Tag: பகவான்

  • 2016-10-31-14-12-52

    திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது வரும் நவம்பர் 6-ம் தேதி வரை 7 நாட்களுக்கு வெகு விமரிசையாக சஷ்டி விழா நடைபெற உள்ளது.

    இதில், தினந்தோறும் காலை புஷ்பம், பட்டு, தங்கக் கவசம், திரு வாபரணம், வெள்ளி மற்றும் சந்த னக் காப்பு ஆகிய அலங்காரங் களில் சுப்ரமணிய சுவாமி அருள் பாலிக்க உள்ளார். மாலையில் ஆன்மிக சொற்பொழிவு, இன்னிசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    திருவிழாவின் இறுதி நாளான நவ.6-ம் தேதி காலை 11 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெறும். இன்று முதல் நவ.5-ம் தேதி வரை உற்சவரான சண்முகருக்கு லட்சார்ச்சனையும், நவ.5-ம் தேதி மாலை 5 மணியளவில் புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது. நவம்பர் 5-ம் தேதி வரை இருவேளைகளில் தேவார பாராயணம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • 2016-10-31-13-15-58

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
    முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
    அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
    தொடர்ந்து காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.
    இரவு 7 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் தங்கதேரில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    முதலாம் திருநாளில் இருந்து 5-ம் திருநாள் வரையிலும் தினமும் மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும். பின்னர் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    2-ம் திருநாளில் இருந்து 5-ம் திருநாள் வரையிலும் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும்.

    1-ம் திருநாளில் இருந்து 6-ம் திருநாள் வரையிலும் மதியம் யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருள்கிறார். பின்னர் வேல்வகுப்பு, வீரவாள்வகுப்பு பாடல்களுடனும், மேள வாத்தியங்களுடனும் சண்முகவிலாசம் சேர்கிறார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெறும்.

    6-ம் திருநாளான வருகிற 5-ந் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெறும். பின்னர் யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். அங்கு தீபாராதனைக்கு பின்னர் சுவாமி திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெறும்.

    மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி- அம்பாளுக்கு அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் சுவாமி-அம்பாள் கிரிப்பிரகார உலா வந்து கோவில் சேர்கிறார்கள்.

    7-ம் திருநாளான 6-ந் தேதி கந்த சஷ்டி விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. 5 மணிக்கு அம்பாள் தவசு காட்சிக்கு புறப்படுகிறார். காலை 9 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.

    அன்று மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் சுவாமி- தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

  • 2016-10-30-16-48-02

    சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானது ஆகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரக்கூடிய சனி பிரதோஷங்கள் சனி மஹாப்பிரதோஷங்கள் என்று வழங்கப்படுகின்றன.

    ஆலகால விஷத்தினை ஏற்றுக்கொண்டு தேவர்களை சிவன் காத்தருளியது கார்த்திகை மாத சனிக்கிழமை திரயோதசி என்று சொல்லப்படுகிறது. எனவே எல்லா மாதங்களை விட கார்த்திகையில் வரும் சனி பிரதோஷம் மிகவும் விசேஷம் ஆனது ஆகும்.

    கார்த்திகை மாதம் தமிழர்களிடத்தே மிகவும் சிறப்புவாய்ந்த ஒன்றாகும். கார்த்திகையில் திங்கள்கிழமை சோமவார விரதமாக சிவாலயங்களில் கொண்டாடப்படும். இந்தமாத பவுர்ணமியில் அண்ணாமலையார் தீபம் கார்த்திகை தீபமாக கொண்டாடப்படுகிறது. அது மட்டுமின்றி செவ்வாய்க்கிழமைகள் துர்க்கை வழிபாடு செய்ய உகந்ததாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட கார்த்திகை மாதத்தில் வரும் சனிப்பிரதோஷத்தை சனி மஹா பிரதோஷம் என்று வழங்குவது மிகவும் சிறப்பாகும்.

    ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால்,ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும்.
    அடுத்து வரும் நவம்பர் மாதத்தில் இரண்டு பிரதான சனி மஹா பிரதோஷம் வர உள்ளது.

    அதாவது நவம்பர் 12 ஆம் தேதி (ஐப்பசி 27) துலாமாதத்தில் சுக்லபட்சத்தில் ரேவதி நட்சத்திமத்துடன் கூடிய சனி மஹா பிரதோஷம்.
    அதேபோல நவம்பர் 26 ஆம் தேதி (கார்த்திகை 11) விருகஷிக மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் சித்திரை / ஸ்வாதி நட்சத்திரத்துடன் கூடிய சனி மஹா பிரதோஷம் ஆகும்.

    பிரதோஷ காலத்தில் எல்லா தேவர்களும் சிவாலயத்தில் கூடுவதால் பிற சன்னதிகளில் தரிசனம் கிடையாது. சிவாலய தரிசனம் எல்லா தெய்வங்களை வணங்கிய பலன் கொடுக்கும். அதுவும் சனி மஹாப்பிரதோஷங்களில் சிவாலயம் சென்று வழிபடுவது 140 பிரதோஷத்திற்கு சென்று வழிபட்டதற்கு சமம்.

    தென்நாடுடைய சிவனே போற்றி,

    எந்நாடவர்க்கும் இறைவா போற்றி. …. போற்றி

    ஓம் நமசிவாய!

  • 2016-10-29-14-16-17

    வாழ்க்கையில் துன்பமயமான இருள் அகன்று ஒளிமயமான நல்ல எதிர்காலம் உதயமாகவேண்டும் என்பதற்கு பொருத்தமான நாளாக அமைந்துள்ளது தீபாவளித் திருநாள்.
    வரிசையாக தீபங்களை ஏற்றிக்கொண்டாடுவதே தீபாவளிப் பண்டிகையின் சிறப்பாகும். புற ஒளி ஏற்றி உள் ஒளி பெறுவதே தீபாவளியின் மகத்துவமாகும்.
    புற இருள் தன்னைக் காட்டும், ஏனைய பொருள்களை மறைக்கும். ஆணவ இருள் தன்னையும் மட்டுமன்றி பிறபொருள்களையும் மறைத்து நின்று பெரும் துன்பத்தைச் செய்யும் இதனை மனதிற்கொண்டு தீபாவளியன்று ஆலயங்களில் ஒளி விளக்கேற்றியும், இதயங்களில் ஞான விளக்கேற்றியும் அருட்பெரும் ஜோதியான ஆண்டவனை வழிபடுவதன் மூலம் ஆணவ இருள் அகலும் இருள் நிலவிய இடத்தில் இன்பம் விளையும்” என்கிறார் திருமுருக கிருபானந்த வாரியார்.
    தீபாவளி நன்னாளிலே செய்யப்படுகின்ற இறைவழிபாடும் பிரார்த்தனையும் அனைவரினதும் வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தை தோற்றுவிக்கும் என நம்பிக்கை வைப்போம்!

  • 2016-10-29-13-38-36

    சபரிமலை நடை திறப்புக்கு சில நாட்களே உள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
    பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜையின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. இதனால் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    மண்டல பூஜையையொட்டி சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    சபரிமலையில் உள்ள புனித நதியான பம்பை நதி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சபரிமலைக்கு செல்லும் பெருவழி பாதை உள்பட 17 சாலைகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. போதுமான மின்விளக்கு வசதிகள், கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணியும் நிறைவடைந்து உள்ளது.

  • 2016-10-28-16-21-09

    வாழும் கலையின் தோற்றுனரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், தீவிரவாதத்தால் பாதிக்கப் பட்ட பிரான்ஸ், போலந்து, ஸ்வீடன் , நார்வே போன்ற நாடுகளுக்கு அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி பயணம் மேற்கொண்டார்.
    இந்த பயணத்தின் போது அவர் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் பாராளுமன்றங்கள் போன்றவற்றில் பல்வேறு துறைகளை சார்ந்த ஆயிரக்கணக்கான ஐரோப்பியர்களை சந்தித்து தனது அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான செய்தியை அளித்தார்.
    பின்னர் நார்வே பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய அவர் அந்நாட்டின் பாராளுமன்றத் தலைவரான ஒலிமிக் தொம்மெஸ்ஸெனை சந்தித்தார்.
    முன்னதாக திங்கள் கிழமையன்று மாலை குருதேவர் சமுதாய மக்களை சந்தித்து உரை நிகழ்த்தினார். மேலும் வாழும் கலை அமைப்பும், நார்வே ஒலிம்பிக் விளையாட்டு குழுவும் ஒன்றிணைந்து விளையாட்டு வீரர்களுக்கு மேலும் பல நம்பிக்கை அளிக்கும் திட்டங்களை நிகழ்த்துவதென்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தீர்மானித்தனர்.

  • 2016-10-28-09-54-47

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோதண்டராமர் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.
    திருப்பதி கோதண்டராமர் கோயிலில் வரும் 30-ம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதையொட்டி, கோயிலைப் பல்வேறு வாசனை திரவியங்களால் சுத்தப்படுத்தும் கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது. காலை சுப்ரபாதம், தோமாலை சேவையை தொடர்ந்து திருமஞ்சன சேவை நடைபெற்றது. இதையொட்டி, மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர், சிகைக்காய், பச்சை கற்பூரம் போன்றவற்றால் கர்ப்பகிரகம் உட்பட கோயில் வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டது.
    இதேபோன்று தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி, திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில், கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது.

  • 2016-10-28-09-45-20

    தெலுங்கு பஞ்சாங்கத்தின்படி, கார்த்திகை மாதம் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை மாதத்தையொட்டி, மாதம் முழுவதும் திருப்பதியிலுள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஹோமங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நவம்பர் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை கோயிலில் ஹோமங்கள் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    ஹோமங்கள் சிறப்பாக நடைபெற, அக்டோபர் 31-ம் தேதி முளைவிடுதல் உற்சவம் நடைபெற உள்ளது.
    தொடர்ந்து நவம்பர் 1 ம் தேதி முதல் 3 ம் தேதி வரை கணபதி ஹோமம் நடைபெறுகிறது.
    4, 5 தேதிகளில் சுப்பிரமணிய சுவாமி ஹோமம், 6-ம் தேதி நவகிரக ஹோமம், 7-ம் தேதி தட்சிணாமூர்த்தி ஹோமம், 8-ம் தேதி முதல் 16 ம் தேதி வரை காமாட்சி அம்மன் ஹோமம் எனப்படும் சண்டி யாகம் நடைபெறுகிறது.
    தொடர்ந்து 17-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை கபிலேஸ்வர சுவாமி ஹோமம், 28-ம் தேதி காலபைரவ சுவாமி ஹோமம், 29-ம் தேதி சண்டிகேஸ்வர ஹோமம் என கோயிலில் உள்ள மூர்த்திகள் அனைவருக்கும் ஹோமங்கள் நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  • 30

    ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான மாமல்லபுரம் 63-ஆவது திவ்யதேசமாக விளங்குகிறது. இங்குள்ள தலசயனப் பெருமாள் கோயிலில் வழிபடுவதன் மூலம்நிலம் சம்பந்தமான பிரச்னைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    தலசயனப்பெருமாள் கோயிலில் பூதத்தாழ்வார் திருஅவதார உற்சவம் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.
    நவம்பர் மாதம் 8-ம் தேதி வரை நடைபெறும் இத்திருவிழாவில், தினமும் காலை மாலை ஆகிய இருவேளைகளும் உற்சவம், திருமஞ்சனம், திருவீதி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முக்கியமாக நவம்பர் 8-ம் தேதி பூதத்தாழ்வார் திருமஞ்சனம், மங்களாசாசனம் திருக்கைத்தல சேவையும், மண்டப அலங்கார திருமஞ்சனமும் நடைபெறுகின்றன.

  • 2016-10-27-14-49-13

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அறைகள் வாடகைக்கு எடுக்க மத்திய, மாநில அரசின் ஆதார் அடையாள அட்டை கட்டாயம் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர்.

    அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பாக 50 ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரையிலான அறைகள் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் திருப்பதி, திருமலையில் தேவஸ்தான ஓய்வு அறைகள் வாடகைக்கு பெற இனி கட்டாயம் மத்திய, மாநில அரசின் மூலம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம் என, தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

    ஆதார், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்டவைகளில் எதெனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை தேவை எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.