திருப்பதி ஏழுமலையானுக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் நிறுத்தப்பட்ட புஷ்பயாகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் 1980ம் ஆண்டு முதல் மீண்டும் தெலுங்கில் வரும் கார்த்திகை மாதத்தில் ஸ்ராவண நட்சத்திரத்தில் நடத்தி வருகிறது.
அதன்படி வருடாந்திர புஷ்ப யாகத்தையொட்டி பாபவிநாசம் சாலையில் உள்ள தோட்டத்துறை அலுவலகத்தில் இருந்து அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி, தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ் ஆகியோர் தலைமையில் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட வண்ண மலர்கள் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
பின்னர் ரங்கநாதர் மண்டபத்தில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது.
இதில் ரோஜா, மல்லி, முல்லை, மருதம், சாமந்தி உள்ளிட்ட 18 ரகமான சம்பிரதாய மலர்களை கொண்டு அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க புஷ்ப யாகம் நடத்தினர்.
புஷ்ப யாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tag: பகவான்
-
7
-
2016-11-08-13-15-28
காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில், 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறும் என காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
51 சக்தி பீடங்களில் ஒன்றான, உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சியம்மன் கோயில் 1841 ஆம் ஆண்டும், 1941-ஆம் ஆண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து 1976, 1995ஆம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோயில் புனரமைப்புப் பணிக்காக ரூ.25 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதில், கருவறையின் மேல் உள்ள தங்க விமானத்திற்கு ரூ.20 கோடி செலவில் 60 கிலோ தங்கத்திலான 5 அடுக்கு தங்கம் ஒட்டப்பட்டு மிளிரும் வகையில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாக பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளார். -
2016-11-08-05-17-09
சபரிமலை ஐயப்பன் கோயிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு என கேரள அரசு, உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில், சபரிமலை ஐயப்பன் கோயிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 2007-ஆம் ஆண்டு, இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, முந்தைய அரசு சபரிமலை கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்கு தாங்கள் உடன்படுவதாக தெரிவித்தது. அதாவது, 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களை சபரிமலை கோயிலில் அனுமதிப்பதில்லை என்ற முந்தைய முடிவை பின்பற்றப் போவதாக தெரிவித்தது.
இந்த நிலையில் நவம்பர் 7 (திங்கள்கிழமை) ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கேரளாவின் தற்போதைய ஆளும் அரசு, சபரிமலை ஐயப்பன் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. -
2016-11-06-16-20-09
கந்த சஷ்டி நிறைவு விழாவையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்வசம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோயில் சஷ்டி விழா கடந்த 31-ம் தேதி தொடங்கிது.
கந்த சஷ்டி நிறைவு நாளில், காலை 10.30-மணிக்கு மலைக்கோயில் அலுவலகத்தில் இருந்து முருகன் கோயில் பிரசாதக்கடை ஒப்பந்ததாரர் என்.ஹரிஹரமுத்து அவர்களின் உபயத்தில் முருகன் சுவாமிக்கு சீர்வரிசை எடுத்து செல்லப்பட்டது.
உற்சவ முருகன் சுவாமி காவடி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து முருப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் நடைபெற்று வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
பிற்பகல் 12.30-மணிக்கு மூலவ முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவ நிறைவு விழாவில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. -
2016-11-06-16-06-22
திருப்பதி மலைப்பாதையில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு நேர ஒதுக்கீட்டு முறையில் விரைவில் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.
மலைப்பாதை வழியாக வரும் பக்தர்கள், 6 முதல் 15 மணி நேரத்திற்கு மேலாகவும், இலவச தரிசன பக்தர்கள் 10 முதல் 24 மணி நேரத்திற்கும் மேலாகவும் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இதையடுத்து கடந்த ஆண்டு முதல் ரூ.300க்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள், ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டது. அதன்படி 1 மணி நேரத்தில் ஆயிரம் பக்தர்கள் தரிசனம் என ‘டைம் ஸ்லாட்’ முறை பின்பற்றப்படுகிறது.
அந்த டிக்கெட்டில் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சுமார் 1 மணி முதல் 2 மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில், மலைப்பாதை வழியாக பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கும் நேர ஒதுக்கீடு செய்யப்பட்டால், பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்க முடியும் என தேவஸ்தான நிர்வாகம் ஆலோசனை நடத்தியது.
அதன்படி, அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில், பாதயாத்திரையாக வந்து, திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கும், நேரம் ஒதுக்கீடு செய்து சுவாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
அதற்கான மென்பொருட்கள் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் மலைப்பாதையில் வரும் பக்தர்கள் திவ்ய தரிசன டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு, வைகுண்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட திவ்ய தரிசன டிக்கெட்டுக்கான வரவேற்பு அறைக்கு சென்றால், சுமார் 1 மணி அல்லது 2 மணி நேரத்தில் சுலபமாக சுவாமி தரிசனம் செய்யலாம். -
2016-11-05-17-00-13
ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் தங்கு அறைகளை முன்பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் தேவஸ்தானம் பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஆன்லைன் மூலம் சுவாமி தரிசனம், தங்கும் அறைகள் முன்பதிவு ஆகியவற்றுக்காக ஆதார் அட்டை கட்டாய மாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லாமல் நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்கள் அரசு சார்பில் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தைக் காண்பிக்கலாம்.
ஆன்லைன் முன்பதிவின் போது பக்தர்களின் புகைப்படம் இணைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் முதியோர், மாற்று திறனாளி பக்தர்கள் தரிசனம் முடித்து வெளியே வந்ததும், அவர்களது உதவிக்காக பேட்டரி கார்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல வெள்ளி வாசல் முதல் தங்க வாசல் வரை ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஆலோசித்து வருவதாகவும் விரைவில் கூட்டநெரிசலை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. -
2016-11-05-16-48-09
திருச்செந்தூர் கோயிலில் நவம்பர் 6 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சனிக்கிழமை மாலை கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, திருக்கோவில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடக்கிறது.
தொடர்ந்து தெய்வானை அம்மன் தபசுக்கு புறப்பட்டு, தெற்குரதவீதி வழியாக தெப்பக்குளத்தெருவில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு சேர்கிறார். மாலையில் சுவாமி தனிச்சப்பரத்தில் புறப்பட்டு வந்து, தெற்குரதவீதி-மேலரதவீதி சந்திப்பில் வைத்து சுவாமி-அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
நள்ளிரவு திருக்கோவிலில் வைத்து திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.
-
2016-11-05-14-55-18
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் பக்தர்கள் வெற்றி வேல் வீரவேல் முழக்கமிட சூரசம்ஹாரம் விமர்சையாக நடந்தது. அறுபடை வீடுகளுள் இரண்டாவது படை வீடு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 31ம் தேதி துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருச்செந்தூர் கடற்கரையில் நடந்தது. சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு ஊர்கள், இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.
கந்த சஷ்டியை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது. மாலை 4.35 மணிக்கு கடற்கரையில் சூரனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்தார்.
அப்போது பக்தர்கள் வெற்றி வேல் வீரவேல் என்று முழக்கமிட்டனர். -
2016-11-04-17-23-52
முருகனின் அறுபடை வீடுகளுள் ஐந்தாம் வீடாக விளங்குவது திருத்தணி. இக்கோயிலின் சிறப்பம்சம் சரவணபொய்கை ஏரி. முருகன் கார்த்திகேயனாக அவதாரம் எடுத்ததும் இந்த ஏரியில்தான் என்ற வரலாறும் உண்டு.
ஆண்டுதோறும் முருகன் தலங்களில் கந்தசஷ்டி தினத்தன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெறும்.
ஆனால், முருகன் கோபம் தணிந்து காட்சி தரும் தலம் என்பதால் திருத்தணி முருகன் கோயிலில் மட்டும் சூரசம்ஹாரம் செய்யவதில்லை.
அன்றைய தினம் முருகனை குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படும். அப்போது 1000 கிலோ எடையுள்ள பூக்கள் பயன்படுத்தப்படும்.
இக்கோயிலில் சந்தனக்காப்புக்கு சாதாரண சந்தனம் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக, இந்திரனே காணிக்கையாக செலுத்தியதாக கருதப்படும் சந்தனக்கல்லில் அரைக்கப்பட்ட சந்தனத்தால்தான் இங்கு சந்தனக்காப்பு செய்யப்படும். -
5
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நவம்பர் 5 ஆம் தேதி (சனிக்கிழமை) சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதனால் அங்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா, யாக சாலை பூஜையுடன் அக்டோபர் 31-ம் தேதி தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி நவம்பர் 5 ஆம் தேதி (சனிக்கிழமை)நடைபெறுகிறது.இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது திருச்செந்தூர் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திருச்செந்தூரில் காவல்துறையினரின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.