இவன் செய்து சூட்டும் மண் மலர்களை ஏற்றுக்கொண்ட பெருமாள், 

    தொண்டைமான் அரசரின் தங்க மாலைகளைக் கூட ஏற்றுக் கொள்ளவில்லையாம். அத்தனை பேறு பெற்ற பீமனின் நினைவாகவே இன்றும் பெருமாளுக்கு மண்சட்டியிலேயே நைவேத்தியமாக தயிர் சாதம் அளிக்கப்படுகிறது.

    ஆலயங்கள் பலவற்றை தரிசித்து மனம் மகிழ்ந்த குலசேகர ஆழ்வார்,  இறுதியாக திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோயில் திருத்தலம் வந்து அங்குள்ள பெருமானை தரிசித்து வைகுந்தலோகம் சென்றார். 

    அரச போகங்களை எல்லாம் துறந்து அரங்கனின் சேவடிக்கே தன்னை ஒப்படைத்த குலசேகர ஆழ்வார்,  வைணவ அடியார்களுக்கு எல்லாம் ஓர் ஒப்பற்ற உதாரணப் புருஷர்.

  • Thirupathy Perumal Adhisaya Thagavalgal

    தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

    திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள்.

    ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

    இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

    ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

    பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

    உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

    பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

    ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?

    ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

    பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

    சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

    ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

    ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

    பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

    மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

    அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

    வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.

    மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.

    அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

    திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

    சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

    ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

    ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

    1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.
     

  • Perumal Kalyanam

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள வரதராஜ பெருமாள்கோவிலில்  திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. 

    திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் உற்சவ மூர்த்தி தேகளீசபெருமாள்  ஆண்டு தோறும் கடலூரில் நடைபெறும் மாசிமக தீர்த்தவாரி உற்சவத்தில் கலந்து கொள்வது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடைபெற உள்ள மாசி மக தீர்த்தவாரி உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த 14ஆம் தேதி திருக்கோவிலில் இருந்து கடலூருக்குக்கு வருகை தந்தார். தீர்த்தவாரிக் கு பிறகு திருக்கோவி லூருக்கு திரும்பும் வழியில் திருவதிகை ரங்கநாதர் பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

    தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேகளீசபெருமாளுக்கு, திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு சூடி கொடுத்த சுடர் கொடியால்ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலிலிருந்து மாலைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.
     
    இதில் ஆலய திருப்பணி குழு தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் தொழிலதிபர்கள் சீனுவாசன்,  அரசியல் கட்சி பிரமுகர்கள் வர்த்தக பிரமுகர்கள் பொதுமக்கள்  ஆகியோர் கலந்து கொண்டன இதற்கான ஏற்பாடுகளை இந்து சமுதாய ஆன்மீக அறக்கட்டளை நிர்வாகிகள்,தாமரை பூ குழுவினர் திருக்கோவில் பணியாளர்கள்  சிறப்பாக செய்து இருந்தனர். 

  • Thirukostiyur Perumal koil theppa thiruvizha

    சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவ விழா இன்று துவங்கியது.

    சிவகங்கை தேவஸ்தான ஆளுகைக்கு உட்பட்ட சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் மாசி தெப்ப உற்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். மூலவர் சன்னதியில் உத்தரவு வாங்குதல் போன்ற பூர்வாங்க பூஜைகள் நேற்று நடந்து இன்று  பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியருடன் நின்ற திருக்கோலத்தில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.

    தொடர்ந்து   திருவீதி வலம் வந்து பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது   பெருமாளுக்கும் தேவியருக்கும் காப்புக் கட்டி உத்ஸவம் துவங்கியது இன்று இரவில் தங்கப் பல்லக்கில் பெருமாள் புறப்பாடு நடைபெறும். தினசரி காலை மற்றும் இரவில் பெருமாள் திருவீதி புறப்பாடு நடைபெறும். 

    பிப்.,15ல் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல், பிப்.,7 ல் சூர்ணாபிேஷகம், பிப்.,18 ல் வெண்ணெய்தாழி சேவையும், பிப்.,19ல் பகல் 11:00 மணிக்கு பகல் தெப்பமும், இரவு 10:00 மணிக்கு இரவு தெப்பமும் நடைபெற உள்ளது மறுநாள் தீர்த்தவாரியுடன் உற்ஸவம் நிறைவடையும். இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது தெப்ப உற்சவத்தில் பல லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்க படுகிறது